மகரந்தம்

போரும் அமைதியும்

செப்டம்பர் 11, 2001 என்பதை அமெரிக்க ஊடகங்களும், அரசியலாளர்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெரிதாக முன்வைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு அதிர்ச்சி, இல்லை, பேரதிர்ச்சியான சம்பவம். முதல் முறையாக அமெரிக்க மண்ணில் அன்னியர்கள் நடத்திய பெரும் தாக்குதலொன்று இலக்கை எட்டியதோடு, பெரும் நாசத்தையும் பல்லாயிரக்கணக்கானோரின் சாவுகளையும் கொணர்ந்தது. இது உலகெங்கும் பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று, ஏராளமான இடங்களை நாசம் செய்த தம் ராணுவம், ரகசிய உளவு அமைப்புகளின் செயல்களின் தாக்கம் பற்றி கவன்மும் இல்லாது, அச்செயல்களின் அறமற்ற தன்மை குறித்து ஏதும் அலட்டிக் கொள்ளாமலும் இருக்கும் சராசரி அமெரிக்கர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்தான். அந்த வைத்தியத்தால் நோயாளியான அமெரிக்காவின் கூட்டு உளநிலை, மற்ற நாட்டு மக்களைப் போல சகஜ நிலைக்கு மீளாமல், மேலும் நோயாளியாகி, பைத்தியம் பிடித்தாற்போல உலகெங்கும் மேன்மேலும் தாக்குதல்கள், போர்கள் நடத்தத் துவங்கி, தன் பொருளாதாரம், சமுதாயம், மேலும் நாகரீகத்தையே நாசம் செய்து கொண்டிருக்கிறது. கூடவே உலகில் பல நாடுகளையும் நாசமாக்கி இருக்கிறது.

gun-violence-America_USA_Deaths_Carnage_School_Shootings_War

அப்படி ஒரு அதிர்ச்சியை 3000 பேருக்குச் சற்று மேல் உள்ள எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் இழந்ததால் பெற்ற அமெரிக்கர்கள், தம் நடு்வே நடக்கும் தினசரிப் படுகொலைகள் பற்றியும் எந்த அலட்டலும் இல்லாமல் இருக்கிறார்கள். வன்மறை அந்த அளவுக்கு அன்றாட வாழ்வில் ஊறிப் போயிருக்கறது.  அந்த அதிர்ச்சி நாளிலிருந்து சமீபத்து நாட்கள் வரை கணக்கிட்டால் 12 ஆண்டுகளில் 3,00,000 பேருக்கு மேல் அமெரிக்காவில் தனியார் வைத்திருக்கும் துப்பாக்கிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிச் சிறிதும் கவலை இன்றி மேன்மேலும் துப்பாக்கி விற்பனையை இலகுவாக்கி, விதிகளைத் தளர்த்திக் கொண்டே செல்லும் அமெரிக்க அரசியல் மு்டிவுகளைப் பார்க்கும் நமக்குத்தான் அதிர்ச்சி வரும். மேலும் தகவல்களுக்கு இந்தச் சுட்டியில் பாருங்கள்.
http://www.theguardian.com/commentisfree/2013/sep/21/american-gun-out-control-porter

oOo

நிற்காதே…! ஓடு!

சீனா செய்கின்றவற்றில் சில உருப்படியான, புத்திசாலித்தனமான விஷயங்கள்தான். முக்கியமான, நாம் கவனித்துக் கற்றக் கொள்ள வேண்டிய ஒன்று, உற்பத்திக்கான அடிப்படை வசதிகளைத் தொடர்ந்து பெருக்குவது- கட்டுமானங்கள் என்று இதைச் சொல்கிறோம். இந்தியா எதைத் தொடர்ந்து செய்யாமலே இருக்கிறதோ, அதேதான். 50 ஆண்டுகால கும்பகர்ண உறக்கத்துக்கு அப்புறம் இந்தியா இன்னும் சுணங்கிச் சுணங்கி  ஒரு பாதை ரயில்களை இருபாதையாக்குவதை  அமல் செய்து வருகிறது. இந்தியா நெடுக கிராமப்புறத்து ஒற்றையடிப் பாதை போன்ற சாலைகளில் பெரும் ட்ரக்குகளும், பலசரக்கு வாகனங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த மோசமான போக்கு வரவு வசதிகளால், நாட்டில் எளிதே வி்நியோகிக்கப்பட வேண்டிய தானியங்கள் கிடங்குகளில் கிடந்து பாழாகின்றன. அவற்றை எலிகளும் பூச்சிகளும் சாப்பிடுகையில் மனிதர்கள் நாடெங்கும் பட்டினி கிடக்கிறார்கள். பெருநகரங்களில் தண்டமான காண்ட்ராக்டர்கள், பயனில்லாத அரசுப் பொறியாளர்கள், அற்பர்களும் சூதாடிகளும் ஒட்டுண்ணிகளுமான அரசியல்வாதிகள் ஆகியோரின் கூட்டணியில் கட்டப்படும் மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் பத்தாண்டுகளாகச் சாதாரண வாழ்வை ஸ்தம்பிக்க வைப்பதோடு, கட்டி முடிந்த பின்பு மேன்மேலும் பெரும் குழப்பத்தையே கொண்டு வருகின்றன.

Changsha_China_worlds_Fast_longest_Commuter_high-speed_rail_Trains_Travel_line

மக்களின் வாழ்வை எப்படி நிர்வகிக்கக் கூடாது என்பதற்கு ஒரு மோசமான உதாரணமாக இந்தியாவைச் சொல்லலாம். சீனா வேறென்னென்னவோ திசைகளில் மக்களை ஓரம் கட்டினாலும், உற்பத்தித் திறனைப் பெருக்குவதில் கவனம் செலுத்துகிறது. விளைவு இன்றைய தலைமுறைகளுக்கு நாசகரமாக இருக்கலாம். நாளைய தலைமுறைகளுக்குக் கொஞ்சமாவது வளர்ந்த நாடொன்றில் வாழ்வதான உணர்வைத் தர வாய்ப்பு இருக்கிறது. இந்த அமெரிக்கச் செய்தியறிக்கையில் சீனாவின் அதிவேக ரயில் பாதைகளின் நன்மைகள் (அதிகமானவை) தீமைகள் (குறைவு) எல்லாம் பேசப்படுகின்றன. ஒன்றரை பிலியன் மக்கள் இருக்கும் நாட்டுக்கு அதிவேக ரயில்கள் தேவையற்ற ஆடம்பரம் என்று இந்திய இடதுசாரிகள் எப்போதும் வைக்கும் பிலாக்கணத்தைச் சீனக் கம்யூனிஸ்டுகள் வைப்பதில்லை என்பதைக் கவனியுங்கள். இந்திய அரசையும், மக்களையும் எதையும் உருப்படியாகச் செய்யாமல் தடுப்பதில் எத்தனை சமர்த்தர்கள் இந்திய இடது சாரிகள் என்பதை அவர்களே கூட இன்னும் அறியவில்லை என்பதுதான் விசித்திரம்.
http://www.nytimes.com/2013/09/24/business/global/high-speed-train-system-is-huge-success-for-china.html

oOo

நீரின்றி அமையாது உலகு

பூமியில் கிடைக்கும் தண்ணீரில் பெரும்பங்கு கடலில் உப்புநீராக இருக்கிறது. நன்னீராக இருப்பது நிலத்தடி நீராகவும் பனிப்பாறைகளாகவும் இருக்கிறது. வெறும் 3/1000 அதாவது .3 சதவிகிதம் மட்டுமே கண்ணிற்கு தெரிகிற மாதிரியும் இருந்து குடிப்பதற்கும் உவந்த நீராக இருக்கிறது. இதையெல்லாம் எண்களாக அளக்காமல், கட்டங்களால் காண்பிக்கிறார்:

Sea_Oceans_Salt_Lakes_Freshwater_Surface_Rains_Graphs_Info_Charts_World_Resources_Earth's_water_distribution

http://www.waitbutwhy.com/2013/09/putting-all-worlds-water-into-big-cube.html

oOo

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா (அல்லது) நீரிழிவு நோய் வளர்ப்புத் திட்டம்

பண்டிகை காலங்களில் சோறு உண்டது போய், தினந்தோறும் இட்லியும் தோசையும் சாதமும் சாப்பாடாகிப் போய்விட்டது. இதனால் நீரிழிவு நோய் பெருகுகிறது. இதற்கு மாற்றாக சப்பாத்தியும் கோதுமையும் உட்கொண்டால்? அதுவும் ஆபத்தில்தான் கொண்டுபோய் விடுகிறது. அடுத்ததாக சர்க்கரை வியாதியை பெயரிலேயே வைத்திருக்கும் சர்க்கரையையும் விநியோகிக்கும் உணவு பாதுகாப்பு மசோதா நிஜமாகவே உடல்நலனிலும் இயற்கை பாதுகாப்பிலும் மக்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்ளவில்லை. அவற்றிற்கு பதிலாக பாரதத்திற்கே உரிய வரகு, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் அரசு முனைந்தால் தொப்பை வளராமல் வியாபாரம் மட்டும் விருத்தியாகும். [கட்டுரைக்கு வாசகர்களின் மறுவினைகளைக் கவனியுங்கள். உருப்படியாக சர்ச்சிப்பது எப்படி என்று இந்தியருக்குத் தெரிந்திருக்கிறதென்பது புரியும்.]
http://cbpsbangalore.wordpress.com/2013/09/11/food-security-or-diabetes-subsidy/

oOo

நான் அவனல்ல

ஜெர்மனியில் பெர்லின் நகரைச் சேர்ந்த ஆண் ஒருவர், தான் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்ததாக, பெர்லின் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.
அதில் மர்மம் ஒன்றுமில்லை. பிறப்பால் பெண்ணாக அறியப்பட்ட ஒருவர் ஆணாக மாறி இருக்கிறார். ஆனால் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார். தானே வீட்டில் பெற்றெடுத்து விட்டு, பதிவு செய்ய வரும்போது, தன்னைக் குழந்தையின் தந்தையாகவே பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இது பெர்லின் பிறப்புப் பதிவு அதிகாரிகளைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஏதோ பல லட்சக் கணக்கில் வரப்போவதில்லை என்று நாம் கருத இடமுண்டு. ஆனாலும் மஹாபாரதக் கதைகள் போல பலவிதமான உருமாற்றங்களோடு மனிதர்கள் உலவும் காலமும் அருகில் வருகிறது என்று கருதவும் இடமிருக்கிறது.
http://www.spiegel.de/international/zeitgeist/transsexual-parenthood-a-challenge-to-government-agencies-in-berlin-a-921350.html

oOo

நூறு ரூபாய் வீட்டு வரி பாக்கி வைத்தால் ஜப்தி செய்வோம்

இவ்வளவு குரூரமான அரசு டெக்ஸஸ் அரசு. அமெரிக்க வலதுசாரித் தீவிரவாதிகளின் கூடாரமான டெக்ஸஸ், இதுவும் செய்யும், இன்னமும் கூடுதலாகக் கூடச் செய்யும். கேட்டால், சிறுபான்மையினரை யார் இந்த மாநிலத்தில் வாழச் சொன்னார்கள், கிளம்பிப் போகலாமே என்று பதில் வரும். ஆனால் தோட்ட வேலையில் துவங்கி அனைத்து உடலுழைப்பு, குறைந்த ஊதிய வேலைகளுக்கும் மெக்ஸிகோவில் துவங்கிப் பல தென் அமெரிக்க நாடுகளிலிருந்து வரும் குடியேறிகளைத்தான் நம்பி இருக்கும் மாநிலம். சட்டங்கள் மட்டும் அவர்களுக்கு எதிராகவே தொடர்ந்து மக்களவையில் உருவாக்கப்படும். இன்னமும் பழைய அடிமை முறைச் சமுதாயமே எல்லாருக்கும் நல்லது என்று நம்பும் பிரமுகர்கள் இந்த மாநிலத்தில் நிறையவே இருக்கின்றனர். இதை உலகின் முன்னேறிய நாடுகளில் தலையாய நாடு என்று நம்புவதோடு அதை ஒரு முத்திரையாகவும் வைத்திருக்கும் ஜி20 நாடுகளின் மாநாடு வேறு சமீபத்தில் நடந்தேறியது. இந்த நாடு இந்தியாவுக்கு எப்படி ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி புத்திமதி வேறு சொல்லும் அபத்தமும் தொடர்ந்து நடக்கிறது. இதெல்லாவற்றையும் விட பெரிய கேலிக் கூத்தை எந்த நாடகாசிரியராலும் எழுதவோ, மேடையேற்றவோ முடியாது.

Home_House_Liens_Property_Tax_Texas_Poor_Investment

http://www.washingtonpost.com/sf/investigative/2013/09/08/left-with-nothing/

oOo

&

பங்சுவேஷன் குறியீடுகளின் துவக்கங்கள் எங்கே என்று சொல்லும் கட்டுரை. உலகில் நிறைய விசித்திரமான துவக்கங்கள் இருக்கின்றன. இன்று அங்கு துவங்கியவை எங்கு வந்து சேர்ந்திருக்கின்றன என்றால் இந்த கிரேக்க எழுத்துகளோடு ஒரு தொடர்பும் இல்லாத தமிழில் புழங்குகின்றன என்பதுதான் வினோதம். அந்த அளவுக்குக் காலனியம் இந்திய/ தமிழ் புத்தியை வசப்படுத்தி வைத்திருக்கிறது.
http://www.newyorker.com/online/blogs/books/2013/09/origins-of-hashtag-manicule-diple-pilcrow-ampersand-explained.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.