முகப்பு » புத்தகவிமர்சனம்

இரு ஓவியர்களின் உரையாடல்கள்

இரு ஓவியர்கள், நெடு நாள் நண்பர்கள் தம் சாவகாசமான பேச்சில் என்ன பேசிக்கொள்வார்கள்? தில்லி மும்பை ஒவியர்களாக இருந்தால் சர்வ தேச தளங்களில் தம் ஒவியங்களுக்கு திடீரென கிடைத்துவரும் திடீர் மவுஸ் பற்றி, ஹுஸேனும் ரஸாவும் டி சோஸாவும் இந்திய ஒவியங்களுக்கு ஏற்படுத்தியுள்ள கவனிப்பு பற்றி, பேசியிருக்கக் கூடும்.  ஆனால் தமிழகத்து ஒவியர்களுக்கு அப்படியான சிந்தனைகள் செல்ல வாய்ப்பில்லை. இன்னம் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிட்டியிருக்க வில்லை. ஒவியங்கள் பற்றி, தம் புதிய முயற்சிகள் பற்றி, அவற்றைச் சந்தைப் படுத்துவது பற்றி.  தம் குடும்ப சுக துக்கங்கள் பற்றி, தமிழக சூழலில் தாம் ஓவியராக வாழ்வது பற்றி? அத்தோடு அவர்கள் போராட முடியாது. எத்தகைய சூழலிலும் தாம் ஒவியராக துணிந்து வாழ்வதன் மூலமாகவே தம் இருப்பை அவர்கள் ஸ்தாபித்துக்கொள்ள முடியும்.

Two P1

அதிகார மையங்கள், அரசு நிறுவனங்கள் சார்ந்து வாழவேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படலாம். ஆனால் அவற்றையும் மீறி தம் இருப்பை சிலர் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். திருக்குறள் அத்தியாயம் ஒவ்வொன்றுக்கும் ஒரு படம் போட்டுக்கொடு என்று வேண்டுகோள் பிறக்கலாம். எதிர்ப்பது பகையை வளர்க்கும். கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு ஏதோ படம் போட்டுக்கொடுத்து விட்டு அதை மறந்து விடலாம். அது தனது என்று அவர்கள் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டாம். போட்டுக்கொடுத்த படம் தானே மறைந்து விடும். ஒரு குறுகிய கால விளம்பரத்துக்கு வேண்டப்பட்டது அது.

ஆர்ட் டைரக்டராகும் வாய்ப்புக்கள் வரலாம். அது ஜி.வி. அய்யரின் சங்கராசாரியார் படத்துக்கும், எம். டி வாசுதேவன் நாயரின் மதிலுகள் படத்துக்குமாகவும் இருக்கலாம். அது தன் ஓவிய ஆளுமையின், கலை ஆளுமையின் விகசிப்பாகவுமிருக்கும். அல்லது, ஒரு வேளை ரஜனிகாந்தின் படம்  ஒன்றிற்கு பிரம்மாண்டமும் அலங்காரமும் கொண்ட நடன அரங்கின் நிர்மாணமாகவும் இருக்கலாம். அது வேறு விதமான சவாலாக இருக்கும்.  அது வாழ்க்கையின் சௌகரியங்கள் பல சம்பாதித்துக் கொடுக்கும். இதை ஒரு ஓவியர் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அந்தக் காலத்தில் சந்திரலேகா படத்துக்கு முரசு நடன செட்டோ அல்லது ஏதோ ஒரு அரண்மனை செட்டோ நிர்மாணித்தவர்கள் என்ன ஓவியமும் சிற்பமும்  படித்தா வந்தார்கள்?

இம்மாதிரியான எதிரெதிரான  சவால்கள முன்னிற்க எதை ஏற்பது என்பது அந்தந்த ஓவியரின் கலை ஆளுமையின் தேர்வில் வந்து முடியும். வாழ்க்கை சௌகரியங்களும் பிராபல்யமுமா, அல்லது தன் கலை ஆளுமையின் விகசிப்பா என்று.

_பேசுகிறார்கள்__56987_zoomஇங்கு உரையாடிக்கொண்டிருக்கும் ஓவிய நண்பர்கள் இருவரில் ஒருவர், சீனுவாசன் டிஜிட்டல் ஒவியர். கைலாவகமும் வண்ணத் தேர்வுமே அவர் உலகம். இன்னொருவர் பாலா என்று அறியப்படும் பாலசுப்பிரமணியனுக்கு  சம்பிரதாய தூரிகையும் வண்ணங்களும் தான் அவர் உலகம். இளையவரான சீனிவாசன் ரூபங்களைக் கைவிடாதவர். வயதில் மூத்தவரானதால், சீனிவாசனுக்கு பாஸாகிவிட்ட  பாலாவுக்கு தந்திர உலகம். பல்வகை சதுரங்களில் அடையும் வண்ண வெளி. ரஸா அவருக்குப் பிடித்தமானவர் என்று தோன்றுகிறது. பிரென் டே, குலாம் ரஸூல் சந்தோஷ், பின்னர் ஒரு காலத்தில் சோழமண்டலத்தில் இருந்த ஹரிதாஸன் போன்றோர் பாலா வகையினர். சீனிவாசன் புது விளைச்சல். புது பயிர். கணிணி யுகப் பயிர்.

அவர்களுக்கு வெளியே விரியும் தமிழ்ச் சூழல் இருவரையுமே வருத்துகிறது. அவர்கள் தம் ஓவிய அக்கறைகளை தம் கலை உணர்வுகளுக்குள்ளேயே பாதுகாத்துள்ளவர்கள். சங்கரர் பிறந்த எட்டாம் நூற்றாண்டு கிராமம் காலடியையும் புனர் வடிவாக்க வேண்டாம். பிரம்மாண்ட நடன அரங்கை ரஜனிக்காக நிர்மாணிக்கும் நிர்பந்தமும் இல்லை. அதற்கு பதிலாக, வேறு வழிகள் கண்டு கொண்டவர்கள் இருவரும். ஒருவருக்கு பல்கலைக் கழக ஆசிரியப் பணி. இன்னொருவருக்கு பெரிய மருத்துவ மனையில். ஆயினும் இவர்கள் தேடிச்சென்று தம் கலை உணர்வுகளை மழுங்கடித்துக்கொள்ளத் தேவையில்லை. தமிழ்ச் சூழல் இவர்கள் போன்றோரைக் குறி வைக்காவிடிலும் இவர்கள் கலை உணர்வைப் பாதிக்கும் மாற்றங்கள் தமிழ் சமூகத்தில், சூழலில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றினிடையே தான் இவர்கள் வாழவேண்டியிருக்கிறது.

பல நூற்றாண்டுகள் பழமையான கோயில் சுவரோவியங்கள் மங்கி மறைந்து வருகின்றன. அவற்றைப் புதுப்பிக்கும் பொறுப்பில் உள்ள அறக்கட்டளையும் இந்த அரசும், சமூகமும் சுவரோவியங்களின் மீது டிஸ்டெம்பர் பூசுகின்றன. அவற்றிற்குத் தெரிந்த புனர் நிர்மாணம் அது.  இன்னும் சில கோயில்களில் அச்சுவரோவியங்களின் மீது இன்றைய ரசாயன வண்ணங்களைப் பூசிவிடுகின்றன.

temple

மதுரை மீனாட்சி கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த சுவர்களின் நாயக்கர் கால சுவரோவியங்கள் இன்று இல்லை. வெள்ளை யடித்து கோயில் சுவர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அன்று ஆறு என்ஜினியரிங் காலேஜ்களிலிருந்து 80 முட்டாள்கள் உருவாக்கப்பட்டு அழிவு வேலை தொடங்கியது இன்று 530 காலேஜ்களிலிருந்து 1,70,000 பேர் தமிழ் நாட்டின் கலை அழிவிற்கு, சரித்திரத்தை அடையாளம் காணாது செய்வதற்கு படை திரண்டுள்ளனர். கல்வி அறிவு பெருகியுள்ளதா? மடமைக்கு அங்கீகாரமும் தரப்பட்டுள்ளதா? இரு ஒவியர்களின் சாதாரண அன்றாட உரையாலில் பொங்கி எழும் கவலை இது. 1500 ஆண்டு பழமையான சுவரோவியங்களில் இது காறும் அவற்றைப் பாதுகாத்த திறன், டெக்னீக் இன்று மறைந்துவிட்டது. அன்றைய ஆடை அணிகள், வாழ்க்கைக் காட்சிகள், போன்ற பல தரவுகளின் பதிவுகளாக இருந்தவை இன்று இல்லை. அவற்றின் கலை மதிப்புகளுக்கு மேல் கிடைக்கும் தரவுகள் இவை. இன்று அவற்றை அழித்தது அறக்கட்டளை அதிகாரிகளும், வீடுகளுக்கு வர்ணம் பூசும் பெயிண்டர்களும். புனர் நிர்மாணமும் ஆயிற்று, காரியமும் சல்லிசாகவும் முடிந்தது. காசும் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தது. சிவன் கோயில் சொத்து திருடினால் குல நாசம் எல்லாம் பழைய கதை. பகுத்தறிவு யுகத்தில் அவை மூட நம்பிக்கை.

பெயிண்டர்களும் அறக்கட்டளை அதிகாரிகளும் புகாத இடங்களில், இன்று கீறியிருப்பது காதலர்களின் பிரகடனங்கள், பெயர்கள். இந்தக் கீறல்கள் எத்தனை ஆண்டு பழமையானவை. இத்தனை நூற்றாண்டு நீட்சியில் இக்கீறல் காதலர்களுக்கு முன் காதலர்கள் இருந்ததில்லையா? அவர்கள் காதல் சுவரோவியங்களை, கோயில் சுவர்களைக் கீறித் தான் வெளிப்பட்டதா? இன்றைய காதலர்களுக்கு மாத்திரம் எங்கிருந்து இந்த மடமை பிறந்துள்ளது?

சடங்குகள் பல நம் தெய்வ உணர்வுகளை மாத்திரமல்ல வாழ்க்கையின் குணத்தையும் மதிப்புகளையும் காத்து வந்துள்ளன. கோயில் பக்தியை மாத்திரம் வளர்க்கவில்லை. இலக்கியம், சங்கீதம், ஓவியம், கட்டிடக் கலை, சிற்பம்,  வாழ்க்கையின்  தேடல் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து வளர்ந்துள்ளன. கல்வேட்டுக்கள் சரித்திரப் பதிவு மாத்திரமல்ல. ஆனால் கல்வேட்டுக்கள் தாங்கி நிற்கும் கோவில் சுவர்களை பளிங்குப் பாளங்களால் அலங்கரிக்க வரும் பக்தி என்று பெயர்வாங்கும் பணத்திமிர் மடமை சார்ந்தது. சரித்திரத்தை தரமோ மதிப்போ அறியாது அழிக்கும் அகங்காரம் அது.

கோவில் சார்ந்த தெப்பக் குளங்கள் நீர் நிலைகளைப் பாது காத்தன. இன்று தெப்பக்குளங்கள் வற்றிய தரையாகிவிட்டன. மகா மக உற்சவத்துக்கு ஆழ்கிணற்று நீரை லாரிகளில் ஏற்றி வந்து குளத்தை மூன்றடி ஆழத்துக்கு நிரப்புவது மடமை மாத்திரமல்ல. சீரழிவு. பண்பாட்டுச் சீரழிவு.

இந்தச் சீரழிவு ஒரு இடத்தில் மாத்திரம் இல்லை. வாழ்க்கையின் எல்லா மட்டங்களிலும் இந்தச் சீரழிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

”காவேரிக்கரையில் இருக்கும்  தருமபுரம். இருபத்தாறு கோயில்கள், 26000 வேலி நிலம், 260 ஊர்கள் அம்மக்கள் எல்லாம் தருமபுரம் ஆதீனத்தில் அடக்கம். அன்றைய கோயில் திருவிழாவில் சுற்றியுள்ள அனைத்து கிராமத்து ஜனங்களின் திரளிடையே, கனகாபிஷேகம், வாணவேடிக்கைகள், இருபத்து ஐந்து யானைகள், குதிரைகள் வலம் வர, எக்காளம், கொம்பு, பறை, மேளம் முழங்க, நான்கு வீதிகளிலும் நாதஸ்வரம், தவில் ஒலிக்க, மதுரை சோமு சீர்காழியோரின் இசை கேட்கும். வீடுகள் தோறும் வாசலில் கோலமிட்டு தோரணம் கட்டி, தேவாரம் பாட கேட்கும். இன்று அவை அத்தனையும் மறைந்தாயிற்று. பட்டின பிரவேசம் கண்ட வீதிகள் இன்று இருட்டில் மூழ்கிக் கிடக்கின்றன. கோயில் திருவிழா 260 ஊர் மக்களுக்குமான திருவிழா வாக இருந்தது. வாழ்வியல் தான் கலை என்று சொன்னீங்க பாஸ், இன்று டிவி ஸ்டுடியோவிலே தான் கலை இருக்கிறதா நெனச்சு உண்மையைக் கொன்னு, பொய் பின்னடி ஓடிட்டுருக்கோம். இயல்பாகவும் இயற்கையாகவும் இருந்த மன நிலையையும், வீட்டிலேயும் நாட்டிலேயும் இருந்த கலையையும் கலாசாரத்தையும் ,கொன்னுட்டு, துக்கமில்லாமே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கோம்,” என்கிறார் சீனிவாசன். அவரது திரைச் சீலை கம்ப்யூட்டர் தான். டிஜிட்டல் தான். ப்ரஷ் இல்லை. வண்ணங்கள் இல்லை. இருப்பினும், வரைவது மனம் அல்லவா? நாடும் வீடும் மக்களும் கலையைக் கொன்ற பிறகு மனத்தில் சோகம் கப்ப… என்ன சாத்தியம்? நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் கல்யாணம், விருந்து, உற்றார் உறவினர் கூட்டம் கொண்டாட்டம் என்பது அமைதியாக இரண்டு நண்பர்கள் முன்னிலையில் ரெஜிஸ்டர் ஆபீஸில் கையெழுத்திடுவதோடு முடிவது இன்றைய வாழ்க்கைக் கூறு என்றால்…. எதை இழந்து எதைப் பெற்றோம்?.

ஓவியர்கள் அல்லவா? அழகு பற்றி, அலங்காரங்கள் பற்றி பேசுகிறார்கள். அலங்காரங்கள் அழகுக்காகவும் தான். ஓவியமும் சிற்பமும் அழகானவை தான். அலங்காரங்கள் ஏதுமற்ற புத்தர் சிலையும் நடராஜரும் அழகானவை மட்டுமல்ல. அதை மீறி படைப்பாகவும் உயர்வு பெறுகின்றன. படைப்பு எது. அலங்காரம் எது? அழகு எது? எப்போது அழகு படைப்பாக ஒரு சிருஷ்டியாக உயர்கிறது என்றும் சர்சிக்கிறார்கள். எதுவும் ஒரு பொருள் பற்றி என்று திட்டமிட்டுப் பேசுவதில்லை. பேச்சு அன்றாட வாழ்க்கையின் எது பற்றியும் பேசத் தொடங்கினால், சூழல் அடைந்து வரும் சீரழிவு பற்றிப் பேச்சு செல்வது நிர்ப்பந்தமாகிறது. அச்சூழல் ஒவியர்களாக அவர்களைப் பாதிக்கும் சூழல் அது.

பண்பாட்டின் அடையாளங்கள் மாறுவது பற்றிய சம்பாஷணைகள் பேசும் மொழி பற்றி, அணியும் உடை பற்றியெல்லாம் பேச்சு தானாகவே நகர்ந்து கொள்கிறது.  மும்பையில் ஒரு காந்தி குல்லா, கச்சம் வைத்துக் கட்டிய வேட்டியோ ஜிப்பாவோ உடையை நிர்ணயித்து விடுகிறது. அத்தகைய காட்சி தமிழ் நாட்டில் கிடைப்பதில்லை. தமிழன் ஒரு உடையில் காட்சி தருவதில்லை. மொழியும் அடையாளம் தான். எருமை தான் எருமை என்று அடையாள அட்டை தொங்கவிட்டுக்கொண்டு காட்சியளிப்பதில்லை. எருமை என்ற சொல் தமிழில் ஒரு விலங்கைக் குறிக்கும் அடையாளமே. வேறு இடத்தில் அந்த மொழி அடையாளம் மாறும். கோவில், மொழி, ஓவியம், உடை எல்லாமே நம் பண்பாட்டு அடையாளங்கள் தாம். அவற்றை இழந்து கொண்டு வருகிறோம். அந்த இழப்பு பண்பாட்டு இழப்பு. நம் சரித்திர இழப்பு.

சாதாரண அன்றாட பேச்சுத் தான் என்றாலும், இவர்கள் ஒவியர்கள். நம் பண்பாட்டுக் காவலர்கள். தொடர்ந்த சிருஷ்டியில் பண்பாட்டை வளர்ப்பவர்கள். அதனால் தான் அன்றாடப் பேச்சும் தமிழ்ச் சூழலின் சீரழிவையே தொட்டுப் பேசும் நிலைக்கு அது நகர்ந்து விடுகிறது.

ஒரு நெருடல் எனக்கு. இவ்வளவு தீவிரமாக தம் சூழலின் சீரழிவைப் பேசுபவர்கள், அதே சமயம் தம் கலை உணர்வையும் ஆளுமையும் காத்துக் கொள்பவர்கள். அந்தச் சீரழிவின் இன்னொரு அங்கமான இன்னம் சக்தி வாய்ந்ததும், அதே சமயம்  பாமரத்தனமானதுமான வெளிப்பாடாகிய சினிமா பற்றி அந்த தீவிரமும் கலை உணர்வும் எங்கு போய் விடுகிறது என்று தெரியவில்லை.

சிவாஜி சார், கே எஸ் கோபால கிருஷ்ணன், பற்றியெல்லாம் பரவசத்துடன் பேச்சு நிகழ்கிறது. வீட்டுக்கு சிக்கு கோலம் எப்படி அலங்காரமோ, துளசி மாடம் எப்படி அலங்காரமோ அப்படித்தான் பாலசந்தருக்கு தாதாசாகப் விருது எப்படி அலங்காரமோ அப்படித்தான் பாலசந்தர் தன் நல்லமாங்குடி வீதிகள்லே இழுத்துட்டுப் போன சப்பரத்தட்டி” என்று பேசப்படுகிறது. 10-ம் நூற்றாண்டு சுவரோவியங்களின் மேல் இன்று பெயிண்ட் அடித்து புதுப்பிப்பது போல, அல்லது மதுரை மீனாட்சி கோவிலின் அழிந்துவரும்  நாயக்கர் கால சித்திரங்களை வெள்ளை யடித்து புதுப்பிப்பதற்கும் கோவில் கல்வேட்டுக்களின் மேல் பளிங்குக் கற்கள் பதித்து அழகு படுத்துவதற்கும் ஈடானவை தான் சிவாஜி சாரின், கே.எஸ்.ஜி. யின் பாலசந்தரின் சினிமா பங்களிப்புகள்.

நம் வாழ்க்கையின் எத்தனையோ முரண்களில் இதுவும் ஒன்று என மன சமாதானம் கொள்ளலாம். ஆனால், ஒன்று, இவ்விருவரின் உரையாடல் கட்டுரைகள் இவ்விருவரும் தம் கலை உணர்வுகளைப் பாதுகாத்துக் கொண்டவர்கள். சூழலுக்கு இரையாகாதவர்கள். கலை உணர்வுள்ள ஒவ்வொருவர் உள்ளும் நிகழும் உரையாடல்கள் தான் இவை.

சினிமா பானர்கள் தீட்டியே வாழ்க்கையைத் தொடங்கிய மஹ்மூத் ஃபிதா ஹுஸேன் இந்தியாவின் தலை சிறந்த ஒவியராக கிளர்ந்து எழுந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் நாம் கட் அவுட்டுகள், ஃப்ளெக்ஸி போர்டுகள் வானைத் தொடும் காலத்தில் வாழ்கிறோம். இதிலிருந்து யார் கிளர்ந்தெழுவது சாத்தியம்? ஆக, இந்த சூழலிருந்து இந்த உரையாடல்களின் பெருக்கம் நம்மைக் காக்கும்.

_________________________________________________________________________________

நம்மோடு தான் பேசுகிறார்கள்:  உரையாடல் கட்டுரைகள்: சீனிவாசன் – பாலசுப்பிரமணியன்: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை. விலை ரூ 200

3 Comments »

 • ராம்ஜி​_யாஹூ said:

  மிக அருமையாக விமர்சனம் செய்து உள்ளீர்கள் .
  உங்களின் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட வாசிப்பு, தெரிகிறது.

  “அவரது திரைச் சீலை கம்ப்யூட்டர் தான். டிஜிட்டல் தான். ப்ரஷ் இல்லை. வண்ணங்கள் இல்லை. இருப்பினும், வரைவது மனம் அல்லவா? நாடும் வீடும் மக்களும் கலையைக் கொன்ற பிறகு மனத்தில் சோகம் கப்ப… என்ன சாத்தியம்? நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் கல்யாணம், விருந்து, உற்றார் உறவினர் கூட்டம் கொண்டாட்டம் என்பது அமைதியாக இரண்டு நண்பர்கள் முன்னிலையில் ரெஜிஸ்டர் ஆபீஸில் கையெழுத்திடுவதோடு முடிவது இன்றைய வாழ்க்கைக் கூறு என்றால்…. எதை இழந்து எதைப் பெற்றோம்? – ”

  வரைவது மனம் அல்லவா. எழுதுவதும் மனம் அல்லவா .

  இந்தக் கட்டுரை புத்தகம் தாண்டி உங்களிடம் ஒரு வினா . கிறித்துவ தேவாலயங்கள், மசூதிகள் ஓவியங்கள், கலைகள் எவ்வாறு தமிழகத்தில் புனர் அமைக்கப் பட்டுக் கொண்டு இருக்கின்றன

  # 16 October 2013 at 5:11 am
 • Venkat Swaminathan said:

  அன்புள்ள நண்பர் ராம்ஜி அவர்களுக்கு,

  மன்னிக்கவும். தாமதமாகத் தான் தங்கள் குறிப்பைப் பார்த்தேன். அதன் பின்னும் தாமதம் செய்தேன். ஒரேயடியாகக் குவிந்த சில சிக்கல்கள்.

  கிறித்துவ தேவாலயங்கள் அவர்களால் நன்கு பாதுகாக்கப் படுகின்றன. அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வும் ஈடுபாடும் அவர்களூக்கு எப்படியோ வந்து சேர்ந்துவிடுகிறது. மேலும் வெளிநாடுகளிலிருந்து வரும் வேண்டிய வருமானமும் அவர்களுக்கு உதவுகிறது. மைலாப்பூரில் தெப்பக்குளத்திலிருந்து நீளும் ராமக்ரிஷ்ணா மட ரோடின் இருபுறமும் நீளும் நிலம் அவ்வளவும் அவர்களது. யாரும் கைவைக்க முடியாது. சர்ச் பணத்தை அவர்கள் என்னமும் செய்யலாம், நியாயம் தர்மம் மீறிக் கூட. இந்திய சட்டம் எதுவும் அவர்களைப் பாதிக்காது. மாநில அரசும், மத்திய அரசும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். ஹிந்துக்கள் அதனால் பாதிக்கப்பட்டாலும் அரசுக்கு கவலை இல்லை. ஜெயலலிதாவின் அரசும் அப்படித் தான். கட்டாய மத்மாற்றச் சட்டத்தை மதமாற்றச் சட்டம் என்றே எதிர்ப்புப் பிரசாரம் செய்து வாபஸ் வாங்க வைத்துவிட்டார்கள்.

  முஸ்லீம்கள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்களின் ஹஜ் யாத்திரக்கு அரசு கோடிக்கணக்கில் வருடா வருடம் செலவு செய்கிறது. வாக்ஃப் நிலத்தையோ கட்டிடங்களையோ அரசு தொடாது. அவர்கள் அச்சொத்துக்களை வைத்து என்ன அநியாயம் செய்தாலும்.தில்லி ஜும்மா மசூதியைச் சுற்றி மாமிச கடைகள். கடை வாடகை, அவர்களுக்குச் சொந்தம். எனக்குத் தெரிந்து கர்நாடகாவில் மசூதி நிலத்தைக் காப்பாற்ற சுற்றுச் சுவர் எழுப்ப, மதரஸாவின் ஊழியர்களுக்கு முல்லாக்களுக்கு மாத சம்பளம் அரசின் பொறுப்பு. எந்த மசூதியும் விரிவுபடுத்தப் பட்டு புதுப்பிக்கப் படுகிறது. அரசு பணம் மான்யம் பாதுகாப்பு தவிர அரபு நாடுகளிலிருந்து குறிப்பாக சௌதியிலிருந்து வரும் வருமானம் கணக்கில்லை. கேரளாவுக்கு மாத்திரம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் வருமானம் வருடத்திற்கு 50,000 கோடி. அரசு அவர்களைத் தொட அஞ்சம். கேரள கூட்டணியில் எந்த அரசானாலும் பங்கு கொள்ளும் முஸ்லீம் கட்சிகள் முஸ்லீம்களுக்கு பாதுகாப்ப்பு.

  ஹிந்து கோயில்களை தமிழ் நாட்டில் அறக்கட்டளைகளே கொள்ளை யடிக்கின்றன. சிலைகள் அவர்கள் உதவியோடும், அர்ச்சர்கர்கள் உதவியோடும், அரசியல் வாதிகளின் பாதுகாப்பில் கொள்ளை போகின்றன. போலி நகைகள் செய்யப்பட்டு, நகைகள் திருட்டு[ப் போகின்றன. அதிமுகவோ திமுகவோ எந்த அரசுக்கும் கவலை இல்லை. ஹிந்துக்கள் பெரும்பாலோருக்கு, அதில் அக்கறை இல்லை. அரசியல் வாதிகள் செக்யூலர் கோஷம் தரித்தவர்கள். நமக்கேன் வம்பு என்று பெரும்பான்மையினர் வாய் பொத்தி இருப்பவர்கள். கூச்சல் போடும் ஹிந்துக்கள் மதவாதிகள், மத வெறியர்கள் என்று அதிமுக சொல்லாவிட்டாலும், திமுக, பாமக, இத்யாதி கூட்டுச் சேர்ந்துள்ள முஸ்லீம் கட்சிகள் கூச்சலிடும்.
  கோயிலுக்குச் செல்வது மதவாதம். மூட நம்பிக்கை. முஸ்லீம்களுடன் கஞ்சி குடிப்பது, அங்கே ராமர் என்ன சிவில் எஞ்சினியரா என்று தன் வீரத்தைக் காட்டுவது பகுத்தறிவு.

  இந்தமாதிரியான சூழலில், இது வெகுகாலம் தொடரும். ஏதோ மிஞ்சியிருப்பது தான் மிஞ்சும். ஹிந்துக்கள் என்றும் ஒற்றுமையாக இருந்ததில்லை. ஹிந்து வாக தன்னை உணர்த்திக்கொள்வதே மதவாதம் ஆகியுள்ளது இன்று.

  எனக்கு வயது 80. என் காலம் மிகுந்த சோகத்துடனும், நிராசையுடனும் தான் முடியப் போகிறது.

  இன்றைய இளைஞர்கள் காலம் இன்னமும் மோசமாகும்.

  # 21 October 2013 at 7:16 am
 • ராம்ஜி​_யாஹூ said:

  விரிவான பதிலிற்கு நன்றிகள் பல.
  இப்போதும் பல நல்ல விசயங்கள் நடந்து கொண்டு தானே இருக்கின்றன .
  அதை நினைவில் கொண்டு மகிழ்வுடன் இருப்போம் சார்.
  நீங்கள் அன்றும் இன்றும் விதைத்த விதைகளால் தான் இன்று பல இளைஞர்கள்
  எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள், எழுதுகிறார்கள் .
  உங்களின் நிராசை விலக்கப் பட வேண்டும் தயவு செய்து .

  # 23 October 2013 at 12:59 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.