இரவு உணவிற்காக விருந்தினர் மாளிகையின் டைனிங் ஹாலுக்குள் நுழைந்தேன். விடுமுறைக்கு ஒரிஸா வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. போக வேண்டிய இடம் துறைமுக நகரான பாரதீப். அங்கேதான் மாமனாரின் வீடு. போர்ட்டில் பைலட்டாக இருக்கிறார். ஆனால் நடுவில் கொஞ்சம் வேலைகள் இருந்ததால் பெரிய ஊரான புவனேஷ்வரில் முதல் கொஞ்ச நாட்கள் தாமசம். இரும்பு தாது மற்றும் சுரங்கத் தொழிலில் முன்னிலை வகிக்கும் இம்ஃபா எனும் தனியார் நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் தற்காலிக தங்கல்.
குளிரூட்டப்பட்ட அந்தப் பெரிய அறை காலியாக இருந்தது. அங்கு ஒரே ஒரு முதியவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பஞ்சகச்சமாய் இழுத்துக் கட்டிய வெள்ளை வேட்டி வெள்ளை பைஜாமா. அதே வெண்ணிறத்தில், தலை நிறைய, படிய வாரப்பட்ட முடி. வழுக்கை இல்லாத தலை, கொடுத்து வைத்தவர். தீர்க்கமான கண்கள். முகமெல்லாம் சுருக்கம். நாற்காலியில் பின்னோக்கி சாய்ந்து அமராமல், சிறிதும் கூன் விழாமல் நேர் நின்ற முதுகு காட்டி அமர்ந்திருந்தார்.
இரண்டு இடம் தள்ளி உட்கார்ந்தேன். என்னைத் திரும்பிப் பார்த்தார். புன்னகைத்து “குட் ஈவினிங்” என்றேன். உண்ணும் வாய் திறக்காமல் தலையைச் சாய்த்து ஆமோதித்தார்.
சாப்பாட்டில் இறங்கினேன். அன்றைய ஸ்பெஷலாக போட்டோளோ என்ற காய்கறி பரிமாறப்பட்டது. பிஞ்சு வெள்ளரி சைசில் இருக்கும் காய்கறியை அப்படியே நீளவாட்டமாக நறுக்கிச் சமைத்த பொரியல். உள்ளிருக்கும் விதைகள் வெண்டைக்காய் போல கடக் முடக் என சுவையாக இருந்தன. ஒரிஸா தவிர இதை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. அடுத்து சந்துளா எனப்படும் அவியலும் சாதமும் வந்தது. இனி வரப்போகும் தாலுக்கோ மோர்குழம்புக்கோ கொஞ்சம் சாதத்தை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு மிச்சத்தை சந்துளா சேர்த்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒரிஸா மாநிலத்தவர்கள் இந்தியாவின் தலைசிறந்த சமையல்காரர்கள் என்ற ஒரு கருத்து உண்டு. அது உண்மையாக இருக்கக்கூடும். தட்டில் ஸ்பூன் படும் சத்தம் தவிர வேறு எந்த ஓசையும் இல்லை.
“எக்ஸ்க்யுஸ் மீ” என என் பக்கம் நோக்கி பொதுவாகச் சொல்லிவிட்டு எழுந்தார் பெரியவர். மிகவும் மெதுவான நடை. ஆனால் எந்தவித தடுமாற்றமும் இல்லாத, வேறு பிடிப்பு தேவைப்படாத உறுதியான நடை. கை கழுவியதும் சிப்பந்தி டவல் கொண்டு வந்து கொடுத்தான்.
“உன்னை இதுவரைக்கும் இங்கே பார்த்ததே இல்லையே?” பெரியவர் டவலில் தன் கையைத் துடைத்துக் கொண்டே கேட்டார். ஆங்கிலத்தில் தெலுங்கு வாடை வீசியதை உணர்ந்தேன்.
“ஆமாம் ஸார். நான் புதியவன். மூன்று மாதங்கள்தான் ஆகின்றன”
“பேர் என்ன?”
“சுபாஸ் பெஹரா”
“ஓ கே பெஹரா, நாளை காலை வெங்காயம் இல்லாமல் ஒரு டபுள் ஆம்லெட் வேண்டும்”
“ஓகே ஸார்”
வேறு எதுவும் பேசாமல் போய்விட்ட அவரைக் கடந்து உள்ளே வந்த என் மாமனார் செய்த முதல் காரியம், பிரதான சமையல்காரனிடம் சென்று “யார் இவர்?” என விசாரித்ததுதான், அவனும் ஏதோ ஒரியாவில் பதில் சொன்னான். என் கவனம் எல்லாம் என் முன் இருந்த சென்னா போடோவின் மேல் இருந்தது. வெளியே முறுகலாகவும் உள்ளே மிருதுவாகவும், உலர்ந்த வகை என்றும் சொல்ல முடியாத ஈர வகை என்றும் சொல்ல முடியாத, திரட்டிப்பாலில் செய்த இனிப்பு வகை. அபார சுவை.
“ஓ 86 years!”, என் மாமனார் உரத்த ஆங்கிலத்தில் ஆச்சரியப்பட்டது காதில் விழுந்தது.
அடுத்த நாள் கோவில் வேலைகள் இருந்ததால் நாங்கள் ஏழு இருபத்தைந்துக்கெல்லாம் ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளுக்கு வந்து விட்டோம். சரியாக ஏழரை மணிக்கு முதியவர் வந்தார். அதே வெள்ளை வேட்டி வெள்ளை பைஜாமா. பரஸ்பரம் முகமன் கூறிக்கொண்டோம்.
“ஸார், நீங்கள் ஒரு ஏரோநாட்டிக் என்ஜினீயரா?” ஆங்கிலத்தில் என் மாமனார் பேச்சுக் கொடுத்தார்.
“நோ. ஐ ஆம் எ ஏர்கிராஃப்ட் மெய்ன்டனன்ஸ் என்ஜினீயர்”
“அற்புதம். இங்கே எப்படி..?”
“ம். இம்ஃபா விற்கு சொந்தமான சில ஏர்கிராஃப்ட்ஸ் உள்ளன. அவற்றை அவ்வப்போது பழுது பார்க்க வருவது வழக்கம்.”
நான் உரையாடலில் தலைப்பட்டேன் -“தனியார் விமானங்களா..?”
“ஆமாம். இங்கே இன்னும் மெஸ்கோ, புவனேஸ்வர் ஃப்ளையிங் க்ளப் என பல அமைப்புகள் பழைய விமானங்களை கட்டி மாரடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரிஸா ஸ்டேட் கவர்ன்மெண்ட்டிடம்கூட இரண்டு விமானங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் பராமரித்து “பிட் பார் ப்ளையிங்” சர்ட்டிஃபிகேட் கொடுக்க என் மாதிரி ஸ்பெஷலிஸ்ட்கள் தேவை”
86 வயதிலும் சோர்வில்லாத ஒரு ஸ்பெஷலிஸ்ட்! எனக்கு அவர்மீது மரியாதை கூடியது.
“நீங்கள் அடிக்கடி புவனேஸ்வர் வருவதுண்டா?”
“எப்படியும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வரவேண்டியிருக்கும். போன முறை இங்கிருக்கும் ஏரோநாட்டிகல் கல்லூரியில் லெக்சர் கொடுக்க வந்தேன். தேவைப்படும்போது என்னை அவர்கள் விசிட்டிங் ஃபேகல்டியாக அழைப்பதுண்டு. அதற்குமுன் புவனேஸ்வர் ஃப்ளையிங் க்ளப்பின் விமானங்களைப் பராமரிக்க வந்திருந்தேன். பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் ஒரு முறைகூட அவை பறக்கவில்லை. பராமரிப்பில் ஏகப்பட்ட வேலை. பெண்டு நிமிர்ந்து விட்டது.” எனக் கூறி கெக்கே கெக்கே எனச் சிரித்தார். ஏற்கனவே பெண்டு கழட்ட முயன்றிருந்த வயோதிகத்தையே தோற்கடித்து விட்டவரிடமிருந்து இப்படியொரு முரண்நகை.
ஒரு பெரிய பீங்கான் தட்டில் வெங்காயம் இல்லாமல், மேலே மிளகு மட்டும் தூவப்பட்ட ஆம்லெட் அவர் முன் வைக்கப்பட்டது.
அவர் தெலுங்கர்தானா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொள்ளத் தோன்றியது. “நீங்கள் எந்த ஊர்க்காரர்?”
ஒரு நிமிடம் என்னைப் பார்த்து வறட்டு சிரிப்பு சிரித்தார். “நான் ஒரு இந்தியன்”.
அந்த கெட்டப்பில் அவர் அப்படி சொன்னது உண்மையிலேயே இந்தியன் தாத்தா மாதிரிதான் இருந்தது.
“இல்லை ஸார். யுவர் பேக்கிரௌண்ட்?” என விடாமல் கேட்டேன்.
“ஐ எம் எ ரிட்டயர்ட் நேவல் ஆபிசர். செக்கண்ட் வேர்ல்ட் வார் வெடரன்”
அக்கணமே என் மாமனாருக்குள் இருந்த ராணுவ வீரனுக்கு இருப்புக் கொள்ள முடியாமல் போயிற்று. விறைப்பாகத் தன் கைகளை நீட்டி, “ப்ளெஷர் டு மீட் யூ ஸார். ஐ எம் கேப்டன் பிசாய். எக்ஸ் இண்டியன் நேவி!”.
“ஓ, வாட் அ சர்ப்ரைஸ், ஐ ஆம் லெப்டினன்ட் பிஸ்வஜித் சௌத்ரி” என கைகுலுக்கினார் பெரியவர்.
இயற்பெயர், குடும்பப் பெயர் என எத்தனை பெயர்கள் இருந்தாலும் இந்த பட்டாளத்துக்காரர்களுக்கு ராணுவ பட்டங்களை பெயரோடு முன்னால் சேர்த்துச் சொல்வது விரும்பிச் செய்யும் கட்டாய சடங்கு. என் மாமனார் தன் பட்டாள அடைமொழியை தவிர்த்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நான் பார்த்ததே கிடையாது.
என் பங்குக்கு பட்டங்கள் இல்லாத வெறும் பெயரைச் சொல்லி கை நீட்டி லெப்டினன்ட் பிஸ்வஜித் சௌத்ரியுடன் குலுக்கிக் கொண்டேன். பாதுகாப்பு படையினருக்கு புதிதாக இனம் கண்டோரிடம் எந்த பேட்ச், எங்கே போஸ்டிங், இவரை தெரியுமா, அவரை தெரியுமா, எந்தெந்த மிஷன்களில் பங்களிப்பு, எப்போது ஓய்வு என பொது விஷயங்கள் பேச பஞ்சமே இருக்காது. இனி அவர்கள் சம்பாஷணை எங்கே போகும் என என்னால் துல்லியமாக கணிக்க முடிந்தது. ஒரு மூன்றாம் மனிதனாகி அவர்கள் பேசுவதை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்க ஆயத்தமானேன்.
மாமனார் என்னை ஏமாற்றவில்லை. “நீங்கள் ரிட்டயர்ட் ஆனது எந்த வருஷம் ..? என் தகப்பனாரும் நேவிதான். அவரும் செக்கண்ட் வேர்ல்ட் வாரில் பணியாற்றியவர்தான். லெப்டினன்ட் கமாண்டர் பிசாய். ரேடியோ துறையில் கம்யூனிகேஷன் ஆபிசராக இருந்தார். 1966-ல் ஓய்வு பெற்றார். உங்களுக்கு தெரிந்திருக்கலாம். “
“இல்லை, நான் 1947-லேயே ஓய்வு பெற்று விட்டேன்”
“ஓ, அவ்வளவு சீக்கிரமாகவா? வாலண்டரி ரிடயர்மெண்ட்?”
“இல்லை, ஹிஸ்டாரிக்கல் ரிடயர்மெண்ட் !”.
“புரியலையே”
“நான் அப்போது கராச்சியில் உள்ள மனோகரா நேவல் பேஸில் போஸ்டிங் ஆகி இருந்தேன். உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை, அதுதான் நாளடைவில் மருவி இப்போது மனோரா தீவு என்றாகிவிட்டது”
தன் 1971 பங்களிப்பை நாள் ஒன்றுக்கு இருமுறையாவது நினைவுகூரும் என் மாமனார் விடுவாரா?
“மனோரா நேவல் பேஸ் கேள்விப்பட்டிருக்கிறேன் ஸார். 1971-ல் ஒரு இரண்டு முறை கராச்சி பக்கம் பேட்ரோல் சென்றிருக்கிறேன். அதுதான் கராச்சி துறைமுகம் ஒருவாரம் சொக்கப்பனையாக எரிந்ததே. இதுவரை நம் நேவியின் மிகப் பெரிய வெற்றி ஆயிற்றே அது…”
“ஆமாம். ஸோ 1947ல் போர் கப்பல்களின் இஞ்சின் மெயின்டனன்ஸில் இருந்தேன். இந்தியா சுதந்திரம் அடைந்து ஹிந்துஸ்தான், பாகிஸ்தானாக பிரிவினையானபோது, பாதுகாப்பு படை இலாகாவைச் சரியாக எப்படி கையாள்வது என்று யாருக்குமே தெரியவில்லை. அதனால் லார்ட் மௌன்ட்பேட்டன் பிரிவினைக்கு முன்னர் பாதுகாப்பு இலாகாவுக்கு இரண்டு வாரம் கெடு கொடுத்தார். அந்த இரண்டு வாரங்களில் சுதந்திர இந்திய படையில் யாருக்கு சேர விருப்பம், சுதந்திர பாகிஸ்தான் படையில் சேர யாருக்கு விருப்பம் என்று ஒவ்வொருவரையும் கேட்டுப் பிரிக்கச் சொன்னார். என்னிடமும் கேட்டார்கள். அதுவரை ஒரு அமைப்பில் இருந்துவிட்டு இப்போது புது அமைப்பில் வேறு இடத்தில் வேலை செய்யப் பிடிக்கவில்லை. அதனால் இந்தியாவா பாகிஸ்தானா என்ற இரண்டு விருப்பத்தேர்வுக்கும் நோ-என்று சொல்லிவிட்டேன். வேலை இல்லாததால் கட்டாயமாக ரிடயர்ட் ஆக வேண்டியதாகப் போயிற்று. ஐ வாஸ் ஃபயர்ட்”. வாய் நிறைய சாப்பாடு இருந்தும் சத்தம் போட்டு சிரித்தார்.
“அப்புறம்?”
“அப்புறம் என்ன, மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு சொந்த ஊரான கல்கத்தாவை நோக்கித் திரும்பினேன். அன்றைக்கு ஆகஸ்ட் 14 1947. சாயங்காலம் கராச்சியிலிருந்து இந்தியாவுக்கு ரெயில். இரண்டு மார்க்கமாகப் போகலாம். லாகூர் வழி போவதுதான் பிரபலமான ரூட். அருமையான ட்ரெயின். அந்த காலத்துக்கு படு சொகுசு வண்டி. பிரயாணத்தில் எல்லாமே கிடைக்கும். ராஜா மாதிரி போகலாம். இன்னொரு மார்க்கம் ராஜஸ்தான் வழியாகப் போகும். இரண்டு நாட்கள் பாலைவனப் பயணம். போரான ரூட். சாப்பிட, குடிக்க எதுவுமே கிடைக்காது. அவ்வப்போது லம்பாடிகள் தண்ணீர் கொண்டு வந்து விற்பார்கள். ஒரு லோட்டா நாலணா. யாருமே அந்த ரயிலில் போகமாட்டார்கள். அன்றைக்கு லாகூரில் ஜின்னா கொடி ஏற்றி பாகிஸ்தானின் சுதந்திரத்தை அறிவித்தார். சரி, ஆஜாத் பாகிஸ்தான் பிறந்த அன்று இங்கே இருந்தாயிற்று. அடுத்த நாள் ஆஜாத் இந்தியா பிறக்கும்போது இந்திய மண்ணில் இருப்போமே என்று ஏதோ யோசனையில் ராஜஸ்தான் ரூட் ட்ரைனைப் பிடித்தேன். அன்றைக்கு ராத்திரி லாகூர் ட்ரெயினில் இருந்த ஒரு இந்து, சீக்கியன்கூட உயிரோடு அமிர்தசரஸ் போய்ச் சேரவில்லை. வழிலேயே ச்சாப் ச்சாப். நான் இன்றைக்கு உங்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்”. அதே வெடிச் சிரிப்பு.
“அடடா.. போர் இல்லை என்றாலும் செத்துப் பிழைத்திருக்கிறீர்கள். அப்போது நம் டிஃபென்ஸ் ஃபோர்சஸ் உங்களை கௌரவித்திருக்குமே…”
மறுபடி சிரித்தார். “பென்ஷன்கூட வரவில்லை ஸார். கராச்சியில் என்னுடன் கமாண்டிங் ஆபிசராக இருந்தவர் சவுத் ப்ளாக்கில் சீனியர் பொசிஷனில் இருந்தார். அவரைக்கூட போய்ப் பார்த்தேன். நீ கராச்சி டிவிஷனில் இருந்ததால் உன் அப்ப்ளிகேஷன் அங்கேயிருந்துதான் ஃபார்வேர்ட் ஆகி வரணும் என்று சொல்லிவிட்டார்கள், அது நடக்கிற காரியமா? நானும் விடாமல் கடைசி வரை கேஸ் போட்டேன். பொண்டாட்டி பிள்ளைகள் பேச்சைக் கேட்காமல் சம்பாதித்த காசை கோர்ட்டு கேசு என்று வீராப்பில் விட்டதுதான் மிச்சம்”.
ஆரஞ்சு ஜூஸ் வந்தது. எங்கள் யார் முகத்திலும் ஈயாடவில்லை. ஆனால் அவரோ அனுதாபத்தை எதிர்பார்த்து இது எதையும் சொல்லவில்லை என்பதால் நிம்மதியாக ஜூஸை பருகிக் கொண்டே, “விடுங்க, கேப்டன், சத்யமேவ ஜெயதே, இல்லையா…” மறுபடி சிரிப்பு.
சூழ்நிலையை சமன்படுத்த என் மாமனார் பேச்சைத் திருப்பினார். “உங்க பேமிலி ஸார்?”
“மனைவி இப்போது இல்லை. மூணு பசங்க. மூத்தவன் பிரிகேடியர். ஆர்மி டாக்டராக டெல்லியில் இருக்கிறான். இரண்டாவதும் டாக்டர்தான். ஆனால் பாஸ்டனில் செட்டில் ஆகிவிட்டான். மூன்றாவது பையன் என்னுடன்தான் ஏதோ பிசினஸ் பார்த்துக் கொண்டிருக்கிறான்.” இம்முறை சிரிப்பு இல்லை. மாறாக ஒருவகை அசௌகர்யத்தை அவர் கண்களில் உணர முடிந்தது. அந்தரங்க கேள்வியை யாரோ சடாரென கேட்டதனால் ஏற்பட்ட அசௌகர்யம் போல் இல்லை. வேறு ஏதோ..
இப்போது அவர் கேட்டார்.
“நீங்கள் புவநேஷ்வர்தானா..?”
“சொந்த ஊர் இதுதான். ஆனால் இப்போது பாரதீப் துறைமுகத்தில் வேலை பார்க்கிறேன். ஏன் கேட்கிறீர்கள்?
“என் பேரனுக்கு, மூன்றாவது பையன் என்றேனே, அவனின் மூத்த மகனுக்கு, இங்கே இன்ஜினீயரிங் காலேஜில் சீட் அப்ளை செய்ய வேண்டும். எந்த காலேஜ் நல்ல காலேஜ் என கேட்கலாம் என்றுதான்.”
நான் குறுக்கிட்டேன், “காலேஜின் தரம் எல்லாம் இன்றைக்கு தேதியில் ஒன்றுக்கும் உதவாது ஸார். நான் சாஃப்ட்வேரில் இருக்கிறேன். ஆனால் எங்கள் ஆபீசில் பாடாவதி காலேஜில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவன்கூட இன்று சீனியர் மேனேஜராக இருக்கிறான். இப்போதெல்லாம் நீங்கள் எந்த அளவுக்கு ஸ்ட்ரீட் ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள், சூட்சுமமாக வேலை செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். இந்த எஜுகேஷன், காலேஜ் இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.”
“சபாஷ். அதுவும் ஒரு வகையில் சரிதான். என்ன, என் பேரன் என் மாதிரி.. அப்போ அவன் வாழ்க்கை அம்போதான்”. சிரிப்பு திரும்பியது. ஏதாவது லாஃபிங் க்ளப்பில் மெம்பராக இருப்பாரோ?
எல்லாருமாக சாப்பிட்டு முடித்து எழுந்தோம்.
மாமனார் “நைஸ் மீட்டிங் யூ ஸார்” என திரும்ப கை குலுக்கினார்.
பெரிய சாதனையாளர் ஒருவரைச் சந்தித்த திருப்தியில், “இந்த வயதிலும் மனதுக்கு விருப்பமான தொழிலை அயராது செய்கிறீர்களே. நீங்கள் என் ரோல் மாடல் ஸார்” என்றேன்.
இம்முறை, கொஞ்சம் செயற்கையாக, மறுபடி வாய்விட்டு சிரித்தார். “மனதுக்கு விருப்பம் எல்லாம் இருக்கட்டும். வயிற்றைக் கழுவ வேண்டியிருக்கிறதே !”
Well described Vicky…loved reading the entire conversation…..happy that u spoke with him and do keep sharing such inspiring happenings!!
Superb Writing Vicky. Tamil vaarthai prayogam romba nalla irukku. Do keep writing.