முயல் காதுகள்

ஏதோ முணுமுணுப்பாக பாடிக்கொண்டே காலணிகளை கழட்டி கழட்டி மாட்டிக் கொண்டிருந்தவரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.  ஜூனியரால் இரண்டு முழு நிமிடங்கள் ஓரிடத்தில் பொருந்தி அமர்ந்திருக்க முடியும் என்றால் டிவியில் ஏதாவது அடிதடி கார்ட்டூன் ஓடிக்கொண்டிருக்கிறது, அல்லது அதற்கு நிகரான வாக்குவாதங்கள் வீட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்று பொருள்.

அதென்னடா பன்னி பன்னின்னு ஒரு பாட்டு?’

‘இல்லப்பா…. ஷூ லேஸ் கட்டறதுக்கு மிஸஸ் ஸிம்மர் சொல்லிக் கொடுத்தது. ஒரு நாளைக்கு டென் டைம்ஸ்.-..தலையைநிமிர்த்தி, முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக சுட்டுவிரலை ஆட்டிக் கொண்டே-, ‘டெய்லி டென் டைம்ஸ்… விடாம பிராக்டிஸ் செய்யனும்.  அப்பதான் சூப்பரா லேஸ் கட்ட முடியும்’

Dogs_Grass_Rabbit_Ears_Amstaff_Petsகுளோரியா ஸிம்மர் என்பவர் எங்கள் குடியிருப்பில் கீழ்த்தளத்தில் ஒற்றையாளாக வசிக்கும் முதியவர்.  80 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர் எனச் சொல்லலாம்.  நாயை நடைக்கு அழைத்துப் போகும்போது, சைக்கிள் விட்டுக்கொண்டு போகும் ஜூனியரை நிறுத்தி வைத்து ஏதாவது கேள்விகள் கேட்டு வைப்பார் . ‘என்னமா ஷூ லேஸ் கட்டறான் பாரு, இந்த வயசிலேயே’ என்று பாராட்டுரைகளை பாரபட்சமில்லாமல் உதிர்ப்பார்.  பதிலுக்கு அவர் வாக்கிங் கூட்டி வரும் நாய்க்குட்டியைப் பற்றி நானும் சில நல்ல கருத்துகளை உதிர்த்து எதிர் மொய் செய்வது வழக்கம். அவருடைய நாய்க்குட்டி அம்ஸ்டாஃப் இனம்.  நீளமான காதுகளோடு, நாக்கை சுழட்டிக் கொண்டே சுற்றி சுற்றி வரும்.  முயலுக்குண்டான காதுகள் நாய்களுக்கு அவ்வளவாக பொருந்துவதில்லை என்றாலும் ராக்ஸி செம துறுதுறு.  இரண்டு முறை தனது பழைய பெற்றோர் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார் என்று அவர்கள் கைகழுவி விட்டார்களாம்.  எழுபது வயது குளோரியா அம்மையார்தான் தத்து எடுத்துக் கொண்டிருந்தார்.  ஜீனியருடன் குதித்து குதித்து விளையாடுவதை ரசித்து பார்ப்பார். ‘பாரேன், ராக்ஸிக்கு அவன் வயது தோழர்களை பார்ப்பதில் எவ்வளவு ஆனந்தம்’ என்பார்.  அது சரி!

எனக்கு பதிலளித்த திருப்தியோடு, ஜூனியர் குனிந்து முணுமுணுத்துக் கொண்டே லேஸ் முனைகளை வளைத்து நுழைத்துமுடிபோட்டு சிக்கலாக்கி, இறுக்கி படி முடிச்சாக்கிக்  கொண்டிருந்தார்.  இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் அது இடியாப்பச் சிக்கலாகிப் போன இணைய விவாதம் போல அடி எது, நுனி எது என்று புரியாமல் போய்விடும் அபாயம் தெரிந்தது.

‘இருடா… இருடா….’ என்று நானும் குனிந்து அமர்ந்து அவருடன் சேர்ந்து மல்லுகட்டத் தொடங்கினேன்.  இப்பொழுது ஜூனியர் பாடும் பாட்டு தெளிவாகக் கேட்டது.

Bunny ear, bunny ear, both of you
Bind my foot, to the Shoe
Have ’em firm, like a glue…

காலணியின் கயிறுகளை நேராக வைத்துக் கொண்டு இறுக்கமாக ஒரு முடிச்சு. பிறகு முயல்காதுகள் போல மடித்துக்கொண்டு அதன் மேலே ஒரு முடிச்சு.  இருபக்கமும் சமமாக இருக்க வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அடிவயிற்று கொழுப்பு இரண்டு மி.கிராமாவது கரைந்து விட்டது போல ஓர் உணர்வு.  ஜூனியர் சொல்வது போல 10 முறை குனிந்து நிமிர்ந்து லேஸ் கட்ட முடிந்தால், குத்துமதிப்பாக நூற்றிபத்து கலோரிகள் செலவாகி, தொப்பையை முற்றிலும் தட்டையாக்கிவிடலாமோ என்ற பேராசையை புரட்டிப் போட்டுவிட்டு, சிப்ஸ் பாக்கெட்டும் கையுமாக மீண்டும் சாய்வு சோபாவில்சரிந்தேன்.  இப்படியான கலோரி கணக்குகள் அடிக்கடி நினைவில் வந்து போகிறது என்றால், வயதாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உடனே ஏதாவது junk உணவு சாப்பிட்டு அந்த நினைவை ஆற்றிக் கொள்ள வேண்டும். விஷத்தை விஷம்தான் முறியடிக்கும் கேட்டீர்களா?

முயல்கள் எல்லாம் சின்னச்சின்ன காதுகளுடன் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த காலம் ஒன்று உண்டாம்.  கழுகுகள், வல்லூறுகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அவை பெரும்பாலும் பொந்திற்குள்ளேயே மறைந்து, பயந்து, வாழ்ந்து வந்தனவாம்.  அப்படி உயிருக்கு பயந்து வாழ்ந்து வந்த ஒரு முயல் மேல் அனுதாபப்பட்ட தோட்டத்து தேவதை, அந்த முயலின் காதைப் பிடித்து தூக்கி, தோட்டத்தின் மத்தியில் விட்டு ‘வேகமாக ஓடு’ என்று சொன்னாளாம்.  அப்பொழுதிருந்து இந்த முயல்கள் அழகிய நீண்ட காதுகளுடன் துள்ளிக் குதித்து ஓடுகின்றன – இப்படியொரு கதையை சொல்லிவிட்டு, நீளமான முயல்காதுகள்தான் ஷூவிற்கு அழகு என்று குளோரியா பாட்டி சொன்னதாக ஜூனியர் குஷியோடு சொன்னார்.

‘அதுவும் சரிதான்.  10 டைம்ஸ் தினமும் செஞ்சு பழகு. உனக்கு உள்ளபடிக்கே ஆர்வம் இருந்தால் அதை நீ நிரூபிக்கவேண்டும்.  அப்படி நிரூபித்தாலே அதை நீ அடைந்தாற் போலத்தான்’ என்றேன்.  இப்படியான அறிவுரைகள் எல்லாம் பொறுப்பான அப்பாக்களுக்கான லட்சணம்தானே.

Shoe_laces_love_White_Heart_Bunnyஜூனியரின் ஷூ லேஸ் முடியும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.  போஸ்ட் ஆபீஸ்க்யூவில் நிற்கும்போது, குடிதண்ணீர் வெண்டிங் இயந்திரத்தில் சில்லறை போட்டு போராடிக் கொண்டிருக்கும்போது,கைக்கொரு பையாக க்ரோசரி சமாச்சாரங்களை அள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி மாடிப்படிகள் ஏறும்போது, என்று எல்லாஇடங்களிலும் ‘டபக்’கென உட்கார்ந்து அவிழ்ந்திருக்கும் ஷூ லேஸ்களை முடிபோட ஆரம்பித்துவிடுவார். ‘பன்னி இயர்,பன்னி இயர்….’.கூடவே நானும் செஸ் விளையாட்டில் ‘செக்’ வைக்கப்பட்ட ராஜாவைப் போல அத்தனை வேலைகளையும் அந்தரத்தில் விட்டுவிட்டு, குனிந்து உட்கார்ந்து ‘லெஃப்ட்ல ஒடி… அப்படிக்கா ரைட்டுல மடி… அப்படி இல்ல… அப்படி இல்ல… வளைச்சுப் பிடி.. அழுத்திப் பிடி…’ என்றுஅறிவுரைகளில் தொடங்கி ‘அச்சோ! ரொம்ப டைட்டா இறுக்கிட்டான் பாரு’, ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல… அஞ்சே நிமிஷத்தில் அவுந்திடும்’, ‘ரொம்பநீளமான லேஸ்… கணுக்காலை சுத்தி ஒரு ரவுண்டு வச்சி கட்டினீயானா…’ ‘அய்யே… அப்புறம் எப்படி ஓடியாடி விளையாடும் குழந்த’ ‘லேஸை ரெண்டா கட் பண்ணி, நுனியில மெழுகு ஒட்டி….’ என்று மாறி மாறி தனி ஆவர்த்தனம் வாசித்து, முடிவில் முத்தாய்ப்பாக ‘இதுக்கு அவனே கட்டியிருந்தா… அழகா கட்டிட்டிருந்திருப்பான்…’ என்று ஷூ லேஸ் கட்டும் கச்சேரி இனிதே முடியும்.

இந்த ஷூலேஸ்-மேனியா பிரச்னையை ஜூனியர் அடுத்தவர் மேல் ஏற்றுவதில்லைதான்.  தானுண்டு, தன்னுடைய ஷூ உண்டு, அடிக்கொருமுறை அவிழும் லேஸ்கள் உண்டு, பிஞ்சுக் கைகளால் தளர்ச்சியாக போடும் முடிச்சு உண்டு என்றுதான் இருப்பார்.  ஆனால், பள்ளி வகுப்பாசிரியையால் அப்படி இருக்க முடியவில்லை போல.  குனிந்து நிமிர்ந்து சேவித்து மாளாமல் பொதுப்படையாக ‘கிண்டர்கார்டன் வகுப்புகளில் இருக்கும் குழந்தைகளுக்கு லேஸ் வைத்த ஷூக்களை போட்டு அனுப்ப வேண்டாமே’ என்று நோட் போட்டு அனுப்பிட்டார்.  அந்த ஐம்பது வயது அம்மணிக்கு, இப்படியான இலவச உடற்பயிற்சிகளில் நம்பிக்கையோ நாட்டமோ இல்லையோ என்னவோ.

‘அந்த ஸ்பைடர்மேன் ஷூவைப் போட்டுக்கேண்டா… டக்கு டக்குன்னு ஸ்ட்ராப் வச்சு ஒட்டிக்கிடலாம் இல்ல’

‘ரோஹன்லாம் சூப்பரா ஷூ லேஸ் கட்டிட்டு வர்றான்பா.  நானும் .டென் டைம்ஸ் போட்டுப் போட்டு பழகிட்டா போதும்…’ என்று தன்னுடைய உள்ளகிடக்கையை வெளியிட்டார்.  இருக்கும்தானே. அவருடைய ஆதர்ச நண்பரின் நட்பு புத்தகத்தில், முதல் பெயராக இடம்பெற வேண்டிய இருத்தலியல் இச்சையை எப்படி விட்டுக் கொடுப்பது?

என்னைப் பொறுத்தவரை காலணியே ஒரு சிறைதான்.  அதன் மேல் கயிற்றை இறுகக் கட்டி சிறைக்கு மேல் ஒரு சித்திரவதை அது.  ஜூனியர் வயதில் இல்லையென்றாலும், ஆறு, ஏழு வயதில் எல்லாம் ஷூ அணிய வேண்டிய கட்டாயம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.  கான்வெண்ட் பள்ளியாதலால், பச்சைவண்ண  நிஜார், மஞ்சள்வண்ண சொக்காய், காலில் ஷூ, கழுத்தில் டை, டையில் பேட்ஜ், பேட்ஜில் ரேங்க் என்று பக்காவான யூனிஃபார்ம் உண்டு.  போதும் போதாததற்கு, அதை தினப்படி கவனிக்க ‘கேம்ஸ் மிஸ்’ என்றழைக்கப்படும் உடற்பயிற்சி ஆசிரியை குமாரி மிஸ் வேறு.  யாரேனும் ஷூ அணியாமல் பள்ளிக்கு வந்து, குமாரி மிஸ் கையிலிருக்கும் பிரம்பின் கண்ணில் பட்டார்கள் என்றால் தீர்ந்தது.  சந்தை தெரு அரசமரத்தடி பிள்ளையாருக்கு எட்டணா உண்டியலில் போட்டு விடுகிறேன் எனப் பிரார்த்தனை செய்துக் கொண்டால் பிழைக்கலாம். பிரம்படியிலிருந்து தப்பித்துவிட்டு, பிறகு பிள்ளையாருக்கு டிமிக்கிக் கொடுத்தால், அடுத்த முறை மீட்டர் ஸ்கேலிலேயே அடிவாங்கித் தருவார் என்பது ஐதீகம். ரொம்ப பவர்ஃபுல் பிள்ளையார்.

Ganesha_Pillaiyaar_Art_Work_Indian_Gods_Hinduism_Elephant_Face

குமாரி மிஸ்ஸின் தீர்ப்புகளில் செல்வகுமாருக்கு மட்டும் விலக்கு உண்டு. அவனுடைய இடது கை சற்று சுவாதீனம் இல்லாது துவண்டு இருக்கும்.  அதனால் அவனது அம்மா, அவனுக்கு சிறுமிகள் அணியும் ஷூ வாங்கி விட்டார்.  இருகைகளாலும் லேஸ் முடியும் தேவை இல்லை.  ஒரு கையால் பக்கிள் மட்டும் மாட்டி விட்டால் போதும்.  பெண்கள் ஷூவைப் போட்டுக் கொண்டு வந்தால் ‘செல்வி, செல்வி’ என்று கோட்டா பண்ணுவார்கள் என்பதால், அவன் பெரும்பாலும் ஷூ அணியாமலே வருவான். ‘ஒரு செருப்பாவது போட்டுகிட்டு வரலாம்ல… காலைப் பாரு… புழுதியும் சேறுமா… எருமை… எருமை’ என்று மிஸ் திட்டும்போது, அந்த ‘எருமை’க்கு மட்டும் பெரிதாக சிரித்துக் கொள்வான்.  வலிமையான நான்கு கால்களுடன், தலையைக் குனிந்து கொண்டு ஓடிச்சென்று முட்டுவது அவனுக்கு சந்தோஷம் அளிக்கக் கூடியதாகவே இருந்தது.

செல்வகுமாருக்கு நேர்மாறாக, குமரேசன் ஷூக்களின் காதலனாகவே இருந்தான்.  NCC கேம்ப்களில்தான் அவன் பழக்கம்.  குளிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் ஷூக்களோடுதான் அவனைப் பார்க்க முடியும்.  சற்று சிறிய லேஸ் கயிறுகளை வைத்து இறுகக் கட்டிய கரடிக் காதுகளுடன் கணுக்காலை எல்லாம் மூடிய முரட்டு லெதர் ஷூக்களில்  சுற்றி வருவான்.  பெரிய நீர்த் தொட்டியை சுற்றி குளித்துக் கொண்டிருக்கும் போது பாதங்களை தூக்கி தொட்டி விளிம்பில் வைத்து விடாமல் பத்து நிமிடங்களாவது சோப் போடுவான்.  குதிகாலை, விரலிடுக்குகளை, நகக்கணுக்களை என்று பார்த்து பார்த்து சுத்தம் செய்பவது அதிசயமாக இருக்கும். ‘குமார் போதுண்டா… ரோல்காலுக்கு நேரம் ஆச்சு பாரு’ ‘இர்றா… ரெண்டு நிமிட்ல வந்திடறேன்’ ‘டேய், விட்றா… அது என் கால்’ என்று கத்தும்வரை விடமாட்டான்.  கேம்ப்பில் ஒருமுறை, வட்டமாக உட்கார்ந்து கொண்டு ஷூ பாலிஷ் போடும்போது அவன் அப்பாவிற்கு காங்க்ரீன் வந்த கதையை சொல்லியிருக்கிறான்.  பாதத்தில் தொடங்கி தொடைவரை நான்கு முறை ஆம்புடேஷன் என்று மொத்தக் காலையே வெட்டி எடுத்துவிட்டார்களாம்.

‘நமக்குண்டான கஷ்டம் அது தன்னாலே பழகிப் போயிரும்.  ஆனா அந்நியர் யாரேனும் அதனால் பாதிக்கப்பட்டால், இந்த இந்தியர்களே இப்படித்தான் இங்கிதம் தெரியாதவர்கள் என பொதுகருத்து உண்டாக்கி அதை எங்காவது ப்ளாகில் எழுதி, நாளைய வரலாற்று பார்வையில், நாம் குற்றவாளியாகி நிற்க வேண்டுமடா …’ என்ற என்னுடைய உலகாய  சிந்தனையை எப்படி ஜூனியரிடம் விளக்குவது எனப் புரியாததால், அவருடைய முயல்காது முடிச்சின் மேலாக, ஒரு படி முடிச்சுப் போட்டு

‘இப்பப் பாரு… ஷூ லேஸ் அவுரவே அவுராது.  உனக்கும் தொந்தரவு இல்லை, உங்க டீச்சருக்கும் தொந்தரவில்ல’ என்றேன் நிம்மதியாக.

உருண்டையாக திரண்டிருந்த அவலட்சண முடிச்சைப் பார்த்து அவருக்கு மனம் ஆறவேயில்லை. குதிகாலுக்கடியில் ஸ்ப்ரிங் வைத்தது போன்ற குதித்தோடும் நடையை மறந்து சுரத்தில்லாமல் ஆகிவிட்டார்.  முயல் காதுகள் இல்லாத அவலட்சண காலணியை எப்படி அணிவது? அதை எப்படி ரோஹன் போன்ற நண்பர்கள் மதிப்பார்கள்? அடுத்து சில நாட்களுக்கு, பள்ளிக்கு கிளம்பும் சமயம்,  ஷூக்கள் அணியும்போதெல்லாம் மெலிதான ஒரு கலவரச்சூழல் பரவும்.  உற்ற நண்பன் முன்பாக கௌரவமாக நடமாட முடியாதே என்ற துக்கம் தொண்டையை அடைக்க, பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க, அந்த முயல்காதுகளின் மென்னியை முறிப்பதில் நான் கவனமாக இருப்பேன்.

‘இன்னும் கொஞ்சம் பெரியவனானதும், உனக்கு இன்னும் ஈஸியா இருக்கும்.  அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’ என்று சொன்னாலும் அவர் மனசு ஒப்பவில்லை.

நல்ல அருமையான இத்தாலியன் லெதரில், கயிறு போட்டு கட்டும் அவசியமில்லாத மொழுக் slip-on காலணி ஒரு ஜோடி வாங்கி ‘இதோ, உன் ஃப்ரெண்டோட பர்த்டேக்கு இதை பரிசா கொடுத்திடலாம்.  அவனும் ஷூ லேஸ் கட்டி அவஸ்தைப்படாம உன்னைப் போல ஜாலியா விளையாடலாம்ட சரியா?’ என்று அடுத்த கட்ட திட்டத்தை அமல்படுத்தினேன்.  பின்னே…. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செய்துவிட வேண்டும் இல்லையா.

‘மே பி, அவனுக்கு இது வேண்டியிருக்காதுப்பா.  ரோஹனோட அப்பாக்கு நல்லா ஷூ லேஸ் கட்டத் தெரியும்.  சோ, அவனுக்கும் நல்லா கட்டத் தெரியும்’ என்று என்னை திரும்பி சத்தாய்த்து தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டு ரோஹனின் பிறந்தநாளுக்கு தயாரானார்.

பிறந்தநாள் என்றால், காலரில் மஞ்சள் தீற்றிய சட்டையும், எக்லேர்ஸ் சாக்லேட் டப்பாவுமாக சிம்பிளாகாக் கொண்டாடிய காலமெல்லாம் மலையேறி மாமாங்கமாகி விட்டது.  பெரிய கூடத்தில், விழா நாயகருக்கு பிடித்தமான’கரு’ப்பொருளில் அலங்கரிக்கப்பட்ட பின்னணியோடு, முக ஓவியங்கள், பலூன் பொம்மைகள், மேஜிக் நிகழ்ச்சி என்றுகோலாலகலமாக இருந்தது.  மந்திரக் குச்சியை வைத்து பூங்கொத்து கொண்டு வரும் தந்திரங்கள் செய்து காட்டிக்கொண்டிருந்தவர், திடுமென ஒரு தொப்பியை எடுத்து அதிலிருந்து நிஜ முயலை எடுத்துக் காட்டினார்.  ஒரே கரகோஷம்.

Bunny_Rabbits_Everywhere_Home_School_Ears

மேஜிக் நிபுணர் தொப்பியில் இருந்து எடுத்துக்காட்டிய முயல் தேமேயென மேஜைமேல் குந்திக் கொண்டு வெறும் வாயை அசைபோட்டவாறிருக்க…., பக்கத்திலே இன்னொரு தொப்பி.  அதற்குள் இன்னொரு முயல்.  அருகிலிருந்தகுழந்தையைக் கூப்பிட்டு அலேக்காக தொப்பியை அதனிடம் கொடுத்து விட்டார்.  இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, எட்டுமுயல்களை, தொட்டில் போல தொப்பியில் வைத்து ஆளுக்கொரு குழந்தையிடம் கொடுக்க, ஒரேகொண்டாட்டமாகிவிட்டது..  ஜூனியரும் ஒரு தொப்பியை தூக்கிக் கொண்டு வந்து, ‘உள்ளே பாரேன்… எவ்ளோ சாஃப்டாஇருக்கு’ என்றார். அந்த முயலை காதைப் பிடித்து தூக்கி, அதன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, தோளில் தவழவிட்டு, தரையில் உருட்டிவிட்டு ஒரே ஆட்டம்.

தோட்டத்து முயல்கள் (Hare) போல் அல்லாது, இவை (Bunny) சற்று முடக்கமாகத்தான் இருந்தன.  எதுவும் மருந்து கிருந்து கொடுத்திருக்கிறீர்களா என்று ஜாடையாகக் கேட்டதற்கு அந்த மேஜிக்காரர் படு கோபமாகி முறைக்க, சந்தைத்தெரு அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு இன்னொரு அம்பது காசு நேர்ந்து கொண்டேன்.

ஜூனியர் ஒவ்வொரு முயலாக காதுகளைப் பிடித்து தூக்கி வெளியில் எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்.  தூக்கிய காதுகளோடு அப்படியும் இப்படியுமாக நகர்ந்து கொண்டிருந்ததன தவிர எதுவும் ஓடக் காணோம்.

‘ஏன் ஓட மாட்டேங்குது?டார்ட்டாய்ஸோட ரேஸ் ஓடற நினப்புலயே சோம்பேறியா இருக்கோ’

‘ஓடறதும் ஓடாததும் அதனதன் இஷ்டம். அதையேன் தொந்தரவு செய்யறே?’ சுதந்திரத்தின் எல்லை   என்பது சும்மா இருத்தல்தானே.

‘முயல்னா ஓடினாத்தான் அழகு. தொப்பிக்குள்ள என்ன தோட்டமா இருக்கு?’ ஜூனியர் சமயத்தில் இப்படித்தான். பின்னாளில் பிரமாதமாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜ்கள் போட்டு லைக்கும் ஷேருமாக பெருவாழ்வு வாழ்வாராக இருக்கும்.

மலைப் பாங்கான இடத்தில் அடர்ந்த புல்வெளி சரிவிடையே அமைந்து இருந்தது எங்கள் குடியிருப்பு.  புஸுபுஸுவென வாலுடன் ஓடும் அணிற்பிள்ளைகளும், குதித்தோடும் முயல்களும், முகமூடிக் கொள்ளைக்காரன் போன்ற ராகூன்களும், மினுமினுக்கும் கண்களுடைய பூனைகளுமாய், பம்மிய வயிற்றுடன் ஏரியை விட்டு வெளியே வந்து உலாத்தும் வாத்துகளுமாய் பார்க்க ரம்மியமான சூழல்தான்.  ஆனால் அடர்ந்த பனிப்பொழிவுக்கு பிறகு இரண்டு மூணு நாட்களுக்கு மொத்த பிராந்தியமும் நிறமற்ற பனி ஆடையோடு   துக்கம் அனுஷ்டிக்க அத்தனை பிராணிகளும் காணாமல் போய்விடும்.  பனிக்காலணிகள் அணிந்து கொண்டு புதையப் புதைய நடந்து வந்த குளோரியா அம்மையாரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

‘என்ன மிஸஸ் ஸிம்மர்…. தனியாகக் கிளம்பிவிட்டீர்கள்?ராக்ஸி எங்கே?’

சிறிய நாய், பூனைகள் வைத்துக் கொள்ளதான் எங்கள் குடியிருப்பில் அனுமதி உண்டு.  ராக்ஸி எடைகூடி, சிறிய நாயிலிருந்து பெரிய நாய்க்கு பிரமோஷன் வாங்கிவிட்டதால் அபார்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட்டில் ஆட்சேபணை எழுப்பிவிட்டார்களாம். ஆற்றுக்கு அப்புறத்தில்  மகளின் பண்ணைவீட்டில் கொண்டு விட வேண்டியதாகிவிட்டது என்றார் வருத்தத்துடன்.

‘சென்றவாரம் கூட போய் பார்த்துவிட்டு வந்தேன்.  பெரிய தோட்டம் என்பதால் அவனுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.  எனக்குத்தான் அவனில்லாமல் இங்கு இருப்பது பெரும் வேதனை’

ஒருவகையில் ராக்ஸி மகளின் வீட்டில் சந்தோஷமாக இருப்பது அவருக்கு ஏமாற்றமாகக்கூட இருந்திருக்கும்.

குனிந்து ஜூனியரைப் பார்த்தவர் ‘என்னாச்சு உன் முயல்காதுகளுக்கு?’ என்றார்.
‘புது ஸ்டைல் என்று அப்பா சொல்லிக் கொடுத்தார்’ என்றார் ஜூனியர்.

‘ஓ…. நீளமான முயல்காதுகள் இருந்தால்தான் நீ நன்றாக ஓட முடியும். தெரியும் இல்லையா?’ எனச் சொல்லிவிட்டு, முதுகை வளைத்து குனிந்து, பனிக்குவியலிடையே ஜூனியரின் ஷூ லேஸைப் பிரித்து கட்டத் தொடங்கினார்.    தோட்டத்து தேவதை பாட்டை இருவரும் சேர்ந்து பாடத் துவங்கினார்கள்

Bunny ear, bunny ear, both of you
Bind my foot, to the Shoe
Have ’em firm, like a glue
Keep me agile, till I ensue

தேவதைகள் வரம் அளிப்பதில் வல்லவர்கள்.  ஆனால் அவர்களுக்கு வரமாக முயல்கள் வாய்த்தால்தான் அவர்களை தேவதைகளாக நாம் உணரமுடிகிறது .  அவர்களின் உற்சாகம், என்னையும் தொற்றிக் கொள்ள நானும் சேர்ந்து பாடிக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.

0 Replies to “முயல் காதுகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.