தீஸியஸ் முரண்பாடு என்பது இதுதான். பழுதடைந்த ஒரு கப்பலின் பாகங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு, இறுதியில் அனைத்து பாகங்களும் மாற்றப்பட்டால், அது அப்பழைய கப்பலேதானா? அப்படி பழைய கப்பலிலிருந்து அகற்றப்பட்ட பாகங்களைக் கொண்டு இன்னொரு கப்பல் உருவாக்கினால், அது புதிய கப்பலாகுமா? இல்லை, அது முதல் கப்பலேதானா?
இந்த முரண்பாட்டு வாக்கியங்களுடன் தொடங்குகிறது படம். மூன்று கதைகளாக மூன்று மனிதர்களின் உலகில் பயணிக்கிறது.
ஆலியா கமல், ஒரு பரீக்ஷார்த்த புகைப்படக் கலைஞர். தனக்கு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு, பார்வை இழந்தபின், புகைப்படங்கள் எடுப்பதில் தன் கலைவெளிப்பாட்டைக் கண்டடைகிறாள். சத்தங்களைக் கொண்டும், நிறங்களைக் கண்டு சொல்லும் கருவியைக் கொண்டும் அவள் எடுக்கும் புகைப்படங்கள் பரந்த வரவேற்பைப் பெருகின்றன. முழுவதுமாக ஆலியாவின் உள்ளுணர்வே அவரது கலைமேதைமையாக வெளிப்படுகிறது. இதில், அவள் எந்த சமரசமும் செய்துகொள்வதாக இல்லை. தான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து தன் நண்பன் கூறுவதைக் கொண்டு அது தான் அறிந்து எடுத்த படமா, இல்லை தற்செயலாய் வந்த படமா என்று அவளால் சொல்ல முடிகிறது. என்றுமே அவள் தன் உள்ளுணர்வைத் தற்செயலுக்கு சமரசம் செய்துகொள்ள துணியவில்லை. விழி மாற்று அறுவைசிகிச்சைக்காக காத்திருக்கும் அவள், தன் புகைப்பட கண்காட்சி ஒன்றில் தன்னைப் பற்றியும் தன் படைப்புகளைப் பற்றியும் அளிக்கும் பேட்டியில், ” சந்தேகங்களே இல்லாத நிச்சயத்தன்மை ஏன் நமக்கு ஆச்சரியமூட்டுகிறது… நான் முறையான ஒரு புகைப்படக் கலைஞராக எனது பயணத்தைத் துவங்க காத்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறாள். விழி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, அவள் பரவசத்துடன் காமெராவை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறாள். உலகமே அவள் கண்முன் விரிந்து கிடக்கிறது. ஆனால், அவளால், திருப்திகரமாக ஒரு புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவள் கலையில் ஜீவன் தொலைந்தது போல உணர்கிறாள். கண்களைமூடிக் கொண்டு மீண்டும், ஒலிகளில் உறைந்த தன் உள்ளுணர்வை நோக்கி செல்ல முயல்கிறாள். இதற்காக அவள் தன் கண்களை மீண்டும் கட்டிக்கொள்கிறாள். நல்ல புகைப்படங்கள் எடுக்க முடியாததால், மீட்டு வந்த பார்வையே பாரமாகிவிட்டதுபோல உணர்கிறாள். ஒருவேளை நகரின் இரைச்சல்களிலிருந்து விடுபட்டு அழகிய இடத்திற்கு சென்றால் தனது படைப்பூக்கம் திரும்பலாமென்று இமய மலைச்சாரலுக்கு பயணிக்கிறாள்.அங்கு செல்லும் முன் அவள் நண்பன் வினய் அவளிடம் கேட்கிறான், ‘புகைப்படங்கள் எடுப்பதுதான் உன் முடிவான நோக்கமா’. இயற்கையின் அழகு தன் கண்முன் விரியும் தருணம், அவள் காமிராவை மூடி வைத்துவிட்டு, தன் விழிகள் முழுவதும் நிரப்பி அதைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாள்.
ஒரு படைப்பாளியின் படைத்தலுக்கான உந்துதல் எத்தனை வெளிப்படையானது? அவர்களது படைப்பின் நோக்கம் எத்தனைத் தெளிவானது?
மைத்திரேயா, ஒரு துறவி, குரு. அஹிம்சை எனும் மத கொள்கையைத் தன் வாழ்வின் கொள்கையாக கொண்டவர். அழகுப்பொருட்கள் தயாரிப்பில், விலங்குகள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். எங்கும் நடந்தே செல்வது, பிக்ஷை எடுத்தே உண்பது, எல்லா உயிர்களிடமும் அஹிம்சை என்பன அவரது வாழ்வின் கொள்கைகள். தனது வழக்கறிஞரின் உதவியாளரான சார்வார்கனுடன் அவருக்கு ஒரு அழகிய நட்பு வளர்கிறது. மிகுந்த வயிற்று நோவால் அவதிப்படுகிறார். அவரது ஈரல் பழுதடைந்துவிட்டதாகவும், புதிய ஈரலைப் பொருத்த வேண்டுமென்றும் டாக்டர் சொல்கிறார். மருந்துகளை ஏற்க மறுக்கும் மைத்திரேயா, உண்ணாவிரதமிருந்து தனது இறப்பை ஏற்க தயாராகிறார். அவரது முடிவை மாற்ற சார்வாகன் தன் தர்க்கங்களை உருவாக்குகிறான். ஒரு எறும்பின் உடலை ஆக்கிரமித்து, அதைத் தன் இருப்பிடமாக கொண்டு, பின் அவ்வெறும்பையே அழித்து, தன் வம்ச விருத்தி செய்யும் காளானைப் பற்றி கூறுகிறான். இயற்கை மீண்டும் மீண்டும் உயிர்களை மறுசுழற்ச்சி செய்வதுபற்றி கூறுகிறான். கோர்ட்டில் அவரது வழக்கு விவாதிக்கப்படும்போதும், பத்திற்கு பத்து என்ற சிறிய கூண்டுகளில் பத்து முயல்களை அடைத்து அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையைப் பற்றி வழக்கறிஞர் கூற, எதிர்தரப்பில், அதைவிட மோசமான நிலையில்தான் மும்பை மின்சார ரயில்களில் மனிதர்கள் செல்கிறார்கள் என்று கூறுகிறார். இத்தனை சிக்கலாக மாறிவிட்ட உலகில் எந்தவொரு கொள்கையும் ஒரு தரப்பு அறிவுஜீவித்தனம்தான் என்று சார்வாகன் அவரிடம் வாதிடுகிறான். இறுதியில், சாவிற்கு மிக அருகில் செல்லும் மைத்திரேயா, சிகிச்சைக்கு ஒப்புக்கொள்கிறார்.
மனிதர்களின் இலட்சியவாதங்கள் எங்கு முடிந்து எங்கு தொடங்குகின்றன?
மூன்றாவது நவீன் எனும் பங்குச் சந்தைத் தரகன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்று குணமாகி வரும் இளம் நவீன், அதே ஆஸ்பத்திரியில் தனது பாட்டியை எலும்பு முறிவிற்காக அனுமதிக்க நேர்கிறது. சமூக ஆர்வலரான அவனது பாட்டிக்கும் அவனுக்கும் கருத்து மோதல் ஏற்படுகிறது. வெறும் பணமும் அந்தஸ்தும் மட்டும் ஒருவனை முழுமையாக்காது என்ற அவனது பாட்டியின் குற்றசாட்டு அவனை சீண்டுகிறது. தற்செயலாக அதே ஆஸ்பத்திரியில், சிறு நீரகத்தை திருட்டுக்கொடுத்த ஒரு அப்பாவி தினக்கூலியாளைப் பற்றி தெரிய வருகிறது. முதலில் தனக்கே அந்த ஏழையினுடைய சிறு நீரகம் பொருத்தப்படவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு, அது சென்ற சேர்ந்த இடத்தை பின் தொடர்கிறான். இந்தியாவின் ஏழைகளிடமிருந்து அவர்களுக்கு தெரியாமல் திருடி எடுத்து சிறு நீரகங்கள், அதிக பணம் தரும் வெளி நாட்டவர்க்கு விற்கபடுவது நமது நாட்டின் நிதர்ஸனம் காட்டப்படுகிறது. ஸ்டாக்ஹால்ம் வரைச் சென்று அச்சிறுநீரகம் பொருத்தப்பட நபரை சந்திக்கிறான். அத்தனை எளிமையாக தீர்த்துவிடக்கூடிய தார்மீக சிக்கல் இல்லை அது என உணர்கிறான். குற்றவுனர்வால் பீடிக்கப்படுகிறார் அம்மனிதர். ஆனால், பெற்ற சிறுநீரகத்தைத் திருப்பி தர யாரால்தான் முடியும். பாதிக்கப்பட்ட அந்த ஏழைக்கு அவர் பண உதவி செய்ய ஒப்புக்கொள்கிறார். அதுவரை நடந்ததே அவனது வாழ்க்கைப் பார்வையை மாற்றிவிடுகிறது.
மனிதனின் தார்மீகம் அவனது மனதின் எல்லைக்குள் இருப்பதுதானே?
மூவரும் ஒரே நகரத்தின் வெவ்வேறு உலகங்களில் வசிக்கிறார்கள். நகரத்தின் நாடித்துடிப்பாக அதன் சத்தங்கள் ஆலியாவின் உலகில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அத்தனைப் பெரிய மனிதத் திரளின் நடுவே, அத்தனை கனவுகளுக்கு இடையே அவள் தனதேயான கனவுடன் அலைந்து திரிகிறாள். மைத்திரேயாவின் உலகம் பயணங்களால் ஆனது. செறுப்பில்லாத கால்களுடன் அவர் நடந்துகொண்டே இருக்கிறார். தீராத ஒரு பெரும் தேடலின் பயணம் அது. நவீனது உலகம் சுவர்களால் நிரம்பியிருக்கிறது. முதன்முதல், அவன் தன் ஆஸ்பத்திரி அறையின் சுவர்களைத் தாண்டி அப்பெண்ணின் ஓலத்தைக் கேட்கிறான். அதிலிருந்து அவனது பயணம் சுவர்களைத் தாண்டி செல்வதாகவே இருகிறது. அது அவனது அந்தரங்க சுவர்களையும் தகர்த்து எரிகிறது.
மூன்று வெவ்வேறு கதைகளாக தோன்றுவன, இறுதியில் ஒரே திரையில் வரையப்பட்ட சித்திரமாக சேர்ந்துகொள்கின்றன. இம்மூவருக்கும் ஒரே மனிதரிடமிருந்து உறுப்புக்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கூடுகையில் சந்தித்துக்கொள்கிறார்கள். மானுடம் என்ற ஒற்றைப் பிரக்ஞை திரளும் தருணம் அது. இத்திரைப்படத்தில் ஆரவாரமற்ற, பல அற்புத காட்சித் தருணங்கள் வருகின்றன. குறிப்பாக, மைத்திரேயா-வின் கதையோட்டத்தில் திரையை நிறைத்துக்கொண்டு அசையும் மரக்கூட்டங்கள், ஒரு மன எழுச்சியைத் தருகின்றன. எத்தனை மரங்கள், ஒரே அசைவு. உடலுறுப்பு மாற்று பற்றி பேசுவதன் மூலமாக, மனித சிந்தனைகளின் ஊடுபாவுகளைப் பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர். இதில் ஆலியாவின் செவிகேளாதோருக்கான பேசும் காமிரா என்பதும், மைத்திரேயா பின்பற்றும் மதமும் புனைவாக உருவாக்கப்பட்டவை. நுட்பமான தளத்தில் நடக்கும் விவாதத்தை, யதார்த்த தளத்திற்கு கொண்டுவருவதற்கான களமாகவே இங்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சை எனும் களத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் கூறலாம்.
இப்படத்தின் மூன்று பாத்திரங்களும் தங்களது அழுத்தமான நம்பிக்கைகள் இன்னொருவரது பாதிப்பால் உடைபடுவதை உணர்கிறார்கள். மூவரின் சிந்தனைகளும் பாகம் பாகமாக மாற்றப்படுகின்றன, தீஸியஸின் கப்பலைப் போல. கப்பல் எனும் முழுமையில், எது யாருடைய பாகமாக இருந்தால் என்ன?
சர்வதேச திரைப்படவிழா வட்டங்களிலிருந்து வெளிவந்து பரவலான ரசிகர்களின் கவனத்தை இப்படம் ஈர்த்திருக்கிறது. இது படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இந்திய மைய சினிமாவோட்டத்தைப் பற்றிய பார்வைக்கோணத்தை நிச்சயம் மாற்றியிருக்கும்.