மீனாட்சி கொலு

‘இன்னிக்குதான் அமாசையா… காலம்பற நாகு வரச்சயே நினச்சேன்.  பாத்து… பாத்து வைடா பொம்மைய’ என்றவாறே தர்மு மாமி உள்ளே வந்தாள்.

அப்பொழுதுதான் அரைமணிக்கு முன்பு, பரணிலிருந்து இறக்கி வைக்கபட்டிருந்த, கொலுபொம்மைகள் நிறைந்த, மூன்றடிக்கு மூன்றடி சைஸ் மரப்பெட்டியைச் சுற்றி, மணி மாமா மற்றும் அலமு சித்தி சூப்பர்விஷனில் சங்கு, மாச்சு, சுப்புணி, கௌரி என்று நண்டும் சிண்டுமாக சகலரும் உட்கார்ந்து கொண்டு, காகிதங்களில் சுற்றி வைத்திருந்த பொம்மைகளை பிரிப்பது, துடைப்பது என்று கலகலவென இருந்த சூழல், தர்மு மாமியின் வருகையை ஒட்டி சட்டென இறுக்கமாகியது.

தர்மு மாமி வெளுப்பு நிறம்தான். ஆனால் எப்பவும் ஒரு நைந்து போன தோற்றத்தோடு சோகமாகவே இருப்பார். கசங்கிய, மங்கிய உடையும், கலைந்த தலையுமாக நாலுநாட்கள் உழைத்த ஆயாசத்தோடே தெரிவார். சிங்கம், புலி என்று சின்னச்சின்ன மண் பொம்மைகளை தனியே அடுக்கிக் கொண்டிருந்த விச்சு சட்டெனெ பிரகாசமாகி ‘மாமி! புது பொம்மை எட்த்துண்டு வந்திருக்கியா’ என்றான் உற்சாகமான குரலில்.

‘இல்லடா கண்ணா,  இன்னிக்குத்தான் அமாசைன்னு தெரியாது.  நாளக்கி கொண்டுண்டு வர்றேண்டா பட்டு’ உருவத்துக்கு சம்பந்தமில்லாத கணீர் குரல் மாமிக்கு.

‘பெருசா பஞ்சாங்கம் பாத்துதான் பண்ற மாதிரி. அமாவாசையுமாச்சு ஆட்டுகுட்டியுமாச்சு’ மணி மாமாவின் சன்னமான கமெண்ட்டின் குறி தப்பவில்லை என்பது மாமியின் அடிபட்ட பார்வையில் தெரிந்தது.  மணி மாமாவிற்கு தாசில்தார் ஆபிசில் வேலை.  பேருக்குத்தான் உத்தியோகமே தவிர, சொத்து நிர்வாகம் எல்லாம் வைத்தி தாத்தாதான். இரண்டாயிரம் சதுர அடியில் நாயக்கர் புதுத்தெரு வீடு தவிர, திருமங்கலம் பக்கம் நஞ்சையும், வங்கிக் கணக்கில் பணமுமாக தலைமுறை தாண்டிய சம்பத்து. மணி மாமாவிற்கு திருமணம் ஆன கையோடு மாடியில் தனியாக இரண்டு ரூம்கள் எழுப்பிக் கொடுத்துவிட்டார்.  சித்திரை திருவிழா, பங்குனி உத்திரம், தீபாவளி திருநாள் என்று வருஷம் பூராவும் பண்டிகைகளுக்கு வந்து போகும் பெண்களும், மாப்பிள்ளைகளும் பேரக்குழந்தைகளுமாக ஜேஜே-வென நிறைந்திருக்கும் வீடு, நவராத்திரி கொலுவின் போது கொஞ்சம் ஓவர் கிரௌடாகவே இருக்கும்.

Kolu

தர்மு மாமியின் கணவர் சுப்புராஜூக்கு தெற்குவாசலில் அரிசிமண்டியில் வேலை. பத்திரிகைகளில் ‘சுஜா’ என்ற பெயரில் படமெல்லாம் வரைவார். நாயக்கர் புதுத்தெரு சூழலுக்கு முற்றிலும் அந்நியமானவர்.  சொல்லப் போனால் தர்மு மாமியே அந்தத் தெருவுக்கு அந்நியம்தான்.  ஹரிஹரசுதன் வீட்டு மாடியில் நடக்கும் தையல் பள்ளியில் ஆசிரியை.  பொத்தி வைத்தாற்ப் போல், அவர் தெருவில் போவதும் வருவதும் தெரியவே தெரியாது. நவராத்திரி சமயத்தில் மட்டும் விதிவிலக்காக வைத்தி தாத்தா வீட்டுக் கொலுவில் அதிகம் தெரிவார்.  கௌரிக்கு பூ தைக்கிறேன், விச்சுவிற்கு கிருஷ்ணர் வேஷம் போடுகிறேன் என்று ஏதோ ஒரு சாக்கு.  அந்த பத்து நாட்களும் வைத்தி தாத்தா வீட்டில் ‘மாமி, மாமியென’ எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் தர்முதான்.

‘டியே.. இன்னொரு ரவுண்டு ஆடுங்கோடி… பாட்டியாண்ட சொல்லி ரெண்டு ரூவா வாங்கித் தாரேன்’ கோலாட்டம் ஆட வரும் குட்டிப் பெண்களை கூடத்தில் நிறுத்தி எண்டர்டெய்ன்மெண்ட் கோஷண்ட்டை ஏற்றி விடுவார்.  ‘அஞ்சாம் நாளுக்கு கொண்டக்கடலைக்கு ஊறப்போட்டுக்கலாம். இன்னிக்கு கடலபருப்பு சுண்டல் பண்ணிடு’ என்றோ ‘எப்பபாத்தாலும் அதே ஊத்துக்காடு உருப்படிதானா, பாபநாசத்தோட மீனாட்சி பாட்டை பாடுங்கோளேண்டி…’ என்று நவராத்திரி தின நிகழ்ச்சி நிரலை நிர்மாணிப்பதிலும் தர்மு மாமிக்கு முக்கிய பங்குண்டு.

கிருஷ்ணவேணிப் பாட்டி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீரோடு கொண்டு வந்த முக்கால் அடி உயர, பெருவயிறு செட்டியார், ஒன்றரையடி உயர குழலூதும் கண்ணன், விடையேறிய சடைமுடிநாதர் பொம்மை என்று பல கொலுபொம்மைகள் கருக்கழியாத பொலிவுடன் இருப்பதற்கு தர்மூதான் காரணம்.  சின்னச் சின்ன டப்பாக்களில் பல வண்ணங்களை குழைத்து, அந்தக்கால கொலு பொம்மைகளை அதே ‘பழமை’ வாசத்தோடு மீண்டும் பிரகாசமடைய வைப்பது சாதாரண வேலையில்லை. அதுதவிர மரப்பாச்சிக்கு உடைகள், பாசிமணி பொம்மைகள், பார்க்குக்கு கலர்ப் பொடி தயாரித்தல் என்று பல டிபார்ட்மெண்ட்டில் புகுந்து புறப்படுவார்.

‘என்ன பொம்மை அலங்காரமோ… கொண்டு போன பொம்மைகள்ல பாதி திரும்ப வர்றதேயில்ல. என்னமோ வருஷா வருஷம் சீர் கொண்டு போறா மாதிரின்னா எடுத்துண்டு போறா’ என்று முணுமுணுப்பார் மணி மாமா.

‘ஐய…. செத்த சும்மாத்தான் இருங்களேன்… பாவம்.  காதில விழுந்தா மனசு என்ன பாடுபடும்’ என்று பல்லை இடுக்கிக் கொண்டு நாகு மாமி கடிந்து கொண்டாலும் மணி மாமா அடங்கவே மாட்டார்.  தர்மு மாமியைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மிளகாயை அரைத்து அப்பினாற்ப்போல எரிச்சல் பற்றிக் கொண்டு வரும்.

தர்மு மாமியின் வீடு வடக்காவணி மூலவீதி பக்கம் ஏதோ சந்தில் இருப்பதாகச் சொல்வார்கள். வேணி பாட்டிக்கு தூரத்து சொந்தம் என்றும், மணி மாமாவிற்கு பண்ணிக்க முயன்று தட்டிப் போய்விட்டதாம்.  பாட்டிக்கு அந்த ஆற்றாமை எப்பொழுதும் உண்டு.

meena_kalyanam

‘என்னமோ ஓவியமா வளத்தேன்னு சிலுப்பிப்பான் அவ அப்பன். அதான் இவ ஓவியக்காரனையே பிடிச்சிண்டுட்டா’.

சுப்புராஜ் பார்ட்டைமாக ஓவியப்பாடம் ட்யூஷனெல்லாம் எடுத்துக் கொண்டிருந்தார். தர்மு மாமி, அலமு சித்தி, நாகு மாமி என்று ஒரு செட்டாக அவரிடம் கற்றுக் கொண்டது ஒரு காலம். கல்யாணம் ஆனதும் சுப்புராஜ் ட்யூஷனைப் பெரிதும் குறைத்துக் கொண்டுவிட்டார்.  அப்புறம் பத்திரிகைகளில் மட்டும்தான் படம் போட்டுக் கொண்டிருந்தார்.

‘ஆமாம் அப்படியே பண்ணிண்டிருந்தாலும்… இந்த மட்டிலும் வாயில விழுந்து எழுந்திருக்கறதுக்கே ஏழு ஜென்மத்துக்கும் புழுங்கிப் போயிரும். அப்படியொரு நாக்கு இந்த மனுஷனுக்கு’ என்பாள் நாகு மாமி.  கல்யாணத்துக்கு முதல்நாள் நாந்தி ஆன கையோடு மணிமாமா குற்றாலத்திற்கு ஓடிப் போய்விட்டாராம்.  ராத்திரி ஒரு மணிக்கு கூட்டி வந்து அரக்கபறக்க ஆறு மணி முகூர்த்தத்தில் தாலி கட்ட வைத்தார்கள்.  ‘காசியத்திரையும் கிடையாது. கழுத யாத்திரையும் கிடையாது அந்த கருமாந்திர கல்யாணத்துக்கு’ நாகு மாமிக்கு மனசு போறவே இல்லை.

தர்மு மாமி வந்தாலே ஒரு தனிப் பரிவோடு ‘வாங்கோ அக்கா, ஆத்துல எல்லோரும் சௌக்கியமா’ என்பாள்.

‘ஆறேழு குழந்தைகள் துள்ளி விளாட்றதாம்.  நர்சரி ஸ்கூல்தான் ஆரம்பிக்கனும்’ மணி மாமாவின் குத்தலுக்கு வெளுத்துப் போன தர்மு மாமியின் முகம் இன்னமும் வெளுப்பாகும்.

‘அந்த முட்டிங்காலை கட்டிண்டு இருக்குமே குழந்தை பொம்மை.   எங்கடா வச்சேள் அதை?’ என்றவாறே தர்மு மாமியும் கொலுபொம்மைகள் கூட்டத்தினுள் புகுந்தாள்.  அண்ணாந்து பார்க்கும் துருவன், வன்னிமரத்தடியில் தவம் செய்யும் பார்வதி, காட்டு யானை, ராஜபுத்திர வீரன் பொம்மை, பச்சைக்கலர் மீனாட்சி திருக்கல்யாணம் என்று சிலதை ஒதுக்கி

‘போனவிசவே பாத்து வச்சிருந்தேன்.  பெயிண்ட் நிறைய உதிர்ந்துடுத்து பாரு. இதெல்லாம் நாளைக்கு அலங்காரம் பண்ணி கொண்டு வரேண்டி இவளே.  அப்புறம், கோவில் கடைல ஒரு ஆய்ச்சியர் குரவை செட் பாத்தேண்டி. மூங்கில் பிளாச்சுல நெளிச்சு நெளிச்சு அப்படி அழகா பண்ணியிருக்கான்.  நாளைக்கு எடுத்துண்டு வர்றேன். மேல்படியில வச்சிடனும்’ என்று சித்தியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

வலப்புறம் செவ்வண்ண சேயோனும், இடப்புறம் கார்வண்ண கருநனும் நிற்க நடுவில் மரகத பச்சைநிறத்தில் மீனாட்சி இடை ஒசிந்து நிற்கும் திருமணத் திருக்கோலம். மீனாட்சியின் கைத்தலம் பற்றிய சொக்கனுக்கு, அழகர் நீர்வார்த்து கன்யாதானம் செய்வது போன்ற தத்ரூபமான சிற்பம். முன்னே நீட்டியிருந்த கைகளில் மட்டும் விரிசல் விட்டுப் போய் மண்ணெல்லாம் உதிர்ந்து கம்பிகம்பியாக நீட்டிக் கொண்டிருந்தது..

‘அந்த கடம்பவன சோலை பொம்மையில், எப்படிக்கா அவ்ளோ அம்சமா மருதாணி வச்ச விரல்லாம்…. பாத்து பாத்து பிரமிச்சுப் போயிட்டோம். சொல்லிக் கொடேன் எங்களுக்கும்.’ நாகு மாமி கண்கள் மினுமினுக்க கேட்டாள்.

‘தாத்தாட்ட சொல்லிட்டு எடுத்துண்டு போச் சொல்லு’ மணிமாமா சுப்புணியிடம் முணுமுணுத்ததை கேட்டும் கேட்காதது போல தர்மு மாமி படியிறங்கி போய்விட்டாள்.

‘சீலப்புரம் மாரியம்மனுக்கு நேர்ச்சை வச்சிருங்கோக்கா.  இந்தவிச கண்டிப்பா அவோ மனசு வச்சிருவா பாருங்கோ’ என்று காதில் கிசுகிசுத்த நாகு மாமியிடம் கண்களாலே விடைபெற்றுக் கொண்டாள்.

அடுத்து மணி மாமா தலைமையில், பரபரவென கொலுப்படிகள் கட்டும் வேலை தொடங்கியது. ரேழிப் பக்கமாயிருந்த பெரிய கட்டிலைக் கூடத்தின் ஈசான்ய மூலையில் போட்டு அதற்கு மேல் திண்ணையிலிருந்த கோணக்கால் பெஞ்ச்சை நிறுத்தி வைத்து சணல் போட்டு கட்டி, மிச்சமிருக்கும் பாதி கட்டிலில் சேந்திப் பலகையைப் போட்டு நிறுத்தியாகிவிட்டது.  வைத்தி தாத்தாவின் பிரத்யேக அறையிலிருந்து மரக் கைப்பெட்டிகளை தூக்கி பெஞ்சு மேல் வைத்தால் முதல் மூன்று படிகள் தயாராகிவிடும். அடுத்து வைத்தி தாத்தா தினப்படி பாராயணம் செய்யும் சாய்வு மரப்பெஞ்சைப் போட்டு, அதன் கைப்பிடிகளுக்கு மேலே ஒரு சேந்திப் பலகை வைத்து, அதன் முன்னால் அடுக்குளிலிருந்து தூக்கி வந்த குட்டைப் பெஞ்சை போட்டு, அதற்கு முன்னால் நியூஸ்பேப்பர்களை அடுக்கி அதன் மேல் அரிசி டின்களை படுக்கப் போட்டு, கடைசியாக ஊஞ்சல் பலகையை கீழே கிடத்தி, மொத்தம் ஏழு படிகளை உருவாக்கி விட்டார்கள். எட்டுமுழ சலவை வேட்டியை ஒற்றையாக பிரித்த்ப் போட்டு, தெற்கு பக்கம் சுவரோடு போய்விடுவதால் வடக்குப் பக்கத்திற்கு மற்றொரு வேட்டியை பிரித்து திரையாக தொங்கவிட்டு வரிசையாக குண்டூசியால் பிணைத்து, முதல் பொம்மையாக விடையேறிய சடைமுதல்வனை தூக்கி வைக்க கொலுப்படி கட்டும் வைபவம் இனிதாக நிறைவேறியது.

வைத்தி தாத்தாவிற்கு எல்லாம் துல்லியமாக இருக்க வேண்டும் ‘கிழக்கால நாலு விரக்கடை தள்ளுடா அந்தப் பலகையை… டேய்ய்…டேய்ய்ய்… ரொம்பத் தள்ளிட்டப் பாரு… மேக்கால ரெண்டு விரக்கடத் தள்ளு இப்ப. சுவத்தண்டை ஒட்டிடாதே… ரெண்டங்குலம் இருக்கட்டும்’ அந்தப் பலகை நடு செண்ட்டரில் நச்சென நிற்கும்வரை விட மாட்டார் மணி மாமாவஇ. அதைவிட பொம்மைகளின் வரிசையும், இடங்களும் மிகவும் முக்கியமானவை தாத்தாவிற்கு.

முதலிரெண்டு படிகளில் வரிசையாக கிருஷ்ணர், தாமரைப்பூவின் மேலிருக்கும் லட்சுமி, மயில்மேலிருக்கும் முருகன், வீணை வாசிக்கும் சரஸ்வதி, நடுவில் காளை வாகனத்தில் சிவபெருமான், சங்குசக்கர கதாதிரியாக விஷ்ணு என்று கடவுளர்கள் கூட்டமாக நிற்க. அடுத்ததடுத்த படிகளில் மார்கண்டேயனை ரட்சிக்கும் சிவபெருமான், துருவன், சிலப்பதிகார கண்ணகி என்று புராண கதை பொம்மைகள் நிரப்பத் தொடங்கினார்கள்.

‘எங்கடா, மீனாட்சி திருக்கல்யாணம்?’

‘தர்மூ எடுத்துண்டு போயிருக்காளாம். பெயிண்ட் அடிச்சிண்டு வரன்னு’

‘அவளுக்கு வேற வேலையே இல்ல. போனவிசை பழக்கூடை செட் கொண்டு போனாளே… கொண்டு வந்து கொடுத்தாளோ?’

‘நம்ம சங்குதான், அதை உடைச்சிட்டு ரகசியமா கொல்லப்புறம் போய் போட்டுடுத்து’ என்றாள் வேணி.

‘ஆமாம். காணாமப் போனது அத்தனையும் அவன் உடச்சதுதான்னு சொல்லிடு.  அவளச் சொன்னா உனக்கு ஆகாதே’ என்று சிடுசிடுத்தார் மணி.

விச்சு ஏதோ புரிந்தாற்ப்போல ‘மீனாச்சி… மீனாச்சி காணோம்….’ என்றான்.

‘மீனாச்சிய கள்ளன் தூக்கிண்டு போயிட்டான் போடா’ என்றார் மணி மாமா.

மீனாட்சி திருக்கல்யாண பொம்மை வைக்கும் இடத்தில் எந்த பொம்மை வைப்பது என்று தீர்மானிக்கப்படாமல், மூன்றாம் படியின் நடுவில் வெற்றிடம் உருவாகிவிட்டது. பிறகு அடுத்து அடுத்து படிகளில் காந்தி, நேரு, சத்தியமூர்த்தியெல்லாம் கொண்ட விடுதலை வீரர்கள் செட், விதவிதமான சைஸ்களில் மூன்று தசாவதார செட், லம்போதரவிற்கு அபிநயம் செய்யும் நாட்டிய பிள்ளையார்கள், முறைத்துப் பார்க்கும் பூனை, படுத்து உறங்கும் நாய், பீங்கான் செட்டுகள், பித்தளை பொம்மைகள், மரப்பாச்சிகள், பாசிமணி கலெக்ஷன், காய்கறி, பழவகைகளுடன் செட்டியார் கடை, சொப்பு சாமான்கள், சோழிகள் வைத்து பார்டர் கட்டிய, கலர்பொடிகள் தூவிய வண்ணப் பார்க்குகள், காலி இஞ்செக்ஷன் பாட்டில்களை சேகரித்து உருவாக்கிய கண்ணாடி மண்டபம் என்று ஜெகஜ்ஜோதியான கொலு உருவாகியது.

வைத்தி தாத்தாவிற்கு மட்டும் மனசு ஆறவில்லை.  மீனாட்சி திருக்கல்யாணம் இல்லாமல் ஒரு கொலுவா?

மறுநாளிலிருந்து வீடு வீடாக கொலுவிற்கு அழைக்க கௌரி, கமலா, பர்வதம், ராஜி என்று கூட்டமாக கிளம்பிப் போனார்கள்.  கூடவே ஆறாவது படிக்கும் சங்குவும், எல்கேஜி போகும் விச்சுவும் ஆண்பிள்ளைத் துணை.  ஜட்ஜ் முத்தையா பிள்ளை வீட்டு கொலுவில் அருமையாக தேர்த்திருவிழா செட்டே போட்டிருந்தார்கள்.  ‘அவோ மாட்டுப்பெண் கொண்டுவந்ததாம்.  பழனி பக்கம் கலையமுத்தூர்ல பண்ணி கொண்டுவந்தாளாம்’ என்று ஏகத்துக்கு கதை பேசிவிட்டு திரும்பி வந்தார்கள். தளவாய்தெரு அப்பளம் மாமி வீட்டு வத்சலா ‘சுஜன ஜீவனாவை’ சுருதியில்லாமல் பாடிக் கொண்டிருக்க, விச்சு வந்ததும் தர்மூ மாமியைத் தேடினான். ‘புது பொம்ம இல்லியா? மீனாச்சி மீனாச்சி’

‘சொன்னேனே…. மீனாச்சிய கள்ளன் கொண்டு போயிட்டாண்டா கோய்ந்தே’ என்றார் மணிமாமா.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுரம் வழியே உள்ளே போனால் இரண்டாள் உயரத்துக்கு பெரிய கிளிக்கூண்டு இருக்கும்.  கீச்மூச்சென கத்தியபடிக்கு ஏகதுக்கு கிளிகள் கத்திக்கொண்டு ஓட, சுற்றி நின்று பார்க்கும் கூட்டத்தினர்  ‘மீனாச்சிய கள்ளன் கொண்டு போயிட்டான்’ என்று உரக்கக் கத்துவார்கள்.  கிளிகள் எல்லாம் அரக்கப்பரக்க ‘அக்கா… அக்கா… ‘எனக் கூப்பாடு போட்டுக்கொண்டு பரபரக்கும்.

விச்சுவின் பிடிவாதம் ஏறிக் கொண்டே போனது. ‘மீனாச்சி வேணும்… மீனாச்சி வேணும்’. செல்போன் என்ன டெலிபோனே அவ்வளவு பரவியில்லாத பிட்ரோடாவிற்கு முந்தைய காலகட்டமாதலால், ஏதோ பிபி நம்பரெல்லாம் பிடித்து தர்மு மாமியின் வீட்டுக்கு தகவல் சொன்னார்கள்.  இரவு பதினோரு மணிக்கு சைக்கிளில் சுப்புராஜே வந்தார். வாசல் திண்ணையோடு மணிமாமா அவரை மறித்து பேசிக் கொண்டிருக்க வேணி பாட்டிதான் உள்ளே கூட்டிக் கொண்டு வந்தார். நவராத்திரி சமயத்தில் வீட்டுக்கு யார் வந்தாலும் பெரிய குழல்விளக்கை போட்டு, சீரியல் செட்டெல்லாம் எரியவிட்டு கொலுவை  காட்சிப்படுத்துவது தாத்தாவின் வழக்கம்.

‘லேசா ஃபீவர்னு சொன்னாப்ல. ப்ச்.. ஈவ்னிங்காத்தான் டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனேன். பக்கத்திலதான் விஸ்வநாதன்னு க்ளினிக் வச்சிருக்கார். ப்ச்… மலேரியா மாதிரியிருக்குன்னு டவுட்டா சொல்லிட்டாப்ல. என்னன்னு சொல்ல., ஒரே புலம்பல்.  பொம்மையெல்லாம் கொண்டு கொடுத்திடனும்னு தலகீழா நின்னாப்ல. அப்பதான் கீழ் வீட்ல ஃபோன் வந்திருக்குன்னு சொன்னாங்களா… உடனே போய் புள்ளய பாத்திட்டு வான்னு ஒரே அழுகை. ப்ச்… அதான் வீட்ல விட்டுட்டு நா மட்டும் வந்தேன். அட்டகாசமான கொலு சார்.  ப்ச்.. என்னா கலெக்ஷன்…என்னா கலெக்ஷன்’

என்று அவர் வியந்து பாராட்ட வைத்தி தாத்தாவிற்கு சந்தோஷம் பற்றிக் கொண்டது.

’35 இயர்ஸா கண்டினியூஸா வச்சிண்டிருக்கேன். அதுக்கு மின்னாடி தென்காசிக்கு ட்ரான்ஸ்ஃபர்ல போனபோது ஒருவருஷம் தட்டிப் போச்சு. அதுக்கு மின்ன…’

‘ப்ச்… இப்பல்லாம் எங்க சார் வர்றது இந்த மாதிரியெல்லாம். மொழுக்கட்டின்னு பிடிச்சு வச்சமாதிரி பொம்மை போடறாங்க. என்னா நெளிவு, என்னா சுளிவு. யம்மாடி’

சொல்லிக்கொண்டே சுப்புராஜ் கையிலிருந்த வயர்கூடையிலிருந்து பெயிண்ட் அடிக்கப்பட்ட பொம்மைகளை எடுத்து வைத்தார். அண்ணாந்து பார்க்கும் துருவன், வன்னிமரத்தடியில் தவம் செய்யும் பார்வதி, காட்டு யானை, ராஜபுத்திர வீரன் பொம்மை எல்லாம் இருந்தது. மீனாட்சி திருக்கல்யாணம் சீர்செய்யப்பட்டு பளிச்சென இருந்தது. கூடவே மூங்கில் பிளாச்சில் செய்த ஆய்ச்சியர் குரவையும்.

‘நல்லா கிளேல ஃபெஃவிகால் கலந்து பக்காவா கோட்டிங் கொடுத்து வச்சிருக்கேன் சார்.. தோ… இது புது மாடல் சார். ப்ச்ச்… பேம்பூ ஆர்ட்னு சித்திரமஹால்ல எக்ஸிபிஷென்லாம் போட்டிருந்தாங்க.  ஆய்ச்சியர் குரவை பாருங்க. என்னா ப்யூட்டி…’

பாதி தூக்கமும், பாதி வீம்பு விசும்பலுமாய் இருந்த விச்சு ‘மீனாச்சி…மீனாச்சி….’ என்று உற்சாகமாக வந்தான்.

‘மீனாச்சிய கள்ளன் கொண்டு போகலையா’ என்றான் உற்சாகமாக.

சுப்புராஜ் ‘மீனாச்சிய கள்ளனெங்க தூக்கிட்டுப் போனான்… கள்ளன் கையப்புடிச்சுக் கொடுக்க சொக்கன்லா கொண்டுட்டுப் போனான்… ‘ என்று சொல்லி கடகடவென சிரித்தார்.

விச்சுவின் உற்சாகம் பெருகி பொங்கியது. ‘இப்பவே கொலுவில் வச்சிருவமா’

‘இனிமே எங்க வக்கிறது… அதான் பூஜையெல்லாம் செஞ்சு ஆவாஹணம் பண்ணியாச்சேடா… அடுத்த வருசம் பெரிசா, கலர்கலரா  வாங்கி வச்சுக்கலாம்டா’ என்று மணிமாமா சொல்லிவிட்டு பொம்மைகளைத் தூக்கி உள்ரூம் அலமாரியில் வைத்துவிட்டார். அந்த ராத்திரியிலும் சுப்புராஜிற்கு காப்பி உபச்சாரம் செய்து வழியனுப்பி வைத்தார்கள்.

அன்றைய மதராஸில் சௌகார் ஜானகி வீட்டு கொலுவைப் பற்றி பிரமாதமாக பேசுவார்கள். அதற்கு அடுத்தபடியான அரிய கலெக்ஷன் மதுரை வைத்தியநாதன் வீட்டு கொலுதான் என்று வைத்தி தாத்தாவே அடித்து சொல்வார்.  அதை ஓரளவுக்கு நாயக்கர் புத்துதெரு மக்களும் நம்பினார்கள்.  பத்துநாட்களும் யாராவது பார்வையாளர்கள் வந்து கொண்டேயிருக்க தாத்தா தன்னுடைய கொலு கலெக்ஷனின் பெருமையைப் பற்றி வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார்.

‘அந்த செட்டியார் பொம்மை இருக்கே… அட்லீஸ்ட் ஸிக்ஸ்டி இயர்ஸாவது இருக்கும்…’ என்றுத் தொடங்கினால் Sotheby-ல் ஏலம் விடுவது போல் அதன் ‘பழமையை’ப் பற்றி வரிசையாக சொல்லிக் கொண்டேயிருப்பார்.  அடுத்த நாலைந்து வருடங்களிலேயே செட்டியாருக்கு பதினைந்து வயது கூடி ‘செவண்டி ஃபைவ் இயர்ஸ’ ஆகிவிட்டிருக்கும்.

கிரிமினல் லாயர் ஷஹாபுதீன், போஸ் க்ளினிக் டாக்டர் சந்திரபோஸ், மாடர்ன் ரெஸ்டாரெண்ட் பாலாஜி என்று வைத்தி தாத்தாவின் ப்ரிவிலிஜ்ட் விருந்தாளிகள் பட்டியல் பெரிது.  நான்காம் நாள் கொலு சற்று அதிக பரபரப்போடு விடிந்தது.  மதுரை ரூரல் டிஐஜி மொகந்தி வந்திருந்தார். இரண்டுபுறமும் நீளமான குழல்விளக்குகள் எரிய, சுற்றிலும் உறுத்தாத வடிவத்தில் சீரியல் செட் பல்புகள் மின்ன ஜெகஜ்ஜோதியான கொலுவரிசையை பிரமிப்புடன் பார்த்தார்.

‘வாவ், சூப்பர் கலெக்ஷன். ‘ தன் தலையில் இல்லாத தொப்பியை எடுத்து வணங்குவதைப் போல் வைத்தி தாத்தா முன் பாவனை செய்து ‘இவ்வளவு வருடங்களாக தொடர்ச்சியாக இந்த பொம்மைகளைப் பாதுகாத்து வருவது சாதாரண விஷயமில்லை. உங்கள் ஆர்வம் அளப்பரியது.  பிரமாதமாக மெயின்டைன் செய்கிறீர்கள். பர்ட்டிகுலர்லி, அந்த… அந்த… செட் என்ன?  என்று தேடித்தேடி விசாரித்தார்.  சாரதி ப்ரிண்டர்ஸ் நடத்தும் வெங்கடாசலம் கூட வந்திருந்து போட்டோ எல்லாம் எடுத்தார்.

சார்! அந்த பொம்மைய கைல வச்சிண்டு ஒரு போஸ் கொடுங்கோ!

அய்யே அதெல்லாம் ஆவாஹனம் பண்ணது வெங்கி. தர்மூ ஆத்துக்காரர் புதுசா பெய்ண்ட் அடிச்சு கொட்த்தாரே… அத எட்த்துண்டு வாயேன் மணி!

டிஐஜி கையில் மீனாட்சி திருக்கல்யாண பொம்மையோடு நிற்கும் படம் அந்தவார ஹிந்து சப்ளிமெண்ட்டில் சின்னப் பெட்டி செய்தியாகவே வெளிவந்தது.

ஆயுதபூஜையன்று துர்க்கை பூஜையை முடித்துவிட்டு, சாஸ்திரத்திற்கு கைக்கு எட்டினார்போல் நான்காம் படி மயில்வாகன பொம்மையை படுக்க வைத்துவிட்டு கொலு நிறைவாக முடிந்ததை வைத்தி தாத்தா குறிப்பால் உணர்த்த, மணிமாமா சீரியல் செட்டுகளையெல்லாம் பிரித்து எடுத்து உள்ளே வைத்தார்.  துணி காயப்போட எடுத்துப் போகும் பெரிய வட்ட பிளாஸ்டி Tubபை எடுத்து வந்து சின்ன பொம்மைகளையெல்லாம் பேப்பரில் சுருட்டி அடுக்கி மாடிக்கு மாச்சுவும் சுப்புணியும் எடுத்துப் போக, உயரமான பொம்மைகளை எல்லாம் உள்ரூம்  அலமாரியில் ராஜியும் கௌரியும் அடுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.  ‘சங்கு எங்கடா?  ஏதும் பொம்மய தூக்கிட்டுப் போய்ட்டானா…. கொல்லப்புறம் பாரேன்’

விச்சு பதட்டமாக கொல்லைப்புறத்திற்கு ஓடினான். ‘மீனாச்சி… மீனாச்சி…. சொக்கன் தூக்கிட்டுப் போயிட்டான்… மீனாச்சி…. டேய் சங்கு…’

‘டேய் ஏண்டா கத்தறே…. தோ… இங்கதான் இருக்கு. எட்துண்டு போய் குடு’ என்ற நாகு மாமி துவைக்கும் கல் மேலே உட்கார்ந்து கொண்டு நகத்தைக் மென்று கடித்தவாறு இருந்தாள்.. துவைக்கும் கல்லிற்கு பக்கத்தில், வாலில்லாத புலியும், கையுடைந்த ஆச்சியும் இருக்க, திருக்கல்யாண பொம்மையில் கள்ளனின் நீட்டிய கை விரிசல் விட்டிருக்க, சொக்கனின் மூக்கு உடைந்து இருந்தது.

‘சங்கு உடச்சிட்டானாம்மா அவ்ளோத்தையும்’ என்று சோகத்துடன் பார்த்தவன், சட்டென உற்சாகமாகி ‘அப்போ மாமி நெக்ஸ்ட் கொலுவுக்கு புது பொம்மை கொண்ட்டு வருவாளா….’

மூளியாகிப் போன சொக்கனுக்கும் கள்ளனுக்கும் இடையே மீனாட்சி மினுமினுப்பாக நின்றுகொண்டிருக்க விச்சுவைப் பார்த்து நாகு புன்னகைத்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.