மழைக் காளான்

rain-village

இரண்டு நாட்களாக விடாது பெய்யும் மழையால் ஊரே வெள்ளக்காடாக மாறியிருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்… கண்மாய் எல்லாம் நிரம்பி சறுக்கை வழியாக தண்ணீர் வெளியாக ஆரம்பித்துவிட்டது. இரவெல்லாம் ஊத்தோ ஊத்தென்று ஊத்திய வானம் இன்னும் வெளிவாங்கவில்லை… தூறலாக பெய்து கொண்டுதான் இருந்தது.

குளிருக்கு இதமாக கருப்பட்டி போட்ட வறக்காப்பியை குடித்தபடி “அப்பிய மாசத்து மழங்கிறது சரியாத்தான் இருக்கு… இந்த ஊத்து ஊத்துது… வெளிய தெருவ போக முடியாம… எப்பத்தான் வெளி வாங்குமோ என்னவோ… நம்ம கம்மாய் சறுக்கை எடுத்துக்கிச்சுன்னு மாரி முத்து சொன்னான். இன்னேரம் தாவுச்செய்ய மறவங்கம்மாத் தண்ணி புடிச்சிருக்கும்…” என்றார் ராமசாமி

“காபிய குடிச்சிட்டு குடைய எடுத்துக்கிட்டு வெளிய தெருவ பொயிட்டு வாங்க… வீட்டுக்குள்ளயே உக்காந்துக்கிட்டு மோட்டு வளையப் பாக்காம…” என்றாள் மாரியாயி.

“ஆமா… கொள்ளக்காட்டுப் பக்கம் போனாலும் தண்ணியாக் கெடக்கும்… இதுல எப்புடி வெளிய போறது…”

“அதுக்காக… எல்லாரும் போகாமயா இருக்காங்க… சும்மாவே நாம இருக்க இடத்துல மனுச இருக்க முடியாது… இதுல போகாமலே இருந்தா… மழ ஒண்ணும் வேகமா இல்ல… கொடையப் பிடிச்சிக்கிட்டு மெதுவா கேப்பக் கொள்ளப் பக்கமா பொயிட்டு வாங்க… “

“சரி…” என்றவர் பெரிய குடை ஒன்றை எடுத்துக் கொண்டு நடக்கலானார். ரோடெங்கும் தண்ணீர் நின்றது. இதுல மாட்டுச் சாணியெல்லாம் கரைந்து தொறுத்தொறுவெனக் கிடந்தது.

“வந்தா ஒரே அடியா ஊத்துது… இல்லயினா காயப்போடுது… சை… இப்புடியா பேயும் பேய் மழயா…” என்று மழையைத் திட்டிய ராமசாமிக்கு சின்ன வயதில் மழையில் நனைவதென்றால் பேரின்பம். நனைந்து கொண்டே வீட்டுக்கு அருகில் ஓடும் மழை நீரில் கப்பல் செய்து விட்டு விளையாடி ஆத்தாவிடம் பலமுறை அடிவாங்கியிருக்கிறார். வயதானதும் எல்லாம் வெறுப்பது போல் மழையும் அவருக்கு வெறுத்துவிட்டது போல.

சாமிக்கண்ணு வீட்டை தாண்டும் போது முத்துப்பாண்டிப்பய அவருக்கு அருகில் வந்து சைக்கிளை கட் அடித்து “தாத்தா… பாத்துப் போ… மழ பெய்யுது… வழுக்கி விழுந்துறாம…” என்று கத்தியபடி சைக்கிளை மிதித்தான்.

“டேய்… களவாணிப்பய மவனே… குண்டுங்குழியுமா ரோடெல்லாம் தண்ணியா கெடக்கு… நீ விழுந்துறாம போ… எனக்குச் சொல்ல வேண்டாம்… இது வைரம் பாஞ்ச கட்ட….” என்று கத்தினார்.

‘ம்… சின்ன வயசுல மழயில நாமளும் இப்படித்தானே…’ என்று நினைத்தவரின் மனசுக்குள் சாரலாய் சின்ன வயது ஞாபகம் சிதற ஆரம்பித்தது.

எப்பவும் லேசா இருட்ட ஆரம்பித்தாலே கிராமத்துப் பிள்ளைங்களை போகச் சொல்ற பள்ளிக்கூடம் அது. மழை வருவது போல் இருந்த ஒரு நாள் அப்படி போகச் சொல்ல, எல்லாரும் ஓடி வெளியேறிய போது மழை பிடித்துக் கொண்டது. வழியில் இருந்த சிவகாமி ஆச்சி வீட்டு வாசலில் மழைக்கு ஒதுங்கி, லேசாக மழைவிட்டபோது ஆச்சி வீட்லயே பையைப் போட்டுட்டு தூறலில் நனைந்து கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.

வழியில் ரோட்டுக்கு மண் அணைக்கிறதுக்காக வெட்டிய இடமெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்க… இடையில் சிறு சிறு அணைகளாக இருந்தது.

“டேய் இடையில இருக்க அணைய ஒடச்சுவிட்டு பாலங்கட்டி வெளாண்டுட்டுப் போகலாமுடா” என்று கனகசபையிடம் சொன்னார் ராமசாமி.

“ஆத்தாடி… எங்காத்தா நனஞ்சிக்கிட்டுப் போனா,  வெளக்குமாத்துக் கட்டையால வெளுத்துப்புடும்… நா வரலைப்பா…”

“டேய் மழயில நனயிறதுல ஒரு சுகமிருக்குண்டா… வாடா… டேய் மாரி நீயாவது வாடா…”

“போடா அங்கிட்டு… அவனுக்கு வெளக்குமாறுன்னா எனக்கு உறிச்சாமட்டை… சும்மா போடா”

“யேய் செவப்பி நீயாவது வாலே… நனஞ்சுக்கிட்டே வெளாடுறதுல ஒரு சந்தோஷம் இருக்கும்ல்ல…”

“ம்க்க்கும்…போடா வட்டு மண்டையா… நீ நனை… ஒன்ன எதால அடிச்சாலும் உளுத்துப்புட்டு திரிவே… நாலாம் அப்படியில்லப்பா… சரோசா, சவுந்தரம் வாங்கடி போவோம்…”

“யாரும் வர வேண்டாம்… நானே வெளாண்டுட்டு வாரேன்” என்று தலைக்குப் போட்டிருந்த பிளாஸ்டிக் கொங்காணியை கனகுவிடம் கொடுத்துவிட்டு மழையில் நனைந்தபடி தண்ணிக்குள் இறங்கினார். அவர் ஆவாரங்குச்சியை ஒடித்து அணையை உடைத்து அருகில் இருந்த செங்களை வைத்து அதன் மேல் செம்மண்ணை அள்ளி வைத்து பாலம் கட்டி விளையாட ஆரம்பிக்க… ஒவ்வொருவராய் தண்ணீருக்குள் இறங்கி வழி நெடுகிலும் பாலம் கட்டிய படி தெப்பலாக நனைந்தனர். “இன்னைக்கு இருக்குடி உங்களுக்கு…” என்ற செவப்பியின் கையில் அவர்களது கொங்காணி இருந்தது.

‘ம்… அது ஒரு காலம்… ‘ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவர் கண்மாய் கரையில் ஏறி நீர் மட்டம் பார்த்து “அப்பா… இந்த வருசம் வெளஞ்சிடும்” என்றபடி நடக்கலானார். மேகம் மீண்டும் இருட்ட ஆரம்பிக்க மழையின் வேகம் கூடியது. அவரைக் கடந்து சென்ற பக்கத்து ஊர்கார பால்காரப் பெண்கள், “பாத்துப் போங்கய்யா… செருப்பில்லாம் போறீங்க… காத்துல முள்ளெல்லாம் இழுத்துப் போட்டுக்கிடக்கு…” என்று சொல்லி அவர்களது பேச்சை தொடர்ந்தனர். “தேவானை மக செவப்பி இருக்காளே…”. என்று ஒருத்தி ஆரம்பிக்க, செவப்பிங்கிற பேரைக் கேட்டதும் மீண்டும் பின்னோக்கி பயணிக்கலானார்.

OLYMPUS DIGITAL CAMERA

அன்னைக்கும் இதே மாதிரி மழைக்காலந்தான். சனி மூலையில இருட்டிக்கிட்டு கடமுடான்னு உருட்டிக்கிட்டு இருந்துச்சு. கனகுவோட ஆட்டுக் கசாலைக்கிட்ட மாட விட்டுட்டு உக்காந்து இருந்தவர், செவப்பி சைக்கிளில் வரவும், வேக வேகமாக ரோட்டுக்கு வந்து அவளை மறித்தார்.

“என்னடா… எதுக்குடா என்னயா மறிக்கிறே…”

“இருலே போகலாம்… நம்ம செட்டுல நீ மட்டுந்தான் படிக்கிறே…”

“அதுக்கென்ன இப்போ…”

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும்… அதான்…”

“என்ன பேசணும்… வேகமா சொல்லு மழ வாற மாதிரி இருக்கு… அதுக்குள்ள வீட்டுக்குப் போகணும்…”

“அது…”

“என்ன யோசிக்கிறே… உம்முழியே சரியில்லையே…”

லேசாக தூறல் ஆரம்பித்தது. “அப்பறம் சொல்லு… மழ வருது… நா போறேன்…” என்று சைக்கிளை தள்ள முயல இறுக்கி சைக்கிளை பிடித்துக் கொண்டார்.

“நீ இப்ப போனியன்னா பெரிய மழயா வந்தா சுத்தமா நனஞ்சிருவே… ஆட்டுக் கசாலைக்குள்ள நின்னுட்டு போகலாம்…”

“வேண்டாம்… நீ… நீ… சரியில்ல”

“ஒன்னய முணுங்கிறமாட்டேன்… இந்தா காராங்காய் உனக்குப் பிடிக்குமே…”

“கராங்காய் கொடுத்து கணக்குப் பண்ணப் பாக்குறியே…”

“ஏய்.ச்சீய்… சும்மா பிகு பண்ணாமா கசாலைக்கு வா…”

ஆட்டுக் கசாலைக்குள்ள கனகுவோட அப்பா படுக்க கட்டில் போட்டு சின்னதாக அடைத்து வைத்திருந்தார். மற்ற இடமெல்லாம் ஆடு அடைந்து மூத்தரமும் எருவுமாக இருந்தது. அந்த வாசமே கொடலைப் புரட்டியது.

“நாத்தமா இருக்கு… யாராவது பாத்தா நம்மள தப்பா நெனைக்கப் போறாங்க…”

“எதுக்கு தப்பா நெனைக்கனும்… நா மாடு மேக்கிறேன்… நீ பள்ளிடம் விட்டு வந்துருக்கே… மழ வாறதால நிக்கிறோம்… அம்புட்டுத்தான்…”

“சரி என்ன சொல்லணும்…”

“நா… நா… உன்னைய கட்டிக்கணும் புள்ள…”

“அட இங்க பாருடா எருவ மாடு மேய்க்கிறவருக்கு காதலாம்… நீ ஜெமினி கணேசன் படத்துக்காப் போகயிலயே நெனச்சேன்…”

“உண்மைதாம்புள்ள… நீயின்னா எனக்கு உசிரு… “

“சும்மா போடா… காதலாவது… மண்ணாவது…”

“அடி உண்மைதான்டி… நா மனசுக்குள்ள நீதான் எம்பொண்டாட்டின்னு நெனச்சு வச்சிருக்கிறேன்… ம்… இந்தா மாங்காய் சாப்பிடு…”

“இது எதுக்கு காதல் பரிசா… காராங்காய்… மாங்காயின்னு கடையே வச்சிருக்கே…”

“சரி… மழ வாற மாதிரி தெரியல… நாங் கெளம்புறேன்…”

“நாங் கேட்டதுக்கு பதிலேக் காணும்…”

“ம்… மாங்கா இனிக்குதுடா… முண்டம்” என்று சிரித்தபடி அவரை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சைக்கிளை எடுத்தாள்.

அவள் அங்கிருந்து சென்ற சில நிமிடத்தில் வானம் பொத்துக்கிட்டு ஊத்த சந்தோஷமாக மழையில் நனைந்தார்.

“கிணிங்” என்ற சைக்கிள் மணியோசைக்கு சுய நினைவுக்கு வந்தவர், அடித்துப் பெய்யும் மழையில் குடையை வேறு பக்கமாக பிடித்து மழையில் நனைந்து கொண்டிருந்தார்.

“அடேய்… லூசுப்பயலே நீ இன்னும் மழயில நனையிறத விடலையா… இப்புடியே போனே உம் பொண்டாட்டி நல்லா மணத்துக்குவா…” என்றபடி கடந்து போன கனகுவின் சைக்கிளின் பின்னால் சாக்குக் கொங்காணிக்குள் தலையை மறைத்திருந்த செவப்பி கிணுங்கென சிரித்தாள்.

0 Replies to “மழைக் காளான்”

  1. வணக்கம்….
    சொல்வனத்தில் எனது சிறுகதை முதல் முறையாக வெளியாகியிருக்கிறது. ரொம்ப சந்தோஷம். வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
    இதை எனது பக்கத்திலும் இன்று பகிர்ந்திருக்கிறேன்…
    http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_4018.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.