இத்தொடரின் முதல் பகுதி இங்கே
”செவ்வாய் கிரகத்தில் இந்த தேதிக்கு, இந்த நேரத்திற்கு விண்கலம் சென்றடையும் என்று சரியாகச் சொல்ல, அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இணையே கிடையாது”. சாதாரணப் பேச்சிலே இப்படிச் சொல்பவரை நாம் பார்த்திருப்போம். இவர்களே, ”செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா இல்லையா என்று திட்டவட்டமாக சொல்ல முடியவில்லையாம். அதற்குப் போதுமான சாத்தியங்கள் இல்லையாம்,” என்று சற்று நிராசையோடு சொல்வதையும் கவனிக்கிறோம்.
மேலே, முதல் குறிப்பு, 19-ஆம் நூற்றாண்டில் உருவாகிய விஞ்ஞான சிந்தனையின் இன்றைய வெளிப்பாடு. அதாவது, விஞ்ஞான முறைகளில் எதை செய்தாலும், மிகத் துல்லியமாகவும், சற்றும் கருத்து வேறுபாடுக்கு இடமில்லாமலும் இருக்க வேண்டும் என்ற கருத்து.
மேலே சொல்லப்பட்ட இரண்டாம் குறிப்பு, விஞ்ஞான முடிவுகள் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் (சூதாட்டத்தைப் போல) இருக்கக் கூடாது என்ற 20-ஆம் நூற்றாண்டு ஆரம்பகால சிந்தனையின் வெளிப்பாடு. மேலே சொன்ன இரண்டு உதாரணங்களும் திட முடிவுகளின் மேல் (determinism) உள்ள இரு வெளிப்பாடுகள். சந்தேகத்திற்கு விஞ்ஞானத்தில் இடமில்லை என்ற கருத்து இன்றுவரை நிலவுகிறது.
19-ஆம் நூற்றாண்டில் , நியூட்டனின் கருத்துக்களை பல விதத்திலும் உபயோகித்த இயக்கவியல் வல்லுனர்கள், (mechanical engineers) ஏராளமான வெற்றிகளை, பல தொழில்களில் கண்டார்கள். முதலில் நீராவி சக்தி, பிறகு, திரவ சக்தி, என்று பல விதத்திலும் தொழிற்சாலைகளில் வெற்றி கண்டு, தொழிற் புரட்சி மூலம் இங்கிலாந்தை உலக வல்லரசாக உயர்த்துவதற்கு முக்கிய உந்துகோல், 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானச் சிந்தனை மற்றும் அதன் பயன்பாடுகள் என்று சொல்லலாம்.
முதல் விஞ்ஞானிகள்
துவக்க கால நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர வணிகம் முக்கிய காரணமானது. அரசாங்கத்தின் பங்கு அவ்வளவாக இல்லை. 19-ஆம் நூற்றாண்டில், ‘விஞ்ஞானி’ (scientist) என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. இவர்கள் வெறும் கோட்பாட்டு விளக்கங்கள் கொண்ட நூல்கள் எழுதுவதுடன் நிற்காமல், பலவகைப் பரிசோதனை முறைகள் (experimental methods) மற்றும் பயன்பாடுகளில் வெற்றி கண்டதால், ‘தத்துவாளர்கள்’ என்ற பட்டம் விலகத் தொடங்கியது. (இன்றுகூட, பல்கலைக்கழகங்களில், விஞ்ஞானத் துறைகளில் மிக உயர்ந்த பட்டம், Doctor of Philosophy, அல்லது PhD, என்றிருப்பது பழைய வழக்கத்தின் எச்சமே.) இத்துடன் விஞ்ஞானிகளைப் பற்றிய சில எதிர்பார்ப்புகளும் வளரத் தொடங்கின. இந்த எதிர்பார்ப்புகளே இன்றும் பொது மக்களிடம் பரவலான கருத்துகளாகத் தொடர்கின்றன. அவை:
1. விஞ்ஞானம் சமூகத்திற்கு தேவையான ஒரு கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும்
2. எந்த ஒரு நிகழ்வையும் சரித்திரத்தில் முதன்முறையாகத் துல்லியமாக கணிக்க வேண்டும்
3. வெறும் சிந்தனையோடு நில்லாமல், ஏதோ ஒரு பொருளை உருவாக்க வேண்டும்
4. எந்த ஒரு கண்டுபிடிப்பும் பல்வேறு புதிய உபயோகங்களையும் உருவாக்க வேண்டும்
5. விஞ்ஞானிகள் ஒரு மந்திரக்காரர் போல (magician) எல்லோரையும் திகைக்க வைக்க வேண்டும்

இன்றும் ஒரு அமெரிக்கருக்கு எடிசனைத் (Thomas Alva Edison) தெரியும்; ஆனால் ஃபைன்மேனைத் (Richard Feynman) தெரியாது. எடிசன் எல்லோருக்கும் தேவையான மின்குமிழ் (electric bulb) மற்றும் மின் உற்பத்தி போன்ற விஷயங்களில் ஈடுபட்டவர். ஆனால், ஃபைன்மேன் அப்படி ஒன்றும் சாதாரண வாழ்க்கைக்கு உபயோகமான பொருளை உருவாக்கவில்லை. இன்றுவரை, விஞ்ஞானி (scientist), மற்றும் கண்டுபிடிப்பாளர் (inventor) என இருவேறாகப் பிரித்துப் பார்ப்பது பொது அறிவாக எழவில்லை. இது 19-ஆம் நூற்றாண்டின் தாக்கம் என்றே சொல்லலாம். இந்தியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – சி.வி. ராமன் பெரிய விஞ்ஞானி என்பதோடு நின்று விடுவார்கள். பலருக்கு அப்துல் கலாமுக்கும் (Dr. A.P.J. Abdul Kalam) விண் இயற்பியலாளர் சந்திரசேகருக்கும் (Dr. S. Chandrashekar) உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியாது.
வளர்ச்சித் தூண்டுகோல்கள்
பொதுப் புரிதல் இப்படி இருக்கையில், மற்றொரு புறம் 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியின் மிகப் பெரிய தூண்டுகோல்கள்:
1. விஞ்ஞானப் புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டுப் பரவலாகவும், ஓரளவு மலிவாகவும் கிட்டவே நிறைய மக்களால் படிக்கப்படுவது ஒரு பரவலான பண்பாடாகத் தொடங்கியது
2. மக்களுக்கு (அனேகமாக யூரோப்பில்) கல்வி என்பது ஒரே வகையாகத் தொகுக்கப்பட்டு, நாடெங்கும் சமமான வகையில் கொடுக்கப்படவும், பரந்த மக்களிடையே படிப்பறிவு வளரத் தொடங்கியது அத்தகைய அறிவு நாட்டின் பொருளாதார, தொழில் முறை உற்பத்தியின் வளர்ச்சிக்கு உதவும் என்பது அரசுகளுக்கும், ஆள்வோருக்கும் விளங்கத் தொடங்கியது.
3. மெதுவாக, அரசாங்கங்கள் விஞ்ஞானத்தில் முதலீடு செய்யத் தொடங்கின. ஆனால், அந்நாளைய அரசாங்கங்களின் நோக்கம், விஞ்ஞான வளர்ச்சியால் வியாபாரம் விரிவடையும் என்பது மட்டுமே (விஞ்ஞான முன்னோடி இங்கிலாந்தை ”கடைக்காரர்கள் தேசம்” என்று உலகம் சொல்லி வந்தது.)
4. விஞ்ஞான முன்னேற்றங்கள் ஒழுங்காக விஞ்ஞான வெளியீடுகளில் வெளியிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஒழுங்காக படிப்படியாக வளரக் காரணம், இந்தக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட முறைகள். இந்த வகை வெளியீடுகளில் ஒரு முன்னோடியும் மிகவும் மதிக்கப்பட்டதொரு வெளியீடுமானது Royal Society –யின் Philosophical Transactions என்ற வெளியீடு. இது அமெரிக்க விஞ்ஞான வளர்ச்சி இன்னும் வளரத் தொடங்காத, துவக்கநிலையிலிருந்த காலம் எனலாம். 18 –ஆம் நூற்றாண்டில், மருத்துவம் பற்றிய முதல் வெளியீடான Medical Essays and Observations, ராயல் எடின்பரோ சங்கத்தால் (Royal Edinburg Society) வெளியிடப்பட்டது. அதே கால கட்டத்தில் American Philosophical Society (1743) உருவாக்கப்பட்டாலும், ஒரு நூற்றாண்டுக்கப்புறம், 1848 –ல் உருவாக்கப்பட்ட AAAS என்ற American Association for the Advancement of Science என்ற அமைப்புதான் மெதுவாக, ஆனால் தொடர்ச்சியாக வளர்ந்து, இன்று உலகின் மிகப் பெரிய விஞ்ஞான ஆய்வுகளை வெளியிடும் அமைப்பாக உள்ளது. அதே காலத்தில், இன்று உலகில் மிகவும் மதிக்கப்படுகின்ற அமெரிக்க விஞ்ஞான வெளியீடுகளான, Nature (1869) மற்றும் Science (1880) துவங்கின.
5. பிரிட்டிஷ் சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (Bertrand Russel) விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றி சொன்னது 19 -ஆம் நூற்றாண்டின் சாரத்தையே விவரிப்பது போல இருக்கும். ரஸ்ஸல் சொல்கிறார், “எங்கோ இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை ஆராயும் பணியில் விஞ்ஞான முயற்சிகள் தொடங்கின – நியூட்டன் காலம் வரை அப்படியே நடந்தது. அடுத்தபடியாக, நமக்கு நெருங்கிய மனித உடலைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தீவிரமாகத் தொடங்கியது 19-ஆம் நூற்றாண்டில். அத்துடன், உயிரினங்கள் பற்றிய தெளிவு ஏற்பட்டது டார்வினின் 19-ஆம் நூற்றாண்டு பரிணாம கோட்பாட்டிற்குப் (theory of evolution) பிறகுதான். கடைசியில், எல்லோருக்கும் மிக நெருக்கமான மனித மனதைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி, 19-ஆம் நூற்றாண்டின் ஃப்ராய்டின் (Sigmund Freud) ஆராய்ச்சிக்குப் பிறகுதான்.”
19-ஆம் நூற்றாண்டில் சோதனை அறிவியல் (experimental science) மற்றும் தொழில்நுட்பம், கோட்பாட்டு அறிவியலை (theoretical science) விட வேகமாக முன்னேறியது. பொதுவாக, ஒரு சோதனை முடிவை சரியாகப் புரிந்து கொள்வதற்குக் கோட்பாடுகள் உதவின. அத்துடன், இந்த நூற்றாண்டில், நியூட்டனின் சிந்தனைகள், பல்வேறு துறைகளில் மேலும் விரிவு படுத்தப் பட்டன. உதாரணமாக, வில்லியம் தாம்ஸன் (William Thomson or Lord Kelvin) என்பவர், நியூட்டனின் சிந்தனைகளை, வெப்ப இயக்கவியலுக்கு (thermodynamics) விரிவு படுத்தினார். பல வருடங்களாக, கண்ணுக்கு தெரிந்த விஷயங்களில் மட்டுமே விஞ்ஞானம் வளர்ந்து வந்தது. விஞ்ஞானச் சிந்தனைகள் மாறிவிட்டாலும், இன்றுவரை, பொதுமக்களால், கண்ணுக்குத் தெரிந்த விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இங்கிலாந்தில் நடந்த முதல் தொழில் புரட்சி, நியூட்டனின் கோட்பாடுகளை அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருள்களாக மக்களுக்கு அளித்தது. இன்றைய இணையம், இவ்வகை இடைவெளியைக் குறைப்பதில் நல்ல சேவையாற்றியுள்ளது. ஏதாவது புரியவில்லை என்றால், விக்கிபீடியா மற்றும் உல்ஃப்ராம் ஆல்ஃபா –விற்கு மக்கள் விரைவது நல்ல விஷயம்.
19-ஆம் நூற்றாண்டில் பல்வேறு அடிப்படை விஞ்ஞான சிந்தனை மாற்றங்கள் உருவாகியது மறுக்க முடியாத உண்மை. சில முக்கிய மாற்றங்கள்:
· எந்த ஒரு கோட்பாடும், சரியான சோதனை சாட்சியங்களுடன், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்
· விஞ்ஞானத்தில் வாதங்கள் முக்கியம். ஆனால், சோதனை முடிவுகள் அசைக்க முடியாத, எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்க்கத்துடன் விளக்கப்பட வேண்டும். இதற்கு கணக்கியல் அடிப்படை அவசியம். சார்புடைமை (bias) என்பதை அகற்றக்கூடிய சக்தி கணக்கியலுக்கு உண்டு
· ஒரு கோட்பாடினை முன் வைக்க, அல்லது ஒரு சோதனையின் முடிவினை வெளியிட ஆராய்ச்சிக் கட்டுரை தகுந்த விஞ்ஞான வெளியீட்டில் முன் சொன்ன முறைகளோடு வெளியிடப் பட வேண்டும். அப்படி வெளியிடவோ, மறுக்கவோ முடிவு சொல்ல துறையில் வல்ல நிபுணர் குழு விவாதித்து ஒப்புக் கொள்ள வேண்டும்
· மனிதப் புலன்களால் அளக்கக்கூடிய அளவுகளைத் தாண்டி, பல விஞ்ஞான அளவிடல்கள் மறைமுகமானவை. உதாரணம், மின்னழுத்தம் – மனிதப் புலன்களால் அளக்க முடியாதது. இப்படிப்பட்ட அளவிடல்கள் விஞ்ஞான வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை. இவற்றின் அடித்தளம், கணக்கியல் மற்றும் லாஜிக். இதை, inductive முறைகள் என்கிறார்கள்.
· எந்த ஒரு விஞ்ஞான வெளியீடும் முன்பே வெளியிடப்பட்ட எந்த ஒரு வெளியீட்டை, எந்த விதத்திலும் காப்பியடிக்கக் கூடாது. முன்பு வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளைச் சரியாக மேற்கோள் காட்டி வாதிடலாம். இவ்வாறு மேற்கோள் காட்டுவதை வெளியீட்டு முறை, மேற்கோள் அட்டவணை, ஆய்வுதவி நூல் பட்டியல் என்றெல்லாம் (bibliography)அழைக்கப்படுகிறது. இது மேலோட்டமாகப் பார்த்தால் மிகச் சாதாரண மாறுதலாகத் தெரியலாம். இதைக் கவனிப்பதென்ன அவசியம் என்றும் கேட்கத் தோன்றலாம். ஆனால் முந்தைய சிந்தனைகளின் தொடர்ச்சி ஒரு புதுச் சிந்தனை என்பது வெறும் மரபு நீட்சியைச் சுட்டுவதோடு, அந்தப் புதுச் சிந்தனையில் ஏதும் பழுதோ, அல்லது மேம்பட வாய்ப்போ இருப்பது தெரிய வந்தால், அந்த புதுச் சாத்தியப்பாடுகள் எங்கிருந்தெல்லாம் கிட்டின என்று அறிவது பல கிளைப்பாதைகளை மறுபடி பரிசீலிக்கச் செய்யும். இந்தப் பரிசீலனையில் பல முன்னர் கவனிக்கப் படாமல் விடப்பட்ட அரிய சிந்தனைகள், ஆலோசனைகள் மீண்டும் கவனிக்கப்பட்டு மேலெழலாம். உதாரணமாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்படும் பல தாவரங்களின் மருத்துவ குணங்கள் பண்டைக் காலத்திலிருந்து சாதாரண மக்களிடம் புழங்கிய கருத்துகளே. ஆனால் இன்று அக்கருத்துகள் சோதிக்கப்படுவதோடு, என்ன காரணிகளால் அந்தத் தாவரங்கள் தம் மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றன, என்ன முறைகளால் அவை நம் உடலுக்கு நன்மையைச் செய்கின்றன என்ற காரண காரியச் சங்கிலியை முழுதாக விரித்துணர இப்போது நம்மிடம் சோதிப்பு முறைகளும், கருவிகளும் உள்ளன. பட்டறிவு (experiential knowledge) இப்போது சோதிக்கப்பட்டு கோட்பாட்டறிவாக (theoretical knowledge) உறுதி செய்யப்படுகிறது.
மேலே சொன்ன முறைகள் பல்வேறு நல்ல தாக்கங்களை உருவாக்கின. கண்ணிற்கு தெரியாத சக்திகளை அடிப்படையாகக் கொண்டிருந்தும், அவற்றின் விளைவுகள் சந்தேகத்துக்கு இடமின்றி காட்டப்பட முடிவதால், மின்னியல், காந்தவியல் போன்ற துறைகள் வளரத் தொடங்கின. ஆரம்பத்தில், சோதனையியலாக இருந்த இத்துறைகள் படிப்படியாகச் சிறந்த கோட்பாட்டியலாகவும் வளர்ந்தன. உதாரணத்திற்கு, ஃபாரடே (Michael Faraday) டைனமோ -வை உருவாக்கி மின்சக்தி உலகை தொடங்கி வைத்தார். மேக்ஸ்வெல் (James Clerk Maxwell) இதை மிக அழகான கோட்பாடாக மாற்றினார்.
விஞ்ஞான ஆய்வு முடிவுகளை வெளியிடும் முறைகள்
விஞ்ஞான ஆராய்ச்சிகளை வெளியிடுவதில் பல வகைகள் உண்டு. முறைகளுக்கேற்ப, அதன் மதிப்புரை (review methods) முறைகளும் வேறுபடும். விரிவாக, இதைப்பற்றி ஆராய்வதற்கு முன், இந்தக் கட்டுரை சொல்வனத்தில் நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்று படிப்படியாகப் பார்ப்போம்:
1. முதலில், விஞ்ஞானத்தின் இப்படிப்பட்ட ஒரு அம்சத்தை விளக்கி ஒரு கட்டுரை எழுதப் போவதாக சொல்வனம் ஆசிரியருக்கு எழுதி அவரது முடிவை எதிர்பார்ப்பேன். எத்தனைப் பக்க கட்டுரை, எத்தனை பகுதிகள் என்று ஒரு தோராயமாக சொல்லிவிடுவது வழக்கம்
2. ஆசிரியர், அவருடைய பதிவுக் குழுவுடன் கலந்து ஆலோசித்து, இரண்டில் ஒன்றைச் சொல்லி விடுவார். ‘ஆளை விடுங்கள். இதெல்லாம் ஒத்து வராது’, என்றால், அந்தக் கட்டுரை அத்தோடு விடப்படும். ‘தாராளமாக எழுதுங்கள்’ என்றால், அடுத்த கட்டமாக, ஆராய்ச்சி, மற்றும் எழுத்து தொடரும்
3. எழுதி முடித்து, சரி பார்த்து, சொல்வனம் ஆசிரியருக்கு கட்டுரையை அனுப்பி வைப்பேன்
4. சொல்வனம் ஆசிரியர் குழு, கட்டுரையை வாசித்து, பிரசுரத்திற்கு அது தகுந்ததா என்று ஆராய்கிறார்கள். கருத்துக்கள் முரணாக இருந்தால், மாற்றி எழுதும்படி திருப்பி விடுவார்கள்
5. கட்டுரையில் சொன்ன விஷயங்கள், மற்றொரு எழுத்தாளர் ஏற்கனவே ‘சொல்வனத்தில்’ எழுதியிருந்தால், அதை சுட்டிக்காட்டி, மீண்டும் மாற்றி எழுதும்படி (ஒரே விஷயங்களைப் பல கட்டுரைகளில் திரும்பத் திரும்ப சொன்னால், வாசகருக்கு அலுத்துவிடும்) திருப்பி விடுவார்கள்
6. இவ்வாறு, படி, 3, 4, மற்றும் 5, நல்ல கட்டுரையாக மாறும்வரை நல்ல வெளியீட்டாளர்கள் விடமாட்டார்கள். பிறகு, கட்டுரை பிரசுரிக்கப்படும்
7. வெளிவந்த கட்டுரையை, சில இணைத்தளங்கள், ‘சொல்வனத்தில்’, இப்படிப்பட்ட கட்டுரை வந்துள்ளது என்று போடுகிறார்கள், அல்லது ஃபேஸ்புக்கில் கட்டுரை இணைப்பைப் போடுகிறார்கள்.
அட, என்ன, இப்படி தெரிந்த விஷயத்தைப் பற்றி எழுதிறேனே என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். தெரியாததைப் புரிந்து கொள்ள தெரிந்தவை நல்ல ஆரம்பப் படிகள். மேற்சொன்ன முறையில், எனக்கு ஆசிரியர் யார் என்று தெரியும். மேலும் கட்டுரையை விமர்சிக்கும் பதிவுக்குழுவும் (முதல் கட்டுரையில் தெரியாது) தெரியும்.
உதாரணத்திற்கு, எனக்கு சொல்வனம் ஆசிரியரை மட்டுமே தெரியும் என்று வைத்துக் கொள்வோம். அவர் என் கட்டுரையை தன் பதிவுக் குழுவிற்கு அனுப்புகிறார். பதிவுக்குழுவின் பரிந்துரைகள் ஆசிரியருக்கு மட்டுமே அனுப்பப்படுவதாகக் கொள்வோம். ஆசிரியர், எனக்கு பதிவுக்குழுவின் விமர்சனத்தை மட்டுமே அனுப்புவார். அதாவது, எழுதுபவருக்கு, விமர்சகர்கள் (அல்லது, அத்துறையில் நிபுணர்கள்) யாரென்று தெரியாது. ஆனால், விமர்சகருக்கு, இது ரவி நடராஜன் எழுதிய கட்டுரை என்று தெரியும். இதை Single Blind முறை என்கிறார்கள். நியூட்டன் காலத்திலிருந்து, இன்றுவரை பல விஞ்ஞான வெளியீடுகளின் முறை இது.
இதன் அடுத்த கட்டம், செல்வனம் ஆசிரியர், இக்கட்டுரையை ரவி நடராஜன் எழுதியிருக்கிறார் என்றே தன் பதிவுக்குழுவிற்குச் சொல்ல மாட்டார். மதிப்பீடு செய்பவருக்கு எழுத்தாளர் யாரென்று தெரியாது. எழுத்தாளருக்கு மதிப்பீட்டாளர்கள் யாரென்றும் தெரியாது. இதை double blind முறை என்கிறார்கள். பல புள்ளியியல் மற்றும் மனோதத்ததுவ வெளியீடுகளில் இந்த double blind முறை அவசியமாகிறது. முக்கியமாக எந்த வகை சார்புத்தன்மையும் வராமல் இருக்க இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள்.
விஞ்ஞான ஆராய்ச்சியில் சில முடிவுகளை வெளியிட அவசர அவசியம் இருக்கும். மற்ற கட்டங்களில் அவசரம் தேவையிருக்காது. அவசரமாக விஞ்ஞான முடிவுகளை மற்ற விஞ்ஞானிகளுடன் பகிர ‘விஞ்ஞானக் கடிதங்கள்’ (Scientific Letters) என்ற முறை உருவாக்கப்பட்டது. இதற்கான ஒரு உதாரணம், Physical Review Letters என்ற பதிப்பு. இதில், single blind முறை உபயோகிக்கப்படுகிறது. Research Notes என்பவை, ஒரு துறையின் ஆராய்ச்சிகளை சுருக்கமாக, அல்லது ஒரு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சித் துறையைப் பற்றிய சுருக்கமான வெளியீடு. பெரும்பாலும், விஞ்ஞான வெளியீடுகளில் தங்கள் பங்கு, மற்றும் சில சார்ந்த நிகழ்வுகள் பற்றிய வெளியீடு. இணையம் பிரபலமான பிறகு, பல விஞ்ஞானிகளும் தங்கள் ஆராய்ச்சிசாலையின் இணைத்தளம், அல்லது பல்கலைக்கழகத்தின் இணைத்தளத்தில், பிளாக் (blog) செய்கிறார்கள். இம்முறையில் பிரசுரக் கட்டுப்பாடு அதிகம் கிடையாது. சுயக்கட்டுப்பாடே முக்கியம்.
எல்லாவற்றிற்கும் மேலான விஷயம், ஆய்வு (Journal) என்ற முறை. இம்முறையில், single அல்லது double blind முறைகள் உபயோகிக்கப்படும். மேலும், மதிப்புரைகள் பல மாதங்களாகும். நாம் முன்னே சொன்ன Nature போன்ற இதழ்கள் இப்படி இயங்குபவை. ஒவ்வொரு துறைக்கும், இப்படி இயங்கும் ஆய்விதழ்கள் (Journals) உண்டு. ஒவ்வொரு பெரிய விஞ்ஞான முன்னேற்றமும் இத்தகைய பதிப்பேடுகள் மூலம் வெளிவரும். இந்த அணுகுமுறை சமீபத்தில் பல காரணங்களால், சற்று மாறிக் கொண்டு வருகிறது; இதைப்பற்றி, இக்கட்டுரையில் விவரிக்கப் போவதில்லை. இத்தகைய பதிப்பேடுகளுக்கு ஒரு உதாரணம், புது இங்கிலாந்து மருத்துவ ஜெர்னல் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவ வெளியீடு.
இத்தகைய Journals மற்றும் Letters -களில் வெளீயீட்டிற்கு கறாரான சட்டதிட்டங்கள் உள்ளன. கட்டுரையின் வடிவமைப்பிற்கும் (format) வரையறைகள் உண்டு, மற்ற விஞ்ஞான வெளியீடுகளை மேற்கோள் காட்டும் (Citations) குறிப்புக்கும் வரையறைகள் உண்டு.
***
மேற்கோள்கள்
1. விஞ்ஞான வெளியீடுகளின் சரித்திரம்
2. விஞ்ஞான வெளியீடு பற்றிய தனியார் கட்டுரை
3. 19 –ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான சரித்திரம்
4. விஞ்ஞான ஆராய்ச்சியின் வரலாறு
5. விஞானச் சிந்தனையின் வரலாறு பற்றிய காட்சியளிப்பு
வளர்ச்சி என்றால் போதாதா? ஏன் “வளர்ச்சியின் வளர்ச்சி”?
ரெ.கா.
ரெ.கா
உங்களது கருத்துக்கு நன்றி. நல்ல வேளையாக இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள். இக்கட்டுரை பல விஞ்ஞான சம்மந்தப்பட்ட விஷயங்களை அலசும் ஒன்று. இதில் உள்ள முதல் ‘வளர்ச்சி’ -யை சொஞ்சம் ஆராய்வோம். ஒரு துறையின் வளர்ச்சி என்பது என்ன? அத்துறையின் முக்கிய மைல்கல்களா, அல்லது அத்துறையின் சிந்தனை முதிர்ச்சியா, அல்லது அத்துறையின் முறைகளின் முதிர்ச்சியா? இப்படி, பல விஷயங்கள் ஒரு துறையின் வளர்ச்சியை அளவிடும் விஷயங்கள். இதை எல்லாம் சேர்த்து, ’விஞ்ஞான சிந்தனை, முறைகள் மற்றும் முக்கிய மைல்கல்களின் வளர்ச்சி’ என்று ஒரு தலைப்பு கொடுத்தால், பத்திரிகை ஆசிரியர், ‘அட இதுவே ஒரு கட்டுரை அளவுக்கு நீளுகிறதே’ என்று கடிந்து கொள்வார். சரி, ‘வளர்ச்சியின் வளர்ச்சி’ என்று சுறுக்கமாக சொல்லிவிடலாமே என்று முடிவெடுத்தேன்.
இதை நீங்கள் கேட்டதினால், விளக்கம் தர ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நன்றி.
Doctor of Science (D.Sc) பல நாடுகளில் கொடுக்கிறார்கள். இருந்தும் Ph.Dயும் பரவலாகக் கொடுக்கப்படுகிறது. கலைகள் என்று கருதப்படும் துறைகள் அறிவியலாகவும் கருதப்படுகின்றன எ-கா.: இதழியல் துறை, Communication முதலியவை. நிலநூல், பொருளாதாரம் ஆகியவற்றை கலைகள் (Arts) ஆகப் பல பல்கலைகள் வைத்துள்ளன. சமூகவியல் துறைகள் பல சமூக அறிவியலாக ஆகியுள்ளன. கணினித் துறை போன்றவை அறிவியலில் முன்னிலையிருந்தாலும் அவை அறிவியல் ஆவதில்லை. தொழில்நுணுக்கம் மட்டுமே.
ரெ.கா.