கவிதைகள் – எம்.ராஜா

kirgizpazyrikhorseman
குதிரை ஒரு வினோத விலங்கு
முன்புறமோ அல்லது பின்புறமோ
அனாயசமாக ஒருகட்டம் தாண்டிவிடும்.
இடம் அல்லது வலமாக
நிதானமாய்த் திரும்பிநின்று இளைப்பாறும்
குதிரை ஒரு வினோத விலங்கு.
ஆட்டத்தை வென்ற களிப்பில்
சதுரங்கப் பலகையை விட்டு
கனைத்து வெளியேறுகிறேன்.
ஓரடி பாய்ந்து
இடப்பக்கம் திரும்பினால் பரிதிப்பழம்.
இரவுவரைக்கும் காத்திருந்தால்
நிலவுக்கும் இது கதி.
எதிர்ப்படும் மாந்தர்
மரம் செடி யாவையும்
இரையாகப் பார்க்கும் கண்கள்
ஒளிர்ந்தவாறு நடக்கிறேன்.
அட! எதிரே வருகிறது அரேபிய குதிரை.
அண்டை நாட்டு அழகு ராணி.
கனைத்தவாறு
என்னுள் இருந்து குதித்து வெளியேறிய குதிரை
விரைகிறது அவளை நோக்கி.
மீதேறி போகிறதைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

oOo

காற்றிசைத்த குறிப்புகள்
T98ஒன்று
காற்றோடையில் மிதந்து வரும் மணியோசைகள்
செவியின் ஜன்னல்களை தட்டிச் செல்கின்றன.
விழித்துக் கொண்ட கண்கள்
உதிர்த்த கிளைதேடி அலைகின்றன நீர்மேல்.
உப்பரிகையில் ஒய்யாரமாய் பூத்து
குலுங்குகிறது ஓர் காற்றிசைச்சரம்.

oOo

இரண்டு
ஓயாமல் முணுமுணுக்கும் அம்மாவுக்கு
பிடிக்கவில்லை.
அதிகம் பேசாத அப்பாவும்Glass-wind-chimes
ரசிக்கவில்லை.
ஓசை கண்டாலே ஓடிஒளியும் தங்கை
வெறுத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ரசிக்கத் தெரியாத காதுகள்
இன்று வெளியூருக்குக் கிளம்பிவிட்டன.
யாருமில்லாத வீட்டில்  துவங்குகிறது
காற்றிசைச்சரத்தின் கச்சேரி.
கேட்டு ரசிக்க திறந்தே கிடக்கின்றன
ஒருஜோடிக் காதுகள்.

oOo

மூன்று
வெறுங்காலோடு வீட்டுக்குள் நுழைந்த காற்று
கொலுசுகட்டி வெளியேறுகிறது.
அக்கம்பக்கம் காட்டி
இனி விடியும்வரை பீற்றிக்கொண்டிருக்கும்.

oOo

birds_flying
உயரத்தில் என் நிழல்
நகரும் வாகனங்களுக்கு அடியில்
நழுவும் சாலையின் ஓரத்தில்
ஓடும் மரங்களுக்கு மேலே தெரிகிறது
மங்கலான வெளிச்சத்தில் அந்திவானம்.
விழிகளுக்கு அப்பாலும் விரிகிற
வானத்தின் கனம் படர்கிறது முதுகில்.
முதுகைச் சுமந்தபடி
முன்னால் போகிறேன்.
உயரத்தில் வெகு உயரத்தில்
அசைகிறது என் நிழல்
ஒரு பறவையின் உருவில்.