சிதறால் குன்றம் – சிதறாத காலம்

காலத்தின் கரு மண்ணில் ஊறி உரமேறிப் படிந்த தடங்களின் உருதானே இடங்கள்? தொன்மையான இடம் என்று நாம் ஒன்றை குறிப்பிடும்பொழுது அது கடந்த காலத்தின் அண்மைக்கு நம்மை எடுத்துச் செல்லும் இடத்தின் தன்மையைத்தானே குறிக்கிறது?

சமீபத்தில் நாகர்கோயில் பக்கம் போகும் நாட்கள் வந்தன. அதில் ஒரு காலை பொழுதில் “சிதறால்” மலைக்கோயில் நோக்கி பயணம் துவங்கியது. மார்த்தாண்டம் கடந்தவுடனேயே சூழலின் குழல் வழியே அழகின் ஸ்வரத்தை ஆலாபனை செய்யத் துவங்கியிருந்தது இயற்கை. சரியான வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால் “சிதறால் எப்படி செல்வது” என்று விசாரிக்கையில் பலரும் புருவம் உயர்த்தி “தெரியாது” என்று கூற, ஏமாற்றமே மிஞ்சியது. எதேச்சையாக “மலை மேல் கோயில்” என்று எதிர்பட்ட மற்றொருவரிடம் மாற்றிக் கேட்டபோது, “ஓ, மலைக் கோயிலா” என்று உற்சாகமாக‌ வழி சொன்னார்.

“சிதறால்” என்ற பெயர் பலருக்கு பரிச்சயமில்லை. இப்பகுதியில் இது “மலைக்கோயில்” என்றே அறியப்படுகிறது. இன்று பழனி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு “திருஆவினங்குடி எப்படி போவது” என்று கேட்டால் நம்மை எப்படிப் பார்ப்பார்கள்? அது போலத்தான் “சிதறால்” என்று சொல்லி வழி கேட்டால் நம்மை இப்பகுதியில் பார்க்கிறார்கள்.

chitaral

போகும் வழியெங்கும் வானம் இருண்டு இறங்கிக் கொண்டிருந்தது. சற்றே வழி தேடி அலைந்தபின் ஒரு வழியாக “சிதறால்” கண்ணில் பட்டபொழுது, யுக மலையில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட காலத்தின் கல் ஒன்றை கவிழ்த்து வைத்தது போல மெளனித்திருந்தது “சிதறால்” குன்று. மலைகள் நமக்கு பிரமிப்பும் வசீகரமும் தருவதன் காரணம், அதன் ஆகிருதியும் அந்த ஆகிருதியில் அடங்கியிருக்கும் அச்சமூட்டும் அமைதியும்தானோ? மலை பற்றிய பிரமிப்புதான் “மலைப்பு” என்றாகியதோ?

சிதறால் குன்றுக்கு “திருச்சரணத்து மலை” என்றொரு பழங்காலப் பெயரும் உண்டு. “சிரமணர்” என்பது சமணரை குறிக்கும் சொல். ஒரு வேளை இது “திருச்சிரமணத்து மலை” என்று முதலில் இருந்திருக்கக்கூடும். “சரணம்” என்பது சமணத் துறவின் நிலைப்பாட்டையும் குறிக்கும். இவற்றை ஒட்டி “திருச்சரணத்து மலை”யின் பெயர் காரணம் நமக்கு விளங்கும்.

மலைக்குச் செல்லும் பாதையில் திறந்திருந்த இரும்பு கேட் அருகே ஒரு கல்லில் அமர்ந்திருந்தார் கைலி அணிந்திருந்த ஒருவர். புகைத்துக் கொண்டிருந்த பீடியின் நுனியை பார்த்தபடி இருந்த அவரிடம் “மேலே வரைக்கும் போக முடியுமா” என்றேன். பீடியின் வழியே நாடிக்குள் ஏதோ ஒரு நினைப்பை உள்ளிழுத்துக் கொண்டிருந்தார் போலும். மெதுவாக அந்த நினைப்பை கழற்றி கைக்குள் வைப்பது போல, வாயிலிருந்த பீடியை கைக்கு மாற்றிய அவர், “நல்ல பாதை இருக்கு தாராளமா போலாம்” என்றவர் சற்று இடைவெளி விட்டு, “யாரு சார் இங்கெல்லாம் வர்றாங்க” என்றார் சற்று வருத்தத்துடன். தலைதூக்கி வானம் பார்த்து, “உச்சிக்கு கருத்திருக்கு மழை” என்றவரை என்னைறியாமல் மகிழ்ச்சியுடன் பார்த்து விட்டு நடக்கத் துவங்கினேன். வானம் பார்த்து மழை வரும் என்று கணிப்போரை எனக்கு ஏனோ உடனே பிடித்து விடுகிறது. மழையின் தூதுவர்கள் போலவும், மழையே அவர்களை நம்மிடத்தில் அதன் சேதி சொல்லி வர அனுப்பியது போன்ற‌ வசீகரம் அவர்களிடத்தில் நான் காண்பதாலோ என்னவோ…

சிதறால் மலை உச்சிக்கு செல்ல, கீழே இருந்து ஒரு கிலோ மீட்டர் நடைதான். ஆனால் புறவெளியை பார்த்தபடி ஏற ஏற மனவெளியில் ஏற்படும் மாற்றங்கள் அளவீடுகளின் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவை. தொடுவானைத் தூக்கிப் பிடித்தபடி தூரத்தில் தெரியும் மலை முகடுகளில் கண் வைத்தால், விசாலத்தின் உணர்வு மனது முழுவதும் ஊடுருவ, முதலில் நாம் அணிந்திருக்கும் நிகழ்காலத்தின் சட்டையை உரித்துப் போட்டு முன்னே நழுவுகிறது நமக்குள் இருக்கும் கால நாகம். காற்றின் ஈரப்பதம் நம் நுரையீரலின் சுவர்களில் சில்லென்று இறங்க, பெருங்குரலுடன் வீசும் காற்று போகும் போக்கில் நமக்குள் தூவி விட்டுப் போகும் தனிமையின் விதை… நிகழ்காலம் உதிர்த்த மனதை தனிமை சந்தித்தால் என்னவாகும்? நம் மனதும் காலமும் அருகருகே அமர்ந்து கதை பேச, அதை நாமே பார்க்கும் அற்புத அனுபவத்தை தருகின்ற ஊடகமே சிதறால்!

sidharaal_2

முன்பகல் நேரமெனினும் கருக்கல் பொழுது போல கனத்து தொங்கியது வானம். சிமிண்ட் டைல்களால் நன்றாக செதுக்கப்பட்டிருந்த வழி தொன்மையான பாறைகளின் நடுவே சற்றே செயற்கையாகத் தெரிந்தது.  பழைய இடங்களை பழைய மாதிரியே விட்டு வைத்திருக்கலாமே என்று தோன்றினாலும் பழைய இடங்கள் பழைய மாதிரியே இருந்தால் நம் போன்ற எளியோர்கள், எதற்காக அவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன்வோ அவற்றின் “முடிவிடத்தை” அடைய‌ முடியுமா என்றும் கேள்வி எழுந்தது. இந்த கேள்வி இடங்களுக்கு மட்டும்தானா? காலத்துக்கும் நம் மனதுக்கும் பொருந்தும்தானே? நினைவுகளின் நீட்சியை அதன் வடிவத்திலேயே தற்சமயத்தின் பொழுதுக்குள்ளும் வைத்திருந்தால் நிகழ்காலம் மீதேறி நாம் அதனை எளிதாக கடக்க முடியுமா? அதனால்தான் நினைவுகளின் மீது புதுப்புது நிகழ்வுகளை காலம் பூசிக் கொண்டே இருக்கிறதோ? எனவேதான் நமது நினைவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் புதுப்புது வர்ணம் கிடைக்கிறதோ? எதன் மூலமாக எதன் மீது புதுப்பூச்சு எப்போது காலம் பூசும் என்று எவருக்குத் தெரியும்? இந்த சூட்சமத்தில்தான் நாம் இன்னும் பயணம் போக வேண்டிய ஒவ்வொரு நொடிக்கான உயிர்ப்பின் ரகசிய வண்ணத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறதோ காலம்?

ஏறத்துவங்கி சுமார் அரை மணி நேரம் கடந்தபின், அடர்ந்து பெருத்து ஆங்காங்கே தன் உருவத்தை அசைத்தபடி அமர்ந்திருக்கும் அடிவேர்கள் செறிந்து ஆண்டுகள் பல கண்ட மரமொன்றின் பின்னே காலத்தின் கனத்தை ஒன்றன் தோள் சாய்ந்து மற்றொன்று தாங்குவது போன்ற இரண்டு பாறைகள் சட்டென்று நம் கண்ணில் பட்டு கவனத்தை ஈர்த்தால் நாம் குடைவரையின் முகப்பை அடைந்து விட்டோம் என்று அர்த்தம். அந்தப் பாறைகளின் இடையே உள்ள பிளவின் வழியே நுழைந்து மறுபுறம் அடைந்தால் ஆயிரம் ஆண்டுகளின் சுவடாய் சுவரில் படிந்திருக்கிறார்கள் தீர்த்தங்கரர்கள்.

sidharaal_1

குன்றின் உச்சியை அடைந்ததன் குறியீடாய் காற்று உடம்பை கிழித்தெறியும் வேகத்தில் துளைத்தெடுத்தது. தொன்மையின் வீரியம் அந்த இடம் முழுவதும் விரவியிருந்தது. தீர்த்தங்கரர்களின் சிலைகள் வடிக்கப்பட்ட பாறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்களில் கல்லாகிப் போய் கண் மூடிக் கிடந்தது காலம். “ஆயிரத்து ஐநூறு வருஷம்!” என்று எனக்குள் நானே சொல்லிப் பார்த்தேன். காலம் என் தொண்டைக் குழிக்குள் இறங்கி கெட்டித்து போய் அடைத்து நிற்பது போல இருந்தது. அந்த அடர்த்தியின் வழியே நம்மை நாமே செலுத்திக் கொள்ளும்பொழுது கடலின் மேல் ஆடும் சிறு துரும்பு போல நம்மை உணரும் ஏதுமற்ற தன்மையின் வடிவமாகத்தானே காலத்தின் முன் நாம் ஆகிறோம்? திசைகளை தீர்மானிக்கும் விசைகளின்றி அலை போகும் போக்கில் அல்லாடும் துரும்பாக நம்மை ஆக்க வல்ல காலம் அங்கு ஆயிரம் வருடங்களைக் கடந்து அமைதியாக அமர்ந்திருந்தது.

சிதறால் மலை குறித்து சுவையான சரித்திரம் உண்டு. கி.மு 298ஆம் ஆண்டு சந்திரகுப்த மெளரியர், தனது குருவாகக் கருதிய பத்ரபாகு என்னும் சமண முனியுடன்  வடக்கிலிருந்து சிரவணபெளகுளா [இன்றைய கர்நாடகத்தில் இருக்கும் இடம்] வந்தாராம். பத்ரபாகுவின் சீடர்கள் அப்பகுதி முழுவதும் சமணம் பரப்பும் பொருட்டு குழுவாக பிரிந்து சென்றனர். பத்ரபாகுவின் சீடர் விசாகா என்பவர் தலைமையில் பாண்டிய சோழ நாடுகளுக்கு வந்த ஒரு பெருங்குழு,  சிதறால் மலையை தியானத்திற்கு உகந்ததாக தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். இவ்வாறாக “திருச்சரணத்து மலை” உயிர்த்து எழுந்தது என்கின்றன குறிப்புகள்.

தீர்த்தங்கரர்கள் செதுக்கப்பட்டிருக்கும் பாறைகளை பார்த்தபடி வந்தால், அது நம்மை ஒரு மண்டபத்தில் போய் நிறுத்துகிறது. இதுவே குடைவரை கோயில்.  கருவறை மண்டபம், வராண்டா போன்ற ஒரு வெளி மற்றும் ஒரு பலிபீடம் என மூன்று பகுதிகளை கொண்டது இது. கருவறை மண்டபம் மூன்று அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றில் மகாவீரரும் மற்றொன்றில் பகவதி அம்மனும் மூன்றாவதில் பர்ஸவதனா என்ற தீர்த்தங்கரரும் வீற்றிருக்கிறார்கள். சமணமும் இந்து மதமும் ஒரே கருமண்டபத்தில் இருப்பது விசித்திரமாக இருக்கிறது இல்லையா? சமணம் அழிந்து பல காலம் பாழ்பட்டுக் கிடந்த இந்த இடத்தை, இரண்டாம் ராஜராஜன் பகவதி அம்மனை எழுப்பி இந்து கோயிலாக புதுப்பித்தான் என்று கேள்வி. காலத்தின் அமானுஷ்ய குரல் போல சுழன்றடிக்கும் காற்றுக்கும் இவர்கள் இங்கமர்ந்த காலத்திற்கும் இடையே நம்மை பொருத்திப் பார்க்க தோதாக இருக்கும் மண்டப படிக்கட்டுக்களில் நாம் அமர்ந்தால், மனம் மெல்ல மெல்ல எடையற்ற பொருளாகி எங்கெங்கோ பறப்பதை அமைதியாக நாம் பார்க்கும் தருணங்கள் கிட்டும். காலத்துகள்களின் சஞ்சார பிம்பம்தானே உலகமும் அதன் உயிர்களும்?

sidharaal_4

கோயிலின் முன்னே ஒரு சிறிய தடாகம். தடாகம் என்ற சொல்லுக்குள்ளேயே தாகம் இருப்பது தற்செயலான சொல்லாக்கமாக இருக்க முடியுமா? பாறையிலேயே படிகள் வெட்டப்பட்டு அந்த தடாகத்தில் இறங்கின. பாறைகளின் சரிவில் அமர்ந்து கொள்ளலாம் என்று சொன்னது மனது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு சமணத் துறவி அந்த பாறையில் அமர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் அந்த பாறையில் கால் வைக்கத் தயக்கத்தை ஏற்படுத்தியது. இதே பாறையில் அமர்ந்த படி விசும்பின் விளிம்பு நோக்கி அவர் தியானித்திருக்கலாம். துறவின் தாகத்தில் அமர்ந்திருக்கக்கூடிய அவர்,  அந்தத் தடாகத்தின் நீரை அருந்தியிருக்கக்கூடும். மழையன்றி வேறெதுவும் அங்கே நீரைத் தேக்கியிருக்க முடியாது. ஒன்றுடன் ஒன்றை சேர்த்து சேர்த்துத் தானே புதிய நொடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது காலம். அப்படியென்றால் தடாகத்தின் ஏதோ ஒரு நீர்த்துளியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழை இன்னும் ஒட்டிக் கொண்டிருக்குமோ?

இடத்தின் மயக்கம் தயக்கத்தை தள்ளி வைக்க, பாறையில் அமர்ந்தேன். ஆயிரம் வருடங்களின் ஆழத்தில் கால் வைத்ததன் சிலிர்ப்பு சில்லிட்ட பாறையின் வழி காலில் ஏறியது. சற்றே சாய்ந்து அமர்ந்தால் பாறையில் தலை சாய்க்கும்படியாகவும், பார்வைக்கு வானம் முழுவதும் தெரியும் விதமாகவும் வசதியான வார்ப்பில் இருந்தது பாறை. கண் மூடச் சொன்னது காற்றின் உன்மத்தமான தழுவல். காற்றின் வழியே மழையின் வாசனை மூச்சு முட்ட உள்ளே இறங்கி நரம்பு மண்டலமெங்கும் வலம் வருவது போன்ற ஒரு நறுமணம். மழையை தன் மீது பூசிக் கொண்டு பூரித்த தாவரங்கள் குன்றெங்கும் ஏதேதோ வாசனையை வழிய விட்டன. கொட்டத் துவங்கியது பெருமழை. அருகில் உள்ள கல் மண்டபத்துக்குள் நுழைந்தேன். விடாமல் பின்னே நுழைந்தது மழை. காற்றின் கைகள் ஏந்தி வந்த மழையின் பெருஞ்சாரல் ஒன்றில் குளித்தெழுந்த தீர்த்தங்கரர்கள் நொடிப்பொழுதில் மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தனர்.

மழைக்குள் என்னை இறக்கி விட்டு நடக்கச் சொன்னது சிதறால். அதாவது சிதறால் அல்லது சிதறாலின் காலம். அல்லது காலம் அடங்கிய மெளனம்… அல்லது மெளனம் புகுந்த மனது… அல்லது மனது கழுவிய நிச்சலனம்… சிதறாலின் மெளனத்தில் மனதை நிச்சலனமாக்கிய காலம்.. .காலத்தின் ஒலிகளை தனது துளிகளுக்கு உள் ஏந்தி நினைவின் சிதறல்களாக என் மீது ஏறி கும்மாளம் போடத் துவங்கியது  மழை.மழை என்பதே காலத்தை சேகரித்த வானம் நம் மேல் ஊற்றும் ஞாபகத் திரவம்தானே? குன்றிலிருந்து இறங்கி அருகிலிருந்த பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளே நுழைந்தேன். “என்ன சார் இப்படி தொப்பலா வரீங்க?” என்றார் அங்கு அமர்ந்திருந்த, காலையில் பேசிய மனிதர். சிரித்தேன். “இந்த இடமே இப்படித்தான்” என்றார் பதிலுக்கு சிரித்தபடி. அவர் சொன்னதில் குறைந்தது இரண்டு அர்த்தங்களேனும் இருப்பது போலத் தோன்றியது எனக்கு. உங்களுக்கு?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.