வாயேஜர் என்கிற டீன் ஏஜர்

ஒரு வருஷத்துப் பழசான செய்தி ஒன்றுதான் இன்றைக்கு விஞ்ஞான உலகத்தில் சுடச் சுட நியூஸ்!

சென்ற ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் வாயேஜர் என்ற நாசா விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிவிட்டது. (டெக்னிக்கலாகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹீலியோபாஸ் என்ற விண்வெளி எல்லைக் கல்லைத் தொட்டுவிட்டது). மனிதன் செய்த பொருள் ஒன்று சூரிய குடும்பத்துக்கு வெளியே காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை.

போன வருடம் நடந்த விஷயத்தை ஏன் இப்போது மெல்லச் சொல்லுகிறார்கள் ? இப்போதுதான் டேட்டா கிடைத்திருக்கிறது !

1977-ல் ஏவிவிடப்பட்ட விண்கலம் வாயேஜர். சின்னப் பையன்கள் பிறந்து கூட இருக்க மாட்டீர்கள். கே.ஆர்.விஜயாதான் அப்போது ஹாட் ஹீரோயின் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மரைனர் விண்கல வரிசையில் 11-வதாக வந்திருக்க வேண்டியவர் வாயேஜர். ஆனால் வருடக் கடைசியில் அரசாங்க இலாகாக்களுக்கே உரிய பட்ஜெட் வெட்டு விழுந்துவிட்டது. மரைனர் திட்டத்தை மாறு கால், மாறு கை வாங்கி வாயேஜர்-1 என்று பெயர் வைத்து, ‘குறைந்த செலவில் வியாழனைப் படம் பிடித்து அனுப்பு’ என்று ஏவிவிட்டார்கள்.

Record_is_attached_to_Voyager_1

உண்மையில் இரண்டு வாயேஜர்கள் புறப்பட்டன. வாயேஜர்-2 என்ற தங்கச்சி விண்கலம் வேறொரு திசையில் போய்க்கொண்டு இருக்கிறது. சற்று லேட்டாகக் கிளம்பினாலும் வாயேஜர்-1 சுறுசுறுப்பாக ஓடி முந்திவிட்டது. 79-ல் வியாழனையும் அதற்கு அடுத்த வருடம் சனியையும் விஸ்தாரமாகப் படம் பிடித்து அனுப்பியது. இந்த இரண்டு கிரகங்களையும் அவற்றின் துணைக் கோள்களையும் முதல் முறையாக இத்தனை கிட்டத்தில் பார்க்கக் கிடைத்தது.

வாயேஜர் புறப்பட்ட வேளை, ஆச்சரியமான வேளை.  குரு, சனி, யுரேனஸ், நெப்ட்யூன் எல்லாம் சரியாக அதனதன் இடத்தில் வந்து நிற்கப் போகும் அரிதான கடக லக்னம், அமிர்த யோகம். ஒரு கிரகத்தின் அருகில் போய் போட்டோ எடுத்து  முடித்த பிறகு, அதன் புவி ஈர்ப்பு விசையே வாயேஜரை இழுத்துக் கவண் கல் போல் சுழற்றி அடுத்த கிரகத்தை நோக்கி உந்தித் தள்ளிவிடும். 175 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்த மாதிரி கிரகச் சேர்க்கை அமையும்.

வாயேஜர் அதிக பட்சம் ஐந்து வருடம் உயிரோடு இருக்கும் என்று எதிர்பார்த்துத்தான் அனுப்பினார்கள். ஆனால்  அரை-விஞ்ஞானி கார்ல் சேகன் ‘இது ஒரு வேளை செத்த சவமாக மிதந்து வெகு தூரம் போனாலும் போகுமே..’ என்று அப்போதே யோசித்தார்.  முடிவில்லாத விண்வெளியில் வாயேஜர் ஒரு காலக் குமிழி. நமக்குப் பிறகும் பல காலம் இருக்கப் போகிறது. என்றாவது, எங்காவது தலையில் ஆண்டென்னா வைத்த புத்திசாலி இனம் ஒன்றின் கையில் கிடைக்கலாம்; அல்லது நம் எதிர்கால சந்ததிகளே கண்டெடுக்கலாம். அவர்களுக்காகத் தங்கத்தில் செய்த கிராமஃபோன் தகட்டில் பாட்டு, பேச்சு, படம் போன்றவைகளைப் பதிவு செய்து அனுப்பி இருக்கிறார்கள். (எல்லாம் தியாகராஜ பாகவதர் பாட்டாக இருக்காதோ ?)

நாம் அறிந்த மனித இனம் படைத்த பொருள்களில் இப்போதைக்கு வாயேஜர் மட்டும்தான், வேறொரு அறிவாளி இனத்தின் கையில் கிடைக்க வாய்ப்பாவது இருக்கும் முதல் பொருள். நாம் நமக்கே குழி தோண்டிக் கொள்ளும் வேகத்தைப் பார்த்தால், வாயேஜர்தான் அத்தகைய ஒரே பொருளாக இருந்தாலும் ஆச்சரியமில்லை.

Voyager_probe

70-களில் என்ன எலெக்ட்ரானிக்ஸ் இருந்திருக்கப் போகிறது ? பாட்டையா காலத்துத் தொழில் நுட்பம்தான். அதன் கம்ப்யூட்டரில் இருக்கும் நினைவகம் வெறும் 68 கிலோ பைட் ! இன்றைய எலெக்ட்ரானிக் பொம்மைகளுக்கும் கைக் கடிகாரங்களுக்கும் இதைவிட அதிகம் ஞாபக சக்தி உண்டு. இந்த அற்ப கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டே வாயேஜர் சூரிய மண்டலத்தின் கருப்பையைத் துளைத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறது.

ஹீலியோ ஸ்பியர் என்பது சூரியனை ஆதாரமாகக் கொண்ட ஒரு மகா சப்பை உருண்டை. இதற்குள்தான் எல்லாக் கோள்களும் நாமும் நம் நாயும் வசிக்கிறோம். இந்தப் பந்துக்கு வெளியே சூரியனின் ராஜ்ஜியம் செல்லாது. அதன் கதிர் வீச்சு வலுவிழந்து காந்தப் புலம் திசை திரும்புவதாகக் கருதப்படுகிறது. அதுதான் நம் பஞ்சாயத்து எல்லை.

இந்த எல்லைக்கு வெளியே என்னதான் இருக்கிறது ? வெறும் சூனியமா ? இல்லை. ப்ளாஸ்மா என்ற மின்சாரத் துகள் மேகம் இருக்கிறது; எப்போதோ வெடித்துச் சிதறிய நட்சத்திர மத்தாப்பிலிருந்து சிந்திய பொறிகள் அவை. காந்தப் புலமும் உண்டு. இந்த ப்ளாஸ்மாவை அளந்து பார்த்தால் வாயேஜர் இருப்பது சூரிய மண்டலத்துக்கு உள்ளேயா வெளியேயா என்பது தெரிந்துவிடும். வாயேஜரிடமும் ப்ளாஸ்மாவை அளவிடும் கருவி உண்டு. ஆனால் எந்த காண்ட்ராக்டரிடம் சல்லிசாக வாங்கினார்களோ, அது பல வருடம் முன்பே வேலை செய்வதை நிறுத்திவிட்டது.

இந்த இடத்தில் எதிர்பாராமல் சூரிய பகவான் உதவிக்கு வந்தார்: பலமாகக் காறித் துப்பினார்.

2012 மார்ச் மாதத்தில் சூரியனின் வெளிப் புறத்திலிருந்து ஒரு மாபெரும் கொரோனா பிழம்பு கிளம்பி உலகங்களைத் தாண்டி வெகுதூரம் வீசியது. இந்த ஆண்டின் வசந்த காலத்தில் வாயேஜர் வரை சென்று சேர்ந்துவிட்டது. மின் காந்த சக்தியும் எலெக்ட்ரானும் ப்ரோட்டானுமாக சுனாமி மாதிரி அடித்து வாயேஜரைப் போர்த்தி மூடியபோது, அதைச் சுற்றி இருந்த ப்ளாஸ்மாவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நடனத்தைக் கப்பென்று பிடித்து அளந்து வைத்துக்கொண்டது வாயேஜர்.

அடுத்த பல மாதங்களுக்கு டேட்டா சயன்ஸ் என்கிற தகவல் விஞ்ஞானம் சுறுசுறுப்பாக வேலை செய்து வாயேஜரின் தகவல் வெள்ளத்தை அலசியது. கடைசியாக, வாயேஜர் சூரிய குடும்பத்துக்கு வெளியே போய்விட்டது என்பதை உறுதி செய்தது நாசா. நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே இருக்கும் புறம்போக்கு நிலம் அது. வால் நட்சத்திரங்கள் மட்டுமே அங்கே மேய முடியும்.

‘வாயேஜர் போயிருக்கிற இடம், நமக்கு முற்றிலும் புதிய பேட்டை. அங்கே என்னவெல்லாம் ஆச்சரியம் காத்திருக்கிறதோ’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

missionImage_top

கவனிக்கவும் – வாயேஜர் ஒன்றும் ஊர்ந்து செல்லும் பேருந்து அல்ல. நாள் ஒன்றுக்குப் பதினாறு லட்சம் கிலோ மீட்டரை விழுங்கி முன்னேறும் விஷ்ஷ்……..!  இப்போது நம்மிடம் இருந்து 1900 கோடி கிலோ மீட்டர் போய்விட்டது. அங்கிருந்து ரேடியோவில் பேசினால் வந்து சேருவதற்கு 17 மணி நேரம் ஆகிறது. வாயேஜர் ரகத் தொலைவுகளில், தகவல் தொடர்பில் ஒரு மிகப் பெரிய சிக்கல் இருக்கிறது: இன்வர்ஸ் ஸ்கொயர் விதி என்பார்கள். தூரம் இரண்டு மடங்காக அதிகரித்தால், வந்து சேரும் ரேடியோ அலையின் சக்தி, நாலில் ஒரு பங்காகக் குறைந்துவிடும். பத்து மடங்கு தொலைவு போகும்போது 99 சதவிகிதம் காணாமல் போய், மிச்சம் இருப்பதை சுரண்டித்தான் தின்ன வேண்டும். வாயேஜர் ஒரு 25 வாட் பல்பை ஏற்றி அணைத்தால் அதை பூமியில் இருந்து கவனித்துத் தகவலாக மாற்றிக்கொள்வது போன்ற வித்தை இது.

வாயேஜரில் இனி செலுத்தும் சக்தியை அதிகரிக்க முடியாது. அதுவே பாவம், இப்பவோ அப்பவோ என்று இருக்கிறது. பூமியில்தான் ஏதாவது டெக்னாலஜி நடனம் ஆட வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்ச காலத்துக்கு டிஷ் ஆண்டெனாவை இன்னும் இன்னும் பெரிதாக்கி சமாளித்தார்கள். இப்போது அதெல்லாம் போதாமல் போய், ஊர் ஊராக இருக்கும் ரேடியோ டெலஸ்கோப்புகளை வாயேஜரின் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். எல்லாரும் ஒரே நேரத்தில் ஒத்துழைத்து அவர்களின் ஒருமித்த கருத்தைத்தான் செய்தியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வாயேஜர் 600 கோடி கிலோ மீட்டர் தூரம் போன பிறகு சூரியக் குடும்பம் முழுவதையும் நிற்க வைத்துப் புன்னகை புரியச் சொல்லி ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்தது. புகழ் பெற்ற இந்தப் படத்தில் பூமி எங்கே என்று தேடினால்,  ஒரு பழுப்புத் தீற்றலின் நடுவே வெளிர் நீலத்தில் ஒரே ஒரு புள்ளிதான் பூமி ! என் மானிட்டரில் ஒட்டியிருக்கும் தூசியோ என்று துடைக்க முயன்றேன். அவ்வளவுதான் நாம். இதற்குள்ளா இவ்வளவு ஆட்டம் போடுகிறோம் ?

36 வயசுப் பெண்ணாக இருந்தாலும் ஒரு காஸ்மிக் அளவுகோலில் பார்த்தால் வாயேஜர் ஒரு டீன் ஏஜர்தான். அதன் ஒண்ணு விட்ட சகோதரிகளான பயனியர் விண்கலங்களும் ஏறக்குறைய இதே சமயத்தில்தான் புறப்பட்டன. ஆனால் அவை பாட்டரி தீர்ந்து போய் எப்போதோ மண்டையைப் போட்டாயிற்று. வாயேஜரின் இளமை ரகசியம் அதன் ப்ளூட்டோனிய அணு சக்தி !

pioneer-spacecraft-trajectories

ப்ளூட்டோனியம் தனக்குத் தானே சிதைவடையும்போது ஏற்படும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றுகிறார்கள். அதிகம் இல்லை; ஒரு சின்ன வாக்குவம் க்ளீனரை இயக்கும் அளவுக்குத்தான் சக்தி வைத்திருந்தார்கள். ப்ளூட்டோனியம் பழசாக ஆக அதன் வீரியமும் குறைந்துகொண்டே வரும். இப்போது பாதிதான் மீதி இருக்கிறது. இனி முக்கியமானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற கருவிகளை ஒவ்வொன்றாக அணைக்க வேண்டியிருக்கும். 2025-ம் வருடம் வரை வாயேஜர், எந்திரன் ரஜினி மாதிரி தன் கை கால்களை எல்லாம் மெல்லக் கழற்றிக்  கொண்டே வந்து, கடைசியில் ஒரு நாள் மொட்டென்று சாய்ந்துவிடும். அதன் பிறகு விண்வெளியில் மௌன ஓடமாக மிதந்துகொண்டே இருக்கும்.

இன்னும் நாற்பதாயிரம் வருடத்துக்குப் பிறகு ‘ஒட்டகச் சிவிங்கி’ என்ற நட்சத்திரக் கூட்டத்துக்குக் கிட்டத்தில் போகும்போது அதில் உள்ள AC +79 3888 என்ற சூரியனை அணுகும். (ஒரே குடும்பத்தில் ஏகப்பட்ட சூரியன்கள் இருந்தால், இப்படி கார் நம்பர் ப்ளேட் மாதிரிதான் பெயர் வைக்க முடியும்).

அப்போது என்ன நடக்கிறது என்பதை சொல்வனத்தின் 1,000,092-வது இதழில் படியுங்கள்.

0 Replies to “வாயேஜர் என்கிற டீன் ஏஜர்”

 1. //அதன் புவி ஈர்ப்பு விசையே வாயேஜரை இழுத்துக் கவண் கல் போல் சுழற்றி அடுத்த கிரகத்தை நோக்கி உந்தித் தள்ளிவிடும்.//
  அதன் ஈர்ப்பு விசையே வாயேஜரை இழுத்துக் கவண் கல் போல் சுழற்றி அடுத்த கிரகத்தை நோக்கி உந்தித் தள்ளிவிடும். என்று இருக்க வேண்டும். புவியை விட்டுப் போன பின் எங்கேயிருந்து புவி ஈர்ப்புவிசை வந்தது?

 2. வாயேஜர் என்கிற டீன் ஏஜர் கட்டுரை சுவாரசியம் குறையாமல் எழுதப்பட்டிருக்கிறது.பல வருடங்களுக்கு முன்னால் பெ.நா. அப்புசாமி
  இதுபோன்ற கட்டுரைகளை எழுதுவார். ஆனாலும் விஞ்ஞான தகவல்களை
  ராமன் ராஜா அவர்கள் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். பாராட்டுக்கள்.
  தமிழில் இதுபோன்ற கட்டுரைகள் வருவது மகிழ்ச்சி தருகிறது.
  இதில் முக்கியமானது மனிதன் செய்த பொருள் ஒன்று சூரியகுடும்பத்துக்கு
  வெளியே செல்வது இதுவே முதல்தடவை எனும் தகவல்.
  சூரியகுடும்பத்துக்கு வெளியே உயிரினங்கள் ‘கந்தர்வர்கள், கின்னர்ரஃகள்
  யக்ஷர்கள், அசுரகணங்கள், தேவகணங்கள் இருக்கிறார்களா என்பதை
  தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
  லாவண்யா

 3. தவறாகப் புரிந்து கொள்ள வேண்டம். புதனின் ஈர்ர்புவிசை மற்றும் வியாழனின் ஈர்ப்புவிசை என எழுதினால் அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். தவறான புரிதலும் தவிர்க்கப்படும். அடிக்கடி இப்படியான கட்டுரைகளை எழுதுங்கள்.உங்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

 4. அந்த சூரிய குடும்ப க்ர்ராப் போடோவின் லிங்க் கிடைக்குமா?
  சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் அதேசமயம் சரியான தரவுகளோடும் தரமான popular science கட்டுரைகளாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.. (ப்ளாக், வெப்சைட் எங்காவது எழுதுகிறீர்களா?)
  ஈர்ப்புவிசை- BALA.R சொன்னபடி சனியின் ஈர்ப்புவிசை என எழுதியிருக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.