'சச் நாமா'

இந்தியத் துணைக் கண்டத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் நிகழ்ந்த பேரழிவுகளுக்கு இணையான பேரழிவு இன்றுவரை உலகில் வேறெங்கும் நிகழவில்லை. இஸ்லாமியப் படையெடுப்புகளின் தொடக்கப்புள்ளி பின்-காசிம் சிந்து சமவெளியைக் கைப்பற்றுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. பின்-காசிமின் வெற்றிகளைக் கூறும் ‘சச் நாமா’விலிருந்து சுருக்கமான நிகழ்வுகள் இங்கு எடுத்தெழுதப்பட்டுள்ளன. இங்கு காணும் தகவல்கள் ‘சச் நாமா’வின் தகவல்களேயன்றி எனது சொந்தச் சரக்குகள் அல்ல என்று தெளிவுபடுத்த விழைகிறேன்.

oOo

Sindh, 700 AD (Cacha Dynsty)

இஸ்லாமின் ஸ்தாபகரான முகமது நபியவர்கள் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘சிந்த் மற்றும் ஹிந்த்’ பகுதிகளைக் கைப்பற்ற விழையும் அராபியர்களின் முயற்சி துவங்கிவிட்டது. கி.பி. 634-இலிருந்து 710 வரையிலான ஏறக்குறைய அறுபதாண்டுகளுக்கும் மேலான இப்படையெடுப்புகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. முகமது நபியவர்களின் பின்னர் வந்த இரண்டாம் கலிஃபா வரை இம் முயற்சி தொடர்வதைக் காணலாம். ஆனால் பின்-காசிம் வெல்லும் வரை அராபியர்களுக்கு இந்தியத் துணைக்கண்டம் எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு, இஸ்லாமை உலகெங்கும் பரப்பும் நோக்குடன் அரேபியப் படையணிகள் உலகின் பல பகுதிகளை நோக்கிப் புறப்பட்டன. புதிய மதத்தின் உபதேசங்களை உத்வேகத்துடன் பின்பற்றிய அந்தப் படையணிகளின் முன் கிழக்கிலும், மேற்கிலுமிருந்த பல ராஜ்ஜியங்கள் வீழ்த்தப்பட்டு அங்கே இஸ்லாம் ஸ்தாபிக்கப்பட்டது. கி.பி. 710-இல் மேற்கில் ஸ்பெயின் ஆக்கிரமிக்கப் பட்ட அதே நேரத்தில், இன்னொரு அரபு இஸ்லாமியப் படையணி கிழக்கில் பாரசீகத்தைத் தாண்டி இந்து-பவுத்த கலாச்சாரத் தொட்டிலாயிருந்த சிந்து சமவெளிவை வந்தடைந்தது.

ஆனால் சிந்து அத்தனை எளிதில் வீழ்ந்து விடவில்லை. அரேபியர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது. இப் படையெடுப்புகளின் நோக்கம் ‘சிந்த் மற்றும் ஹிந்த்’தின் அளப்பறிய செல்வங்களைக் கொள்ளையடிப்பதேயன்றி இஸ்லாமை ஸ்தாபிப்பதற்காக இல்லை என்று ‘சச் நாமா’ கூறுகிறது. மேலும் தங்களின் கடந்த கால தோல்விகளுக்குப் பழிவாங்கும் ஒரு நோக்கமாகவும், செல்வங்களைக் கொள்ளையடிப்பதுடன் கைப்பற்றிய பகுதி மக்களிடம் வரி வசூல் செய்வது, பெண்களைக் கவர்ந்து செல்வது மற்றும் அடிமைகளைப் பிடித்து அரேபியாவிற்கு அனுப்புவது போன்றவையே என ‘சச் நாமா’ மேலும் விவரிக்கிறது.

சிந்து சமவெளியின் மீதான தாக்குதல் இராக்கிலிருக்கும் குஃபா (Kuffa) வின் ஆளுநரான ஹஜாஜின் (Hajjaj) நேரடி மேற்பார்வையில் நடந்தது. சிந்துப் பகுதிப் போரில் தோற்கடிக்கப்பட்ட சிந்து அரசரின் தலையும், அறுபதினாயிரம் அடிமைகளும், அரச கஜானாவில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தில் ஐந்திலொரு பாகமும் ஹஜாஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட ஹஜாஜ் இறைவனுக்கு நன்றி கூறும் முகமாக தன்னுடைய நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்து, “இனி இப்பூவுலகின் அனைத்து செல்வங்களும், அது பூமியின் கீழிருந்தாலும் அல்லது மேலிருந்தாலும், அவையனைத்தும் இனி தனக்கே சொந்தமாகும்” என்று கூறியதாகவும் தெரிகிறது.

குஃபா நகரத்தின் மத்தியிலிருந்த மசூதிக்கு தனது குடிமக்கள் அனைவரையும் அழைத்த ஹஜாஜ் அவர்களிடம் சிந்து வெற்றியைக் கூறி, “இறைவன் அருளால் நமக்கு அளவற்ற செல்வம் இவ்வெற்றியின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதற்கு நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம்” என வெற்றியைக் கொண்டாடினார். மேலும் கைப்பற்றப்பட்ட பகுதியிலிருந்த மக்கள் இஸ்லாமைத் தழுவுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை எனவும் அறிவிக்கப்பட்டது. இனி அவர்கள் அராபியர்களின் அடிமைகள் என்றார் ஹிஜாஜ்.

(பிற்காலத்தில் ஸ்பானிஸ் கன்கஸ்டடோர்கள் மெக்ஸிகோவையும், பெருவையும் கைப்பற்றி ஆட்கொண்டபோது ஏறக்குறைய அராபியர்களைப் போலவே நடந்து கொண்டது இங்கு கவனிக்கத் தக்க ஒரு அம்சம். முன்பே கூறியபடி, சிந்து வெல்லப்பட்ட அதே நேரத்தில் ஸ்பெயினும் வெல்லப்பட்டது. இது நடந்து எண்ணூறு வருடங்களுக்குப் பிறகு ஸ்பானியர்கள் அரேபியர்களைப் போலவே கண் மூடித்தனமான மதப்பற்றுடனும், மனிதாபிமானம் சிறிதும் இல்லாத பேராசைக்காரர்களாகவும் இருந்தனர். தென் அமெரிக்காவில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தின் ஐந்திலொரு பாகம் ஸ்பானிய அரசருக்கு அனுப்பி வைக்கப்ட்டது போன்றவை தங்களை வென்ற அராபியர்களைப் பின்பற்றி நடந்தவையே)

‘சச் நாமா’ மீண்டும் மீண்டும் அராபிய வெற்றியின் அற்புதத்தைப் பற்றிக் கூறுகிறது. சிந்து கைப்பற்றப்பட்டு ஏறக்குறைய 500 ஆண்டுகள் கழித்து (1216) பார்சி மொழியில் எழுதப்பட்ட நூல் ‘சச் நாமா’. அதன் மூலம் அரபி மொழியில் எழுதப்பட்டு, சிந்து வெற்றியின் காரணகர்த்தாவான பின்-காசிம் குடும்பத்தாரால் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த தகவல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. சிந்து சமவெளியின் வெற்றியுடன் கோரசான், அஜாம் (பாரசீகம்), இராக், ஹாம் (சிரியா), ரும் (பைசாண்டினியம்) மற்றும் ஹிந்தின் வெற்றியைக் குறித்தும் பேசுகிறது. உன்னதமான இஸ்லாமியக் கோட்பாட்டை உலகமெங்கும் பரப்பிய வெற்றிகள் குறித்து ‘சச் நாமா’ பெருமிதம் கொள்வதை மீண்டும், மீண்டும் காணலாம்.

சிந்து சமவெளியை ஆண்ட மன்னர்களின் குறிப்புடன் ஆரம்பிக்கும் ‘சச் நாமா’ அது எவ்வாறு அராபியர்களால் வெல்லப்பட்டது என்பதைக் குறித்து விரிவாக விளக்குகிறது. அதேசமயம், சிந்து சமவெளியைக் குறித்தான தகவல்கள் புனை கதைகளைப் போல, நம்பகத்தன்மைக் குறைவுடன், நாட்கள், வருடங்கள் குறித்த தகவல்கள் அதிகமில்லாமலும் எழுதப்பட்டிருப்பட்டிருப்பது தெளிவு.

India_Islam_Mosques_Chachnaam_Muhammad_Bin_Quasim_Muslims_attacks_Hindus_Sindhu_Sind

‘சச் நாமா’வின்படி சிந்து அரச பரம்பரையானது ‘சச்’ என்பவரால் துவங்கப்பட்டது. இந்த ‘சச்’ என்பவர் ஒரு பிராமணர். அவர் வாழ்ந்த ஊரிலிருந்த கோவிலில் அவரது சகோதரருடன் வாழ்ந்த ‘சச்’ கல்வி ,கேள்விகளில் சிறந்தவர். உயரமும், அழகும் பொருந்திய ‘சச்’ ஒருநாள் அந்நாட்டு அரசரிடம் சென்று தனது தகுதிகளைக் கூறி, தனக்கு ஒரு வேலை கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். அரசர் அவரது அரண்மனை நிர்வாக அதிகாரிக்கு உதவியாளராக அவரை நியமித்திருக்கிறார். அந்த நிர்வாகி இறந்த பின் ‘சச்’ அரண்மனை நிர்வாகியா மாறுகிறார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு முதல் அமைச்சராக பதவி உயர்வு பெற்று அரசருக்கு வலது கரமாக செயல்பட்டிருக்கிறார்.

இப்படியிருக்கையில் ஒருநாள் வெளியார் யாரும் நுழையவியலாத அரசரின் அந்தப்புரத்திற்குச் செல்லும் வாய்ப்பு ‘சச்’சிற்குக் கிட்டுகிறது. ஆண்மையின் மொத்த உருவமாகத் திகழ்ந்த ‘சச்’சினைக் கண்டு மஹாராணி காதல் கொள்கிறாள். அவனைக் காமத்துடன் அணுகும் அரசியைக் கண்டு அச்சம் கொள்ளும் ‘சச்’ அவளிடம், “அரசன், நெருப்பு, காற்று மற்றும் நீர் ஆகிய நான்கிடமும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்” என தனக்குக் கற்பிக்கப்பட்டிருப்பதாயும் எனவே மஹாராணி தன்னை மறந்து விடவேண்டும் எனவும் கூறுகிறான். ஆனால் காமபோதை தலைக்கேறிய அரசி ‘சச்’சினை தினமும் ஒருமுறையாவது பார்க்கும் பாக்கியத்தைத் தரவேண்டும் என மன்றாடுகிறாள். இறுதியில் ‘சச்’ மஹாராணியின் அந்தரங்க காதலனாக மாறுகிறான். அரசனுக்கு அடுத்தபடியாக சிந்து சமவெளியில் வலிமை வாய்ந்த மனிதனாக மாறுகிறான் ‘சச்’.

சில காலம் கழித்து அரசர் நோய்வாய்ப்பட்டு மரணத்தருவாயிலிருக்கிறார். அவருக்குப் பின் அரசாள வாரிசுகள் எதுவும் இல்லாத நிலையில், தன்னை அரசரின் உறவினர்கள் கொன்றுவிடுவார்கள் என அஞ்சுகிறாள் அரசி. எனவே ‘சச்’சின் துணையுடன் அதனை முறியடிக்கத் திட்டமிடுகிறாள். அதன்படி ஐம்பது சங்கிலிகள் அரண்மனைக்குள் ரகசியமாக கொண்டுவரப்படுகிறது. அரசர் மரணமடைகிறார். அவர் மரணச் செய்தி வெளியில் பரவாமலிருக்க மருத்துவர்களை சிறையிலடைக்கிறாள் அரசி. பின் அரசிற்கு உரிமை கொண்டாடக் கூடிய வாரிசுகளை ஒருவர் பின் ஒருவராக அரண்மனைக்குள் அழைத்து அவர்களைச் சிறையில் இடுகிறாள்.

அதன் பின்னர் வறுமையில் வாடும் அரசரின் உறவினர்களை அழைத்து அவர்களை சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அரச குல வாரிசுகளைக் கொல்லும்படி உத்தரவிடுகிறாள். அவ்வாறு செய்தால் கொல்லப்பட்ட பணக்கார வாரிசுகளின் செல்வம் முழுவது அவர்களுக்கே கொடுக்கப்படும் என ஆசை காட்டப்பட்டு அதன்படியே நடந்து முடிகிறது. அதைத் தொடர்ந்து அரசர் ‘சச்’சை தனது வாரிசாக நியமித்திருப்பதாக ஒரு செய்தி நாடு முழுவதும் பரப்பப்பட்டு, அதன் பின்னர் அரசர் மரணம்டைந்த செய்தியும் அறிவிக்கப்படுகிறது. இப்படியாக ‘சச்’ சிந்து முழுமைக்கும் அரசனாகிறான்.

ஆனால் இறந்த அரசனின் சகோதரனான பக்கத்து நாட்டு அரசன் அதனை ஏற்க மறுத்து ‘சச்’சின் நாட்டிற்குப் படையெடுக்கிறான். போர்க்களத்தில் ‘சச்’சை தன்னுடன் ஒற்றைக்கு ஒற்றை குதிரை மீதேறி சமர் புரிய வரும்படி அழைக்கிறான். ஆனால் ‘சச்’சோ தானொரு பிராமணன் என காரணம் காட்டி, தன்னால் குதிரை மீதேறி போரிட இயலாது என மறுக்கிறான். இதனைக் கேட்டு தரையில் இறங்குகிறான் இறந்த அரசனின் சகோதரன். இந்த நேரத்தில் மின்னல் வேகத்தில் குதிரை மீது தாவியேறும் ‘சச்’ எதிரியின் தலையை வாளால் துண்டித்துக் கொல்கிறான். இப்படியாக ‘சச்’சின் ராஜ்ஜியம் மேலும் விரிவடைகிறது.

இதன் பின்னர் ‘சச்’ நாற்பதாண்டுகள் சிந்து சமவெளியை ஆள்கிறான். மஹாராணி என்ன ஆனாள் என்பதற்கான குறிப்புகள் எதுவும் ‘சச் நாமா’வில் இல்லை. முதன்முதல் அராபிய படையெடுப்பு ‘சச்’சின் காலத்திலேயே நிகழ்கிறது. அரபியர்கள் கடல் வழியே வந்து டிபால் (Debal) துறைமுக நகரை (இன்றைய பாகிஸ்தானின் Bandhpore ஆக இருக்கலாம்) தாக்குகிறார்கள். ‘சச்’ அராபிய படையெடுப்பை முறியடித்து வெற்றி கொள்கிறான்.

‘சச்’சின் மரணத்திற்குப் பிறகு ‘சச்’சின் சகோதரன் சிந்து சமவெளி அரசனாகிறான். அதன் பின்னர் ‘சச்’சின் மகனான தஹார் (Dahar) அரசனாகிறான். தஹாரின் காலத்திலேயே சிந்து அராபியர்களால் வெற்றி கொள்ளப்படுகிறது.

oOo

தஹார் ஒருநாள் தனது நாட்டிலிருக்கும் ஒரு அற்புதமான சோதிடரைக் குறித்து கேள்விப்படுகிறான். அவரைக் காண தனது பட்டத்து யானையின் மீதேறிச் செல்கிறான் தஹார். அவரது எதிர்காலத்தைக் கணித்த சோதிடர், தஹாருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறுகிறார். அதே சமயம் அவரது சகோதரியால் அவருக்கு உண்டாகக் கூடிய ஆபத்துக்களைக் குறித்தும் தஹாருக்கு விளக்கிச் சொல்கிறார். எதிர்வரும் காலத்தில் யார் தஹாரின் சகோதரியை மணக்கிறார்களோ அவரால் தஹாருக்கு பேராபத்து நிகழவிருப்பதாகவும், அவனே தஹாரைக் கொன்றுவிட்டு இந்த நாட்டை ஆள்வான் என்கிறார் சோதிடர்.

இதைக் கேட்டு தஹார் கவலையில் ஆழ்கிறான். அருகிலிருக்கும் அமைச்சர் (பவுத்தர்) தஹாருக்கு ஒரு யோசனையைச் சொல்கிறார். ஒரு அரசனின் முதல் கடமை அவனது மணிமுடியைக் காத்துக் கொள்வதே; எனவே தஹார் தனது சகோதரியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர். இதனைக் கேட்டு தஹார் அதிர்ச்சியடைகிறான்.

அதனைத் தொடர்ந்து உலகின் ஐந்து மிக மோசமான தோற்றங்கள் (sorry look) குறித்து தஹாருக்கு விளக்குகிறார் அமைச்சர். ஒன்று, சமூகத்தில் தனது இடத்தை இழப்பவன். இரண்டு, தனது ராஜ்ஜியத்தை இழந்த அரசன் மற்றும் தனது பதவியை இழந்த அமைச்சன். மூன்று, சீடர்களை இழந்த குரு. நான்கு, கொட்டிய தலைமுடியும், விழுந்த பல்லும். ஐந்து, வயதானதால் தொங்கிய பெண்ணின் முலைகள் என இவ்வைந்தும் மிக உலகில் மோசமான தோற்றம் கொண்டவை. எனவே அரசர் தனது மணிமுடியைக் காத்துக் கொள்ள அவரது சகோதரியைத் திருமணம் செய்து கொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்று வலியுறுத்துகிறார் அமைச்சர்.

இருப்பினும் தஹார் தனது குடிமக்கள் தன்னைப் பற்றித் தவறாக நினைக்கக்கூடும் என்று கூறி அமைச்சரின் ஆலோசனையை நிராகரித்துவிட்டு அரண்மனைக்குத் திரும்புகிறார். மனந்தளராத அமைச்சர் தனது இருப்பிடத்திற்குச் சென்று, அங்கிருந்த ஒரு செம்மறி ஆட்டைப் பிடித்து, அதன் மீது மணலைத் தூவி அதனுடன் கடுகு விதைகளையும் தூவி நீர் விடுகிறார். சிறிது நாட்களில் கடுகு விதைகள் நன்கு முளைத்து ஆடு முழுவதும் பச்சைப் பசேலென காட்சியளிக்க ஆரம்பிக்கிறது. அமைச்சர் அந்த ஆட்டை ஊருக்கு நடுவில் விரட்டி அனுப்ப, அந்த அதிசயத்தைக் காண ஊரே கூடுகிறது. ஆனால் சிறிது நாட்களில் அலைந்து திரியும் அந்த ஆட்டினை பொது மக்கள் ஒருவரும் பொருட்படுத்தாமல் தங்கள் போக்கில் செல்கின்றனர்.

இதனை அரசனுக்குச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவரிடம், ‘அரசனே, உலகில் எது நடந்தாலும், அது நல்லதானாலும் அல்லது கெட்டதானாலும், மக்களின் நாக்கு மூன்று நாட்களுக்கு மட்டுமே சுழன்றடிக்கும். அதன்பிறகு யாரும் எதனைக் குறித்தும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே நீர் உமது சகோதரியுடனான திருமணத்தை உடனே நடத்துக’ என்று கூறுகிறார். தஹாரும் வேறு வழியின்றி தனது சகோதரியை திருமணம் செய்து கொள்கிறார்.

‘சச் நாமா’ இதனை உலகியலின் மிக மோசமான உதாரணமாகக் கூறி, தஹார் இனி சிந்து சமவெளியை ஆளும் தகுதியை இழக்கிறார் என்று கூறுகிறது. இவ்விதமான துர் நடத்தையுள்ள அரசன் இருக்கும் நாடு முன்னேற்றம் அடையாது. எனவே தஹார் உடனடியாக அரச பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்கிறது ‘சச் நாமா’.

இந்த இடத்திலிருந்து ‘சச் நாமா’ அரேபியாவை நோக்கித் திரும்புகிறது. அதன் எழுத்து நடை மாறுகிறது. அரபு வரலாற்று விளக்கப் பின்னனியுடன் (இன்னார் மகனான இன்னார் சொல்லக் கேட்டு, இன்னார் தகப்பனின் மூலமாக இன்னார் எழுதியது….), மிக ஒழுங்கும், கட்டுப்பாடும் கூடிய ஒரு சமூகத்தில், சட்டத்தை மதித்து நடக்கும் மக்களுடன், எத்தனை புகழும், செல்வமும், வலிமையும் கொண்டவராக இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இலட்சியத்தை நோக்கிச் செல்லக்கூடியவர்களாக அரபிக்களின் சித்திரத்தை நமக்களிக்க எத்தனிக்கிறது. அங்கே, படை வீரர்கள் படைத் தலைவருக்கு அடிபணிகிறார்கள்; படைத் தலைவர் ஆளுநருக்கும், ஆளுநர் கலிஃபாவிற்கும், பின் அனைவரும் இறைதூதருக்கும், இறைவனுக்கும் அடிபணிகிறார்கள்.

oOo

Muhammad_Bin_Kasim_Quasim_Warriors_Islam_Hindustan_India_Guptas_Muslim_Caliphate

‘சிந்த் மற்றும் ஹிந்த்’தை வெற்றி கொள்ள மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு படையெடுப்புகள் தோல்வியில் முடிவடைந்த பிறகு, மூன்றாவது கலிஃபாவான உஸ்மான் (அல்லது ஒத்மான் – கி.பி. 644-56), அப்படையெடுப்பு குறித்த அத்தனை தகவல்களையும் தனக்குத் தெரிவிக்கும்படி அவரது படைத் தலைவர்களுக்கு ஆணையிடுகிறார். அதாவது போரின் நடைமுறை சட்ட திட்டங்கள், போர் உபாயங்கள், சிந்துப் பிரதேச அரசாங்க நடைமுறைகள், அங்குள்ள சமுதாய கட்டமைப்பு போன்ற தகவல்களை அவருக்கு அளிக்கப் பணிக்கிறார்.

அந்த உத்தரவு அப்துல்லாவிற்குப் போகிறது. அப்துல்லாவிடமிருந்து ஹக்கீமுக்கு. ஹக்கீம் சிந்து குறித்து தானறிந்த தகவல்களை அப்துல்லாவிற்குக் கூறுகிறார். அந்தத் தகவல்களைக் கேட்ட அப்துல்லா மிகவும் மகிழ்ந்து ஹக்கீமை நேரடியாக கலிஃபாவிடம் அழைத்துச் செல்கிறார்.

கலிஃபா ஹக்கீமை நோக்கிக் கேட்கிறார், ‘ஓ ஹக்கீம், நீ ஹிந்துஸ்தானத்தைப் பார்த்து அது குறித்தான எல்லாத் தகவல்களையும் அறிந்து வைத்திருக்கிறாயா?’

“நம்பிக்கையாளர்களின் தலைவரே, ஆம்; நான் அத்தகவல்களை நன்கறிவேன்” என பதிலளிக்கிறார் ஹக்கீம்.

“எனில் அத்தகவல்களை எனக்குக் கூறுவாயாக”

“ஓ கலிஃபா, ஹிந்துஸ்தானத்தின் தண்ணீர் கருமையுடன் அழுக்கு நிறைந்ததாகும். அங்கு விளையும் கனிகள் கசப்புச் சுவையுடன் கூடிய விஷத்தன்மை கொண்டவை. அந்நிலம் கல்லும், கரடும் நிறைந்து உப்புக் கரிக்கும் தன்மையுடையது. ஒரு சிறிய படையணியால் ஹிந்துஸ்தானத்தில் தாக்குப் பிடிக்கவியலாது. பெரிய படையணிகளுக்கு உணவு கிடைக்காமல் பட்டினியால் செத்துப் போவார்கள்” என்கிறார் ஹக்கீம்.

“அங்கிருக்கும் மக்கள் எப்படிப் பட்டவர்கள்? நம்மைப் போன்ற நம்பிக்கையாளர்களா அல்லது காஃபிர்களா?”

“ஓ கலிஃபா, ஹிந்துஸ்தானத்து மக்கள் அயோக்கியர்கள், ஏமாற்றுக்காரர்கள்” என பதில் வருகிறது ஹக்கீமிடமிருந்து.

இத்தகவல்களைக் கேட்ட கலிஃபா ஆர்வமிழந்து, சிந்துவின் மீதான படையெடுப்புகளைத் தடை செய்கிறார்,.

ஆனால் பிற்காலத்திய கலிஃபாக்களின் காலத்தில் சிந்துப் படையெடுப்பின் மீதான ஆர்வம் மீண்டும் தலையெடுக்கிறது. இதன்படி சிந்துவின் மீதான ஏழாவது படையெடுப்பு சினான் என்பவர் தலைமையில் நடக்கிறது. இந்த சினான் முகமது நபி வாழ்ந்த காலத்தில் பிறந்தவர் எனவும், அவரது பெயரைச் சூட்டியவர் முகமது நபியே எனவும் கூறப்படுகிறது. முகமது நபி, சினானின் தகப்பனாராகிய சல்மா (Salmah) என்பவரை நோக்கி, “ஓ சல்மா, உனக்கு மகன் பிறந்ததற்கு வாழ்த்துகிறேன்” என்று சொன்னதாகத் தெரிகிறது.

சிந்து படையெடுப்பின் போது முகமது நபி சினானின் கனவில் வந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் சினான் அப்படையெடுப்பின்போது கொல்லப்பட்டார். அதற்குப் பின் நடந்த இரண்டு படையெடுப்புகளும் தோல்வியிலேயே முடிவடைந்து, பல அராபியர்கள் கைதிகளாக பிடிபட்டனர். சிந்து மக்களை வெல்வது அராபியர்களுக்கு மிக எளிதான ஒன்றாக இருக்கவில்லை.

oOo

ஏழாவது நூற்றாண்டின் இறுதியில் ஹஜாஜ் இராக்கின் ஆளுநராகிறார். சிந்துவின் மீது படையெடுக்கும் ஆர்வம் கொண்டவரான ஹஜாஜின் ஆரம்ப காலம், குஃபா மற்றும் ஏனைய இராக்கியப் பகுதிகளில் நிழந்த மத-இன மோதல்களை ஒடுக்குவதில் கழிகிறது. பின்னர் ஒரு படையணியை சிந்துவை நோக்கி அனுப்பி வைக்கிறார். சிந்து அரசன் தஹார் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களை ஊக்குவிக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன்.

ஆனால் ஹஜாஜின் படை தஹாரின் மகனால் தோற்கடிக்கப்படுகிறது. அரேபிய படையணித் தலைவர் கொல்லப்பட்டு ஏராளமான அராபியர்கள் சிறைக் கைதிகளாக பிடிக்கப்படுகிறார்கள். எனவே அப்போதைய கலிஃபா சிந்துவைக் கைப்பற்றும் எண்ணத்தில் ஆர்வமிழந்து போகிறார். சிந்து மிகத் தொலைவில் இருக்கும் ஒரு நாடு; அதன் மக்கள் மிகுந்த தந்திரசாலிகள்; மேலும் போருக்கு ஏராளமாக செலவாகிறது மட்டுமல்லாமல் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தனது முடிவிற்கான காரணத்தை ஹஜாஜிற்குத் தெரிவிக்கிறார் கலிஃபா.

இருப்பினும் தனக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தைத் தரவேண்டும் என்று கலிஃபாவிடம் மன்றாடுகிறார் ஹஜாஜ். இம்முறை தான் போரில் வெற்றிகண்டு, இதுவரை கலிஃபாவிற்கு ஆன செலவை விடவும் இரண்டு மடங்கு செல்வத்தை கஜானாவிற்குச் செலுத்துவதாக வாக்களிக்கிறார் ஹஜாஜ். கலிஃபா அரை மனதுடன் அதனை ஏற்றுக் கொள்கிறார். சிந்துவின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றுவதற்கான உத்தரவை எழுத்து மூலம் ஹஜாஜிற்கு அளிக்கிறார் கலிஃபா.

ஹஜாஜ், சிரியாவைச் சேர்ந்த, பல போர்களில் அனுபவம் கொண்ட ஆறாயிரம் படைவீரர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அதற்குத் தலைமை தாங்க, பதினேழு வயதான தனது மருமகனான முகமது-பின்-காசிமை நியமிக்கிறார். போருக்குத் தேவையான அத்தனை ஆயத்தங்களையும் தானே முன்னின்று கண்காணித்து தயார் செய்கிறார் ஹஜாஜ்.

இம்முறை படையணி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. படையணியின் பெரும்பகுதி தரைவழியாகவும், மற்றொரு பகுதி கடல் வழியாகவும் செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. தரைப்படைகளுக்குத் தேவையான தளபாடங்கள் ஒட்டகங்களின் மீது ஏற்றப்படுகின்றன. ஒவ்வொரு படைவீரனுக்கும் நான்கு ஒட்டகங்கள் வீதம் வழங்கப்படுகிறது. நெருப்பை உமிழும் நாஃதா அம்புகளும், கோட்டைக் கதவுகளை உடைத்துத் திறக்கும் ஆயுதங்களும், பாறாங்கற்களை நீண்ட தூரம் எறியும் Catapult-களும் (பீரங்கியின் முன்னோடி. கிரேக்கப் போராயுதம். அதனை இயக்க ஐநூறு போர்வீரர்கள் தேவைப்படுவதாகத் தெரிகிறது).
பிற ஆயுதங்களும் கடல் வழியே அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஹஜாஜின் அனுமதியின்று பின்-காசிம் எதுவும் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. தொடர் ஓட்டக் கடித முறை மூலமாக சிந்துவிலிருந்து குஃபாவிற்கு கடிதங்கள் கொண்டு செல்லபபடுகின்றன. ஒரு கடிதம் அடைந்து பதில் வர ஏழு நாட்களாகின எனத் தெரிகிறது. ஹஜாஜின் கடிதங்களில் ராணுவ உத்தரவுடன் மத அறிவுரைகளும் கலந்து பின்-காசிமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

“உன் தங்குமிடத்தைச் சுற்றிலும் குழிகளைத் தோண்டி வை..,…இரவின் பெரும்பகுதியில் விழித்திரு….குரானைப் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு குரானை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும்படி வைத்திரு…..உனது ராணுவம் எப்பொழுதும் திறந்த மைதானங்களிலிலேயே முகாமிட வேண்டும்….போர் நடக்கையில் படையணிடகள் நடு, மத்தி, பின்புற பாதுகாப்பு, இடது அணி மற்றும் வலது அணி என ஐந்து பிரிவுகளாக எப்போதும் பிரிந்திருக்க வேண்டும்…..”

oOo

Kings_Prophets_Islam_MOSLEM_EXPANSION_UMAYYAD_Caliphate_Arabs_Maps_CALIPHS

பின்-காசிம் தரைவழியாக டிபால் (Debal) துறைமுக நகரை வந்தடைகிறான். அதிர்ஷ்டவசமாக கடல்வழியாக அனுப்பப் பட்ட தளவாடங்களும் அதே நாளில் வந்து சேர்கின்றன. ஆனால் தாக்குதலைத் துவங்கும் உத்தரவு ஆளுநர் ஹஜாஜிடமிருந்து எட்டு நாட்களுக்குப் பிறகே கிட்டுகிறது.

முதல் நாள் போரின் இறுதியில் அந்தி மயங்கும் நேரத்தில் டிபால் கோட்டையிலிருந்து வந்த துரோகி ஒருவனால் கோட்டையின் பாதுகாப்பு ரகசியங்கள் பின்-காசிமுக்கு எடுத்துச் சொல்லபபடுகிறது.

“டிபால் கோட்டை மந்திர சக்தியால் காக்கப்படுகிறது. அதனை எளிதாக வெல்ல வேண்டுமெனில், அதோ தூரத்தில் தெரியும் கோவிலில் தெரியும் கொடி மரத்தையும், கோபுரத்தையும் தகர்க்க வேண்டும். அவ்வாறு தகர்த்தால் கோட்டை எளிதில் வசப்படும். கோவிலும், கொடிமரமும் நிற்கும் வ்ரை டிபால் மக்கள் போரிடுவார்கள்” எனச் சொல்கிறான்.

இந்த ஒற்றைத் துரோகமே ‘சிந்த் மற்றும் ஹிந்த்’தை இஸ்லாமிய அரேபியர்கள் வெல்லும் அச்சாரமாகியது.

பின்-காசிம் உடனடியாக தனது Catapult-ஐ இயக்கும் படையணித் தலைவனான ஜவுபாத் (Jaubat) என்பவரை அழைத்து, கோபுரத்தையும் கொடிமரத்தையும் வீழ்த்தும் சாத்தியம் குறித்துக் கேட்க, ஜவுபாத் இயந்திரத்தில் சிறிய மாற்றங்களைச் செய்தால் தன்னால் எளிதாக இரண்டையும் தகர்த்தெறிய முடியும் என்கிறான்.

“அதனை நீ செய்து முடித்தால் உனக்கு பத்தாயிரம் திர்ஹாம் பரிசளிப்பேன்” என்ற பின்-காசிம், “அவ்வாறு நீ செய்யாவிட்டால் கலிஃபாவின் Catapult-ஐ கெடுத்து வைத்த குற்றம் உன்னைச் சேரும்” என்று எச்சரிக்கிறான்.

“அவ்வாறு நிகழ்ந்தால் ஜவுபாதின் கைகள் வெட்டப்படட்டும்….” என பதில் வருகிறது ஜவுபாதிடமிருந்து.

அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டம், ஹஜாஜின் ஒப்புதலும் பெறப்படுகிறது.

அராபியர்கள் நான்குபுறமிருந்தும் டிபாலத் தாக்க ஆரம்பிக்கிறார்கள். முன்பே தீர்மானித்திருந்தபடி ஜாவுபாத் ஒரு உயரமான இடத்தில் தனது மாற்றம் செய்யப்பட்ட Catapult-ஐ நிறுத்திவைத்து, தொலைவில் தெரியும் கோவில் கோபுரத்தையும், கொடிமரத்தையும் நோக்கித் தாக்க ஆரம்பிக்கிறான். உயரப்பறந்துவந்த கற்கள் கோவிலின் கோபுரத்தை இடித்து கொடிமரத்தைக் கீழே சாய்க்கிறது.

இந்த நேரத்தில் பின்-காசிமிற்கு ஆலோசனை சொன்ன ஆசாமி, ‘”இப்போது டிபால் மக்கள் தங்கள் கோட்டைக் கதவுகளைத் திறந்து வைத்து, உங்களின் இரக்கத்தை எதிர் நோக்கி நிற்பார்கள்” என்று சொல்கிறான்.

ஆனால் ஹிஜாஜின் உத்தரவு டிபாலின் அத்தனை காஃபிர்களையும் கொல்லவேண்டும் என்று இருக்கவே, அராபியப்படை கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொன்று குவிக்க ஆரம்பித்தது. ஆண்கள், இக் கொலைகள் மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்ததாகத் தெரிகிறது. கொலைகள் நடந்து முடிந்த பிறகு ஏராளமான செல்வமும், பெண்களும், அடிமைகளும் கைப்பற்றப்படுகிறார்கள். இஸ்லாமியச் சட்டத்தின்படி, கொள்ளைச் சொத்துக்களில் ஐந்தில் ஒருபகுதி கலிஃபாவிற்கென ஒதுக்கி வைக்கப்படுகிறது. படையணிகளினுடன் வந்த ஹஜாஜின் பொக்கிஷதாரன் அந்தச் சொத்துக்களை பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறார். மிகுதியான செல்வம் அராபிய படையணிகளூக்கு, அவர்களின் தகுதிக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆனால் போர் இத்துடன் ஓயவில்லை. சிந்து மிகப்பெரும் பகுதி. ஏராளமான நகரங்களும், கோட்டைகளும் சிந்துப் பகுதி முழுமையும் நிறைந்து கிடந்தன. பின்-காசிம் டிபாலில் நடத்திய அதே போர்முறையை பிற நகரங்களிலும் நடத்தி அவற்றை மிக எளிதாகக் கைப்பற்றுகிறான். சரணடைவதால் தங்கள் மக்கள் காப்பாற்றபடுவார்கள் என்று நினைத்தவர்களும், உயிர்க் கொலைக்கு அஞ்சும் புத்த பிக்குகளும் பின்-காசிமின் படைகளுக்கு உதவி செய்வது தொடர்கதையானது. எங்கும் மரணம், கொலைகள், கொள்ளைகள் என சிந்து சமவெளிப்பகுதி இரத்தத்தில் நனைந்தது.

அதேசமயம், டிபாலின் கொலை வெறியாட்டத்திற்குப் பிறகு கொலைகளின் தன்மை சிறிது மாறத்துவங்கியது. வியாபரிகளும், கலைஞர்களும், விவசாயிகளும் அவர்களின் தொழில்களைத் தொடர்ந்து செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். பிராமணர்கள் நிர்வாகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் நம்பிக்கையாளர்கள் அல்லாத காஃபிர்கள் கட்டாய வரி செலுத்தும்படி வற்புறுத்தப்பட்டார்கள்.

பின்-காசிம் பிடிபட்டவர்களிடம் சிறிது இரக்கம் காட்டினாலும், ஹிஜாஜ் அதனை கண்டித்ததுடன் காஃபிர்களைக் கொல்லும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். பிடிபட்ட படை வீரர்கள் உடனடியாக கொல்லப்பட்டனர்.

oOo

சிந்து அரசர் தாஹரின் கொய்யப்பட்ட தலையைப் பெற்றுக் கொண்ட ஹிஜாஜ் தனது மருமகனா பின்-காசிமுக்கு கடுமையான தொனியில் உத்தரவுகள் இட்டார்.

“பிரியத்திற்குரிய மருமகனே, சிறைக் கைதிகளை மன்னிப்பது குறித்து நீ எழுதிய கடிதம் கிடைத்தது….உனது மன்னிக்கும் முறை இஸ்லாமியச் சட்டங்களுக்கு எதிரானது என்று உனக்கு நினைவூட்டுகிறேன். இறைவன் குரானில் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘ஓ நம்பிக்கையாளர்களே, நீங்கள் நம்பிக்கையற்ற காஃபிர்களை எதிர்கொள்ளும்போது அவர்களின் கைகளில் அடியுங்கள்’ என்று சொன்ன வசனங்களை உனக்கு நினைவூட்டுகிறேன். எனவே இது ஆண்டவனின் கட்டளை. கடவுளிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட இக்கட்டளை எப்பொழுதும் மதிக்கப்பட வேண்டும்…நடத்தப்பட வேண்டும்….வெற்றி பெற்ற உனக்கு எனது வாழ்த்துகள்”.

இதே உத்தரவு மீண்டும் மீண்டும் ஹிஜாஜின் கடிதங்களில் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். “போரிடும் எல்லா ஆண்களும் கொல்லப்பட வேண்டும். அவர்களின் மகன்களும், மகள்களும் சிறைப்பிடிக்கப்பட வேண்டும்” என்கிறது இன்னொறு கடிதம்,

சிந்து சமவெளியிலிருந்த பெரிய நகரமான பிராஹ்மணாபாத் என்ற நகரைக் கைப்பற்றிய பின்-காசிம், ஹஜாஜின் உத்தரவு முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டுமென தனது படைகளுக்கு அறிவுறுத்துகிறான். “போரிடும் இனத்தைச் சார்ந்த அனைவரது தலைகளூம் வாள்களினால் துண்டிக்கப்படவேண்டும்” என. இதன்படி ஏறக்குறைய ஆறாயிரம் பேர் பிராஹ்மணாபாதில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அது பதினாராயிரம் என இன்னொரு தகவல் சொல்கிறது.

oOo

Sind_Brahmanabad_Relics_London_News_Hindustan_India_Indus_Valley

இத்தனை பேரழிவுகள் தனது நாட்டில் நடந்து கொண்டிருந்தபோதும் சிந்து அரசனான தஹார் அதுகுறித்து கவலை கொள்ளாதது மட்டுமன்றி, இப்போரின் தீவிரம் குறித்து அறியாதவனாகவும் இருந்தார். தனது அரியணைக்கும் மேலான பேராபத்து தன்னை எதிர் நோக்கிக் காத்திருப்பதை தஹார் இறுதிவரை புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. பெரும் அரசனான தஹார் போரினை ஒரு வீர விளையாட்டாகவே கருதியதாகவும், அதனைப் பின்பற்றியே தனது வியூகத்தை அமைத்துக் கொண்டதாகவும் ‘சச் நாமா’ கூறுகிறது. இந்த மனபோக்கே சிந்து ராஜ்ஜியம் அழிவுற்று அராபியர்களுக்கு சொந்தமாக வழிவகுத்தது.

நேரடிப் போரின் ஆரம்ப கட்டத்தில், பின்-காசிமையும் அவனது படையணிகளையும் இண்டஸ் நதியைக் கடந்து வரவிடாமல் தஹாரால் செய்திருக்க முடியும். அவரது படைத்தலைவர்களும், அமைச்சர்களும் தஹாருக்கு அதனை அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் தஹார் அது யுத்த தர்மமல்ல என்று கூறி நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது.

போரின் உச்ச கட்டத்தில் தஹார் எளிதாகப் பின்வாங்கி பாலைவனத்திற்குள் சென்றிருக்கலாம். யுத்தத்தை பின்னொரு நாள் நடத்திக் கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்கும். அதுவே மீண்டும் தஹாரின் படைத்தலைவர்களாலும், ஆலோசகர்களாலும் சொல்லப்பட்டது. தஹார் அதனை மீண்டும் நிராகரித்தார். அவ்வாறு செல்வது அரசனான தனக்கு மரியாதைக் குறைவென்றும், தனது குடிமக்கள் அதனைத் தவறாக நினைத்துவிடுவார்கள் என்றும் சொல்லிவிட்டார்.

இறுதியில் தஹார் போர்க்களத்திலேயே இறக்க நேரிட்டது. அராபியர்களின் நாஃதா அம்புகள் தஹார் அமர்ந்திருந்த பட்டத்து யானையின் அம்பாரியின் மீது பாய்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த அம்பாரிக்குள் தஹாருடன் இரண்டு பெண்களும் இருந்திருக்கிறார்கள். ஒருத்தி அரசருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்க, மற்றவள் அரசர் போர்புரிய அம்புகள் எடுத்துக் கொடுத்திருக்கிறாள். அத்துடன் நல்ல நேரம் கணித்துக் கொடுக்கும் ஒரு பிராமணரும் அங்கே இருந்திருக்கிறார்.

எரியும் நெருப்பின் சூடு தாங்காமல் தஹாரின் யானை இண்டஸ் நதியின் பின்புறமிருந்த ஆழம் குறைவான ஒரு ஏரியை நோக்கி ஓடி அதில் இறங்கியிருக்கிறது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அராபியர்கள் தஹாரினை அம்பாரியில் வைத்தே அம்புகளால் துளைத்துக் கொன்றார்கள்.

தஹார் ஒரு போர்வீரனைப் போல வீரமரணம் அடைவதற்குத் தயாராக, தான் இறந்தபின் தன்னை எரிப்பதற்குத் தேவையான விறகுகளையும் தன்னுடனே எடுத்துச் சென்றிருக்கிறார்,. இறந்து கிடந்த தஹாரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது அதிலிருந்து அத்தரும், ரோஜாவும் மணத்ததாக ‘சச் நாமா’ கூறுகிறது. அவருடன் இருந்த இரு பெண்களும் கைப்பற்றப்பட்டு, பின்னர் தாஹரின் துண்டிக்கப்பட்ட தலையை பின்-காசிமுக்கு அடையாளம் காட்டியிருக்கின்றனர்.

முன்பு தனது அரச பதவியைத் தக்கவைத்துக் கொள்ள தஹாரை மணந்த அவரது சகோதரி, அவருடனிருந்த மற்ற பெண்களுடன் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தஹாரின் உண்மையான பட்டத்து ராணி பிடிக்கப்பட்டு பின்-காசிமின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டாள். சிந்துவில் அடிக்கப்பட்ட கொள்ளையின் ஒரு அங்கமாக தஹாரின் இரு மகள்களும் பிடிக்கப்பட்டு, அபிசீனிய அடிமைகள் மூலம் கலிஃபாவிற்கு பரிசாக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

கலிஃபாவின் அந்தப்புரத்தில் அந்த இரு பெண்களும் சிறை வைக்கப்பட்டார்கள். அவர்கள் சில நாட்கள் ஒய்வெடுக்க அனுமதிக்கப்பட்டபின் ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்களை தன்னிடம் அழைத்து வரும்படி உத்தரவிட்டார். கலிஃபா இருவரில் யார் மூத்தவள் என அறிந்து முதலில் அவளை அடைய ஆசை கொண்டார். ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் இந்தக் கேள்வி அப்பெண்களிடம் கேட்கப்பட்டது.

முதல் பெண்ணின் பெயர் சுரிஜ்ட்யூ (Surijdew) எனத் தெரியவருகிறது. கலிஃபா ஆவலுடன் அவளைக் கட்டியணைக்க முயல்கையில், அவள் அவர் பிடியில் கிட்டாமல் விலகி, பின்வருமாறு சொல்கிறாள், “அரசர் நீடுழி வாழ்க! நான் உங்களின் கீழான அடிமை. ஆனால் உங்களின் படுக்கையறைக்கு உகந்தவளல்ல. எங்களின் அரசர் இமாதுதீன் மொகமது பின்-காசிம் அவரது படுக்கையறையில் மூன்று நாட்கள் வரை எங்களை வைத்திருந்து அனுபவித்துவிட்டே கலிஃபாவிடம் அனுப்பி வைத்திருக்கிறார். இது உங்களுக்குப் பழக்கமானதாக இருக்கலாம். ஆனால் எங்கள் வழக்கம் எந்த அரசருக்கும் இதுபோன்ற அவமரியாதையைத் தருவதில்லை” என.

கலிஃபா கையைக் கடித்துக் கொண்டார். மிகுந்த ஆத்திரத்துடன், பின்-காசிம் தன்னைத் தானே பச்சைத் தோலால் கட்டிக் கொண்டு உடனடியாக தன்னைப் பார்க்க வரும்படி உத்தரவிடுகிறார்,

இந்திய எல்லையில் இருந்த பின்-காசிம் உடனடியாக கலிஃபாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான். உடனடியாக தன்னைப் பச்சைத் தோலினால் சுற்றிக் கட்டிப் பின் ஒரு பெட்டியில் வைக்கும்படியும், பின்னர் அப்பெட்டியை கலிஃபாவிற்கு அனுப்பி வைக்கும்படியும் தனது படைவீரர்களுக்கு உத்தரவிடுகிறான். பெட்டியில் வைக்கப்பட்ட பின்-காசிம் கலிஃபாவைப் பார்க்கப் போகும் வழியில் இரண்டு நாட்களிலேயே இறந்து போனான்.

பின்-காசிமின் உடல் பாக்தாதிற்கு வந்த போது, கலிஃபா தஹாரின் இரண்டு பெண்களையும் அழைத்துக் காட்டி, தனது தளபதிகள் எவ்வாறு தனது கட்டளைக்குக் கீழ்ப்படுகிறார்கள் என்று பாருங்கள் என்று சொல்லிப் பூரித்திருக்கிறார், சுரிஜ்ட்யூ, பின்-காசிம் தங்களைத் தொடவில்லை என்றும், தங்களின் நாட்டை அழித்ததால் அவனைப் பழிவாங்கும் நோக்கத்துடன் பொய் சொன்னதாகவும் கலிஃபாவிடம் கூறுகிறாள். இதனைக் கேட்டு சினமுற்ற கலிஃபா இரண்டு பெண்களையும் பாக்தாத் நகரச் சுவர்களில் உயிருடன் புதைக்குமாறு உத்தரவிடுகிறார்.

oOo

‘சச் நாமா’வின் சுருக்கமான பகுதி இது. முழுமையான தகவல்கள் வேண்டுவோர் ‘சச் நாமா’வைப் படிப்பது தவிர வேறு வழியில்லை.

0 Replies to “'சச் நாமா'”

 1. படிக்க சுவாரசியமாக இருக்கிறது. கோர்வையாக, எளிமையாக செல்கிறது. வேகமாக வாசித்ததில் யார் எந்த ஊருக்கு ராஜா, அவர்களின் பட்டத்தரசி யார், எதற்காக சண்டை போட்டார்கள் என்னும் கதாபாத்திர குழப்பம் வந்தாலும், ஆற அமர இன்னொரு தடவைப் படித்தால் பெயர்களும் பிரதேசங்களும் விளங்கும்.
  ஆனால், கொஞ்சம் அடிக்குறிப்புகளும், ஆதாரங்களும், ஆங்கில மூல நூல்களின் விவரங்களும் தரவேண்டும். மற்ற நாடுகளுக்கு மூலப்பெயரில் குறிப்பிடுவது போல் ‘இராக்’கிற்கும் சொந்தப் பெயர் தரலாம்.
  நடுவில் வரும் கதைகள் சாதாரண ராஜகுலத்து சரித்திரங்கள் போலவே வந்து போகின்றன. ஐரோப்பிய அரசர்களுக்குள் நடந்த பிணக்குகளை நினைவு கூர்வது போலவே ‘சச்’ கதையும் அமைந்திருக்கிறது.

 2. ஒரு பழைய புத்தகத்திலிருந்து கிடைத்த விபரங்களை வைத்து எழுதியிருக்கிறேன். இணையத்தில் ‘சச் நாமா’வின் பிரதிகள் இருக்கலாம். கொஞ்சம் மெனக்கெட்டால் கிடைக்கும் என்றே நினைக்கிறேன். கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல இது ‘சச் நாமா’வின் சுருக்கப்பட்ட வரலாறே.
  இது கதையல்ல. உண்மையில் நடந்த நிகழ்வுகளின் ஒரு பக்கத்துப் பார்வை இது. அதாவது இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் எழுதி வைத்த குறிப்புகள் இவை. இந்தியர்களுக்கு அவ்வாறு எழுதி வைக்கும் பழக்கம் இல்லை என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒவ்வொரு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களும் தங்களுடன் வரலாற்றாசிரியர்களை அழைத்து வந்தார்கள். அவர்கள் எழுதிய துல்லியமான குறிப்புகள் இன்றைக்கும் பரவலாகக் கிடைக்கின்றன. ஆங்கில மொழிபெயர்ப்புகளும் கூட.
  பெயர்க் குழப்பம் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். சிறிது ஊன்றிப் படித்தாலேயே போதுமானது. வேறொன்றும் சொல்வதற்கில்லை.
  -அ. ரூபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.