அந்தரங்கச் சுரங்கம்: ஸாங்க்டம்-டெனீஸ் மைனாவின் நாவல்

உளவியலை மையப் பார்வையாகக் கொண்ட குற்றப்புனைவுகளில் (psychological crime  fiction) பொதுவாக இரண்டு முக்கியப் பாணிகள் இருக்கும். மிகவும் இருண்மையான மனம் கொண்டு,  மிகவும் புத்திசாலித்தனமாகக் குரூரச்  செயல்கள் புரியும் ஒரு ஆசாமி (arch villian), அவனைப் பின் தொடரும் நுட்ப பு்த்தியும், விடாப் பிடிவாதமும், நீதி  தேடுவதில் ஏனோ அக்கறை கொண்டவருமான காவல் துறை அதிகாரி, இவர்களுக்கிடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு பாணி. தொடர் கொலைகள் நடக்கும்  நாவல்களில் இந்தப் பாணியை அதிகம் பார்க்கலாம் (Val McDermid இன் டோனி ஹில் நாவல்கள்).  இன்னொரு பாணியில் காவல் துறையின் பங்கு முக்கியமாக  இருக்கும் என்று சொல்ல முடியாது. சாதாரணமாகத் தோன்றும் மனிதர்களுக்குள் இருக்கும் மன அழுத்தங்கள், அவை வெடிக்கும் போது  ஏற்படும் அசம்பாவிதங்கள்  என இந்த நாவல்கள் விரியும். இங்கு கதையின் இறுதி முடிச்சு நாவலின் பாத்திரங்களாலேயே அவிழ்க்கப்படும். ரூத் ரெண்டெல் (Ruth Rendell) எழுதும் தனி நாவல்கள் (standalones) மற்றும் பார்பரா வைன் (Barbara Vine) என்ற மற்றொரு புனை பெயரில் அவர் எழுதும் நாவல்களை இந்தப் பாணிக்கு உதாரணமாகச் சொல்லலாம். அவருடைய வெக்ஸ்ஃபோர்ட் (Wexford) தொடர் நாவல்களைப் படித்தால் அவற்றுக்கும், மேற்சொன்ன அவரின் பிற  நாவல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரலாம். கடந்த 5-6 ஆண்டுகளில் காரின் ஆல்வ்டியேகென் (Karin Alvtegen) இன் உளவியல் குற்றப்புனைவுகள் பெரும் விமர்சன வரவேற்பைப் பெற்றுள்ளன. மாய் சுயொவாலும் பெர் வாலூவும் (Sjöwall and Wahlöö ) இணைந்து எழுதிய நாவல்களில் ஆரம்பித்து ஹென்னிங் மாங்கெல் (Henning Mankell) செழுமைப்படுத்தி, ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவுலகில் பலரும் செல்லும் ‘காவல் துறை புலனாய்வு’ பாதையிலிருந்து விலகிப் புது வழியில் செல்பவை காரினின் நாவல்கள்.

Sanctum

நடைமுறை வாழ்கையில் எல்லா குற்றங்களுக்கும் விடை தெரிந்து விடுகிறதா, எத்தனை குற்றங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன? விக்டோரிய அரசு ஆண்ட காலததில்,  பெண்களைக் கிழித்துக் கொன்ற ஜாக் (Jack The Ripper) குறித்த ஹேஷ்யங்கள் இன்றும் உலா வருகின்றன). ஆனால்  குற்றப் புனைவில் (அது எந்த வகைமையாக இருந்தாலும்), இறுதியில்  குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, குற்றத்திற்கான காரணமும் சொல்லப்பட வேண்டும் என்பது ஒரு  பொது விதியாக உள்ளது. குற்றவாளியைக் கண்டுபிடித்தாலும் குற்றத்திற்கான காரணத்தைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியுமா? பணம்,பொருள், பொறாமை, பழிவாங்கும் உணர்வு போன்ற காரணங்களால் நடக்கும் குற்றங்கள் தாம் பெரும்பான்மையாக  உள்ளன, இவற்றில் குற்றத்திற்கான காரணம் தெளிவாக உள்ள்ளது.

ஆனால் மனதின் ஆழத்தையும், அதன் விசித்திரங்களையும் யாரால் துல்லியமாகக் கணிக்க முடியும்? தன்னாலா, பிறராலா, அல்லது யாராலுமே முடியாததா அது?

உளவியல் குற்றப்புனைவுகளில் புறக் காரணங்களாகச்  சிறு வயதில் நடந்த பாலியல் வன்முறை, பெற்றோர் கவனிப்பின்மை  போன்றவை  சொல்லப்பட்டாலும்,  சிறுவயதில் எதனாலோ பாதிக்கப்பட்டவர்கள்தான் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றோ அல்லது  இருண்மையான மனநிலை உடையவர்கள் அனைவரும் சிறுவயதில் எதனாலோ பாதிக்கப்பட்டவர்கள்தான் என்றோ சொல்ல முடியாது.

சாதாரண மத்தியத் தரக் குடும்பத்தில் பிறந்து, ஏராளமான குழந்தைகளைப் போலவே சராசரியான சுக/துக்கங்களைச் சிறு வயதில் அனுபவித்த ஒருவன் ஏன் வாலிபத்தில் இருண்மையான மனநிலைக்கு மாறுகிறான்?  அவனுடைய இயல்பே அது தான் என்று இப் புனைவுகளில் சொல்லப்படுகிறது. சிறு வயதிலேயே  பறவைகள்,மிருகங்களை அவன் துன்புறுத்தியது போன்ற செயல்கள் கதையினூடாக வெளிவந்து, அவனுடைய வாலிப வயதுச் செயல்களுக்கு  இவை அடித்தளமாக இருந்ததாகச் சுட்டப்படுகிறது. அப்போதும் அவன் ஏன் அப்படிச் சிறுவயதிலேயே நடந்து கொண்டான் என்பதை முற்றிலும் விளக்க முடியாது. ”..[M]otive is the most slippery of truths’ என்று நாம் இங்கு கவனிக்கவிருக்கும் நாவலில் ஒரு இடத்தில் அதன் ஆசிரியர் மைனா சொல்கிறார். அவன்  நரம்பணுக்களிலேயே ஏதோ கோளாறு உள்ளது என்று தான் இதை நாம் கடக்க வேண்டும். அதாவது மூலகாரணம் தேடி, உளவியலை விடுத்து, உடலியலுக்கு செல்கிறோம். உளவியலில் விளக்கம்  தேடுவதில்  நமக்கு உள்ள வரம்பை, குறைவுகளைத் தன்  ஸாங்க்டம் (Sanctum)- அதாவது மற்றவர்கள் நுழைய முடியாத உள்ளிடம்- அதாவது அந்தரங்கம், என்ற நாவலின் களமாக்கி உள்ளார் ஸ்காட்லண்டின் முக்கியமான எழுத்தாளராக இன்று அறியப்பட்டு விட்ட டெனீஸ் மைனா (Denise Mina). அதையே பலமெனவும் காட்ட முயல்கிறாரென்பதே இங்கு அடிக்கோடிடப்படும்.

நாவலின் முகவுரையில் லாஹ்லென் என்பவரின் நாட்குறிப்புக்களையே இங்கு பிரசுரம் செய்திருப்பதாக கூறும் மைனா, சட்டக் காரணங்களுக்காகத் தன்னையே இந்த நூலின் ஆசிரியராகக்  கொள்ள வேண்டும் என்றும்  சொல்கிறார். இந்த உத்தி புதிது  இல்லையென்றாலும், நாவலின் ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவின்மையை (ambiguity) உருவாக்குகிறது. இவை நாட்குறிப்பின் பதிவுகள் என்றால் எந்த அளவுக்கு உண்மை என்றும்  மேலும் இதில் மைனா எதாவது மாற்றம் செய்தாரா, அதனால் தான் இந்த நூலின் ஆசிரியராகத் தன்னைச்  சொல்கிறாரா என்றும் கேள்வி எழும். இந்தத் தெளிவின்மை நாவலின் முக்கிய கவன ஈர்ப்பு உத்தி (USP) ஆக  உள்ளது.

லாஹ்லென் ஒரு மருத்துவர். தங்கள் குழந்தையை கவனிக்கவும், எழுத்துத் துறையில் ஈடுபடவும் வீட்டோடுள்ள கணவராக இருக்க முடிவு செய்ததாக அவர் சொல்கிறார். லாஹ்லெனின் மனைவி ஸூசியும்  ஒரு மருத்துவர் (தடயவியல் மனநிலை மருத்துவர்). தொடர் கொலைகளுக்காக கைது செய்யப்பட்டு, அதன்  பின்னர் நடந்த சில சம்பவங்களால் விடுதலை செய்யப்பட்ட காவ் (gow) என்பவனை  ஸூசி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்ப்பட்டு, நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும்  நாளிலிருந்து லாஹ்லெனின்  நாட்குறிப்புக்கள் ஆரம்பிக்கின்றன.  ஸூசிக்கும் காவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், காவ் பின்னர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டபின்,  அவர் குறித்த தன்னுடைய உளைச்சல் காரணமாக ஸூசி அவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இதற்குச் சான்றாக அரசுத் தரப்பில் (prosecution) கொடுக்கப்பட்ட விளக்கங்களை  இந்த நாட்குறிப்புக்களில் அவர் பகிர்கிறார். அவற்றை நம்புகிறாரா இல்லையா என்பது நமக்கு சரியாகத் தெரிவதில்லை. மனைவியைக் குற்றமற்றவள் என்று நிரூபிக்க, அவரின் வேலை அறையில் உள்ள ஆவணங்களில், கணினியில் ஆதாரங்கள் தேடப்போவதாக லச்லன் சொல்கிறார். இதை ஸூசி விரும்பவில்லை என்றும் கூறுகிறார் (ஏன்? ஒருவேளை ஸூசி தான் குற்றவாளியா அல்லது லாஹ்லென் தெரிந்து கொள்ளக் கூடாத வேறு விஷயங்கள் அந்த அறையில் உள்ளனவா?)

இனிமேல் நாவலைச் செலுத்தத் தேர்வாக இரண்டு வழிகள் உள்ளன. ஸூசியின் அறையில் கிடைக்கும் ஆதாரங்கள் மூலம் திருப்பங்கள் நிகழ்ந்து லாஹ்லென் ஸூசியைக் குற்றமற்றவள் என நிரூபிப்பதுடன் நாவல் முடியலாம்.  அல்லது  வித்தியாசமான முடிவாக  ஸூசி கொலைகாரி தான் என்றும் நாவல் முடியலாம். இரண்டில் எது நடக்கும் என நாம்  ஊகித்தாலும் அது  சரியானதாக  இருக்காது, அதே நேரம் முற்றிலும் தவறானதாகவும் இருக்காது.  லாஹ்லென்  ஸூசியின் அறையில் படிக்கும் ஆவணங்கள், காவ் பற்றிய ஸூசியின் பேட்டியின் ஒலி நாடாவின் உள்ளடக்கம், தங்கள் வாழ்க்கை பற்றி லாஹ்லென் நினைவு கூறும் சம்பவங்கள், காவ்  செய்ததாகக் கூறப்படும் கொலைகள் பற்றிய தகவல்கள் எனப் பல விஷயங்கள் காலவரிசையில் இல்லாமல் முன் பின்னாக விரிகின்றன.

நமக்கு லாஹ்லென் அளிக்கும் தகவல்கள் ஒன்று புதிய கேள்வியை எழுப்புகின்றன அல்லது முன்பு சொல்லப்பட்டதைப் பற்றி வேறு வகையில் யோசிக்க வைக்கின்றன. மேலும்  லாஹ்லென் சொல்வது உண்மையா என்றே சில நேரம் சந்தேகம் வருகிறது. நாவலின் ஆரம்பத்தில் இவர் ஒரு ஏமாற்றப்பட்ட, தைரியமில்லாத (wimpy cuckolded) கணவராக,  மனைவியின் நடத்தை குறித்து சலனம் கொண்டாலும் அவரை நம்புபவராக , மிகவும் நேசிப்பவராகவே தெரிகிறார். அப்படியென்றால் தங்கள் குழந்தையை ‘பகல்நேர குழந்தைகள் காப்பகத்தில்’ (creche) விடச் செல்லும்  போது,அங்குள்ள மற்றப் பெண்களின் அனுதாபத்தை விரும்புபவராக,  குறிப்பாக ஒரு பெண்ணின் அருகாமையால் கிளர்ச்சி அடைபவராக ஏன் உள்ளார்? இப்படி ஒரு நிலையை லாஹ்லென் தன் குறிப்புகளில் ஏன் பதிகிறார்?  அல்லது அது மைனா- நாவலாசிரியரின் நுழைப்பா? கேள்விகள், கேள்விகள். அவையே தொடந்து நாவலில் நம்மைச் சூழ்கின்றன.  முன்பே சொன்னபடி தெளிவின்மையைக் கொடுத்தே முன்னேறும் நாவல் இது.

பல அடுக்குகளாக இருக்கக்கூடிய இந்த ஆசாமி சொல்வது அனைத்தையும் நம்பலாமா? மினா காவுடன் உடலுறவு கொண்டிருப்பாரோ  என்ற நினைப்பு தான் இவரை அதிகம் வாட்டுகிறது; அதாவது  மனைவியின் உணர்வு வழி விலகலை விட உடல்வழி பிறழ்வைத் தான் அஞ்சுகிறார். (சமீபத்திய ஆய்வுகள் ஆண்கள் உடல்வழிப் பிறழ்வைத் துரோகமென்று நினைப்பதாகவும், அதற்கு நேர்மாறாக பெண்கள் உணர்வுப் பிரிதலைத் துரோகமென்று எண்ணுவதாகவும் கூறுகின்றன.) ஒரு வேளை தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் தன் மனைவி குற்றம் எதுவும் புரியவில்லை என்கிறாரா. மேலும் அவர் சொல்லும் சில தகவல்கள் நமக்கு ஸூசி மீது சந்தேகத்தை எழுப்பினாலும் (ஸூசி காவ் குறித்த ஆவணங்களைத் திருடியது, அவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணைப் பற்றி பொறாமையோடு பேசுவது போன்ற குறிப்புக்கள்), லாஹ்லென் அவற்றை புறந்தள்ளுவதிலேயே குறியாக  இருக்கிறார்.  நாவல் முழுதும் லாஹ்லென் பார்வையிலேயே நகர்வதால், நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்து அவர் சொல்பவை தான் என்பதால் இந்த சந்தேகம் மேலும் வலுக்கிறது.  மிகத் தைரியமான, உறவுகளில் சமத்துவத்தை விரும்பும்/பேணும்  பெண்ணாக விவரிக்கப்படும் மினா கணவனிடம் பயந்து எதையாவது மறைக்க நினைப்பாரா? பிறகு அவர் ஏன் லாஹ்லென் தன் அறையைக் குடைவதை விரும்பவில்லை, அப்படி என்ன அதில் உள்ளது. அதற்கும் அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கும் சம்பந்தம் உள்ளதா என்று வாசகரை மைனா யூகிக்க வைக்கிறாரே தவிர வெளிப்படையாக எதையும் சொல்வதில்லை.

mina

இந்த வகைப் புனைவுகளின் முக்கியத் தேவையான பரபரப்பை மினா வேண்டுவென்றே மட்டுப்படுத்தி உள்ளார். உதாரணமாக முதலில் காவ் கைது செய்யப்படுவது ஒரு போக்குவரத்து விதியை மீறுவதால் தான். அப்போது அவன் தானாக பல கொலைகள் செய்ததாக ஒப்புக்கொள்கிறான் (பின்னர் அவனேஅதை மறுக்கவும் செய்கிறான் என்றும் தெரிய வருகிறது). நிஜத்தில் பல விசாரணைகள் இப்படி எதேச்சையாகத்தான் முடிவை எட்டுகின்றன.  டெட் பண்டி, ஸன் ஆஃப் ஸாம் (Ted Bundy, Son Of Sam)  போன்ற அமெரிக்கத் தொடர் கொலைகாரர்கள் இது போல சிறிய போக்குவரத்து விதி மீறல்களால் தான் சிக்கினார்கள். ஒரு பரபரப்பான இறுதி மோதலில் குற்றவாளியைப் பிடிப்பது என்பது மிக அபூர்வமே.

எழுத்தாளராக ஆவதற்கு முன் மைனா பார்த்த வேலைகள் பலதிறப்பட்டவை. இறைச்சித் தொழிற்சாலை, மதுக்கடையில் பணிப்பெண் வேலை, சமையல் வேலை என்று பல வேலைகள் செய்த பிறகு முதியோர் மற்றும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்களைக் (terminally ill patients)   கவனிக்கும்  பணியைச்  செய்தார். பிறகு சட்டம் பயின்றார், பெண் குற்றவாளிகளை மனநிலை பிழன்றவர்கள் என முடிவு கட்டுவதை பற்றி ஆய்வு செய்துள்ளார்.   குற்றவியல் (criminology), குற்றச் சட்டம் இவற்றைப் பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த அனுபவங்களின் தாக்கத்தை அவர் எழுத்துக்களில் காணலாம். அவருடைய முதல் நாவலான கார்னெட் ஹில் (Garnet Hill) என்பதில் முக்கிய பாத்திரம் ஒரு மனநில நோயாளி, அதற்கான சிகிச்சை பெறுபவர்.  இந்த நாவலில் உளவியலை ஆழமாக உபயோகித்துள்ளார். பொதுவாக, உளவியல் குற்றப்புனைவுகள்  முக்கியப் பாத்திரம், எதிராளி ஆகியோரின் உளவியலை மட்டும் அதிகம் பேசும், அதிலும் எதிராளியின்  உளவியலுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இந்த நாவலில் சிறு பாத்திரங்களாக வரும் பலரின் உளவியலும் பேசப்படுகிறது. உதாரணமாகத் தொடர் கொலைகாரர்களைத் (காவ்) , திருத்த விரும்பும், ஏன்  திருமணம் கூட செய்ய விரும்பும் பெண்கள்.

இவர்களில் தன் தந்தை மற்றும் கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட  பெண்,  தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பும் இன்னொரு பெண் ஒரு புறமென்றால், மத ரீதியான அமைப்பிலிருந்து காவின் மீட்புக்காகப் பிரார்த்தனை செய்யப்போவதாகச் சொல்லும் பெண் இன்னொரு புறம்.   இவர்களின் ஈர்ப்புக்கான காரணங்கள் அலசப்படுகின்றன. ஆனால் பிரசங்கத் தன்மை வராமல், பொது வாசகரும் பங்கேற்கக் கூடிய  வகையில் உளவியல் தொழில்நுட்பங்கள் பற்றி எழுதுகிறார். உதாரணமாக உளச்சீரழிவால் குற்றம் புரிவோர் பற்றிக் கூறுவது:

“…..they tell you what they think you want to hear. If you want them innocent, they’ll be innocent, if you want them guilty, they’ll tell you that. Their purpose is to get under the skin of whoever they’re near, to  control them. The main variant with psychopaths is how bright they are, how capable they are of making the lies consistent. It’s as close as they get to emotional contact with other human beings.”

உளவியல், குற்றவியல்  படித்தவர்கள் இதில் சில கருத்துப் பிழைகளைக் காணலாம். ஆனால் பொது வாசகருக்கு இது ஒரு திறப்பைக் கொடுப்பதோடு,  நாவலின் போக்கில் நடக்கும் சம்பவங்களை இந்த கூற்றுடன் பொருத்திப் பார்க்க வைக்கிறது. (காவ் முதலில் கொலைகள் செய்ததாக ஒப்புக் கொண்டு பிறகு அதை மறுப்பதை நாம் நினைவு கொள்ளலாம்.)  ஒரு வறண்ட நகைச்சுவை இழை உரைநடையில் இருந்து கொண்டே இருக்கிறது. ஸூசி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின் லாஹ்லெனின் பெற்றோர் அவருடன் தொலைபேசியில் நடட்தும் உரையாடலில் இருக்கும் அபத்த நகைச்சுவையைப் படியுங்கள்.

” Eventually he said he was sorry about what had happened. I accepted his condolences.He said they didn’t care about other people hearing about my problems (suddenly they’re my problems); what mattered was that we were all healthy. The devil-may-care posture was wearing thin. …. He actually said, ‘Chin up.’ What happens to ex-pats in Spain? He was a GP in Ayr for 50 years and suddenly he starts talking like a regimental sergeant major, all Colman’s mustard and fucking Bovril.They ended a discussion about my wife’s murder conviction by asking me to send out water biscuits. I felt like shitting in a box and sending it registered.”

லாஹ்லெனின் ஆராய்ச்சிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தினசரி வாழ்க்கை நடக்க வேண்டுமே. கவனிக்கப்பட வேண்டிய சிறு குழந்தை  வீட்டிலிருக்கும் போது இவர் எப்போதும் தேடிக்கொண்டே இருந்தால்  (ஒரு செவிலித்தாய் வீட்டோடு இருந்தாலும்) அது இயல்பானதாக  இருக்குமா. லாஹ்லெனின் தினசரி வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களையும் மைனா பதிவு  செய்கிறார். ஸூசியின் அத்தையும், லாஹ்லெனின் பெற்றோரும் அழையா விருந்தாளிகளாக, இவருக்குத் துணையாக இருப்பதற்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். (“I’m little more than a side show, a useful prop for them to prove to each other how caring and family-oriented they are.”). சம்பந்திகளுக்குள் நல்லுறவும் இல்லையென்பதால், இருக்கிற பிரச்சனை போதாதென்று லாஹ்லென் இவர்களையும், இவர்களுக்கிடையே நடக்கும் நுண்ணிய குடுமிப்பிடி சண்டைகளையும் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.(“They’ve begun a vicious exchange of tit-for-tat pleasantries that can only end in bloodshed.”). லாஹ்லெனின் தேடுதல்களை மட்டும் பின்தொடராமல், காவால் கொலை செய்யப்பட்ட பெண்களைப்பற்றியும் தகவல்கள் தரப்படுகின்றன. முதலில் கொல்லப்படும் பெண்களில் பலர் கீழ் மத்திய நிலைப் பாலியல் தொழில் செய்யும் பெண்கள். ஒரு பத்திரிகை நிருபர் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரைப் பேட்டி எடுக்கச் செல்லும் போது, அதற்கு பணம் கிடைக்கும் என அந்தப் பெண் எதிர்பார்க்கிறார். புத்திர சோகம் ஒரு புறமிருந்தாலும், வாழ்க்கையை நடத்த வேண்டும்  என்ற யதார்த்தம்தான் பணத்தை எதிர்பார்க்கத் தூண்டுகிறதா? இறந்த பெண்ணின் வயது 21, அவள் தாயின் வயது 36. இதை ஒரு தகவலாகச்  சொல்லி,  அவர் குடியிருப்பை சற்று விவரித்து மட்டும்  மினா சென்றாலும், 14-15 வயதில் ஒரு குழந்தையைப் பெற்று, அதன்  21வது  வயதில் அப்பெண்ணைக் கொடூரமாக இழந்த சோகத்தை, ஏன் எப்படி நடந்தது என்ற கேள்வியை நாம் எளிதில் கடந்து விட முடியுமா? இந்தப் பெண்கள் கொலை செய்யப்படும் போது ஊடகங்களில் வெறும் செய்திகளாக, பெயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொல்லப்பட்டது தொழில் சார்ந்த அபாயமாகப் பார்க்கப்படுகிறது. பிறகு சற்று உயர்தரப் பெண்கள் கொல்லப்பட்டதும் அது குறித்த செய்திகள் இன்னும் பரிவோடு வெளியிடப்படுகின்றன. நீதி சந்தையில் விற்கும் ஒரு  பொருள் (Justice is a commodity) என்கிறார் மைனா, உண்மை தானே! 2008 இல் மும்பை தாக்குதல்கள் பல இடங்களிலும் நடந்த போதும், எந்த இடங்கள் அதிகம் ஊடக வெளிச்சம் பெற்றன என்பதை நாம் அறிவோம். ஐந்து நட்சத்திர விடுதியில் அன்னிய நாட்டினர் மீதம், ‘உயர் கு்டியினர்’ மீ்தும் நடந்த தாக்குதல் கவனிக்கப் பட்ட அளவு மும்பை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சாதாரண மக்கள் பற்றி இந்திய ஊடகங்களே கூட கவனம் செலுத்தவில்லை என்பதுதானே உண்மை நிலை? நாடெங்கும் தினசரி கொல்லப்படும் எத்தனையோ காவல் படையினரில் சாதாரணக் காவலர் பறறியோ, அவர்களின் எண்ணிக்கை பற்றியோ மக்களோ, ஊடகங்களோ, அரசை நடத்தும் ஆட்சியாளரோ ஒரு முறையாவது எண்ணிப் பார்க்கின்றனரா என்ன?

நாவலின் இறுதி முக்கிய முடிச்சு அவிழும் இடத்திற்கான முன்னெடுப்புக்களை இயல்பானதாக உருவாக்க மைனா முயன்றாலும், சற்று அள்ளித் தெளித்த அவசரக் கோலம்  போல் தோன்றுகிறது. ஆனால் நாவலை மொத்தமாகப் பலவீனமாக ஆக்கி இருக்கக்கூடிய சூழலை மினா மீட்டு விடுகிறார். அந்த முக்கிய வெளிப்பாடு நடந்த பின், நாவல் இப்படித்தான் பயணிக்கும்/பயணிக்கமுடியும்  என நாம் நினைத்தால் அதற்கு மாறாகச் செல்கிறார் மைனா.   நாவலின் தெளிவின்மையை நீக்காமல், ஒரு கதவைத் திறந்தால் இன்னொரு பூட்டிய கதவு இருப்பதைப் போல், சில கேள்விகளுக்கு விடை கிடைத்தாலும், இது எப்படி  நடந்திருக்கும், ஏன் இந்த முக்கிய  வெளிப்பாட்டை இந்த பாத்திரங்கள்  இந்த முறையில் எதிர்கொண்டன, அதன் அர்த்தம் என்ன என்று பல புதிய கேள்விகள் முளைக்கின்றன.  அதனால் தான் ‘நாவலின் இறுதி முக்கிய முடிச்சு’ என்று  குறிப்பிட்டுள்ளேன். எஞ்சும்  கேள்விகளுக்கான விடைகளை நாவலுக்கு வெளியே நாம் தான் தேட வேண்டும். எப்படித் தேடுவது?

நாவலில் முதலில் நடந்த சம்பவங்களை, இறுதி வெளிப்பாட்டை, கருதிப் பார்க்கும் போது  இன்னொரு கோணம் கிடைக்கும். அதே நேரம், இந்த புதுக் கோணத்திற்கான சாத்தியக் கூறுகளை மைனா நாவலில் முன்பே வைத்துள்ளதையும் அப்போது தான் பார்க்கிறோம்/உணர்கிறோம். எனவே மொத்த வாசிப்பனுபவத்தைக் கெடுக்காமல் இந்த இறுதி வெளிப்பாடு நாவலின் சிறு பலவீனமாகவே மட்டும் உள்ளது. நாவலின் முடிவை ஒரு பேட்டியில் மைனா சொல்லியுள்ள இந்தக் கூற்றோடு பொருத்திப் பார்க்கலாம்.

“Crime fiction now is big enough not to need tidy resolutions. But an open-ended resolution has to be made to work in another way. The concept of justice goes with achieving a pleasing solution for the reader, one which doesn’t just have the bad guy shot but which answers those questions about what is just. There’s a deep-rooted belief in a just world – and that makes for good mental health – but all the evidence is that the world isn’t just, so people have to shift reality all the time to get a sense of justice. And I think that’s what crime fiction explores in a really deep way”

நாவலில் வரும் அனைத்து முக்கியப் பாத்திரங்களும்  தங்கள் மனதில் வேறு யாரும் வர முடியாத, தாம் மட்டும் செல்லக்கூடிய இடத்தை வைத்திருக்கிறார்கள். எனவே ‘Sanctum’ (அந்தரங்கம்- பிறர் நுழையக் கூடாத இடம்) என்ற தலைப்பு கச்சிதமாக நாவலுக்குப்  பொருந்துகிறது. மைனா நம்மைப் பாத்திரங்களின்  கருவறைக்குகுள் அழைத்துச் சென்று அதில் என்ன இருக்கிறது என்று சொல்வதில்லை. இப்படி ஒரு இடம் இருக்கின்றது/இருக்கலாம், அதில் பல விஷயங்கள் பொதிந்திருக்கும், அந்த இடத்தில் ஒவ்வொரு மனிதனும், தான் உலகத்தால் பார்க்கப்படும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவனாக இருப்பான் என்று மட்டும் கோடி காட்டிச்  செல்கிறார் . ஆக எங்கு முழுமையான ‘நபர்’ இருக்கிறார், உலகத்திற்கு அவர் காட்டும் முகத்திலா, தன் அந்தரங்கத்து அறையிலா, அல்லது இரண்டின் கலவையிலா?  அந்த நபருமே காலததின் ஓட்ட்த்துக்கேற்ப மாறிக் கொண்டேதானே இருப்பார்? கரு என்று ஒன்றிருந்தால்  அதுவும் மாறிக் கொண்டே இருப்பதுதானே இயற்கையின் இயக்கத் த்வனி?       

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.