கல்லறைத் தோட்டம்

Old-Cemetery-cemeteries-and-graveyards-722635_1024_769

கல்லறைத் தோட்டம்
உற்ற ஒரு பிரிவின் ஆறாத் துயரம்
பின் தொடரும்
வறண்ட ஆற்று மணல் சுவடுகளாய்
அவனை.
குறித்த
கல்லறையைத்
தேடுவான்.
தேடும் விதத்திலேயே
சீக்கிரம்
தென்பட்டு விடக்கூடாத
தேடுதலாயுமிருக்கும்.
கல்லறைத் தோட்டமெங்கும்
காலம் மலைப்பாம்பாய்க்
காத்து விழுங்க
பலியானவர்களின் கல்லறைகளே.
செத்த பின்னால்
எந்தக் கல்லறை
சொந்தக் கல்லறை?
ஏதாவதொரு கல்லறை மேல்
அவன்
மலர்க்கொத்து வைத்தாலென்ன?
தேடும் கல்லறை
தெரியாதா
அவனுக்கு?
முதிர்ந்த
ஒரு வேப்ப மரத்தின்
தண்ணிழலின் கீழ் இளைப்பாறும்
கல்லறை
அவன் தேடும் கல்லறையா?
ஏதோ எட்டிப் பார்த்து வந்தது போல்
ஒரு சின்னஞ்சிறு செடி முளைத்திருக்கும்
இடிந்த கல்லறை
அவன் தேடும் கல்லறையா?
ஒருவகையாய்க்
கண்டடைந்த கல்லறை மேல்
வைப்பான்
மலர்க்கொத்தை.
சாவு
மணக்கும்
கல்லறைத் தோட்டமெங்கும்.