தளம் – இலக்கிய காலாண்டிதழ்

Thalam_Ilakkiyam_Literary_Ezine_Magazines_Small_Little_Magz_Thamil_Tamil_Chellappa_Critics_Alternate_Literature

தீவிர இலக்கியத்தின் தாய்வீடு என்பது எப்போதுமே சிறுபத்திரிகைகளாகவே இருந்து வருகிறது. வணிகம் சார்ந்த இயக்கமாகவோ, வணிக உதவிகளை நம்ப வேண்டி இருக்கும்போதோ பெரும்பான்மையோரின் ரசனைக்கு தீனி போடவேண்டிய கட்டாயம் சஞ்சிகைகளுக்கு வந்துவிடுகிறது. வணிக நோக்கில் செயல் பட்டு வந்தாலும் ஓரளவிற்கு இலக்கியங்களையும் உடன் சேர்த்துக்கொள்ள முடியுமா என்ற தயக்கத்துடனே பத்திரிகைகள் இயங்கி வருகின்றன. கேள்விகள் கேட்பதும் உடைத்துப் பார்ப்பதும் ஆழமாக செல்வதும் இங்கே சாத்தியமில்லை. சிறுபத்திரிகைகளுக்கு அந்த சுதந்திரமும் பரப்பும் கிடைக்கிறது. தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல சிற்றிதழ்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் குரலை எழுப்பி கொண்டே இருக்கின்றன. வெற்றுக் கற்பனைகள் அல்லது கேளிக்கைகளில் முயற்சிகளை செலவிடாமல் வாழ்வின் நிதரிசனங்களை முன்வைத்து நகருபவை சிற்றிதழ்கள். மூடி வைத்தபின் திறந்து கொள்ளும் கதவுகளை உடையவை அவை.

இந்த சுதந்திரமும் குரல்களும் குழு சார்ந்த இயக்கமாக அமைந்துவிடும் துரதிர்ஷ்டமும் உண்டு. ஆயினும் இத்தகைய முயற்சிகள் ஆங்காங்கே அதனதன் தளங்களில் மலர்ந்து கொண்டே இருக்கின்றன.

முரண்படுவதற்கான காரணங்களைக் காட்டிலும் ஒன்றுபட்டு செயல்படுவதர்க்கான காரணங்கள் வலுவானவை என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் வெளிவரும் சிற்றிதழ் “தளம்“.

இதுவரை மூன்று இதழ்களுடன் கனமான உள்ளடக்கத்துடன் தவழ ஆரம்பித்துள்ளது. சிறுகதை, கவிதை, ஓவியம் , கட்டுரை எனும் தளங்களுடன். மேலும் ஒவ்வொரு இதழும் ஒரு இலக்கிய அம்சம் பற்றிய தீவிரம் கொண்டு பேசுகிறது. முதல் இதழ் சி.சு.செல்லப்பா. அடுத்த இதழ் நாடகம் என்று அமைந்தது.

இதன் நோக்கம் சமரசங்கள் அற்ற இலக்கியப் பங்களிப்புக்காக உழைப்பதே. இலக்கியத்தை அக்கறையுடன் அடுத்த தளத்திற்கு கொண்டுசெல்ல விழையும் அனைவருக்குமானது. இந்த பங்களிப்பு என்பது வாசகனாக, ஒத்துழைப்போனாக, படைப்பாளனாக , உரையாடல்களை கொள்பவனாக – எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

தளம் இதழின் உள்ளடக்கம் பற்றி நீங்களே படித்து அறியலாம்: http://www.thalamithazh.com/

(இது தளம் பதிப்புக் குழுவினரின் அறிக்கை)