பூங்காக்களின் தொடர்ச்சி: ஹுலியோ கோர்தஸார்

அவன் நாவலைச் சில நாட்களுக்கு முன் தான் படிக்கத் தொடங்கிருந்தான்.அவசரமான தொழில் கலந்துரையாடல்கள் காரணமாக அதை விட்டுவிட்டு, ஜமீனிற்கு ரயிலில் திரும்பி வரும்போதுதான் மீண்டும் படிக்கத் தொடங்கினான். நாவலின் கதாபாத்திரச் சித்திரிப்பின் மீதும் கதை அம்சத்தின் மீதும் மெதுவாக வளரும் ஓர் ஆர்வத்த்தை தன்னுள் வர அனுமதித்தான். பகராள் செயலுரிமைக் கடிதம் ஒன்றை எழுதி, ஜமீன் நிர்வாகியுடன் கூட்டுடைமை விசயம் பற்றிக் கலந்தாலோசித்த பின், அந்தப் பிற்பகலில், கருவாலிகள் கொண்ட பூங்காவை நோக்கியிருக்கும் தனது ஆய்வறையின் ஆழ்ந்த அமைதியில் புத்தகத்திற்கு மீண்டும் திரும்பினான். பின்புறம் கதவு நோக்கியிருக்கும்- இடையீட்டின் சாத்தியத்தைப் பற்றிய ஒரு சிந்தனை கூட அவனுக்கு எரிச்சல் அளித்திருக்கும் – தன்னுடைய பிரியமான கைநாற்காலியில் கை கால்களை நீட்டிக்கொண்டும், அதன் பச்சைப் பட்டுத்துணியாலான உறைமெத்தையை விரல்களால் திரும்பத்திரும்ப வருடிக்கொண்டும், கடைசி அத்தியாயங்களைப் படிக்கத் தயாரானான்.சிரமமே இல்லாமல் கதாபாத்திரங்களின் பெயர்களையும் மனப்படிமங்களையும் நினைவுகூர்ந்தான். நாவல் அதன் கவர்ச்சியை அவன் மீது கிட்டத்தட்ட உடனடியாகப் பரப்பியது. தன்னைச் சுற்றி இருந்த பொருட்களிலிருந்து வரிக்கு வரி விடுவித்துக்கொள்ளும் ஏறக்குறைய வக்கிரமான இன்பத்தைச் சுவைத்தான். மேலும் அதே சமயம் உயர்ந்த முதுகையுடைய நாற்காலியின் பச்சைப் பட்டுத்துணி மீது தனது தலை சுகமாக படிந்திருப்பதையும், சிகெரட்டுகளின் கைக்கெட்டும் அருகாமையையும், பெரிய சன்னல்களுக்கு அப்பால் பிற்பகலின் காற்று பூங்காவிலுள்ள கருவாலி மரங்களுக்குக் கீழே நடனமிட்டுக்கொண்டிருந்ததையும் உணர்ந்தான்.வார்த்தைக்கு வார்த்தை, நாயகன் நாயகி இருவருடைய முட்டுப்பாட்டை ருசித்துக்கொண்டும், படிமங்கள் நிலைகொண்டு நிறத்தையும் அசைவையும் பற்றிக்கொள்ளும் புள்ளியில் தன்னை சுவறிப்போக அனுமதித்துக்கொண்டும், மலைச்சிற்றறையில் நிகழ்ந்த இறுதிச் சந்திப்பிற்கு சாட்சியாளனானான். முதலில் பெண் வந்தாள்,ஐயுற்றஞ்சி; இப்போது காதலன் உள்ளே வந்தான், ஒரு மரக்கிளையின் பின்னடிப்பால் கீறப்பட்ட முகத்துடன். மெச்சத்தக்க விதத்தில், குருதியோட்டத்தை முத்தங்களால் அவள் தடை செய்தாள். ஆனால் அவனோ அவளுடைய தைவரல்களை மறுதவித்தான். உலர்ந்த இலைகளாலும் ஒளிவுமறைவான பாதைகளாலுமான ஓர் உலகால் பாதுகாக்கப்பட்டு இரகசிய மிகுகாமத்தின் சடங்குகளைச் செய்வதற்காக அவன் வரவில்லை. அவனுடைய நெஞ்சிற்கு எதிராக குத்துவாள் தன்னை கதகதப்பாக்கிக்கொண்டிருந்தது. அதன் கீழே விடுதலை இடித்தது,மறைவான நெருக்கத்தில்.ஓர் இச்சை நிறைந்த உரையாடல் பக்கங்களினூடே விரைந்திறங்கியது, பாம்புகளாலான ஒரு ஓடையைப் போல.இவை அனைத்தும் ஊழியிலிருந்து நிர்ணயிக்கப்பட்டது போல் பட்டது.அவனைத் தடுத்து நிறுத்த, அங்கேயே இருந்துவிடச் செய்ய விரும்பும், அவனுடைய உடலின் மீது நெளியும் அவ்வருடல்கள் கூட, அவன் அவசியமாக அழிக்க வேண்டிய அவ்வேற்றுடலின் வடிவத்தை, வெறுக்கத்தக்க வகையில் வரைந்து கொண்டிருந்தன. எதுவும் மறக்கப்படவில்லை: வேற்றிடவாதங்கள், எதிர்பாராத இடையூறுகள், சாத்தியமான தவறுகள், எதுவுமே. இந்த மணி முதல், ஒவ்வொரு நொடியின் பயனும் நுணுக்கமாக நியமிக்கப்பட்டிருந்தது. விவரங்களின் கொடூரமான மீள்-விசாரணை சற்றே தளர்த்தப்பட்டது, ஒரு கை ஒரு கன்னத்தை வருடுவதற்காக. இருள் கவியத் தொடங்கியது.

Julio_Cortazar_Continuity_Of_parks_Fiction_Story

ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல், அவர்களை எதிர்நோக்கியிருந்த பணி மீது இறுக்கமாக நிலைகொண்டு, சிற்றறையின் வாசலில் அவர்கள் பிரிந்தார்கள். வடக்கு நோக்கி செல்லும் தடத்தை அவள் பின்தொடர வேண்டும். அதற்கு எதிர் திசையில் செல்லும் பாதையில், அவன் ஒரு கணம் திரும்பினான், அவிழ்ந்த கூந்தலை பறக்கவிட்டுக்கொண்டு அவள் ஓடுவதை பார்பதற்காக. அதற்குப் பதிலாக, மரங்கள் மற்றும் புதர்களின் மத்தியில் பதுங்கிக்கொண்டு அவனும் ஓடினான், அந்தியின் மஞ்சளான மூடுபனியில், வீட்டிற்கு இட்டுச் செல்லும் மரங்களாலான நிழற்சாலையை வேறுபடுத்திக் காணும் வரையில். நாய்கள் குரைக்க வேண்டும் என்று புனையப்படவில்லை, அவைகள் குரைக்கவும் இல்லை. ஜமீன் நிர்வாகி அந்த நேரத்தில் அங்கே இருந்திருக்க முடியாது, அவர் அங்கு இருக்கவும் இல்லை. அவன் மூன்று தலைவாயில் படிகளை ஏறி உள்ளே நுழைந்தான். குருதியின் மெத்தொலியை மீறி காதுகளில் பெண்ணின் வார்த்தைகள் வந்தடைந்தன: முதலில் ஒரு நீல நிற அறை, அடுத்து ஒரு கூடம், பின்னர் கம்பளமிடப்பட்ட படிக்கட்டுவழி. மேலே, இரண்டு கதவுகள். முதல் அறையில் யாரும் இல்லை, இரண்டாவது அறையில் யாரும் இல்லை. வரவேற்பறையின் கதவு, அதற்குப் பிறகு, கையில் கத்தி, ஓளி பெரும் சன்னல்களிலிருந்து, நாற்காலியின் உயர்முதுகு பச்சை பட்டுத்துணியால் மூடப்பட்டு, நாற்காலியிலே நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் ஆளின் தலை.