பேச்சொலிகள்

RA

வாஷிங்டன் நிழல்வீதி பஸ்ஸில் பிரச்சினை எழுந்தது. தன் பயணத்தில் உடனடியாகவோ, அல்லது கொஞ்ச நேரத்திலோ தொல்லைகள் இருக்கும் என்று ரை எதிர்பார்த்திருந்தாள். தனிமையும், நம்பிக்கையிழப்பும் அதிகமாகி அவளை வெளியில் துரத்தும் வரையில் புறப்படுவதை ஒத்திப் போட்டுக் கொண்டேயிருந்தாள். கொஞ்சம் உறவினர்களாவது இன்னும் உயிரோடு இருப்பார்கள் என அவளுக்கு ஒரு நம்பிக்கை- இருபது மைல்கள் தள்ளி இருந்த பாஸடீனாவில் ஒரு சகோதரனும், அவனுடைய இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அவளுக்கு அதிருஷ்டம் இருந்தால், ஒரு வழிப் பயணம் ஒரு நாளில் முடியலாம். அவள் வர்ஜீனியா சாலையிலிருந்த தன் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த பஸ் வந்தது அப்படி ஒரு அதிருஷ்டம் என்றுதான் தோன்றியது- தொல்லை துவங்கும் வரை.

இரண்டு வாலிபர்களிடையே ஏதோ வேறுபாடு, இல்லை, இன்னும் சரியாகச் சொன்னால் பரஸ்பரம் புரிந்து கொள்ளாமை. அவர்கள் பஸ் நடுவில் இருந்த நடைபாதையில் நின்றார்கள். உடைந்த சாலையின் பள்ளங்களில் பெரிதாக ஏறி இறங்கி விழுந்த வண்ணம் பஸ் போனதால், இருவரும் கைகளை விரித்துப் பிடித்தவாறு நிலையில்லாமல் இருந்தார்கள். ஒருவரை நோக்கி ஒருவர் அடித்தொண்டையில் உறுமியபடி, கைகளை ஆட்டி அசைத்து சைகைகளால் விளக்க முயன்றார்கள். ட்ரைவரோ அவர்களை நேராக நிற்க விடாமல் நிலை குலையச் செய்வதில் கவனம் செலுத்தினாற்போல இருந்தது. இருந்தும் அவர்களுடைய கையசைப்புகளில் தொடுகையே இல்லை- குத்துவது போல பாவனைகளாகவும், வழக்கழிந்து போய்விட்ட வசவுகளுக்குப் பதிலாக பயமுறுத்தும் சைகைகளாகவும் மட்டும் நின்றிருந்தன.

பயணிகள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர், பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், சிறு கவலையொலிகளை எழுப்பினர். இரண்டு குழந்தைகள் பயத்தில் முனகின.

ரை, சண்டை போடவிருக்கும் இருவரின் பின்னே சில அடிகள் தள்ளி உட்கார்ந்திருந்தாள், பின் கதவுக்கு எதிரே அவள் இருக்கை. இருவரையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள், எந்த நிமிடமும் முழுச் சண்டை துவங்கும் என்று அவளுக்குத் தெரியும், இருவரில் ஒருவனின் கட்டுப்பாடு உடைந்தால் போதும், அல்லது ஒருவனின் கை தவறினாலோ, ஒருவனுக்குத் தான் கருதியதைத் தெரிவிக்க முடியாததன் இயலாமையைப் பொறுக்க முடியாமல் போனாலோ அவ்வளவுதான். இவை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

அப்படி ஒன்று நிகழ்ந்தது- பஸ் ஒரு பெரிய சாலைக் குழியில் விழுந்து எழுந்தது. ஒருவன், உயரமானவன், ஒல்லி, ஏளனப்படுத்திக் கொண்டிருந்தவன், குள்ளமான எதிராளி மீது எறியப்பட்டான்.

உடனே குள்ளமானவன், கரைந்து கொண்டிருந்த ஏளன இளிப்பு மீது தன் இடது முட்டியால் குத்தினான். ஏதோ தன் இடது முட்டியைத் தவிர வேறேதும் ஆயுதமே தன்னிடம் இல்லாதது போலவும், ஆயுதம் ஏதும் தேவையுமில்லை என்பது போலவும், முட்டியாலேயே திரும்பத் திரும்பச் சுத்தியடியாக எதிராளியை அடித்தான். எதிராளியை வீழ்த்தப் போதுமான வலுவோடும் துரிதமாகவும் குத்தினான், உயரமானவன் சுதாரித்து எழுமுன், தன்னைக் காத்துக் கொள்ள ஒரு தடவை எதிர்த்து அடிக்கக் கூட விடாமல் குத்தினான்.

பயணிகள் பயத்தில் அலறினர், அல்லது ஒடுங்கிக் கிறீச்சிட்டனர். அருகிலிருந்தவர்கள் பதட்டத்தோடு சண்டையிடத்திலிருந்து விலகிச் சிதறினர். வேறு மூன்று இளைஞர்கள் கிளர்ச்சியோடு கத்தினர், கைகளை வேகவேகமாக உதறி ஆட்டினர். அசம்பாவிதமாக, அந்த மூன்று நபர்களில் இருவரிடையே இன்னொரு சண்டை துவங்கியது, ஒருவேளை இருவரில் ஒருவனின் கை இன்னொருவனை அடித்ததோ, தொட்டதோ காரணமாக இருக்கலாம்.

இரண்டாவது சண்டை பயணிகளை மேலும் பயப்படுத்தியது, இன்னமும் சிதறச் செய்தது. ஒரு பெண், ட்ரைவரின் தோளைத் தொட்டு, நடக்கும் சண்டையை நோக்கிச் சைகை செய்து குழறலாக ஒலியெழுப்பினாள்.

ட்ரைவர் பதிலுக்கு முழுப் பற்களையும் காட்டியபடி, மந்த ஒலியில் குமுறினான். பயந்த பெண், பின்னே விலகிப் போ னாள்.

ரை, பஸ் ட்ரைவர்கள் இந்த சமயத்தில் என்ன செய்வார்கள் என்று தெரிந்தவள். முன்னிருக்கைக்கு மேலே இருந்த குறுக்குக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தயாராக இருந்தாள். ட்ரைவர் திடீரென்று ப்ரேக்கை அழுத்திய போது அவள் சுதாரிப்பாக இருந்தாள், சண்டை போட்டவர்கள் தயாராக இல்லை. இருக்கைகள் மீதும், கத்திக் கொண்டிருந்த பயணிகள் மீதுமாக விழுந்தார்கள். அது இன்னும் குழப்பத்தைக் கூட்டியது. குறைந்த பட்சம் இன்னொரு சண்டை துவங்கியது.

பஸ் நின்ற உடனேயே, ரை எழுந்து நின்றாள், பின் கதவைத் தள்ளினாள். இரண்டாவது முறை தள்ளியதில் கதவு திறந்து கொண்டது, அவள் வெளியே குதித்தாள், தன் பையை ஒரு கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். பல பயணிகள் அவளைப் பின் தொடர்ந்து வெளியே இறங்கினார்கள். ஆனால் சிலர் பஸ்ஸிலேயே இருந்தார்கள். இப்போதோ பஸ்கள் மிக அருகி விட்டன, எப்போது வரும் என்றே சொல்ல முடியாத நிலை. எப்போது முடிகிறதோ அப்போது மக்கள் பஸ்களில் பயணம் போனார்கள்- வெறெது எப்படி இருந்தாலும். இன்று இன்னொரு பஸ் வராமல் போகலாம்- நாளை கூட ஏதுமில்லாமல் போகலாம். ஜனங்கள் நடக்கத் துவங்கி இருந்தார்கள், எப்போதாவது பஸ் தென்பட்டால், கை காட்டி நிறுத்தி ஏறிக் கொண்டார்கள். லாஸ் ஏங்ஹலீஸிலிருந்து பாஸடீனாவுக்குப் போகும் ரையைப் போல நகரங்களுக்கிடையே பயணம் போக விரும்பிய மக்கள், எங்காவது வெட்ட வெளியிலேயே தங்கத் திட்டத்தோடு இருந்தார்கள், அல்லது அங்கங்கே ஊர்களில் யாருடனாவது தங்கத் துணிந்தார்கள்- அப்படித் தங்க இடம் கொடுப்பவர்கள் அவர்களைக் கொள்ளை அடிக்கவும், ஏன் கொலை செய்யும் அபாயமும் இருந்தும் கூட.

பஸ் நகரவில்லை, ஆனால் ரை அதனிடமிருந்து விலகிப் போனாள். அந்தச் சண்டையிலிருந்து விலகி இருக்கவும், அது முடிந்த பின் பஸ்ஸில் திரும்ப ஏறவும் அவளுக்குத் திட்டமிருந்தது, ஆனால் அங்கு ஏதும் துப்பாக்கிச் சூடு துவங்கினால், ஒளிய ஒரு மரத்தின் பாதுகாப்புத் தேவைப்பட்டது. அவள் ஒரு நடைபாதையில் ஏறிய போது, அங்கு சாலையில் எதிர்சாரியில் இருந்த ஒரு பழைய, நிறைய அடிபட்டிருந்த நீல ஃபோர்ட் கார் அரை வட்டமடித்துத் திரும்பி பஸ் முன் வந்து நின்றது. இந்த நாட்களில் கார்கள் மிகவுமே அரிதாகப் போயிருந்தன- எரிபொருள் தட்டுப்பாடு மிகவும் மோசமானதும், பழுதுபார்த்துத் தர, இன்னும் புத்தி சிதறாத மெகானிக்குகள் கிட்டத் தட்ட இல்லாமலே போய் விட்டதும் நிலையை எத்தனை மோசமாக்க முடியுமோ அத்தனை மோசமாக்கி இருந்ததால் கார்கள் அப்படி அரிதாகி விட்டிருந்தன. ஏதோ ஓடிக் கொண்டிருந்த ஒரு சில கார்களும், பயணத்துக்கு உதவுவது எத்தனையோ அதே அளவு போர்க்கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டன. அதனால், ஃபோர்ட் காரின் ட்ரைவர் ரையிடம் சைகை காட்டி, காரில் ஏற அழைத்தபோது, ரை எச்சரிக்கையோடு விலகிப் போனாள். ட்ரைவர் கிழே இறங்கினான் – இளைஞன், பெரிய உடல் கொண்டவன், கச்சிதமாகக் கத்திரித்து, கருமையாக, அடர்த்தியான முடியோடு இருந்த தாடி. நீண்ட மேல் கோட்டு ஒன்றை அணிந்திருந்தான், அவனுடைய முகத்தின் ஜாக்கிரதை உணர்வு ரையின் எச்சரிக்கை உணர்வை ஒத்து இருந்தது. அவள் அவனிடமிருந்து பல அடிகள் தள்ளி நின்றாள், அவன் என்ன செய்யப் போகிறான் என்று கவனித்தபடி. உள்ளே நடக்கும் சண்டைகளால் அதிர்ந்து ஆடும் பஸ்ஸைப் பார்த்தான், வெளியே நின்றிருந்த சிறு கூட்டமான பயணிகளைப் பார்த்தான். பின் ரையை மறுபடி நோக்கினான்.

அவளும் திருப்பி நோக்கினாள், தன் மேலங்கியின் உள்ளே, பழைய 45 அளவு தானியங்கித் துப்பாக்கி இருப்பதை நன்குணர்ந்த வண்ணம். அவனுடைய கைகளை உற்றுக் கவனித்தாள்.

தன் இடது கையால் அந்த பஸ்ஸைச் சுட்டினான். அதன் கருமையாக்கப்பட்ட ஜன்னல்கள் அவனை அதனுள்ளே என்ன நடக்கிறதென்று பார்க்க முடியாமல் தடுத்தன.

அவன் என்ன கேட்க விரும்புகிறான் என்பதை விட அவன் எந்தக் கையைப் பயன்படுத்தினான் என்பதில்தான் ரைக்குக் கூடுதலாகக் கவனமிருந்தது. இடது கைப் பழக்கமுள்ளவர்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள், கூடுதலாக நியாயமாகப் பேசினார்கள், புரிந்து கொள்வதிலும் கூடுதல் திறனுள்ளவராக இருந்தார்கள், சலிப்பு, கோபம், குழப்பம் ஆகியவற்றால் அதிகம் பாதித்து விரட்டப் படாமல் செயல்பட்டார்கள்.

அவனுடைய சைகை போலவே அவளும் சைகை செய்தாள், தன் இடது கையால் பஸ்ஸைச் சுட்டி, இரண்டு கைகளாலும் குத்திச் சைகை செய்தாள்.

தன் மேலங்கியை அகற்றினான், உள்ளே லாஸ் ஏஞ்சலீஸ் நகரப் போலிஸ் சீருடை அணிந்திருந்தான், அதை முழுமை செய்வதாகத் தடியும், அப் பணிக்கான ரிவால்வரும் இருந்தன.

அவனிடமிருந்து இன்னும் சில தப்படிகள் பின்னே போனாள் ரை. லா.ஏ. போ. இலாகா என்று ஏதும் தற்போது இருக்கவில்லை, வேறெந்தப் பெரிய அமைப்புகளுமே கூட, அரசுடையதோ, தனியாருடையதோ, ஏதும் இப்போது இல்லை. பேட்டைப் பாதுகாப்பு அணிகள் இருந்தன, சில ஆயுதம் தரித்த தனியாட்கள் இருந்தனர். அவ்வளவுதான்.

அவன் தன் மேலங்கின் பையிலிருந்து எதையோ எடுத்தான், அந்த அங்கியைக் காருக்குள் வீசினான். ரையைப் பின்னே போகும்படி சைகை செய்தான், பஸ்ஸின் பின் கதவருகே போக அந்தச் சைகை. அவன் கையில் ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஏதோ ஒரு பொருள் இருந்தது. அவன் என்ன விரும்பினான் என்பது ரைக்கு சட்டெனப் பிடிபடவில்லை, அவனே பஸ்ஸின் பின் கதவருகே போய் நின்று அங்கு வந்து நிற்கும்படி அவளிடம் சைகை செய்யும்வரை. அவளுக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்றறியும் ஆவல் இருந்ததே அவன் சொன்னதை அவள் கேட்கக் காரணம் போலிஸ்காரனோ இல்லையோ, அவன் ஏதோ செய்து அந்த முட்டாள்தனமான சண்டையை நிறுத்தினால் சரிதானே.

அவன் பஸ்ஸைச் சுற்றி நடந்து போய், தெருப் பக்கமிருந்த ஜன்னல்களில், திறந்திருந்த ட்ரைவரின் ஜன்னலருகே போனான். அங்கே அவன் எதையோ பஸ்ஸுக்குள் வீசியதைப் பார்த்தது போல இருந்தது அவளுக்கு. கரும்நிறமான கண்ணாடிகள் வழியே உற்று நோக்கி அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க அவள் முயன்றாள். பஸ்ஸுக்குள் இருந்தவர்கள் தடுக்கி விழுந்தபடி பஸ்ஸின் பின் கதவருகே ஓடி வந்தது தெரிந்தது, திணறித் தவித்து அழுதபடி வந்தனர். ஏதோ வாயு.

ரை கீழே விழவிருந்த ஒரு கிழவியைப் பிடித்தாள், இரண்டு சிறு குழந்தைகளைத் தூக்கிக் கீழிறக்கினாள் இல்லையேல் அவர்கள் கீழே தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டிருப்பார்கள். முன் வாயிலருகே தாடிக்காரன் மற்ற பயணிகளுக்கு உதவுவதைப் பார்த்தாள். சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவனால் வெளியே தள்ளப்பட்ட ஒரு மெலிவான கிழவரைத் தாங்கிப் பிடித்தாள். அவருடைய எடைபாரம் தாங்கமுடியாமல் தள்ளாடியவள், அந்த இளைஞர்களில் கடைசி ஆள் வெளியே வருகையில் அவனுக்கு வழிவிடக் கடைசி வினாடியில்தான் முடிந்தது. மூக்கிலும் வாயிலும் ரத்தம் பெருகிக் கொண்டிருந்த இந்த இளைஞன் இன்னொரு இளைஞன் மீது மோதினான், அந்த கண்ணீர்ப் புகையால் விம்மியபடி இருவரும் இன்னும் கட்டிப் பிடித்து மோதினர்.

தாடிக்காரன் பஸ் ட்ரைவர் முன் வாயில் வழியே கீழே இறங்க உதவினான், ஆனால் அந்த ட்ரைவர் அவனுடைய உதவியைச் சற்றும் பாராட்டவில்லை. ஒரு கணம், அங்கு இன்னொரு சண்டை துவங்கப் போகிறதென்று ரை நினைத்தாள். அந்த ட்ரைவர் சொற்களில்லாத கோபத்தோடு கத்திக் கொண்டு அச்சுறுத்தும் சைகைகள் செய்ததை அந்த தாடிக்காரன் சில எட்டுகள் பின்னே தள்ளி நின்று கவனித்திருந்தான்.

வெளிப்படையாகத் தெரிந்த ஆபாசச் சைகைகளுக்குச் சிறிதும் எதிர் வினை செய்ய மறுத்தவன், அசைவின்றி நின்றான், எந்த ஒலியும் எழுப்பவில்லை. மிகவும் குறைவாகப் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இப்படித்தான் செயல்பட்டார்கள்- பின்னே தள்ளி நின்றார்கள், அவர்கள் நேரடியாக தாக்கப் பட்டாலே ஒழிய, தங்கள் உணர்வுகள் மீது குறைந்த கட்டுப்பாடே உள்ளவர்கள் கத்துவதையும், எகிறிக் குதிப்பதையும் சும்மா பார்த்திருந்தார்கள். எதையும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்குத் தாம் மறுவினை செய்வது தமக்குக் கௌரவக் குறைவு என்று நினைப்பதைப் போல அவர்கள் நடந்து கொண்டனர். இது ஒரு வித மேட்டிமை மனப்பான்மையாகத் தெரியும், அப்படித்தான் அந்த பஸ் ட்ரைவர் போன்றவர்கள் இந்த நிலைபாட்டைப் புரிந்து கொண்டனர். இது போன்ற ”உயர்வு மனப்பான்மை” அடிக்கடி அடி உதைகளாலும், ஏன் கொலையாலும் கூட தண்டிக்கப்பட்டது. உடல் மொழி மட்டுமே ஒரே பொதுமொழியாக இருப்பது அதிகமாகி விட்ட இந்த உலகத்தில், பெரும்பாலும் ஆயுதம் தாங்குவது மட்டுமே போதுமானதாக இருந்தது, அவளுக்குத் தன் துப்பாக்கியை உருவுவதோ, அதை வெளியே காட்டுவதோ அனேகமாகத் தேவையாக இருந்ததில்லை.

தாடி மனிதனின் கைத் துப்பாக்கி முழுநேரமும் வெளியே பார்வையில் படும்படிதான் இருந்தது. அது ஒன்றே பஸ் ட்ரைவரைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இருந்தது போலும். அவர் வெறுப்பில் காறித் துப்பினார், தாடிக்காரனை இன்னும் சிறிது நேரம் முறைத்தார், பிறகு எரிபொருள் நிறைந்த தன்னுடைய பஸ்ஸை நோக்கி நடந்தார்.

பஸ்ஸைப் பார்த்துக் கொண்டு சில கணங்கள் நின்றார், உள்ளே போக விரும்பினாரென்பது தெளிவாகத் தெரிந்தது, ஆனால் உள்ளே வாயு இன்னும் கடுமையாக இருந்தது. ஜன்னல்களில், அவருடைய இருக்கைக்கருகே இருந்த சிறு ஜன்னல்தான் திறக்கக் கூடியதாக இருந்தது. முன் கதவு திறந்திருந்தது, ஆனால் பின் கதவு யாராவது பிடித்துக் கொண்டால்தான் திறந்து இருக்கும் நிலை. மேலும் பஸ்ஸில் குளிர்பதனம் செய்யும் எந்திரம் எப்போதோ பழுதாகி விட்டிருக்கும். பஸ்ஸில் நிலைமை சீராக கொஞ்ச நேரம் பிடிக்கும். அது ட்ரைவரின் சொத்து, அதில்தான் அவருடைய ஜீவனமே நடந்தது. பயணக்கட்டணமாக என்ன பொருட்களை ஏற்பாரென்று அப்பொருட்களின் படங்களை, அவர் பஸ்ஸின் பக்கங்களில் பழைய பத்திரிகைகளிலிருந்து எடுத்த படங்களாக ஒட்டி வைத்திருந்தார். அப்படிக் கிட்டும் பொருட்களைச் சேமித்து வைத்துத்தான் அவரால் தன் குடும்பத்தைப் பராமரிக்க முடியும். பஸ் ஓடவில்லை என்றால் அவருக்கும் சாப்பாடு கிட்டாது. அதே நேரம் புத்தியற்ற சண்டையால் பஸ்ஸின் உட்புறம் சேதமடைந்தாலும் அவர் ஒழுங்காகச் சாப்பிட முடியாமலே போகும். அவருக்கு இது புரியவில்லை என்பது தெரிந்தது. அவருக்குத் தெரிந்ததெல்லாம், பஸ்ஸை இன்னும் கொஞ்ச நேரத்துக்கு ஓட்ட முடியாது என்பதுதான். அவர் முட்டியை உயர்த்தி தாடி மனிதனை நோக்கிக் காட்டி ஆட்டியபடி, கோபமாக இரைந்தார். அவருடைய இரைச்சலில் ஏதோ வார்த்தைகள் இருந்தது போல ரைக்குத் தோன்றியது, ஆனால் அவை என்ன வார்த்தைகள் என்று அவளுக்குப் புரியவில்லை. இது அவருடைய பிழையா அல்லது தன்னுடையதா என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. கடந்த மூன்று வருடங்களாக அவள் மிக மிகக் குறைவாகவே தெளிவான மனிதப் பேச்சைக் கேட்டிருந்தாள் என்பதால் அவளுக்குப் பேச்சு என்பதை எப்படிப் புரிந்து கொள்ளப் போகிறோம் என்பதே தெரியவில்லை. தன்னுடைய சேதமும் எந்த அளவு இருந்தது என்பது குறித்தும் அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

தாடி மனிதன் பெருமூச்சு விட்டான். காரைப் பார்த்தான், ரையை நோக்கிச் சைகையால் அழைத்தான். அவன் போகத் தயாராகி விட்டான், முன்னதாக, அவளிடமிருந்து ஏதோ அவனுக்கு வேண்டி இருந்தது. இல்லை, இல்லை, அவனோடு வரும்படி அவளை அழைக்கிறான். அவன் போலிஸ் சீருடை அணிந்திருந்த போதிலும், சட்டம், ஒழுங்கு என்பதெல்லாம் இல்லை, வெறும் வார்த்தைகளாகக் கூட அவை இப்போது இல்லை, அவனோடு காரில் போவது நிச்சயம் ஆபத்தை மேற்கொள்வதுதான்.

உலகெங்கும் புரியக்கூடிய மறுப்புச் சைகையான தலையை ஆட்டி அவள் மாட்டேன் என்று தெரிவித்தாள். ஆனால் அவன் தொடர்ந்து அழைத்த வண்ணம் இருந்தான்.

அவள் கையசைத்து அவனைப் போ என்று சமிக்ஞை செய்தாள். அதிகம் சேதமடையாதவர்கள் மிக அரிதாகவே செய்கிற ஒன்றை அவன் செய்து கொண்டிருந்தான் – தன் போன்ற இன்னொருவர் மீது எதிர்ப்பாக மாறக்கூடிய கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தான். பஸ்ஸில் இருந்தவர்கள் இப்போது அவளைப் பார்க்கத் துவங்கி இருந்தனர்.

சண்டை போட்டிருந்தவர்களில் ஒருவன், இன்னொருவனின் கையை விரலால் தட்டினான், பின் தாடி மனிதனிடமிருந்து ரைக்குச் சைகை காட்டினான், பின் தன் வலது கையின் முதலிரண்டு விரல்களைச் சேர்த்து, சாரணர் இயக்கத்து சல்யூட்டில் பகுதியைப் போல ஒரு சைகை செய்தான். அது துரிதமான சைகை என்றாலும் தூரத்திலிருந்தே அதன் பொருள் உடனே தெரிந்தது. அவள் இப்போது தாடி மனிதனோடு சேர்த்து வகைப்படுத்தப் பட்டு விட்டாள். இனி என்ன?

சைகை செய்த மனிதன் அவளை நோக்கி நடக்கத் துவங்கினான்.

அவன் என்ன செய்ய விரும்பினான் என்பது அவளுக்குப் புரியவில்லை, ஆனால் அவள் தான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. அவளை விட அரை அடியாவது உயரமாக அவன் இருந்தான், ஒருக்கால் பத்து வயது இளையவனாகவும் இருந்திருப்பான். அவனை விட வேகமாகத் தன்னால் ஓடி விட முடியும் என்று அவள் நம்பவில்லை. உதவி கேட்டால் வேறு யாரும் தனக்கு உதவுவார்கள் என்றும் அவள் நம்பவில்லை. சுற்றி இருந்தவர்கள் எல்லாமே புதியவர்கள்.

அவள் ஒரு தடவை சைகை செய்தாள்- தெளிவாக அந்த மனிதனை நில் என்று சொல்லும் சைகை. அவள் மறுபடி அந்தச் சைகையைச் செய்யத் தேவை இருக்கவில்லை. நல்ல வேளையாக அவன் அதற்குப் பணிந்தான். ஆபாசமாக ஒரு சைகை செய்தான், பிற மனிதரில் பலர் சிரித்தார்கள். பேச்சு மொழி தொலைந்து போனதால், ஆபாசச் சைகைகள் நிறையவே புதிதாகத் தோன்றி இருந்தன. மிக எளிய விதமாக, அந்த மனிதன், தாடி மனிதனோடு உடலுறவு கொண்டவளாக அவளைச் சுட்டி, அதே போல் அங்கிருந்த பிற மனிதரையும் – தன்னில் ஆரம்பித்து, அவள் ஏற்க வேண்டும் என்று சைகை செய்திருந்தான்.

ரை அவனை எச்சரிக்கையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை வன்புணர்வு செய்ய முயன்றால் பிற மனிதர் அதைச் சும்மாவே பார்த்துக் கொண்டு நிற்கக் கூடியவர்கள்தான். அவள் அவனைச் சுட்டால், அதையும் அவர்கள் சும்மா நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவன் அவ்வளவு தூரத்துக்கு விஷயத்தை வளர்க்கப் போகிறானா?

அவன் அதைச் செய்யவில்லை. சில ஆபாசச் சைகைகளைச் செய்தானே தவிர, அவளை நெருங்க முயலவில்லை. இகழ்வோடு திரும்பியவன், விலகி நடந்து போனான்.

தாடி மனிதன் இன்னும் போகாமல் காத்திருந்தான். தன் தொழிலுக்கான துப்பாக்கியை, அதன் தோளுறையோடு அகற்றி இருந்தான். மறுபடி அழைத்தான், இப்போது இரு கைகளும் காலியாக இருந்தன. துப்பாக்கி காரில் இருந்ததும், உடனே எடுக்கக் கூடிய தூரத்தில் இருக்கும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அதை அவன் அகற்றி வைத்தான் என்பது அவளுக்கு நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. ஒருவேளை அவன் சரியான ஆள்தானோ என்னவோ. ஒருவேளை அவன் தனிமையாக உணர்ந்தானோ என்னவோ. அவளே மூன்று வருடங்களாகத் தனியாகத்தான் இருந்திருந்தாள். நோய் அவளிடமிருந்து எல்லாவற்றையும் உருவி அழித்து விட்டது. அவள் குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அது கொன்றது, கணவனையும் கொன்றது, சகோதரியை, பெற்றோரை.

அந்த நோய், அது நோய் என்பது சரியாகவிருந்தால், உயிரோடு இருந்தவர்களையும் ஒருவரை மற்றவரிடமிருந்து பிரித்து விட்டிருந்தது. நாடு முழுதும் ஒரே வீச்சாக அது பரவியபோது, இந்தப் புது நுண்கிருமி, ஒரு புது மாசு, கதிர்வீச்சு, கடவுளின் தண்டிப்பு..ஏதோ ஒன்று.. இதற்கு சோவியத்துகள் மீது பழி சுமத்தக் கூட மக்களுக்கு நேரமிருக்கவில்லை (சோவியத் மக்களுமே உலகின் இதர மக்களைப் போலவே குரலிழந்து மௌனமாகிக் கொண்டிருந்தனர் என்பதென்னவோ சரி.) இந்த நோய் அத்தனை வேகமாக ஒரு அடியைப் போல மக்களை வீழ்த்தியது, ஒரு ரத்தக் குழாய் வெடிப்பைப் போலிருந்தன அதன் பின்விளைவுகள். ஆனால் அது மிகக் குறிப்பாகத் தாக்கியிருந்தது. மொழி எப்போதுமே இழக்கப்பட்டிருந்தது, அல்லது கடுமையாகத் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. திரும்ப அது மீளவே இல்லை. அனேகமாக வாதநோய் வந்தது, அறிவுச் சேதம் இருந்தது, சாவும்.

ரை அந்தத் தாடி மனிதனை நோக்கி நடந்தாள், இரண்டு இளைஞர்களின் சீழ்க்கையொலிகளையும், கைதட்டல்களையும், கட்டைவிரல் உயர்த்தல்களையும் அசட்டை செய்தாள், அவர்கள் தாடி மனிதனைப் பாராட்டுவது போலச் செய்த இழிப்பு அவை. அவன் அவர்களைப் பார்த்துப் புன்முறுவல் செய்திருந்தாலோ, அல்லது அவர்களை ஏதோ விதத்தில் அங்கீகரித்திருந்தாலோ, அவள் அனேகமாக, நிச்சயமாகத் தன் முடிவை மாற்றிக் கொண்டிருந்திருப்பாள். முன்பின் தெரியாதவன் ஒருவனின் காரில் ஏறுவதில் இருக்கும் அபாயங்களைப் பற்றிச் சிறிது நேரம் யோசித்திருந்தால் கூடத் தன் முடிவை மாற்றிக் கொண்டிருந்திருப்பாள். மாறாக, அவள் தன் வீட்டுக்கு எதிரே இருந்த வீட்டில் வசித்த ஒரு மனிதனைப் பற்றி நினைத்தாள். அந்த நோய் வந்து போன பின் அவன் மிக அரிதாகவே குளித்துச் சுத்தம் செய்து கொண்டான். மேலும் நின்ற இடத்திலேயே, அது எங்கேயிருந்தாலும், சிறுநீர் கழிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏற்கனவே இரண்டு பெண்கள் துணையாகி இருந்தனர்- ஒருத்தி அவனுடைய பெரிய தோட்டங்களைப் பராமரித்தாள். அந்தப் பெண்கள் அவனிடமிருந்து கிட்டிய பாதுகாப்புக்காக, அவனைச் சகித்துக் கொண்டிருந்தார்கள். ரையையும் தன் மூன்றாவது பெண் துணையாக்க வேண்டுமென்பது தன் விருப்பம் என்று தெளிவாக்கி இருந்தான்.

அவள் காருக்குள் அமர்ந்தாள், தாடிக்காரன் கதவைச் சாத்தினான். காரைச் சுற்றி நடந்து ட்ரைவர் பக்கக் கதவுக்கு அவன் வந்ததைக் கவனித்திருந்தாள்- அவனுடைய பாதுகாப்புக்காகத்தான், ஏனெனில் அவனுடைய துப்பாக்கி அவளுக்கு அருகில் இருக்கையில் கிடந்தது. பஸ் ட்ரைவரும், இரண்டு இளைஞர்களும் சில தப்படிகள் முன்னே வந்திருந்தனர். ஆனால், அவர்கள் எதுவும் செய்யவில்லை, தாடிக்காரன் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்தான். அப்போது ஒருவன் ஒரு கல்லை எடுத்து வீசினான். மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்து கற்களை வீசினர், காரென்னவோ கிளம்பிப் போய்க் கொண்டிருந்தது, பல கற்கள் கார் மீது அடித்துச் சேதமேதும் விளைக்காமல் விழுந்தன.

பஸ்ஸிலிருந்து கொஞ்ச தூரம் போன பின், ரை தன் நெற்றியிலிருந்து வியர்வையைத் துடைத்தாள், கொஞ்சம் ஓய்வாக இருக்க விரும்பினாள். பஸ் எப்படியும் பாஸடீனாவிற்குப் போக வேண்டிய தூரத்தில் பாதி தூரம்தான் அவளைக் கொண்டு சேர்த்திருக்கும். அதற்குப் பிறகு ஒரு பத்து மைல்கள்தான் அவள் நடக்க வேண்டியிருந்திருக்கும். இப்போது தான் எத்தனை தூரம் நடக்க வேண்டி இருக்கும் என்று அவள் யோசித்தாள்- நிறைய தூரம் நடக்க வேண்டி இருக்கும் என்பது மட்டும்தான் தன் பிரச்சினையா என்றும் யோசித்தாள்.

ஃபிகரோவாவும் வாஷிங்டனும் சந்திக்கும் முனையில் பஸ் வழக்கமாக இடது பக்கம் திரும்பி இருக்கும் இடத்தில் தாடிக்காரன் காரை நிறுத்தினான், அவளைப் பார்த்தான், எந்தப் பக்கம் போகவேண்டுமென்று அவள் காட்ட வேண்டுமென்பது போலச் சுட்டினான். அவள் இடது பக்கம் திரும்ப வேண்டுமென்று சுட்டியபோது அவன் நிஜமாகவே இடது பக்கம் திரும்பின போது அவள் சிறிது இறுக்கம் குறைந்து இலேசானாள். அவள் போக விரும்புகிற இடத்துக்கு அவன் கொண்டு விடத் தயாராக இருந்தானானால், ஆபத்தில்லாதவனாகத்தான் இருப்பான் போல.

எரிந்து போனவையும், மனிதரால் துறக்கப்பட்டவையுமான வீடுகள், காலி மனைகள், நொறுக்கப்பட்ட அல்லது உதிரி பாகங்களுக்காக முழுதும் பிரித்து உடைக்கப்பட்ட கார்கள், ஆகியன நிரம்பிய தெருக்களை ஒவ்வொன்றாக அந்தக் கார் கடந்து போய்க் கொண்டிருந்தபோது, அவன் தன் தலைமீதாக ஒரு தங்கச் சங்கிலியைக் கழற்றினான், அவளிடம் கொடுத்தான். அதில் ஒரு வழுமூனான, கண்ணாடி போன்ற பளபளப்புடன் கருப்பான கல்லொன்று பதக்கமாக இணைக்கப்பட்டிருந்தது. அவன் பெயர் ராக் அல்லது கருப்பு அல்லது பீட்டர் என்று ஏதாவதாக இருக்கலாம், ஆனால் அவள் அவனை ‘அப்ஸிடியன்’ என்ற பெயரால் நினைக்க முடிவு செய்தாள். அவளுடைய சீரில்லாத நினைவுத் திறன் கூட அப்ஸிடியன் என்பது போன்ற சில சொற்களை இன்னும் தக்க வைத்துக் கொள்ளும்.

அவனிடம் தன் பெயருக்கான குறியீட்டைக் கொடுத்தாள்- ஒரு பெரிய கோதுமைக் கதிரைக் கொண்டிருந்த செருகும் ஊசி அது. மௌனம் எல்லாரிடமும் துவங்குவதற்கு வெகுநாட்கள் முன்பே அதை அவள் வாங்கி இருந்தாள். அதை இப்போது அவள் அணிந்து வந்தாள், தன் பெயரான ரை என்ற தானியத்தைக் கிட்டத்தட்ட காட்டக் கூடிய குறியீடாக அது இருந்தது போதும் என்ற நினைப்பு. அவளை முன்னால் அறிந்திராத அப்ஸிடியன் போன்ற நபர்கள் இதைப் பார்த்தபின் அவளைக் கோதுமை என்று நினைத்தார்களோ என்னவோ அதொன்றும் முக்கியமில்லை இப்போது. தன் பெயரை யாரும் கூப்பிட்டு அவள் இனிமேல் கேட்கப் போவதில்லை.

அப்ஸிடியன் அந்த ஊசியை அவளிடம் திருப்பிக் கொடுத்தான். அவள் அதை வாங்கக் கை நீட்டியபோது அவளுடைய கையைப் பிடித்தான், தன் கட்டை விரலை அவளுடைய கையில் இருந்த உழைப்புக் காய்ப்புகள் மீது தடவினான்.

முதலாம் தெருவில் நிறுத்தி மறுபடி எப்படிப் போவதென்று கேட்டான். அவள் சுட்டியபடி வலது பக்கம் திரும்பியவன், இசை மையம் இருந்த கட்டிடத்தருகில் காரை நிறுத்தினான். அப்போது, காரின் முகப்புப் பெட்டியிலிருந்து ஒரு மடித்த காகிதத்தை எடுத்தான், பிரித்தான். அதை ஒரு தெருக்களின் வரைபடம் என்று ரை புரிந்து கொண்டாள், ஆனால் அதிலிருந்த எழுத்துகள் அவளுக்கு ஏதும் புரிபடாதவை. அவன் வரைபடத்தை நீட்டிப் பிரித்தான், அவள் கையை மறுபடி பிடித்தான், அவளுடைய சுட்டு விரலை படத்தில் ஒரு இடத்தில் வைத்தான். அவளைத் தொட்டான், தன்னைத் தொட்டுக் காட்டினான், தரையைச் சுட்டினான். அதன் பொருள், ‘நாம் இங்கே இருக்கிறோம்.’ அவளுக்கு எங்கே போக வேண்டுமென்று தெரிந்து கொள்ள விரும்புகிறான் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. அவனுக்குச் சொல்லத்தான் அவள் விரும்பினாள், ஆனால் அவள் தன் தலையை வருத்தத்தோடு மறுத்து அசைத்தாள். அவளுக்குப் படிக்கவும், எழுதவும் முடியாமல் போய் விட்டிருந்தது. அதுதான் அவளுடைய மிக மோசமான சீர்கேடு, அவளுக்கு மிகவும் வருத்தம் கொடுத்த சேதமும் அதுதான். கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் பல்கலைக் கழகத்தில் (UCLA) அவள் முன்பு வரலாற்றைப் போதித்திருந்தவள். சுதந்திரமான பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் இயங்கியவள். இப்போதோ தன் எழுத்தின் பிரதிகளைக் கூட வாசிக்க முடியாமல் போயிருந்தது. அவள் வீடு புத்தகங்களால் நிரம்பி வழிந்தது, அவற்றில் ஒன்றைக் கூட அவளால் படிக்கவும் முடியவில்லை, அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவளுடைய நினைவாற்றலின் சேதப்பட்ட நிலையில், முன்பு என்ன படித்திருந்தாளோ அதில் பெரும்பாலானவற்றை அவளால் நினைவு கூரக் கூட முடியவில்லை.

அவள் அந்த வரைபடத்தைப் பார்த்தாள், ஏதாவது கணிக்க முடியுமா என்று யோசித்தாள். அவள் பாஸடீனாவில் பிறந்திருந்தாள், லாஸ் ஏங்ஹலிஸில் 15 வருடங்கள் வாழ்ந்திருந்தாள். இப்போது அந்நகரின் மக்கள் மையத்தினருகே இருந்தாள். இரண்டு நகர்களின் நிலைகளும் ஒப்பீடாகத் தெரிந்திருந்தது அவளுக்கு. தெருக்கள், திக்குகள், நொறுங்கிய கார்களாலும், சிதைந்த மேம்பாலங்களாலும் நிரம்பியிருப்பதால் தவிர்க்கப்பட வேண்டிய நெடுஞ்சாலைகள் – அதெல்லாம் தெரிந்திருந்தது. அவளுக்கு பாஸடீனா என்ற சொல்லை வரைபடத்தில் படிக்க முடியாத போதும், அது அந்தப் படத்தில் எங்கே இருக்கும் என்று அவளால் சுட்ட முடிய வேண்டும்.

தயக்கத்தோடு அவள் வரைபடத்தின் மேல் புறத்தில் வலது மூலையில் இருந்த ஒரு ஆரஞ்சு நிறத் திட்டின் மீது கையை வைத்தாள். பாஸடீனா, சரியாக அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அப்ஸிடியன் அவள் கையைத் தூக்கினான், கீழே அந்தத் திட்டான பகுதியை நோக்கினான், பின் வரைபடத்தை மடித்து, காரின் முன்பகுதிப் பெட்டியில் வைத்தான். அவனுக்குப் படிக்க முடிந்தது, என்பதை அவள் இவ்வளவு நேரம் தாழ்த்தித்தான் புரிந்து கொண்டாள். அவனுக்கு ஒரு வேளை எழுதவும் முடியலாம். திடீரென்று அவனை அவள் வெறுத்தாள்- ஆழமான, கசப்பான வெறுப்பு அது. வளர்ந்த மனிதன், போலிஸ்- கொள்ளையர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான்- படிக்கும் திறன் என்பதால் அவனுக்கு என்ன புரியப் போகிறது? ஆனால், அவன் படிக்கத் தெரிந்தவன், அவளில்லை. இனி ஒருபோதும் அவளுக்கு அது கிட்டாது. அவளுடைய கடும் வெறுப்பும், பெருஞ்சலிப்பும், பொறாமையும் அடிவயிறு வரை பரவி, அவள் உடனே நோய்ப்பட்டவள் போல உணர்ந்தாள். அவளுடைய கைக்கருகே, சில அங்குலங்கள் தள்ளித்தான் அந்தத் துப்பாக்கி கிடந்தது.

அவள் அசையாமல் தன்னை இருத்தினாள், அவனை உற்றுப் பார்த்திருந்தாள், அவனுடைய ரத்தத்தைக் கூட அவளால் பார்க்க முடிந்தது போல இருந்தது. ஆனால் அவளுடைய சீற்றம் உச்சத்துக்குப் போய் இறங்கியது, மடிந்தது, அவள் ஏதும் செய்யவில்லை.

அப்ஸிடியன் கொஞ்சம் நட்புணர்வோடு அவள் கையைப் பற்றினான். அவள் அவனைப் பார்த்தாள். அவளுடைய முகம் ஏற்கனவே மிக நிறைய வெளிப்படுத்தி விட்டிருந்தது. இன்னும் மீதமிருக்கிற மனித சமூகத்தில் வாழ்கிற எவரும் அந்த முகபாவத்தைப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க முடியாது, எத்தனை பொறாமை அது.

தன் கண்களை அசதியோடு மூடிக் கொண்டாள், ஆழ்ந்த மூச்சாக இழுத்தாள். கடந்த காலத்துக்கான ஏக்கம், நிகழ்காலத்தின் மீது வெறுப்பு, பெருகிக் கொண்டிருக்கும் தனது நம்பிக்கையின்மை, இலக்கில்லாத தன்மை இவற்றை எல்லாம் அவள் அனுபவித்திருந்தாள். ஆனால் இப்படி ஒரு தீவிரமான உந்துதலை, இன்னொரு மனிதனைக் கொல்லச் செய்யும் வெறியை அவள் இதற்கு முன் அனுபவித்ததில்லை. இறுதியில், அவள் வீட்டை விட்டு வெளியேறியதற்குக் காரணமே, தன்னைத் தானே கொன்று விடக் கூடிய நிலைக்கு அவள் வந்து சேர்ந்திருந்தாள் என்பதுதான். தான் உயிரோடு இருக்க ஒரு காரணத்தையும் அவளால் காண முடியவில்லை. ஒருவேளை அதனால்தான் அவள் அப்ஸிடியனின் காரில் ஏறிக் கொண்டாளோ என்னவோ. இதற்கு முன்னர் இப்படி அவள் ஒருபோதும் செய்ததில்லை.

அவன் அவள் வாயைத் தொட்டு, கட்டை விரலையும், மற்ற விரல்களையும் தொட்டசைத்து பேச்சிற்கான சைகையைச் செய்தான். அவளால் பேச முடியுமா?

அவள் தலையசைத்து ஆமோதித்தாள், கொஞ்சம் தணிந்த பொறாமை வந்து போனதை அவன் முகத்தில் பார்த்தாள். இருவரும் எது வெளிப்படையாகக் காட்டி ஒத்துக் கொண்டால் ஆபத்தானதோ அதைத் தெரிவித்து விட்டனர், ஆனால் ஏதும் வன்முறை நிகழவில்லை. அவன் தன் வாயைத் தட்டினான், நெற்றியைத் தொட்டான், பின் தலையை ஆட்டினான். அவன் மொழியைப் பேசவுமில்லை, பேச்சு மொழியை அவனால் புரிந்து கொள்ளவும் முடியாது. அந்த வியாதி ஒவ்வொருவரையும் காயாய் நகர்த்தி விளையாடி இருக்கிறது, எதை ஒவ்வொருவரும் அதிகம் மதித்தனரோ அதை அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டிருக்கிறது என்று அவள் உணர்ந்தாள்.

அவனுடைய சட்டைக் கையைச் சுண்டினாள், அவன் ஏன் தான் ஒருவனாகவே, தன்னிடம் மிச்சமிருந்தவற்றை வைத்து லா.ஏ. காவல் துறையை உயிரோடு வைத்திருக்க முயல்கிறான் என்று யோசித்திருந்தாள். மற்றபடி அவனுடைய புத்தி வேலை செய்கிறமாதிரியே தெரிந்தது. அவன் ஏன் வீட்டில் இருந்து கொண்டு, சோளம், முயல்கள், மற்றும் குழந்தைகளை வளர்க்க முயலவில்லை? அதை எப்படிக் கேட்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அப்போது அவன் அவள் தொடை மீது கையை வைத்தான், அவளுக்கு இப்போது வேறொரு கேள்வியைச் சமாளிக்க வேண்டி வந்தது.

அவள் தலையசைத்து மறுத்தாள்- வியாதி, கர்ப்பம், உதவி இல்லாத நிலையில் தனியாகத் தவித்து… மாட்டேன்.

அவன் அவள் தொடையை மிருதுவாகப் பிசைந்தான், அவனால் நம்பமுடியவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

அவளை யாரும் மூன்று வருடங்களில் தொட்டதில்லை. யாரும் தன்னைத் தொடுவதை அவள் விரும்பவும் இல்லை. இது என்ன மாதிரி உலகம், இதில் தற்செயலாகக் கூட ஒரு குழந்தையைக் கொணரலாமா என்ன, தகப்பன் என்பவன் விட்டுப் போய் விடாமல் கூடவே இருந்து அதைப் பராமரிக்க, வளர்க்க முன்வருகிறான் என்றால் கூட இதிலா ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வது? ஆனால் இந்த நிலை பரிதாபமானது, அப்ஸிடியனுக்குத் தெரியாது அவன் அவளுக்கு எத்தனை கவர்ச்சியாகத் தெரிந்தான் என்பது- இளைஞன், அனேகமாக அவளை விடவும் இளைஞன், சுத்தமாக இருந்தான், தான் விரும்பியதைப் பிடுங்கிக் கொள்ள முயலாமல், கேட்டுப் பார்க்கிறான். ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. வாழ்நாள் முழுதும் பின்தொடரப் போகும் விளைவுகளோடு ஒப்பிட்டால், சில நிமிடக் களிப்பு என்பதைக் கருதவும் கூடுமா?

அவன் அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டான், அவளும் ஒரு கண நேரம் அந்த நெருக்கத்தை விரும்பி அனுபவிக்கத் தன்னையே அனுமதித்தாள். அவனுடைய வாசம் நன்றாக இருந்தது- ஆணாகவும், நன்றாகவுமிருந்தது. விருப்பமில்லாமல் தன்னை விடுவித்துக் கொண்டாள்.

அவன் பெருமூச்சு விட்டான், காரின் முன்னறையைத் திறந்தான். அவள் சற்று உஷாரானாள், என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்க முடியாதிருந்தாள், ஆனால் அவன் எடுத்ததோ ஒரு சிறு பெட்டி. அதன் மேலிருந்த எழுத்து அவளுக்கு எதையும் தெரிவிக்கவில்லை. அவளுக்கு ஒன்றும் புரியவிலை, அவன் அந்தப் பெட்டியை காத்த அடைப்பை உடைக்கும் வரை. அவன் அதற்குள்ளிருந்து ஒரு ஆணுறையை எடுத்தான். அவளைப் பார்த்தான், அவள் முதலில் வியப்பில் வேறெங்கோ திரும்பிப் பார்த்தாள். பின் தொடர்ந்த சிறு சிரிப்புகளால் குலுங்கினாள். தான் கடைசியாக இப்படிக் குலுங்கிச் சிரித்தது எப்போது என்று கூட அவளுக்கு நினைவில்லை.

அவன் அகலமாகப் பல்லைக் காட்டினான், பின்னிருக்கையை நோக்கிச் சைகை செய்தான். தன் பதின்ம வயதில் கூட அவளுக்குக் கார்களின் பின்னிருக்கைகளைப் பிடித்ததில்லை. ஆனால் ஆளரவமே இல்லாத தெருக்களையும், சுற்றி இருந்த சிதிலமான கட்டிடங்களையும் ஒரு முறை பார்த்தாள். பின் கீழிறங்கி, காரின் பின்னிருக்கையை நோக்கிப் போனாள். அவளையே அந்த உறையை அவனுக்கு அணிவிக்க விட்டான், ஆனால் அவளுடைய ஆர்வம் அவனுக்கு வியப்பளித்தது.

கொஞ்ச நேரம் கழித்து, அவர்கள் சேர்ந்து அமர்ந்திருந்தனர், அவனுடைய மேலங்கி அவர்களைப் போர்த்தியிருந்தது, அதற்குள்ளேயே மறுபடி ஆடைகளை அணிந்து, கிட்டத்தட்ட அன்னியர்களாக விருப்பமில்லாமல் இருந்தனர் இருவரும். குழந்தையைக் கைகளில் ஆட்டும் சைகையைச் செய்து அவளைப் பார்த்தான் அவன்.

அவள் எச்சிலை விழுங்கினாள், தலையை ஆட்டி மறுத்தாள். அவனிடம் தன் குழந்தைகள் இறந்ததை எப்படிச் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.

அவளுடைய கையை எடுத்துக் கொண்டான், தன் சுட்டு விரலால் அதில் ஒரு சிலுவையை வரைந்தான், பின் மறுபடி குழந்தையை ஆட்டும் சைகையைச் செய்தான்.

அவள் ஆமோதித்துத் தலையசைத்தாள், பின் மூன்று விரல்களை நீட்டிக் காட்டினாள், திரும்பிக் கொண்டாள், பெருகிய நினைவுகளை இறுக்கி மூடி விட முயன்றவளாய். இப்போது வளர்ந்து வரும் குழந்தைகள்தாம் பரிதாபத்துக்குரியவர்கள் என்று இதற்குமுன் தன்னைத் தானே தேற்றிக் கொண்டிருந்தாள். அவர்கள் கணவாய்கள் போன்றிருந்த நகர மையத்தின் தெருக்களில் ஓடும்போது அங்கு பெரும் கட்டிடங்கள் முன்பு இருந்தன என்பதைச் சற்றும் ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள், அல்லது அவை அங்கு எப்படி வந்தன என்று சிறிதும் அறிய மாட்டார்கள். இன்றைய குழந்தைகள் புத்தகங்களைச் சேகரித்து நெருப்பில் எரிக்க மரக்கட்டைகளோடு இன்னொரு பொருளாகப் பயன்படுத்துவார்கள். சிம்பன்ஸி குரங்குகளைப் போல ஊளையிட்டுக் கொண்டு நகரப்பெருவீதிகளில் ஓடித் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இனி இப்போது இருப்பது போலத்தான் என்றும் இருக்கப் போகிறார்கள்.

அவன் தன் கையை அவள் தோள் மேல் வைத்தான், அவள் திடீரெனத் திரும்பினாள், அவனுடைய சிறு பெட்டியைத் துழாவித் தேடினாள், அவனை மறுபடி அவளோடு உறவு கொள்ள ஊக்குவித்தாள். அவனால் அவளுக்கு மறதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்க முடிந்தது. இதுவரை, வேறெதுவும் அதைச் செய்ய முடிந்ததில்லை. இதுவரை, ஒவ்வொரு நாளும் அவளை அந்தச் செயலுக்கு அருகில் நகர்த்திக் கொண்டு வந்தது, எதைச் செய்யாமலிருப்பதற்காக அவள் வீட்டை விட்டு வெளியே வந்து பயணம் மேற்கொண்டாளோ; அதுதான் துப்பாக்கியை வாய்க்குள் வைத்துக் கொண்டு விசையை இழுப்பது.

அப்ஸிடியனைத் தன் வீட்டுக்கு வருவானா, வந்து தன்னோடு தங்குவானா என்று அவள் கேட்டாள்.

அது புரிந்ததும், அவன் கொஞ்சம் ஆச்சரியப்பட்டான், மகிழ்ச்சியும் அடைந்தான். ஆனால் அவன் உடனே பதில் சொல்லவில்லை. கடைசியில் அவன் மறுத்துத் தலையை ஆட்டினான், அப்படித்தான் சொல்வானென்று அவள் பயந்தபடியே ஆனது. ஒருவேளை அவன் இப்படி போலிஸ்காரனாகக் கொள்ளையரைத் துரத்துவதில் நிறைய சந்தோஷமடைந்தானோ என்னவோ, கூடவே இப்படி நிறைய பெண்களையும் அவனால் அடைய முடிந்திருக்கலாம்.

அவள் ஏமாற்றத்தோடு ஆடைகளை அணிந்து கொண்டாள், அவன் மேல் ஏதும் கோபம் கொள்ளவும் அவளுக்கு இயலவில்லை. ஒருவேளை அவனுக்கு ஏற்கனவே ஒரு மனைவியும், வீடும் இருந்தனவோ என்னவோ. அது சாத்தியமாக இருக்கவே வாய்ப்பதிகம். அந்த நோய் பெண்களை விட, ஆண்களைத்தான் தீவிரமாகத் தாக்கியது- ஆண்களைத்தான் அதிகமும் கொன்றது, பிழைத்த ஆண்களும் கடுமையாகச் சேதப்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள். அப்ஸிடியன் போன்ற ஆண்கள் மிக அரிதாகவே இருந்தார்கள். பெண்கள் தம் தகுதிக்குக் கீழானவரை ஏற்றுக் கொண்டார்கள், அல்லது தனியராக இருந்தார்கள். அவர்கள் ஒரு அப்ஸிடியனைக் கண்டு பிடித்தால், என்ன செய்தால் அவனைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமோ அதைச் செய்தார்கள். அவனை, மேலும் இளையவளும், அழகானவளுமான ஒரு பெண் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று ரை ஊகித்தாள்.

அவள் தன் துப்பாக்கிப் பையின் வார்களை அணிந்து கொண்ட போது அவன் அவளைத் தொட்டான், சில சிக்கலான சைகைத் தொடர் மூலம் அதில் குண்டு இருக்கிறதா என்று கேட்டான்.

அவள் இறுக்கமாகத் தலையசைத்து ஆமோதித்தாள்.

அவளுடைய கையை அவன் மெல்லத் தட்டிக் கொடுத்தான்.

அவள் மறுபடி ஒரு தடவை தன்னுடன் வீட்டுக்கு அவன் வருவானா என்று கேட்டாள், இந்த முறை வேறு விதமான சைகைகளைப் பயன்படுத்தினாள். அவன் முன்பு தயங்கினான், இந்த முறை ஒருவேளை ஏற்கத் தூண்டப்படுவானோ என்னவோ.

ஏதும் மறுவினை சொல்லாமல், கீழே இறங்கி, முன் இருக்கைக்குப் போனான்.

அவள் முன்னிருக்கையில் தன் இடத்தில் மறுபடி அமர்ந்தாள், அவனைக் கவனித்தபடி இருந்தாள். அவன் இப்போது தன் சீருடையைச் சுண்டினான், அவளைப் பார்த்தான். அவள் தன்னிடம் ஏதோ கேட்கிறான் என்று உணர்ந்தாள், ஆனால் என்ன கேட்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.

அவன் தன் இலக்கினையை எடுத்து ஒரு விரலால் தட்டினான், தன் நெஞ்சைத் தட்டினான். ஓ, அதுவா, சரிதான்.
அவள் அவனுடைய இலச்சினையை எடுத்து அதில் தன் கோதுமைச் சின்னத்தை அதில் குத்தி இணைத்தாள். போலிஸ்-கள்ளர் விளையாட்டு விளையாடுவது ஒன்றுதான் அவனுடைய பித்து என்றால் அதை விளையாடிவிட்டுப் போகட்டும் என்று நினைத்தாள். அவனைச் சீருடையோடும், மற்ற எல்லாவற்றோடும் அவள் ஏற்பாள். அப்போது அவளுக்குத் தோன்றியது, நாளாவட்டத்தில் அவன் அவளைச் சந்தித்தது போலவே வேறொரு பெண்ணைச் சந்திப்பான், அவளிடம் அவனை இழக்கவே செய்வாள். ஆனால் கொஞ்ச காலத்துக்கு அவனை அவள் வைத்திருக்கக் கூடும்.

அவன் தெருக்களின் வரைபடத்தை மறுபடி எடுத்தான், தட்டினான், வடகிழக்கு திசையில் குத்துமதிப்பாக பாஸடீனா இருந்த பக்கம் சுட்டினான், அவளைப் பார்த்தான்.

அவள் தோளைக் குலுக்கினாள், அவனுடைய தோளைத் தொட்டாள், தன்னுடைய தோளையும், பிறகு தன் சுட்டு விரலையும், இரண்டாவது விரலையும் இறுக்கி உயர்த்தினாள், இன்னொரு முறை உறுதி செய்து கொள்ள. அவன் அவளுடைய இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துத் தலையசைத்தான். அவன் அவளோடு இருப்பான். அவனிடமிருந்து வரைபடத்தை எடுத்து முகப்புப் பெட்டியில் வீசினாள். பின்னே திரும்பி, தென்மேற்குத் திசையைச் சுட்டினாள்- தன் வீடிருந்த திக்கை நோக்கி. இனி அவளுக்குப் பாஸடீனாவுக்குப் போகத் தேவை இல்லை. அவளுடைய சகோதரனும், இரண்டு மருமான்களும் அங்கே இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருப்பது போதும்- மூன்று வலது கைப் பழக்கமுள்ள ஆண்கள். இனி தான் பயப்படுவது போல தான் தனித்து இருக்கிறவளா இல்லையா என்று அவள் சோதித்துப் பார்க்கத் தேவை இல்லை. இப்போது அவள் தனியானவள் இல்லை.

அப்ஸிடியன் தெற்கு மலைத் தெருவில் திரும்பினான், பின்னர் மேற்கு வாஷிங்டன் தெரு, இன்னொரு நபரோடு வாழ்வது எப்படி இருக்கப் போகிறது என்று யோசித்தவளாய், அவள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள். அவள் சேதங்களிலிருந்து சேமித்தது, தன் பொருட்களில் பாதுகாத்தவை, அவள் உழைத்து வளர்த்தவை என்று பார்த்தால் இருவருக்கும் போதுமான உணவு கையிருப்பாக இருந்தது. நான்கு படுக்கை அறைகள் கொண்ட வீட்டிலோ போதுமான இடம் இருந்தது. அவன் தன் பொருட்களை அங்கு கொண்டு சேர்க்க முடியும். எல்லாவற்றையும் விட நல்ல விஷயம், எதிர் வீட்டில் இருக்கும் மிருகம் இப்போது ஒதுங்கிக் கொள்வான், அவனை அவள் கொல்ல நேரிடாது இனி.

அப்ஸிடியன் அவளைக் கிட்ட இழுத்துக் கொண்டான், அவள் அவனுடைய தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்ட போது, திடீரென அவன் ப்ரேக்கை அழுத்தினான். அவள் இருக்கையிலிருந்து கீழே விழவிருந்தாள், தப்பித்தாள். கண்ணோரத்தில் பார்த்தாள், யாரோ திடீரென சாலையில் காரின் முன் குறுக்கே ஓடியிருந்தார்கள். மொத்த வீதியில் ஒரே ஒரு கார், அதன் முன் ஒருவர் ஓடி இருக்கிறார்.

நிமிர்ந்து உட்கார்ந்த ரை, ஓடியவர் ஒரு பெண் என்று கவனித்தாள். மரச்சட்ட வீடு ஒன்றிலிருந்து ஓடியவள் எதிரே இருந்த அடைத்து மூடப்பட்டு விட்ட கடையை அடைந்திருந்தாள். அவள் மௌனமாக ஓடினாள், ஆனால் ஒரு கணம் கழித்து அவளைப் பின் தொடர்ந்த ஆண், அவளை நோக்கி ஏதோ கூவியபடி ஓடினான், அவை குழறிய சொற்களாக ஒலித்தன. அவன் கையில் ஏதோ இருந்தது. துப்பாக்கி இல்லை. ஒரு கத்தியா, இருக்கலாம்.

அந்தப் பெண் கடைக் கதவைத் திறந்து பார்த்தாள், அது பூட்டப்பட்டிருந்ததை உணர்ந்தாள், கலவரத்தோடு சுற்றிலும் பார்த்தாள், கடைசியாக அங்கு கிடந்த ஒரு கண்ணாடித் துண்டைக் கையிலெடுத்துக் கொண்டாள். அது கடையின் உடைந்த முன் ஜன்னலிலிருந்து விழுந்திருந்த கண்ணாடிச் சில்லு. அதோடு அவள் தன்னைத் துரத்தியவனை எதிர் கொள்ளத் திரும்பினாள். அந்தக் கண்ணாடியால் தன் கையை அவள் வெட்டிக் கொள்ளும் அபாயமே கூடுதல், வேறு யாரையும் அதனால் தாக்கி ஏதும் பயனிராது என்று ரைக்குத் தோன்றியது.

அப்ஸிடியன் காரிலிருந்து குதித்தான், கத்தினான். அவன் குரலை ரை கேட்டது அதுதான் முதல் தடவை- ஆழமாக, கரகரப்பாக இருந்தது, பயன்படுத்தப்படாது வீணான குரல். பேச்சில்லாத மனிதர் செய்வது போல அதே ஒலியை மறுபடி மறுபடி அவன் எழுப்பினான், ‘டா, டா, டா!’

அப்ஸிடியன் அந்த இருவரை நோக்கி ஓடியபோது ரை காரை விட்டு வெளியே வந்தாள். அப்ஸிடியன் தன் துப்பாக்கியைக் கையிலெடுத்திருந்தான். அச்சத்தோடு, அவளும் தன் துப்பாக்கியைக் கையிலெடுத்து, அதன் பாதுகாப்புக் கொக்கியை விடுவித்தாள். அந்த சம்பவத்தை வேறு யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தாள். அந்த ஆண் அப்ஸிடியனைப் பார்த்தான் என்று ரை கவனித்தாள், அவன் திடீரென்று அந்தப் பெண்ணை நோக்கித் தாவினான். அப்பெண் அவன் முகத்தை நோக்கிக் கண்ணாடியால் குத்தினாள், ஆனால் அவன் அவள் கையைப் பிடித்து விட்டான், அவளை இரண்டு தடவை கத்தியால் குத்தி விட்டான், அதன் பின்னரே அப்ஸிடியனால் அவனைச் சுட முடிந்தது. வயிற்றைப் பிடித்தபடி, இரண்டாக மடிந்து, அவன் கீழே விழுந்தான். அப்ஸிடியன் கத்தினான், பின் ரையை நோக்கி அந்தப் பெண்ணுக்கு உதவுமாறு சைகை செய்தான்.

ரை அந்தப் பெண்ணருகே போனாள், தன் பையில் காயங்களைக் கட்ட உதவும் பாண்டேஜ்களும், ஆண்டிசெப்டிக் களிம்பும் மட்டுமே இருந்தன என்று அவளுக்கு நினைவிருந்தது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு யாரும் உதவி இருக்க முடியாது. அவள் எலும்பைச் சுற்றி வெட்டி அதை அகற்ற உதவும் நீண்ட கத்தியால் குத்தப்பட்டிருந்தாள்.

அப்ஸிடியனைத் தொட்டு அந்தப் பெண் இறந்து விட்டாள் என்பதைத் தெரிவிக்க முயன்றாள். அவன் காயம்பட்டிருந்த ஆணைச் சோதிக்கக் குனிந்திருந்தான், அவனும் இறந்தவனாகத் தெரிந்தான். ஆனால் ரை என்ன சொல்கிறாள் என்று கவனிக்க அப்ஸிடியன் திரும்பியபோது, அந்த ஆண் கண்ணைத் திறந்தான். முகம் கோணியிருந்த அவன், அப்ஸிடியன் உறைக்குள் போட்டிருந்த துப்பாக்கியை உருவி அதால் சுட்டான். அப்ஸிடியனின் பொட்டில் துளைத்தது குண்டு, அவன் கீழே வீழ்ந்தான்.

அது அத்தனை எளிதாக, அவ்வளவு வேகமாக நடந்து விட்டிருந்தது. ஒரு வினாடி கழித்து, ரை அந்த மனிதன் அவளை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பிக் கொண்டிருக்கையில், அவனைச் சுட்டாள்.

ரை இப்போது மறுபடியும் தனியானவளானாள்- மூன்று பிணங்களோடு.

உலர்ந்த கண்களோடு, சுருங்கிய முகத்துடன், ஏன் திடீரென்று எல்லாம் இப்படி மாறிப் போயிற்று என்று புரிந்து கொள்ள முயல்பவளாய், ரை அப்ஸிடியனருகே மண்டியிட்டு உட்கார்ந்தாள். அப்ஸிடியன் போய் விட்டிருந்தான். அவன் இறந்து அவளை விட்டுப் போய் விட்டான் – மற்ற எல்லாரையும் போலவே.

இரண்டு சிறு குழந்தைகள் அந்த ஆணும் பெண்ணும் வெளியே ஓடி வந்த வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். ஒரு பையன், பெண்- மூன்று வயதிருக்கலாம் – கைகளைக் கோர்த்துக் கொண்டு தெருவைக் கடந்து ரையை நோக்கி வந்தனர். அவளை உற்றுப் பார்த்தனர், பின் ஒதுங்கி அவளைத் தாண்டிப் போய் இறந்த பெண்ணருகே சென்றனர். கீழே கிடந்த பெண்ணின் கையைப் பிடித்து அந்தச் சிறுமி உலுக்கினாள், அவளை எழுப்ப முயற்சிப்பது போல.

இது மிக மோசம். ரை எழுந்தாள், துக்கமும், கோபமுமாகப் பொங்கி, அவள் வயிறு கலங்கியது. அக்குழந்தைகள் அழத் துவங்கினால், தனக்கு வாந்தி வரும் என்று நினைத்தாள்.

இந்த இரண்டு குழந்தைகளும் இனி அவர்களாகப் பிழைக்க வேண்டியதுதான். அங்கிங்கு எதையாவது பொறுக்கித் தின்று உயிர் பிழைக்கக் கூடிய வயதினர்தான். அவளுக்கு இனி மேன்மேலும் துக்கம் தாங்காது. முன்பின் தெரியாதவர்களின் குழந்தைகள் அவளுக்கினி வேண்டாம், அதுவும் முடியில்லாத சிம்பன்ஸிக் குரங்கு போன்ற குழந்தைகள் வேண்டவே வேண்டாம்.

அவள் காருக்குத் திரும்பினாள். குறைந்தது தன் வீட்டிற்கு அவள் காரை ஓட்டிச் செல்லலாம். எப்படிக் காரோட்டுவது என்று அவளுக்கு நினைவிருந்தது.

அப்ஸிடியனை முறையாகப் புதைக்க வேண்டும் என்பது அவளுக்கு காரைத் தொடுமுன் புலப்பட்டது, அவள் வாந்தி எடுக்கவே செய்தாள்.

தனக்கென ஒரு ஆணை அவள் கண்டாள், அத்தனை துரிதமாக அவனை இழந்தும் விட்டாள். ஏதோ நிம்மதியான ஒரு நிலையிலிருந்து தான் திடீரென்று பிடித்திழுக்கப்பட்டு, விளக்க முடியாதபடி கடுமையாக உதைத்து நொறுக்கப்பட்டது போலிருந்தது அவளுக்கு. அவளுடைய தலை குழப்பத்திலிருந்து விடுபடவில்லை, அவளால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை.

எப்படியோ அவனை நோக்கி மறுபடி போகுமாறு தன்னை ஆக்கிக் கொண்டாள். தான் அவனருகே மண்டியிட்டிருப்பதை அவள் புரிந்து கொண்ட போது, அங்கே எப்படி வந்து மண்டியிட்டோம் என்பதே அவளுக்கு நினைவு வரவில்லை. அவனுடைய முகத்தை, தாடியை மெதுவாகத் தடவினாள். இருவரில் ஒரு குழந்தை ஏதோ ஒலி எழுப்பியது, அவள் அவர்களைப் பார்த்தாள், அந்தப் பெண்ணையும் பார்த்தாள், அக்குழந்தைகளின் தாயாக அவள் இருந்திருக்கக் கூடும். பயந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது, அக்குழந்தைகள் அவளை நோக்கினர். ஒருவேளை அவர்களின் பயம்தான் அவளுக்கு இறுதியில் வந்தடைந்தது போலும்.

அவர்களை அப்படியே விட்டு விட்டு அவள் காரை ஓட்டிச் செல்லவிருந்திருக்கிறாள். நடக்க மட்டுமே தெரிந்த இரு சிறாரை தவிப்பில் விட்டு இறக்க விட்டு விட்டு அவள் போகவிருந்தாள். அத்தனை சாவுகள் நடந்தது போதாதா என்ன? அந்தக் குழந்தைகளை அவள் தன் வீட்டுக்குத்தான் அழைத்துப் போக வேண்டி இருக்கும். வேறெந்த முடிவுடனும் அவளால் இனி நிம்மதியாக வாழ முடியாது. மூன்று உடல்களைப் புதைக்க ஏற்ற இடம் இருக்கிறதாவெனச் சுற்று முற்றும் அவள் பார்த்தாள். கொலை செய்தவன் அவர்களுடைய அப்பாவோ என்று யோசித்தாள். ”பெரும் மௌனம்” துவங்குமுன், காவல் துறையினர் எப்போதும் சொல்லியிருந்தனர், அவர்களுக்கு உதவி தேடி வரும் அவசர அழைப்புகளிலேயே மிக ஆபத்தானவை குடும்பத் தகராறுகள்தான் என்று. அப்ஸிடியனுக்கு அது தெரிந்திருக்கும்- இருந்தாலும் அவனொன்றும் காரிலேயே இருந்திருக்கப் போவதில்லை. அவளையுமே அந்த நினைவு காரிலேயே தங்கி இருக்க விட்டிருக்காது. அந்தப் பெண் கொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொண்டு ஏதும் செய்யாமல் அவளால் இருந்திருக்க முடியாது.

அவள் அப்ஸிடியனைக் காரை நோக்கி இழுத்துப் போனாள். குழி தோண்ட அவளிடம் ஏதும் கருவி இல்லை, தோண்டும்போது அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லை. உடல்களைத் தன்னோடு எடுத்துப் போய், அவளுடைய கணவன், குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்தருகே புதைப்பதுதான் ஆபத்தற்றது. இறுதியில், அப்ஸிடியன் அவளோடு அவள் வீட்டுக்கு வரத்தான் போகிறான்.

காரின் பின்புறத் தளத்தில் அவள் அப்ஸிடியனைக் கிடத்தினாள். அந்தப் பெண்ணின் உடலுக்கு என்று திரும்பினாள். ஒல்லியான, அழுக்கான, வீறு கொண்டவளாகத் தெரிந்த அந்தச் சிறு பெண் எழுந்து நின்றாள், தானறியாமல் ரைக்கு ஒரு பரிசளித்தாள். ரை இறந்தவளின் கரங்களைப் பற்றி இழுக்கத் துவங்கியபோது, அந்தச் சிறு பெண் வீறிட்டாள்,”வேண்டாம்!”

ரை உடலைப் போட்டாள், அந்தப் பெண்ணை அதிசயித்து உற்றுப் பார்த்தாள்.

“வேண்டாம்!” அந்தப் பெண் மறுபடி கத்தினாள். அந்த உடலருகே வந்து நின்றாள். “போ இங்கிருந்து!” என்றாள் ரையிடம்.

“பேசாதே!” என்றான் அந்தப் பையன் அச் சிறுமியிடம். அந்த ஒலிகளில் சிறிதும் குழறலோ, குழப்பமோ இல்லை. இரண்டு குழந்தைகளும் பேசினர், ரையும் புரிந்து கொண்டிருக்கிறாள். அந்தப் பையன் இறந்த கொலைகாரனைப் பார்த்தான், அவனிடமிருந்து விலகிப் போனான். அவன் சிறுமியின் கையைப் பற்றினான், “பேசாமலிரு!” என்று ரகசியக் குரலில் சொன்னான்.

சரளமான பேச்சு! அந்தப் பெண் இறந்ததற்குக் காரணமே அவளால் பேச முடிந்தது, அவள் அக்குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தாள் என்பதா?அவள் கொல்லப்பட்டதற்குக் காரணம் ஒரு கணவனின் புண்ணான புத்தியில் எழுந்த கோபமா அல்லது ஒரு அன்னியனின் பொறாமையால் எழுந்த வெறியா? அந்தக் குழந்தைகள்…. நிச்சயம் வியாதியின் பேரலைக்குப் பின் பிறந்திருக்க வேண்டும். அப்படியானால் அந்த வியாதியின் வெள்ளம் ஓய்ந்து விட்டதா? அல்லது இந்தக் குழந்தைகள் வியாதிக்கு எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்களா? இவர்களும் நோய்ப்பட்டு, மௌனமாக்கப்படத் தேவையான நேரம் இருந்திருக்கிறதே. ரையின் புத்தி பெரும் தாவலில் முன்னேகியது. மூன்று அல்லது நான்கு வயதுக்குக் கீழிருந்த குழந்தைகள் ஒருவேளை மௌன நோயால் பாதிக்கப்பட மாட்டாதவர்களா? அவர்களால் மொழியைக் கற்றுக் கொள்ள முடியுமா? அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஆசிரியர்கள்தானா? ஆசிரியர்களும், காத்துப் பராமரிக்கக் கூடியவர்களும்தான்.

ரை இறந்து கிடந்த கொலைகாரனைப் பார்த்தாள். அவன் யாராக இருந்தாலும், என்ன மாதிரி உணர்ச்சி வேகங்கள் அவனை விரட்டி இருக்க வேண்டும் என்று தனக்குப் புரிகிறதென்று அவள் நினைத்தாள், அவளுக்கு இந்த நினைப்பு வெட்கத்தையே தந்தது என்றாலும் கூட. கோபமோ, சலிப்போ, நம்பிக்கையின்மையோ, புத்தியைக் கலக்கும் பொறாமையோ… அவனை மாதிரி, தம்மால் அடைய முடியாதது என்பதால் எதையும் அழிக்கத் தயாராக இருப்பவர்கள்-இன்னும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

அப்ஸிடியன் ஒரு காவலன், அந்த வேலையை அவன் என்ன காரணத்தாலோ தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தான். ஒருக்கால் அந்த அர்த்தமிழந்து போன சீருடையை அணிந்து கொண்டு, காலியான தெருக்களைப் பாரா கொடுத்துக் கொண்டு இருப்பதை அவன் தேர்ந்தெடுக்கக் காரணம் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து விசையை இழுப்பதை விட அது மேலானது என்பதாலோ என்னவோ. ஆனால் இப்போது நிஜமாகவே காபந்து செய்வதற்கு உருப்படியான ஒன்று கிட்டியிருக்கிற வேளையில் அவன் போய்ச் சேர்ந்து விட்டான்.

அவள் ஒரு ஆசிரியையாக இருந்திருக்கிறாள். அதுவும் மிக நல்ல ஆசிரியை. அவள் ஒரு காவலாளியாகவும் இருந்திருக்கிறாள், ஆனால் அவள் தன்னை மட்டும்தான் காப்பாற்றிக் கொண்டிருந்தாள். உயிரோடு இருக்க ஒரு காரணமும் இல்லாத போது உயிரோடு இருந்திருக்கிறாள். அந்த நோய் இந்தக் குழந்தைகளை உயிரோடு விட்டு வைத்திருந்தால், அவள் அவர்களைக் காப்பாற்றி உயிர் பிழைத்திருக்க உதவுவாள்.

அவள் எப்படியோ அந்தப் பெண் உடலைக் கைகளில் தூக்கினாள், உடலைக் காரின் பின்னிருக்கையில் கிடத்தினாள். குழந்தைகள் அழத் துவங்கினார்கள், ஆனால் அவள் அவர்களருகே உடைந்திருந்த நடைபாதையில் மண்டியிட்டு அமர்ந்தாள், வெகுநாட்களாகப் பயன்படுத்தாததால் கடுமையாக ஒலிக்கப் போகிற தன் குரலைக் கேட்டு அவர்கள் பயப்படாமல் இருப்பதற்காக, அவர்களிடம் தணிந்த குரலில் ரகசியமாகப் பேசினாள்.

“எல்லாம் சரியாகி விடும்,” அவள் அவர்களிடம் சொன்னாள். “நீங்களும் என்னோடு வரப் போகிறீர்கள், வாங்க.”

ஒவ்வொரு கையிலும் ஒருவராக அவர்களைத் தூக்கிக் கொண்டாள். அவர்கள் அத்தனை இலேசாக இருந்தார்கள். அவர்களுக்குச் சாப்பிடப் போதுமான உணவு கிட்டியிருக்கவில்லையோ?

அந்தப் பையன் அவள் வாயைத் தன் கையால் மூடினான், ஆனால் அவள் தன் முகத்தை நகர்த்திக் கொண்டாள். “நான் பேசினால் அது பரவாயில்லை,” அவர்களிடம் சொன்னாள். “சுத்தி யாரும் இல்லாதபோது, அதனால் தப்பில்லை.” பையனை முன்னிருக்கையில் அமர்த்தினாள், அவள் சொல்லாமலேயே அவன் நகர்ந்து அந்தச் சிறுமிக்கு இடம் விட்டான். இருவரும் காரில் அமர்ந்த பின், ரை ஜன்னலருகே சாய்ந்து கொண்டாள், அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள், இப்போது அவர்கள் அத்தனை பயப்படவில்லை என்பதைக் கவனித்தாள், அவளைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பயம் இருந்த அளவுக்குப் புரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்தது என்பது தெரிந்தது.

”நான் வாலெரி ரை,” அவள் சொன்னாள், சொல்லும்போதே வார்த்தைகளை ருசித்தபடி. “நீங்கள் என்னிடம் பேசுவதில் தவறில்லை, நல்லதுதான்.”

(தமிழாக்கம்: மைத்ரேயன்)

***

Butler
ஆக்டேவியா பட்லர்

இக்கதைக்கு ஆக்டேவியா பட்லரின் பின்னுரை : 

”பேச்சொலிகள்” கதை சோர்விலும், மன இருண்மையிலும், சோகத்திலும் இருந்து பெறப்பட்டது. கதையைத் துவக்கும்போது மனித ஜீவராசியின்பால் சிறிதும் இஷ்டமோ, அல்லது சிறிது நம்பிக்கையோ கூட இல்லாதிருந்தேன், ஆனால் முடிக்கும் தருவாயை எட்டிய போது என் நம்பிக்கை திரும்பி இருந்தது. அது எப்போதுமே அப்படித்தான் செய்கிறது. “பேச்சொலிகள்” கதையின் பின்னே உள்ள கதை இதுதான்.

1980களின் துவக்கத்தில், என் நல்ல தோழி ஒருத்தி தான் எலும்புச் சோற்றுப் புற்று நோயால் இறக்கப் போவதை அறிந்தாள். அது மிக ஆபத்தானதும், வலி கொடுப்பதுமான புற்று நோய் வகை. அதற்கு முன்பு பல முதிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் இறந்ததால் இழப்பை அனுபவித்திருக்கிறேன், ஆனால் என் சொந்த நட்பில் யாரையும் இழந்திருக்கவில்லை. ஒப்பீட்டில் இளம் வயதினளான தோழி ஒருத்தி மெதுவாகவும், மிக்க துன்பத்தோடும் வியாதியால் இறப்பதை நான் முன்னால் பார்த்திருக்கவில்லை. என் தோழிக்கு ஒரு வருடம் ஆயிற்று இறக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரைப் பார்க்கப் போவதை என் வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். நான் எழுதிக் கொண்டிருந்த நாவல் ஒன்றின் சமீபத்தைய அத்தியாயம் ஒன்றைக் கையிலெடுத்துப் போவதும் வழக்கம். ‘க்ளேயின் தோணி’ என்ற நாவல் அது. நோயும், சாவும் பற்றிய கதை கொண்ட அது, இந்த கட்டத்தில் வாசிக்கச் சிறிதும் பொருத்தமில்லாதது. ஆனால் என் தோழி எப்போதுமே என் நாவல்களைப் படித்திருப்பவள். இதையும் படிக்க வேண்டுமென்று அவள் வற்புறுத்தினாள். அந்த நாவலை முழுமை பெற்ற வடிவில் படிக்கத் தேவையான நாட்கள் வரை அவள் உயிரோடு இருப்பாள் என்று நாங்கள் இருவருமே நம்பவில்லை என்று நான் ஐயப்படுகிறேன் – ஆனால் இருவருமே அதைப் பற்றிப் பேசவில்லைதான்.

அவளைப் பார்க்கப் போவதை நான் வெறுத்தேன். அவள் ஒரு நல்ல மனுஷி, நான் அவளை நேசித்தேன், அவள் இறப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதையோ? நான் அதை வெறுத்தேன். இருந்தாலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் ஒரு பஸ்ஸில் ஏறி – நான் கார் ஓட்டுவதில்லை- மருத்துவ மனையில் அவளிருந்த அறைக்கோ, அல்லது அவளது அடுக்ககத்துக்கோ நான் போனேன். அவள் மெலிந்து கொண்டே போனாள், நலிந்தபடி இருந்தாள், வலி தாங்காமல் சண்டை போடும் மனோபாவத்தோடு இருந்தாள். என் மனம் மேன்மேலும் இருண்டது.

ஒரு சனி அன்று, கூட்டமான, வாடை நிறைந்த பஸ்ஸில் அமர்ந்திருந்தேன், என் உள்நோக்கி வளைந்த நகத்தால் உபாதையுற்ற கால் பெருவிரல் மீது யாரும் மிதிக்காமல் கவனித்தபடி, மோசமான விஷயங்களைப் பற்றி எண்ணாமல் இருக்க முயன்று கொண்டிருந்தேன். என் எதிரே ஏதோ குழப்பம் உருவாவதைக் கவனித்தேன். ஒருவன் இன்னொரு மனிதன் தன்னைப் பார்க்கும் விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்று முடிவு கட்டி இருந்தான். சிறிதும் பிடிக்கவில்லையாம்! அப்படிக் கூட்டத்தில் பிதுங்கிக் கொண்டிருக்கையில் எங்கே பார்ப்பது என்பது ஒன்றும் அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை.

இடிபாட்டில் சிக்கியவன் தான் கெட்டதாக ஒன்றும் செய்யவில்லை என்று வாதிட்டான் – அவன் ஏதும் செய்திருக்கவில்லைதான். ஒரு மோசமான நிலை உருவாகி அதில் தான் சிக்குவதைத் தவிர்க்க முயல்பவன் போல, வெளி வாயிலை நோக்கி மெல்ல நகர்ந்தான். ஆனால், திரும்பினான், மறுபடி அந்த வாதத்தில் நுழைந்து அதில் ஈடுபட்டான். அவனுடைய கௌரவம் பாதிக்கப்பட்டிருந்தது போலும். ஓடிப்போகிறவனாக அவன் ஏன் இருக்க வேண்டும்?

இந்த முறை முதல் நபர், தன் பெண் துணையைத்தான் – அவனுக்கு அடுத்து அவள் அமர்ந்திருந்தாள்- இன்னொருவன் மோசமான முறையில் பார்த்ததாகத் தீர்மானித்தான். எனவே தாக்குதலில் இறங்கினான்.

சண்டை சுருக்கமாக, ரத்தக் களரியாக இருந்தது. மற்றப் பயணிகளான நாங்கள் எல்லாம்- ஒதுங்கினோம், கத்தினோம், அடிபடாமல் இருக்க முயன்றோம், தாக்கியவனும், அவனுடைய பெண் தோழியும், தள்ளிப் பிடித்துப் பஸ்ஸை விட்டு வெளியேறினார்கள், பஸ் ட்ரைவர் போலிஸைக் கூப்பிட்டு விடுவார் என்ற பயமாயிருக்கும். கௌரவம் பார்த்த அந்த நபர், தொய்ந்தான், ரத்தம் சொட்டியது, மயங்கியவனாகத் தெரிந்தான், என்ன நடந்தது என்று புரியாதவனாகச் சுற்று முற்றும் பார்த்தான்.

நான் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தேன், முன்னெப்போதையும் விட மனம் இருண்ட நிலையிலிருந்தேன், அந்த மொத்த சம்பவத்தை, நம்பிக்கையைச் சிதைக்கும், முட்டாள்தனமான சம்பவத்தை வெறுத்தேன், மனிதப் பிறவிகள், முட்டிகளை ஒருவர் மீது ஒருவர் பயன்படுத்தாமல், எப்போதாவது அறிவு முதிர்ந்தவர்களாக வளர்ந்து, ஒருவரோடொருவர் புரியும் வகையில் தொடர்பு கொள்ளக் கற்பார்களா?

அப்போது ஒரு வேளை கதையாகக் கூடிய ஒன்றின் முதல் வரி எனக்குத் தோன்றியது: ‘வாஷிங்டன் நிழல்வீதி பஸ்ஸில் பிரச்சினை எழுந்தது.

***

ஆசிரியர் பற்றிய குறிப்பு:

octavia butler

ஆக்டேவியா பட்லர் (1947-2006) கலிஃபோர்னியா மாநிலத்தில் பாஸடீனா என்கிற நகரில் பிறந்து வளர்ந்து, வாஷிங்டன் மாநிலத்தின், பெருநகரமான ஸியாட்டிலில் இறந்தார். இவர் ஆஃப்ரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த பெண். அறிவியல் நவீனத் துறையில் அந்த இனத்தவருக்கு முன்னோடி இவர். இவரது அடிகளைப் பின்பற்றி 21ஆம் நூற்றாண்டில் அந்த இனத்தைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் அறிவியல் நவீனங்களை எழுதத் துவங்கி இருக்கிறார்கள்.

நெடுங்காலம் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஒரு மக்கள் சமூகத்தின் அனுபவங்களிலிருந்து ஊறி எழும் கலை, கதைகள் எப்படி மனித நாகரீகத்தின் எதிர்காலம் குறித்த ஊகங்களால் கட்டப்படும் நவீனத்துக்கு உதவும் என்பதை நன்கு யோசித்து எழுதியதோடு, அந்த வகைப் புரிதலைத் தனது சிக்கலில்லாத தெளிந்த நடையின் மூலம் உடனடியான உணர்வுத் தாக்கத்தோடு கொடுத்தவர் ஆக்டேவியா.

1996 இல் சிறப்பான மேதமையை வெளிப்படுத்திய சிந்தனையாளர்களுக்கு வழங்கப்படும் மக் ஆர்தர் அறக்கட்டளையின் மானியம் ஒன்று இவருக்குக் கொடுக்கப்பட்டது. அதற்குள் இவர் மூன்று நாவல் வரிசைகளான புத்தகங்களை எழுதி இருந்தார். அவை:

seed_to_harvest

1. ’பாணி அமைப்பாளர்கள்’ நாவல் வரிசை (1976-84)- ’Patternist’ series; இந்த வரிசையில் உள்ள நான்கு நாவல்களும் ‘Seed To Harvest’ என்ற தலைப்பில் ஒரே புத்தகமாகக் கிடைக்கின்றன. இவை பற்றிய ஒரு விமர்சனமும், இதர விவரங்களும் இங்கே கிட்டும்.

liliths_brood

2. அன்னிய ஜனிதம் (Xenogenesis- 1987-1989) இந்த வரிசை நாவல்கள் மூன்றும் ‘Lilith’s Brood’ என்ற தலைப்பில் ஒரே புத்தகமாகக் கிடைக்கின்றன. இந்த மூன்று நாவல்கள்-Dawn, Adulthood Rises, Imago ஆகியன பற்றிய ஒரு வாசக/ விமர்சகரின் பார்வைகள் இங்கு மூன்று கட்டுரைகளாகக் கிட்டுகின்றன.

http://www.tor.com/blogs/2009/09/octavia-butler-re-read-dawn
http://www.tor.com/blogs/2009/10/negotiating-difference-in-octavia-butlers-lemgadulthood-riteslemg
http://www.tor.com/blogs/2009/10/playing-human-in-octavia-butlers-lemgimagolemg

3. ஆக்டேவியாவின் அடுத்த வரிசை நாவல்களைத்தான் நான் முதலில் நூலகம் ஒன்றில் கண்டறிந்தேன். இந்த வரிசை முடிவு பெறாமல் இரண்டு புத்தகங்களோடு நிற்கிறது. உபமானக் கதைகள் இந்தியப் பாரம்பரியத்தில் நிறைய உண்டு. நீதி அல்லது அறக் கருத்துகளைச் சொல்ல இந்த வகைக் கதைகள் பயன்படுத்தப்படும். இந்தப் பாரம்பரியம் கிருஸ்தவத்திலும் இருக்கிறது. ஆஃப்ரிக்க பழங்குடிப் பண்பாடுகளிலும் இது உண்டு என்று தெரிகிறது. உபமானக் கதைகளை இங்கிலீஷில் Parable என்று சொல்கிறார்கள். விவிலியத்தில் பல அத்தகைய கதைகள் உண்டு என்று தெரிந்திருக்கலாம். இந்தியாவில் ராமகிருஷ்ணரின் நீதிக் கதைகள் இந்த மரபில் வருபவை.

parable-of-sowerparable-of-talents

இந்த வரிசைப் புத்தகங்களில் ஒன்று ‘Parable of Sower (1993) இன்னொன்று ‘Parable of the Talents’ (1998) இரண்டுமே விவிலியக் கதைகளின் சொற்களோடு உறவு கொண்டவை. ஆனால் கிருஸ்தவத்தை ஒதுக்கி மேலும் மூலாதாரக் கேள்விகள் மூலம் யார் மனிதர், எது மனிதம் என்பன போன்ற எளிய ஆனால், பதிலளிக்கக் கடினமான கேள்விகளை எழுப்பி விடை காண முயலும் புத்தகங்கள். இவற்றின் மையத்தில் ஒரு இருண்ட உலகம் இருக்கிறது. துர்க் கனவுலகுகள் (Dystopia) என்ற வகை நாவல்கள் அறிவியல் நவீனங்களில் நிறையவே இருக்கின்றன. இந்த நாவல்கள் ஒரு துர்க்கனா போன்ற உலகில் துரும்பாக அல்லாடும் மனிதர்கள் எப்படிச் சிறுகச் சிறுக மனிதத்தை மீட்க முயல்கிறார் என்பதை மையமாக வைத்துக் கட்டப்படுவன. ஆக்டேவியா இந்த வகை நாவல்களில் சில வேறுபாடுகளைக் கொணர்ந்து தனக்கான பாதையை வகுத்திருந்தார் என்று பாராட்டப்படுபவர்.

தனது இறுதி பத்து வருடங்களில் ஐந்தை எதையும் எழுத முடியாத சோர்வில் கழித்தார் ஆக்டேவியா. பின்னர் பிரசுரித்த புத்தகங்கள் எல்லாமே நோய்ப்பட்ட மானுடம், அல்லது பேரழிவிலிருந்து மீள முயலும் மானுடம் என்பன போன்ற கருதுபொருட்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆக்டேவியாவின் கடைசி நாவல்களில் பலவற்றிலும் காணப்படும் ஒரு விசேஷத் தன்மை அதில் வரும் நாயகியருக்கு சக மனிதரை விடப் பன்மடங்கு ஒற்றுணர்வு அல்லது உணர்வு இயைபுத் தன்மை (Empathy) இருக்கிறது. இது ஒரு புறம் அசாதாரணமான நன்மைகளைக் கொடுத்தாலும், இன்னொரு புறம் பெரும் விலங்கைப் பூட்டிக் கொண்டது போலவும் ஆக்கும் குணம். இதன் வழியே இந்த மையப் பாத்திரங்கள் எப்படித் தம்மையும், தம்மைச் சார்ந்தவரையும் கடைத்தேற்றுகிறார்கள் என்பதை இந்நாவல்கள் மிகக் கருக்காகச் சித்திரிக்கின்றன என்று விமர்சகர்களும், தேர்ந்த வாசகர்களும் கருதுகிறார்கள்.

ஆக்டேவியா திடீரென்று இறந்தார் என்றாலும் கடைசி வருடங்களில் அவர் ரத்தக் கொதிப்பு நோயால் அவதிப்பட்டாரென்று தெரிகிறது.

நியுயார்க் டைம்ஸ் பத்திரிகைக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் 2000 ஆவது ஆண்டில் அவர் சொன்னதாகத் தெரிவது இது.

“நாம் இயற்கையாகவே அடுக்கு அமைப்பாக இருக்கும் ஜீவராசி. நான் இதையெல்லாம் என் நாவல்களில் சொல்லும்போது, அன்னியர் என்றெல்லாம் கதை கட்டுகிறேன் என்பது இருக்கிறது, ஆனால் மனித குணத்தின் சாரத்தைப் பற்றி நான் சொல்வது புனைகதை அல்ல.”

***         ****           ***

0 Replies to “பேச்சொலிகள்”

  1. அற்புதமான சிறுகதை. கதையின் களம் I am Legend திரைப்படத்தை நினைவு படுத்தியது. டந்த சில மாதங்களில் நான் படித்தவற்றில் மிகச் சிறந்த சிறுகதை என்று சொல்லலாம். அன்றாடம் காணும் மனிதர்களின் கொடூர குணங்களின் நீட்சியாக, ஒரு அறிவியல் புனைகதையாகவும் எழுதப்பட்டிருக்கிறது. நிகழ்வுகளும் மனிதர்களின் எதிர்வினைகளும் realistic ஆகவும், விளக்கங்கள், சம்பவங்கள் வலிந்து திணிக்கப்படாமல், ஒரே flow இல் தொடர்ந்து செல்லும்படியான தடையற்ற எழுத்து நடை. அந்நியமாகத் தோன்றாத மொழிபெயர்ப்புக்கும் பாராட்டுக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.