ராக் தர்பாரி

ராக் தர்பாரி. அமிர் கான் சாஹேபின் கம்பீரமான ஆலாபனைகள் உங்களுக்கு நினைவு வருகிறதா? தயவு செய்து உடனே அழித்துவிடுங்கள். “இது ஒரு மகோன்னதமான ராகம். ஹிந்துஸ்தானி ராகங்களில் இதற்கு இணையான மிடுக்கு கொண்ட ராகம் எதுவும் கிடையாது. கடினமான ஸ்வர லாகவம் கொண்ட ராகம், பாமரரும் பண்டிதரும் இதன் உணர்வுத் தாக்கத்தை மிகத் தீவிரமாக உணர்வர்,” என்றெல்லாம் ஹிந்துஸ்தானி இசை விமரிசகர் ராஜன் பரிக்கர் போல நீங்களும் எதையாவது நினைத்துக் கொண்டிருந்தால் அந்த எண்ணத்தையும் உடனே அழித்துவிடுங்கள். ஸ்ரீலால் சுக்லாவின் நூலில் மருந்துக்கும் இசை கிடையாது. அப்படி ஏதேனும் இருக்குமா என்று தீவிரமாகத் தேடிப் பார்த்தால் கடைசிவரை கீதம் சங்கீதம் என்று எதுவும் கிடைக்காது – அபஸ்வர இசை இருக்கிறது என்று வேண்டுமானால் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
 
 
RaagDarbari
புத்தகத்தின் துவக்கப் பகுதிகளே நாவலின் தொனியைத் தீர்மானித்து விடுகின்றன. சுக்லாவின் பேனா முனை கூர்மையானது. கேலியும் கிண்டலுமாக நகரின் எல்லைகள் கிழிக்கப்படுகின்றன: “இதுதான் நகரின் எல்லை. இங்கிருந்து இந்திய கிராமம் என்ற கடல் துவங்குகிறது”. அதன்பின் அருமையான விவரிப்புகள் வருகின்றன. ரங்கநாத் ரயிலைத் தவற விடுகிறான்- “பாசஞ்சர் ரயில் அவனைக் கைவிட்டுவிட்டது. ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வரும் என்று நம்பிக்கையுடன் ரயில்வே ஸ்டேஷன் போயிருந்தான். ஆனால் அது ஒன்றரை மணி நேரம்தான் தாமதித்திருந்தது. ஸ்டேஷனில் இருந்த குறிப்புப் புத்தகத்தில் தன் புகாரைப் பதிவு செய்துவிட்டு ஸ்டேஷனிலிருந்து வெளியேறினான். ஷிவ்பால்கஞ்ச் கிராமத்துக்குப் பயணிக்க ஒரு டிரக் பிடித்தான்”. இந்த கிராமம்தான் நாவலின் கதைக்களமாக இருக்கப் போகிறது. 
 
ட்ரக் டிரைவரும் ரங்கநாத்தும் பேசிக் கொள்வதில் நகைச்சுவை கொப்பளிக்கிறது:
 
“Do you know Mittal Saheb?” asked the lorry driver
“No”, said Ranganath
“Jain Saheb?”
“No”
“You are working for the CID, isn’t it?”
“CID? What is it?”
“If you are not working for CID, why are you wearing khadi?”
 
செக்கிங் ஸ்க்வாட் ஒன்று லாரியை நிறுத்தி சோதனை போடும்போதும் தமாஷாக்கள் தொடர்கின்றன. கொஞ்சம்கூட சலிப்பு தட்டாத நகைச்சுவையுடன் செக்கிங் ஸ்க்வாட், லாரி டிரைவர், ரங்கநாத் மூவரும் பேசிக் கொள்வது பதிவு செய்யப்படுகிறது. ‘சோதனை’ முடிந்ததும் பயணம் தொடர்கிறது, நாம் ஷிவ்பால்கஞ்ச் வந்தடைகிறோம்.
 
இதன்பின் நாவல் ஒவ்வொரு நகைச்சுவை துணுக்காகத் தொடர்ந்து நகர்கிறது. மக்கள் தன் தூக்கத்தைக் கெடுக்கிறார்கள் என்று காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் வருத்தப்படுகிறார். அடுத்து, “சங்கமால் வித்யாலயா, இண்டர்மீடியெட் காலேஜ், ஷிவ்பால்கஞ்ச்,” செல்கிறோம். அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிரின்சிபாலைத் அறிந்து கொள்கிறோம் – இந்தக் கல்லூரியின் முதல்வர் ஒரு முக்கிய பாத்திரம். முதல்வரின் பரம எதிரியான கன்னா மாஸ்டரும் இங்குதான் இருக்கிறார். அதன்பின், நாவலின் கதாநாயகனான வைத்யஜியின் வீட்டுக்குப் போகிறோம் – இவர் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவர். அதன்பின் கிராமத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து அறிமுகமாகிறார்கள்.
 
நாவலைத் தொடர்ந்து வாசிக்கையில் நமக்கு தலைப்பின் அர்த்தம் புரிகிறது. ஸ்ரீலால் சுக்லா தர்பாரி என்ற இசை ராகத்தைப் பற்றி பேசவில்லை. உலகெங்கும் உள்ள தர்பார்களில் இசைக்கப்படும் அரசியல் ராகத்தை விவரிக்கிறார். அரண்மனைச் சதித்திட்டங்கள், அதிகார வெறி, உறவினர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வது போன்ற அரசியல் சங்கதிகள் நாவல் எங்கும் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஸ்வரமாக ஒரு ராகத்தில் சஞ்சாரம் செய்யும் தேர்ந்த இசைக்கலைஞன் போல், ஸ்ரீலால் சுக்லா தேர்ந்தெடுத்து அடுக்கப்பட்ட அடுத்தடுத்த கட்டங்களில் கதையைக் கொண்டு செல்கிறார். கிராம அரசியலில் என்ன நடக்கிறது என்பது நமக்கு மெல்ல மெல்லத் தெரிய வருகிறது. இந்த நாவலுக்கு துவக்கம், தொடர்ச்சி, முடிவு என்ற வழக்கமான உருவம் இல்லை. கதை சொல்வதல்ல, கிராமங்களின் ஆன்மாவைப் பீடித்திருக்கும் அரசியலையும் அதிகார வெறியையும் பேசுவதுதான் நாவலின் நோக்கம். சுதந்திரத்திற்குப் பிற்பட்ட, நம்பிக்கைகள் சோபையிழந்த ஒரு காலத்தின் கதை சம்பவத் துணுக்குகளாக நகர்வதால் இவையெல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.
 
அரசின் ஒவ்வொரு நிர்வாக அமைப்பையும் நாவல் தரைமட்டமாக்குகிறது. முதலில் கல்வி அமைப்பு. ஷிவ்பால்கஞ்ச் கிராமத்தில் உள்ள கல்லூரி அதிகார ஆசை பிடித்த ஒரு பிரின்சிபால் கையில் இருக்கிறது. அவர் தனது பதவி பறிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்க்கிறார், உடும்பு மாதிரி தன்னுடைய பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அதற்காகச் சட்ட ரீதியாக என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்கிறார். அது அவருக்குப் பயன்படாதபோது சட்டத்திற்கு புறம்பாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையும் தவறாது செய்கிறார். கன்னா மாஸ்டருடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் கல்லூரி முதல்வர். கன்னா மாஸ்டருக்கு எப்படியாவது இந்த பிரின்சிபாலைக் கல்லூரியைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆனமட்டும் போராடினாலும் அவரால் எதுவும் சாதிக்க முடிவதில்லை. ப்ரின்சிபாலுக்கு வைத்யஜியின் ஆதரவு இருக்கிறது – அரசியல்வாதிகள் நம் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இது தவிர கல்வி அதிகாரிகளும் நாவலில் சிறப்பாக கவனிக்கப்பட்டிருக்கிறார்கள் – சாப்பாட்டுக்கு ஆளாய்ப் பறப்பது, பெரிய ‘டாக்’ பங்களாக்களில் தங்கியிருக்க ஆசைப்படுவது என்று அவர்களது கோணல்கள் அனைத்தும் கேலிக்குள்ளாகின்றன. இதில் மிக தமாஷான பகுதி இரண்டாம் அத்தியாயத்தில் வருகிறது – இந்தக் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவருக்கு தன் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதைவிட கிரைண்டர்தான் முக்கியமாக இருக்கிறது. ஒரு மாணவனிடம் இவர் வாக்குவாதம் செய்கிறார் – அவனது மாமா தயாரிக்கும் கிரைண்டர்களைவிட தன்னுடைய கிரைண்டர்கள் உயர்ந்தவை என்று நுட்பமாகச் செல்கிறது இவர்களின் விவாதம்.
 
சுக்லா அடுத்து கவனிக்கும் அமைப்பு சட்ட அமலாக்கம் – அதிலும் குறிப்பாக காவல்துறை. நாவலின் துவக்கத்திலேயே சுறுசுறுப்பில்லாத ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறார், உள்ளூர் ரவுடிகளுடன் அவருக்குக் கூட்டணி. காவல்துறை உருப்படியாக இல்லாததைக் காட்ட இங்கே ஒரு அபத்தமான செட் பீஸ். இன்ஸ்பெக்டர் ஒரு நள்ளிரவு ரெய்டுக்குப் போகிறார், ஆனால் யாரையும் அவர்களால் பிடிக்க முடியாமல் கடைசியில் காவல் நிலையத்துக்குத் திரும்பிவரும்போது குடிகாரன் ஒருவன் அவர்களை திட்டிக் கொண்டிருக்கிறான். பின்னர், வேறு ஒரு புதிய இன்ஸ்பெக்டர் வைத்யஜியின் அடியாட்களில் ஒருவனான ஜோக்நாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடுகிறார். ஆனால் பொய் சாட்சிகளின் உதவியோடு ஜோக்நாத் அப்பழுக்கில்லாதவனாக வெளியே வருகிறான் என்பது மட்டுமல்ல, இன்ஸ்பெக்டர் மீது மான நஷ்ட வழக்கே போடுகிறான்! இன்ஸ்பெக்டருக்கு மாற்றல் உத்தரவு வருகிறது, அவரது வாழ்க்கையே கடினமாகப் போய் வேறு வழியில்லாமல் அவரே ஒருநாள் வைத்யஜியைச் சந்திக்கச் செல்கிறார். இப்போது அவர் ஜோக்நாத்துடன் சமாதானமாகப் போகத் தயார். இந்த இன்ஸ்பெக்டரின் கதையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது – காவல் துறையினரும் இதர அரசுத் துறை அதிகாரிகளும் அடிக்கடி மாற்றப்பட்டுவது இந்தியாவில் பழகிப் போன விஷயங்கள்.
 
சுக்லா நீதித் துறையையும் விட்டுவைப்பதில்லை. காவல்துறையினருக்கும் பொய் சாட்சிகளுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது, அடிக்கடி இந்தப் பொய் சாட்சிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் போலீஸ்காரர்கள். இது போன்ற ஒரு பொய் சாட்சியை குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வது மிகவும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டிக்கும்போது இன்னும் தமாஷாக இருக்கிறது. மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தர வேண்டியவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று கன்னா மாஸ்டர் தரப்பில் வழக்காடுபவர்கள் நீதிபதியால் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன்பின் எதிர்தரப்புக்கும் திட்டு விழுகிறது. இருவருமே தாங்கள் வெட்கப்படுவதாக ஒப்புக் கொள்கிறனர். ஆனாலும்கூட வழக்கு விசாரணை நில்லாமல் தொடர்கிறது. எதிரிகளைத் துன்புறுத்த பொய் வழக்குகள் போடப்படுவது நன்றாக விவரிக்கப்படுகிறது. கிராம பஞ்சாயத்து, கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற ஏனைய அரசு அமைப்புகளையும் சுக்லா கிழித்து தோரணம் கட்டித் தொங்க விடுகிறார்.
 
shukla
 
வைத்யஜி தன் குடும்பத்தினரை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்கிறவர் என்று நாம் அவரைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது, அவர் தன் விசுவாசிகளின் நலனிலும் அக்கறை கொண்டவர். அரசியலில் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதைப் போன்ற பணம் கொழிக்கும் தகுதி வேறு எதுவும் இல்லை, விசுவாசத்தை மட்டும் வெளிப்படுத்தத் தெரிந்தால் போதும், வேறெந்த திறமையும் தேவையில்லை. விசுவாசம் என்று சொன்னால், கட்சி, கொள்கை என்று குழப்பிக் கொள்ளக்கூடாது – தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் மட்டும் போதும். வைத்யஜியின் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு விசுவாசமான வேலைக்காரன் இருக்கிறான். அவனை எல்லாரும் சனீஷ்வர் என்று அழைக்கிறார்கள். அவரது வேலை கட்டம் போட்ட அண்டிராயர் வெளியே தெரிய வீட்டு வாசலில் ஒரு பாமரனாகக் காத்திருந்து வைத்யஜிக்கும் அவர் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பாங்க் மடித்துக் கொடுக்கும் கடமையை செவ்வனே செய்வதுதான். பொதுவாக, வைத்யஜிக்கு கிராம பஞ்சாயத்து பதவிகள் எதிலும் நாட்டமில்லை. ஆனால் திடீரென்று ஒரு நாள் தன் கட்டுப்பாட்டில் கிராமப் பஞ்சாயத்துகளும் இருந்தால் நல்லதுதானே என்ற ஞானோதயம் அவருக்குப் பிறக்கிறது. அவரது கடைக்கண் பார்வை சனீஷ்வருக்கு அருள் பாலிக்கிறது. வைத்யஜியின் எதிரியின் சகோதரனைத் தோற்கடித்து சனீஷ்வர் பஞ்சாயத்து பிரசிடெண்டு ஆகிறான். அதன்பிறகு பதவிக்கு வந்த கொஞ்ச நாட்களில் பஞ்சாயத்து நிலத்தில் ஒரு கடை போட்டு சனீஷ்வர் பணம் பண்ண ஆரம்பிக்கிறான் என்பதைச் சொல்லவா வேண்டும்!
 
அரசியல், அதிகாரம் என்று ஆரம்பித்தால் அடுத்தது அராஜகம்தானே! நம் அரசியலமைப்பின் வேர்களை வன்முறை தொட்டுவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் இந்த நாவலில் வன்முறையைக் கொண்டு வேண்டிய வேலையை சாதித்துக் கொள்வதை சில நிகழ்வுகள் பதிவு செய்கின்றன. கல்லூரி மானேஜர் பதவிக்கு தேர்தல் வைக்க வேண்டும் என்று கடுமையாகப் போராடி வெற்றி பெறுகின்றன எதிர்கட்சிகள். வழக்கம்போலவே வைத்யஜிதான் அந்தப் பதவியில் இருக்கிறார், வழக்கம் போலவே அவருக்கு அந்தப் பதவியை விட்டு விலக விருப்பமில்லை. தேர்தல் நாளன்று அவரது அடியாட்கள் எதிர்கட்சிக்கு ஓட்டுப் போடக்கூடியவர்களை ஓட்டுச் சாவடி பக்கமே நெருங்க விடுவதில்லை. ஆளுக்கொரு ரிவால்வரும் கையுமாகத் திரிகிறார்கள், கல்லூரி வளாகத்துக்குள் இவர்களை மீறி யார் நுழைய முடியும்? வைத்யஜி வெற்றி பெறுகிறார். அரசியல் சீர்கேட்டை இங்கே சுக்லா அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்- வைத்யஜி வெற்றி பெற்றதும் அவரது கட்சிக்காரர்கள் எல்லாரும், மகாத்மா காந்தி கி ஜெ! என்று கோஷம் போடத் துவங்கி, வைத்யஜி கி ஜெ! என்று முடித்து வைக்கிறார்கள். இந்திய அரசியலின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வளவு தெளிவாகச் சுட்டப்பட்டிருக்கின்றன!
 
கிராம வாழ்க்கையின் அரசியல் கூறுகளை விவரிக்கும் நோக்கத்துக்கு ஏற்ற பாத்திரங்களை ஸ்ரீலால் சுக்லா படைத்திருப்பதால் அவை நிஜ வாழ்வில் நாம் காணும் மனிதர்கள் போல் அல்லாமல் குறியீட்டு மதிப்பு மிகுந்தவையாக மட்டுமே உள்ளன. பொதுவாக மானுட வாழ்வின் அறச் சிக்கல்கள் கொண்ட பாத்திரங்களாக, நகமும் சதையும் கொண்ட முழுமையான மனிதர்களைத் தன் நாவலில் நடமாட விட சுக்லா எந்த பிரயத்தனமும் செய்யவில்லை. மாறாக, ஒரு ராகத்தில் இன்ன ஸ்வரத்துக்கு இன்ன அதிர்வெண்தான் உண்டு என்று தீர்மானிக்கப்பட்டிருப்பது போல் ஒவ்வொரு பாத்திரமும் அரசியலின் ஒவ்வொரு கூறுக்குரிய குறியீடாகத் தம் காரியத்துக்கு ஏற்ற எல்லைக்குள் நின்று செயல்படுகின்றன. 
 
இதில் வைத்யஜிதான் அதிகார மையம். நவீன பாஷையில் சொல்வதானால் மேலிடம். மென்மையாகப் பேசுபவர், கோபப்படாமல் நிதானமாகச் செயல்படுபவர். ஆனால் தேவை ஏற்பட்டால் அராஜகம் செய்யத் தயங்காதவர். அவரது மூத்த பையன் பயில்வான் பத்ரியும் அவனது நண்பன் சோட்டா பயில்வானும் அரசியல்வாதிகளுக்குப் பின்னிருந்து இயங்கும் வன்முறையின் குறியீடுகளாக இருக்கின்றனர். சனீஷ்வரைப் பார்த்திருக்கிறோம், அவர்தான் உண்மையான விசுவாசியின் குறியீடு. வைத்யஜியின் இரண்டாம் மகன் ரூபன், கல்வியில் நாட்டமில்லாமல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் இளைஞர்களின் குறியீடாக இருக்கிறான். நாவலின் துவக்கத்தில் நமக்கு அறிமுகமாகும் ரங்கநாத் கல்வியறிவு பெற்ற ஆனால் எதையும் சாதிக்கத் தெரியாத இளைஞனின் குறியீடு. வைத்யஜியின் சகோதரரின் மகன்தான் ரங்கநாத். அவன் தன் ஊரில் நடப்பது எல்லாவற்றையும் கவனிப்பதோடு சரி. உள்ளூர் அரசியலுக்கு அவனது ஏட்டுக் கல்வி உதவுவதாயில்லை. ஆத்திரப்படுகிறானே தவிர அவனால் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய முடிவதில்லை. அதே போல் எதிர்கட்சி தலைவர், போலீஸ்காரர்கள், உள்ளூர் ரவுடிகள் என்று எல்லாரும் இந்த தர்பாரி ராகத்தின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எவரும் நிஜ மனிதர்கள் அல்ல. இந்த நாவலில் உள்ள யாரையும் பார்த்து நீங்கள் எதற்காகவும் இரக்கப்பட மாட்டீர்கள். அந்த நோக்கத்தில் சுக்லாவும் இந்த நாவலை எழுதவில்லை என்றுதான் நான நினைக்கிறேன்.
 
ஒரே ராகத்தில் ஒரு கச்சேரி வைத்தால் எப்படி இருக்குமோ அது மாதிரிதான் ஸ்ரீலால் சுக்லா நாவல் முழுவது தர்பாரியை மட்டும் இசைத்துக் கொண்டிருக்கிறார். இப்படிப் பார்த்தால் கிராம வாழ்வைப் பற்றிய முழு சித்திரமும் இந்த நாவலில் நமக்குக் கிடைப்பதில்லை. உள்ளூர் அரசியல் மட்டும்தான் விவரிக்கப்படுகிறது, அதுவே சுக்லாவுக்குப் போதுமானதாக இருக்கிறது. நாவலில் நடக்கும் இரண்டு விஷயங்கள் மட்டும் சொல்கிறேன் பாருங்கள், இந்தக் கதை எந்த திசைகளில் சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாய் இவை இருக்கும்.
கிராமச் சந்தையில் ரங்கநாத் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறான் – கிராம மக்கள் இத்தனை நாட்களாக சாமி என்று நினைத்துக் கொண்டு கும்பிட்டுவந்த சிலை உண்மையில் ஒரு ரோமானிய அல்லது கிரேக்கப் போர் வீரனின் சிலையாக இருக்கலாம் என்ற உண்மை அவனுக்குப் புலப்படுகிறது.. இதை அவன் உரக்கக் கூவுகிறான். உடனே கோயில் பூசாரிக்குக் கோபம் வந்துவிட ரங்கநாத்தைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். இங்கே மரபார்ந்த நாட்டார் வழிபாட்டின் இயல்புகள் விவாதிக்கப்பட்டிருக்கலாம். பக்தி என்ற பெயரில் குருட்டு நம்பிக்கை நம் வாழ்வை ஆட்டுவிக்கிறது என்ற விழிப்புணர்வு கொடுத்திருக்கலாம், ஆனால் இது எதையுமே சுக்லா முயற்சிக்கவில்லை. இதே போல இன்னொரு நிகழ்ச்சி. கிராமத்தில் உள்ள கல்லூரியின் முதல்வர் தெரியாத்தனமாக ரங்கநாத்திடம் ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறார் – வைத்யஜியின் உதவி இல்லாமல் தன்னால் பதவியில் இருக்க முடியாது, கறைபடாத கரங்கள் இருந்தால் பதவி நாற்காலியை உள்ளூர் அரசியல் பறித்துக் கொண்டுவிடும் என்றெல்லாம் அவர் ரங்கநாத்திடம் சொல்கிறார். அவரது லட்சியம் நகரில் உள்ள ஒரு நல்ல கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து நல்லபடியாக வாழ்வது என்பதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அவருக்கு பணி நியமனம் அளிக்கப்படவில்லை. இன்றைய நிலையில், இப்போது இருக்கும் முதல்வர் பதவியும் போய் விட்டால் பிழைப்புக்கு வழியில்லை. நாவலில் இந்த ஒரு இடத்தில்தான் ஒரு பாத்திரத்தை மனிதத்தன்மை கொண்டதாக ஸ்ரீலால் சுக்லா படைத்திருக்கிறார். ஆனால் பாருங்கள், அதற்கு மேல் எதுவும் முயற்சிக்கவில்லை. முதல்வரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்டதும் சுக்லாவுக்கே தர்மசங்கடமாகிப் போய் இனி இந்த ஆளை இப்படியெல்லாம் பேச விடக்கூடாது என்று முடிவு செய்தது போலிருக்கிறது இது.
 
முக்காலமும் அறிந்த ஒரு ஞானியின் தொலைநோக்குப் பார்வையுடன் சுக்லா எதிர்கால அரசியல் போக்குகளை அவதானித்திருக்கிறார் – ஆனால் அரசியலில் பெண்கள் இவ்வளவு தீவிரமாக ஈடுபடுவார்கள் என்பதை கணிக்க ஏனோ தவறிவிட்டார். இந்த நாவலில் பெண்களே இல்லை என்பது எனக்கு ஒரு பேராச்சரியமாக இருந்தது. ஆமாம், பெண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து போகிறார்கள் – பாலியல் தொழிலாளி ஒருவர் செவ்வியல் இசைக் கலைஞராக நடிக்கிறார் என்று கதையில் வருகிறது. இது தவிர, புஷ்டியான அங்கங்கள் கொண்ட மாதரசிகள் ஆங்காங்கே காட்சி தருகிறார்கள் – ஏன், சாலையோரத்தில் சிறுநீர் கழிக்கும் பெண் ஒருத்தியும்கூட சுக்லாவின் கண்களைத் தப்புவதில்லை. ஆனால் நாவல் முழுவதும் ஒரு நிழல் மாதிரியாவது இருந்தும் இல்லாமலும் ஒரு பெண்ணாவது இருக்கிறாளா என்றால் பேலாவையே நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவள், பயில்வான் பத்ரிக்கும் அவனது தம்பி ரூபனுக்கும் உள்ளங்கவர்ந்த கள்ளியாக இருக்கிறாள். ஆனால் அவளுக்கு என்று ஒரு உருவம் கதையில் கிடைப்பதேயில்லை. ஏனோ தெரியவில்லை, சுக்லா இந்திரா காந்தி, ஜெயலலிதா, மாயாவதி போன்ற பேராளுமைகளுடன் ஒப்பிடத்தக்க ஒரு அரசியல்வாதியை உருவாக்கத் தவறிவிட்டார். எதிர்காலத்தை கணிப்பது என்பது எவருக்குமே அசாத்தியமான விஷயம்தான் என்றாலும்கூட, நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு பெண்ணையாவது கதையில் இயங்கவிட்டிருந்தால், நாவல் செறிவானதாக இருந்திருக்கும், அதற்கு ஒரு முழுமையும் கிடைத்திருக்கும்.
 
இந்த நாவலை நான் சரஸ்வதி ராம்நாத்தின் தமிழ் மொழியாக்கத்தில்தான் வாசித்தேன். எனவே ஸ்ரீலால் சுக்லாவின் மொழித்திறன் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அவரது பேனா கூர்மையாக இருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது, அவரது கேலிகள் சரியான் ஆளைத் தேர்ந்தேடுத்து சரியான இடத்தைப் பதம் பார்க்கின்றன. முதல் பத்தியிலேயே இந்த விஷயம் தெரிந்து விடுகிறது. சுக்லாவின் நகைச்சுவை உணர்ச்சியும் சிறப்பானது, ஆனால் அதைவிட அவரது அபத்த தரிசனம்தான் உன்னதமானது என்று சொல்ல வேண்டும். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளக்கூடிய அபத்தங்களை அவர் அவ்வளவு அழகாக விவரிக்கிறார், புத்தகத்தின் தமாஷான பகுதிகள் என்று இவற்றைச் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால், வாசிப்பில் பெரும்பொழுது சிரிப்பில் கழிகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஏதோ ஒரு அபத்தத்தை வெளிச்சமிடும் சம்பவத் தொகுப்புகளை ஒவ்வொன்றாக அணிவகுத்து இதைச் செய்திருக்கிறார். உதாரணத்துக்குப் பார்த்தால் அரசாங்கம் விவசாயிகளைப் பயிரிட்டு பலன் காணச் சொல்கிறது என்று போகிற போக்கில் பதிவு செய்கிறார் (யாருக்கும் தெரியாத உண்மை!). அது தவிர நிறுவனங்களை இரக்கமில்லாமல் தாக்குகிறார் என்பதைச் சொல்ல வேண்டும். இந்த நகையுணர்வின் பின் ஏராளமான கசப்பு இருக்கிறது. அந்தக் கசப்பும் ஆற்றாமையும் நாவலை நிறைக்கின்றன. படித்த, ஆனால் உருப்படாத ரங்கநாத், உண்மையில் சுக்லாவாக இருக்கலாம் என்ற எண்ணம் திடீரென்று எழுகிறது.
 
இந்த நாவலில் மனதைத் தொல்லை செய்யும் விஷயம் ஒன்று உண்டு – ரொம்பவும் அற்பத்தனமான, உள்ளூர் அரசியலை மட்டுமே இது பேசுகிறது. இந்த அரசியல் சதுரங்கம் அலுப்பூட்டுவ்தாக இருக்கிறது. அப்புறம்தான் சாதி, மதம், நிலப்பரப்பு என்று பெரிய அளவில் பிளவுபட்டிருக்கும் நமது அரசியல் வெளியை சுக்லா தொடவே இல்லை என்பதை உணர்கிறோம். இருந்தாலும் தப்பில்லை. இன்னும் ஐம்பது என்ன, நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த நாவல் ஒரு செவ்வியல் ஆக்கமாகவே உணரப்படும் – ஏனென்றால் எக்காலமாயினும் இந்த நாவலின் அபத்த தரிசனங்கள் நம் நிகழ்கால யதார்த்தங்களாகவே இருக்கப் போகின்றன.
 
1973ல் இந்த நாவலை ஸ்ரீலால் சுக்லா எழுதியிருக்கிறார். இந்தியாவில் எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்ட 1975ல் National Book Trust சரஸ்வதி ராம்நாத்தைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்து பதிப்பித்த புத்தகத்தைதான் நான் வாசித்தேன் (1975 – என்ன ஒரு முரண்நகை!). இதன் விலை ரூபாய் 28 என்று போட்டிருக்கிறது, ஆனால் எனக்கு பாதிக்குப் பாதி கழிவு கிடைத்தது. காசில்லை என்று சாக்கு சொல்லிக்கொண்டு யாரும் இந்த ஆகச்சிறந்த இந்திய நாவலை படிக்காமலிருந்தால் அவர்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் காசு கிடைக்காது!

0 Replies to “ராக் தர்பாரி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.