பாலியல் வன்முறை – தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருப்புமுனை

மொழியாக்கம்: உஷா வை

டிசம்பர் மாதம்,2012இல், தில்லியில் ஒரு 23 வயது பெண் மருத்துவ மாணவி ஒரு தனியார் வாடகை பஸ்ஸில் 6 ஆண்கள் கொண்ட  கும்பலால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். ஒரு நண்பருடன் சினிமாவைப் பார்த்துவிட்டு இரவு 9 மணியளவில் ஒரு பல அடுக்குக் கடையின் முன்னால் அவர் அந்த பஸ்ஸில் ஏறியிருந்தார். அந்த ஆண்கள் ஒரு இரும்புக் கம்பியால் அவரது  பிறப்பு உறுப்பிலும் குடலிலும் ஏற்படுத்திய பலத்த காயங்களால் 10 நாட்களுக்குப் பின் ஒரு சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏப்ரல் 2013ன் நடுவில், ஒரு 5 வயதுச் சிறுமி அவரது வீட்டு அண்மையில் வசித்துவந்த 23 வயது வாலிபரால் கடத்தப்பட்டு, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டாள். மருத்துவமனையின்  தகவல்களின்படி ஒரு பிலாஸ்டிக் பாட்டிலும் மெழுகுவத்தியும் அவளது பிறப்புறுப்பில் திணித்து நுழைக்கப்பட்டிருந்தன. இந்தக் கொடூரமான நிகழ்வுகள் பொதுமக்களிடமிருந்து உரத்த எதிர்ப்பையும், பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு கோரும் பரந்த போராட்டத்தையும் உருவாக்கியுள்ளன.

Awareness_sex_Crimes_Criminal_Should_be_Punished_Rape

இந்தப் போராட்டங்களின்போது இரண்டு கருத்துகள் திரும்பத் திரும்ப பேசப்பட்டன: அவை, இந்தியாவில் சட்ட நிர்வாகத்தின் போதாமையும், நகரச் சூழலில் பெண்களுக்கு நம்பகமான அளவில் பாதுகாப்பு அளிப்பதில் அரசாங்கத்தின் தோல்வியும். குறிப்பாக, கடுமையான தண்டனைகள் இல்லாமை, கூடவே போலிஸ், நீதி அமைப்புகளின் செயல்முறைகளில் உள்ள திறமையின்மையும், நுட்ப உணவிர்வின்மையும் வெளிக்காட்டப்பட்டன.

வன்புணர்வுக் குற்றங்களைத் தண்டிக்க நடைமுறையில் இருக்கும் சட்டம் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட செயல்முறைகளை மறுபரிசீலனை செய்யவும், அவற்றின் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளைச் செய்யவும் மூன்று அங்கத்தினர் கொண்ட ஆணைக்குழு ஒன்று (ஜஸ்டிஸ் வர்மா கமிஷன்) அவசரமாய் ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அரசாட்சி புரிவதில் தோல்வியே தில்லி வன்புணர்வு சம்பவத்துக்கு அடைப்படைக் காரணம் என்று அடையாளப்படுத்தி, இந்தியாவில் பெணகளுக்குப் பாதுகாப்பான, கண்ணியமான சூழலை உறுதிப்படுத்தும் வகையிலான சட்டம் மற்றும் நீதித்துறை சம்பந்தப்பட்ட சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது.

வன்புணர்வு மற்றும் இதர பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை, புகார்களைப் பதிவு செய்யும்போதும், மருத்துவச் சோதனைகளின்போதும் துரிதமானதும், இருபாலரின் தன்மைகளை அறிந்து, பெண்களின் உணர்வுகளை நுட்பமாகக் கவனித்து மதிக்கும் வழிமுறைகள், குற்றக்கட்டுப்பாட்டுச் செயல்முறைச் சட்டத்தில் மாறுதல்கள் மற்றும் போலிஸ், நீதித்துறைச் செயல்பாடுகளில் சீர்திருத்தங்கள் போன்றவை இவ்வாணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடங்கியவை. இந்தக் குழுவின் பரிந்துரைகள் நவீன சமுதாயத்துக்கான சட்ட ஆட்சிக்கான வரையளவுகளை விதித்தன.

lady_justice-Measure_Law_Order_attorneys_System_Jury_Lawyers

மார்ச் 2013ல் இந்தியப் பாராளுமன்றம் குற்றவியல் சட்டத் திருத்தம் மசோதாவிற்கு (Criminal Law (Amendment) Bill)  அங்கீகாரம் கொடுத்தது. இந்த சட்டத் திருத்தம் இந்தியன் பீனல் கோட், இந்தியன் எவிடன்ஸ் சட்டம், கோட் ஆஃப்  க்ரிமினல் ப்ரொசீஜர் 1973 ஆகியவற்றில் பாலியல் குற்றம் சார்ந்த சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ஆனால் இந்தியாவையும், வேறு சில வளர்ந்துவரும் நாடுகளையும் பற்றி அறிந்த குற்றவியலாளரான எனக்கு, இன்னும் சில கவலைகள் உள்ளன. அவற்றை வரும் பத்திகளில் விளக்குகிறேன். 644 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், இங்கு கவனிக்க ஒரு விஷயம்- குற்றவியல் என்ற பதம் மூன்று முறைகள் மட்டுமே (பக்கங்கள் 108, 156, 159), பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பற்றிய பத்திகளில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் குற்றம் (‘crime in India’) எனப்படும் அதிகாரபூர்வ குற்றப் புள்ளியியலின்படி, 2011ம் வருடம் 24206 பாலியல் குற்றச் சம்பவங்களே புகார்செய்யப்பட்டன. (1 லட்சம் மக்களுள் இருவர். ஒப்பீட்டில், ஐக்கிய அமெரிக்காவின் வன்புணர்வு விகிதமான லட்சத்தில் 26.8 என்பதைவிட, இது மிகக் குறைவான எண்ணிக்கை.)

புகார்செய்யப்பட்ட சம்பவங்களில் 21,093 காவல்துறையால் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 4072க்கு தண்டனை வழங்கப்பட்டது, 11351 வழக்குகள் தள்ளுபடியாயின அல்லது குற்றம் நிரூபிக்கப்படவில்லை, மற்றவை இன்னும் விசாரணைக்காகக் காத்திருக்கின்றன.

இந்தத் தரவுகளின்படி, காவல்துறைக்குப் புகார்செய்யப்பட்ட சம்பவங்களில் 50%க்கும் மேலாகத் தள்ளுபடியாகிவிட்டன, இன்னொரு தரவின்படி விசாரணைக்குக் காத்திருக்கும் வன்புணர்வு வழக்குகள் 74,496. இத்தரவுகள் கீழ்வரும் வினாக்களை எழுப்புகின்றன. வன்புணர்வு வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதின் காரணம், அவை குறைவாகப் புகார் செய்யப்படுவதா, குறைவாகப் பதிக்கப்படுவதா அல்லது இரண்டும் சேர்ந்ததா? தள்ளுபடி விகிதம் இத்தனை அதிகம் இருப்பது ஏன்? விசாரணைக்குக் காத்துத் தேங்கியிருக்கும் வழக்குகள் இத்தனை அதிகமாய் இருப்பது ஏன்?

இவை அனைத்துமே, துயருக்குள்ளானவர்கள் பெண்கள் என்பதால், மிகக்கொடுமையான குற்றமிது என்றாலும் கூட, குற்றவியல் நீதி அமைப்புக்கு இதன் மீது இருக்கும் அலட்சியத்தைச் சுட்டுகின்றனவா?

காவல்துறை சார்ந்தவர்களிடமும், நீதிமன்றங்களிலும் நிலவும் நடைமுறை தம்மைக் கேவலப்படுத்தும் வகையிலானது, தாக்குதலுக்கு உள்ளாகித் தவிப்பிலிருக்கும் தம் உணர்வுக்கு மதிப்பளிக்காத வகையான விசாரணையே நடக்கிறது என்று கருதுவதால், அவற்றுக்குப் பயந்து, வன்புணர்வுக்கு இரையான பலரும் குற்றம் குறித்துப் புகார் கூடச் செய்வதில்லை என ஆராய்ச்சிகள் காட்டியுள்ளன. பெண்களின் அந்தரங்கப் பிரச்சினைகளைப் பற்றிய கூர் உணர்வு போலிசாருக்கோ, நீதித்துறை சார்ந்தவர்களுக்கோ எத்தனை இருக்கிறது? பால் வன்முறைக் குற்றங்களுக்கு ஆளானவர்களை விசாரிக்க அவர்களுக்கு ஏதும் தனிப் பயிற்சி கொடுக்கப்படுகிறதா?

காவல் நிலையங்களில், புகார்களைப் பதிவு செய்யும் காவலர்களின் ஊழல் நடத்தைகளுக்குக் காவல்துறையின் உயர்நிலை மேலாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? காவல்துறையிலும், நீதித்துறையிலும் தேவையான எண்ணிக்கையில் பொறுப்புகளில் பெண்கள் இருக்கிறார்களா? பாலியல் குற்றங்களைப் புகார் செய்வதையும், அவற்றைப் பதிவு செய்வதையும் மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுவருகின்றன?

இந்தியாவில், வன்புணர்வுக் குற்றம் குறித்து பெண்கள் புகார் செய்கையில், பெரும்பாலும், குற்றத்துக்கு அவர்களே பொறுப்பு என்று பழி சுமத்தப்படுகிறது. தப்பித் தவறி அந்தப் புகார் செவிமடுக்கப்பட்டாலும், அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வந்து கொண்டிருக்கையில், வெகு தாமதமாகவே கேட்கப்படுகிறது. மன அதிர்ச்சியிலிருந்தும், உடல் நோவிலிருந்தும் வெளிப்படுவதற்கே மிகுந்த தைரியமும், உளவியல் ஆலோசனை சேவைகளும் தேவைப்படும். வசதியற்ற கீழ்மட்ட சமூகங்களின் பெண்களுக்கு இத்தகைய உதவிகள் கிடைக்க என்ன செய்யப்பட்டிருக்கிறது? அவர்களுக்கு எங்கே போகவேண்டும் என்றும் தெரியாது, தரமான சேவைகளைப் பெறப் பணம் செலவழிக்கவும் இயலாது.

வன்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்ட எத்தனை பெண்கள் மருத்துவ உதவியை நாடுகிறார்கள்? அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மருத்துவத் துறை சார்ந்த வசதிகள் அவர்களை நடத்துகின்றனவா? குற்றத்துக்கு அவர்கள் மீண்டுப் பலியாகாமல் இருக்க என்ன பாதுகாப்பு அளிக்கப்படுகிறது? 2007ல் ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை (State department) அளித்த ஒரு ஆய்வுக்காகக் கென்யாவின் தேச மகளிர் மருத்துவமனைக்குச் (National women’s hospital) சென்றிருந்தேன். இந்த மருத்துவமனைக் குழு வன்புணர்வு உட்பட்ட பலவகை வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களுக்கான மருத்துவ வசதி அளிக்கும் இடம். அங்குள்ள பணியாளர்களின் ஈடுபாடுள்ள இயக்கம் என்னுள் நல்ல அபிப்பிராயத்தை உண்டுசெய்தபோதிலும், துயருற்றவர்களிடமும், மருத்துவர்களிடம் பேசியபோது அந்நாட்டின் மருத்துவமனைகளில் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளுக்கான உடனடி மருத்துவ வசதிகள் மட்டுமே இருப்பதும், அவற்றுக்கும் அவை வெளிநாட்டிலிருந்து வரும் பண உதவியையும் உள்நாட்டுக் கொடைகளையுமே நம்பியிருப்பதும் தெரியவந்தது. வேகமாய் வளர்ந்துவரும் பொருளாதாரமாக இருந்தபோதிலும், இந்தியாவுக்கும் இந்த நிலை பொருந்துமா? வன்புணர்வுக்காளானவர்களுக்கான சிகிச்சைகளை மேம்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது? வன்புணர்வுக்காளானவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர உதவி செய்ய உளவியலாளர்களும், சமூக சேவகர்களும், இந்திய மருத்துவமனைகளில் இருக்கிறார்களா?

India_Gate_Bus_Delhi_Rape_Victims_Blood_Devils

பொது இடங்களில் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகும் பெண்கள், வேலைக்குப் போகும் வழியிலோ, அல்லது இளம்பெண்களானால், பள்ளிக்கு, கல்லூரிககு அல்லது சினிமா, பார்க், பீச் போன்ற பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்லும் வழியிலோ ஆபத்துக்குள்ளாகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளவயது ஆண்களும் பையன்களும் அதே பொது இடங்களில் புழங்கினாலும் பெண்கள்தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். நகர்ப்புறச்சூழலில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு வளையம் இருக்கிறது? நாட்டை நவீனமயமாக்க முயன்று வரும் ஒரு மக்களாட்சியில் இத்தகைய பாதுகாப்பு வளையம் இல்லாமல் இருப்பது பொறுத்துக் கொள்ளப்படக் கூடிய ஒரு விஷயமா?

தில்லியின் இழிவுக்குரிய கும்பல்-வன்புணர்வுச் சம்பவத்தை ஒட்டி எழுந்த பொதுமக்களின் சீற்றம், நகர்புறப் பெண்களுக்கு நன்மை பயக்கும் மாற்றங்கள் விரைவில் வரக்கூடும் என்னும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.  கிராமப்புரங்களில் என்ன நடக்கிறது? பாலியல் பலாத்காரங்கள் பலவும் மறைக்கப்படுவதன் காரணம் அவை வீட்டினுள் நடப்பதும், ஒதுக்கப்படுவதற்கும், பழிசூட்டப்படுவதற்கும் பயந்து கிராமப் பெண்கள் அவற்றை பற்றிப் பேசாமலிருப்பதுமே. கிராமங்களில் நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றி நமக்கு எத்தனை தகவல் இருக்கிறது, அவற்றை எப்படித் தடுப்பது? இதற்கான பதில் “கிட்டத்தட்ட ஒன்றும் தெரியாது’ என்பதாகவே இருக்கும்.

எத்தனையோ ஆய்வுகள் இந்தியா போன்ற நாடுகளில் பாலியல் வன்முறைக்கான அடிப்படைக் காரணத்தை இடைவிடாமல் தொடர்ந்து அடையாளம் காட்டியுள்ளன. அவை ஆண்மையச்சமுதாயத்தின் குணமான ஆண் ஆதிக்கமும், பெண்களில் கீழ்நிலையும். இந்தியாவில் பெண்களின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் முக்கியமானதாக அவர்களை விடுவிக்க உதவும் வகையிலும், சமூகத்தில் அவர்களுக்குச் சம அதிகாரமளிக்கும் வகையிலும் கல்வி அளிப்பது இருக்க வேண்டும்.  28 மாநிலங்களிலும், 7 மத்திய அரசின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வர்மா ஆணைக்குழுவின்  பரிந்துரைகளைச் செயல்முறைப்படுத்துவது  உதவி செய்யலாம், ஆனால் அது போதாது.

தனியிடங்களிலும் பொதுவிடங்களிலும் பாலியல் வன்முறையைக் கட்டுப்படுத்த பல செயல்திறனுள்ள நடவடிக்கைகளை அவசரமாய் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய குற்றங்களின் காரணங்களை உடனடி மற்றும் அண்மைக் காரணங்களைப் பற்றிய ஆய்வுகள் எதுவும் இல்லை. இத்தகைய சம்பவங்களுக்குத் துணைபோகும் சுழல்களைப் புரிந்து அவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படவேண்டும். இது வலுப்படுத்தப்பட்ட தடுப்பு சட்டங்களுக்கு வலிவு சேர்க்கும். குற்றத் தடுப்புக்கான நவீன  முறைகளின் மூலம் இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படலாம். குற்றவியல் நிபுணர்களும் குற்றவியல் நீதி ஆய்வாளர்களும் பெண்கள் பொதுவாய்ப் பாதுகாப்பற்று உணரும் இடங்களை துரிதக் கணிப்பீட்டுக்கு உட்படுத்தி உதவலாம். (பொது ஆரோக்கியத் துறையில் இந்த ஆய்வுமுறை பொதுவாய் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது)

குற்றவியலாளர்கள் கோட்பாடுகள் வழியே உருவாக்கப்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழி வகுக்கலாம். அவற்றில் சில காட்டாகக் கொடுக்கப்படுகின்றன- இன்றளவில், பாதுகாக்க எளிதான இடங்கள், வெளிகளை உருவாக்குவது, பாதுகாப்பு நிலை குறித்த தொடர்ந்த மேற்பார்வைகள் மூலம் கிட்டிய தகவல்களை வைத்து களச்சூழலை வடிவமைப்பது,  பிரச்சினைகளின் தன்மைக்கேற்ற வகை காவல்துறையின் செயல்பாடு, சமூகக் குழுக் காவல் முயற்சிகள், இம்மி கூட விட்டுக் கொடுக்காத கடும் காவல் துறை நடவடிக்கைகள், சூழலுக்கேற்ற வகைக் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் என்று இவை அறியப்படுகின்றன. இவை நகர முனிஸிபாலிடிகள், பொதுப் போக்குவரத்து நிர்வாகிகள், மனமகிழ் நடவடிக்கை நிலையங்கள், கல்வி அமைப்பு நிர்வாகிகள், மேலும் காவல்துறை நிர்வாகிகள் ஆகியோரின் கூட்டு நடவடிக்கைகளுக்கு உதவும் உடனடி நடவடிக்கைகளை இனம் காணவும், உருவாக்கவும் மேற்படி கோட்பாடுகள் உதவும். இந்த நடவடிக்கைகளே பால்-வன்முறையும், பெண்களுக்கெதிரான பிற குற்றங்களும் நகர்ப்புறங்களிலும், பெருநகரங்களிலும் மேன்மேலும் நடக்காமல் தடுக்க உதவும்.

தில்லியில் நடந்தவன்புணர்வுச் சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன. இச்சம்பவங்கள் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. ஆனால் தில்லியோ, இந்தியாவோ வன்புணர்வுப் பிரச்சினையில் தனித்து இல்லை. இது உலகமயமான பிரச்சினை, உலகமயமான கவலை. வன்புணர்வு பற்றிய புரிதலிலும், அதைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்குமான நீண்ட கால எதிர்வினைகளைக் கண்டுபிடிப்பதிலும் குற்றவியல் நிபுணர்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது, இதன்மூலம் ‘வியப்புறச் செய்யும்’ இந்தியா’விலும், மேலும் உலகெங்கிலும் உள்ள பல கோடி எண்ணிக்கையுள்ள இதுவரை புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ள பெண்களின் வாழ்க்கையைப் பெரிதும் மேம்படுத்த முடியும்.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.