விழியனின் சிறுவர் உலகம்

Vizhiyan1

வீடியோ கேம்ஸோடும், கார்ட்டூன் சேனல்களோடும் ஒன்றிப் போயிருக்கும் இன்றைய குழந்தைகளை புத்தகங்களின் பக்கம் இழுப்பது ஒரு பெரிய சவாலான வேலை. அதுவும் புத்தகம் என்று நினைக்கும் போதே மனப்பாடம், தேர்வு, மதிப்பெண் என்று மனரீதியாக சோர்ந்து விடும் குழந்தைகள் பலர். அவர்களுக்கு ஆரோக்கியமான ஒரு பொழுதுபோக்காக, உற்சாகம் தரும் விளையாட்டாக “சிறுவர் புத்தகங்களை” அறிமுகம் செய்வது பெற்றோரின் கடமை. சிறுவர் கதை புத்தகங்கள் இன்றைய குழந்தைகளின் இயந்திரமயமான நடைமுறைகளுக்கிடையில் ஒரு கற்பனை உலகை வடிக்க வல்லவை. அவை குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியையும், கற்பனைவளத்தையும், ஆக்கத்திறனையும் தரக்கூடியவை.

ஆனால் இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பான்மையான சிறுவர் புத்தகங்கள் நீதி சொல்லக்கூடியவை தாம். சிறுவர்களைப் பொறுத்தவரை ஒரு புத்தகமானது வெறுமனே நீதி போதனை செய்யும் ஆசானாக மட்டுமில்லாமல், அவர்களின் உலகத்துக்குள் எளிதாகச் சென்று ஒரு தோழனைப் போல் கதை பேசினால் அவர்களும் புத்தகத்துடன் ஒன்றி விடுவர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சானலைப் பார்க்கும் ஒரு சிறுவன், தன்னை “சோட்டா பீமாகவோ”, “லிட்டில் கிருஷ்ணா”வாகவோ சுலபமாக உருவகப்படுத்திக் கொள்கிறான். காரணம், அந்தப் பாத்திரங்களின் சுட்டித்தனங்களை, சாகசங்களை, விளையாட்டுக்களை தானே நிகழ்த்துவதாக நம்புகிறான். எனவே அந்த தொடர்களுடன் ஒன்றிப் போகிறான். அதுபோலவே சிறுவர் கதை புத்தகங்களை வாசிக்கும் ஒரு சிறுவர் சிறுமியர் அதிலுள்ள பாத்திரங்களில் தங்களைப் பொருத்திப் பார்த்து உற்சாகம் அடையும் வண்ணம் இருந்தால் அத்தகைய புத்தகங்கள் நிச்சயம் அவர்களை ஈர்க்கும்.

vizhiyan2

இணையம் மூலம் அறிமுகமான நண்பர் உமாநாத், விழியன் என்ற பெயரில் சிறுவர்களுக்கான கதைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது புதிய புத்தகமான “மாகடிகாரம்” சமீபத்தில் வெளிவந்துள்ளது. உலக சுழற்சிக்கு முதுகெலும்பாய் விளங்கும் ஒரு பெரிய கடிகாரத்தைப் பற்றிய கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான “மாகடிகாரம்” மூலமாகவே இந்த உலக இயக்கம் நடைபெறுகிறது. அதனை சாவி கொடுத்து தொடர்ந்து இயக்கவைக்கும் பணிக்காக “தீமன்” என்னும் சிறுவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். மலைப்பிரதேசத்துள் மறைவாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த கடிகாரம், அதனைக் காவல் காக்கும் வீரர்கள், கடிகாரத்தை தொடர்ந்து இயக்க வைப்பதற்கான சாவியை எடுக்கப் போகும் வழிமுறைகள் என்று கதை முழுவதும் தீமனின் பயண அனுபவம் அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் சிறுவன் தீமனின் புத்தி கூர்மை மற்றும் துணிச்சலினால் ஒரு மிகப்பெரிய உண்மையும் வெளிப்பட இனிதாய் முடிகிறது கதை. புத்தகத்தின் கடைசியில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் சாதனங்கள் பற்றிய அறிவியல் குறிப்பும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

அது போலவே விழியனின் இன்னொரு புத்த்கமான “பென்சில்களின் அட்டகாசம்” சுவாரஸ்யமான கதை. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் பென்சில்கள் ஒன்று சேர்ந்து சுற்றுலா செலவது தான் கதை. அவை எவ்வாறு ஒன்று கூடி திட்டம் போட்டு, ரகசியமாக குழந்தைகளின் டப்பாக்களில் இருந்து வெளிவந்து, எல்.கே.ஜி அறையில் இருக்கும் பொம்மை பஸ்ஸை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு குட்டி அருவிக்கு சுற்றுலா செல்கின்றன என இயல்பான நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார். அதிலும் பென்சில்களைத் துரத்தி வரும் எதிரிகளான ஷார்ப்னர்களிடமிருந்து அவை எப்படி தப்பிக்கின்றன, பிறகு எப்படி அவை குழந்தைகளிடம் மீண்டும் சேர்ந்தன என்பதெல்லாம் செம இண்ட்ரஸ்டிங். தொலைந்த போன பொருட்கள் எல்லாம் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் “கறுப்புப் பெட்டி” என்றால் பென்சில்களுக்கு மிகவும் பயம். அந்தப் பெட்டிக்குள் சென்று விட்டால் திரும்பி வருவது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். சுற்றுலா சென்று திரும்பி வரும் பென்சில்கள் அந்த பெட்டிக்குள் அகப்படுவதிலிருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்கின்றன என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.

vizhiyan3

“டாலும் ழீயும்” என்னும் விழியனின் மற்றுமொரு புத்தகம் கடல் நண்பர்களான டால் என்ற டால்பினும், ழீ என்ற தங்கமீனும் கடலுக்கு அடியில் கோட்டை கட்டும் சுவையான கதை. “அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை” நிலவில் சிறுவர்கள் நடத்தும் சாகசங்கள் பற்றிய கற்பனைக்கதை. விழியனின் கதைகள் அனைத்தும் சிறுவர் உலகத்துக்குள் சென்று அவர்கள் மொழியில் பேசி, அவர்களுடன் விளையாடி, அவர்களுடன் ஒன்றுபட்ட அலைவரிசையில் பயணிக்கும் உணர்வினை தரவல்லவை.

vizhiyan4

“ஃபேஸ்புக்கில்” அவர் அவ்வப்பொழுது பகிர்ந்து கொள்ளும் அவரது வாழ்க்கை அனுபவங்கள் பெரும்பாலும் குழந்தைகளை மையப்படுத்தியதாகவும், அவரது மகள் “குழலி”யுடனான சுவாரஸ்ய கதையாடல்களாகவும் இருக்கின்றன. மென்பொருள் துறையில் பணியாற்றும் விழியன் பயணம் செய்வதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வமுடையவர். விழியனின் புத்தகங்களை பாரதி புத்தக நிலையம் “BOOKS FOR CHILDREN” என்ற தொகுப்பின் கீழ் மிகக்குறைந்த விலையில் (ரூ 20 அளவில்) தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அடுத்த முறை உங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கும் பொழுது, நூலாசிரியர் “விழியன்” என்று இருந்தால் கண்களை மூடிக்கொண்டு அவற்றை வாங்கலாம், அவற்றை வாசிக்கையில் உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்களுக்குமே ஒரு மகிழ்வான, நேர்மறை சிந்தனை தோற்றுவிக்கும், ஆரோக்கியமான பொழுதுபோக்கம் அம்சமுடைய ஒரு அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.