வாசமுள்ள பூமாலையை கட்டிலுக்கு நடுவில் இருவருக்குமான எல்லையாக பிப்பாலி ஏன் தேர்ந்தெடுத்தான் என்ற கேள்வியை அவள் கேட்டதில்லை. பூமாலை எதை குறிக்கிறது?. படுக்கையறைக்கு அடுத்த அறையை ஒருநாள் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். முந்தைய நாள் இரவின் பூமாலை எடுக்கப்படாமல் கட்டிலிலேயே இருந்தது அதன் வாசம் அடுத்த அறை வரை வீசியது. தொடரும் வாசனை. வாசனையே நின்று போ என்று சொல்ல முடிகிறதா? மூச்சடக்கி நின்றால் வாசனை மறைகிறது. மூச்சை நெடுநேரம் பிடித்து நிறுத்த முடிவதில்லை. வாசனை மீண்டும் தொடர்கிறது.
oOo
ஏழு பிறப்பிற்கும் இவனே என் கணவனாக வர வேண்டும் என்று திருமணமான சிநேகிதிகள் தெய்வங்களை வேண்டிக்கொள்வதை இவள் திருமணத்துக்கு முன்னர் பார்த்திருக்கிறாள். “ஏனம்மா! உன் தோழிகளெல்லாம் தக்க வயதில் கல்யாணம் செய்து கொண்டு விட்டார்களே, உனக்கு இன்னும் ஆகவில்லையே என்ற ஏக்கம் இல்லையா?” என்று மணமான பெண்களுக்கான நோன்பு விழாவொன்றில் அத்தையார் கடிந்து கொண்டது ஞாபகம் இருக்கிறது. நோன்புச் சடங்குகள் முடிந்த பின்னர் அம்மாவின் கண்களில் பொளபொளவென்று கண்ணீர் கொட்டியதை அன்று பார்க்க நேர்ந்தது.. பூ, கோலம், நாட்டியம், விளையாட்டு – இதிலெல்லாம் நாட்டமில்லையென்று சொன்ன போது ஆச்சரியப்படுவதோடு நிறுத்திக் கொண்டவர்கள், திருமண விஷயத்தில் மட்டும் இவளின் இஷ்டப்படி விட விரும்பவில்லை.
ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் படுக்கையில் இருந்த போது பேசிக் கொண்டிருந்தது இவள் காதில் விழுந்தது. இவள் தூங்கிவிட்டாளென்று நினைத்துப் பேசினார்களா அல்லது இவள் காதில் விழட்டும் என்று பேசினார்களா தெரியவில்லை.
“இவள் வயதில் நமக்கு இரு குழந்தைகள் பிறந்து அல்பாயுசில் செத்தும் போய்விட்டன. இவளுக்கோ திருமணத்தில் நாட்டமில்லை. என்ன அதிசயப் பிறவியோ!”
“இவளின் சிறு வயதுத் தோழி கமலி மணமாகி குழந்தை பெற்று விதவையாகி ஊர் திரும்பினாளே..அவள் ரதவோட்டி ஒருவனின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதாக எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்.”
“எல்லாம் நாம் செய்த பாவம்!”
இதே கோட்டில் தொடர்ந்த அவர்களின் உரையாடலைக் கேட்டவாறு வராண்டாவில் தனியே படுத்திருந்தாள் கபிலானி. சற்று நேரத்தில் உரையாடலின் தொனி மெலிதானது ; தாயின் நகைப்பொலி குறைந்த ஸ்தாயியில் கேட்டது.
வீடு முழுதும் இருள் கவிந்தது. தனியே பாயில் படுத்திருந்த கபிலானிக்கு வியர்த்தது. கும்மிருட்டில் கண்கள் திறந்து பயத்தில் வெறித்துப் போய் அமைதியாயிருக்கும் சிசு போல அவள் படுத்திருந்தாள்.
கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள் ; எப்போது உறக்கம் தழுவியதோ? பல வருடங்களாக திரும்ப திரும்ப வரும் கனவொன்று அன்றும் வந்தது. அசையும் திரையொன்றின் பின்னால் நிழலுருவம் ஒன்று தோன்றியது அது பெண்ணுருவம். நிழலுருவின் கையில் தீப்பந்தம். அசையும் திரையில் தோன்றிய பிற நிழலுருக்களையும், நிழற்பொருட்களையும் எல்லாவற்றையும் தீப்பந்த வெளிச்சம் அடித்து பெண்ணுரு காண முயன்றது. தீயொளி பட்டதும் நிழலுருக்கள், நிழற்பொருட்கள் எல்லாம் மறைந்து போயின. நிழற்பெண்ணுரு தொடர்ந்து மறையாமல் கனவின் இறுதி வரை தீப்பந்தத்துடன் திரிந்த வண்ணம் இருந்தது.
தீப்பந்தம் ஏந்திய பெண்-நிழலுரு கபிலானியின் மனத்திரையில் தெளிவாகப் பதிந்துவிட்டது. யாரையோ எதையோ தேடிக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞை அவளுக்கு சிறுவயது முதலே இயற்கையாக தோன்றிவிட்டது. புலன்களால் உணரப்படுபவையெல்லாம் அவள் அடிக்கடி காணும் சொப்பனத் திரை பின்னர் தெரியும் நிழற்பொருட்கள் போலத்தான்! மண முடித்து இல்லற வாழ்க்கை வாழுவதும் கனவில் உலவும் இருள் சித்திரங்கள் போலத்தான் எனில் அத்தகையதொரு வாழ்க்கையை ஏன் நாட வேண்டும்?
அவளின் பெற்றோர்களுக்கு மகளின் சிந்தனைத்திடம் கவலையளித்தது. பிறந்த ஒரே பெண்ணை கன்னியாதானம் செய்யாமல் வீட்டில் வைத்திருப்பது பாவமாயிற்றே !
மகதத்திலிருந்து கபிலன் என்ற ஒரு பண்டிதரும் அவருடைய மனைவி சுமனா தேவியும் சாகள நகருக்கு வந்திருந்தார்கள். மகதத்தில் உள்ள பதினாறு கிராமங்களை ஓரு சிற்றரசைப் போல் கட்டியாளும் வசதியான குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் தன் புதல்வன் பிப்பாலி காசிபனுக்கு ஓர் அழகிய பெண்ணை மனைவியாக தெரிந்தெடுக்க மகதத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் சாகள நாட்டுக்கு வந்திருப்பதாக பேசிக் கொண்டனர். அதுவும் கையோடு தங்கத்தினால் செய்த இளம்பெண்ணொருத்தியின் சிறு சிலையொன்றை எடுத்து வந்திருப்பதாகவும், அச்சிலையைப் போல் இருக்கும் ஒரு பெண்ணையே தங்களின் மருமகளாக்க விழைவதாகவும் சொல்லிக் கொண்டனர்.
பொறுப்பிலாத ஆனால் சாத்துவீக குணமுடைய இளைஞனான பிப்பாலிக்கு இருபது வயது. அவனுக்கும் திருமண வாழ்க்கையில் நாட்டமில்லை. துறவு பூணும் எண்ணம் அவன் மனதில் எப்போது முளைத்தது என்று அவனுக்கு தெரியவில்லை. குடும்ப சொத்துகளை நிர்வகித்தல், வேலையாட்களை கட்டியாள்தல், கணக்குவழக்குகளை பார்த்தல் – இவையெல்லாம் அவனுக்கு சுவைக்கவில்லை. குடும்ப சொத்துகளை பராமரி என்று மகனிடம் சொன்னால் எங்கே வீட்டிலிருந்து ஓடி விடுவானோ என்ற பயத்தால் அவன் போக்கில் இருக்கும் படி விட்டு விடுவதே உத்தமம் என்றிருந்தார் கபிலர். குடும்ப வியாபாரத்தை கவனிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவில்லை. வசதிக்கு குறைவிலாத குடும்பம். பிப்பாலி கவலையின்றி காலம் கழித்து வந்தான். குடும்பத்துக்கு சொந்தமான பாழ் நிலம் ஒன்றின் நடுவில் ஒரு குடில் அமைத்துக்கொண்டு முக்கால்வாசி நேரம் அக்குடிலில் கழித்து வந்தான்.
தாய் சுமனா தேவி நோய்வாய்ப்பட்டு சில காலம் படுத்திருந்தாள். பிப்பாலி ஒரு மகள் போல அம்மாவை கவனித்துக் கொண்டான். “உனக்கெதற்கு மருமகள் தேவை? உன்னையும் அப்பாவையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ள நானிருக்கிறேன்” என்று சொன்னான். “எங்களை நீ கவனித்துக் கொள்வாய் ; உன்னை யார் கவனித்துக் கொள்வார்?” என்ற எதிர் வினாவிற்கு “நம்மெல்லாரையும் இயற்கை கவனித்துக் கொள்கிறது…..இப்போ இந்த கஷாயம் உன் உபாதையை கவனித்துக் கொள்ளப் போகிறது” என்று பேச்சை மாற்றினான்.
கபிலர்களின் நண்பர்களின் வீட்டிலிருந்து வரும் திருமண முன்மொழிவுகளை பிப்பாலி விடாப்பிடியாக நிராகரித்து வந்தான். கபிலருக்கு தர்ம சங்கடம். ஒரு விவாக சம்பந்தம் நிராகரிக்கப்பட்ட போது கபிலரின் நண்பர் “என்ன ஐயா பிரச்னை? என் மகளுக்கு என்ன குறைவு? எங்கள் குடும்பம் உங்களுக்கு ஏற்றதில்லையென கருதுகிறீரா? மகத நாட்டு இளவரசியொருத்தி தான் உங்களுக்கு மருமகளாக வேண்டுமா?” என்றெல்லாம் பேசினார். அதிகம் கோபம் வராத கபிலருக்கு அன்று கோபம் வந்துவிட்டது. மகனைத் தேடி பாழ்நிலக் குடிலுக்கு சென்றார். குடிலுக்கு பின்னால் சில வேலையாட்கள் குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது டங்ஙென சத்தம் கேட்டது. அழகான தங்கச்சிலையொன்றை தோண்டி எடுத்தார்கள். இளம்பெண்ணின் சிலை. முகஎழிலும் உடலெழிலும் ஒருங்கிணைந்த பெண்ணின் சிலை. செய்த சிற்பி கற்பனையின் உச்சத்தில் இச்சிலையை சமைத்திருக்க வேண்டும்.
பிப்பாலி அன்று குடிலுக்கு வரவில்லை ; வீட்டில் தான் இருக்கிறான் என்று சொன்னார்கள். சிலையைக் கண்டதும் கபிலரின் கோபம் கொஞ்சம் தணிந்துவிட்டது. சிலையை எடுத்துக் கொண்டு வீடு வந்தடைந்தார். பிப்பாலி உணவருந்திக் கொண்டிருந்தான். கபிலர் தன் விசாரத்தை மகனிடம் பகிர்ந்து கொண்டார். பொறுமையுடன் அப்பா சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிப்பாலி பேச்சை ஒரு முடிவுக்கு கொண்டு வர “அப்பா, இதோ நீங்கள் கொண்டி வந்திருக்கிறீர்களே ஒரு சிலை….இதைப் போல நூறு சதவீத பொருத்தத்தில் ஒரு பெண் கிடைப்பாளென்றால் அவளை மணக்க சித்தமாயிருக்கிறேன்” என்றான். அம்மாவுக்கு கஷாயம் ; அப்பாவுக்கு தங்கச்சிலை. அப்பா வேறு வேலை செய்யப் போய்விடுவார் என்று எண்ணியிருந்த பிப்பாலிக்கு அடுதத நாள் அதிர்ச்சி காத்திருந்தது. சிலையை எடுத்துக் கொண்டு, மனைவி சுமனா தேவியையும் சில புரோகிதர்களையும் அழைத்துக் கொண்டு கபிலர் மத்த நாட்டுக்கு பயணமானதாக கேள்விப்பட்டான். சாகள நகர் அழகான பெண்களுக்கு பேர் போன நகர். அங்கு சென்று சிலையில் இருக்கும் பெண் போல தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
என் பெற்றொர் சம்பந்தம் பேசிய பெண்ணுக்கு,
என் பெயர் பிப்பாலி. தயவு செய்து உங்களுக்கேற்ற வேறொருவரை மணந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழுங்கள். என்னை பொறுத்தவரை, துறவு வாழ்க்கை வாழவே நான் விரும்புகிறேன். தயவு செய்து இதைப் படித்து வருத்தம் கொள்ளாதீர்கள்.
அன்புடன்
பிப்பாலி
கபிலர் கடிதவோலையை தீயில் பஸ்மமாக்கினார். தான் அனுப்பிய கடிதம் கபிலானிக்கு கொடுக்கப்படவில்லை என்பது திருமணத்திற்குப் பிறகு கபிலானி சொல்லித்தான் பிப்பாலிக்கு தெரிந்தது. சாகள நகரிலிருந்து குணபாலன் மகதம் திரும்பவேயில்லை. ஒரு சாகளப் பெண்ணை மண முடித்து அங்கேயே தங்கி விட்டதாக அவனின் உறவினர்கள் கேள்விப்பட்டார்கள்.
பூமாலையை வேலியாய் இருவருக்கும் நடுவில் வைத்து உறங்கும் பழக்கம் திருமண இரவன்று ஆரம்பித்தது. கபிலானியின் உள்ளக்கிடக்கையும் தன்னுடைய துறவு கொள்ளும் எண்ணத்துடன் ஒத்துப்போவதை எண்ணி மகிழ்ந்தான். பூமியில் புதைந்திருந்து சரியான சமயத்தில் வெளியெழுந்த தங்கச்சிலைக்கு மனதார நன்றி சொன்னான். சாகள நகரிலிருந்து நண்பன் குணபாலன் திரும்பி வராத மாதிரி, தங்கச்சிலையும் மகதம் திரும்பவில்லை ; கபிலர் சாகள நகரை விட்டுக் கிளம்புவதற்கு முதல் நாள் அந்த பொன் சிலை காணாமல் போயிருந்தது.
oOo
சம்பங்கிப் பூமாலையின் மணம் கபிலானிக்கு உறக்கத்தை தரவில்லை. பிப்பாலி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். கபிலானியின் சிந்தனையில் அவஸ்தை. புகுந்த வீட்டிற்கு வந்து இருபது வருடங்கள் ஓடிவிட்டன. ஆறு மாதம் முன்னர் மாமனார் மறைந்தார் ; இருபது நாட்கள் முன்னர் மாமியாரும் காலமானாள். கருமங்கள் எல்லாம் முடிந்து உறவினர்கள் எல்லாம் இரண்டு முன்னர் தான் தத்தம் வீடுகளுக்கு சென்றிருந்தனர். வாழ்க்கையை லேசாக, துய்ப்பு – துக்கம் இரண்டுங் கலக்காமல் வாழ்ந்து வந்த கபிலானிக்கு அதீத வீட்டுப் பொறுப்புகள், வேலையாட்களின் மேல் ஏவல் செய்யும் உரிமை, எஜமானியம்மா என்ற பதவி முதலியவை பாரவுணர்வைத் நெஞ்சுள் ஏற்படுத்தின. வெகுநாட்களுக்கு முன்னர் இருவரும் சேர்த்து எடுத்திருந்த முடிவைப் பற்றி மீண்டும் பேசும் வேளை வந்து விட்டது!
oOo
கபிலானி எழுவதற்கு முன்னரே பிப்பாலி விழித்தெழுந்து வயல் வேலைகளை கவனிக்கப் போய் விட்டான். பாழ் நிலத்தை அடுத்த ஒரு வயலை உழுது கொண்டிருந்தார்கள். வயலின் ஓரத்தில் ஒரு மரம் இருந்தது. மர நிழலில் அமர்ந்த படி வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். நிலத்தை கீறிக் கொண்டிருந்த ஏர் ஆழமாக மண்ணில் இறங்கியது. மண் புரட்டிப் போடப்பட்டது ; சருகுகள், களைகள், பயிர்க்குச்சிகள் எல்லாம் மண்ணில் புதைந்தன. ஏர் உழுது முடிந்ததும், குடியானவர்கள் நிழலில் கொஞ்ச நேரம் களைப்பாறினர். பிப்பாலி வயலுக்குள் இறங்கினான். உழுத நிலத்தை பார்த்தவனின் கண்களில் நிறைய புழுக்கள், பூச்சிகள் தெரிந்தன. பாதி அறுபட்ட புழுக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன. பிப்பாலியின் கூரிய பார்வையில் பூச்சிகளுடைய வெளிர் மஞ்சள் ரத்தக் கறைகள் அங்கங்கு தென்பட்டன. வயலின் மேல் சில பறவைகள் வட்டமிட்டன. பிப்பாலி வானை நோக்கினான். சூரிய வெளிச்சத்தில் அவனின் கண்கள் கூசி, லேசாக இருட்டிக் கொண்டு வந்தது.
பிணந்தின்னிப் பறவையொன்று அவனை நோக்கி பாய்ந்தது.. அவன் தலை மேல் உட்கார்ந்து கொத்தியது. மேலும் சில பறவைகள் அவனை நெருங்கின. ஓடத் துவங்கினான். அவன் காலில் சில மனித உடல்கள் இடறின. கண்கள் திறந்திருந்த சடலங்களின் வாய்களில் பூச்சிகள் மொய்த்தன அவன் தலை மேல் உட்கார்ந்திருந்த பறவையை ஓர் அம்பு வந்து தாக்கியது. பறவையின் ரத்தம் அவன் முகமெங்கும் வழிய……
யாரோ அவனை அழைத்தார்கள்…..பூத்தூவலாக தண்ணீர் முகத்தில் விழுந்து குளிர்வித்தது. அவனை எழுந்து மரத்தில் சாய்ந்து உட்கார வைத்தார்கள். துளி உப்பு கலந்த தண்ணீர் குடிக்க தந்தார்கள். வயலில் பறவைகள் புழுக்களை இன்னும் கொத்தி எடுத்துக் கொண்டிருந்தன. புத்துணர்ச்சி மீண்டதும் வயலை விட்டு நீங்கினான்.
oOo
கபிலானி வீட்டு முகப்பில் அமர்ந்திருந்தாள். வீட்டின் முன்புறம் பெரிய வெள்ளைத் துணி விரித்து அதன் மேல் எள்ளைக் காயப் போட்டிருந்தார்கள். பறவைகளை விரட்டும் தடி கீழே அனாதையாய் கிடந்தது. வேலைக்காரப் பெண் எங்கோ சென்றிருக்கிறாள். காகங்களும் குருவிகளும் விரிப்பில் வந்தமர்ந்தன. கபிலானி தடியைக் கையிலெடுத்து காகங்களை விரட்ட பரப்பியிருந்த எள் பரப்பிய துணிக்கருகே வந்தாள். எள்ளைத் தின்ன பூச்சிகளா? பூச்சியைத் தின்ன எள்ளா? பூச்சிகள் எள் குவியலுக்குள் நெளிந்தன. அரைவெள்ளை நிற எள்ளைத் தின்ன வந்த பூச்சிகளை காகங்களும் குருவிகளும் கொத்திக் கொண்டிருந்தன. தடியை வீசுவது போல் பாவனை காட்டுவதற்குள் வேலைக்காரி வேகமாக ஓடி வந்தாள். தடியை அவளிடம் கொடுத்தாள் கபிலானி. வேலைக்காரி “உஸ் உஸ்” என்று காகங்களை விரட்ட முயன்றாள். அவளின் விரட்டலுக்கு பறவைகள் பணிந்த மாதிரி தெரியவில்லை. காகங்கள், குருவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமானது.
கபிலானி வானை நோக்கினாள் ; மழை வந்தால் தேவலை என்று தோன்றியது. வேலைக்காரி வீசிய தடியடியில் ஒரு குருவி காயமாகி தரையில் விழுந்தது. வேலைக்காரி குருவிக்கு முதலுதவி பண்ணித் திரும்புவதற்குள், நிறைய பூச்சிகளை காகங்களும் குருவிகளும் கொத்திச் சென்றுவிட்டன.
திடீரென காற்று பலமாக வீசியது ; இலேசான தூறல்கள் தரையைத் தொட்டன. அழுத்தமான மண்வாசனை பரவியது. கபிலானி வீட்டுக்குள் செல்லுமுன் வீதியைப் பார்த்தாள். பிப்பாலி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
oOo
அடுத்த நாள் விடிகாலை காவியுடை பூண்ட தம்பதிகள் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறிய போது அவர்கள் வசித்த கிராமத்தில் யாரும் விழித்திருக்கவில்லை. கிராமத்தை நீங்கிய போது யாரும் பார்க்கவில்லை. அடுத்தடுத்த கிராமங்களில் உள்ளவர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர் ; கிராமவாசிகள் தம்பதிகளை பின் தொடர முயலும் போது பிப்பாலி அவர்களை வணங்கி தொடர்ந்து வர வேண்டாமென்று கேட்டுக் கொண்டான். அடிமைகளெல்லாம் விடுதலையாகித் தன் இஷ்டம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்றும் பிப்பாலியின் குடும்ப வயல்கள் அவற்றைப் பராமரிக்கும் குடியானவர்களுக்கே சொந்தம் என்றும் அறிவித்துக் கொண்டே நடந்தான். பொருட் பாரங்கள் ஏதும் மனதில் இலாமல் கபிலானியும் பிப்பாலியும் அவர்களுக்கு சொந்தமாக இருந்த கிராமங்களை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று கொண்டிருந்தனர்.
oOo
அன்று மாலை ஒரு சத்திரவாசலில் இளைப்பாறினர். கபிலானி மறதியாக ஒற்றைக் கொலுசொன்றை கழட்டாமல் வந்துவிட்டதாகச் சொன்னாள். அவள் அதைக் கழட்டுகையில் வெண்மையான கெண்டைக்கால் தெரிந்தது. கொலுசை சத்திர வாசலிலேயே வைத்து விட்டு அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினர். கபிலானி முன்னால் நடக்க பிப்பாலி பின் தொடர்ந்தான்.
ராஜகிருகம் – நாலந்தா சாலை ஓரிடத்தில் இரண்டாகப் பிரிந்தது. கொஞ்சம் பின் தங்கி மெதுவாக வந்து கொண்டிருந்த பிப்பாலிக்காக கபிலானி சந்திப்பில் காத்து நின்றாள். கழுதைகளில் பூக்கூடைகளை ஏற்றி பூ வியாபாரிகள் ராஜகிருகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட இருபது கழுதைகள் இருக்கலாம். பூக்கள் சரமாகக் கோர்க்கப்பட்டு கோளங்களாக கூடைகளில் நிறைக்கப்பட்டிருந்தன. வெறும் பார்வையழகுக்காக சூடிக் கொள்ளப்படும் வாசமற்ற அடர்மஞ்சள் நிறப்பூக்கள் ! கழுதைகள் எல்லாம் தாண்டிச் செல்லும் வரை பாதசாரிகள் பாதையோரங்களில் நின்றார்கள்.

நாலந்தா நோக்கி செல்லும் பாதையில் பிப்பாலி தன் பயணத்தை தொடர்ந்தான். அவனுடைய நடையின் வேகம் அதிகரித்திருந்தது.
இரண்டாகப் பாதைகள் பிரிந்த இடத்திலிருந்து பத்து கல் தொலைவில் தன் வருங்கால மாணவனை சந்திப்பதற்காக சாக்கியமுனி காத்துக் கொண்டிருந்தார். பூ, பழம், விதை மூன்றும் இணைந்து பூங்கொத்தாகப் பழ வடிவில் பூக்கும் அத்தி மரமொன்றின் அடியில் அவர் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
oOo
குறிப்பு :
(1) பிப்பாலி காஸ்யபன் பின்னாளில் மஹாகாஸ்ஸபராகி புத்தரின் முக்கிய சீடரானார். புத்தரின் பரிநிர்வாணத்துக்குப் பிறகு கூடிய முதல் பௌத்த மாநாட்டுக்கு தலைமை ஏற்றவரும் இவரே. ஜென் பௌத்தத்தின் முதன்மையான சமயகுருவாகவும் இவர் வணங்கப்படுகிறார்.
(2) பத்த கபிலானியென்று போற்றப்படும் கபிலானி பிப்பாலியிடமிருந்து பிரிந்து சென்ற சாலை அவரை சாவத்திக்கு (பௌத்த மதத்தின் புனிதத்தலங்களுக்குள் ஒன்று) கொண்டு போய்ச் சேர்த்தது. ஐந்து வருடங்கள் கழித்து பௌத்தத்தில் பிக்குணிகளுக்கான சங்கம் புத்தரால் அனுமதிக்கப்பட்டபின் பௌத்த பிக்குணியானார். சாவத்தியில் ஜெதாவன பௌத்த மடத்தில் வசித்து சாக்கியமுனியின் பல பேருரைகளை கேட்டார். ஒரு முறை சாக்கியமுனி பத்த கபிலானியை “பிக்குணி சங்கத்தின் அருட்சகோதரிகள் எல்லாரிலும் கடந்த பிறவிகளை நினைவு கொள்ளும் ஆற்றல் பெற்ற பத்த கபிலானியே முன்னணியில் இருப்பவர்” என்று புகழுரை ஆற்றியதாக பௌத்த மரபு சொல்கிறது.
Very beautiful! It is difficult to sustain interest in a story that involves just two characters, and convey their single minded resolve!
தாகூரின் சிறுகதையொன்றில் கணவன் துறவுமேற்கொள்கிறான். மனைவியின்
பிரிவுத்துயரத்துடன் கதை முடியும். அந்தக்கதையின் முடிவில் ஏற்படும் சோகவுணர்வு இந்தக்கதை ஏற்படுத்தவில்லை. அதனால் என்ன?
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கம், எளிமையான நடை,வரலாற்று பின்குறிப்புகளுடன் சிரத்தையாக எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
வாழ்த்துக்கள்.
லாவண்யா
அருமையான பதிப்பு