காவியக் கவிஞர்

”மனதின் சாராம்சம் நிரந்தரமான தூய்மையை கொண்டதாக இருந்தாலும், அறியாமையின் தாக்கம் சூழல்-சார் மனதை சாத்தியமாக்குகிறது. சூழல் சார்ந்ததாக இருந்தாலும், மனம் நிரந்தரமானது ; மாசுமறுவற்றது ; சுத்தமானது ; மாற்றங்களுக்கு உட்படாதது. அதனுடைய மூல இயல்பு பிரத்யேகத்தன்மையில்லாமல் இருப்பதால், பல்வேறு முறையிலான இருப்பை எங்கும் சிருஷ்டி செய்தவாறு இருந்தாலும், அது தனக்குள் ஒரு மாற்றமுமிலாமல் தன்னை உணர்கிறது.

விஷயங்களின் ஒட்டுமொத்தத்தின் ஒற்றைத் தன்மை ஏற்கப்படாத போது, பிரத்யேகத்தன்மையுடன் கூடிய அறியாமை எழுகிறது ; சூழல்-சார் மனதின் எல்லா நிலைகளும் வளர்கிறது. இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆழமானது ; புத்தர்களைத் தவிர யாராலும் புரிந்து கொள்ள இயலாதது.”

                                                அசுவகோசர் (மஹாயானஷ்ரத்தோத்பத சாஸ்திரம்)

இந்தியப் பெருநிலத்தை ஆண்ட சக்கரவர்த்திகளுள் முதன்மையானவர் அசோகர். பௌத்த மதக் கொள்கைகளில் கொண்ட பிடிப்பினால், போர்களை விலக்கி, குடிமக்கள் நலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறைகளை பின்பற்றி நல்லாட்சி வழங்கியவர் அசோகர். அவர் மறைந்து இரு நூற்றாண்டுகள் கழிந்த பிறகு இந்தியப் பெருநிலத்தின் வடமேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு ஆண்டு வந்த கனிஷ்கர் குஷான வம்சத்தின் மிகப் பிரசித்தமான பேரரசர். கனிஷ்கர் புருஷபுரத்தில் (இன்றைய பெஷாவர் / பாகிஸ்தான்) இருந்து கிளம்பி மத்திய இந்தியாவை நோக்கி படையெடுத்தார். அவர் கடந்த பாதையிலிருந்த எல்லா நாடுகளையும் அவரது ஆட்சிக்கு உட்படுத்தினார்.  சீனாவின் உய்கர் பிராந்தியத்தில் இருந்து தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிழக்கு இரான், ஆப்கானிஸ்தான், தற்போதைய பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் இந்தியாவின் கிழக்கில் இருந்த பாடலிபுத்திரம் வரையிலான பெரும் நிலப்பரப்பு கனிஷ்கரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அசோகர், ஹர்ஷர், மினாந்தர் I (மிலிந்தன்) – இவர்களோடு சேர்த்து கனிஷ்கரும் முக்கியமான பௌத்தப் பேரரசராக கருதப்படுகிறார்.

பாடலிபுத்திர நகரைக் கைப்பற்ற நடந்த கடும்போரில் கனிஷ்கர் வெற்றி பெற்றார். கனிஷ்கர் கேட்ட தண்டத்தொகை ஒன்பது லட்சப்பொற்காசுகளை பாடலிபுத்திரத்தின் மன்னரால் அளிக்க இயலவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தையின் இறுதியில் கனிஷ்கருக்கு மூன்று காணிக்கைகளை தருவதாக வாக்களிக்கப்பட்டது. கருணை குணத்தின் குறியீடாகக் கருதப்பட்ட கோழி ஒன்று. சாக்கியமுனி புத்தர் பயன்படுத்திய பிச்சைப்பாத்திரம் இன்னொன்று. இவற்றோடு மூன்றாவதாக பௌத்த சிந்தனையாளரும், காவிய இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த  பிக்ஷு அசுவகோசர். மூன்று காணிக்கைகளையும் கனிஷ்க மன்னர் ஏற்றுக்கொண்டார். அசுவகோசர் புருஷபுரம் வந்து கனிஷ்கரின் அவையில் ஆன்மீக ஆலோசகராக இருந்தார்.

ashvaghosha

அசுவகோசரின் பிறப்பு மற்றும் வாழ்க்கை பற்றிய விவரங்களைப் பொறுத்தவரை வரலாற்றுக் காலவரிசையாளர்கள் வேறுபடுகின்றனர். அவர் மேற்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பிறந்திருக்கலாம் (வட இந்தியாவில் பிறந்தார் என்று ஒருவரும் சொல்லவில்லை !) என்றும், அந்தண குலத்தில் பிறந்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர். இள வயதிலிருந்தே அவர் அசாதாரணமான அறிவு பெற்றிருந்ததாக தொன்மக் கதைகள் கூறுகின்றன. வைதீக மரபின் கோட்பாடுகளில் தீவிர நம்பிக்கை கொண்டவராக இருந்த அசுவகோசர் தினம் சந்திக்கும் எளிய பௌத்தர்களிடமெல்லாம் வாதிட்டு வெற்றி கொள்வார்.  கூடுதல் சவால் மிகுந்த வாக்குவாதங்களை வேண்டி மகத நாட்டிற்கு வந்து புகழ்பெற்ற பௌத்த மத மையங்களில் உள்ள சான்றோருடன் வாதாடினார். அவரின் வாதத்திறன் சொற்றிறன் காரணமாக ஒரு பௌத்த விகாரத்தின் மணியொலி நின்று போனதாக செவி வழிக்கதைகள் உண்டு. அவரின் ஆக்ரோஷமான வாதங்கள் பௌத்த தத்துவ உலகில் அதிர்வலையை ஏற்படுத்தின. அசுவகோசரின் அபக்கியாதி பார்ஷ்வர் என்ற ஒரு வட இந்திய பௌத்த சிந்தனையாளரை எட்டியது. பார்ஷ்வர் சீன பௌத்தர்களால் பத்தாவது இந்திய பௌத்தகுருவாக போற்றப்படுபவர். அவர் மகதத்தை அடைந்து அசுவகோசரை வாதத்துக்கு அழைத்தார். தோற்றவர் வெற்றி பெற்றவரின் சீடராக வேண்டும் எனபது நிபந்தனை. அசுவகோசர் ஒத்துக்கொண்டார். பார்ஷ்வரின் முதிய வயதின் காரணமாக வாதத்தை பார்ஷ்வரே துவக்க அசுவகோசர் பெருந்தன்மையுடன் ஆமோதித்தார்.

பிற சமய-வாதங்களில் நிகழ்வது போல பார்ஷ்வர் தத்துவ சொற்பொழிவிலோ நீளமான தர்க்கவாதங்களை அடுக்குவதிலோ இறங்கவில்லை. ஒரே ஒரு வினாவைத்தான் முன் வைத்தார். “பாவங்களிலிருந்தும் கெட்ட செயல்களிலிருந்தும் முக்தி பெறவும், செல்வச்செழிப்பில் எண்ணிலாவளத்தில் மக்கள் கொழிக்கவும், நாடாளும்  அரசன் பல்லாண்டு உயிர் வாழவும், ராஜ்ஜியம் முழுமையான அமைதியைப் பெறவும் நாம் செய்ய வேண்டுவது என்ன?” வாதம் அமைதியான முறையில் தொடங்கியதைப் பார்த்த மக்கள் ஆச்சரியமுற்றார்கள். அவர்களை அதைவிட அதிகம் ஆச்சரியம் கொள்ள வைத்தது அசுவகோசரின் எதிர்வினை. அவர் பதிலே பேசவில்லை. பல நிமிடங்கள் பார்ஷ்வரை அமைதியுடன் உற்று நோக்கியவண்ணம் நின்றிருந்தார். பிறகு பார்ஷ்வரிடம் சரணடைபவர் போன்று தன் தலையைக் குனிந்து அவரை வணங்கினார். இவ்வாறு அசுவகோசர் ஷ்ரமணரானார். புத்த சூத்திரங்களை வாசிக்கத் தொடங்கினார். பார்ஷ்வரின் ஞானத்தை உடனடியாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லையாயினும் வாதத்தின் நிபந்தனைகளையின் படி அசுவகோசர் பௌத்தரானார்.  அசுவகோசர் முழுமையாக பௌத்தத்தை ஏற்பதற்காக, பார்ஷ்வர் பலவகையான ஒளிரும் மாற்றுருவங்களால் தன்னை வெளிப்படுத்தினார். இவ்வாறு, தன்னுடைய புதிய ஆசான் சாதாரண மனிதரில்லை என்று அசுவகோசர் புரிந்து, ஆனந்தத்துடன் தன்னை பார்ஷ்வரின் சீடனாக்கிக் கொண்டார். பார்ஷ்வரின் நெருங்கிய சீடர் புண்யயஷரை அசுவகோசருடன் விட்டுவிட்டு பார்ஷ்வர் வட இந்தியா திரும்பிவிட, புண்யயஷர் வாயிலாக பௌத்த தத்துவங்களையும் கொள்கைகளையும் கற்கிறார்.

தாரநாதர் என்கிற திபெத்திய பௌத்த வரலாற்றாசிரியர் சொன்ன கதையில் அசுவகோசரை ஆர்யநாதர் என்கிற பிக்‌ஷு வாதத்தில் முறியடித்ததாக வருகிறது. தோல்வியை அசை போட்டுக்கொண்டிருந்த தருணத்தில் அசுவகோசருக்கு ஒரு பௌத்த நூலொன்று படிக்கக் கிடைக்கிறது. அதில் அவரின் மதமாற்றம் பற்றியும் அவருடைய எதிர்கால நிகழ்வுகள் பற்றியும் குறி சொல்வது போல் எழுதப்பட்டிருக்கிறது. அதைப் படித்து முடித்தவுடன் அவர் பௌத்த சங்கத்தில் சேர்ந்து விடுகிறார்.

அசுவகோசரின் மேதைமை பல துறைகளில் ஒளிர்ந்திருக்கிறது. பௌத்தக் கருத்துகளில் அடிப்படையில் அவர் பல நாடகங்களை புனைந்திருக்கிறார். ஷாரிபுத்ர ப்ரகரணம் என்கிற ஒரு நாடகத்தை தவிர வேறு எந்த நாடகமும் நமக்கு கிடைக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய மகாகவி காளிதாசரின் காலம் வரை சமஸ்கிருத நாடக இலக்கியத்தின் தந்தையாக அசுவகோசர் போற்றப்பட்டார். காவிய பாணியிலான சமஸ்கிருத கவிதை நூல்களுக்கும் அசுவகோசர் முன்னோடி. ‘புத்தசரிதம்” மற்றும் “சௌந்தரானந்தா” என்கிற இரண்டு காவிய நூல்களை இயற்றியிருக்கிறார். “புத்தசரிதம்” சித்தார்த்த கௌதம புத்தரின் முழு வாழ்க்கையை காவிய வடிவில் சித்தரித்த முதல் படைப்பு. “சௌந்தரானந்தா” இளம் மனைவியை விட்டு விலகி பிக்‌ஷு வாழ்க்கையை ஏற்கும், புத்தரின் நெருங்கிய உறவினன் ஆனந்தனின் கதை.

buddhacarita

உலக மயக்கங்களின் பின்னர் அடங்கியுள்ள வெறுமை மற்றும் ஷூன்யதா தத்துவத்தை கருப்பொருளாக எடுத்துக் கொண்டு குரல்களையும் இசை வாத்திய முழக்கங்களையும் கோர்த்து அசுவகோசர் ஓர் இசையை உருவாக்கியதாக ஒரு தொன்மக்கதை தெரிவிக்கிறது. அதைக் கேட்ட பாடலிபுத்திர இளவரசர்கள் எல்லாம் அதைக் கேட்ட மாத்திரத்தில் நெகிழ்ந்து பௌத்தத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு சங்கத்தில் இணைந்ததாகவும், ஒரு சமயத்தில் அரசனின் ஆணைப்படி அந்த இசையை அரங்கேற்ற தடை விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அசுவகோசரின் இறுதிக் கால வாழ்க்கை பற்றி நமக்கு அதிகம் தகவல் கிடைக்கவில்லை. பார்ஷ்வரின் இறப்புக்குப் பிறகு புண்யயஷர் பௌத்த சமயத்தின் பதினோராவது முதன்மை குரு (Patriarch) வாகிறார். புண்யயஷர் காலமான பிறகு அசுவகோசருக்கு அந்த பதவி கிடைக்கிறது. கனிஷ்கரின் காலத்தில் பௌத்தமதத்தின் நான்காவது சபையை அசுவகோசர் கூட்டினார். இம்மாநாடு காஷ்மீரில் முதலாம் நூற்றாண்டில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ஒரு நூற்றாண்டு முன்னர் தேரவாத பௌத்தர்கள் மஹாயான (சர்வாஸ்திவாத) பௌத்தர்களிடமிருந்து பிரிந்து நான்காவது மாநாட்டை இலங்கையில் நிகழ்த்தினர். இதில் வடக்கு பௌத்தர்கள் என அழைக்கப்பட்ட மஹாயான பௌத்தர்கள் பங்கெடுக்கவில்லை. அசுவகோசர் கூட்டிய மாநாட்டில் தெற்குப் பௌத்தர்களும் இலங்கைப் பௌத்தர்களும் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய அபார சொல் திறன் கொண்டு எளிதில் விளங்காத பௌத்த தத்துவங்களை, மஹாயான மீப்பொருண்மையியலின் நுட்பமான தருக்கங்களை தெளிவுடன் விளக்கி அவற்றிற்கு வடக்கு பௌத்தர்களின் ஒப்புதலைப் பெற்றார்.

அவர் ஏழு தத்துவ நூல்கள் எழுதியதாக சீன பௌத்தக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. நாகர்ஜுனரின் பௌத்தக்கருத்தியலை ஒட்டிய நூலொன்றை நாகார்ஜுனரின் காலம் முன்னரே அசுவகோசர் எழுதியிருக்கிறார். அவரின் இரு முக்கியமான ஆன்மீக தத்துவ நூல்கள் – ”மஹாலங்காரசூத்திரசாஸ்திரம்” “மஹாயானஷ்ரத்தோத்பதசாஸ்திரம்” முன்னது தண்டிக்கும் கருமவினைகளை விளக்கும் கதைகளை அடக்கிய நூல் ; பின்னது பல்வேறு மஹாயான பௌத்தக் கிளைகளுக்கும் பொதுவான கோட்பாடுகளை விளக்கும் அடிப்படை நூல்.

“மஹாயானஷ்ரத்தோத்பதசாஸ்திரம்” நூல் (The awakening of faith in the Mahayana) காஷ்மீரில் நடைபெற்ற பௌத்த மாநாட்டுக்காக எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்நூலின் சமஸ்கிருத மூலம் நமக்கு கிடைக்கவில்லை. கிடைத்த தொன்மையான பிரதிகள் எல்லாம் சீன மொழிப் பிரதிகளே. பொதுவாக மஹாயான பௌத்தர்கள் அசுவகோசரை இந்நூலின் ஆசிரியராகக் கருதினாலும், சில ஆராய்ச்சியாளர்கள் மூலநூல் சீன மொழியால் இயற்றப்பட்டிருக்கக்கூடும் என்று சொல்கின்றனர். வேறு சில ஆய்வாளர்கள் அசுவகோசரே இந்நூலை எழுதினார் என்றும் கி.பி ஆறாம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவிலிருந்து சீனா சென்று பல வடமொழி நூல்களை சீன மொழியில் மொழிபெயர்த்த பரமார்த்தர் என்பவரை இந்நூலையும் மொழி பெயர்த்தார் என்றும் கூறுகின்றனர். இலக்காகவும் அடையும் வழியாகவும் உள்ள இறுதி யதார்த்தத்தின் ஆழ்நிலை இயல்பினை இந்நூலில் பிரகடனம் செய்தார்.

கி.பி 150 இல் அசுவகோசர் உலக வரலாற்றில் இருந்து மறைந்த போது ஒரு புனித மரபை விட்டுச்சென்றார். காந்தாரம், மத்திய ஆசியா, சீனா, கொரியா மற்றும் ஜப்பானிலிருந்து எழுந்த பௌத்தப் பள்ளிகளுக்கும் கோட்பாடுகளுக்கும் அசுவகோசர் விட்டுச் சென்ற மரபே நீரூற்றியது.

+++++

புத்த சரிதம் – மகளிரை மறுத்தல் – நான்காம் படலம்

நகரப்பூங்காவில் நங்கைகள் முன்னும் பின்னுமாக அழகு நடை பயின்றவாரிருந்தார்கள் ; அவர்களின் விழிகள் உற்சாகத்தில் மின்னின. மணமகன் வரவுக்காக காத்திருக்கும் மணமகள் போல, இளவரசனின் கண்களை சந்திப்பதற்காக ஆவலுடன் இருந்தார்கள்.

அவன் அருகில் அணுகுகையில், அவர்களின் விழிகள் வியப்பில் அகன்று விரிந்தன. தாமரை மொட்டுகளைப் போல் கைகளைக் கூப்பி மரியாதையுடன் அவனை வரவேற்றார்கள்.

அவர்களின் மனங்கள் காதலில் மூழ்கி, மெய்மறந்த பரவச உணர்ச்சியில் திளைத்தவாறு, அவனை தம் அசையாத கண்களால் பருகி விடுபவர்கள் போல் பார்த்துக் களித்தார்கள்.

உடலோடு ஒட்டிப் பிறந்த ஆபரணங்களைப் போன்று அவனுடைய கவர்ச்சியான உடலமைப்பும் எழிலும் காதற்கடவுள் மனித ரூபமெடுத்து வந்ததோ என்ற எண்ணத்தை பெண்களுக்குள் ஏற்படுத்தின.

அவனுடைய பார்வையையும் ஈர்ப்பையும் பார்த்து வானின் நிலா தன் கதிர்களை மறைத்து பூவுலகிற்கு வந்திருக்கிறதென சில பேர் எண்ணினார்கள்.

அவனுடைய அழகால் ஈர்க்கப்பட்ட அப்பெண்கள் நெளிந்தனர் ; ஒருவருக்கொரு ஒருவர் பொறாமை மிகுந்த பார்வைகளை பரிமாறிக்கொண்டனர் ; மெலிதாக பெருமூச்சு விட்டனர்.

அம்மகளிர் அவனை நோக்கி பார்வைகளை வீசினரே தவிர, அவர்கள் அவனின் புரிந்துணர முடியா சக்தியில் கட்டுப்பட்டிருந்தனர். அதன் காரணமாக அவன் முன்னால் அவர்களால் பேசவோ சிரிக்கவோ முடியவில்லை.

காதல் வயப்பட்டும் அதிசயமான வெட்கவுணர்வால் கட்டுண்டு நின்றிருந்த பெண்டிரைப் பார்த்து புரோகிதன் மகனும் மதி நுட்பமிக்கவனுமான உதயன் இவ்வாறு பேசத் தொடங்கினான் :

“கலையில் உன்னத பயிற்சியுடையவர்கள் நீங்கள் ; காண்போரின் உணர்ச்சிகளை வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள் ; அழகும் கவர்ச்சியும் ஒருங்கே பெற்றவர்கள் ; ஒப்புயர்வற்ற அங்கங்களை ஆஸ்தியாகக் கொண்டவர்கள்.

இந்தக் கொடைகளுடன் வடக்கத்திய குரு ராஜ்ஜியத்திலோ குபேரனின் உல்லாச வனங்களிலோ கூட உங்களால் வலம் வர முடியும்.

காமமிலா முனிவர்களின் மனதையும் உங்களால் அசைத்துப் பார்த்து விட முடியும் ; அப்சரஸ்களுக்கு பழக்கப் பட்ட தேவர்களையும் நீங்கள் மயக்கிவிடுவீர்கள்.

உங்களின் உணர்ச்சி நிறை உளப்பாட்டினால், கொஞ்சும் வார்த்தைகளால், அழகு மிகுந்த உடற்செல்வத்தால் பெண்களையும் கவரும் வல்லமை கொண்ட உங்களுக்கு ஆண்கள் எம்மாத்திரம்?

இத்தகைய பண்புகளுடன், விசேட சிறப்புத் தன்மைகளைக் காட்டாமல் தளர்வான நடத்தையை காட்டும் உங்களின் இன்றைய படாடோபமின்மை என்னை அதிருப்திப் படுத்துகிறது.

ஆடு மேய்ப்பவர்களின் மனைவிகளிலும், வெட்கத்தில் கண்களைக் குறுக்கிக் கொள்ளும் மணப்பெண்களிலும் வேண்டுமானால் இந்நடத்தை பொருத்தமானதாக இருக்கும்.

அவரது மாட்சிமை பொருந்திய ஆற்றலினால் கை வரப்பெற்ற அவருடைய உறுதியான, மேன்மை மிகு நடத்தையை காரணமாகச் சொல்லும் நீங்கள் பெண்களின் வலிமை பெரிது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே இவ்விஷயத்தில் சற்று உங்கள் உறுதியைக் காட்டுங்கள்.

கடவுளர்களாலும் வாதத்தில் சமாளிக்க முடியா வியாசரையே காசி சுந்தரி என்கிற விலை மகள் காலால் மிதித்தாள்.

ஜங்கா என்ற நாட்டியக்காரியுடன் உடல் உறவு கொள்ளும் ஆசையால், அவளின் மனங்குளிர வைப்பதற்காக மந்தாள கவுதமர் எனும் முதியவர் பிணங்களைத் தூக்கிச் சென்றார்.

தீர்கதபஸ் கவுதமர் என்கிற பெரு முனிவரை கீழ் சாதியில் பிறந்த ஓர் இளம் பெண் சந்தோஷப் படுத்தினாள்.

பெண் வாசனையே அறிந்திராத ரிஷ்யசிருங்கனை தன் அழகால் வளைத்து பல்வேறு யுக்திகளை சொல்லிக் கொடுத்து சந்தா என்பவள் தன் வசப்படுத்திக் கொண்டாள்.

தவ சிரேஷ்டர் விஸ்வாமித்திரர் தேவ மங்கை க்ருதையின் அழகால் வசீகரிக்கப்பட்டு ஒரு நாள் கூட அவளை விட்டு அகராமல் பத்தாண்டுகள் காலம் கழித்தார்.

இது போன்ற தவ முனிவர்களுக்கெல்லாம்பெருக்கெடுக்கும்உணர்ச்சிகளை பெண்கள் அளித்திருக்கின்றனர் எனும் போது இளம் மலரைப் போல் பூத்திருக்கும் அரசன் மகன் எம்மாத்திரம்?

(தொடரும்)