மகரந்தம்

பாட்டி சொல்லைத் தட்டாதே

EGYPT-REVOLUTION-Mohammed_Morsi

தமது 80களில் இருக்கும் பாட்டிமார்களில், கணனிகளை இயக்கித் தம்  குடும்பத்துடன் தொடர்பு கொள்ளத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் நமக்குத் தெரியும். இத்தகையாரில், அமெரிக்காவாழ் பாட்டிமார்கள் ஒரு சிறு புரட்சியைச் செய்து கொண்டிருக்கிறார்களாம். எகிப்திலிருந்து வெளி நாடுகளுக்குப் போய் அங்கு குடியேறி இருக்கும் எகிப்தியப் பாட்டிகள், கணனிகள் வழியே தம் பேரன், பேத்திகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை இஸ்லாமியக் கொடுங்கோலாட்சியை, அடக்கு முறையை எகிப்து மக்கள் மீது திணிக்க முயலும் மொஹம்மது மார்ஸி என்னும் முன்னாள் எகிப்திய அதிபரின் ஆட்சியை எதிர்த்துப் போராடச் சொல்லி ஊக்குவிக்கின்றனராம். பெண்களில் பல தலமுறையினர் இப்படி அனைத்து மத அடக்குமுறைகளை எதிர்த்துக் கொடி உயர்த்தினால் உலகில் மதம் சார்ந்த பழமை வாதத்தை ஒழித்துக் கட்டி, சுதந்திர சிந்தனையை உயர்த்தி விட முடியும். எகிப்திய பாட்டிகளிலேயே மிகப் பழமையும், பெண்ணடிமைத்தனத்தைத் தொடரும் இஸ்லாமியத் தீவிர வாதத்தையும் கட்டிக் கொண்டு மாரடிக்கும் பலர் இருப்பார்கள். அவர்களைக் கடவுள்தான் காப்பாற்ற முடியும். மனிதர்களை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும், சிந்தித்துச் செயல்பட முற்பட்டால் போதும். இந்த கணனிப் பயிற்சி உள்ள எகிப்தியப் பாட்டிகளை நாம் வாழ்த்த வேண்டும்.

http://www.thedailybeast.com/witw/articles/2013/06/29/egyptian-female-expats-hope-for-a-second-revolution-back-home.html

oOo

சத்தம் போடாதே!

Marte_Deborah_Dalelv_Dubai_Norway_Work_Sexual_Harassment

நார்வேயை சேர்ந்த பெண்மணிக்கு பதினாறு மாதம் கடுங்காவல் தண்டனையை துபாய் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. வேலை விஷயமாக மார்ச் மாதம் துபாய் வந்திருக்கிறார். உடன் பணியாற்றுபவரின் பாலியல் வல்லுறவில் இருந்து தப்பியோடி உதவி கேட்டிருக்கிறார். மது அருந்தியதற்காக ஜெயிலில் போட்டுவிட்டார்கள். ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அன்னிய நாட்டினர் கம்பி எண்ணுவது இதற்கு முன்பும் பல முறை தொடர்ந்து நடந்திருக்கிறது. 2010ல் பொது இடத்தில் முத்தம் கொடுத்ததற்காக இங்கிலாந்து ஜோடியை உள்ளே தள்ளினார்கள்.

துபாயின் நீதியுடைய அழகு. திருஷ்டிதான் சுற்றிப் போடவேண்டும். இந்தச் சட்டத்தைத்தான் உலகம் முழுதும் நிறுவ வேண்டும் என்று ஒரு கூட்டம் துப்பாக்கி தூக்கி இதர உலகமக்களோடு யுத்தத்துக்குப் போகிறார்கள்.

http://goo.gl/kIBgny

oOo

வயிற்றுப்பிழைப்பு

Apologies_to_my_censor_China_Macau_Brothel_Vegas_Mongolia_Mitch_Moxleyகாலையில் அலுவலுக்கு செல்கிறார் மிட்ச். எல்லா சிப்பந்திகளையும் சந்திப்பிற்காக அழைக்கிறது நிர்வாகம். அப்பொழுதே வயிற்றுக்குள் ஏதோ அசூயை கலந்த கலக்கம் தருகிறது மனது. அச்சுப் பதிப்பு திவாலாகிவிட்டது. அனைவரையும் வீட்டிற்கு அனுப்பப் போகிறார்கள். ஏற்கனவே பார்த்த வேலை பறிபோய்விட்டது. அடுத்த வேளை சோற்றிற்காகவாவது ஏதாவது செய்ய வேண்டும். பேனாவோ கணிவிசைப்பொறியோ பிடிக்கும் நிருபர் களத்தில் இறங்குகிறார். சீனாவின் விலைமாதர்களின் வாழ்க்கையை புத்தகமாக எழுதி இருக்கிறார். அவர்களின் நிர்ப்பந்தத்திற்கான காரணங்களையும் தொழிலுக்குள் திணிக்கப்பட்ட சமூக சூழ்நிலைகளையும் ஒவ்வொருவராக பேட்டி எடுத்து நமக்கு எடுத்துரைக்கிறார்.

உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையங்களைக் கொண்டது சீனாவின் மெகாவ் நகரம். அமெரிக்காவின் லாஸ் வேகாஸை விட பன்மடங்கு பணம் புழலும் இடம். அங்கே மங்கோலியப் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக்கப்படுவது எப்படி என்பதை ஆராய்கிறார். இரத்தத்தைக் காண்பதினாலோ இறப்புகளை சந்திப்பதினாலோ மருத்துவருக்கு எந்தவித சலனங்களும் தோன்றுவதில்லை. செய்தியாளர்களுக்கும் அவ்வாறே இந்த மாதிரி அவலங்களை துப்பறிந்து அருகில் இருந்து பார்த்து உள்ளதை உள்ளவாறே எழுதும்போது மனக்கிலேசங்கள் எழுந்தாலும் அவற்றை அமுக்கி பயணிப்பதையும் பதிவு செய்கிறார்.

மங்கோலியப் பெண்கள் சீனாவிற்குள் கடத்தப்பட்டு வன்முறைக்குள்ளாவதை பதிவு செய்யும் அவருடைய புத்தகத்தின் சில பகுதிகளை சலோன் பகிர்ந்திருக்கிறது:

http://www.salon.com/2013/07/27/sexual_trafficking_in_china_kidnapped_into_prostitution/

oOo

இராஜத்துரோகியா? கருப்பு பணத்தின் எதிரியா?

Hervé_Falciani_Tax_Fraud_HSBC_France_EU_Swiss_Bank_Money_laundering_Finance_Crimesஊரெல்லாம் எட்வர்டு ஸ்னோடென் பேச்சாக இருக்கிறது. ஜூலியன் அஸாஞ்ச் கூடச் செய்திகளில் நிறைய அடிபடுகிறார். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட இன்னும் தைரியமாகச் செயல்பட்ட ஹெர்வே ஃபால்சியானி (Hervé Falciani) குறித்து ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஸ்விஸ் வங்கிகளில் பணத்தைப் பதுக்குவோரின் பட்டியலை ஹெர்வே வெளியிட்டிருக்கிறார். ஒருவர், இருவரல்ல… நூற்றி முப்பதாயிரம் பெரும்பணக்காரர்களின், கொடுங்கோலர்களின் , மாஃபியாக்காரர்களின், மேலும் அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு வழக்குகளை அனைவரின் முன் வைக்கிறார். அவர் வேலைபார்த்த எச்.எஸ்.பி.சி. (HSBC) நிறுவனம் எவரெவரின் கருப்பு பணத்தைப் பாதுகாத்தது என்பதை 2008லேயே சொல்கிறார்.

இவ்வளவு ஆதாரங்களும், பெயர்களும், தகவல்களும் கிடைத்திருந்தாலும், ஐந்தாண்டுகள் கழித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கருப்பை வெள்ளையாக்கிய வங்கியர்களும், ஊழல் பணத்தை அயல்நாட்டில் சேமித்தவர்களும் அடையாளங் காட்டப்பட்டும் சுதந்திரமாகத் தங்கள செய்கைகளைத் தொடர்கிறார்கள். ஆனால், நிறுவன ரகசியங்களைப் பாதுகாக்காத குற்றத்திற்காக ஹெர்வே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்.

அவரோடு ஒரு பேட்டி:
http://www.spiegel.de/international/business/interview-hsbc-swiss-bank-whistleblower-herve-falciani-on-tax-evasion-a-911279.html

oOo

படிக்காத புத்தகத்திற்குப் பாராட்டா?

வருடந்தோறும் சிறந்த ஆங்கில இலக்கியத்திற்காகத்தான் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இது பொது அறிவு. அதுவே ஒரு புனைகதை என்று பல எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். பரிசுக்குப் போட்டியிடத் தகுதி பெற அந்நாவலை எழுதியவர் (முந்நாளில் இங்கிலாந்தால் அரசாளப்பட்ட நாடுகளின் கூட்டணியான) காமன்வெல்த் என்கிற அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். உலகமெங்குமே விருது என்றாலே விவகாரம் என்று மற்றொரு பெயர் இருக்கும். இந்த விருதுக்கு விவகாரம் என்றே பெயர் வைத்திருக்கலாம்.

இந்த விருதளிப்புக்குப் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில், வருடாவருடம் தோன்றும் பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த முறை ஏழு நாட்டு எழுத்தாளர்களைப் பரிந்துரையில் இணைத்திருக்கிறார்கள். முன்மொழியப்பட்டுள்ள பதின்மூன்று பேரில் ஏழு பெண்கள் இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் சிக்கல்கள் இதுவரை எழுந்துள்ளன? சாம்பிளுக்கு இரண்டு…

i) 1996ல் நடுவர் குழுவில் இருந்தவர் ஏ.எல். கென்னடி. புக்கர் விருதை ”கூனல் குப்பைக் கூளம்” என வருணிக்கிறார். ஏன் என்றதற்கு, “விருதைத் தேர்ந்தெடுப்பதில் நேர்மையில்லை. யாருக்கு யாரைத் தெரியும்… எவர் எவருடன் படுக்கிறார்… யாருக்கு எவர் போதை மருந்தை தருவிக்கிறார்… எவருக்கு எவர் மணமுடிக்கப்பட்டுள்ளார்… யாருடைய முறை என்று பார்த்து தருகிறார்கள். நான் மட்டும்தான் முன்னூறு நாவல்களைப் படித்தேன்,” என காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

Arundhati_Roy_God_of_Small_Things_Books_Fiction_Booker_Prize_Novels_Controversy_Crtical_Reviews

ii) இந்தியாவின் அருந்ததி ராய்க்கு “The God of Small Things” (சின்ன விஷயங்களின் கடவுள்) நூலிற்குக் கூடப் புக்கர் விருது கிடைத்தது. அதற்கு முந்தைய வருட நடுவர் குழாமின் தலைவராக இருந்த கார்மென் இந்தப் புனைவை “குமட்டல்” என்று விமர்சிக்கிறார். ”இது வளவளாவென்று போலிப் பச்சாதாபம் புகுத்தப்பட்ட, கையில் ஒட்டிக் கொள்ளும் பாயாசம். பரிந்துரைப் பட்டியலிலேயே இதற்கு இடமில்லை” என்கிறார்.

பாக்கியை இங்கே பாருங்கள்:

http://www.thedailybeast.com/articles/2013/07/23/the-12-biggest-booker-prize-controversies.html