பல்லுயிர்ப் பெருக்கம் (நிலைக்கும் வேளாண்மையின் அறிமுகம்)

1956 முதல் 1996 வரை 40 ஆண்டுகள் சென்னை மாநகரில் எனது வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தபோது வாய்ப்பு இருந்தும் சொந்த வீடு கட்டும் உத்தேசத்தில் சென்னையில் மனைக்கட்டு எதுவும் வாங்க ஆர்வம் ஏற்படவில்லை. 1964-ல் மைய அரசின்கீழ் உணவு-வேளாண்மை அமைச்சகத்தைச் சார்ந்த அங்காடி புலனாய்வுப் பிரிவில் ‘தொழில்நுட்ப எழுத்தர்’ வேலை கிடைத்தது. மறு ஆண்டில் அங்காடி புலனாய்வு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைத்தது. அதன்பின் முப்பது ஆண்டுகளுக்கு எந்த பதவி உயர்வும் இல்லை. வேலைப்பளுவும் இல்லை.

மனதிற்கு  நிறைவு தரும் பணி என்றாலும் இதன் முக்கியத்துவம் உரிய மதிப்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள விளைபொருள் அங்காடிகளுக்குச் சென்று விலைவாசி நிலவரம், வரத்து, வழங்கல் போன்ற புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வழங்கி பயிர் நிலவரம் மற்றும் உற்பத்தி மதிப்பீடு செய்வதுதான் பணி. அலுப்பு சலிப்பு இல்லாமல் 33 ஆண்டுகள் ஒரே மாதிரியான வேலையிலிருந்து மாறும் திருப்பமாக அவ்வப்போது எழுதும் பணி தோல்விகளுக்கு மருந்தாக அமைந்தது. தேவைகளைக் குறைத்துக் கொண்டு என்ன துன்பம் வந்தாலும் கடன் வாங்காமல் வாழ்வை ஓட்ட மொழிபெயர்ப்பு உதவியது. அற்ப சன்மானம் என்றாலும் எனக்கு அது பெருந்தொகையாகப் பட்டது.

தினமணியில் கட்டுரைக்குக் கொடுத்த நூறு ரூபாய் வாழ்வில் கடன் இல்லாமல் வாழ உதவியதுடன் எழுத்துப்பணி நிறைவைத் தந்தது. டி.டி. கோசாம்பியின் பண்டைய இந்தியாவைத் தொடர்ந்து ‘வறுமையின் பின்னணி – ஒரு கிராமத்தின் சமூக உருவாக்கம்’, என்ற நூலும் வெளிவந்தது. இரண்டுமே மார்க்சிய சார்புள்ள தமிழாக்கங்கள். தினமணியில் ‘வேளாண்மை பொருளியல்’ என்ற தலைப்பில் வெளிவந்த 50 கட்டுரைகளின் தொகுப்பு, ‘வேளாண் வளர்ச்சியின் துலாக்கோல்’. பின்னர், ‘எண்ணெய் வித்துக்கள்’ இரண்டு பாகங்கள் வேளாண் வளர்ச்சியின் துலாக்கோலின் தொடர்ச்சியாக வெளிவந்தன. எல்லா நூல்களும் ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடுகள்.

புத்தகம் எழுதி வெளியிடும் நுட்பங்களையும் கூடவே கற்றுக் கொண்டதால், அரசுப்பணி ஓய்வுக்கு முன்னும் பின்னுமாக ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ மற்றும் இயற்கை வேளாண்மை தொடர்பான நூலை முதல்முறையாக தமிழில் வெளியிடும் வாய்ப்பு வந்தது. 1994-இல் ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ நூல் வெளிவந்த சூழ்நிலை மிகவும் இனிமையான நினைவுகளை உள்ளடக்கியதாகும். 1996-ல் எனது அரசுப்பணி நிறைவடையும் நிலை. சென்னையில் வீடு இல்லை. எங்கே போய் வாழ்வது என்ற கேள்விக்கு காந்திகிராமம் விடையளித்தது. ஏனெனில் எனக்கும் காந்திகிராமத்துக்கும் உள்ள தொடர்பும் 50 ஆண்டுகளுக்கு மேலான பழங்கதை.

gandhigram_Soundiram_Ramachandran_TVS_Iyengarஎனது மூத்த அண்ணன் ஆர்/ தியாகராஜன் காந்திகிராமம் தொடங்கிய காலத்தில் கணக்கராகப் பணிபுரிந்த காலகட்டம் 1950-60. டி.வி. சுந்தரம் ஐயங்காரின் (TVS) திருமகள் டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன் காந்தியில் சேவாகிராமத்தில் ஆசிரமப்பணி புரிந்தவர்கள். இளம் வயதில் விதவையான டாக்டர் சௌந்திரம் சுதந்திரப் போராட்ட வீரர் ஜி.ராமச்சந்திரன் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த மலையாளி, மிகச் சிறந்த கல்வியாளர், ராஜாஜியுடன் சிறை தண்டனை அனுபவித்தவர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவரை மறுமணம் புரிந்துகொண்டார். அத்திருமணம் மகாத்மா காந்தி தலைமையில் வார்தாவில் நிகழ்ந்தது. இந்திய விடுதலைக்குப்பின் காந்தியின் சேவாகிராமத்துக்கு இணையான ஆசிரமத்தை காந்திகிராமத்தில் தொடங்கி மருத்துவப்பணியுடன், கிராமங்களில் கல்விப்பணியும் மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் ஜி.ஆர். காந்திகிராமத்தை ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் போல் கல்வி நிறுவனம் தொடங்க விரும்பி வெற்றியும் பெற்றதன் விளைவாக காந்திகிராமம் கிராமியப் பல்கலைகழகம் உருவானது.

எனது தந்தை ராஜமன்னார்குடியில் 1942-ல் இறந்தபோது எனக்கு 3 வயது நிறைந்துவிட்டது. என்னைவிட 12 வயது மூத்தவரான அண்ணன் தியாகராஜன் ஒரு தந்தையைப் போல் என்னை வளர்த்தார். 15 வயதில் கதர்க்கடையில் ஒரு ரூபாய் மாதச் சம்பளம். எனினும் ஏழு மக்களைப் பெற்று முதிய விதவையான என் தாயார் பல பணக்காரர்கள் வீட்டில் சமையல்பணி மற்றும் அப்பளம் வடகம் இட்டு பசி போக்கினாள். எனது இளம் வயது வறுமை நல்லதங்காள் கதையை நினைவுறுத்தும். இருப்பினும் தாயாரின் மனோபலம், ஆசாரம், பசி ஒருபக்கம் இருந்தாலும் கவுரவமாகதான் வாழ்ந்தோம்.

செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள ஆத்தூர் ஸ்ரீராமகிருஷ்ணா மாணவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டபோது என் வயது 11. தன் தம்பியை ஒரு அநாதை விடுதிக்கு ஒரு அலுமினிய தட்டு, ஜமுக்காளம், போர்வை, தலையணையுடன், ஒரு கருப்புப் பெட்டியில் சில கிழிந்த சட்டை அரை நிக்கர் வழங்கிவிட்டுப் பிரிந்தபோது அண்ணன் அழுதான். என் உணர்வுகள் மரத்துவிட்டன. நான் அழவில்லை. மூத்த அண்ணன் திருமணமாகி, காந்திகிராமத்தில் குடும்பம் நடத்திய சமயம் பத்தாவது முடித்தபின்  நான் விரும்பியபடி ஆத்தூரில்  டி.சி. வாங்கி எஸ்.எஸ்.எல்.சி படிப்பை காந்திகிராமத்துக்கு அருகில் உள்ள சின்னாளப்பட்டி தேவாங்கர் ஹைஸ்கூலில் சேர்த்தார். அந்த வகையில் காந்திகிராமம் 1954-ல் பரிச்சயமானது. இரண்டு வருடம் பழகிய ஊராயிற்றே! பின்னர் நாற்பது வருடங்கள் கழிந்து ஓய்வூதிய வாழ்வு மீண்டும் காந்திகிராமத்தில் தொடங்கியது.

இம்முறை என்னைவிட இரண்டு வயது மூத்த அண்ணன் எம்.ஆர். ராஜகோபாலன் 1980-ல் மைய அரசில் சுய விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு காந்திகிராமத்தில் செட்டிலாகியிருந்தார். டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரனின் ஆசியுடன் சம்பளமில்லா ஊழியராகப் பணியாற்றியபோது நான் அடிக்கடி காந்திகிராமம் வருவதுண்டு. எனது தாயார் அண்ணனுடன் வாழ்ந்து வந்தார். ஏனெனில் அவர் பீஷ்மபிரமச்சாரி. பின்னர் காந்திகிராமத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள அம்பாத்துறையில் சொந்த வீடு கட்டிக் கொண்டு அவர் தனியாக வாழ்ந்து வந்த சூழ்நிலையில் 1993-ல் நானும் அவருடன் ஒட்டிக கொண்டு வாழ முடிவு செய்தபோது அவரது வீட்டு மாடியில் தனியாக வீடு கட்டிக் கொள்ள அனுமதித்தார். இதன் காரணமாக நான் காந்திகிராமத்துக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தவேளையில் திரு பால்பாஸ்கர் அறிமுகமானார்.

Gandhi_Gram_gandhiPlaque

பால்பாஸ்கர் தினமணி வாசகர். நான் ஏழுதும் தினமணி கட்டுரைகளை வாசிக்கும் பழக்கமுள்ளவர். பால் பாஸ்கர் நடத்திக் கொண்டுள்ள தொண்டு நிறுவனம் அமைதி அறக்கட்டளை. திண்டுக்கல்லை மையமிட்டிருந்தது. அவர் சுற்றுச்சூழல் என்ற மாத இதழை நடத்திவந்தார். அப்பத்திரிக்கைக்கு கட்டுரை வழங்குமாறு கூறினார். சுற்றுச்சூழல் சம்பந்தமாக இவர் செய்த தொண்டுகளில் மிக முக்கியமாக, திண்டுக்கல்லையே மாசாக்கிக் கொண்டிருந்த தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தார். முழுபலன் இல்லாவிட்டாலும் சிறுபலன் உண்டு. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் ஆழ்துளை கிணறுகள் மாசாகிக் கொண்டிருக்கின்றன. மாசு என்பதைவிட, விஷம் வேகமாகப் பரவிவருகிறது என்று சொல்ல வேண்டும்.

பால் பாஸ்கர் 1992-ஆம் ஆண்டு ஐ.நா. ஆதரவில் ரியோ டி ஜெனிரோவில் நிகழ்ந்த முதல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த சூழ்நிலையில் அதுசமயம் பரவலாகப் பேசப்பட்ட பயோ டைவர்சிட்டி (பல்லுயிர்ப் பெருக்கம்) சம்பந்தமாக நான் சேகரித்து வைத்திருந்த தகவல்களின் அடிப்படையில் நான் புத்தகம் எழுதினால் வெளியிட முடியுமா என்று கேட்டபோது மனமகிழ்ந்தார். என்னையே அச்சகம் பார்த்து அச்சிடக்கூறி செலவுகளை ஏற்றுக் கொண்டார்.

Paul_Baskar_PMK_Mercy_Bhaskar_Pasumai_Dindugul_Environment_Amaithi_Iyakkam

நான் சென்னையில் இந்திரா நகரில் குடியிருந்த சமயம் எனது வரலாறு – பொருளாதார பேராசிரியர் சி. மகாதேவனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பால்பாஸ்கர் சந்திப்புக்குப்பின் மகாதேவன் சந்திப்பு நிகழ்ந்தது. தினமணியில் எழுதி வருவது பற்றி மகிழ்ச்சியுற்றார். அப்போது அவர் தொழிலதிபர் மகாலிங்கம் நடத்தி வந்த Kisan World பத்திரிக்கை ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஹிந்து பத்திரிக்கையிலும் நூல் மதிப்புரைகள் வழங்கி வந்தார். “Green Revolution” – வந்தனா சிவா நூலுக்கு இவர் எழுதிய விமரிசனம் மறப்பதற்கில்லை. வந்தனா சிவா விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனை கிழிகிழியென்று கிழித்திருப்பது மகாதேவன் மதிப்புரையில் வெளிச்சமாகத் தெரிந்தது.

பல்லுயிர்ப் பெருக்கம் நூலுக்கு டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதனிடம் அணிந்துரை வாங்க இயலுமா என்று பால்பாஸ்கர் கேட்டிருந்தார். பேராசிரியர் மகாதேவன் எம்.எஸ். சுவாமிநாதனின் நண்பர் என்று புரிந்து கொண்டேன். எம்.எஸ். சுவாமிநாதனைப் பற்றி தப்பாக விமரிசனம் செய்ய வேண்டாம் என்றும் தன்னுடைய வந்தனா சிவா நூல் மதிப்புரையில் வந்தனா சிவாவின் கருத்து எடுத்துக்காட்டப்பட்டதே தவிர அது தன் கருத்தல்ல என்று அவர் விளக்கமளித்ததுடன், கிஸான் வேல்டு சார்ப்பாக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனைப் பேட்டி கண்டு வருமாறு பணித்தார். இவ்வாறு அறிமுகமானதைத் தொடர்ந்து நான் எளிதில் பல்லுயிர்ப் பெருக்கம் நூலுக்கு அவரிடமிருந்து அணிந்துரையும் பெற்றேன். என்னுடைய பேட்டியும் கிஸான் வேல்டில் வெளிவந்தது.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் தன் பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி நிலைக்கும் வேளாண்மை (Sustainable Agriculture) குறித்த ஆராய்ச்சி செய்து வந்தார். தரமணியில் நான் சுவாமிநாதனைச் சந்திக்கச் சென்றபோது தேசபக்தி மாணவர் இயக்கத்தைச் சார்ந்து எம்.எஸ்.சுவாமிநாதனை விமரிசித்த ஒருவர் அங்கு நல்ல சம்பளத்தில் வேலை செய்வதைக் காண முடிந்தது.

‘பல்லுயிர்ப் பெருக்கம் – நிலைக்கும் வேளாண்மை அறிமுகம்’ என்ற பெயரில் வந்த எனது நூலின் நோக்கம் என்ன? உள்ளடக்கம் என்ன?

World_Globe_Analysis_Maps_Deforestation_Forest_Cover

பல்லுயிர்ப் பெருக்கம் என்பது பொதுவாக வனப்பகுதிகளில் காணப்படும் பலவகை தாவரங்கள், ஒவ்வொரு வகையான தாவரங்களில் வேற்றுமையாகும் ரகங்களின் பெருக்கம், உயிரினங்களின் வகைப்பெருக்கம், முதுகெலும்புள்ள விலங்குகளின் வகைப்பெருக்கம், புழு, பூச்சிகள், ஊர்வன, பறவைகளின் வகைப்பெருக்கம் எல்லாம் அடங்கும். பயிர் நிலங்களில் விவசாயம் தோன்றிய நாளிலிருந்து இயற்கையாகவே மாற்றமுற்ற விதைகளின் பெருக்கம். சுமார் 10000 வகையான நெல், கொதுமை, நஞ்சை புஞ்சை பயிர்கள், பழ இனங்களின் வேற்றுமைப் பண்புகள், காய்கறிகளின் வேற்றுமைப் பண்புகள் என்று பலவற்றை வரையறுக்கலாம். உதாரணமாக, நெல்லில் கருப்பு, சிவப்பு, பொன்னிறம், தூய வெண்ணிறம் என்ற நிற அடிப்படையில் வேற்றுமைப் பண்புகள், மெல்லிய அரிசி, தடிம அரிசி, பிரியாணி அரிசி என்றெல்லாம் உண்டு. கத்தரிக்காயிலும் ஊதா, வெள்ளை, பச்சை, முள் கத்தரிக்காய், நீர்க்கத்தரி, எண்ணெய்க் கத்தரி என்று நிறைய வேற்றுமை உண்டு. மலர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

பல்லுயிர்ப் பெருக்கம் நூலின் முதல் கட்டுரை ‘காவியங்களில் வன அழகு’ மலர்களின் வேற்றுமைப் பண்புகளைப் பேசுகிறது. இந்தக் கட்டுரை 1947-ல் இருந்து மைய அரசின் வேளாண்மை செயலாளராக இருந்த எம்.எஸ். ராந்தவாவின் ‘அழகு மரங்கள்’ நூலின் உட்கருத்தையும் மேற்கோள்களையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் முதன்முறையாக ‘வனமகோத்சவம்’ என்ற பெயரில் மரம் நடு விழாவைத் தொடங்கியவர். இந்தியாவெங்கும் குல்மொகர் மரங்களை சாலை ஓரங்களில் நட்டு வளரச் செய்தவர்.கொத்துக் கொத்தான சிவப்பு மலர்கள் இரவில் தீயைப் போல காட்சி தரும். இந்த மரத்தை இவர் உலகிலேயே அழகான மரம் என்று விவரிக்கிறார். இந்த மரம் மடகாஸ்கர் வரவு. இதற்கு இணையான இந்திய மரம் பலாசு அல்லது புரிசை. வடக்கில் அக்னிப்பூக்களாகக் காட்சி தரும். இலைகள் உதிர்ந்து மரத்தில் மலர்கள் மட்டும் காட்சி தரும். காளிதாசனின் காவியங்களில் வர்ணிக்கப்பட்ட வன அழகு, மர அழகு பற்றிய குறிப்பும் பல்லுயிர்ப் பெருக்கம் நூலின் முதல் கட்டுரையில் உள்ளது.

நூலின் அணிந்துரையில், “பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நிலைக்கும் வேளாண்மை பற்றி எழுதப்பட்ட இந்த நூல் மிகவும் பொருத்தமான நேரத்தில் (1994) வெளிவந்துள்ளது. பல்லுயிர் உற்பத்திப் பெருக்கத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி பெற பயோடைவர்ஸிட்டியே அடிப்படை. மிகவும் துரதிருஷ்டவசமாக, வளம் பொருந்திய பல்லுயிர்ப் பெருக்கமுள்ள காடுகள், மலைகள், கடற்கரை சார்ந்த உயிர்ச்சூழல்கள் மிகவும் வேகமாக அழிந்து வருகின்றன. சட்டபூர்வமான சர்வதேச பயோடைவர்ஸிட்டி உடன்பாடு 19.12.1992ஆம் நாளிலிருந்து செயல்படுகிறது. இது நமது பயோடைவர்ஸிட்டியின் நீண்ட பாதுகாப்புக்கும் அவற்றின் சமச்சீருள்ள விநியோகத்துக்கும் வழிமுறை காண உதவும். நமது மக்கள் தொகை விரைவில் 100 கொடி அளவில் பெருகிவிடும். அடுத்த நூற்றாண்டில் நாம் அதிக அளவில் உணவு தானியங்களையும் வேறு வேளாண்மை பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் வேளாண்மை உற்பத்தித் திறனில் தொடர்ந்து வளர்ச்சியைப் பெற உயிர்ச்சூழலைப் போற்றி வளர்ப்பதின் மூலம் இயலும். அப்போது எதிர்காலத்துக்குத் தேவைப்படும் உணவு உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்தி உலக மக்களைப் பசியிலிருந்து மீட்க முடியும்.

MS_Swaminathan_Green_Revolution

“பயோடைவர்ஸிட்டி நிலைக்கும் வேளாண்மை ஆகிய பொருள் அடங்கும் விஷயங்கள் கனபரிமாணம் மிக்கவை. இவற்றை ஆர்.எஸ். நாராயணன் மிகத் தெளிவுடனும் மெருகுடனும் வழங்கியுள்ளார். இது சொல்லப்பட வேண்டிய நேரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாமல் எதிர்கால மக்களின் நன்மையையும் விரும்பி அன்புணர்வுடன் உழைத்துப் படைத்த திரு ஆர்.எஸ்.நாராயணனுக்கும் இந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள்.” என்று டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் எழுதினார்.

பல்லுயிர்ப் பெருக்கம் நூல் வடிவம் ஜனசக்தி அச்சகத்தில் அச்சுக்கொப்பு முறையில் 1994ல் வெளிவந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான அரங்கில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்து கொண்டார். கம்யூனிஸ்டு கட்சி தோழர்கள் திரளாக வந்து பங்கேற்றுக் கொண்டனர். அநேகமாக எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்திருக்கலாம். இந்த நூல் வெளிவந்தபின்னர் பல்லுயிர்ப் பெருக்கம் பற்றி உரையாற்ற சென்னை வானொலி நிலையம் எனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது.

1994ஆம் ஆண்டில் வெளிவந்த பல சிறந்த நூல்களில் இதுவும் ஒன்றாகத் தேர்வாகி தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசும் கிடைத்தது. இதன் இரண்டாவது பதிப்பை 2001ல் பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை வெளியிட்டது. இதை முதல் பதிப்பாக வெளியிட்ட திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையின் அறங்காவலர் பால்பாஸ்கருக்கு என் மீது ஒரு வருத்தம் உண்டு. ஏனென்றால் மதுரை விவேகானந்தனிடம் கூறியது போல, அவரிடமும் 1996ல் அரசு பணி ஓய்வு பெற்றதும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். சென்னையிலிருந்து அம்பாத்துறைக்குக் குடி பெயர்ந்ததும் ஒரு நாள் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை அலுவலகம் சென்று கவனித்தபோது, “இது நமக்கு சரிப்படாது,” என்ற உணர்வு தோன்றியது. அதே சமயம் வசதி, வாய்ப்பு குறைவுதான் என்றாலும் ‘நம் வழி வேளாண்மை’ மதுரை அலுவலகத்தில் மூன்று மாதங்கள் பணி செய்தேன் என்று கூறுவதைவிட, பயிற்சி எடுத்து, உதவிவிட்டு விடைபெற்ற அனுபவத்தை அடுத்த இதழில் கவனிப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.