முகப்பு » உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு

தேவைகள்

என் முந்நாள் கணவரைத் தெருவில் பார்த்தேன். அப்போது, புதுப்பித்த நூல் நிலையத்தின் படிகளில் உட்கார்ந்திருந்தேன்.

ஹெல்லோ, என் உயிரே, என்றேன். முன்பொரு காலத்தில் நாங்கள் இருபத்தி ஏழு வருடங்கள் தம்பதிகளாக இருந்தோம், அதனால் இப்படிக் கூப்பிடுவது சரியென்று எனக்குப் பட்டது.

அவர் சொன்னார், என்னது? அதென்ன உயிரே? எனக்கு யாரும் உயிரில்லை.

நான் சொன்னேன், ஓ.கே.  நிஜமான அபிப்பிராய பேதம் இருந்தால் நான் வாதாடுவதில்லை.  நான் அங்கு எத்தனை அபராதம் கட்ட வேண்டுமென்று பார்க்க, எழுந்து நூல்நிலையத்துக்குள் போனேன்.

நூலகர் சொன்னார், சரியாக 32 டாலர்கள், அதுவும் இது 18 வருடப் பாக்கி என்றார். நான் மறுப்பாக ஏதும் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்குக் காலம் எப்படிக் கழிகிறது என்பது புரிவதில்லை. என்னிடம் அந்தப் புத்தகங்கள் இருந்திருக்கின்றன. நான் அவற்றைப் பற்றி அடிக்கடி நினைத்திருக்கிறேன். நூல் நிலையம் என் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளித்தான் இருந்தது.

என் முந்நாள் கணவர் என்னைப் பின் தொடர்ந்து நூலகத்தில் புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்கும் மேஜைக்கு வந்தார். இன்னும் ஏதோ சொல்ல வந்த நூலகரைக் குறுக்கிட்டார். பல விதமாக நான் திரும்பிப் பார்க்கும்போது, நீ பெர்ட்ரம் தம்பதியரை இரவு விருந்துக்கு  ஒருபோதும் அழைக்காததைத்தான் நம் திருமணம் முறிந்து போனதற்குக் காரணமாகச் சொல்ல எனக்குத் தோன்றுகிறது என்றார்.

அப்படி இருக்கலாம், என்றேன் நான். ஆனால் நிஜத்தில், உமக்கு நினைவிருந்தால்: அந்த வெள்ளிக்கிழமை என் அப்பா சுகமில்லாமல் இருந்தார், பிறகு குழந்தைகள் பிறந்தார்கள், அப்புறம் நான் அந்த செவ்வாய்க்கிழமை இரவுக் கூட்டங்களுக்குப் போனேன், அப்புறம் உலகப் போர் துவங்கி விட்டது. அதற்கப்புறம் அவர்கள் நமக்குத் தெரியாதவர்கள் போல ஆகி இருந்தார்கள். ஆமாம், நீர் சொல்வது சரிதான், அவர்களை நான் சாப்பிடக் கூப்பிட்டிருக்கத்தான் வேண்டும்.

நூலகரிடம் 32 டாலர்களுக்கு ஒரு காசோலையைக் கொடுத்தேன்.  அவர் உடனே என்னை நம்பினார், என் கடந்த காலத்தில் நடந்ததை விட்டு விட்டார்,  பதிவேட்டில் என்னைப் பற்றிய குறிப்புகளை அழித்துச் சுத்தமாக்கினார். ஊரின் நிர்வாகத்திலோ, மாநில அரசிலோ, யாரும் இதில் எதையும் செய்திருக்க மாட்டார்கள்.

சற்று முன்னரே நான் திருப்பிக் கொடுத்திருந்த இரண்டு ஈடித் வார்ட்டனின் புத்தகங்களை, மறுபடி வாங்கிக் கொண்டேன்.  அவற்றைப் பல வருடங்கள் முன்பே நான் படித்திருந்தேன், அவை முன்னெப்போதையும் விட இப்போது மிகப் பொருத்தமாக இருந்தன. அவை, களிப்பு வீடு (த ஹௌஸ் ஆஃப் மெர்த்), குழந்தைகள்  என்பன. பின்னது, அமெரிக்காவின் நியு யார்க் மாநிலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு, இருபத்தி ஏழே வருடங்களில் வாழ்க்கை எப்படி மாறியது என்பதைப் பற்றியது.

Lady_Wants_Need_Reflection_Bugs_Two_couple_Love_Know_Self_Green_Water_Mirror

எனக்கு அருமையான ஒரு விஷயமாக நினைவிருப்பது, காலைச் சிற்றுண்டி, என் முந்நாள் கணவர் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் நாங்கள் காஃபி மட்டும்தான் குடித்திருந்தோம். அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது, சமையலறை சுவற்றலமாரி ஒன்றில் ஓர் ஓட்டை இருந்தது, அது அடுத்த அடுக்ககத்தின் சமையலறையில் திறக்கும். அவர்கள் எப்போதும் சர்க்கரை பூசி,  மரக் கட்டைப் புகையுடன் கரியடுப்பில் சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியைச் சாப்பிடுவார்கள். அது எங்களுக்கு காலைச் சிற்றுண்டி பற்றிய ஓர் உயர்ந்த உணர்வைக் கொடுத்திருந்தது, அதே நேரம் வயிறு முட்டத் தின்று, மந்தமாக ஆகாமலும் இருந்தோம்.

அப்போது நாம் ஏழைகளாக இருந்தோம், என்றேன்.

நாம் எப்போது பணக்காரராக இருந்திருக்கிறோம்? அவர் கேட்டார்.

ஓ, நாளாக ஆக, நம்முடைய பொறுப்புகள் அதிகரித்தாலும், நாம் இல்லாதப்பட்டவர்களாக ஆகிவிடவில்லை. நாம் பணவிஷயத்தில் பொறுப்பாக இருந்தோம், அவருக்கு நான் நினைவுபடுத்தினேன். குழந்தைகள் வருடத்துக்கு நாலு வாரங்கள் கோடை முகாம்களுக்குப் போனார்கள், தூங்க நல்ல படுக்கைகளும், தலையை மூடும் மேலணிகளும், நல்ல காலணிகளும் இருந்தன, எல்லாரையும் மாதிரிதான் இருந்தார்கள். அவர்கள் பார்க்க நன்றாக இருந்தார்கள். குளிர்காலத்தில் நம் வீடு கதகதப்பாக இருந்தது, நம்மிடம் அருமையான சிவப்புத் தலைகாணிகளும் வேறு பொருட்களும் இருந்தன.

எனக்கு ஒரு பாய்மரப் படகு வேண்டுமென்றிருந்தது, அவர் சொன்னார். ஆனால் உனக்கு எதுவும் தேவையாக இருக்கவில்லை.

கசப்பை வளர்த்துக் கொள்ளாமல் இருங்க, நான் சொன்னேன். இப்பவும் ஒன்றும் காலம் கடந்து விடவிலலை.

இல்லை, நிறைய கசப்புணர்வோடு அவர் சொன்னார். நான் ஒரு பாய்மரப் படகை வாங்கப் போகிறேன்.  நிஜமான விஷயம் இது, ஒரு இரண்டு பாய்மரம் கொண்ட 18 அடிப் படகுக்கு முன்பணம் கட்டி இருக்கிறேன். இந்த வருஷம் நிறைய சம்பாதித்தேன், வரும் வருஷங்களில் இன்னும் கூடுதலாகச் சம்பாதிப்பேன். ஆனால் உனக்கோ, காலம் கடந்து விட்டது. நீ எப்போதுமே எதையும் வேண்டுமென்று யோசித்ததே இல்லை.

இப்படி ஏதாவது சிறுமையாகச் சொல்லி வைப்பது இருபத்தி ஏழு வருடங்களாக அவரது வழக்கம். அது ஒரு குழாய் ரிப்பேர்க்காரரின் அடைப்பு நீக்கும் வளைகம்பி போல என் காதுகள் வழியே தொண்டைக்குள் இறங்கி என் இதயத்துக்குப் போகிற வழியில் பாதி தூரம் வரை போய்விடும். அப்போது அவர் போயிருப்பார், நானோ தொணடையை அடைத்து மூச்சுத் திணற வைக்கும் கருவியோடு அமர்ந்திருப்பேன். என்ன சொல்கிறேனென்றால், நான் நூலகத்தின் படிகளில் அமர்ந்து கொண்டேன், அவர் போய் விட்டிருந்தார்.

‘கேளிக்கை வீடு’ புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன், எனக்கு அதில் ஈடுபாடு போய் விட்டிருந்தது. என்னை யாரோ மோசமாகக் குற்றம் சாட்டி விட்டது போல உணர்ந்தேன். இதில் உண்மை என்னவென்றால், நான் இது வேண்டும் அது வேண்டுமென்றொ, இதெல்லாம் நிச்சயமாகத் தேவை என்றோ கேட்டதே இல்லை. ஆனால் எனக்குமே ஏதோ சிலது வேண்டித்தானிருந்தது.

உதாரணமாக, நான் வேறு நபராக ஆக விரும்புகிறேன். இரண்டு வாரங்களில் இரண்டு புத்தகங்களைத் திரும்பக் கொடுக்க வருபவளாக ஆக விரும்புகிறேன். பள்ளிக்கூட அமைப்பை மாற்றி அமைக்குமளவு சக்தி வாய்ந்த குடிமகளாக விரும்புகிறேன். நகர மையக் கட்டிடத்தின் சிக்கல்களைப் பற்றி மதிப்பீட்டு வாரியத்தின் முன் பேசுபவளாக இருக்க விரும்புகிறேன்.

என் குழந்தைகளிடம், அவர்கள் வளரும் முன், போரை நிறுத்தி விடுவேன் என்று உறுதி அளித்திருந்தேன்.

என்றென்றைக்கும் ஒரே நபரையே மணம் புரிந்திருப்பவளாக இருக்க விரும்பி இருந்தேன்.- அது என் அப்போதைய கணவராகவோ, அல்லது இப்போதைய கணவராகவோ இருக்கலாம். இருவருமே என் மொத்த வாழ்வையும் அவர்களோடு கழிக்கக் கூடிய அளவு குணமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். நிஜமாகப் பார்த்தால், என் வாழ்வும்  ஒன்றும் அத்தனை நீண்ட காலம் கொண்டது இல்லை. இரண்டு பேரில் எந்த ஒருவருடைய தரங்களையும் தீர்த்து விடவோ, அல்லது அவருடைய தர்க்கநியாயங்களான பாறைக்கடியில் புகுந்து கொள்ளவோ இதற்குள் முடிந்திராது.

இன்று காலைதான் நான் ஜன்னல் வழியே வெளியே தெருவைக் கொஞ்ச நேரம் பார்த்திருந்தேன்.  எங்கள் குழந்தைகள் பிறப்பதற்குச் சில வருடங்கள் முன்பு நகர நிர்வாகம், ஏதோ கனவு கண்டு, நட்டிருந்த சிறு ஸிக்கமோர் மரங்கள் இப்போது அவற்றின் வாழ்வில் முக்கியமான பருவத்திற்கு வந்திருந்தன என்று கண்டேன்.

சரி! இந்த இரண்டு புத்தகங்களையும் நூலகத்திற்குத் திரும்பக் கொண்டு வர நான் தீர்மானித்தேனே. அது என்ன நிரூபிக்கிறது என்றால், யாரோ ஒரு நபரோ, ஒரு சம்பவமோ வந்து எனக்கு ஒரு அதிர்வைக் கொடுத்தாலோ, அல்லது என்னை எடை போடப் பார்த்தாலோ, நான் தக்கதொரு நடவடிககையை மேற்கொள்கிறேன் என்பதை. இருந்தாலும் நான் என்னுடைய உபசாரக் குறிப்புகளுக்காகத்தான் நன்கு அறியப்பட்டிருக்கிறேன்.

________________________________________

தமிழாக்கம்: மைத்ரேயன்

மூலம்: ‘Wants’ by Grace Paely, in You’ve Got To Read This- ed. by. Ron Hansen and Jim Shepard, 1994 / Harper Perennial 

[சமகால அமெரிக்க எழுத்தாளர்கள் பலரால் தம்மைப் பிடித்திழுத்து வியப்பூட்டிய கதைகள் பலவற்றை அறிமுகப்படுத்தும் ஒரு தொகுப்பு மேற்கண்ட புத்தகம். அதில் ஜேனெட் காஃப்மான் என்கிற எழுத்தாளர் இந்தக் கதையையும், க்ரேஸ் பே(ய்)லியின் நடை நளினத்தையும், சொற் சுருக்க ஓட்டத்தையும் சிலாகித்து ஒரு பக்கம் எழுதி அறிமுகப்படுத்தியிருக்கிறார். பக்கங்கள்: 468-470. அந்த அறிமுகமே மொழி பெயர்க்கத் தக்க சிறப்புடையதுதான். – மொழி பெயர்ப்பாளர் குறிப்பு]

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.