தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 3

இக்கட்டுரையின் முந்தைய பகுதி

Novelist_Tamil_Writer_Authors_Fiction-salmaஇந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன் சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் பாட்டிலிருந்து பெறும் துயரங்களாக விரிவடைகின்றன, அவரை மட்டிலும் ஒரு பெண்ணாக, தனிப்பட்ட வியக்தியாகத் தாக்கி வதைக்கும் துயரமாக நின்றுவிடாது பெண் சமூகம் முழுதையும், தான் சார்ந்த இஸ்லாமிய பெண் சமூகம் முழுதும் ஆழ்த்தியிருக்கும் துயரமாக, இழப்புக்களாக விரிவு படுகிறது. மதம் மாத்திரமல்ல, ஆண் வர்க்கமே தன் மதத்தின் துணை கொண்டு தன் மேலாண்மைக்கு தன் மதத்தையே ஆயுதமாக, சமூக நியாயமாக பயன்படுத்திக்கொள்கிறது. சல்மாவின் சொந்த துயரங்களும் இழப்புக்களும் பெண்சமூகத்தின் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் metaphor ஆகிறது. அவரது குரல் பெண்சமூகமே, குறிப்பாக இஸ்லாமிய பெண் சமூகமே அதை அழுத்தி வதைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழுப்பும் குரலாகிறது. சல்மாவுக்கு அவரது கவிதைகள் விடுதலைக்கான மொழியாகிறது.

Konangi_Novels_Postmodern_Tamil_writers_Authorsசற்று முன் சமீப காலங்களில், எழுபது எண்பதுகளில் ஒரு வெறியாக, ஃபாஷனாக தமிழ் இலக்கிய, பண்டித உலகில் உலாவந்த ஸ்ட்ரக்சுரலிஸ, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ, போஸ்ட் மாடர்னிஸ சமாசாரங்களுக்கு இணையாக தலையெடுத்த மந்திர யதார்த்த, நான் லீனியர் ஆரவார கோஷங்கள் பற்றியும் சொல்ல வேண்டும். மிகவும் திறன் வாய்ந்த, தான் பிறந்த, வாழும் மண்ணில் திடமாகக் காலூன்றியவராக தன் ஆரம்ப எழுத்துக்களில் தன் மக்களைப் பற்றி மிக நுண்ணிய, நட்பும் நெருக்கமும் தொனிக்கும் யதார்த்தச் சித்திரங்களைத் தன் மதனிமார்களின் கதை (1989), கொல்லனின் ஆறு பெண் மக்கள் (1990) போன்ற தொகுப்புகளில் அடங்கிய கதைகளில் எழுதிய கோணங்கி, திடீரென மார்க்வேஸ் மாதிரி எழுதப்போகிறேன் என்று தீர்மானித்து மந்திர யதார்த்தத்துக்குத் தாவியுள்ளார். ஒரு வேளை அவற்றை மந்திர யதார்த்தம் என்று சொல்வது முற்றிலும் சரியல்லவோ என்னவோ. கோணங்கி மாதிரி திடீரென இப்படி ஒரு புதிய மதத்திற்கு தாவியவர்கள் ஒவ்வொருவரும் தம் எழுத்துப் பாணிக்கு ஒரு புதிய பெயர் தந்து கொள்கிறார்கள். கோணங்கி இதை ஏதோ ஒரு மாயவித்தை போல, தன் எழுத்துக்கள் எதையும் தான் எழுதுவதில்லை என்றும், அது தானாக எழுதிக்கொள்கிறது என்றும் சொல்கிறார். ஏதோ ப்ளாஞ்செட்டில் கை வைத்ததும் அது எழுதுவதைப் போலத்தான், தான் எழுதுவது என்னவென்று தனக்கே தெரியாது என்பது போலச் சொல்கிறார். இதை நம்புவதற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தாலும், அவர் நம் காதில் நிறையவே பூச்சுற்றுவது போல இருந்தாலும், அவர் சொல்லும்போது மிக சீரியஸாகத் தான் தன் முகத்தை வைத்துக் கொள்கிறார். ஆனால் இந்த புதிய ஃபாஷன் அல்லது பித்து ஒரு சிறிய வட்டத்தை நம்ப வைத்துள்ளது என்று தான் தோன்றுகிறது. அவர்கள் வெகு ஆரவாரத்துடன் தம் காதில் பூச்சூட்டிக் கொள்கிறார்கள்.

இதன் இன்னொரு விளைவு, இப்போது லத்தீன் அமெரிக்க எழுத்துக்களின் மொழிபெயர்ப்புகள் கணிசமாக வரத் தொடங்கியுள்ளன. அந்த மொழி பெயர்ப்புகள் நமக்கு எந்த உற்சாகத்தையும் தரவில்லை என்பது ஒரு புறம் இருக்கிறது. தமிழ் இலக்கியம் முப்பது நாற்பதுகளில் நிறைய மொழி பெயர்ப்புகளை கண்டது. ஐரோப்பிய மொழிகளிலிருந்து, ஆங்கிலம் வழியாகவும். நேராக மராத்தி, வங்காளி, ஹிந்தி என மற்ற இந்திய மொழி களிலிருந்தும் கூடத் தான். ஆனால் அதன் பிறகு பின் வருடங்களில் மொழிபெயர்ப்புகளுக்கு எந்த வரவேற்பும் இருந்ததில்லை. இப்போது தலித் அரசியலும் சிந்தனையும் மேலிட்டிருப்பதால், தலித் எழுத்துக்கள், கன்னடம், மராத்தி மொழிகளிலிருந்து வரத்தொடங்கியுள்ளன. இது ஏதும் இலக்கிய விழிப்புணர்வின் காரணமாக விளைந்ததல்ல. தலித் பற்றிய சிந்தனைகள் அரசியலில் மேலோங்கி யிருப்பதன் காரணத்தால் விளைந்ததே.

Oorin_Miga_Azahgaana_Pen_Translations_Char_nivedhitha_Tamil_Latin_american_Writers_Works_Authors_Fiction

தலித் அரசியல் விழிப்புணர்வின் காரணமாக அதற்கு ஊட்டம் கொடுத்து உதவக்கூடிய, தலித் எழுத்துக்கள் பக்கம் நம் கவனம் செல்லவேண்டும்.. தலித் பற்றிய அரசியலும் சிந்தனையும் தமிழ் நாட்டில் திடீரென எழக் காரணம், அம்பேத்கர் நூற்றாண்டு நினைவு விழாக்கள் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டது, மண்டல் கமிஷனின் அறிக்கையின் காரணமாக எழுந்த நாடு தழுவிய கிளர்ச்சிகள், தலித் மக்கள் திடீரென தமக்குரிய உரிமைகளுக் காகவும், தம்மை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புக்களுக்காகவும் மேல் ஜாதி ஹிந்துக்களுடன் தொடங்கிய போராட்டங்களும் அவற்றினிடையே நேர்ந்த வன்முறைகள் எல்லாம். மேல் ஜாதியினர் இதை விரும்பவில்லை.

Poomani_Piragu_Novel_Fiction_Tamil_Dalit_Writer_Authorதலித் மக்கள் வாழ்க்கை பற்றி எழுந்த முதல் இலக்கிய படைப்பு, பூமணி(1947) எழுதிய பிறகு (1976) என்ற நாவல். ஒரு கிராமத்தில் ஒரு செருப்பு தைப்பவனின் கதை அது. அவன் தனக்கு நேரும் இழிவுகளையெல்லாம் மௌனத்தோடு தனக்குள் குமைந்து கொண்டும் கௌரவத்தோடும் சகித்துக் கொள்கிறான். கருப்பன் என்னும் ஒரு அநாதைச் சிறுவன் அவன் பொறுப்பில் வளர்கிறான். கருப்பன் தனக்கு நேரும் அவமதிப்பை எல்லாம் எதிர்கொள்ளும் வழியே வேறு. அவனைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையுமே எல்லாரையுமே பார்த்தால் அவனுக்கு கிண்டல் தான். பொதுவாக தலித் எழுத்துக்களில் காணும் மனிதர்கள், அவர்களின் வெவ்வேறு வடிவங்களுக்கும் வகைகளுக்கும் கருப்பன் ஒரு மாதிரி அச்சு உருவம். பூமணி இதை அடுத்து வெக்கை(1982) என்ற ஒரு நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவலில், ஒரு இளைஞன் தன் குடும்பத்தாரை மிரட்டி ஹிம்சைப் படுத்திக் கொண்டிருந்தவனை வெட்டி முடமாக்கிவிட்டு தப்பி ஓடி ஒரு காட்டில் தலைமறைவாகி விடுகிறான். அவனது தலைமறைவு வாழ்க்கையின் அன்றாட சித்தரிப்பை இந்த நாவலில் பார்க்கலாம்.

bama_Karukku_Thamils_Writer_Author_Dalitsஎல்லா தமிழ் தலித் எழுத்துக்களிலும் மாறாது காணப்படும் ஒரு குணம், அவர்களின் சீற்றம் தான். அது நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று தான். அதோடு தலித் எழுத்துக்கள் நாம் இதுகாறும் காணாத சமுதாயத்தின், உலகின் வாழ்க்கையை பதிவு செய்து, அத்தோடு. ஒரு புதிய மொழியையும் இலக்கியத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளன. அந்த மொழி பண்படுத்தப் படாதது. கொச்சையானது. ஆபாசமும் வசையும் நிறைந்தது. ஆனால் அதன் வெளிப்பாடு வெளிப்படையானது. அது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஆனாலும் அது பேசப்படுவது. உயிரோட்டம் கொண்டது. அந்த மொழியில் தான் தலித் மக்களின் உணர்வுகள் பேசப்படுகின்றன. பாமா (1958) ஒருகன்னி மாடத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். கருக்கு(1992) என்ற அவரது முதல் புத்தகம் சுயசரிதம் என்று சொல்ல வேண்டும். கன்னி மாடத்திலும் கூட ஜாதி வேற்றுமைகள் பேணப்படுவதைச் சொல்கிறது கருக்கு. இதைத் தொடர்ந்து வந்த சங்கதி (1992) பாமாவின் பாட்டி சொல்லும் கதையாக பதிவாகியுள்ளது. குசும்புக்காரன் என்று ஒரு சிறுகதைத் தொகுப்பும் பாமா 1996-ல் வெளியிட்டிருக்கிறார்.

sivakami_IAS_Dalit_Writers_Authorsபழையன கழிதலும், ஆனந்தாயி என்ற இரு குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியுள்ள சிவகாமி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. இந்த இரு நாவல்களும் தலித் வாழ்க்கையின் இன்னொரு புதிய பரிமாணத்தைச் சித்தரிக்கின்றன. காலம் காலமாக தாம் கட்டுண்டிருந்த தளைகளை தகர்த்து எழுந்துள்ள புதிய தலைமுறை கல்வி கற்ற, அதிகார வேட்கையும் பணத்தாசையும் கொண்ட தலித்துகள் சிவகாமியின் நாவல்களில் மையப் பாத்திரங்களாகின்றனர். இந்த தலித்துகள், இன்னமும் வதைபடும் நிலையில் தங்கிவிட்ட அதிர்ஷ்டம் கெட்ட தம் சகோதர தலித்துகளை அடக்கி ஆளுவதில் சந்தோஷம் அடைகின்றனர். விழி. ( பா. இதய வேந்தன், அபிமானி, உஞ்சை ராஜன் போன்ற இளம் தலித் எழுத்தாளர்களுக்கும் தாம் சொல்ல அவர்கள் கண்ட அனுபவித்த தலித் வாழ்க்கைகள் உள்ளன. அவை தாக்கு வலு வாய்ந்த எழுத்துக்கள். சுயவிமர்சனம் கொண்டவையாதலால். எதையும் மறைக்காதவை.

So_dharman_Tamils_Tharman_Writersசோ தர்மனின்(1953) தூர்வை (1996), இமையத்தின் (1964) கோவேறு கழுதைகள், இரண்டும் தலித் வாழ்க்கை பற்றிய மிக முக்கியமானதும் குறிப்பிட்டுப் பேச வேண்டியதுமான நாவல்கள். சோ தர்மனின் பாத்திரங்கள் சமீபத்திய பழமையைச் சேர்ந்தவை. எவ்வளவு தான் அவர்கள் ஒடுக்கப்பட்டாலும், வசதி அற்று இருந்தாலும், சமூகத்தில் ஒதுக்கப் பட்டாலும் தம் வாழ்க்கையை சந்தோஷத்துடனேயே கழிக்கிறார்கள். பூமணியின் கருப்பனைப் போல அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது அவர்களது நகை உணர்வு. அந்த நகை உணர்வு தான் அவர்களை ஒடுக்கும் சமூகத்தை மீறி வாழும் சக்தி தரும் ரகசிய ஆயுதம். இந்த நாவல்கள், தலித் வாழ்க்கையைச் சொல்லும் வாய்மொழி மரபில் வருபவை. ஆனாலும் எழுத்தில் பதிவாகி அச்சில் வந்துள்ளவை.

Imaiyam_Dalit_Writers_Tamil_Authorsஇமையத்தின் கோவேறு கழுதைகள் மிகவும் சர்ச்சைக்குள்ளான எழுத்து. காரணம், தலித் சமுதாய மக்களுக்குள்ளேயே நிலவும் வர்க்க மேலாண்மையும், வசதி உள்ளோர் வசதி அற்றோர் இடையேயான ஏற்றத் தாழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி பதிவு செய்துள்ளது தான். தலித் மக்களுக்குள்ளேயே கூட படித்தவரும், மேல் நிலைக்கு உயர்ந்துள்ளவரும், அதிகாரம் படைத்தவருமான் மத்திய தர தலித்துக்கள், இவை எதுவுமற்ற இன்னமும் எழ்மைப்பட்ட சக தலித்துகளை அடக்கி ஆளும் கொடுமை, மேல் ஜாதியினரும் சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளவரும் தமக்குக் கீழ்ப் படியில் இருப்போரை அடக்கி ஆண்ட கொடுமைக்கு சற்றும் குறைந்ததில்லை என்பதை இமையத்தின் நாவல் சித்தரித்துள்ளது. தலித் சித்தாந்திகள், இமையத்தையும் அவர் எழுத்துக் களையும் ஒட்டு மொத்தமாகத் தம் உரத்த குரலில் வன்மையாகக் கண்டனம் செய்து வருவது நமக்கு அதிர்ச்சி தரும் செய்தி அல்ல.

நாவலும் சிறுகதைகளும் எழுதும் பாவண்ணன், பெருமாள் முருகன் போன்றோரும், கவிதை எழுதும் இரத்தின கரிகாலன், பழமலை போன்றோரும் தலித்துகள் அல்ல தான். ஆனால் அவர்கள் வாழ்க்கை தலித் மக்களோடு நெருங்கி பின்னிப் பிணைந்த காரணத்தால் அவர்கள் எழுத்துக்கள் தலித் வாழ்க்கையைப் பேசுவனவாக இருக்கின்றன.

Thanga_Bhachaan_Tamil_Writerதங்கர் பச்சான் எனனை மிகவும் பரவசப் படுத்தும் ஒரு எழுத்தாளர். தமிழ் சினிமா உலகில் வெற்றியும் புகழும் மிகப் பெற்ற, எல்லோரின் பாராட்டையும் பெற்ற சினிமா புகைப்பட வல்லுனர் அவர். ஆனால் அவரது படைப்பெழுத்துக்களைப் பார்த்தால், தன் பிறந்த கிராமத்து மண்ணிலும் வாழ்க்கையிலும் ஆழக் கால்பதித்துள்ள ஒரு சாதாரண விவசாயியாகத்தான் அவரைக் காண்கிறோம். இந்த நவ நாகரீக காலத்தில் வாழும் ஒரு மனிதர் என்பதையோ, ஏன், அவர் வெற்றியும் புகழும் பெற்று வாழும் சினிமா உலகப் பகட்டின் மினுமினுப்பின் அடையாளம் எதையுமோ சிறிதளவு கூட அவர் எழுத்தில் காணக் முடிவதில்லை. அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு (1996) என்ற நாவலில் காணும் சில கிராமத்து வாழ்க்கையின் நுணுக்கமான நீண்ட விவரிப்புகள் அவற்றோடு அவருக்கு இருக்கும் சொந்த அனுபவத்தை நெருக்கமான விவர ஞானத்தைச் சாட்சியப்படுத்துகின்றன. பேர்ல் எஸ் பக்கின் Good Earth நாவலில் வரும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பையும் அவை பல நூறு ஏக்கர் பரப்பில் விளைவிக்கும் பயிர் நாசத்தையும் விவரிக்கும் பக்கங்களை, ஹெமிங்வேயின் Old Man and the Sea நாவலில் வரும் ராக்ஷஸ மீனுக்கான நீண்ட போராட்டத்தின் நுணுக்கமான விவரிப்பையும் நினைவு படுத்தும் பகுதிகள் தங்கர் பச்சானின் விவரிப்புகள்.

கடந்த இருபது வருடங்களில் கவிதை எழுத வந்திருப்பவர்களின் பெருக்கம் கொஞ்சம் அதிகம் தான். அவர்களில் பலர் நம் கவனிப்பை வேண்டும் அளவில் நன்றாகவே எழுதிய போதிலும் நம்மைப் பரவசப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு என்று உற்சாகம் கொள்ளும் நிலையில் எவரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எழுபதுகளிலிருந்து தன் ஆரம்ப காலத்தில் தன் கிண்டல் பார்வையும் சமூக அரசியல் விமர்சனமும் கொண்ட கவிதைகளால் பரவசப்படுத்திய ஞானக் கூத்தனிடம் அந்த பழைய நகை உணர்வு அறவே அற்றுப் போய்விட்டது போல காணப்படுகிறார். ,அவர் கவிதைகள் எவ்வித சுவையும் அற்று பரபரப்பையும் இழந்து காண்கின்றன. இப்போல்லாம் அவர் ரொம்ப சீரியஸ். பிரமீள் (அந்நாளைய தருமு சிவராமூ) இப்போது வெற்று வாய்ச்சண்டை வீரராகக் கீழிறங்கிவிட்டார். பழையவர்கள் தம் கவிதைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். ஏதும் புதிய முகங்கள், உற்சாகம் தரும் முகங்களைக் காணோம். சல்மாவைத் தவிர.

விமர்சன எழுத்து பற்றி ஏதும் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று படுகிறது. பொதுவான இலக்கிய சூழல் விமர்சனத்துக்கு ஏற்றதாக இல்லை. எவ்வித மாற்று அபிப்ராயமோ, உள்நோக்கமற்ற கருத்துப் பரிமாற்றமோ, சுதந்திரமான சிந்தனை வெளிப்பாடோ, விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடுகளோ வெளிவரும் சூழல் இல்லை இங்கு, இப்பொது. காட்டமான கட்சியாடல்கள் என்னவோ உரத்த குரலில் மிகுந்த ஆவேசத்தோடு நடக்கின்றன தான். ஆனால் அவை ஏதும் ஒரு மாற்றுக் கருத்தை அனுமதிக்கும் நிலையில் இல்லை. சித்தாந்திகள் எண்ணிக்கையில் அதிகமாகி உள்ளனர். அவரவர்க்கு தயாராகக் கிடைக்கும் ஒரு மேடையில் எழுந்து நின்று கொண்டு உரத்த குரலில் தம் இருப்பை தமிழ் உலகுக்கு அறிவித்துக்கொண்டு வருகின்றனர்.

Tamil_Theater_Stage_Drama_Chennai_Tamilnadu

நாடக இலக்கியத்தைப் பற்றிப் பேச வந்தால், தமிழர்களுக்கு ஏதோ ஒன்று ஏதோ காரணத்துக்காகப் பிடித்து விட்டால் அதை யோசனை இன்றி இறுகப் பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு, அவர்களில் நாடகப் பற்று கொண்ட ஒரு சிறு பான்மையினருக்கு ஒரு வகையான நடிப்பு தான் நாடகம் என்று ஒரு கருத்து பற்றியுள்ளது. சம்பிரதாய மேடை என்பதே, நாடக இலக்கியம் என்பதே மேற்கத்திய காலனீயத்தின் எச்சம் என்ற கருத்து இறுகப் பற்றியுள்ளது யதார்த்தமான, இயல்பான நடிப்போ, நாடக எழுத்தோ அவர்களுக்கு விரோதமானது. ஏனெனில் இதுவும் மேற்கத்திய காலனீயத்தின் எச்சங்கள். முதலாளித்துவ சமூகத்திலிருந்து பெற்றது. நமக்குப் பழக்கமான, சம்பிரதாய ஓரங்க நாடகங்களும் பல அங்கங்கள் கொண்ட முழு நாடகங்களும் மேடையில் நடிக்கப்படுவனவும் அவர்களுக்கு விரோத மானவை. நடிப்பு என்றால் அது பத்ததிகள் கொண்டதாக இருக்க வேண்டும் இயல்பாகவோ, யதார்த்த பூர்வமாகவோ இருத்தல் கலை ஆகாது. நாடகத்தின் சலனங்கள் நடன அடவுகள் மாதிரி முழுதும் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேச்சும் இயல்பாக இருக்கக் கூடாது. அதுவும் கூடியாட்டப் பாத்திரத்தின் பேச்சு போல நீட்டி முழக்கி இழுத்து இழுத்துப் பேசும் பத்ததிகள் கொண்டதாக இருக்க வேண்டும். நடனங்களும் கொண்டிருக்க வேண்டும். இவை தான் இந்திய மண்ணில் வேரூன்றிய நாடகப் பண்புகள் மற்றதெல்லாம் மேற்கத்திய காலனீயம் தந்தவை என்ற ஒரு கருத்து பரவலாக்கப் பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நாடக இயக்கம் என்ற ஒன்று முன்னரும் இருந்ததில்லை. அறுபது எழுபதுகளில் எழுந்த ஒரு எளிய பலஹீனமான தொடக்கம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது. நாடக இலக்கியம் என்று ஏதும் சொல்லிப் பெருமை படும் அளவில் இங்கு இல்லை

இன்னும் ஒரு பகுதி உண்டு, மிகவும் சோர்வு தரும் வரண்ட பகுதி அது. அவ்வப்போது ஆங்காங்கு காணும் சில துளிர்களைத் தவிர. கடந்த 70 வருடங்களில், தமிழ் மக்களின் வாழ்க்கையையும், நம்பிக்கைகளையும் வரலாற்றையும் அவரவர் சிந்தனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப செதுக்கி உருவாக்கிய சக்தி வாய்ந்த பெரும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர், சி. ராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி ராமச்சந்திரன், மு.கருணாநிதி ஆகிய ஏழுபேரும் அதில் மிக முக்கிய மானவர்கள். தமிழனின் வாழ்க்கையை, தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவர்களில் கடைசியாகச் சொல்லப்பட்ட மு. கருணாநிதியைத் தவிர வேறு எவரும் தம் சுயசரிதத்தை எழுதியதில்லை. அதிலும் மு. கருணாநிதியின் மூன்று பாகங்கள் கொண்ட நெஞ்சுக்கு நீதி என்ற அந்த சுய சரிதம் பெரும்பாலும் தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் காரியமாகவே இருக்கிறது. வேறு ஒரு சமயத்தில், வேறு ஒரு மனச் சாய்வில் அது வேறாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் தம் அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பழம் அரசியல் தலைவர்களுக்கு அவரவர்க்கு முன் உள்ள, தம்மை நியாயப் படுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டு. அரசியல் வாழ்க்கை யிலிருந்து ஒதுங்கி வாழும் சி. சுப்பிரமணியம் போன்றவர்கள் தான் தம் வரலாற்றை சுய சார்பற்று, தன்னை நியாயப் படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்காமல் எழுத முடியும். சி. சுப்பிரமணியம் அதைத் தான் செய்துள்ளார். ஆனால், கடந்தன் ஒரு நூற்றாண்டு கால அரசியல் சமூக வரலாற்றை, அந்த வரலாற்றை உருவாக்கிய இயக்கங்களை, தலைவர்களைப் பற்றி, நேர்மையாக, எந்த கட்சி சார்பும் அற்று, உணர்ச்சி வசப்படாது, வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்யும் நோக்கில் எந்த சரித்திரப் பதிவும் வரவில்லை. ஒன்று தாம் வணங்கும் தலைவர்களை போற்றித் துதி பாடும் வகையின அல்லது தமக்கு எதிரான தலைவர்களை ஒதுக்கும் அல்லது குறைத்துச் சொல்லும் நூல்கள் தான் வரலாறு எனப் பெயர் சூட்டப்பட்டு வெளிவருகின்றன.

ஆனால் சில குறிப்பிடத்தக்க விதி விலக்குகளும் இருக்கின்றன தாம். அவை அரசியல் தலைவர்களால் எழுதப்பட்டவையல்ல. சாதாரண மனிதர்கள் தந்தவை.. சுவருக்குள் சித்திரங்கள் (1998) என்னும் புத்தகம் தியாகு என்னும் சிறைக் கைதியாக வாழ்ந்த ஒரு நக்சல் தீவிர வாதியால் எழுதப்பட்டுள்ளது. தியாகு கீழ்க் கோர்ட் ஒன்றால் விசாரிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவர். அவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்கோர்ட்டுக்கு மனுச்செய்து கொள்ள வில்லை. ஆனால் சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது. அவர் 16 வருடங்கள் அனுபவித்த சிறை வாழ்க்கையை வெகு நுணுக்கமாகவும் உண்மையாகவும் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அவரது அரசியல் கருத்துக்கள், அதற்கான அவரது அரசியல் போராட்டங்கள், சந்தித்த வழக்குகள் எல்லாம் அவரது சுவருக்குள் சித்திரங்கள் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.

Suvarukkul_Chithirangal_Thyaagu_Jail_Prison_Life_Crime

இது போன்ற அபூர்வமான இன்னொரு வாழ்க்கைச் சரிதமும் தமிழில் இக்கால கட்டத்தில் வெளிவந்துள்ளது. அழகிய நாயகி அம்மாள் என்னும் படிப்பறிவற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, அவ்வப்போது வாய் மொழியாகச் சொல்லச் சொல்ல பதிவு செய்யப்பட்ட அந்த அம்மையாரின் குடும்பத்தின், சமூகத்தின் மூன்று தலைமுறை வரலாறு தான் கவலை என்ற தலைப்பில் 1998-ல் வெளியானது. குறிப்பிடத்தக்க ஒரு விவரம், அந்த தடித்த வரலாற்றுப் பதிவில் அந்த அம்மையார் தன் கணவனைப் பற்றி நல்லதாகச் சொல்ல ஏதும் இருக்கவில்லை.

கடந்த 30 வருடங்களாக, ராஜபாளையத்தைச் சேர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ராஜூ சமுதாயத்தைச் சேர்ந்த மு.க. ஜகன்னாத ராஜா, சுயமாகக் கல்வி கற்றவர், பாலி, சமஸ்கிருதம், ப்ராக்ருதம், கன்னடம், தெலுங்கு ஆகிய அத்தனை மொழிகளிலிருந்தும் தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் முக்கியமான பழம் நூல்களையும் தற்கால இலக்கியங்களையும் மொழிபெயர்க்கும் பணியில் சிறப்பாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அதிலும் வெகு அமைதியாக, சுயதம்பட்டம் விளம்பரம் ஆகாயத்தை நோக்கி மூக்கை உயர்த்தாமல் செய்து வருவது குறிப்பிட வேண்டிய விஷயமும் கூட. யார் சொல்லியும் எந்த அறக்கட்டளையின் தயவும் இன்றி தன் விருப்பத்திற்கே செய்து வருகிறார். இது இன்றைய தமிழ் நாட்டில், அரசியல் கலாச்சாரத்தில் நிலவும் தர்மங்கள், மதிப்புகளுக்கு முற்றிலும் மாறான செயல். இன்றைய தமிழ் கலாச்சாரத்தில் உலகத்திலேயே மிகச் சிறப்பானதும் வளமானதுமான மொழி தமிழ் தான். அது மற்ற மொழிகளிலிருந்து பெறுவதற்கு தொடர்பும் உறவும் கொள்வதற்கு ஏதும் இல்லை.

அடுத்து சிறப்பாகச் சொல்லப்படவேண்டியவர்கள், சீனி விஸ்வநாதன், டி.வி.எஸ் மணி, பெ.சு.மணி போன்ற அறிஞர்கள் பாரதியின் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் முழுமையாகக் கொண்டு வருவதிலும் பாரதி பற்றிய அனைத்துச் செய்திகளையும் ஆவணப்படுத்துவதிலும் வெகு அமைதியாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள். பாரதி மாத்திரமல்ல, பாரதி போல தமிழர்களின் நினைவிலிருந்து அதே வெகு அமைதியுடன் மறைந்து கொண்டிருக்கும் வ.வே.சு. சுப்பிரமணிய சிவா, வ.வு.சி. போன்ற இலக்கிய கலாசார அரசியல் பெரியோர்களையும் அவர்களது எழுத்துக்கள் வாழ்க்கையை முழுமையாக ஆராய்ந்து கண்டு பதிவு செய்வதிலும் தம் அக்கறைகளை விரிவு படுத்திக்கொண்டுள்ளார்கள். இவை அத்தனையும் ஏதும் ஸ்தாபனங்களின், அரசின், பல்கலைக் கழகங்களின் உதவியாலோ தூண்டுதலாலோ நடப்பன அல்ல. முற்றிலும் தனி நபர் ஆர்வத்தில் பிறந்த முயற்சி இது.

கடைசியில் ஒரு மிக முக்கியமான, சமீப காலங்களில் காணும் ஒரு மாற்றத்தையும் பற்றிச் சொல்ல வேண்டும். அதன் அர்த்தமும் உத்வேகமும் எதைக் குறிப்பிடுகிறது என்பதோ, எதும் புரியாத மாற்றமா என்பதோ எனக்கு விளங்கிய பாடில்லை. தமிழர்களிடம் புத்தகம் வாங்கிப் படிப்பது என்று ஒரு பழக்கம் இருக்கிறதா, என்ற கேட்டு பெருமைப்படும்படி பதில் சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை. அப்படி ஒரு பழக்கமே அவர்களிடம் கிடையாது. ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு அது விற்றுத் தீர பத்து இருபது வருடங்கள் ஆகும் என்று இருந்த காலம் ஒன்று இருந்தது. க.நா. சுப்பிரமணியம் என்னும் ஒரு மிகச் சிறந்த நாவலாசிரியர், சர்ச்சைக்கிடமான எழுத்தாளர் 1946-ல் எழுதி கலைமகள் பிரசுரம் வெளியிட்ட பொய்த் தேவு என்ற நாவலின் முதல் பதிப்பு 1970-களில் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர சில வருஷங்கள் ஆகின்றன. விதி விலக்காக, தலித் எழுத்துக்கள், சமீப காலமாக தலித் பற்றிய எதுவும் மிகுந்த ஆரவாரத்தையும் உற்சாகத்தையும் எழுப்புவதாலும், மிகுந்த உற்சாகத்துடன் தீவிரமாகவும் தலித் மக்களே செயல்படுவதாலும் வெகு சீக்கிரம் தலித் பிரசுரங்கள் விற்று விடுகின்றன.

இத்தகைய நம்பிக்கை வரண்ட சூழலில், சி.சு. செல்லப்பா 1700 பக்கங்களுக்கு, மூன்று பாகங்களுக்கு விரியும், சுதந்திர தாகம் (1998) என்னும் பிரம்மாண்ட நாவலை வெளியிட்டுள்ளார். அது 1927 லிருந்து 1934 வரை ஏழு வருட கால, சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகள், அவர் வாழ்ந்த மதுரையிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் நிகழ்ந்த போராட்ட நிகழ்வுகளை விவரிக்கும் நாவல் என்றாலும் அதன் உயிரோட்டம் நாடு தழுவிய போராட்டத்தின் தாக்கத்தை பிரதிபலிப்பது. அது அவருடைய swansong. தன் அந்திம முதுமையில் இருபது முப்பது வருடங்கள் அதை எழுதுவதற்கு எடுத்துக்கொண்டுள்ளார். தனது நாற்பதுகளில் ஒரு இளம் எழுத்தாளர், பாவை சந்திரன் தன் முதல் நாவலாக எழுதியது 700 பக்கங்கள் கொண்ட நல்ல நிலம் (1998) அது ஒரு தஞ்சை கிராமத்தின் விவசாய குடும்பத்தின் மூன்று தலைமுறை வரலாறு. அந்த வரலாறு, தமிழ் நாட்டில் இருபதுக்களி லிருந்து நீளும் சமூக, அரசியல் சரித்திரத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது. ஒரு முதல் நாவலே ஒரு சாதனையாக, தமிழ் இலக்கியத்துக்கு சிறபபான சேர்க்கையாகியுள்ளது. சுந்தர ராமசாமியின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் (1998) என்னும் இன்னொரு பிரம்மாண்ட நாவல் சுந்தர ராமசாமியின் குடும்பம் நிரந்தரமாக நாகர்கோயிலுக்குக் குடி பெயரும் முன், கேரள மாநிலத்தின் கோட்டயத்தில் 1937 லிருந்து 1939 வரை கழிந்த இள்மைக் காலத்தை விரிவாகச் சொல்கிறது, மறுபடியும் 700 பக்கங்களில். ஜெயமோகனும் (1962) தன் பங்குக்கு விஷ்ணுபுரம் என்னும் 700 பக்க நாவலை எழுதியுள்ளார். இந்த நாவலின் விஸ்தாரமும், எழுத்துத்திறனும், உத்தி பெருக்கமும் அவ்வளவு சுலபமாக வாசித்துவிடக்கூடிய ஒன்றல்ல. பிரமிக்க வைக்கும் சொல்திறனும், கற்பனை விசாலமும் கொண்டது. அனந்த சயனமாக வீற்றிருக்கும் சிலை ஒன்று கற்பக்கிரஹத்திலும் அதைச் சுற்றி ஒரு பெரும் கோயிலும், விஷ்ணுபுரம் என்ற இடத்தில் எல்லாம் கற்பனையே யானாலும் அது அனந்த சயன கோலத்தில் இருப்பதால் விஷ்ணு என்ற நம்பிக்கையும் தான் மையமாக உள்ளன இந்த பிரம்மாண்ட கற்பனைக்கும் நாவலுக்கும். இன்னுமொரு நம்பிக்கை, ஒரு புறம் கவிழ்ந்து சயனத்திலிருக்கும் இந்த சிலை மறுபுறம் புரளுமானால் நிகழும் ஒரு மகா பிரளயத்தில் இந்தக் கோயிலும் சுற்றியுள்ள அத்தனையும் வெள்ளத்தில் மூழ்கும் என்ற நம்பிக்கையும் கூட நிலவுகிறது. நாவல் பல நூற்றாண்டுகளின் நம்பிக்கைகளின் மதங்களின் போராட்ட சரித்திரத்தை, ஆதிகுடிகளின் காலத்திலிருந்து, பின்னர் வந்த பிராமணியம் அதைத் தொடர்ந்த பௌத்தம் அதன் பின்னர் பிரளயம் என கதையாடல் முன்னும் பின்னுமாக ஊஞ்சலாட்டத்தில் சலனிக்கிறது. சரித்திரம் கொள்ளும் ஒரு மாதிரியான சுழல் இயக்க குறிப்புணர்த்தலில், நாட்டின் மத, பண்பாடுகளின் சரித்திரம் எல்லாம் நாவல் என்னும் இந்த சிமிழுக்குள் அடைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரம்மாண்ட எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய வளமான கற்பனை, பாண்டித்யத்தையும், சொல்திறனையும், உத்தி சிருஷ்டியையும் சாட்சியப்படுத்துகிறது. நிகழ்கால தமிழ் இலக்கியத்தில் விஷ்ணுபுரத்தில் காணும் ஜெயமோகனின் சொல் வளத்திற்கும், கற்பனைத் திறனுக்கும், நாவல் களத்தின் விசாலத்திற்கும் மொழியைக் கையாளும் லாவகத்திற்கும் இணை நிற்கும் இன்னொரு எழுத்தாளரை சமகாலத்தில் காண்பதற்கில்லை என்று தான் தோன்றுகிறது. இதன் விளைவாக ஜெயமோகன் அதீத ஆவேசம் மிக்க பாராட்டுக்களுக்கும், அதே போல இன்னொரு கோடியில் அதே ரக வசையாடலுக்கும், சிதையில் எரித்துவிடத் தோன்றும் வெறுப்புக்கும் ஆளாகியிருப்பது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.

இங்கு சற்று மேலே சொல்லப்பட்ட இப்புத்தகங்கள் அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களுக்குள் வெளியானவை. இவை எதுவும் ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட பிரசுர ஸ்தாபனங்கள் எதுவும் வெளியிட்டவை அல்ல. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் தம் முயற்சியில் வெளியிட்டவை. ஒரு சிருஷ்டி இலக்கியம் சந்தை நிலவரங்களின் அல்லது, சமூக நிலையின் சாதக பாதகங்களைச் சார்ந்து எழுதப்படுவதில்லை தான். ஆனால் புத்தகங்கள் வாங்கும் கலாசாரமே அற்று இருக்கும் சூழலில் ஒரு எழுத்தாளன் தன் புத்தகஙக்ளைத் தன் செலவிலேயே வெளியிடத் தூண்டுவது எது?

இருப்பினும் ஆச்சரியங்களிலும் ஆச்சரியம், ஜெயமோஹனின் புத்தகமும், சுந்தர ராமசாமியின் புத்தகமும் ஒன்று பிரசுரமான ஒரு சில மாதங்களிலும் மற்றது ஒரே வருஷத்திற்குள்ளும் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலை முற்றிலும் நம் புரிந்து கொள்ளலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. ஒரு வேளை நம் கண்களுக்கு வெளிப்பட தெரிவதற்கும் அப்பால் வேறு காரணங்கள் இருக்கக் கூடும். இந்த தமிழர்கள் நான் கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக அறிந்திருந்த தமிழர்கள் இல்லை. எனக்கு இந்த மாற்றம் பிடித்திருக்கிறது தான். ஆனால் என்னால் புரிந்து கொள்ளத் தான் முடியவில்லை.

 

0 Replies to “தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 3”

  1. 1. ஜெயமோகனின் சொல் வளத்திற்கும், கற்பனைத் திறனுக்கும், நாவல் களத்தின் விசாலத்திற்கும் மொழியைக் கையாளும் லாவகத்திற்கும் இணை நிற்கும் இன்னொரு எழுத்தாளரை சமகாலத்தில் காண்பதற்கில்லை என்று தான் தோன்றுகிறது –
    மிகவும் சரியான வார்த்தைகள்.
    2. விமர்சன எழுத்து பற்றி ஏதும் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று படுகிறது. பொதுவான இலக்கிய சூழல் விமர்சனத்துக்கு ஏற்றதாக இல்லை. எவ்வித மாற்று அபிப்ராயமோ, உள்நோக்கமற்ற கருத்துப் பரிமாற்றமோ, சுதந்திரமான சிந்தனை வெளிப்பாடோ, விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடுகளோ வெளிவரும் சூழல் இல்லை இங்கு –
    இதற்க்கு நீங்கள் (வெ சா) தான் உதவ வேண்டும் .
    விமர்சனத்தில் ஆர்வமுள்ள புதியவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அவர்களை நெறிப் படுத்த வேண்டும் .
    தனி மனிதர் சான்றத விருப்பு வெறுப்பு இன்றி எந்த வித பிரதி பலனும் எதிர் பாராத விமர்சகர்கள் உருவாக நீங்கள் தான் உருவாக வேண்டும் .

  2. சில தவறான கணிப்புகள் – என் பார்வையில்! – இக்கட்டுரையில் இருக்கின்றன. அவற்றைச் சுட்டிக்காட்டுவது என் கடமை.
    ஒவ்வொன்றாக –
    //நாவல் களத்தின் விசாலத்திற்கும் மொழியைக் கையாளும் லாவகத்திற்கும் இணை நிற்கும் இன்னொரு எழுத்தாளரை சமகாலத்தில் காண்பதற்கில்லை என்று தான் தோன்றுகிறது. இதன் விளைவாக ஜெயமோகன் அதீத ஆவேசம் மிக்க பாராட்டுக்களுக்கும், அதே போல இன்னொரு கோடியில் அதே ரக வசையாடலுக்கும், சிதையில் எரித்துவிடத் தோன்றும் வெறுப்புக்கும் ஆளாகியிருப்பது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல. //
    இரு கருத்துக்கள். 1 ஒன்று ஜெயமோஹனின் விஷ்ணுபுரம் நாவலைப்பற்றி எழுதியது. இதைப்பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. வெ சா, தான் அந்நாவலைப் படித்தபின் என்ன தோன்றியதோ அதைச்சொல்கிறார். அஃதவர் சொந்தக் கருத்து. No comments.
    1. “இதன் விளைவாக…” என்று தொடங்கியதுதான் தவறு. அவர் நாவல் எழுதும் திறமையைக்கண்டு பொறாமைப்பட்டோர் தங்கள் வெறுப்பைக்காட்ட அவரை வசையாடுகிறார்கள்; சிதையில் எரித்துவிடத் தோன்றும் வெறுப்புக்கு அவரை ஆளாக்குகிறார்கள் என்ற வெசாவின் பார்வை குருடன் யானையைத் தடவி பார்த்துச் சொன்னது போலத்தான்.
    அப்படியே சரியென்றாலும் இன்னொரு எழுத்தாளர்தான் ஜெயமோஹனின் மீத் காழ்ப்பு கொளல் வேண்டும். அவர்தானே பொறாமைப்படுவார்? சும்மா ஒரு வங்கி அதிகாரியா படுவார்? இல்லை பள்ளிக்கூட டீச்சரா? அவர்களுக்கு வேற வேலையில்லை? அவர்கள் பொழப்பில இவர் மண்ணா அள்ளிப்போட்டார் விஷ்ணுபுரம் நாவல் வழியாக? சிரிப்பு வருகிறதல்ல்வா? Ve Sa tickles us in our armpits ! 🙂
    ஜெயமோஹன் மீது வீசப்படும் கண்டனக்கணைகள் பக்கங்களிலுமிருந்து வருகின்றன. அவர் நாவல் எழுதும் திறமையக்கண்டு பொறாமப்படாதவர்களும் அல்லது அவர் நாவல்களைப படிக்காதவர்கள் – இவர்களே அதிகம்- இவர்களிடமிருந்துதான் வருகின்றன.
    இதற்கு காரணம் ஜெயமோஹனின் கட்டுரைகள், மேடைப்பேச்சுக்கள், அவர் வலைதளத்தில் எழுதுப்வை, சமூகத்தைப்பற்றிய கருத்துக்கள். இவற்றால் தாக்குண்டோர், மேலும் இவரின் கருத்துக்களை ஏற்காதவர்கள்,. அல்லது இவரால் தனிநபராக, கூட்டமாக தாக்கப்பட்டோர், மாற்றுக்கருத்துடையோர் – இவர்களே இவரைக்கண்டனம் செய்து வருகிறார்கள்.
    எவரும் எவரையும் எழுத்துவடிவில் நாகரிகமாக கண்டனம் செய்வது ஜனநாயக மரபு. அதை ஜெயமோஹனோ, அவரைப்புகழும் வெசாவோ ஏற்கத்தான் வேண்டும். பதில் கண்டனஙகளையும் அவரும் வைக்கிறார். வெசாவும் வைத்துக்கொண்டுவருகிறார்.
    ஜனநாயகத்தில் வாழ்வோர் ஜனநாயக மரபுகளை ஏற்று வாழ வேண்டும்.

  3. //ஆனால் இப்போது ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர சில வருஷங்கள் ஆகின்றன. விதி விலக்காக, தலித் எழுத்துக்கள், சமீப காலமாக தலித் பற்றிய எதுவும் மிகுந்த ஆரவாரத்தையும் உற்சாகத்தையும் எழுப்புவதாலும், மிகுந்த உற்சாகத்துடன் தீவிரமாகவும் தலித் மக்களே செயல்படுவதாலும் வெகு சீக்கிரம் தலித் பிரசுரங்கள் விற்று விடுகின்றன.//
    பொய்த்தேவு போன்ற கிளாசிக்குகள் விற்பனையாகவில்லை. ஆனால் தலித்து நாவலகள் சடுதியில் விற்ப்னையாகின்றன. ஏனாம்? தலித்துகள் உறசாகத்துடன் தீவிரமாக செய்ல்படுகிறார்கள். இதற்கு என்ன பொருள் என்று எனக்குப்புரியவில்லை? என்ன உற்சாகம்? என்ன தீவிரம் சார்?
    திருமாவளவன் கட்சி நடாத்துகிறார். அவர் கூட்டம் நீங்கள் சொல்வது போல இருக்கலாம். அவர்களா இமையத்தின் கோவேறு கழுதைகள் வாங்கிப்படிக்கின்றார்கள்? They are all jingoistic mob. Nothing more can be expected from them. This mob does not like finer things of life like literature. How will they buy novels and read?
    தலித்துகளிடையே கல்வியறிவு 50 ஆண்டுகளாகத்தான் பெருகி வருகிறது. கல்வி பெற்ற தலைமுறை இப்போதுதான். அவர்களெல்லாம் இலக்கியம் படிப்பவர்கள் என்று சொல்கிறீர்களா/ எப்படி?
    என் கணிப்பின்படி, தலித்து நூல்களை தலித்தல்லாவதவர்கள் வாங்கிப்படிப்பதனால் மட்டுமே விற்பனை கூடியிருக்கலாமே ஒழிய தலித்துகளால் அல்ல.
    தலித்துகள் என்று சுகவாசிகள் ஆகின்றார்களோ அன்றுதான் அவர்கள் இலக்கியம் படிப்பார்கள். Thank God! They have not become yet!!
    சுகவாசிகளுக்குத்தான் படிக்க நேரம் இருக்கும்? உடல் உழைப்போருக்குண்டா? எந்த நாட்டு வரலாற்றிலும் எப்போதுமே கிடையாது. Literature is not for proletariat. பூஜ்வாக்களின் பொழுது போக்கு. தலித்துக்கள் பூஜ்வாக்களாகவில்லை இன்னும்.

  4. //ஆனால் என்னால் புரிந்து கொள்ளத் தான் முடியவில்லை.//
    கொஞச‌ம் முயன்றால் புரிந்து கொள்ளலாம்.
    ஒரு சில பத்தாண்டுகளாக தமிழில் நூல்களும் எழுத்தாளர்களும் நன்கு விளம்பரப்படுத்தப்படுகின்றார்கள். நூல கண்காட்சிகள் தற்காலத்தில் மெகா போஸ்டர்கள் போடப்பட்டு பெரிய மைதானங்களில் நடாத்தப்படுகின்றன. முன்பு சிறியளவிலே வந்தது தெரியாதபடி போய்விடும். மதுரை மக்கள் நெருக்கமில்லா நகரம். ஆனால் நூல் கண்காட்சிக்கு வந்த கூட்டம் பெரிது. இம்மாத இறுதியில் ஒன்று தமுக்கத்தில் நடக்கவிருக்கிறது. ஈராண்டுகளாக சென்னை நூல்கண்காட்சிகளைக்கண்டு வியந்தேன். நல்ல மார்க்கெட்டிங் ட்ரிக்ஸ். பரிசுகள், கேளிக்கைகள். எழுத்தாளர் சந்திப்புகள். விற்பனைக்கழிவுகள் என்று ஈர்ப்புகக்ள். முன்பு கிடையா.
    எழுத்தாளர்களைப் பற்றி புகழ்ச்சிகள் உண்மைக்கும் மாறாக செய்யப்படுகின்றன. கிட்டத்தட்ட சினிமா நடிகருக்குண்டானதைப்போல. மெகா போஸ்டர்களில் எழுத்தாள்ர்கள் தீவிர சிந்தனையுடன் போஸ் கொடுக்கிறார்கள். இவர்களைப்படிக்காவிட்டால் நம்மை கலாச்சாரமில்லாக்காட்டுமிராண்டியனெ நினைபார்களோ எனத்தோன்றும்.
    பிரபல எழுத்தாளர்களெல்லாம் வலைதளம் வைத்து இரசிகர் கூட்டத்தைச் சேர்த்துவிட்டார்கள். இரசிகர்கள் இவர்களை மேலும் பிரபலடுத்து உதவுகிறார்கள். இணையம் தமிழ் இலக்கியத்துக்கு பெரும் சேவை செய்துவருகிறது.
    அடுத்து, ஆங்கில அறிவு. ஆங்கிலம் பரவுகிறது. ஆனால் அஃது இலக்கியம் படிக்கின்றளவுக்கு இல்லை. ஆபிசுக்கு உதவும். எனவே இலக்கியம் வேண்டுமென்றால் தமிழுக்குத்தான் வந்து தீரவேண்டும். ஆங்கிலம் கற்று வேலைக்குச்சென்ற பின் – நேரம் கிடைக்கிறது – எனவே இலக்கியம் வேண்டும். அந்தோ அதை ஆங்கிலத்தில் படிக்க மொழியறிவு பத்தாது. தமிழ் பத்தாங்கிளாசு போதும் ஜெயமோஹனையும் ஜெயகாந்தனையும் படிக்க.
    இஃதெல்லாம் நல்லதுதான் மொத்தத்தில் பார்த்தால். தமிழ் பிழைச்சுக்கிடக்கும். ஓய்வு நேரத்திலாவது படிக்கிறானே! இல்லையா?
    Still too much reading in Tamil is bad. It creates linguistic fanaticism and Tamil literature may be rooted in materialistic pursuits. English will be slowly leaving – already left?- Tamil life. The writers and publishers will fatten their purses. Bad literature will parade in the dress of good literature.

  5. ஈ.வே. ராமசாமி நாயக்கர், சி. ராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி ராமச்சந்திரன், மு.கருணாநிதி ஆகிய ஏழுபேரும் அதில் மிக முக்கிய மானவர்கள். தமிழனின் வாழ்க்கையை, தலைவிதியை நிர்ணயித்தவர்கள் – See more at: http://solvanam.com/?p=28294#sthash.6XRmuqOx.dpuf
    யார் அந்த ஏழாவது மனிதர்?
    சி சுப்பிரமணியமா?

Leave a Reply to pon.kanthasamyCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.