நீலப்பனியைத் தேடி – 1

நார்வே நாட்டிலுள்ள ஃபியார்ட்ஸுக்குப் போக வேண்டும் எனத் திட்டம் போட தொடங்கியபோது வடதுருவம் வரைக்கும் செல்லும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை. ஐரோப்பாவில் மிகக்குறைவான மக்கள் வாழும் பகுதியான ஸ்காண்டிநேவிய நாடுகள் இயற்கை அழகுக்குப் பிரசித்தமானவை. ஒரு குலையிலிருந்து தொங்கும் வாழைப்பழங்கள் போல நார்வே, டென்மார்க், ஸ்வீடன் என மூன்று பகுதிகளாக ஸ்காண்டிக் நாடுகள் வட துருவத்துக்கு அருகில் தொங்குகின்றன. பெரும் மலைகள் சூழ்ந்த கடல் பகுதிகள் நிரம்பிய ஃபியார்ட்ஸ் பகுதிக்குச் செல்வது எங்கள் பயணத்தின் முதல் நோக்கம். திட்டங்கள் போடத்தொடங்குவதற்காகப் பல குழுமங்களை அலசிக்கொண்டிருந்தபோது நார்வேயிலிருந்து வட துருவத்தை நோக்கிப் பயணிக்கும் ஹடிருடன் (Hurtigruten) எனும் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டோம்.

scandinavia_map

ஹடிருடன் கப்பல் பயணத்தைப் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் தொடரத் தொடங்கியபோது நார்வேயின் கடற்புற நிலப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கியது. ஏதோ புகைப்படங்கள் பார்த்தோம் பிடித்திருந்தன என்பதுபோலில்லாமல் எங்கள் அருகே தீண்டியபடி நின்றிருந்த தொடர்கனவைப்போல வடதுருவப் பயணம் சதா ஈர்த்துக்கொண்டே இருந்தது.

பயணத்தைவிடப் பயணத்துக்காகத் திட்டம் தீட்டுவதே ஒரு பரவசமான அனுபவம் என என் மனைவி சொல்லும்போதெல்லாம் நான் நம்பியிருக்கவில்லை. திட்டம் போடும்போது, ஒரு நிலப்பகுதி மலரிதழ் விரிவதைப் போலக் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கற்பனையில் விரிவடையத்தொடங்கியது. பயண நாள் நெருங்கும் சமயத்தில் நமக்கு இதுவரை இல்லாத ஒரு புதிய உணர்வு நம்மைத் தீண்டுவது போலொரு பரவசம் எங்களிடம் ஒட்டிக்கொண்டது.

பெர்கன், அல்செண்ட் எனும் நகரங்களுக்கிடையே ஹடிருடனில் ஐந்து நாட்களும், மிச்சம் இருந்த ஐந்து நாட்களை ஓஸ்லோ, ஸ்ட்ரின் பகுதியிலும் கழிக்கலாம் என்றும் முடிவு செய்திருந்தோம். என் பெண்ணுக்கு அப்போது ரெண்டு வயதாகியிருந்தது. எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் கேட்கத் தொடங்கியிருந்தாள். எங்கள் எல்லாருக்குமே புதிய நிலம் என்றாலும் அவளுக்கு வேண்டிய உணவுகளும், அவசர மருத்துவ உதவிகளும் கிடைக்குமா எனும் பதற்றம் ஆரம்பத்தில் இருந்தது. நார்வேயைப் பற்றி விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியதும், ஆங்காங்கே கிடைக்கும் வசதிகளைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்ததால் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

முதலில் அல்செண்ட் (Alesund) பகுதியிலிருந்து ஸ்ட்ரின் (Stryn) எனும் கிராமத்துக்கு நீலப்பனிபாளங்களைப் பார்ப்பதற்காகச் சென்றோம்.

norway-alesund

குடைவரைக் கடல்கள் அமைந்த பகுதியான ஃபியார்ட்ஸ் நார்வே மற்றும் நியூசிலாந்து நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. பல நூறு கிலோமீட்டர்களுக்கு (கிட்டத்தட்ட நார்வே நாட்டின் 1200 கி.மீ நீளக்கடற்கரை நெடுக) மலைகளைக் அரித்து அமைந்திருக்கும் கடல் வழியே சரக்குக் கப்பல்களும், சுற்றுலாக் கப்பல்களும் வட துருவம் வரை தினமும் கடக்கின்றன. ஆழ்மலையிடுக்குகளில் பயணம் செய்யும்போது இலக்கு முக்கியமில்லாமல் போகிறது. குறிப்பாகத் தெளிவான நாட்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீட்டுக்கட்டைப் போல அள்ளிக்குவிக்கப்பட்ட மலைகள் அடுக்கடுக்காக முடிவிலியை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் மற்றொரு கப்பல் அருகே வர இடமில்லாத மிகக்குறுகிய இடுக்கில் செல்லும்போது இருபுறமும் நெடிது நிற்கும் மலை அடுக்குகள் கண்ணாடி பிம்பங்களோ எனும் சந்தேகம் வரும்படியாகத் துல்லியமான பிரதிகளாக இருக்கின்றன. சலூன் கண்ணாடியைப் போல ஆடிப்பிம்பம் மாறி மாறி எதிரொளிக்கிறதோ எனத் தோன்றும்.

norway-fjords

நார்வே நாட்டின் ஸ்ட்ரின் பகுதிக்கு அருகே ஓல்டெனில் ஐரோப்பாவின் மிகப்பெரிய உறைபனி நிலப்பகுதிக்குச் செல்வதுதான் திட்டம். ஸ்ட்ரின் எனும் இடத்திலிருந்து அந்த மாபெரும் பனிப்பாளத்தின் சிறு பகுதியை அருகில் சென்று பார்க்கமுடியும். கிட்டத்தட்ட 500 கிமீ நீளமுள்ள அந்த உறைபனி உயர மலைகளையும், குறுகிய நதிகளையும் இணைக்கும் பெரும் பரப்பளவு கொண்டது. யோஸ்டெலெஸ்ப்ரீன் (Jostedalsbreen glacier) எனும் ஐரோப்பாவின் பிரம்மாண்டமான உறைபனி உலகின் ஒரு பகுதி ஸ்ட்ரின் ஊரில் அமைந்திருக்கும் ப்ரிக்ஸ்டால் (Briksdal glacier) பனிப்பாளம். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ட்ரின் பகுதியில் மூவாயிரத்துக்கும் குறைவானவர்களே வாழ்கிறார்கள்.

பிரம்மாண்டமான பனிப்பாளத்தை எதிர்நோக்கி அமைந்திருக்கும் ஸ்ட்ரினுக்கு நாங்கள் அல்செண்டிலிருந்து சனிக்கிழமை இரவு வந்து சேர்ந்தோம். ஐந்து மணிநேரங்கள் பஸ் பயணம் மேற்கொண்டு ஸ்ட்ரின் வந்து சேர்ந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. புதிய ஊருக்கு நள்ளிரவில் சென்று அடைவது பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானப் பகுதியாகும். பகலில் ஓர் இடத்தை அடையும்போது அந்த ஊரின் சூழலுக்கு நம் பயண நேரத்தில் பழகியிருப்போம். இரவு முழுவதும் கடக்கும் நிலப்பகுதியையும் மலையின் இருபுறங்களும் சரியும் பள்ளத்தாக்குகளைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது அடையும் பிரமிப்புச் சொல்லில் அடங்காத அனுபவம். அல்செண்டிலிருந்து ஸ்ட்ரின் செல்லும் பாதை அப்படிப்பட்ட பரவசமான அனுபவத்தை அளித்தது. மலைப்பாதை வழியாக  எங்கள் பஸ் சென்றபோது சுற்றிலும் கண்கூசும் அளவுக்குப் பனிப்பாளங்கள் திரண்டிருந்தன. இங்கே குளிர்கண்ணாடிகள் போடாவிட்டால் அதிவிரைவில் கண்பார்வைக் கெட்டுப்போகும் என்றார் எங்களுக்கு முன் சீட்டில் இருந்த நார்வேக்காரர்.

ஊசிமுனைத் திருப்பங்களுடன் பனிப்பொழிவுக்கு இடையே பயணம் நீண்டது. வண்டி ஓர் இடத்தில் நிற்கும்போது இறங்கிச் சற்றுத் தூரம் வரை நடந்து பார்த்தேன். எங்கெங்கிலும் வெண்மை. நடக்க நடக்க நான் கிளம்பிய இடம் மறைவது போலக் கடுமையான பனிப்பொழிவு. வெள்ளை உலகத்துள் மூடப்பட்ட வெண்மையான மழைத்துகள்கள். ஆங்காங்கே தெரிந்தக் குடைகள் அப்பெரும் பரப்பின் கண்கள். பனிப்பொழிவு என்றால் பனிமனிதன், உருண்டையாக்கித் தூக்கிப்போடும் குதூகலத்தை அறிந்த எனக்கு என்னைச் சூழ்ந்திருந்த வெண்மைப் பெரும் மன எழுச்சியை அளித்தது. பனிக்காலம் முடிந்து இளவெயிலை வரவேற்குமுகமாக ஆங்காங்கே பனிப்பாளங்கள் உடைந்து சத்தமாக விழுந்தன. பஸ்ஸை விட்டுச் சிறிதுத் தூரம் தான் வந்திருப்பேன் என்றாலும் சத்தம் கேட்டதில் பனிப்பிரளயம் வந்தவன் போல வேகமாகப் பஸ்ஸுக்குத் திரும்பினேன்.

norway-bus

எங்களையும் சேர்த்துப் பதினைந்துப் பயணிகள் தான் இருந்தனர். உள்ளூர் மக்கள் பஸ் பயணத்தை விரும்புவதில்லை என ஓட்டுனர் சொன்னார். புதிதாகச் செப்பனிடப்பட்ட ரயிலில் மூன்று மணிநேரத்தில் ஸ்ட்ரின் சென்றுவிட முடியும். மேலும் ஓஸ்லோ மற்றும் பெர்கர் நகர்களில் மட்டுமே வர்த்தகம் அதிகம் உண்டு என்பதால் அல்செண்ட், ஸ்ட்ரின் போன்ற பகுதிகளுக்குச் சுற்றுலா பயணிகளும், பனிசறுக்குப் பயிற்சிக்காகவும் மட்டுமே வருவார்கள் எனக் கூறினார். நார்வே நாட்டின் வருவாயில் கப்பல் கட்டுமானத் தொழில், மீன்பிடித்தொழிலும், சுறா வேட்டையும் பிரதானம் என்பதால் வடக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் அதிகமாக இடம் பெயர்வதாகச் சொன்னார்.

நள்ளிரவு தாண்டி ஸ்ட்ரினுக்கு வந்து சேர்ந்தோம். ஒளிப்பேழையைப் போல எஞ்சியிருந்த வெளிச்சத்தின் மிச்சத்தை வானம் ஒளித்து வைத்திருந்தது. எங்கள் சுற்றுப்பாதை மலையிலிருந்து இறங்கத்தொடங்கியபோது கீழே பனிமனிதர்கள் போல நீண்டக் கனரக வாகனங்கள் சாலையில் ஊர்ந்துகொண்டிருந்தன. நார்டிக் நிலத்துண்டுகள் இடித்து எழும்பி நின்ற பெருவெளிகள் மலைகளாகவும் பள்ளத்தாக்குகள் மனித இனத்தின் தொட்டில்களாகவும் கிடந்தன. ஆங்காங்கே மண்ணிலிருந்து பனிப்பாளத்தை உடைத்து வெளிவரத்துடிப்பவைப் போலச் சமநிலப்படுத்தப்பட்ட மலைச்சரிவுகளில் மரத்தாலான வீடுகள். பனிக்காலம் முடிந்ததால் தற்காலிகமாகப் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்குப் பெயர்ந்திருந்த மக்கள் இனி வரத்தொடங்குவர். ஆர்ட்டிக்கிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றுச் சமயங்களில் மலைச்சரிவுகளை உண்டாக்குவதால் மலைப்பாதைகள் நாட்கணக்கில் மூடிவிடுவதும் உண்டு. அதனால் பனியிலிருந்து காத்துக்கொள்ளப் பெரும்பாலானோருக்கு இரண்டு வீட்டமைப்புகள் இருக்கும்.

ரெண்டு நாட்களாக அல்செண்டில் அலைந்ததில் மிகவும் களைப்பாக இருந்தது. அறைக்குச் சென்று கண்ணைமூடினேன். வெண்மலைகளின் பிம்பங்கள் கண்ணுள் எஞ்சியிருந்தன. பரவசத்தையும் மீறி உடனடித் தூக்கம். காலையில் கூரை இடிந்துவிழுவது போலச் சத்தம் கேட்கும்வரை விழிப்பு அண்டவில்லை.

நெடும் பயணத்தின் பெரும்பான்மையான விடியல்களைப் போலக் குழப்பத்துடனேயே கண் விழித்தேன். வழக்கமாகத் தூங்கி எழும் அறையல்ல என்பதை உணர்ந்தாலும் எந்த ஊரில் இருக்கிறோம் எனும் சந்தேகம் தெளிவதற்குச் சில நொடிகள் ஆயிற்று. மசமசப்பான காலை வேளையில் கனத்த ஜன்னல் திரை வழியே மெல்லிய ஒளி ஊடுருவியது. கட்டுமானப்பணிகள் நடப்பதுபோலத் தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நள்ளிரவு சூரியன் வரும்நாட்களில் வெளிச்சத்தை மட்டுப்படுத்த ஜன்னலுக்கு வெளியே இரும்பாலான ஷட்டரை பயன்படுத்துகிறார்கள். திரையை விலக்கிப் பார்த்தபோது பாதி வரை இறக்கிவிடப்பட்டிருந்த ஷட்டர் முதலில் தெரிந்தது.

norway-village

பக்கத்து வீடு ஐம்பது மைல்கள் என்பதைப் போல அருகில் மலைகளைத் தவிர எதுவும் இல்லை. அரைவிழிப்பு நிலையில் சத்தம் வந்த திசையைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் ஆனது. தூரத்தில் தெரிந்த மலையிலிருந்து கார் அளவிலான பனிப்பாளங்கள் உடைந்து விழுந்தபடி இருந்தன. நாங்கள் சென்றிருந்த பருவம் அப்படி. எங்குத் திரும்பினாலும் மண் நிறத்திலான மலைகள் பனிப்போர்வையை உதறியபடி இருந்தன. பஸ் பயணத்தின் போது தொடங்கிய அதிர்ச்சி இப்போது சகஜமாயிருந்தது.

சுறுசுறுப்பாகக் கிளம்பி மதியம் ப்ரிக்ஸ்டால் பனிப்பாளம் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பயணிகள் இல்லாத மற்றொரு பஸ் பயணம். ஆனால் குறிக்கப்பட்ட நேரத்துக்குக் கிளம்பி எங்களைச் சரியான நேரத்தில் ஓல்டென் (Olden) எனும் கிராமத்தில் இறக்கிவிட்டது. பனிப்பாளத்துக்கு அருகே செல்வதற்கு இங்கிருந்து மற்றொரு வண்டியைப் பிடிக்க வேண்டும் என்பதால் சற்று தொலைவில் மேடானப் பகுதியிலிருந்த கடையில் விசாரிப்பதற்கு என் மனைவி சென்றிருந்தார். நான் என் பெண்ணுடன் வெளியே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் என்னைத் தேடி ஒரு வயதான பாட்டி கடையிலிருந்து வெளியே வந்தாள். கைதட்டிக் கூப்பிட்டது யாரையோ என நினைத்திருந்தபோது, `கெரி`, எனத் துல்லியமாக என் பெயரைக் கூப்பிட்டாள்.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு பல படிக்கெட்டுக்கள் ஏறவேண்டாமென நினைத்து, இங்கிருந்தே என்னவென்று கேட்டேன்.

`டுடே சண்டே. நோ ப்ரிக்ஸ்டால்`, என உடைந்த ஆங்கிலத்தில் கத்தினாள். அதற்குள் என் மனைவியும் அவளோடு சேர்ந்துகொண்டாள்.

அப்போதுதான் எங்கள் தவறு புரிந்தது. எங்கள் பயணத்திட்டத்தின்படி ப்ரிக்ஸ்டால் பனிப்பாளத்தைப் பார்ப்பதற்காக ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இன்னும் சீசன் தொடங்குவதற்கு ரெண்டு வாரங்கள் இருந்தன. மேலும் பனிப்பாளத்துக்கு மேலே அழைத்துச் செல்வதற்கான வண்டி இன்று இருக்காது. அன்று இரவு மீண்டும் பெர்கன் நகருக்குச் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்ததால் அடுத்த நாள் பார்த்துகொள்ளலாம் எனத் திரும்ப முடியாது. கிட்டத்தட்ட இருபது கிமீட்டர்கள் சிறு மலைகள் மீது ஏறினால் மட்டுமே ப்ரிக்ஸ்டால் பனிப்பாளத்தை அடைய முடியும். என்ன செய்வதென்று புரியாமல் நின்றுகொண்டிருந்தோம். அப்போது மீண்டும் எங்களை அந்தப் பாட்டி கடைக்குள் அழைத்தாள்.

இந்த முறை வேறுவழியில்லாமல் நாங்களும் கடைக்குள் நுழைந்தோம். கடைக்குச் சாமான் வாங்கிவந்திருந்த நான்கைந்து நபர்களும் கடை சிப்பந்திகளும் கூடி நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பாட்டி எங்களிடம் சுவரில் ஒட்டியிருந்த படத்தைக் காட்டி, `டுடே நோ பஸ் டு க்ளேசியர்`, என்றாள். எங்களைத் திரும்பிப் பார்த்தபடி நார்வேஜியன் மொழியில் அவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். பாஷை தெரியாத சிற்றூரில் மாட்டிக்கொண்டுவிட்ட சங்கடத்தில் நாங்கள் செய்வதறியாது நின்றிருந்தோம். எங்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு பாட்டி மீண்டும் அந்தக் கூட்டத்தோடு இணைந்துகொண்டார். எங்கள் கையிலிருந்து வரைபடத்தை வாங்கிக்கொண்டு ஏதேதோ பேசியபோதுதான் அவர்கள் அனைவரும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு எங்களுக்கு மாற்று வழி யோசிக்கிறார்கள் எனப் புரிந்தது. வேறு வழியில்லாமல் நாங்களும் அவர்களுடன் நின்றுகொண்டோம்.

அப்போது உயரமான ஒரு நபர் சாமான் வாங்குவதற்காகக் கடைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் எங்களுக்கு வழி தேடிக்கொண்டிருந்தவர்கள் பெருங் கூச்சல் போட்டனர். பாட்டி குடுகுடுவென அவரிடம் ஓடிச் சென்று பரவசமாக ஏதேதோ பேசினார். ஓரிரு நிமிடங்களில் எங்களிடம் ஓடி வந்து, `வெரி லக்கி, ட்ரைவர்`, என கண்ணில் நீர் வராதக் குறையாக உணர்ச்சிவசப்பட்டார்.

கடைக்குள் நுழைந்தவர் ப்ரிக்ஸ்டால் பனிப்பாளத்தில் பகுதிநேரக் கைடாக இருப்பவர். அங்குச் செல்வதற்கான மினி ஜீப்பை ஓட்டுபவர். அவரது அம்மா தக்காளியும் முட்டையும் வாங்கிவர கடைக்கு அனுப்பியதாகவும் எங்களிடம் வசமாக மாட்டிக்கொண்டதாகவும் சிரித்தபடிச் சொன்னார். வீட்டுக்குச் சென்று மினி ஜீப்பைத் தயார் செய்துவிட்டு ஒரு மணி நேரத்தில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினார். அவரிடம் பேசிவிட்டுத் திரும்பிப் பார்த்தபோது பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் தத்தமது வேலைக்குத் திரும்பியிருந்தார்கள். எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார் பாட்டி! பாட்டியின் கண்களில் தெரிந்தக் குதூகலத்தை எங்களால் இன்றும் மறக்கமுடியாது. அது மட்டுமல்லாது ஓஸ்லோவில் வாழும் தனது அக்காவின் வீட்டு முகவரியைக் கொடுத்திருந்தார். அவர் இந்தியாவுக்குப் பல முறைச் சென்றவராம். அவரது வீட்டுக்குச் சென்று மாலை தேநீர் அருந்தினால் மிகவும் சந்தோஷப்படுவார் எனச் சொன்னார். அவர்களைப் பற்றி இப்போது நினைத்தாலும் மனமுருக வைக்கிறது. பெரிய நன்றி சொல்லிவிட்டுக் கடை வாசலில் உட்கார்ந்துகொண்டோம்.

brikstal-way.

எங்கள் அதிர்ஷடத்தை என்னெவென்று சொல்வது? இன்னும் சுற்றுலாவுக்கான சீசன் தொடங்காத ஒரு சமயத்தில் ஊர் உறங்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் பனிப்பாளத்தை நோக்கித் தேர்ந்த ஓட்டுனரோடு சென்றுகொண்டிருந்தோம். யோஸ்டேடால்ஸ்ப்ரீன் எனும் உறைபனி நிலப்பகுதி ஐரோப்பாவில் மிகப் பெரிய பனிப்பாளத்தைக் கொண்டது. கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர்ப் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாளம் பனியுகத்தில் உருவானது. இன்றுவரை சில கிலோமீட்டர்கள் மட்டுமே உருகியுள்ளது.அரைகிலோ மீட்டருக்கும் மேலான ஆழம் உள்ள பனிப்பாளைகள் உள்ளடக்கிய இந்தப்பகுதியின் உறைபனியின் ஆழத்தில் கடலும், வெந்நீர் ஊற்றுக்களும் இருப்பதாகச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். ப்ரிக்ஸ்டால் பனிப்பாளம் இதன் கிளைப்பகுதி.

பிரம்மாண்டமான மலைத்தொடர்கள் எங்களைச் சூழத்தொடங்கியது. பனிப்பாளையின் தோரணவாயிலுக்குள் நுழைந்துவிட்டோம் எனக் குளிர் உணர்த்தியது. எங்களைச் சுற்றி மண் நிறமுள்ள பாறைகள். ஐநூறு கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட மாபெறும் பனிப்பிரதேசத்தை அணைக்கட்டிக் காப்பது போல எங்கள் முன் திரண்டிருந்தது.

நான்கு நபர்கள் மட்டுமே உட்காரக்கூடிய எங்கள் ஜீப் மெல்ல மலையேறிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளும், பனிமலைகளும் தெரியத்தொடங்கும்போது நம் உலகைவிட்டு வேறொரு அதிசய மந்திர உலகத்துள் நுழைந்துவிட்ட உணர்வு. எங்கள் ஓட்டுனர் ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு எங்களை நடத்திக் கூட்டிச் சென்றார். அதுவரை பனிப்பாளம் இருப்பதற்கான அறிகுறி எங்களைச் சுற்றி எங்கும் தென்படவில்லை. நடந்துகொண்டே இருப்போம், திடீரென எங்கள் முன் பிரச்சன்னமாகும் எனும் நினைப்பே பரவசத்தை அதிகமாகக் கூட்டியிருந்தது. சிறு குன்றின் மீது ஏறிவிட்டு, பள்ளத்தில் இறங்கினோம். சற்றுத் தொலைவில், மலைப்பிளவிலிருந்து வெள்ளையாக ஒன்று தெரிந்தது. பொங்கிவரும் பால் உறைந்துவிட்டது போலப் பனிக்கூழ் நுரையாக அது காட்சியளித்தது. அருகே செல்லச் செல்ல வெண்மை நிறம் மெல்ல நீலச்சிதறல்களாகக் காட்சியளித்தது. வானத்தின் பிரதிபலிப்பாக இல்லாமல், இயல்பிலேயே நீல நிறப் பனித்துகள்கள் உண்டு என்பதை அன்று தெரிந்துகொண்டோம்.

brikstal-glacier

எந்த நிமிடமும் பனிப்பாளம் மீண்டும் பொங்கி அப்பகுதியை முழுக்க நிரப்பிவிடும் போலிருந்தது. மிகவும் உயிர்ப்பான நிகழ்வை ஒரு கணத்தில் உறைய வைத்ததுபோலதொரு காட்சி. நான் அருகிலிருந்து கல்லில் உட்கார்ந்துகொண்டேன். எங்களைத் தவிர அப்பகுதியில் யாருமே இல்லை. மெளனமான வெளியாக இருக்கும் எனக் கற்பனையில் நினைத்திருந்தேன். ஆனால், அப்பகுதி அப்படி இல்லை. ஒவ்வொரு நொடியும் பனிப்பாளம் உராய்ந்தபடி இருக்கும் சத்தம் பெரும் உறுமல் ஒலி போலக் கேட்டுக்கொண்டே இருந்தது. எங்கள் ஓட்டுனரின் வீடு அப்பகுதியின் மற்றொரு எல்லையில் எங்கள் ஜீப் வந்த பாதையில் இருந்தது. பல சமயங்களில் நூறு தாளவாத்தியக்கருவிகள் ஒன்றாக இசைப்பதுபோலப் பலத்த ஒலி அந்த வெளியைப் பல நொடிகள் நிரப்பிவிடும் எனச் சொன்னார். பிரபஞ்ச நாதம். பனிப்பாளைகள் உறைந்த பனிமலைகள் அல்ல. ஒவ்வொரு நொடியும் நகர்வதும், உராய்வதுமாக, ஆழ்நிலப்பகுதியில் விரிசல்களும், இணைவுகளும் சதா நிகழ்ந்துகொண்டிருக்கும் நகர்வெளி. ஆறுகளும், கடல்பகுதிகளும், பாசிகளும், அபாயகரமான வாயுக்களும் நிரம்பிய உறைபனிப்பாளைகளின் பிரம்மாண்டம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது.

நெடிதோங்கிய மலைகள் சுற்றிலும் அரண் போல அமைந்ததில் பனிப்பாளத்தை ஊருக்குள் வராமல் தடுத்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. இன்று ப்ரிக்ஸ்டால் பகுதி பனிப்பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருகிவருவதாக ஓட்டுனர் கூறினார். நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஐந்து மைல்கள் தூரத்தில் பனிப்பாள விளிம்புக்கருகே நீர்வீழ்ச்சி இருப்பதாகவும், அது சின்ன விரிசலிலிருந்து தொடங்கிப் பெர்கன் பகுதி நதியுடன் காட்டாறு போல இணைவதாகக் கூறினார்.

briksdal

ஒரு காலத்தில் மண்ணின் ஒருபகுதியாக இருந்த கல்லும் மணலும் காலப்போக்கில் மலைச்சிகரமாகவும், முதல் பொன்னொளியைத் தரிசிக்கும் உச்சிகளாகவும் மாறி ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்கும் நிலப்பகுதி எங்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. நாங்கள் ஒரு வார்த்தையும் பேசாது அமர்ந்திருந்தோம். அருகில் இருந்த மலைமீதேறி உறைப்பனிப்பரப்பைப் பார்த்துவிடவேண்டும் என மனம் பரபரத்தது. ஆனால் என் முன்னால் இருந்த மலைவிரிசல்களில் பொங்கியிருந்த பனிப்பாளத்தைப் பார்ப்பதிலேயே மனம் இன்னும் அடங்கவில்லை என்பது உரைத்தது.

இருள் மலையிலிருந்து இறங்கத்தொடங்கியிருந்தது. முதலில் நிழல்களாகவும் பின்னர் வலுவான காற்றாகவும் மாலை மாறிவிடும் என்பதை நார்வேயில் இருந்த சில நாட்களில் அறிந்துகொண்டிருக்கிறேன். ஓட்டுனருக்கு நன்றி கூறிவிட்டு மலை இறங்கத் தயாரானோம். என் மகள் தோளில் உறங்கியிருந்தாள். அவளை எழுப்ப மனம் வரவில்லை. விழித்ததும் அவள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருந்திருக்காது.

(தொடரும்)

0 Replies to “நீலப்பனியைத் தேடி – 1”

  1. அருமையான நடை. எல்லா இடத்திலும் மனிதர்கள் மனிதர்கள்தான். இந்த அவசர உலகத்திலும் காலத்தில் உறைந்த இத்தகைய மனிதர்களின் பண்புதான் இந்த உலகத்தை சமன் செய்து வைத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.