நிலாவுக்கு நெருக்கமான கிராமம்
சருகுமேல்
சருகு மெத்திக் கிடக்கும் காட்டில்
சட்டெனக் கண்டெடுத்த தங்கக் காசாய்
முழுநிலா மிளிரும்.
கண்ணுக்குத் தெரியாத உயர்ந்தோங்கிய
ஒரு காட்டுமரத்தில் பூத்த
ஒரு தனிப்பூவாய் ஒளிரும்.
காட்டுக்கு வகிடெடுத்தது போல்
அருகிலுள்ள குக்கிராமத்திலிருந்து
ஒரு ஒற்றையடிப் பாதை செல்லும்.
சிகிச்சைக்கு ஒரு ’சீக்காளியைப்’
பக்கத்து ஊருக்கு
தூளியில் சுமந்து கொண்டு
ஓடும் மனிதர் நிழல்கள்
ஓடும் ஒற்றையடிப் பாதையில்.
காடும் நிலா விளக்கைக்
கூடத் தூக்கிக் கொண்டு
முன் விரையும்.
நிலாவின் வெளிச்சத்தில் மட்டுமே
இரவில் வெளிச்சமாகும்
நிலாவுக்கு நெருக்கமான கிராமம் அது!
***
என் அப்பாவின் புத்தகங்கள்
அப்பா
விட்டுப் போன புத்தகங்கள்
இன்னும்
அலமாரியில் காத்திருக்கின்றன.
அவை
எனக்குப் பிடிக்காத புத்தகங்கள்
என்றும் சொல்லிவிட முடியாது.
வாசிக்க அவகாசமில்லை என்று
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும்
ஒத்தி வைக்க முடியாது.
அவற்றைத் தூசி தட்டி
அடுக்கி வைப்பதையெல்லாம்
அவை விரும்பவில்லை.
அவை
என்னிடம் வாசிக்கும் ’உண்மையை’
வேண்டுகின்றன.
அப்போது தான்
அப்பாவின் புத்தகங்கள்
‘என்’ புத்தகங்களாகும்
என்கின்றன.
வாசிப்பில்
அப்பாவின் சிரத்தையை
என் சிரத்தையோடு ஒப்பிட்டு
அப்பாவைச் சிலாகிக்கின்றன.
அப்பா விட்டுப் போன
மற்ற பொருட்கள் போலில்லை
அப்பா விட்டுப் போன புத்தகங்கள்.
***
அறிமுகம்
பிரயாணத்தில்
பக்கத்தில் அமர்ந்திருக்கும் அவளோடு
நான்
பேசாமலேயே போய் விடக் கூடுமோ?
ஒரு இனம் புரியாத்
தயக்கத்தின் தீவிரம்
இரத்தத்தில்
தீப்பற்றியிருக்கும்.
மரக்கிளைகளில் பறவைகள்
மாறி மாறி அமர்வது போல
மனத்தில் சொற்கள்
மாறி மாறி வந்தும்
என்ன பேச அவளோடு என்று தோன்றும்?
அவள் பேசினாலென்ன?
தர்க்கிக்கும் மனம்.
அறிமுகத்துக்கான
தருணம்
தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.
தலையணையும்
தலையணைப் பக்கம்
கரடி பொம்மையுமாய்
கறுப்பினப் பெண் இப்போது
கண்மூடிக் கொண்டிருப்பாள்.
இனிப் பேச அவசியமில்லை
என்பது
எனக்கு நான் நெருக்கமாய்
இருக்கச் செய்யும்.
சொற்கள் வீசாமல்
மனக்கேணி
கண்ணாடியாய்த் தெளியும்.
பக்கம் திரும்பிப் பார்க்க
இருக்கை
காலியாயிருக்கும்.
ஒரு பேருந்து நிறுத்தத்தில்
இறங்கிச் செல்லும்
அவளை நோக்கி
இயல்பாய்க் கையசைப்பேன்..
அவளும் கையசைப்பாள்.
கரடி பொம்மையும் கையசைக்கும்.
மூன்று கவிதைகளுமே அருமை. முந்தைய சில இதழ்களில் உங்கள் கவிதை வராததற்கு ஈடு கட்டி விட்டீர்கள். வாழ்த்துகிறேன்….கோரா
அருவி போன்ற ஓட்டம். அழகு நடை. இனிய சொற்கள். மொத்தத்தில் மிகவும் அழகிய கவிதைகள். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.
என் அப்பாவின் புத்தகங்கள் –
வீட்டுக்கு வீடு பரண்களைப் படம் பிடித்த பாங்கான கவிதை.
புத்தகங்கள் இனியாகிலும் நம்மை தந்தையராய் வழி நடத்தட்டும்.
அன்புடன்
கோபிநாத் பலராமன்