தமிழாக்கம்: மைத்ரேயன்
ஹெல்ஸிங்ஃபோர்ஸில் உள்ள ஆன்னன்கட்டு தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருக்கையில், நான் இரண்டு துத்தரிக் குழல்கள், ஒரு செல்லோ, ஒரு வயலின் கூடவே பீத்தோஃபனின் ஒரு படம், இதையெல்லாம் ஒரு கடையின் ஜன்னலில் பார்த்தேன், அப்போது இசையை நினைவு கொண்டேன். நாம் உலகில் எங்கு போனாலும், பார்ப்பதெல்லாம் தந்திக் கம்பங்கள், நகரத் தெருக்கள், கேட்பதெல்லாம் ரயில்கள் ஓடும் சத்தம், கார்களின் ஹார்ன் சத்தங்கள்தாம். ஏராளமான ஜனங்கள் என்னவெல்லாமோ செய்ய முயல்வதைப் பார்ப்போம், உணவு விடுதிகளிலும், தெருக்களிலும் அவர்கள் கவலையோடு பேசுவதைத்தான் கேட்போம். நாம் இசையை மறந்து விடுகிறோம், ஆனால் திடீரென்று இசையை நினைவு கொள்வோம்.
அடக் கடவுளே, என்பீர்கள். அங்கு வேறேதும் இல்லையே. ரயில் நின்றதும் கீழிறங்குகிறீர்கள், அல்லது கப்பல் கரை சேர்ந்ததும், இறங்குவதற்குப் போடப்பட்ட மரப்பாதை வழியே கீழிறங்குகிறீர்கள், அல்லது விமானம் கீழே இறங்கித் தரை தொடுகிறது, உங்கள் கால்கள் எங்கே நியாயமாக இருக்க வேண்டுமோ, அந்தத் தரையில் மறுபடி பதிகின்றன, ஆனால் அங்கெல்லாம் வெறுமைதான் இருக்கிறது. நீங்கள் வந்து சேர்ந்தாயிற்று, ஆனால் நீங்கள் எங்குமே சேரவில்லை. அந்த நகரத்தின் பெயர் வரைபடத்தில் இருக்கிறது. ரயில் நிலையத்தில் பெரிய எழுத்துகளில் அந்தப் பெயர் இருக்கிறது. நாம் ரொட்டி வாங்கக் கொடுக்கிற புதுக் காசுகளில் அந்த நாட்டின் பெயர் பொறித்திருக்கிறது, ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருப்பது எங்குமில்லை, மேன்மேலும் வேறு இடங்களுக்கு நீங்கள் போகப் போக உங்களுக்குப் புரிவதெல்லாம், மனிதனுக்குச் சேருவதற்கு பூமியில் ஒரு இடமும் இல்லை என்பதே.
எல்லாம் தொலையட்டும், விடுங்கள் என்பீர்கள். லண்டன், சூனியம். பாரிஸ், மேலும் சூனியம். வியன்னா, இன்னும் சூனியம். மாஸ்கோ, மறுபடி அதுவே. பொருள் மைய தூல முரண்பாட்டு விளக்கம் (dialectical materialism), வர்க்க விழிப்புணர்வு. புரட்சி. காம்ரேடுகள். சத்தை.
வெறுமை. வெற்றிடம்.
அந்தத் திக்கில் போக ஒரு இடமுமில்லை. அது உங்கள் இதயத்தை நொறுக்குகிறது. கடவுளே, என்பீர்கள். இதுதான் உலகம். இவைதான் உலகில் இருக்குமிடங்கள். என்ன ஆகித் தொலைந்தது? எல்லாமே குதறிப் போயிற்று. ஒவ்வொரு புது நகரத்தின் தெருக்களிலும் நீங்கள் மறுபடி உலகின் முட்டாள்தனமான வேதனையைத்தான் உணர்கிறீர்கள்.
ஹெல்ஸிங்ஃபோர்ஸில் இதெல்லாம் அத்தனை மோசமில்லை, இங்கு ஃபின்லாந்தில் தனியுடைமை இன்னும் இருக்கிறதென்றாலும். மக்களிடம் சிறு பொருட்கள் சொந்தமாக இருக்கின்றன. சந்தைகளில் மக்கள் மீன்களைச் சொந்தமாக வைத்து, விற்பனை செய்கிறார்கள், தக்காளிகளைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் தக்காளிகளை விற்கிறார்கள். இது முதலியமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் கூட இந்த மக்களிடம் ஏதும் குற்றமிருப்பதாகக் காண முடியாது.
அந்த ஊதுகொம்பு (கார்னெட்), ட்ராம்போன், செல்லோ, வயலின், பீத்தோஃபனின் படம் எல்லாவற்றையும் பார்த்தபோது, நான் மிகவும் துயரம் கொண்டேன். கார்னெட்டின் வடிவமே ஒரு சிறு வெற்றிதான், ஒரு தகர வயலின் கூட கவிதையாகிய ஒரு கருத்து.
அந்தக் கடையினுள் சென்றேன், அங்கிருந்த இளம்பெண்ணிடம் ஃபின்னிஷ் இசையில் ஒலித் தட்டுகள் ஏதாவது கேட்க முடியுமா என்று இங்கிலீஷில் கேட்டேன். ஃபின்லாந்தின் இளம்பெண்கள் அமைதியாக, ஆரோக்கியமாக, அழகாக இருக்கிறார்கள். அவர்களுடைய அம்மாக்களும், அப்பாக்களும் லூதரியர்கள், கடவுள் மீது நம்பிக்கையுள்ளவர்கள். அப்பெண்களுமே தாமும் நம்பிக்கையுள்ளவர்கள் போலத்தான் காட்சி தருகிறார்கள். ஆனால் அப்படி நம்பாதவர்களானாலும், அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சுக்குப் போவார்கள், அங்கு பாடுவார்கள், ஏனெனில் அது சரியானதும், அருமையானதும் என்று கருதுவார்களாயிருக்கும். எல்லாரும் அங்கே இருப்பார்கள், அங்கே நிலவும் முன்காலத்து ஞாயிற்றுக் கிழமையில் இருந்த சூழல் உள்ள உலகம் கடூரமான ஒலிகளையும், வாரநாட்களின் உறுத்தல்களையும் அமைதிப்படுத்தும். பிரசங்கம் முடியுமுன், எல்லாரும் வார நாட்களில் கொள்ளும் சுயப்பெருமை உணர்வைக் கொஞ்சம் இழந்திருப்பர், ஒருவரிடமும் புண்பட்ட உணர்வோ, குரோதமோ எஞ்சி இராது. நீ வங்கிச் சொந்தக்காரனா, வைத்திரு. என்னிடம் ஒரு சைக்கிள் உண்டு. நீ மேயரா, நல்லது. நான் ஒரு அலுவலகத்தில் எழுத்தர். ஏதும் மோசம் போன உணர்வுகள் இல்லை, அப்புறம், ஞாயிறின் சூரியன் ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது.
ஆனால், ரஷ்யாவிலோ ஞாயிறு என்று ஒன்றும் இல்லை. ரஷ்யாவில் இளம் பெண்கள், ஒவ்வொரு தடவையும் ஒரு திரைப்படம் மத எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு துண்டை எடுத்து அவர்கள் மீது வீசும்போது பெரியதாக ஒரு பொய்ச்சிரிப்பைச் சிரிக்கிறார்கள், ஏனெனில் மதமெல்லாம் உண்மையில்லை என்று அவர்களுக்குத் தெரியும். புனிதர்கள் என்று யாரும் இருந்ததில்லை, மதம் என்பது ஏழைகளின் அபின் (போதை மருந்து), உலகிற்குத் தெரிந்த வரையில், இத்தனை காலத்தில் கார்ல் மார்க்ஸ் ஒருத்தர்தான் புனிதர் என்றழைக்கப்படும் தகுதிக்கு அருகில் வந்தவர், ட்ராட்ஸ்கி ஒரு பெருச்சாளி, லெனின் கிட்டத் தட்ட யேசு மீண்டும் வருவதை ஒத்த மகிமை உள்ளவர், காம்ரேட் ஸ்டாலினோ ஒரு பேராச்சரியம். இதன் காரணமாக, ரஷ்யப் பெண்கள் பார்ப்பதற்கு அத்தனை நன்றாக இருப்பதில்லை. அவர்கள் அத்தனை தூரம் எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பது அவர்களுடைய தோலைக் கெடுத்திருந்தது. இருந்தாலும், ரஷ்யர்கள், ஃபின்லாந்தியரை விட ஆயிரம் ஆண்டுகள் முன்னேறி விட்டனர். அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பாருங்களேன். நகரங்களைக் கட்டுகிறார்கள், வர்க்கங்களே இல்லாத சமுதாயத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், எல்லாரையும் காம்ரேட் என்று கூப்பிடுகிறார்கள். எத்தனை எத்தனையோ ஆண்டுகள் முன்னால் உள்ளார்கள். அந்த இளம்பெண்களென்னவோ பார்க்க மோசமாக உள்ளார்கள்.
ஹெல்ஸிங்ஃபொர்ர்ஸின் அந்த இசைக்கடையில் இருந்த பெண் கொஞ்சம் பத்தாம் பசலியாக இருந்தாள். அவள் மிக மரியாதை கொடுப்பவளாக இருந்தாள். வர்க்கங்கள் இல்லாத சமுதாயம் படைப்பது குறித்து அவளுக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை, அதனால் ஒரு நேரத்தில் ஒரு சின்ன விஷயத்தைச் செய்ய அவளுக்கு நிறைய அவகாசம் இருந்தது, ரஷ்யாவில் இருப்பதுபோல எதையுமே செய்யாமல் இருந்து கொண்டு, அதையும் பகட்டாகக் காட்டிக்கொண்டிராமல், இருந்தாள். ரஷ்யாவில் எப்போதுமே இப்படி இருப்பதில்லைதான். ரஷ்யாவிலும் சில பெண்கள், கிட்டத் தட்டஇந்த ஃபின்லாந்தியப் பெண் போல இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் புரட்சி வீரர்களாக இல்லாதவர்கள். அது உழைக்கும் வர்க்கத்தின் சர்வாதிகாரமில்லையா, அதனால் அங்கு உழைப்பாளிகளின் சர்வாதிகாரம் இருக்கிறது, இவர்கள் பாட்டிலும் தன் தனிமனித வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் ஒரு போதும் தலைவர்களாக மாட்டார்கள். விவசாயிகளின் வாழ்க்கையை இவர்கள் ஒருபோதும் மேம்படுத்த மாட்டார்கள். இவர்கள் மிகவுமே பொருட்டில்லாதவர்கள். ஆனால் ஒரு பயணி ரஷ்யாவில் சந்திக்கக் கூடிய பெண்களில் பெரும்பாலானோர் முரண்பாடுகளை நீக்குவதில் முனைந்திருந்தார்கள்.முரண்பாடு என்பது நுகரும்போதே விஷம் என்று உங்களுக்குத் தெரியுமே அந்தப் பூண்டு, புல்லுருவி போன்றதில்லையா?
ஜான் செபேலியஸ், நான் அந்த இசைக் கடைப் பெண்ணிடம் சொன்னேன், ஃபின்லாண்டியா.
இரண்டு மாதங்கள் முன்பு, நான் இருந்த இடத்திலிருந்து ஹெல்ஸிங்க்ஃபோர்ஸ் வெகு தொலைவில் இருந்தது. நான் மான்ஹாட்டனில், க்ரேட் நார்தர்ன் ஹோட்டலில், அறை 517 இல் இருந்தேன். அதில் குளியல் தொட்டி இருந்தது. ஹெல்ஸிங்ஃபோர்ஸா? அது எங்கெய்யா இருக்கிறது? இப்போதோ நான் ஹெல்ஸிங்ஃபோர்ஸில் இருக்கிறேனா, மான்ஹாட்டன் இருக்குமிடம் பற்றி எனக்கு இப்போது தெரிவதெல்லாம், நீங்கள் ஒரு கப்பலில் ஏறினால், ஆறு நாட்கள் கழித்து, அதாவது அது வேகமாகப் போகும் கப்பலானால், மான்ஹாட்டனின் விளிம்பை நீங்கள் பார்க்க முடியலாம், அங்கே போய்ச் சேர்ந்திருப்பீர்கள். ஹெல்ஸிங்ஃபோர்ஸோ, வேறெந்த இடமானாலும் இதே கதைதான். சிமெண்ட் நடைமேடையிலிருந்து சில அடிகளும் சில அங்குலங்களும் தள்ளித்தான் இருப்பீர்கள். வானம் உங்கள் மேல் இருக்கும். சூரியன் காலையில் எழுந்து வரும். ஆனால், ஹெல்ஸிங்ஃபோர்ஸில் கோடையில் இருக்கும் இருட்டை விட, மான்ஹாட்டனில் கோடையில் கூடுதலான இருட்டு இருக்கும், ஹெல்ஸிங்ஃபோர்ஸில் கோடையில் அத்தனை இருட்டுவதே இல்லை. நள்ளிரவில் இன்னும் நிறைய ஒளியாகவே இருக்கிறது, சில மணி நேரம் கழித்து சூரியன் மறுபடி உதித்து விடுகிறது.
அதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. அது பேராற்றலுள்ளது.அது ஒரு மிகவே விசித்திரமான உலகம். நாகரீகம் என்று பாசத்தோடு அழைக்கப்படுமொன்றின் நகர மூலைகள் அவை. ஒரு கார்னெட் ஊதுகுழல், ஒரு ட்ராம்போன் குழல், ஒரு கடை ஜன்னலில் இருக்கிற ஒரு செல்லோ, அப்புறமொரு வயலின் ஆகியன. இசைதான் மக்களுக்குக் கிட்டுவதிலேயே மிகச் சக்தியுள்ள போதைப் பொருள், அது தெரிந்ததுதான், அதாவது, அந்த இசையை, முரண்பாட்டை விளக்க முயலும் பொருளியவாதி அமைக்காத வரையிலும் அப்படி இருக்கும். மாறாக, அவர்தான் அமைத்தாரென்றால், அது என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் ஒருவேளை அது நன்றாகவே இருந்து விட்டால், அந்த வேலையைச் செய்த பையன் யாரையோ ஏமாற்றுகிறானாக இருக்கும், ஒருவேளை மார்க்ஸைத்தான் எத்துகிறானோ என்னவோ.
எனக்கு வேண்டியிருந்தது எல்லாம் இசை மட்டும்தான். முரண் வழி விளக்கமில்லை. எளிய, பழைய பாணியில் பெரும்சீற்றம் கொண்ட தனியனான ஒரு மனிதன், தனியாகப் போராடிக் கொண்டு இருப்பவன், கடவுளோடோ அல்லது இந்தக் குழப்பமான, பாழாகப் போகிற மொத்த பிரபஞ்சத்தோடோ மல்யுத்தம் செய்பவன், தன்னைப் பெரும் மௌனத்துக்குள்ளும், காலத்துக்குள்ளும் வீசிக்கொண்டு, எடையில் ஏழு பவுண்டுகளை வியர்வையாலேயே இழந்த பின்பு, ஒரு சிறு அறையுள்ளிருந்து வெளிவருகிறவன், தன்னிடமிருந்து பிரிந்த ஏதோ ஒன்றைக் கொணர்கிறான், உயிர்த்துடிப்போடு, தானே அதுவாகி, காலமற்று, மனம் பிறழ்ந்து, அதிஅற்புதமாய், ஜுரவேகத்துடன், புனிதங்களை எல்லாம் மதியாத மனத்துடன், மிக்க கடமையுணர்வோடு, பெரும் சீற்றம் கொண்டு, கனிவுடன், மனிதனல்ல, அனைத்து மனிதருமல்ல, ஆனால் அதுவாகவே உள்ள ஒன்றாய், நம்பமுடியாத அளவு பூரணமடைந்து, மௌனத்தில் ஒரு குறுக்குவெட்டுப் போல, பெரும் வெற்றிடமாய், அப்போது மேலும் ஒலியாகவும், உள்ளீடற்ற பொருட்களின் உருவாகவும். இசையாய். ஒரு ஸிம்ஃபனியாய்.
ஃபின்லாண்டியா, என்றேன். அந்த வார்த்தை வலுவாக இருந்தது, நன்றாகவுமிருந்தது, நானும் அங்கிருந்தேன். நான் ஃபின்லாந்தில் இருக்கிறேன், என்று நினைத்தேன். இந்தக் கடை ஆன்னன்காட்டுத் தெருவில் ஹெல்ஸிங்ஃபோர்ஸில் உள்ளது. ழான் செபேலியஸ் ஃபின்லாந்தில் வாழ்கிறார். இங்கேதான் அவர் ஃபின்லாண்டியாவை இசையுருவாக்கினார், நான் ஐந்து வருடங்கள் முன்பு அமெரிக்காவில் ஃபின்லாண்டியாவைக் கேட்டேன், அதற்குப் பிறகு நான் அதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மேலும் மனிதரின் காதுகள் அதைக் கேட்பதை ஒரு போதும் நிறுத்தப் போவதில்லை.
ஹெல்ஸிங்ஃபோர்ஸில் ஃபின்லாண்டியாவைக் கேட்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை.
அப்பெண் மிகக் கடமையுணர்வோடு இருந்தாள், ஊசியை மாற்றினாள், அதை இசைத் தட்டைத் தொட வைத்தாள், ஃபோனோக்ராஃபுக்குச் சாவி கொடுத்தாள். ஆறு எட்டு தள்ளிப் போனாள், அடக்கத்தோடு அங்கே நின்று கொண்டாள், கேட்டவண்ணமிருந்தாள். மௌனத்துக்குப் பிறகு இசை உலகத்துக்குள் தாவிப் பாய்ந்தது, மறுபடி. ஃபின்லாந்து.
ஓ ஏசு கிருஸ்துவே, மனிதனுக்கு எந்த நிலப்பரப்பிலும் போகுமிடம் இல்லை. அந்த இசையோ உலகின் பெரும் அமளியில் பாய்ந்து புகுந்தது, பிழைகளை அடித்துத் துவம்சம் செய்தது, சேதத்தை அலட்சியம் செய்தது, வர்க்கமில்லாத ஒரு சமூகத்தை உருவாக்கியது. சென்ற வருடம் இங்கிலாந்தில் அரசன் இதைக் கேட்டான், உண்மையைத் தெரிந்து கொண்டான்., நாளை நெப்ராஸ்காவில் ஒரு குழந்தை இதைக் கேட்கும், உண்மையைத் தெரிந்து கொள்ளும், இன்றிலிருந்து இன்னும் நூறு வருடமானாலும், ஆயிரம் வருடங்களானாலும், அரசர்களுக்கும், குழந்தைகளுக்கும் இதேதான் சாத்தியப்படும்.
நான் நான்கு சிகரெட்களைப் புகைத்தேன், அப்புறம் ழான் செபேலியஸின் அந்தப் பெரும் படைப்பு முடிவுக்கு வந்தது. அந்த இசை துவங்குமுன் அங்கிருந்த மௌனம், மறுபடி உயிர் பெற்றது, இப்போது அங்கு இருந்தது ‘ஃபின்லாண்டியா’ இல்லை, ஆனால் ஃபின்லாந்து, ஹெல்ஸிங்ஃபோர்ஸ். அந்தப் பெண்ணால் இங்கிலீஷ் பேச முடியவில்லை, ஆனால் அவளால் ஃபின்னிஷ் மொழியிலும் ஏதும் சொல்ல முடியவில்லை. அவள் புன்னகைத்தாள், கிட்டத் தட்ட அழும் நிலையிலிருந்தாள். அப்புறம் அவள் விரைந்து போனாள், செபேலியஸின் முழு ஸிம்ஃபனி இசை இருந்த ஒரு இசைத் தொகுப்புத் தட்டோடு திரும்பி வந்தாள்.
வேண்டாம், என்றேன். உங்கள் தயை செய்யும் மனதால், ஃபின்லாண்டியாவை ஹெல்ஸிங்ஃபோர்ஸில் கேட்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தீர்கள். என்னால் ஏதும் வாங்க முடியாது. நான் இங்கு இருப்பது அமெரிக்கா போகும் வழியில்தான். நாளை ஸ்டாக்ஹோமுக்கு நான் கப்பலில் பயணம் போகிறேன்.
என் பையிலிருந்து சில மார்க் நோட்டுகளை எடுத்தேன், ஃபின்லாண்டியாவைக் கேட்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக அவற்றைக் கொடுக்கலாமா என்றேன்.
இது, பணம் அங்கு தோன்றியது, எல்லாவற்றையும் கெடுத்தது. அந்தப் பெண்ணிற்கு நான் சொன்னது என்னவென்று புரியாதது மட்டுமல்ல, நான் சொன்னதின் அர்த்தமும் அவளுக்குப் புரியவில்லை. நான் எப்படி உணர்ந்தேன் என்பது அவளுக்குப் புரிபடவில்லை. இசை மூலம் அவள் தெரிந்து கொண்டாள், அவளுக்கு வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள அவசியம் இருக்கவில்லை.
பணத்திற்கு ஈடாக எனக்கு ஏதோ கொடுக்க அவள் விரும்பினாள்.
இல்லை, என்றேன். ஃபின்லாண்டியாவைக் கேட்டதற்குத்தான் இந்தத் தொகை.
இது மிகவுமே குழப்பமாக்கியது. அவள் அகன்று போனாள், இங்கிலீஷ் பேசத் தெரிந்த ஒரு பெண்ணோடு திரும்பி வந்தாள்.
நான் எல்லாவற்றையும் விளக்கினேன், இங்கிலிஷ் தெரிந்த பெண் இங்கிலீஷ் தெரியாத பெண்ணுக்கு அதை மொழிபெயர்த்துச் சொன்னாள், நாங்கள் எல்லாரும் சிரித்தோம்.
இல்லை, வேண்டாம், என்றாள் இங்கிலீஷ் பேசிய பெண். இன்னும் கொஞ்சம் செபேலியஸ்ஸைக் கேட்கிறீர்களா?
வேண்டாம் என்றேன். ஹெல்ஸிங்ஃபோர்ஸில் ஃபின்லாண்டியாவை நான் நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன். உங்களுக்கு ழான் செபேலியஸைத் தெரியுமா?
ஆமாம், நிச்சயமாக என்றாள் அந்தப் பெண்.
இன்னொரு பெண் நின்று எங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்ன மாதிரி மனிதர் அவர்? நான் சொன்னேன்.
பெரிய மனிதர், அந்தப் பெண் சொன்னாள். ரொம்பப் பெரியவர். இந்தக் கடைக்கு அடிக்கடி வருவார்.
அவர் ஹெல்ஸிங்ஃபோர்ஸில் வசிக்கிறாரா?
ஆமாம்.
இங்கே பாருங்க, நான் சொன்னேன். நான் இன்னைக்கு ஹெல்ஸிங்ஃபோர்ஸில் இருக்கிறேன், இனிமே வேறெப்பவும் இங்கே வருவேன்னு நான் நினைக்கல்ல. நான் நாளைக்கு ஸ்டாக்ஹோமுக்குப் போகணும். நான் ஒரு அமெரிக்கன், அதோட என்னை ஒரு எழுத்தாளன்னுதான் எல்லாரும் நெனைக்கிறாங்க. ழான் செபேலியஸ் என்னைப் பார்க்க ஒத்துப்பார்னு நீங்க நெனக்கிறீங்களா?
ஆமாம், அப்பெண் சொன்னாள். தயவு செய்து, கொஞ்சம் பொறுங்க. நான் அவரோட எண்ணைக் கொண்டு வரென்.
அவள் மேல்தளத்துக்குப் போனாள். திரும்பி வருகையில் ஓடி வந்தாள்.
ழான் செபேலியஸ் ஜார்வென்பாவில் இருக்கிறார், அவள் சொன்னாள்.
ஹெல்ஸிங்ஃபோர்ஸிலிருந்து அது எத்தனை தூரம்? நான் கேட்டேன்.
ஒரு மணி நேரம், என்றாள் அந்தப் பெண்.
அந்த இடத்தின் பெயரை ஒரு காகித உறைமீது எழுதிக் கொண்டேன். வேகமாக வெளியேறப் போனேன். இரண்டு ஃபின்னியப் பெண்களும் என்னோடு கதவு வரை நடந்து வந்தார்கள். இருவருமே என்னளவு கிளர்ச்சியடைந்திருந்தார்கள். அமெரிக்காவிலிருந்து, ஃபின்லாண்டியாவைக் கேட்டிருக்கிறார், இசை பன்னாட்டுக்கானது. (ஆமாம், அது அப்படித்தானே. ம்யூஸிக் என்கிற வார்த்தை கூட பல நாடுகளுக்கானது. இங்கிலீஷில் ப்ரெட் என்று சொன்னால் பல பேருக்கு அது என்ன வார்த்தை என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ம்யூஸிக் என்றால் எல்லாருக்கும் தெரியும்.)
ஒரு தந்தி அனுப்பலாம் என்று நினைத்தேன். ஒன்றை எழுத முயன்றேன், ஆனால் அது குழப்படியாக அமைந்தது. நான் எழுதியதற்குத் தந்தியில் அர்த்தமே கிட்டவில்லை.
ஹோட்டெல் எழுத்தரிடம் ழான் செபெலியஸை ஃபோனில் தொடர்பு கொள்ள முடியுமா என்று கேட்டேன். ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்.
இதெல்லாம் படு கேவலம்.
நிச்சயமாக என்றான் அவன்.
என்ன நடந்ததென்று எனக்குப் புரியுமுன், நான் அவரோடு ஃபோனில் பேசிக் கொண்டிருந்தேன்.
நான் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறேன், நான் சொன்னேன். அமெரிக்காவில் எல்லாருக்கும் உங்கள் இசை பிடிக்கும்.
நான் கிராமப்புறத்தில் இந்த இடத்தில் இருக்கிறேன், அவர் இங்கிலீஷில் சொன்னார். ஏழு மணிக்கு வாங்க.
மணி நாலரை ஆகியிருந்தது. ஜார்வென்பாவிற்குப் போக ஒரு மணி நேரம் ஆகும், அப்போது எனக்கு சுமார் ஒரு மணி அவகாசம் இருந்தது, இதற்குள் இதெல்லாம் என்ன களேபரம் என்று நான் புரிந்து கொள்ள வேண்டும் ழான் செபேலியஸைப் பார்க்க நான் யார்? ஃபின்லாண்டியா வை இசைக்கோர்வையாக்கிய ஒருவரிடம் எனக்கு என்ன சொல்ல இருக்கிறது, அவருக்கு என்னிடம் சொல்ல என்ன இருக்கும்? அவரோ எழுபது வயதுக்காரர், எனக்கு இருபத்தி ஏழு வயது. நான் அமெரிக்காவில் பிறந்தவன். நான் ஒரு விடலை எழுத்தாளன், அவரோ ஒரு பெயர்பெற்ற இசைஅமைப்பாளர், கடவுளே.
ஆனால் பாருங்கள், அதுதான் இசை. நான் என்ன செய்கிறேனென்று எனக்கேதும் புரியவில்லை.
அது ஃபின்லாண்டியா. அதுதான் ஃபின்லாந்தும். அந்தப் பெண்கள் அழகாக இருந்தனர், மிக அமைதியாகவும், மிக மரியாதை தெரிந்தவர்களாகவும் இருந்தனர். அந்த இசை, கூடவே அந்த சுத்தமான, கபடமற்ற முகலாவண்யமுள்ள ஃபின்லாந்தியப் பெண்கள்: இவை எல்லாம் எப்படிப் பொருந்தி வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்வது ஒரு எழுத்தாளனின் வேலை.
டொர்மி ஹோட்டெலில் என் அறைக்குப் போனேன், ழான் செபேலியஸிடம் கேட்பதற்குச் சில கேள்விகளை யோசித்து வைக்க முயன்றேன், ஆனால் கேள்வி என்பதைப் போல அருவருப்பூட்டும் ஒன்று வேறேதுமிருக்காது, நான் எழுதி வைத்த கேள்விகளோ எவரிடமும் யாரும் கேட்க நினைத்த எதையும் விடப் படு மோசமான கேள்விகளாகவே தெரிந்தன. அவை நீண்ட, செடுக்கு நிறைந்த கேள்விகள். எல்லா கலை வடிவுகளும் இயற்கையில் உள்ளுறைந்தவையா, அவற்றை வெளிக்காட்டுவதுதான் ஒரு கலைஞர் செய்யக் கூடியதா, மனிதரின் உலகமும், நகரங்கள், ரயில்கள், கப்பல்கள், தொழிற்சாலைகள், எந்திரங்கள், இரைச்சல்கள் ஆகியவற்றினாலான உலகமும் ஒரு இசையமைப்பாளரின் மீது என்ன தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன, அப்புறம், இசைக்கு என்று இயக்க நோக்கம் இருக்க வேண்டுமா, ஒரு திறமைசாலியான இசையமைப்பாளரை பெரும் இசையமைப்பாளரென்ற நிலைக்கு அருகிலாவது உயர்த்துகிற குணம் எது- அவருடைய ஆன்மீகப் பாரம்பரியம், அவருடைய இனம், அவருடைய இனத்தின் அனுபவங்கள், நினைவுகள், அவருடைய சொந்த அனுபவங்கள், அல்லது சுருக்கமாக ஏராளமான ஊக்க சக்தி, கொஞ்சம் ஆத்திரம், கூடவே மேலும் தன் வாழ்வென்பது ஒரு காலகட்டத்தில் முடியக்கூடியது என்பதை அறிவித்து அதன் மூலம் தன்னை அழிவில்லாத சிரஞ்சீவியாக்க நினைக்கும் உந்துதல் அல்லது மனவிருப்பு, இவற்றிலெது?
ஜீஸஸ் க்ரைஸ்ட்.
இந்தக் கேள்விகளை நான் நிஜமாகவே கேட்டிருந்தேனானால் கடவுள்தான் என்னை மன்னித்திருக்க முடியும்.
நரகத்திலிருந்து தெறித்துப் பறந்து வரும் வௌவால்களைப் போல ஃபின்லாந்தின் சுத்தமான நில வெளியூடே பறந்தடித்து என்னைக் கொண்டு போனது ஒரு பழைய ப்யுய்க் கார். வழி நெடுகச் சாலைகளில் எங்கும் சைக்கிள்களில் பையன்களும், நடந்து போகும் இளம்பெண்களும், வண்டிகளில் வீட்டுக்குத் திரும்பும் குடியானவர்களும். சுத்தமான காற்று. புதுப் பசுமையோடு வளரும் தாவரங்கள். சுத்தமான ஆகாயம். குளிர்ந்த சுத்தமான ஏரிகள். குளுமையான மரங்கள். புல். ஃபின்லாண்டியாவின் இடம்.
அதை விளக்குவது எளிதல்ல. இந்தப் பொருட்கள் மட்டுமல்ல, வேறேதோ இன்னும் கூடுதலாக இருந்தது. ஒரு வேளை கோடையில் அங்கு இரவென்பது அனேகமாக இல்லை என்பதுதானோ என்னவோ. ஒருக்கால் அவர்கள் லூதரியர்கள் என்பதாலோ, சர்ச் ஒன்று அவர்களுக்கென இருந்ததாலோ, அதில் அவர்கள் நம்பியதாலோ இருக்கலாம். ஒருக்கால் ஃபின்லாந்து வடக்கில் இருப்பதாலோ. குளிர்ச்சி. அமைதி. இளமஞ்சள் நிறம். நீல விழிகள். அதென்ன கஷ்டமோ, காரணம், எனக்குத் தெரியவில்லை.
இந்த நிலப் பரப்பில் ஒரு கிராமத்து வீடு அது. வாடகைக் காரோட்டி வயல்வெளிகள் நடுவே நிறுத்தி, மூன்று இளம்பெண்களிடம் ழான் செபேலியஸின் வீட்டுக்குப் போகும் சாலை எதென்று கேட்டார். அதைத் தாண்டி வந்திருக்கிறோம் என்று அந்தப் பெண்கள் சொன்னார்கள். கால் கிலோமீட்டராவது பின்னால் இருக்கிறதென்று தெரிந்தது. ஃபின்லாந்தில் எல்லாருக்கும் ழான் செபேலியஸைத் தெரிந்திருக்கிறது, ஹெல்ஸிங்ஃபோர்ஸில் உள்ளவர்களில் பலரும் அவரோடு பேசி இருக்கிறார்கள்.
இப்படிச் சொல்வதைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நான் காரணத்தோடுதான் சொல்கிறேன். ழான் செபேலியஸ் இத்தனை பேருடன் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது என்றோ, அவருக்கு இத்தனை பேர்களைத் தெரிந்திருப்பது அருமையான விஷயம் என்றோ நான் சொல்வதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அதெல்லாம் ஒரே சமாச்சாரம்தான் என்கிறேன். இவர்கள் ஃபின்லாந்தின் மக்கள். ழான் செபேலியஸ் இசையை உருவாக்கும் ஒரு பெரிய மனிதர், மற்றவர்கள் எல்லாம் மற்றவர்கள், அதெல்லாம் ஒரே விஷயம்தான். அவர்களெல்லாமே ஃபின்லாந்தில் உயிர்த்துடிப்போடு இருக்கிறார்கள்.
Sibelius
அந்த வீட்டுக்குள் நான் போகும்போது மிகவும் குழம்பி இருந்தேன். ஒரு பணிப் பெண் எனக்காகக் காத்திருந்தாள், என்னை ஃபின்னிய மொழியில் வரவேற்றாள். அவர் அமர்ந்திருந்தார், கலிஃபோர்னியாவிலிருந்து வந்திருந்த ஒரு அமெரிக்க-ஃபின்னிய இளைஞனோடு பேசிக் கொண்டிருந்தார். அந்த இளைஞர் எழுந்து நின்றார், அப்புறம் அதுதான் நான் தேடிவந்த விஷயம், ஃபின்லாண்டியா, ழான் செபேலியஸ், எழுபது வயதுக்காரர் இருந்தும் காலம் என்பது தீண்டாதவர், மேலும் குழந்தை போன்றவர், அச் சிரிப்பு, கடும் வேகம் கொண்ட மரியாதை, ஆமாம்,ஆமாம், ஆமாம், உறுதியான கைப்பிடி, அவருடைய நண்பருக்கு அறிமுகம், அழுத்தமான சைகை, அந்த சக்தி, அமர்தல், அப்புறம் ஜீஸஸ் க்ரைஸ்ட், அந்தப் பித்துக் குளித்தனமான கேள்விகளை என்ன செய்ய? எனக்குப் பேச நாவெழவில்லை, நான் சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டி இருந்தது, விரைந்து கொட்ட வேண்டியிருந்தது, நான் அதைத்தான் செய்ய விரும்பினேன், அதனால் நான் அந்தக் கேள்விகளை விளக்கத் தொடங்கினேன், தடுமாறினேன், ஒரு பெரும் மனிதர், நான் பருத்த உரு என்று மட்டும் சொல்லவில்லை, நானோ அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறேன், ஹெல்ஸிங்ஃபோர்ஸில் பதினோரு மணிகளே எனக்கு இருந்தன.
அவர் அந்த நாசமாகிப் போகிற கேள்விகளுக்குப் பதில் சொன்னார், அது பிரமாதம். ஆமாம், ஆமாம், மௌனம். மௌனம்தான் எல்லாமே. (அவர் குதித்து எழுந்தார், அவருடைய பெரும் கரங்கள் நடுங்கின, சிகரெட்களிருந்த ஒரு தகர டப்பியை எடுத்தார். சுருட்டு வேண்டுமா? பிறகு விஸ்கி கொண்டு வா என்று சொல்லி உரக்கக் கூவினார். ஒரு கணத்தில் பணிப்பெண் விஸ்கியோடு வந்து விட்டாள்.) இசை வாழ்க்கை போலத்தான். அது மௌனத்தில் துவங்கி, மௌனத்தில் முடிகிறது. அவருடைய உடலில் ஒவ்வொரு நரம்பும் ஜீவத்துடிப்போடு இருப்பதாகத் தோன்ற பெரும் உதறலோடு ஒரு சைகை செய்தார். விஸ்கியைக் குடிங்க, என்றார். என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவருடைய இளம் நண்பருக்குக் குடிக்க ஊற்றினேன், எனக்கும் ஓரளவு ஊற்றிக் கொண்டேன், நாங்கள் அவற்றைக் குடித்தோம்.
நகரங்களாலான உலகம், என்றேன். ரயில்கள், கப்பல்கள், வானுயரக் கட்டிடங்கள், சுரங்க ரயில்கள், விமானங்கள், தொழிற்சாலைகள், எந்திரங்கள், பேரிரைச்சல்கள்- என்ன தாக்கம்?
முட்டாளாக இருப்பது போல உணர்ந்தேன்.
அவர் உத்வேகத்தோடு இருந்தார், அவருடைய மொழியில் பேசத் துவங்கினார்.
அவரால் பதில் சொல்ல முடியாது, என்றார் அந்த இளைஞர். இசை அவருக்காகப் பேசுகிறது. அதெல்லாம் இசையிலேயே இருக்கிறது.
இந்தக் கேள்விகளைக் கேட்டதற்கு நான் வருந்துகிறேன், என்றேன். அவற்றில் பலதை நான் விட்டு விடுகிறேன்.
அவர் ஃபின்னிய மொழியில் பேசினார். அந்த இளைஞர் மொழி பெயர்த்தார். அழகும், உண்மையும், ஆனால் அந்தச் சொற்கள் அவருக்குப் பிடித்திருக்கவில்லை. அந்தச் சொற்கள் அல்ல. இசையில் அவை வேறேதோ ஆகி விடுகின்றன. எல்லாரும்தான் அழகு, உண்மை என்று சொல்கிறார்கள். அவரேதோ தீர்க்கதரிசி அல்ல, ஒரு இசையமைப்பாளர்தான்.
சீற்றமும் கனிவும் கலந்த புன்னகை அந்த ஆவேசமான தெளிவு கொண்ட முகத்தில்.
விஸ்கி குடிங்க, என்றார் அவர் இங்கிலீஷில்.
எது ஒரு மனிதரை பெரும் மனிதராக்குகிறது என்ற கேள்விக்கு அடுத்துப் போனேன்.
முடியாது, என்றார் அவர் இங்கிலீஷில். ஒருத்தரால் அதை எல்லாம் பேச முடியாது.
அது பிரமாதமாக இருந்தது. அதுதான் அசலானது. அப்படிப் பேச முயல்வது மூடத்தனம். ஞானமுள்ள அவர் அப்படி வார்த்தைகளால் பந்தல் போட விரும்ப மாட்டார்தான். அவர் அதைத் தன் இசையில் பொதித்து விட்டார். எனக்கு அது அருமையாகத் தெரியக் காரணம், அவர் அத்தனை இளமையாகத் தெரிந்தார், அத்தனைக்கு ஒரு இளம்பையன் போல, அவ்வளவு கிளர்ச்சியடைந்து, துடிப்பான நரம்புகளோடு, மிகவும் ஊக்கத்தோடு, பொறுமையில்லாமல், ஆச்சரியமூட்டும் வகையில் களங்கமற்று இருந்தார். அப்புறம், ஹெல்ஸிங்ஃபோர்ஸுக்குத் திரும்பும் வழியில் ஃபின்லாந்தின் நிலப்பரப்பில் ஃபின்லாண்டியாவின் சுத்தமான, தெளிந்த இசையை நான் காணத் துவங்கினேன்.
ஹெல்ஸிங்ஃபோர்ஸ், ஃபின்லாந்து
உள்மூச்சும் வெளி மூச்சும்– சிறுகதைத் தொகுப்பிலிருந்து
Inhale and Exhale, ஜூலை 1936