ஒலிக்கலைஞனின் உதவியாள்

தமிழாக்கம்: கோரா
foley-studio-Emli_Bendixen
அவன் கைச்சாதனங்களில் ஒன்றாக மாறிவிடும் ஆசை எனக்கு.
அவை பிறவற்றின் ஒலிகளை எழுப்ப வல்லவை.
ஒரு குடை – அதைத் திறந்து மூடினால் பறவையின் சிறகடிப்பு கேட்கும்.
இரு கைகளில் அரைக்கோளத் தேங்காய் ஓட்டு மோதல்கள், விரைந்தோடும் புரவியின் குளம்பொலியாகும்.
நான் ஒலிவாங்கியை அமைப்பேன்; ஸெல்லோபென் உருண்டையால் எரி நெருப்பின் ஒலியெழுப்புவான்.
வெள்ளீயத் தகட்டில் உப்புக் கரைசலை ஊற்றி பெருமழையின் ஆரவாரம் கேட்க வைப்பான்.
காகித துண்டுகளை உரசி , காதலர் ஆரத் தழுவும் ஒலி கேட்கவைப்பான்.
அப்போது அந்த காகித எழுத்தாய் மாறிவிடும் ஆசை எனக்கு வரும்.
மிக்ஸிங் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவுத் தடங்களை அடுக்கி சீரமைத்த பின்னர்
நான் கேட்கும் ஒலியலைகளாகி விடவேண்டுமென்றும் ஆசை.
அவற்றை மீண்டும் ஒலிக்கச் செய்கிறேன்.
என் உடல்,
இடியோசை தருவிக்க அவன் உலுக்கிய இரும்புப் பட்டை
வானம்பாடியின் கானம் உருவாக்க சுழலும் சைக்கிள் சக்கரத்தில் உராயவிட்ட இறகு,
சில்வண்டின் பாடலை அவன் கொய்தெடுத்த உயர்தர சீப்பு,
நிஜ ஒலி மிகச் சிறப்பாக எப்போதும் இருப்பதில்லை என்றான்,
வெளியே போய் காற்றலைகளை ஏன் பதிவு செய்வதில்லை என நான் கேட்டபோது.
மார்மேல் பிடித்த ஒலிவாங்கி பெருக்கித் தந்த என் இதயத் துடிப்பு மிக அற்பமாக ஒலிக்கிறது
அவன் பாஸ் டிரம்மை வெல்வெட் துணி போர்த்திய ஒலிவாங்கியால் மீண்டும் மீண்டும் தட்டி உருவாக்கும் இதயத் துடிப்பொலியைக் கேட்கையில்.

ஒலிக்கலைஞன்:(ஆங்கிலத்தில் ஃபோலே ஆர்ட்டிஸ்ட்)