வெயில் நதி – சிற்றிதழ் அறிமுகம்

இலக்கிய வட்டாரத்தில் சிற்றிதழ்கள் ஒவ்வொரு காலத்திலும் மிக முக்கியமான நகர்வுக்கு அடிகோலுகின்றன. மக்கள் மத்தியில் தன் இலக்கிய விலாசத்தை நிறுவிக் கொள்வதோடு நின்றுவிடாமல் தனக்கென்ற ஒரு பாணியை ஏற்படுத்திக் கொள்வது சிற்றிதழ்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. வாசக உலகில் சிற்றிதழ்களுக்கென்ற நிரந்தரமான இடம் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. பரவலான கவனத்தைப் பெறச் சிற்றிதழாசிரியர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. தங்களுடைய பொருளாதாரச் சூழலையும் கடந்து ஒருவர் சிற்றிதழ் ஒன்றைத் தொடர்ந்து நடத்திவர ‘பேரார்வம்’ ஒரு முக்கியமானக் காரணமாக இருக்கிறது. சிற்றிதழின் தனித்தன்மையும் மற்றொரு காரணம். சிற்றிதழ் கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் எழுத்தாளனின் படைப்புத் திறனுக்கு வாய்ப்பு கொடுத்து வலுப்படுத்தவும் தம் சொந்த கஷ்டநஷ்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இயங்கும் அவர்களின் பண்பு மற்றொரு போற்றத்தக்க காரணமாக இருக்கிறது. இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு சிற்றிதழ் தொடர்ந்து வெளிவந்து குறைந்தபட்ச வரவேற்பைப் பெறுவதும்கூட தன்னளவில் பெரியதொரு சாதனையே என்று கருதுகிறேன்.

சமகாலச் சிற்றிதழ்களில் உதாரணமாகச் சிலவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். அவ்வகையில், நிலா ரசிகனின் 361′ மற்றும் இயற்கை சிவம் அவர்களின் வெயில் நதி ஆகியவை சமீபத்தில் தொடங்கப்பட்டு தனிப்பட்ட தடங்களைப் பதித்தவை. வெகு நாட்களுக்கு முன் துவக்கப்பட்ட சிற்றிதழ்களுக்கு ஒரு முக்கியத்துவம் என்றும் உள்ள ஒன்று. அவை தனக்கே உரியதொரு அமைப்புடன் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அத்தகைய தனித்துவங்களுடன் இயங்கும் சிற்றிதழ்கள் பல இன்றும் உள. அதன்படி, கடந்த ஆண்டில் கொண்டு வரப்பட்ட வெயில் நதி இதழும் எதிர்பார்ப்பை நிறைவு செய்து சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பள்ளி ஆசிரியர் பணியில் இருக்கும் சிவம் ஆசிரியராகப் பொறுப்பேற்று இவ்விதழை நடத்தி வருகிறார்.

wraper - 2

சிறுகதை, நவீன தமிழ் கவிதைகள், ஆளுமைகளின் நேர்காணல்கள், கட்டுரைகள் என அடிப்படையாக ஒரு இலக்கிய சிற்றிதழில் இடம்பெறும் படைப்புகளுடன் வெயில் நதி இதழ் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிதாக எழுத விரும்பும் படைப்பூக்கமுள்ளவர்களுக்கு ஒரு களமாக செயல்படும் நோக்கில் இவ்விதழ் துவங்கப்பட்டுள்ளது.

இரண்டு இதழ்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. முதலிரண்டு இதழ்களிலுள்ள சிறுகுறைகளை நீக்கி மூன்றாவது இதழை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் இதழின் ஆசிரியர் சிவம். இக்கட்டுரை சமீபத்தில் வெளியான மூன்றாவது இதழைப் பற்றியது.

முதல் இரண்டு இதழ்களைவிட மூன்றாவது இதழில் சிவம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதை வாசிக்கும்போது உணர முடிகிறது. சிற்றிதழ்களுக்கே உரிய க்ளாசிக் உலக சிறுகதைகள் இடம்பெறாமல் இருந்தாலும் உள்ளடக்கத்தை ரசிக்க முடிகிறது. புதிய படைப்பாளிகளுக்கு தொடர்ந்து இடமளித்து வருவதை நியாயப்படுத்தும் வண்ணம் தேர்ந்த எழுத்தாளர்களிடமிருந்து அவர்களை சிறிதளவும் பிரித்து இனம் காண்பதற்கு இயலாத வகையில் படைப்புகள் சிறப்பாகவே பிரசுரப்படுத்தப்படுகிறது. சிறுகதைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள், ஆசிரியர் பகுதி என்ற கட்டமைப்பிலிருந்து வேறுபட்ட ஒரு அம்சத்துடன் இதழை உருவாக்கும் ஒரு புதிய முயற்சி வெயில் நதி.

மூன்றாவது இதழில் என்னைக் கவர்ந்தவைகளாக கீழ்க்கண்டவற்றை சொல்லலாம்: மனுஷி, மீனா சிவம், கார்த்திகைப் பாண்டியன், செஞ்சி தமிழினியன்  ஆகியோரின் கவிதை, பீர் முகம்மது எழுதிய குர்து இலக்கியம், கணேச குமாரன், சைலபதி, ராம் முரளி ஆகியோரின் சிறுகதை, தீபச்செல்வனின் கட்டுரை, கண்டராதித்தனின் கவிதை, சிவம் எழுதிய பாறைப் படிவம் குறித்த பின் அட்டைக் கட்டுரை.

செருப்பு என்ற தலைப்பில் இருக்கும் மனுஷியின் கவிதை:

“நானே பார்க்கக் கூசும்

என் அம்மணத்தைப்

பார்த்து ரசிக்கிறது

என் அறை.

கழட்டிப் போட்ட உள்ளாடைகளின்

வாசம்பிடித்தபடி

உறங்குகிறது

என் தலையணை.

இரவு முழுவதும்

என்னைப் புணர்ந்துவிட்ட களைப்பில்

சுருண்டு கிடக்கிறது

என் போர்வை

பாதங்களை முத்தமிட்டு முத்தமிட்டே

தேய்ந்துபோன என் செருப்பு

என் படுக்கையை அடையும் நோக்கத்துடன்

காத்துக் கிடக்கிறது வாசலுக்கு வெளியே.

வாசிக்கையில் ஒரு ஆச்சர்யத்தைத் தரும் கவிதை இது. “செருப்பு”

பல படிமங்களாக விரியக் கூடியது. மனுஷியின் சொல்லமைப்பு சீரானது. எளிய ஒரு கவர்ச்சி நடையைக் கொண்டிருக்கிறது. ஆனால், கவிதை நம் அகத்தில் உருவாக்கும் வெளியில் அதன் கவர்ச்சியைத் தவிர எதையும் தேடி அடைய இயலவில்லை.

கவிதையின் ஆரம்ப வரிகள் சுயம் குறித்த எண்ணங்கள் மற்றும் துன்பங்களின் அடிப்படையில் உருவாகும் மன அழுத்தத்தின் ஒரு வகைப்பாடு என்பது இக்கவிதைக்கு ஒரு தனித்தன்மையளிக்கிறது.

செஞ்சி தமிழினியனின் “நிலா கொஞ்சம் ஒடுக்காய் இருக்கிறது” என்ற கவிதை , இனி வரும் நாட்களில் வானத்தில் பிறை நிலாவைப் பார்க்கும்போது திடீரென தோன்றும் மாயாஜால கற்பனைகள் நினைவில் வரும் வகையில் மீயதார்த்த பாணியில் (மேஜிகல் ரியாலிசம்) அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

“முள் கிரீடம்” கவிதையில் யட்சியாக வரும் பெண் மரியாகவும் அவள் கையிலிருக்கும் சிசுவானது தேவகுமாரனாகவும் உருக்கொள்ளும் இடம் பொது சமூகத்தினால் ஏற்கப்படாத மக்களின் அவல நிலை மனிதம் கொண்டு மேன்மையடையும் முக்கியமான வரிகளாக இருக்கிறது. கார்த்திகைப் பாண்டியன் கவிதைக்கு வெளியிலும் ஒரு

கிளைக்கதையை வைத்திருக்கிறார் போலத் தோன்றுகிறது.

//சாலையில் விரைந்திடும் வாகனங்களின் வழியே

பிள்ளையேந்தி யாசகம் கேட்கும் யட்சியொருத்தி//

//மரியாய் மாறிப்போன யட்சியும்

கையிலிருந்த தேவகுமாரனின் கைகளில் உறைந்த உதிரமும்//

நேரடிக் கவிதைகளில் ஒன்றாக மீனா சிவம் எழுதிய “அநாதைக் காதல்” கவிதையை கருதுகிறேன். கவிதையின் இறுதி வரியில் காதல் அநாதையுறும் இடம் ஒரு பக்க நிராகரிப்போடும் – மறு பக்க ஏக்கத்தின் முடிவுடனும் இவ்விரண்டும் கலந்த மனித உணர்வுகளைக் கடந்து பேசுகிறது.  இங்கு காதலின் அருவம் கழன்று அதன் உருவத்தை மீனா சிவம் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்.

“நம்மிருவருக்கும் பொதுவான காதல் அநாதையாகிறது” – வரியில் காதல் அதன் உருவத்தைப் பெற்ற ஒன்றாக மாறி நிற்கிறது. தேர்ச்சியான சொற்களும், இசைவு குன்றாத வாக்கிய அமைப்புகளும் கவிதையை வலுவூட்டுகிறது.

வெயில் நதி மூன்றாம் இதழின் ஹைலைட் கண்டராதித்தனின் “ஞானப் பூங்கோதைக்கு வயது நாற்பது” என்ற கவிதை. இது தன்னனுபவத்தைப் பால் அடையாளத்துடன் பிணைத்துப் பேசும்  கவிதையும் கூட.

நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்

யாரைப் போல இருந்திருப்பேனோ

நேற்று அவளை நான் பார்த்தேன்

பேருந்தின் கடைசியில் நின்றிருந்த

அந்த பெண்ணிற்கு என் வயதிருக்கும்.

அந்த நாசி.

அந்தக் கண்கள்

கருங்கூந்தல்.

மாநிறம்.

சற்றே திமிரான பார்வை.

வடிவான தோற்றமென

நான் பெண்ணாகப் பிறந்தால்

வடிவெடுக்கும் தோற்றம் தான் அது.

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும் பார்த்துக்கொண்டோம்

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும் பார்ப்பதைத் தவிர்த்தோம்.

இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்

நீங்கள் இளங்கோவா என்றேன்

ஆமாம் என்ற அவள் நீங்கள்

ஞானப்பூங்கோதைதானே என்றாள்.

கவிதைகளின் வடிவ வகைமைகளை உடைத்து ஒரு புதிய வடிவத்தை அடைந்ததற்கான உதாரணங்களாக வா.மணிகண்டனின் ‘சாதுவான பொன்னிற மீன்’, ஷண்டாரோ தனிக்காவாவின் ‘பறவைகள்’, நிலாரசிகனின் ‘ஜூலி’ ஆகிய கவிதைகளைச் சொல்லலாம். அதேபோல் கண்டராதித்தனின் இந்த கவிதையும் ஒரு புதிய வடிவத்தை நோக்கிச் செல்வதாக உணர்கிறேன்.

உயிரி-மரபுத் தொடர் கொண்ட கவிதையின் பிரதியில் ஒரு சிறுகதை முளைக்கிறது. சிறுகதைக்கான நீட்சியை கவிதையிலிருந்தே எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது இந்தக் கவிதை. நம் அகத்தில் உருவாகும் கதையில், ஆண் அதே தோற்றம் கொண்ட பெண்ணாக இருந்ததும் ஒரு பெண் அதே தோற்றம் கொண்ட ஆணாக இருந்ததும் மரபுத் தொடர் வழி நிகழும் செயல்பாடுகளாகையால் அவற்றை முற்பிறவிக் கதைகளைப் போல் சொல்ல முடிவதில்லை.

மேலும், வரிகள் ஒவ்வொன்றும் துல்லியமாக வாசிப்பவருடன் தொடர்புகொள்கின்றன.

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும் பார்த்துக்கொண்டோம்

இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும் பார்ப்பதைத் தவிர்த்தோம்.

இவ்விரண்டு வரிகளினூடே செல்லும் நுணுக்கமான அவதானிப்பை மிக இயல்பாக ரசிக்க முடிகிறது. வித்தியாசமான களத்தைக் கண்டராதித்தன் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதைவிட அதை கவிதையாக சொல்லியதே இங்கு அழகு.

சிற்றிதழில் படைப்புகளைத் தெரிவு செய்து பிரசுரிக்கும் ஆசிரியரே முதன்மையானவராகையால், இக்குறிப்பிட்ட கவிதைக்காகவே சிவத்தைப் பாராட்ட வேண்டும்.

oOo

சிறுகதைகளைப் பொறுத்தவரையில் மொத்தம் நான்கு விதமான சிறுகதைகளை சிவம் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

விறுவிறுப்பான கதையோட்டமுடைய சைலபதியின் “வழித்தடம்”, திருகலான மொழியில் எழுதப்பட்டிருக்கும் கணேசகுமாரனின் “அண்ணகர்”, இயல்பான கதைவடிவமாக கருதப்படும் – ஜீவ கரிகாலனின் “நிலவுக்கு களங்கம்” , அடர்த்தியான பகுதிகளைக் கொண்ட ராம் முரளியின் “சிட்டுக்குருவி”.

அவற்றில் கணேச குமாரனின் அண்ணகர் என்ற சிறுகதை முக்கியமானது. சமீபத்தில் வாசித்த சிறுகதைகளில் இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பெண்ணின் பிரசவ வேதனை கதையை வாசிக்கும் ஒரு ஆணிடம் அந்த வலியின் அனுபவமாக உணர வைப்பதில் வெற்றி பெற்று கணேச குமாரன் தான் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார்.

‘உடம்புரித்து நெளியும் நடனம்’, ‘ஆதியில் ஓர் அணு இருந்தது’ என்று இரண்டு பகுதிகளாக இக்கதை எழுதப்பட்டுள்ளது.

கதையின் களம் அடர்த்தியான ஒரு கிராமப் பகுதி. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நடைபெறும் நிகழ்வுகள் கொண்ட நிதானமான காலம். தமிழ் சிறுகதை மரபிற்கு எந்த விதத்திலும் புதியதொரு நிலப்பரப்பில் கதை நிகழவில்லை. ஆனாலும்கூட சம்பவங்களின் விவரணையை வைத்துப் பார்க்கையில் அவ்வாறு சொல்ல இயலவில்லை.

நீண்ட விரிவான கதையமைப்பு பல கூறுகளில் கதையின் சாரத்தை விரித்துச் சொல்கிறது. அக்காவின் காதல் காமத்தில் கலந்து, பாதுகாப்பற்ற முறையில் குழந்தை பிரசவிப்பது போன்ற ஒரு பார்வையைத் தருகிறது. உறவினர்கள் யாரும் இல்லாமல் தாயானவள் தன் குழந்தையைப் பெற்று கடமையை முடித்துக் கொள்கிறாள். அதற்குப் பிற்பாடு அக்குழந்தையின் நிலையை நினைத்துப் பார்ப்பது போன்றதொரு வாதை உணர்வை கதை தோற்றுவிக்கிறது.

இக்கதையின் சாரத்தின் நோக்கில் காதல், அதில் உருவாகும் பொய்மை ஆகியவை பிரதானப்படுகின்றன. உடலுறவின் அறியாமையும், தாய்மையின் அதீத சிரமமும் துல்லியமாக கதையில் வெளிப்பட்டுள்ளன. உடலுறவை நுட்பமாக வர்ணிதிருக்கிறார் கதாசிரியர். அந்த நுண்மை வாசகனின் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து ரசனையை உருவாக்கிவிடும் காரணத்தால் உள்ளீடான நுட்பம் இது. என்னுடைய வாசிப்பனுபவம் கொண்டு இதை நான் வாசித்தவற்றில் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகச் சொல்கிறேன். மனித வாழ்வின் இருண்மையை முழுமையாக வெளிப்படுத்தும் அபூர்வமானகதைகளில் இதுவும் ஒன்று .

உடம்புரித்து நெளியும் நடனம் – பகுதியின் தலைப்பிற்கேற்றபடி சம்பவங்கள் வாசிப்பில் நெளிந்து நடனமாடுகின்றன. குறிப்பாக, அவளது பிரசவத்தின் வேதனையை தொடர்வண்டியில் சிக்கி உயிர் நீத்தலோடு இருக்கும் உருவக ஒப்புமை அற்புதமானது. நானும் அந்த ரயில் சக்கரத்தில் துண்டாடப்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதில் ஒரு கொடூரத்தன்மை பார்வை முன் காட்சி பெறுகிறது. உறுத்தலான உணர்வு அது.

ஆதியில் ஓர் அணு இருந்தது – விந்தணு அண்டத்துள் நுழைந்து ஒரு கருவாக மாறி உறுப்புகள் பெற்று மெல்ல காலத்தின் சரியான தேர்வில் முழு உடலுடன் வெளிப்படும் உயிர் அறிவியலின் நவீனத் தமிழ் விளக்கப் பகுதி.

உலகம் தோன்றியதன் காரணிகளை மதரீதியாக அணுகுகையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முறை சொல்லப்பட்டுள்ளதை அறிந்திருக்கலாம். ஓர் உதாரணம், இந்து சமய இலக்கியங்களில் உலகத்தின் உருவாக்கம் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையான கருத்தாக்கங்களில் ஒன்றாக ஆதியில் இருந்த ஓர் விதையைச் சொல்வார்கள். அதாவது, ஒரு வித்து உடைந்து அதிலிருந்து வானம், நட்சத்திரங்கள், பால்வெளி, அகண்ட, திரண்ட பெரும் அண்டவெளி தோன்றியதாக ஒரு முதன்மைக் கருத்து இருக்கிறது.  இதை பெருவெடிப்புக் கொள்கையோடு(Big Bang Theory) சமயக் கோட்பாட்டாளர்கள் ஒப்பிட்டுச் சொல்வார்கள்.

கதையின் இப்பகுதியின் தலைப்பு – மனிதன் உருவானதன் தலைமையான காரணிகளைச் சொல்லும் கருத்து கொண்டது. அதுவே கதையில் இறுதிப்பகுதியில் சிறிய விதை வளர்ந்து உருவம் பெற்று உலகினுள் வருவதாக சொல்லப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

தொடர்ச்சியாக முழுமையான கவித்துவமான வரிகள் கதையை செறிவுபடுத்துகின்றன. மைய ஓட்டமாக இரண்டை மட்டும் பிரதானமாக சொல்லலாம். இரண்டு உயிர்களின் ஒன்று கலத்தலிலுள்ள நேர்த்தி மற்றும் பிரசவத்தின் உயிர் வேதனை.

நீல. பத்மனாபனின் ஒரு கதையை வாசித்திருக்கிறேன். அதில் பிரசவ அவதியுறும் பெண்ணை ஆழமாக விவரித்திருப்பார். ‘கதை’ – என்ற பெயரில் எடுக்கப்பட்ட குறும்படமொன்றில் – கருவைக் கலைத்துவிடும்போது நிகழும் போராட்டத்தை உண்மையாக உணர வேண்டி – கதை எழுதும் அவளது கணவனால் உதைக்கப்பட்டு அவள் மாடிப்படிகளில் உருண்டு விழுந்து உயிர்விடுவாள். இவை அனைத்திலும் உடலுறவு – கருவடைந்து சிரமப்படுவதிலுள்ள வாதை விரிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றது.

கதையிலிருந்து மேற்கோள் காட்டி சில வரிகளை எடுத்து இங்கு காட்ட வேண்டுமென்றால் மொத்த கதையையும் எழுத வேண்டியிருக்கும் என்பதே உண்மை.

இந்த இதழிலுள்ள மற்றொரு சிறுகதை, சைலபதியின் ‘வழித்தடம்’. சுருக்கமான, மேற்சொன்னவாறு எளிய நடையில் எழுதப்பெற்ற விறுவிறுப்பான கதை. கதையின் ஆரம்பத்தில் சண்முகம் சுசியிடம் ஏற்படுத்திவிடும் பதற்றம் எனக்குள் புகுந்து கொண்டு இறுதிவரை பயணித்து முடிவடைந்தது.

ஜெயமோகனின் “யானை டாக்டர்” கதையை நினைவுபடுத்தினாலும் சைலபதியின் கதை வேறு. “ஆரண்யகா” என்ற இந்தி மொழிப் படத்தின் பிரதிபலிப்பைகூட உணர்ந்தேன். இருந்தாலும் வழித்தடம் அதிலிருந்தும் மாறுபட்டதென்று கதையை முழுதும் வாசித்தபின் அறிந்துகொண்டேன்.

“சிட்டுக்குருவிகள்” என்ற ராம் முரளியின் கதையும் குறிப்பிடத்தக்க ஒன்று. கண்ணையன் தாத்தா ஒரு கதாப்பாத்திரமாக மட்டும் இல்லாமல் நாமனைவரும் அடையப்போகும் முதுமையின் அடையாளமாக வருகிறார். காதலை மையப்படுத்தி இதே தொனியில் சில படைப்புகள் வெளிவந்துள்ளன. நீல. பத்மநாபனின் நைவேத்யம் கதையின் பாதிப்புகூட இந்த கதையில் கொஞ்சம் இருக்கிறது என்று சொல்லலாம்.

இந்த இதழில் அன்பாதவனின் “கைப்பேசிக் கடவுளின் கோட்டோவியங்கள்” கவிதைத் தொகுப்புக்கு “வலிந்து பேசப்படும் காயத்தின் ஆழங்கள்” என்ற தலைப்பில் மனுஷி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மும்பையில் நிகழ்ந்த கலவரங்கள் பற்றியும், மும்பை உள்ளூர் ரயிலில் பாட்டு பாடுபவர்களைக் குறித்தும் அன்பாதவன் எழுதியிருக்கும் கவிதைகள் முக்கியமானவை என்று இதை வாசிக்கும்போது தெரிய வருகிறது.

தீபச்செல்வனின் கட்டுரை நல்ல தெறிப்பு. ஈழத்து கவிஞர்களைப் பற்றிய அறிமுகமும் அவர்களது படைப்புகளும் வாசிக்கப்பட வேண்டியவை. தனது கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் தமிழ்க் கவி, புதுவை இரத்தின துரை, ராணி மைந்தன் போன்ற ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளை வாசிக்க கட்டுரையில் மேற்கோள் காட்டப்படும் சில கவிதைகள் தூண்டுகோலாக இருக்கின்றன.

உதாரணமாக, புதுவை இரத்தினதுரையின் கீழ்க்கண்ட கவிதை ஏதிலிகளாய் மண்ணில் திரியும் மனிதர்களைப் பற்றியது.

“ஊர் பிரிந்தோம்

 ஏதும் எடுக்கவில்லை

 அகப்பட்ட கொஞ்சம் அரிசி,

 பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,

 மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,

 காற்றுப் போய்க் கிடந்த மிதிவண்டி,

 காணியுறுதி,

 அடையாள அட்டை அவ்வளவே,

 புறப்பட்டு விட்டோம்.

 இப்போ உணருகிறேன்

 உலகில் தாளாத துயரெது?

 ஊரிழந்து போதல் தான்.

“குர்து இலக்கியம்” குறித்து ஹெச்.பீர்மொஹம்மது ஒரு கட்டுரை இந்த இதழில் எழுதியுள்ளார். குர்து என்ற ஒரு இனத்தின் இலக்கியத்தைப் பற்றிய நல்ல அறிமுகம். தமிழில் பரவலாக கவனிக்கப்பெற்ற உலகமொழி இலக்கிய களங்களுக்கு இடையே குர்து இன மக்களின் படைப்புகளை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் பீர் மொஹம்மது. குர்து இனத்தின் வரலாறு, அவர்களது இலக்கிய தளம் உருவாகிய விதம் என்று கட்டுரை விரிவாக அவர்களைப் பற்றி சொல்கிறது. மற்ற உலக மொழிப் படைப்புகளைப் போல் அவர்களின் படைப்புகளும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருவதற்கு இது போன்ற கட்டுரைகள் உதவக்கூடும்.

மேல்வாளை கிராமத்தில் அமைந்திருக்கும் பாறை ஓவியங்களைக் குறித்து சுருக்கமாக இயற்கை சிவம் விவரித்திருக்கும் விவரங்களை வாசித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. பாறையில் வரையப்பட்ட ஓவியங்களெல்லாம் இப்போது அவ்வளவு முக்கியமா என்று கேட்கலாம். அவற்றை சிதைவடைய விடுவதும், உபயோகமில்லாத ஒன்றென்று கருதி ஒதுக்குவதும் மரபின் முதிர்ச்சியை அழிப்பதைப் போன்றது என்று நினைக்கிறேன். இதே ஓவியம் மேற்கத்திய  நாடொன்றில் அமைந்திருந்தால் அப்பகுதியில் இருக்கும் நாடுகளுடைய அரசு அவற்றை திரட்டி பாதுகாத்திருக்கும். இதில் நம்முடைய அரசாங்கத்தின் நடவடிக்கை இருந்தாலும், மேலும் அவற்றைப் பாதுகாக்க அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது.

வெயில் நதி இதழைப் பொறுத்தவரை அதில் சிறு சிறு எழுத்துப்பிழைகள் இருப்பதைத் தவிர வேறு வகையான குறைபாடொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல் போன்ற அனைத்து பொது அம்சங்களும் இவ்விதழில் புதியதாக இருக்கிறது. அந்த புதுமைக்காக இது அவசியம் கவனம் பெற வேண்டிய சிற்றிதழ்.

(குறிப்பு: சிற்றிதழனாலும் வேறு இலக்கிய இதழானாலும் அதற்கு தகுந்த வாசகப் பின்னணி தேவைப்படுகிறது. ஆனால், வணிக இதழ்களுக்கு அத்தகையதொரு நிர்ப்பந்தம் தேவைப்படாது என்பது என்னுடைய கருத்து. காரணம், பெரும்பாலான வணிக இதழ்கள் முழுமையான பலத்துடன் விரிவான ஒத்துழைப்போடு நடத்தப்படுகின்றன தகுந்த விளம்பரங்கள் மூலம் அதற்கு வாசகர்கள் தாமாகவே உருவாகிவிடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இலக்கியச் சிற்றிதழ்களுக்கென்று எந்த ஒரு தனி இடமும் கிடையாது. வணிக இதழ்களில் கூட இலக்கியப் பதிவுகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆறு கோடியில் மிகச் சொற்பம் பேர் மட்டுமே வாசிக்கும் இத்தகைய சிற்றிதழ்களில் இடம்பெறும் படைப்புகளின் பின்னால் இருக்கும் உழைப்பு அபரிதமானது. அதைக் கொணர்ந்து கொள்ள ஒரு சிறிய வாசகச்சக்கரம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்துகொள்வதே பெரிதான ஒன்று. அண்மையில் ஆரம்பித்த சில இதழ்கள்கூட சடுதியில் வெற்றியடைந்ததன் பின்னணியில் ஆசிரியரும் வாசகர்களும் சேர்ந்தே இருக்கிறார்கள். இத்தகைய அறிமுகக் கட்டுரைகள் ஒரு சிற்றிதழுக்கு பொருளாதார ரீதியில் பெரிதாக ஒன்றும் பயன்தராவிட்டாலும் ஒரு கடத்தியாக செயல்படுவதில் முழுமையடைந்தால் கூட போதுமென்று நினைக்கிறேன்.)

தொடர்புக்கு:

வெயில் நதி.

No 1D,  சந்தை மேடு ,

சிறுகடம்பூர்,

செஞ்சி – 604202

அலைபேசி – 9941116068

veyilnathi@gmail.com

http://veyilnathi.blogspot.com

0 Replies to “வெயில் நதி – சிற்றிதழ் அறிமுகம்”

    1. பத்திரிகை அறிமுகம் வெளியானது 2013 ஆம் ஆண்டில். இப்பத்திரிகை இன்னும் வெளிவருகிறதா, எப்படி அதைப் பெறுவது என்பதை எல்லாம் நீங்கள் கட்டுரையின் இறுதிப்பகுதியில் உள்ள முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாமே?!
      பதிப்புக் குழு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.