சுரபாலரின் விருட்சாயுர்வேதம்

ஆதிலட்சுமிபுரத்தில் எனது பண்ணை அனுபவங்களைக் கவனிக்கும் முன்பு சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. விருட்சாயுர்வேதம், என் மாடித் தோட்டம், நான் எழுதிய இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – இவற்றை விவரித்தபின் ஆதிலட்சுமிபுரம் செல்வோம்.

நம்வழி வேளாண்மை ஆசிரியர் விவேகானந்தனுடன் இணைந்து பணியாற்றிய வேளையில், “இயற்கை வேளாண்மை உத்திகளும் – கால்நடை பராமரிப்பும்” நூல் தொகுக்கப்பட்டு 1997-ல் வெளிவந்தபின்னர் சுரபாலரின் விருட்சாயுர்வேத மூல நூலை வழங்கி இதை வேறு சில வேளாண்துறை அலுவலர்கள் மொழிபெயர்த்துவிட்டதாகவும் அதைத் திருத்தி வழங்குமாறும் விவேகானந்தன் பணித்தார். இந்த நூலையும் காந்திகிராம பல்கலைக்கழகம் வெளியிட, துறைத் தலைவருடன் பேசி முடிவு செய்யுமாறு கூறினார்.

DSC00363

முதலில் விருட்சாயுர்வேத மூலநூலைப் புரட்டிப் பார்த்தேன். இது கவிதை வடிவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அர்த்தமுள்ள காவியம் என்று உணர்ந்தேன். எனக்கு சமஸ்கிருத அறிவு போதாது எனினும் அம்மொழிக்கே உரித்தான ஒலி- சந்த நயத்தை ரசிக்க முடிந்தது. மல்லிகை மலர்வது, “லோலகில கலாப காவல்ய கலித மல்லி” என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. மல்லிகை என்ற சொல், சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒன்றுதான். எந்த மொழி எதை ஆண்டது என்று இங்கு விசாரணை செய்வது வியர்த்தம்.

இந்த விருட்சாயுர்வேத நூல் மூலத்தை செகந்திராபாத்தில் உள்ள ஆசிய வேளாண்- வரலாறு நிறுவனத் தலைவர் ஒய்.எல். நினே வெளியிட்டுள்ளார்.  அவர் கூற்றுப்படி, விருட்சாயுர்வேதம் கிபி 1000 ஆண்டளவில் எழுதப்பட்டது. மூலாதாரமான சம்ஸ்கிருத ஓலைச்சுவடி ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது. அது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போட்லியன் நூலகத்தில் அகப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தச் சுவடியின் நுண்ணொளி அச்சுப்பிரதி ஒன்றினை ஆசிய வேளாண் நிறுவனம் வாங்கி சம்ஸ்கிருத பேராசிரியை நளினி சதாலே மூலம் ஆங்கில மொழியாக்கம் செய்யக்கொடுத்து, மூலப்பிரதியில் உள்ள சம்ஸ்கிருத அச்சுடன் ஆங்கில மொழிபெயர்ப்பு, விளக்கவுரை, மற்றும் பல இணைப்புகளுடன் ரூ. 300/- விலைக்கு வெளியிட்டிருந்த பிரதியைத்தான் விவேகானந்தன் என்னிடம் வழங்கினார்.

சரிபார்க்கச் சொல்லி என்னிடம் கொடுக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பை ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஈரடியில் எழுதப்பட்டிருந்த கவிதைக்கு நளினி சதாலே உரைநடையில், எளிய ஆங்கிலத்தில் அற்புதமாக எழுதியிருந்தார். அதற்கும் தமிழாக்கத்தில் உள்ளதற்கும் தொடர்பே இல்லை. இதைத் திருத்தி எழுதுவதைவிட, நானே எழுதுவது என்று முடிவானது. விருட்சாயுர்வேத மொழிபெயர்ப்பு மட்டுமல்ல, வடிவமைப்பு, அட்டைப்படம் (பஞ்சவடியில் ராம, லட்சுமண, சீதையின் வனவாசக் காட்சி), கருத்துரைகள் அனைத்தும் என் கைவண்ணமே.

1999ல் சுரபாலரின் விருட்சாயுர்வேதம் முதல் தமிழ்ப் பதிப்பு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் மற்றும் நம்வழி வேளாண்மை, மதுரை கூட்டுமுயற்சியாக ஃபோர்டு அறக்கட்டளை உதவியோடு வெளியானது. நான் கேட்ட சன்மானமும் வழங்கப்பட்டது.  நூறு இலவசப்பிரதிகளும் வழங்கப்பட்டன. இரண்டே ஆண்டுகளில் அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. என்னிடம் மட்டும் நாற்பது, ஐம்பது பிரதிகள் இருந்தன. அவ்வப்போது எனக்கு ஒரு கடிதமும் மணியார்டரும் வரும். புத்தகம் அனுப்புவேன். இப்படி என்னிடம் இருந்த பிரதிகளும் தீர்ந்துவிட்டன. ஆனால் புத்தகம் கேட்டு போனும் கடிதங்களும் வந்து கொண்டிருந்தன. முழு நூலையும் ஜெராக்ஸ் எடுத்து பைண்டிங் செய்து ரூ.110/- என்று விலை நிர்ணயித்து புத்தகம் கேட்டு பணம் அனுப்புவோர்க்கு வழங்கிவந்தேன். ஜெராக்ஸ் பிரதிகள் மட்டுமே ஐநூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விற்பனையாயின. இருப்பினும் இப்புத்தகத்தை சேவாவும் பல்கலைக்கழகமும் மறுபதிப்பு செய்ய முயற்சி செய்யவில்லை. எனவே, காந்திகிராம அறக்கட்டளை சார்பில் இரண்டாம் பதிப்பு வெளியிடத் தீர்மானித்து, எனக்கு பதிப்புரிமை வழங்குமாறு ஆசிய வேளாண்மை நிறுவனத் தலைவர் ஒய். எல். நினேவிடம் விண்ணப்பித்தேன். இதற்கு அவர் வழங்கிய பதில் வியப்பளித்தது.

சுரபாலர் விருட்சாயுர்வேத நூலின் காப்புரிமை நினேயிடம் உள்ளபோது அவரது அனுமதியைப் பெறாமலேயே முதல்பதிப்பு வெளியிடப்பட்ட விவரத்தை அப்போதுதான் தெரிந்துகொண்டேன். அவரது நூலின் தமிழாக்கம் வெளிவந்த விபரமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. பழைய பிரதி ஒன்றை அனுப்பும்படி நினே கேட்டுக்கொண்டதுடன்  சம்ஸ்கிருத மூலச்சுவடியையும் சேர்த்து தமிழில் வெளியிட வேண்டுமென்றும் ரூபாய் ஆயிரம் அனுப்புமாறும் என்னிடம் கேட்டார். நான் ரூ.1300/- அனுப்பி தமிழ் வெளியீட்டுக் காப்புரிமையுடன் ஒரு பிரதி மூலநூலையும் வழங்குமாறு கேட்டேன். எனக்கு அவர் காப்புரிமையையும் நூலையும் வழங்கி தன் அனுமதி பெறாமல் புத்தகத்தை வெளியிட்ட கிராமியப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு எச்சரிக்கை கடிதமும் அனுப்பிவிட்டார்.

நினேவின் எச்சரிக்கைக்கு பல்கலைக்கழகமும் சேவா- நம்வழி வேளாண்மை விவேகானந்தனும் என்ன விளக்கம் அளித்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இரண்டாம் பதிப்பு காந்திகிராம அறக்கட்டளை அச்சகத்தில் அச்சிடும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அதை வெளியிடக்கூடாது என்றும், அதை வெளியிடும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் விவேகானந்தன் கட்சி கட்டினார். பல்கலைக்கழகம் எந்த மறுப்பும் சொல்லவில்லை. நான் மீண்டும் நினேவுடன் தொடர்பு கொண்டேன். இரண்டாம் பதிப்பு வெளியிடும் உரிமை எனக்கு இல்லை என்று விவேகானந்தன் சொல்வதாகத் தெரிவித்தேன். “நீங்கள் விரும்பினால் நீங்களும் வெளியிடலாம். ஆனால், ஆர்.எஸ். நாராயணன் வெளியிடுவதைத் தடுக்கும் அதிகாரம்  உங்களுக்கு இல்லை,” என்று எழுதி நினே இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவ்வளவு எதிர்ப்பையும் மீறி சுரபாலரின் விருட்சாயுர்வேதம் 2வது பதிப்பு 1000 பிரதிகள் ரூபாய் 60 விலையில் 2005ஆம் ஆண்டு வெளிவந்து, 2009ல் 1000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இரண்டாம் பதிப்பின் வெளியீட்டாளர் காந்திகிராம அறக்கட்டளை. அவர்களுக்கு விற்பனைப் பிரிவு இல்லை. நானே விற்பனையாளர்.

காந்திகிராம அறக்கட்டளை மூலமாக வெளியிடப்பட்ட இதர நூல்களான இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், மாடித் தோட்டம், வாழ்வு தரும் மரம் (முதல் பாகம்) – ஆகியவையும் விற்றுத் தீர்ந்து விட்டன. 2007ஆம் ஆண்டு, தவறான புரிதல் காரணமாக காந்திகிராம அறக்கட்டளைக்குச் சொந்தமான விவசாய நிலங்களின் மேற்பார்வை பணிகளிலிருந்து விலகி, எனக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் ஆதிலட்சுமிபுரத்தில் வாங்கினேன். அங்கு ஒரு தோப்பு அமைத்து, மாதிரிப் பண்ணையும் இயற்கை விவசாயப் பயிற்சி உருவானதும் தனிக்கதை.

சுரபாலரின் விருட்சாயுர்வேதம் மூன்றாம் பதிப்பை வெளியிட அறக்கட்டளையின் நிதியுதவியை நாடாமல் சொந்தப்பணத்தைக் கொண்டு பதிப்பித்தேன். ஏற்கனவே எனது நூல்களை வெளியிட நிதி உதவி செய்த காந்தி கிராம அறக்கட்டளைக்கு நான் எழுதி வந்த நூல்களை நானே வெளியிட்டு கழிவுகள் வீண் பிரதிகள் போக சுமார் மூன்று லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து நானே பணம் கட்டியுள்ளேன். ஆக, வெளியீட்டுச் செலவு ஒரு லட்சம் போக இரண்டு லட்ச ரூபாய் அவர்களுக்கு லாபம். ஆனால் விவசாயப்பணி மேற்கொண்டு அறக்கட்டளைக்கு நான் நஷ்டம் ஏற்படுத்திவிட்டதாக அவர்களிடம் அவப்பெயர் ஏற்படுத்திக் கொண்டதுதான் நான் கண்ட லாபம். காலம் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டது.

எனவே இனி எந்த வெளியீட்டுக்கும் காந்திகிராம அறக்கட்டளையை நாடுவதில்லை என்ற உறுதி மேற்கொண்டு மிகவும் நல்ல முறையில், நேர்த்தியாக, சுமார் முப்பதாயிரம் ரூபாய் என் சொந்தப் பணத்தில் செலவு செய்து மூன்றாம் பதிப்பு ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு பிரதி ரூ.75/- என்ற விலையிலும் மொத்தமாக 100 பிரதிகள் வாங்குபவர்களுக்கு ரூ.40/- என்ற விலையிலும் விற்று வருகிறேன். 2010ல் மூன்றாம் பதிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகளில் சுமார் 500 பிரதிகள் விற்றது போக இப்போது சுமார் 400 பிரதிகள்  கையிருப்பில் உண்டு. இதன்பின் நான் இயற்கை விவசாயம் தொடர்பாக எழுதியுள்ள பல நூல்கள் சில மறுபதிப்புகள் எல்லாம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மூலம் வெளிவந்தன.

சுரபாலரின் முதல் 34 பாடல்களில் வன அழகுடன், வகைவகையான மரங்களின் நடவைப் பற்றியும் எவற்றை எங்கே, எப்போது நட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மரங்களே வாழ்வின் சொர்க்கம் என்று கூறும் சுரபாலர்,

“இன்பத்தை நாடும் ஒரு மன்னருக்கு இளமையும் வனப்பும் உடற்கட்டும் உள்ள எழில் மங்கையரும், மெல்லிசையும் அறிவுள்ள நண்பர்களும் உடன் இருப்பினும், இன்பங்களை அள்ளித் தரும் இனிய வனம் இல்லையெனில் மேற்கூறியவையும் இல்லாதது போல இன்பம் இல”

என்கிறார்.

“பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம்.
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்.
பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்.

பத்து புத்திரர்கள் ஒரு மரத்துக்குச் சமம்”

என்றும் சொல்கிறார். அதாவது ஒரு மரம் நட்டு வளர்ப்பது 10000 கிணறுகள் வெட்டுவதற்குச் சமம். மரங்கள் நடுவதன்மூலம் நிறைய மழையை ஈர்க்கலாம் என்பது உட்பொருள்.

பாடல்கள் 35லிருந்து 44 வரை நிலம், மண் பற்றிய விவரங்களை வர்ணிக்கின்றன.

நிலத்தின் அடிப்படை வேற்றுமைகள் மூன்று. சதுப்பு நிலம், வறட்சி நிலம், சாதாரண நிலம் என்று பிரித்துள்ள சுரபாலர் மண்ணின் நிறம் மற்றும் ருசியைப் பொருத்து 12  வகைகள் என்கிறார். முவ்வகை நிலத்துக்கு ஏற்றாற்போல் மொத்தம் 36 வகைப்பட்டதாக மண்வளத்தைப் பிரிக்க முடிகிறது. மண்ணின் ஆறு நிறங்களாவன : கருப்பு, வெள்ளை, வெளிர், கரிநிறத்துக் கருமை, செம்மை, மஞ்சள். அறுசுவையான இனிப்பு, புளிப்பு, உப்பு, உரைப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகியவை மண்ணின் குணங்கள்.

வன வளர்ப்புக்கு உகந்த இடம் எது என்றால் அதற்கு ஒரு பாடல். “நீல நிற மாணிக்க ஒளியும், கிளிச்சிறகின் மென்மையும், வெண்சங்கு, மல்லிகை, வெண்தாமரையை ஒத்த வெண்மையும் சந்திர ஒளி, புடம் போட்ட தங்கம், அன்றலர்ந்த சம்பக மலரை ஒத்த மஞ்சளும் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” (பாடல் 38).

எப்படிப்பட்ட மண்வகைக்கு எந்த மரங்களை நடலாம் என்ற குறிப்பும் உள்ளது. வனம் வளர மன்னர்/ அரசு ஆதரவு வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், “செல்வமும், சூழல் பொருத்தமும், அரசின் ஆதரவும் இருந்தால் எந்த இடத்திலும் எவ்வகை மரத்தையும் முழு கவனிப்புடன் நட்டு வளர்க்க முடியும்” (பாடல் 44) என்கிறார்.

தாவரங்களின் இனப்பெருக்க நுட்ப விவரங்களையும் விதை நேர்த்தி பற்றியும் 45 முதல் 59 வரை 15 பாடல்களில் விளக்கம் உண் 46, 47 பாடல்களில் வனஸ்பதி என்ற சொல்லுக்குப் பொருள் கிடைக்கிறது.

பூக்காமல் காய்ப்பது வனஸ்பதி
பூத்துக் காய்ப்பது த்ருமா
படரும் கொடி லதா
அடர்ந்து மண்டுவது குல்மா”

வனஸ்பதி என்றால் பூக்காமல் விதை தோன்றும் மலர்கள். பசு இல்லாமல், பால் இல்லாமல், தாவர் எண்ணெய்களைக் குளிர வைத்து செயற்கை எண்ணெயான டால்டாவுக்கு ‘வனஸ்பதி’ என்ற பெயர் ஏன் வந்தது என்று புரிந்ததா? த்ருமா – பூக்கும் அழகு மரங்கள். குல்மா என்றால் நடுமரம் வளராமல் கிளைவிட்டுப் படரும் புதர்த் தாவரங்கள்.

பாடல் 60 முதல் 100 வரை வனங்களை வடிவமைத்தல் மற்றும் மரநடவு பற்றிய தொழில்நுட்பங்களை விண்டுரைக்கின்றன. மரங்களுக்கு இடையே எவ்வளவு இடைவெளி விட வேண்டும் என்பதைப் பாடல் 64 இவ்வாறு சொல்கிறது – “இரு மரங்கள் நடுவே 14 முழ இடைவெளி விட்டால் அதமம். 16 முழம் விட்டால் மத்திமம். 14 முழம் விட்டால் உத்தமம்”.

vedicfarm3வனம் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது? வனம் என்றால் இயற்கையாக வளர்ந்துள்ள காட்டையும் குறிக்கும். செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களையும் குறிக்கும். காம சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்யான வனம். பிரமோத்யாய வனம், விருட்சவாடிக வனம், நந்தவனம் என்பன பூங்காக்களே. இப்படிப்பட்ட வனங்களை வடிவமைப்பதில் எவையெல்லாம் முக்கியமானவை என்பதை 95, 98 பாடல்கள் தெளிவாக்குகின்றன: “மண்டபம், நந்தியாவர்த்தம், ஸ்வஸ்திகம், சதுரஸ்ரம், சர்வதோபத்ரம், விதி, நிகுஞ்சம், புஞ்சகா. அதாவது, வனத்தின் நடுவே மண்டபம் – மனிதர்கள் உட்கார, உரையாட. நந்தியாவர்த்தம் என்றால் செவ்வக வடிவிலான மேற்கு வாயில். ஸ்வஸ்திகம் என்றால் சமயச் சிறப்புள்ள தாந்திரிக வடிவம். சதுரஸ்ரம் என்றால் சதுரம். சர்வதோபத்ரம் என்றால் சதுரத்தில் வட்டம். விதி என்றால் நேர்வரிசை. நிகுஞ்சம், புல்வெளி. புஞ்சகா, அடர்ந்த புல்மரங்கள், அடவி.

பாடல் 101லிருந்து 164 வரை குணபஜலம், உயிர் ஊட்டம், நீர் வேளாண்மை பற்றிய விவரங்கள். உயிர் உரங்களை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சுரபாலர் கண்டுபிடித்துள்ளார். நுண்ணுயிரி திரவ உரமே குணபஜலம் என்று குறிப்பிடப்படுகிறது. பாடல் 165லிருந்து 292 வரை நூல் தலைப்புக்குப் பொருத்தமான ஆயுர்வேத மருந்துகள் எல்லா வகையான பயிர் நோய்களுக்கும் வழங்கப்பட வேண்டிய முறைகளைக் கூறுகிறது. மிகவும் அடிப்படையாக நோய்க்குறிகளை ஆங்கிலத்தில் Abiotic, biotic என்று உள்ளதை வெளிக்காரணி, உட்காரணி என்று சுரபாலர் வேற்றுமைப்படுத்தி வகுத்துள்ளார்.

இவற்றில் வெளிக்காரணிகளாவன: வெப்பம், பனி, குளிர், காற்று, நெருப்பு, மின்னல், மரத்தில் கத்திக் காயம், நிழல், அதிக நீர், அதிகக் காய்ச்சல். உட்காரணிகளாவன: வாதம், பித்தம், கபம். மனிதர்களுக்கு மட்டுமல்ல, பயிர்களுக்கும் மரங்களுக்கும் அதே பிரச்சினை உண்டு. அதை எப்படி குணப்படுத்துவது என்ற விளக்கங்களும் உண்டு.

மொத்தம் 325 பாடல்கள் விருட்சாயுர்வேதத்தில் உள்ளன. 293லிருந்து 325 வரை அழகிய தோட்டங்கள், நீரோட்டம் பார்ப்பது, மரங்கள், பயிர், மிருகம், பருவநிலை அடையாளங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

ஒரு கலைப்படைப்பை எவ்வளவு நேர்த்தியாக வழங்க முடியுமோ, அந்த அளவில் முயன்று நிறைய இணைப்புகள் குறிப்புகளுடன் இந்நூலை வழங்கியது எனக்கு நிறைவளித்தது. ஒரு கலைப்படைப்புக்குச் சன்மானமாக பணம் வருவது மகிழ்ச்சியான விஷயமே. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு காந்திகிராம பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் பதிப்புக்கு டி.வி.எஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர் ஒருவர், கோவை விவசாயக் கல்லூரியின் விவசாயத்துறை முன்னாள் டீன் முதலானவர்கள் வழங்கிய பாராட்டுகள் மறக்க முடியாதவை. அவர் மூல நூலைப் படித்தவர். சமஸ்கிருதம் அறிந்தவர். “நான் மூல நூலில் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசித்தேன். உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பையும் படித்தேன். ஆங்கிலத்தை விடவும் உங்கள் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது,”என்று கூறியதுடன், தான் பணியில் இருந்தபோது இந்த நூல் எழுதப்பட்டிருந்தால், விருட்சாயுர்வேத ஆராய்ச்சிக்காக இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கி ஏராளமான ஆய்வுகள் செய்திருப்பேன் என்றும் கூறினார். அது எதுவும் நடக்காவிட்டாலும்கூட நூற்றுக்கணக்கான விவசாயிகள் விருட்சாயுர்வேத நூலை வாங்கி அதன் நுட்பங்களைத் தங்கள் தோட்டத்தில் பயன்படுத்தி நன்மை கண்டுள்ளனர்.

நூல் பற்றிய விவரங்களை Y.L. Nene, Asian Agri Hist Foundation, Secundrabad என்ற அஞ்சல் முகவரியிலும் ymene@satyam.net.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விசாரித்து அறியலாம்.

0 Replies to “சுரபாலரின் விருட்சாயுர்வேதம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.