யாதும் ஊரே

gb

சங்கரலிங்கத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் அதிகம் பழக்கமில்லை. வரவழைத்துக் கொண்ட அவசரத்துடன் தாண்டும் போது , போலீஸ்காரன் வாசலில் கையில் துப்பாக்கியுடன் காவலுக்கு இருக்க ஒன்றிரண்டு பேர் கலைந்த தலையும் தூங்காத கண்களும் அழுக்குச் சட்டையுடன் நிற்பதைப் ஓரக்கண்ணால் பார்த்திருக்கிறான். அன்று அகாலமாக சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு,  போலீஸ் ஜீப் டயர் தேய, பூட்ஸ் கால்கள் வீட்டுக்கு முன்னும் பின்னும் ஒலிக்க, ஒரு தடி சப் இன்ஸ்பெக்டர், கையில் ஒரு உருட்டுத்தடியுடன், கோமதியையும் இழுத்துக் கொண்டு ஸ்டேஷன் விசாரணைக்குப் போகும் போதும் என்ன தப்பு நடந்தது என்று புரியவில்லை.

சங்கரலிங்கத்தின் வாழ்க்கை வருஷங்களாக ஒரு விதமான ஒழுங்கில் படிந்து விட்டிருந்தது. பெரும்பாலும் அதிகம் வித்தியாசம் இல்லாத நாட்கள். அந்த செப்டம்பர் சனிக்கிழமை தவிர. தினமும் வாக்கிங் முடித்து, தினமும் காபியுடன் பேப்பர் படித்து, தினமும் சுத்தமாக ஷேவ் செய்து, குளித்து சஷ்டிக் கவசமும் அபிராமி அந்தாதியும் சொல்லி, தினமும் இட்லி தினமும் சட்டினி, தினமும் பட்டையாக இட்ட விபூதியை லேசாக அழித்து விட்டு பஸ் ஸ்டாண்ட் வந்தால் க்ருஷ்ணன் நாயர், நாகராஜ ராவ், பாண்டியன், ரோஸ் மேரி எல்லோரையும் தினமும் பார்த்து சம்சாரித்து, மாத்தாடி,சௌக்கியம் விசாரித்து குட் மார்னிங் சொல்லி சரியாக 8 மணிக்கு •பாக்டரி பஸ் வந்து விடும். பஸ்ஸில் சில பேர் சீட்டுக்கட்டு, சிலர் உரத்த பேச்சு, சிலர் தூக்கம் – சங்கரலிங்கம் விட்ட இடத்திலிருந்து பேப்பர். மாலை ஆறரை மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் காபி, சிறிது நேரம் சீரியல்கள் எட்டு மணிக்கு சாப்பிட்டு ஒன்பதுக்கு ந்யூஸ் பார்த்து விட்டு விட்டு ஒன்பதரைக்கு தூங்கி, தொப்பை படிந்து கண்ணாடி போட்டு வயது ஆகி விட்டது.

கோமதியைப் பார்த்தால் வயது சொல்ல முடியாது. சின்ன வயதில் நாட்டியம் கற்ற பழக்கம், இப்பவும் நிற்பது நடப்பது எல்லாம் நளினம். கண்கள் பேசும். சங்கரலிங்கம்தான் அதிகம் கவனித்தது இல்லை. கல்யாணம் ஆன சில வருடங்கள் வரை குழந்தைகள் இல்லை என்று சின்னதாக ஆரம்பித்தது,  நடுவே  என்று பெரிய சண்டை ஆகி, அதற்குப் பிறகுதான் சங்கரலிங்கம் சஷ்டிக் கவசம் எல்லாம் தீவிரமாக ஆரம்பித்தது. கடந்த சில வருடங்களாக, இரண்டு பேரும் சமாதானமாகி, கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் சகித்து கொண்டு இருந்து வருகிறார்கள்.

சங்கரலிங்கம் அப்படி ஒன்றும் சாமர்த்தியம் இல்லை என்று சொல்ல முடியாது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பேயே ஹவுஸிங் சொஸைடியில் ஒரு அரை க்ரவுண்டு  ஸைட் வாங்கிப் போட்டு விட்டான். இப்போது தான் லோன் வாங்கி ஒரு சின்ன பெட்டி வீடு கட்டி இருக்கிறான்.  புது வீடு முதலில் சில நாட்கள் வரை மர வாசனையும்,  பெயின்ட் வாசனையுமாக நன்றாகத்தான் இருந்தது. சங்கரலிங்கத்துக்கு ஒன்றும் பெரிய வித்தியாசமாக தெரியவில்லை. இந்த இடத்துக்கும் பத்து நிமிட நடையில் பாக்டரி பஸ் வந்தது.

People_Walk_BLR_Karnataka

கோமதிக்குத்தான் சரிப் பட்டு வரவில்லை. பழைய வீடு இருந்தது மல்லேஸ்வரத்தில். நடந்தால் காய்கறி மார்கெட், ஈரோடு வெண்ணெய், இருமலுக்கு நாட்டு மருந்துப் பொடி, சுங்கடிப் புடவை, பெருமாள் கோவில், கோகுலாஷ்டமி சமயத்தில் சஞ்சய் கச்சேரி, வீணா ஸ்டோரில் சாம்பார் இட்லி என்று பழக்கமாகி இருந்தது. அதை விட விமலா, மஞ்சுளா என்று நிறைய நட்பு.

புது வீட்டுக்குப் பக்கத்தில் அதிகம் வீடுகளே இல்லை. தெருவிலே அங்கும் இங்குமாக மொத்தம் ஆறு வீடுகள் தான். வந்த இரண்டு நாட்களில் செய்த நட்பு முயற்சி அவ்வளவு பயன் இல்லை. இருப்பதற்குள் பக்கம் என்கிற வீடு இரண்டு ப்ளாட் தள்ளி. கோமதி தானே அறிமுகம் செய்து கொண்டு, பக்கத்தில் என்ன கடை எங்கே என்ன கிடைக்கும் என்று கேட்க, அந்த பெண்மணி இந்தக் காலத்துப் பெண்கள் எப்படி காசை விரயம் செய்வது என்ற நோக்கத்துடன் அலைவதப் பற்றியும், எப்படி நிரந்தர ஆனந்தத்தை அடையலாம் என்று அவர்களுடைய சுவாமிஜி சொல்லி இருக்கிறார் என்று ஆரம்பிக்க, பக்தி மார்க்கத்தில் அவ்வளவு தீவிர நாட்டம் இல்லாத கோமதி ஜாக்கிரதையாக பின் வாங்க நேர்ந்தது. பின் தெருவில் ஒரு வீடு, நடுவே காட்டுப் புதர்கள், தெருவைச் சுற்றிக் கொண்டு போக, அந்த வீட்டில் ஒரு தாத்தா – அந்த இடத்தில் அவ்வப்போது பாம்பு வரும் , ஒரு முறை யாரையோ புதருக்குள் அடித்துப் போட்டு விட்டார்களாம், அதனால் சாயங்காலம் ஆறு மணிக்குப் பிறகு நடந்து செல்வது அவ்வளவு நல்லதில்லை என்று அறிவுரை, வேறு. ஒரே வாரத்தில் கோமதிக்கு பெங்களூர் பாஷையில் சொன்னால் ரொம்ப பேஜாராகி விட்டது. எத்தனை நேரம்தான் டீ வி பார்ப்பது ?

இதற்கு நடுவே, சிறிது பொழுது போக்காக இருந்தது ப்ரோக்கர் நாராயணசுவாமியும் அவன் கூட்டிக் கொண்டு வந்த வாடகை வீடு தேடுபவர்களும்தான். மாடியில் ஒரு சின்ன ஹாலும் சமையல் அறையும் பெட் ரூமும், கடைசியாக ஒர் குட்டி பாத்ரூமுமாக முதலிலேயே ப்ளான் செய்து கட்டியது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும், வீட்டு லோன் கட்ட உபயோகமாக இருக்கும் என்றுதான். ஆரம்பத்தில் சங்கரலிங்கம் தானே ஒரு அட்டையில் சாக்பீஸால் வாடகைக்கு என்று எழுதித் தொங்க விட்டு, ஒரு வாரம் யாரும் வரவில்லை. பாக்டரியில் தெரிந்தவர்களிடம் சொன்னதில், அந்தக் காலனி எவ்வளவு தூரம், எல்லாவற்றுக்கும் எவ்வளவு அசௌகரியம், அங்கே நடந்த கொலை போன்ற காரணங்கள் கிடைத்ததே தவிர, உபயோகமாக யாரும் கிடைக்கவில்லை. ஏறக்குறைய சங்கரலிங்கம் வாடகைக் கனவுகளை கைவிட்ட நிலையில், கோமதியின் மூலம்தான் ப்ரோக்கர் கிடைத்தான். நாயர் கடை அந்தப் பிராந்தியத்தில் இருந்த ஒரே ஒரு கடை. அரிசி,பால், காய்கறி அவசரத்துக்கு க்ரோஸின், 40 பக்கம் லாங் சைஸ் நோட்புக் என்று சகல சாமான்களும் கிடைக்கும். கோமதி ஒரு நாள் உச்சி வேளையில் பாதி சமையல் செய்யும்போது, அடுப்பை அணைத்து விட்டு அவசரத்துக்கு ஒரு தக்காளி கடன் கேட்கக்கூட பக்கத்தில் ஒரு வீடும் இல்லை, மாடியிலும் ஒருத்தரும் இல்லை என்று நாயரிடம் வருத்தப் பட்டபோது, நாயர் உடனே ஒரு போன் செய்து ஒரு வீட்டு ப்ரோக்கருக்கு தகவல் சொன்னான். அன்று மாலையே ப்ரோக்கர் நாரயணசுவாமி அழுக்குக் கதர் குல்லா,அதற்குப் பொருத்தமாக அழுக்கு வேட்டி,கையில் ஒரங்கள் சுருண்ட நோட்புக், குண்டு பௌண்டன் பேனா, அந்தப் பேனா உதறிய இங்க் கறைகள் இப்படியாக ஒரு ஓட்டை சைக்கிளில் வந்து சேர்ந்தான். வீட்டை பார்த்து விட்டு, ரூம் இன்னும் பெரிதாக இருந்திருக்கலாம், இந்த இடத்தில் இப்படிப்பட்ட வீட்டுக்கு ஸ்டூடென்ட்ஸ்தான் வருவாங்க என்று அரைகுறை தமிழ் கலந்த கன்னடத்தில் தீர்மானமாக சொல்லி விட்டான். கோமதி முதலில் நாராயணசுவாமியின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “இதோ பாருப்பா, யாராவது புதுசா கல்யாணாமனவங்க இல்ல அதிகம் போனால் கல்யாணாமாகி சின்ன குழந்தை இருக்கறவங்க இருந்தா கூட்டிட்டு வா, இல்லன்னா அவர் ஒத்துக்க மாட்டார்” என்று சொல்லி விட்டாள். நாராயணசுவாமியும் தன் அனுபவ ஞானத்தினால் அப்படி கிடைக்க மாட்டார்கள் என்று திரும்பச் சொல்லியும் கேட்காததால், பார்க்கலாம் என்று சந்தேகமாக சொல்லிவிட்டுப் போய்விட்டான். ஒரு வாரமாக ஒன்றும் தெரிய வராததால், கோமதி போன் செய்ய, “நான் தான் அப்பவே சொன்னேனே, நீங்க கேட்கிற மாதிரி யாரும் வர மாட்டாங்க. ஸ்டூடென்ட்ஸ்தான் கிடைப்பங்க, சரின்னா நாளைக்கே கூட்டிட்டு வரேன் ” என்று வைத்து விட்டான்.

Three_Friends_Images_Models

கோமதி யோசித்தாள். ஸ்டூடென்ட்ஸ் ஆக இருந்தால் என்ன தப்பு ? நமக்கு வயசுப் பையனோ பெண்ணோ இல்லை. வாடகைக்கு விடும்போது நல்ல பசங்களாகப் பார்த்து விட்டால், அதாவது நல்ல பசங்கள் என்றால் , நான் வெஜ் சாப்பிடாத,குடிக்காத, நள்ளிரவு வரை நண்பர்களைக் கூட்டி வந்து டீவியை அலற விடாமல்,இரவு 10 மணிக்கு சமர்த்தாக தூங்கி, காலை ஆறு மணி சுமாருக்கு எழுந்து, ஒழுங்காக குளித்து, மாதா மாதம் சரியாக சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொண்டு, ஒரு நாள் தனக்கு முடியவில்லை என்றால்  மெயின் ரோடு வரை போய் இட்லி வாங்கி வந்து… யோசித்தால் கிட்டத்தட்ட பசங்கள் இல்லாத குறை தீரும் என்று தோன்றியது. ஆனால் சங்கரலிங்கம்தான் ஒத்துக்கொள்வானா என்று சந்தேகமாக இருந்தது. இருக்கட்டும் என்று ஒரு குருட்டு தைரியத்தில் ப்ரோக்கரிடம் ஸ்டூடென்ட்ஸ் இருந்தாலும் பரவா இல்லை என்று சொல்லி விட்டாள்.

சொல்லி இரண்டே நாளில் நாராயணசுவாமி அந்தப் பசங்களை அழைத்துக் கொண்டு வந்து விட்டான். கேரளத்துப் பசங்கள். மூன்று பேரில் ஒருத்தந்தான் சிறிது தமிழ் தடுமாறிப் பேசினான். மற்றவர்கள் நாணத்துடன் பொதுவாக புன்னகையுடன் ஓரமாக நின்றார்கள். சொந்த ஊர் கோட்டயம் பக்கத்தில் கிராமம், இங்கே காலேஜ் படிக்க வந்திருக்கிறார்களாம். வீட்டில் சமையல் செய்யும் உத்தேசம் எதுவும் இல்லையாம். மெயின் ரோட்டில் கைராளி மெஸ்ஸில் சாப்பிடுவார்களாம். இரவில் டீவீ அலற விடக்கூடாது, குடி எல்லாம் இருக்ககூடாது என்று ஆரம்பிக்கும்போதே, “சேச்சி நாங்கள் படிக்க வந்திருக்கிறோம், மரியாதையான குடும்பம், ஊரில் அப்பா அம்மாவை விட்டு வந்திருக்கிறோம், எங்களுக்கும் பொறுப்பு உண்டு..” என்று நீளமாக, உணர்ச்சியுடன் பேசினான். பசங்களின் புன் சிரிப்பே நிறைவாக இருந்தது. சேச்சி சரி என்றால் அந்த வார இறுதியிலேயே குடி வருவதாக சொன்னார்கள். இன்னும் சங்கர லிங்கத்திடம் சொல்லக் கூட இல்லை. இவ்வளவு சீக்கிரம் அடுத்த கட்டத்திற்கு வந்து விடும் என்று எதிர் பார்க்கவில்லை. முதலில் குடும்பம் இல்லை, காலேஜ் பசங்கள் என்பதை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும். அடுத்தது அவர்கள் வேற மொழிக்காரர்கள் என்பது. ஒத்துகொள்வானா என்று சந்தேகமாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. வெளியில் எங்கும் போக முடியாத, வீட்டுக்குள் இருந்தாலும் மனதுக்கு சோர்வைத் தரும் மழை. சங்கரலிங்கத்தைப் பார்த்தால் சற்று எரிச்சலாகத்தான் இருந்தான். காலையில் விஷயத்தையே ஆரம்பிக்கவில்லை. மதியம் தூங்கி எழுந்தபின் ஆரம்பிக்கலாம் என்று திட்டம். சங்கரலிங்கம் எழுந்த போது மணி மாலை நாலரை. தூறல் விட்ட பாடில்லை. வழக்கமாக ஒரு காபி மட்டும்தான், அன்று வெங்காய பஜ்ஜியும் பொருத்தமாக இருந்தது. சங்கரலிங்கம் சற்று அதிகமாகவே சாப்பிட்டு விட்டான். அபூர்வமாக போடும் வெற்றிலையும் வாசனைப் பாக்கும் வேறு.  திடீரென்று ஆறு  மணிக்கு தூறல் நின்று, காரை எடுத்துக் கொண்டு பிள்ளையார் கோவில் வரை போய், வழக்கமாக அவசரத்தில் சிடுசிடுக்கும் அர்ச்சகர் நிதானமாக கற்பூரம் காண்பித்து, கையில் நினைத்தப்டி சிவப்புப் பூ கொடுத்து, எல்லாம் நல்ல சகுனமாக அமைந்தது. வீட்டுக்கு வந்து, சோபாவில் அமர்ந்து, டீவி சானல்களை சுழற்றினால் பழைய நாகேஷ் மனோரமா காமெடி. சங்கரலிங்கம் நிறைந்து உட்கார்ந்து இருந்த போது மெதுவாக ஆரம்பித்தாள்.

” நாராயணசுவாமி வந்திருந்தான், இந்த மாதிரி இடத்துல தனியா சின்ன பாமிலி எல்லாம் வர மாட்டாங்களாம், பக்கத்துல ஒரு வீடும் இல்ல, கொலை நடந்த ஏரியா, காலேஜ் ஸ்டூடென்ட்தான் வருவாங்கன்னு சொல்றான் “

சங்கரலிங்கம் மௌனமாக மேலே சொல்லு என்பதுபோல பார்த்துக் கொண்டிருந்தான், ஒரு சில வருஷங்களுக்கு முன்பு கூட

” அப்படின்னா நாம வீடு கட்டின ஏரியாவே சரி இல்லயா ? இங்க இருக்கறவங்கள பார்த்த மனுஷங்களா தெரியலயா ? நான் ஏமாந்த ஆசாமி, சாமர்த்தியம் போதாது இல்லயா ? மல்லேஸ்வரத்திலயே கோடி கோடியா கொடுத்து வீடு கட்டி இருக்கணுங்கறயா ? போயி மொதல்ல வேற ப்ரொக்கரப் பாரு ” என்று சொல்லி இருப்பான். இப்போது சிறிது நிதானம் வந்திருக்கிறது.

தருணம் என்றுதான் சொல்ல வேண்டும், சங்கர லிங்கம் நல்ல பசங்களாக இருந்தால் வாடகைக்கு விடுவதற்கு ஒத்துக் கொண்டு விட்டான். இரண்டு நாள் விட்டு தயங்கியபடி ஆரம்பித்தாள். ” பார்த்தா நல்ல பசங்க மாதிரிதான் இருக்கு, ஆனா அவங்க கேரளத்துப் பசங்க, தமிழ் வராது”

” எந்த ஊரானால் என்ன, நல்ல மாதிரியாக இருந்தால் சரி, எங்க பாக்டரியில கூட வேலை செய்யவறங்க எல்லாரும் என்ன தமிழா,  தினமும் பஸ்ஸில க்ருஷ்ணன் நாயர், நாகராஜ ராவ்,ரோஸ் மேரின்னு எல்லார் கூடயும் எத்தனை வருஷமா நட்பு ? நாமகூடதான் இங்க பெங்களூர் வந்து செட்டில் ஆகலயா ? நம்ம பழைய வீட்டு ஓனர் கொங்கணி பேசற மங்களூர்க்காரங்க. நாம “யாதும் ஊரே யாவரும் கேளிர்” னு ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னேயே பாடின மரபு. இந்த சின்ன புத்தி எப்பதான் போகுமோ “. “சற்று கோபமாகவே பேசினான்.

பசங்கள் குடி வந்து மூன்று மாதம் ஆகி இருக்கும், இருப்பதே தெரியாமல் இருந்தார்கள். காலை எட்டு மணிக்கு முதுகில் பெரிய புத்தகப் பையுடன் கிளம்பினால் சில சமயம் இரவு எட்டு ஒன்பதுக்குத்தான் திரும்ப வந்தார்கள். கூர்ந்து கேட்டால் இரவு பத்து பத்தரை வரை ஏதோ மலையாளம் சானல் மெல்லியதாய் கேட்கும். ஞாயிற்றுக் கிழமை ஆனால் துணி எல்லாம் தோய்த்து அழகாக மொட்டை மாடியில் உணர்த்தி, கையில் எப்போதும் ஏதாவது புத்தகத்துடன் உலாவினார்கள். எதிர்ப்பட்டால் அழகாக புன்னகையும் மரியாதையும்.

முதல் மாத வாடகை வாங்கியவுடன், கோமதி கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு வந்தாள். காலையில் சங்கரலிங்கம் பஸ்க்கு கிளம்பும்போது, மாடி பால்கனியில் வாயில் டூத் ப்ரஷ் நாள் தவறாது புன்னகையுடன் ஒருத்தனாவது குட் மார்னிங் சொல்லுவான். மூன்று நாட்களாக காணவில்லை. கோமதியிடம், என்ன ஏதாவது ஓணமா ? ஊருக்குப் போய் விட்டார்களா ? என்று கேட்டான்.  இல்லை, ஏதோ ஸ்டடி ஹாலிடே, அப்படியே ஊருக்குப் போய் வருவதாக சொல்லி இருந்தார்கள், வருவதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்று வாடகையைக் கூட முன்பே கொடுத்து விட்டார்கள் என்றாள் அதற்கு மேல் இரண்டு பேரும் அவ்வளவாக கவலைப் படவில்லை, ஒழுங்காக வாடகை வந்து கொண்டிருந்தது. நல்ல பசங்களாகத்தான் தெரிந்தார்கள். ஒரு தொந்தரவும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே திரும்பி வந்திருக்க வேண்டும். வரவில்லை. ஏதாவது மொபைல் நம்பர் இருக்கிறதா என்று கேட்டன். மொபைல் போன் தொடர்பு இல்லை என்று குரல் வந்தது. சங்கரலிங்கமும் கோமதியும் அவ்வளவாக கவலைப் படவில்லை. அவர்கள் ஊர் எதோ கிராமம் என்று சொன்னார்களே, அங்கே சிக்னல் இல்லை போல என்று விட்டு விட்டார்கள்.

Bengaluru_Bangalore_Property_Dispute_Commercial_Street

சனிக்கிழமை இரவு போலீஸ் ஜீப்பில் போகும்போதுதான், இது ஏதோ அந்தப் பசங்கள் சம்பந்தப் பட்ட விவகாரம் என்று தோன்றியது. சங்கரலிங்கத்துக்கு போலீஸ் ஸ்டேஷனை வாசலிலிருந்து பார்த்துதான் பழக்கம்.  மற்றபடி  காந்தி படம் மாட்டி துணி விரித்த மேஜையும், வரிசையாக கம்பி போட்ட செல்களும் சினிமாவில் பார்த்ததுதான். இது வேறே மாதிரி இருந்தது.ஒரு பழைய வீட்டை போலீஸ் ஸ்டேஷனாக ஆக்கி இருந்தார்கள். நீளமாக பென்ச் போட்ட அறைகளும், அங்கங்கே பெடஸ்டல் பான் நிறுத்தி வைத்து, பச்சை நிற துருப்பிடித்த இரும்பு டேபிள்களில் குண்டு நோட்டுப் புத்தகங்களும்,  பழைய பல்புகளிலிருந்து தூசி கசிந்த மங்கிய வெளிச்சமும், குச்சியால் பல் குத்திக்கொண்டு சோம்பேறித்தனமாக அமர்ந்திருந்த ரைட்டரும், எல்லாம் தாண்டி பின் பக்கம் ஜன்னல்கள் மூடி இருந்த ஒரு அறைக்கு கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சேர்த்தார்கள். இன்ஸ்பெக்டர் காத்திருந்தான். கையில் செல் போன், முகம் கடுப்பில் இருந்தது. தலையை ஆட்டி ஸார் ஸார் என்று சொல்லிக் கொண்டு இருந்தான். பேசி முடித்து விட்டு, நிதானமாக கையில் குறுந்தடியை எடுத்து நீட்டிக் கொண்டு அவன் கோமதியைப் பார்த்த பார்வையே சரி இல்லை.

கையிலிருந்த தடியால் நாற்காலி¨யைத் தட்டி உட்காரச் சொன்னான். இருவரும் நாற்காலி நுனியில் தொற்றிக் கொண்டார்கள்.

“என்ன சின்ன பசங்கன்னா விசாரிக்காம வாடகைக்கு கொடுத்திட்டீங்களா ? அவங்க எந்த ஊரு என்ன பண்றாங்கன்னு தெரியுமா ? “

சங்கரலிங்கம் அவர்களுடன் அதிகம் சகவாசம் வைத்துக் கொண்டதில்லை – காலைப் புன்னகையோடு சரி. பதில் தெரியாமல் கோமதியைப் பார்த்தான்.

” ஒ ! உங்களுக்குத்தான் பழக்கமா ? அய்யாவுக்கு வயசாச்சில்லையா, அவரு வீட்டுல இல்லாத போது வாடகை வாங்க அப்படி இப்படின்னு மாடில போய்….” அதற்கு மேல் கோமதிக்குத் தாங்க முடியவில்லை.  கண்களில் நீர் துளிர்த்தது.

” அவங்க யாருன்னு தெரியுமா ? டெரரிஸ்ட்டுங்க.ரெண்டு நாள் முன்னாடி ஸ்டேடியத்து வாசல்ல வெடிச்சுதே, அது இவங்க வெச்ச குண்டு “

அய்யோ ! இருக்காதே, கள்ளம் இல்லாத பசங்கன்னா அவங்க, என்று நினைத்துக் கொண்டாள் – இன்ஸ்பெக்டருக்கு புரிந்திருக்க வேண்டும்.

” உங்கள மாதிரி ஏமாந்த ஆட்களால்தான் எல்லோருக்கும் பாதுகாப்பே இல்லை, கொஞ்சமாவது அறிவு இருக்கா ? பார்த்தா படிச்ச மாதிரி தானே இருக்கீங்க ? யாருக்கு வாடகைக்கு கொடுக்கறோம் என்ன செய்யறாங்கன்னுகூட தெரியாம நம்பி இருக்கீங்க. அந்த குண்டு முழுசா வெடிக்கல, அதுவும் வெடிச்ச போது பக்கத்துல அதிகம் கூட்டம் இல்ல, யாரும் சாகல, இல்லாட்டி என்ன ஆகி இருக்கும் தெரியுமா “

சில நாட்களுக்கு முன் டீவியில் செய்திகளில் பார்த்தது லேசாக நினைவுக்கு வந்தது.

“அதிகம் கலவரம் ஆகக்கூடாதுன்னு நாங்க விவரம் எதுவும் ப்ரெஸ்ஸ¤க்குக் கொடுக்கல. இதப் பாருங்க..”

போட்டோவில் ஒரு சின்ன பையனும் அருகே அவனுடைய அம்மாவாக இருக்க வேண்டும், தரையில் அல்ங்கோலமாக கிடந்தார்கள், பக்கத்தில் சிதறிய பாட்டில் ஒன்று.

“நல்ல காலம் உயிர் பிழச்சுட்டாங்க, இல்லன்னா நீங்களும் உள்ளேதான்”

அன்று கடைசியில் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு, சங்கரலிங்கத்துக்கும் கோமதிக்கும் சதியில் சம்பந்தம் இல்லை என்பதுபோல அப்போதைக்கு விடு விட்டார்கள்.

அதற்குப் பிறகு, இதுவரை வாழ்க்கையில் அதிகம் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போகாததற்கு சேர்த்து தினமும் போக வேண்டி இருந்தது. நாராயணசுவாமியையும் போலீஸ் விடவில்லை. ஒவ்வொரு தடவையும் வேறு வேறு போலீஸ் ஆசாமிகள், அதே கேள்விகள். போலீஸ் அடிக்கடி வீட்டுக்கு வேறு வந்து மாடியில் எல்லா சாமான்களையும் எடுத்து தோண்டி, துருவி ஒன்றும் அகப்படவில்லை.

இதற்கு நடுவே விஷயம் பரவி, அந்த வீட்டுக்கு டெரரிஸ்ட் வீடு என்று பெயர் தானாக வந்து சேர்ந்தது. அடுத்தவீட்டு பஜனுக்கு வந்த பக்தர்கள், பின் வீட்டு தாத்தாவின் அமெரிக்கப் பேரன் என்று அடிக்கடி நிறைய பேர் அகாலத்தில் வந்து சின்ன சுற்றுலாத்தலம் போல வந்து சென்றார்கள். ஒரு நாள் நாராயணசுவாமி வந்து ஒரு குரல் அழுது விட்டுப் போனான். அவனுக்கு இப்பொது பிஸினஸ் படுத்து விட்டதாம். எங்கே போனாலும் டெரரிஸ்ட் ப்ரோக்கர் என்று அடையாளம் ஆகி விட்டதாம். இருந்தாலும் அவன் விடுவதாக இல்லை. வேறு யாராவது பார்ட்டி இருந்தால் அழைத்து வரலாமா என்று கேட்டான். சங்கர லிங்கத்துக்கு கோபம் உச்சி வரை ஏறியது. ப்ரோக்கரைத் திட்டி வெளியில் துரத்தி கதவை இழுத்து மூடி சோர்வாகி படுத்துக் கொண்டு விட்டான்.

இதெல்லாம் முடிந்து மூன்று மாதம் ஆகி இருக்கும். கூரியர்காரன் வந்து பாங்க்கிலிருந்து கடிதம் கொடுத்து விட்டுப் போனான். வீட்டு லோன் இன்னொரு அரை சதவீதம் உயர்ந்திருந்தது. சங்கரலிங்கத்துக்கு வயதாகி விட்டதால், லோன் திருப்பித் தர வேண்டிய காலத்தை இன்னும் நீட்ட முடியாதாம். மாதாந்திர ஈ எம் ஐ அதிகம் செய்து அடுத்த மாதத்திலிருந்து புதிய தொகைக்கு செக் அனுப்பச் சொல்லி இருந்தது. செக் எழுதும் போது தான் மாடி காலியாக இருப்பது மறுபடி உறைத்தது.

நாராயணசாமி மறுபடியும் வந்திருந்தான். இந்த முறை சங்கரலிங்கம் கோபித்துக் கொள்ளவில்லை. கத்தவில்லை. இதோ பாருப்பா, உனக்கும் பிஸினஸ் ஆகணும், எனக்கும் வாடகை வேணும். ஏதோ ஆகாத வேளை போனதடவை யாரையோ வாடகைக்கு வெச்சு,போலீஸ் ஸ்டேஷன் வரை போயிடிச்சு. ஒருதரம் பட்டா கவனமா இருக்கணும் இல்லையா, இனிமேல் வம்பே வேண்டாம். எங்களுக்கெல்லாம் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம். நம்ம ஊர்க் காரனா இருக்கணும். சைவப் பிள்ளைமாரா பாரு. வாடகை கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா பரவா இல்ல, நான் சொன்னது மத்தது எல்லாம் முக்கியம், என்ன புரிஞ்சுதா ?

நாராயணசுவாமிக்கு ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் சிரத்தையாக அழுக்கு நோட் புக்கை எடுத்துக் கொண்டு பேனாவை உதறினான்.

 

0 Replies to “யாதும் ஊரே”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.