தமிழாக்கம்: மதுமிதா
அம்ரிதா ப்ரீதம் ஒரு பஞ்சாபி கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். இவரின் இயற்பெயர் அம்ரிதா கௌர். பஞ்சாபிக் கவிஞர்களில் முதலில் பிரபலமான பெண்கவிஞர், நாவலாசிரியர், இருபதாம் நூற்றாண்டின் முன்னணிக்கவிஞர். அறுபது வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிதை, கட்டுரை, பஞ்சாபி நாடோடிப்பாடல்கள், சுயசரிதை என அளித்துள்ளார். அவை பல்வேறு இந்திய, வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் சாகித்திய அகாதெமி விருது, ஞானபீடவிருது, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் போன்ற உயரிய விருதுகளைப் பெற்ற பெருமை பெற்றவர்.
வெற்றிடம்
அங்கே இரண்டு நாடுகளே இருந்தன
ஒன்று வெளியே தூக்கி எறிந்தது
அவனையும் என்னையும்
இன்னொன்றை
நாங்களே கைவிட்டுவிட்டோம்
வெற்று வானுக்கு அடியில்
நீண்ட நாட்களாக எனது உடலின் மழையிலேயே நான் நனைந்தேன்
நீண்ட நாட்களாக அவனுடைய மழையில் அவன் அழுகிப்போனான்
பிறகு அவன் பல வருடங்களின் பாசத்தை விஷத்தைப் போல் குடித்தான்
அவன் என் கைகளை அவனுடைய நடுங்கும் கைகளில் ஏந்திக்கொண்டான்.
”வா சிறிது காலம் நம் தலைக்கு மேலே சிறிய கூரையை அமைக்கலாம்
மேலும் அங்கே கவனி
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில்
சிறியதோர் வெற்றிடம் இருக்கிறது”
***
நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்
நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்
எப்படி எங்கே என்று
எனக்கு தெரியாது
ஒருவேளை உன் கற்பனையின்
ஒரு பகுதியாக இருப்பேன்
உன் சித்திரத்திரையில்
மர்மமான கோடாக என்னைப் பரப்பிக்கொண்டு
உன்னை உற்று நோக்கிக்கொண்டிருப்பேன்
ஒருவேளை நான் சூரியஒளியின்
ஒரு கதிராக மாறி
உனது வண்ணங்களால் தழுவப்பட்டு
உனது சித்திரத்திரையில்
நானே என்னை வரைந்துகொள்வேன்
எப்படி எங்கே
எனக்குத் தெரியாது
ஆனால் நான் உன்னை சந்திப்பேன் நிச்சயமாக.
ஒருவேளை நான் ஊற்றாக மாறி
நுரைக்கும் நீர்த்துளிகளால்
உன் உடல் மேல் வருடி
என்னுடைய குளிர்ச்சியை
உன்னுடைய தகிக்கும் மார்பில் சேர்ப்பேன்
ஆனால் இந்த வாழ்க்கை
என்னுடன் இணைந்தே வருகிறது
என்பதைத் தவிர
எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை
தேகம் அழியும்போது
அனைத்தும் அழிந்துவிடுகிறது
ஆனால் நினைவு
வலுவான நூல் இழைகளால் நெய்யப்பட்டது
நான் இந்த இழைகளை எடுத்து
நூல்களாக்கி நெய்து
நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்.
***
ஒரு மடல்
பரணில் இருக்கும் ஒரு புத்தகம் நான்.
நான் ஒருவேளை
ஒப்பந்தமாகவோ, பக்திப்பாடலாகவோ
அல்லது காமசூத்திரத்தின் ஒரு அத்தியாயமாகவோ
அல்லது அந்தரங்க துன்பத்தின் உச்சரிப்பாகவோ இருக்கலாம்
ஆனால் இவை எவையும் நான் அல்ல எனத் தெரிகிறது
(அப்படி இருந்தால் எவரேனும் என்னைப் படித்திருக்கலாம்)
புரட்சிக்காரர்களின் கூட்டத்தில் வெளிப்படையாக
அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்
நான் அதனுடைய கைப்பட எழுதப்பட்ட நகல்
அதில் காப்புறுதிக்கான முத்திரை இருக்கிறது
ஆனால் எப்போதும் அது வெற்றிகரமாக அமுல்படுத்தப்படவில்லை
அது செயல்முறைப்படுத்துவதற்காக பாதுகாப்பாக உள்ளது
இப்போதுதான் சில சிட்டுக்குருவிகள் வந்தன
வாயில் வைக்கோலை சுமந்துகொண்டு
என் மேனியில் அமர்ந்து
அடுத்த தலைமுறை குறித்து கவலைகொண்டன
(அடுத்த தலைமுறைக்கான கவலை என்பது எத்தனை வியப்புக்குரியது)
சிட்டுக்குருவிகளிடம் சிறகுகள் இருக்கின்றன
ஆனால் தீர்மானங்களுக்கு சிறகுகள் இல்லை
(தீர்மானங்களுக்கு இரண்டாம் தலைமுறை இல்லை)
சிலசமயங்களில்
பிரச்சினை என் கட்டுகளை கழற்றிவிடுகிறது
என் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது
என்பதை மோப்பம் பிடிக்க நினைக்கிறேன்
நான் மோப்பம் பிடிக்க முனைகையில்
பறவை எச்சத்தின் புகைநாற்றம் மட்டுமே உள்ளது.
ஓ! எனது உலகமே, உன்னுடைய எதிர்காலம் என்ன !
உன்னுடைய இன்றைய நிலையில் நான்.