இறுதியில் உறுதி – எம்.எஸ்.தோனி

இது கிரிக்கெட் ஆட்டமில்லை;  போக்கர் விளையாட்டு. M.S.தோனி மிகவும் அமைதியாய், அலட்டிக்கொள்ளாமல் அசாத்திய  தந்திரத்துடன் இருந்தார். ஏமாற்றினார், ஏமாற்றிக் கொண்டே இருந்தார்.  ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்துகொண்டிருக்கையிலும் அபாயத்தை அதிகரித்துக்கொண்டு போனார். தன் அதிருஷ்டத்தின் மேல் சவாரி செய்து, ஒரு ரன் அவுட்டிலிருந்து பிழைத்து, இஷாந்த் ஷர்மாவுடன் இரண்டு அபாயகரமான குழப்பங்களிலிருந்து தப்பித்து கடைசியில் ஆட்டத்தை முடித்தார்.

முதலில் தோனி இந்த மாட்சில் விளையாடுவதாகவே இல்லை. அவருடைய இன்னிங்ஸ் முழுவதிலும் அவர் தனது காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தது தெளிவாய் தெரிந்தது. சில சுலபமான சிங்கிள்களை வேண்டாமென விட்டுவிட்டார் அவர் வழக்கமாய் அபகரிக்கும் சில இரட்டை ரன்களை எடுக்கவே இல்லை. அவர் எதிர்நோக்க வேண்டியிருந்தது ரங்கன ஹெராத், லஸித் மலிங்க  ஆஞ்செலோ மாத்யூஸ்.இவர்களின் கூர்மையான தாக்குதல், ஆட்டத்தில் மிகுந்த அழுத்தமான நிலை வேறு. அத்தனையையும் சமாளித்து அவர் ஜெயித்திருக்கிறார்.

ஸ்ரீலங்காவின் பேட்டிங், இந்தியாவின் பந்துவீச்சு, இந்தியாவின் அணியில் முதல்வரிசை பேட்ஸ்மென் இவர்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தைப் பற்றி எழுதவும் நிறைய இருக்கிறது. ஹெராத் பற்றியும் நிறைய பேசவேண்டியிருக்கிறது. ஆனால் அவை எல்லாம் இப்போதைக்கு இருக்கட்டும்.

களத்தில் தோனி நுழைந்தபோது நான்கு விக்கெட்கள் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் என்னும் நிலை. அவர் பந்தைத் தட்டிக் கொடுத்தார்; தடுத்தார்; அவ்வப்போது தள்ளி விட்டார். நான்கு ஓட்டங்கள் எடுப்பதற்கு பதினாறு பந்துகள் பிடித்தது. நடுவில் அவருடைய சகாக்கள் வந்தார்கள்… போனார்கள். எங்கோ சென்ற பந்தைத் தொட சுழற்றினார் சுரேஷ் ரெய்னா. அரணிற்குள் புகுந்த பந்திற்கு பின்வாங்கி சுருண்டார் ரவீந்திர ஜடேஜா. சுழல்பந்தின் சுழலை எதிர்பார்த்து ஏமாந்தார் அஷ்வின். ரன் எதுவுமே எடுக்காமலேயே திருப்பி அனுப்பப்பட்டார் புவனேஷ்வர் குமார்; ஆனால், இக்கட்டான பதினைந்து பந்துகளுக்கு புவனேஷ்வர் தாக்குப் பிடித்தது உதவியது. ஐந்தே ஓட்டங்களில் இருந்தபோது வினய் குமாருக்கு தடாலென்று இரத்தம் தலைக்கேறி, பந்தை மைதானத்திற்கு வெளியே தூக்கி அடிக்கப் பாய்ந்தார்.

22 பந்துகளிலிருந்து 20 ஓட்டங்கள் என்கிற தருணம். கடைசியாய் ஆட வந்த இஷாந்த் ஷர்மாவுடன் தோனி இரண்டு பந்துகளை விளையாடினார். பின் ஒரு சிங்கிள் எடுத்தார்.கடைசிப் பந்தை இஷாந்த் தடுத்து விளையாடினார்.

அடுத்த மூன்று ஓவர்களும் இந்தியாவின் மிகச் சிறந்த இறுதி ஆட்டக்காரரின் கதையைச் சொல்பவை.. தனக்கான சரியான தருணத்துக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். மேலும் காத்துக் கொண்டிருந்தார்.

இது தோனியின் சிறப்பு முத்திரை பதித்த விளையாட்டு. ஆட்டம் ஒரு கொதிநிலைக்கு வரும் வரையில் காத்திருந்து, மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துகளைத் தடுத்தாடி, தேவைப்படும் ஓட்டவிகிதத்தை மேலும் மேலும் அதிகரித்து, அதற்குப் பின் ஒரு நேருக்கு நேர் மோதலில் வெற்றி கொள்வது. ஜாவெத் மியாந்தாத் இதை அடிக்கடி செய்வார். மைகேல் பெவனும்கூட. தோனியொ இதை ஒரு கலையாகவே மாற்றியிருக்கிறார்.

18 பந்துவீச்சுகளில் 19 ஓட்டங்கள் தேவைப்படுகையில் அவருக்கு எதிராய் பந்து வீசியவர் மலிங்கா. முதல் பந்தை பிட்சினூடே தட்டிவிட்டு அடுத்ததை ஆஃப் ஸைடில் தடுத்தார். அடுத்தது சற்றே வைட் பந்தாக இருந்தபோதிலும் அதை கவருக்கு அடித்தார். ஒரு சிங்கிளுக்கான வாய்ப்பு இருந்தபோதிலும் அதை வேண்டாமென விட்டுவிட்டார். ஆஃப் ஸ்டம்பை நோக்கி வந்த அடுத்த பந்தை டீப் விக்கெட்டுக்கு அடித்து இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். தோனிக்கே உரிய பாணி இது, கிடைக்கும் இடுக்குகளில் தன் டென்னிஸ் பால் உத்திகளை நுழைப்பது.

அடுத்த பந்து  தேர்ட்மானுக்கு அடிக்கப்பட்டது. ஓவரில் ஒரே பந்து இருக்கையிலும் இன்னொரு சிங்கிளை வேண்டாமென விட்டுவிட்டார். அடுத்த பந்து சற்றே வைடாக இருந்தது. அதை பாயிண்டுக்கு தட்டிவிட்டு ‘நோ’ எனக் கத்தினார். பாதி பிச் வரை வந்துவிட்ட இஷாந்த் அதிருஷ்டவசமாய் ரன் அவுட்டாகாமல் பிழைத்தார்.

12 பந்துவீச்சுகளிலிருந்து – 17 ரன்கள்

மாத்யூஸின் முழு ஓவருக்கும் இஷாந்த் ஆடினார். முதல் பந்திலேயே கிட்டத்தட்ட ரன் அவுட் ஆகி இருப்பார். நாலாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள். கடைசி இரண்டையும் தடுத்து ஆடினார்.

கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டன். தோனி பாட்டை மாற்றவேண்டும் எனக் கேட்டார். ‘ஒரு 2 கிலோ பாட்’ என்று பின்பு தெரிவித்தார்.

MS-Dhoni-Playing-His-Short

இந்தியா தோனியை ஆராதிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்தியக் கிரிகெட்டை 80களிலும் 90களிலும் தொடர்ந்து வந்திருப்பவர்களுக்கு அவர் ஒரு ரட்சகராகக் கூடத் தெரியலாம். அந்நாட்களில் இந்தியா மூச்சுத்திணறி நொறுங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிறிய அழுத்தத்திற்கான முதல் அறிகுறிகளிலேயே அவர்கள் துவண்டு போயினர். எப்பொழுது. எப்படி சடாலென எரிந்து அணைந்து போவது என்று பேட்ஸ்மன்களுக்கு சரியாய் தெரிந்தது. ஆரம்பத்தில் எல்லாம் கனஜோராய் போய்க்கொண்டிருக்கும் –  வரிசையாய் இரண்டு மூன்று விக்கெட்கள் விழ ஆரம்பித்ததும் அவர்கள் முன்னேற்றம் தடைப்பட்டுப்போகும்.

ஒவ்வொரு மாட்சிலும், ஒவ்வொரு போட்டியிலும், இந்தியா மியாந்தாத் போன்ற ஒரு பாட்ஸ்மனுக்காக ஏங்கியது. இல்லை ஒரு சலீம் மாலிக் அல்லது பெவன் அல்லது ஸ்டீவ் வா போல துரத்தப்படுகையில் அலட்சியமாய் அமைதியாய் இருக்கும் எத்தனையோ கிரிக்கெட் வீரர்களில் ஒருவருக்காக இந்தியா ஏங்கியது. ரன் ரேட் அதிகரிக்கையில் உறுதியளிக்கக்கூடிய ஒருவர், இந்தியாவின் இன்னிங்ஸை  அமைதியான பாதையில் செலுத்தக்கூடிய ஒரு ஆட்டக்காரருக்காக அவர்கள் தவமிருந்தனர்.

தோனியின் அமைதி அச்சுறுத்தக் கூடியது. ஆட்டதின் அழுத்தம் அத்தனையையும் உள்வாங்கி தன் முழுத் திறமையையும் ஒருங்கிணைத்து “The zone” என்று சொல்லக்கூடிய ஒரு நிலைக்கு தன்னை எடுத்துச்செல்வது போல இருக்கும். பார்வையாளர்களால் இதை உணர இயலும். ஆட்டத்தின் உயிர்நாடியை அவர் கணிப்பதும், எதிர் அணியையும் ஆட்ட நிலவரங்களையும் அவர் துல்லியமாய் படிப்பதும் அவர்களுக்குப் புரியும். ஒரு நாள் ஆட்டங்களில் அவருடைய இத்தகைய நடவடிக்கைகளுக்கு அவர்கள் பழக்கப்பட்டிருப்பதால், சரியான நேரத்தில அவர் சரியான முடிவுகளை எடுப்பார் என்பதில் அவர்களுக்கு முழு நம்பிக்கை உண்டு.

கடைசி ஓவர், 15 ரன்கள் தேவை, கையில் இருப்பது ஒரே ஒரு விக்கெட் – இது பள்ளிச் சிறுவர்களின் கனவுக்கருப்பொருள், ஆளுயரக் கண்ணாடி முன் தம்மை நிறுத்தி அவர்கள் கற்பனை செய்யும் ஒரு காட்சி. ஓவரின் முதல் பந்து ஷார்ட் டாக கொஞ்சம் வைடாக இருந்தது. தோனி அதை மேலே உயர்த்தி அடிக்கப் பார்த்து தவறவிட்டார். வேறு பாட்ஸ்மன்கள் உரக்க ஒரு வசவை உதிர்த்திருப்பார்கள். அல்லது தம்மை நொந்துகொண்டிருப்பார்கள். தோனியோ ஸ்கொயர் லெக் கை நோக்கி நடந்து சென்றார்.

இரண்டாவது பந்து கொஞ்சம் வைடாய் ஃபுல் லெங்த்தில் வந்தது. டோனியின் பெண்டுலம் சுழற்சியில் சிக்கி, ஒரு பிரும்மாண்ட ஸிக்ஸர். அடுத்த பந்து லெங்த்தில் வந்தது. அதை பாயிண்டுக்குப் பின்னே செதுக்கி அடித்தார். மூன்று பந்துகளில் 5 ஓட்டங்கள் வேண்டும். நாலாவது பந்தும் லெங்த்தில் வர , இன்னொரு பலமான சுழற்சி, இன்னொரு சிக்ஸ். ஆட்டம் முடிந்தது. போட்டியில் வெற்றி,. எல்லோரும் அவரவர் வீட்டுக்கு போகலாம்.

ஸ்ரீலங்கா அணி இந்த தாக்குதலில் அசந்து போனது. தோனியின் அணியினரும் கூட திகைத்துப் போயினர். வர்ணனையாளர்கள் பரவசத்தில் இருந்தனர். மைதானத்தில் இருந்தவர்கள் பித்துப் பிடித்தவர்கள் போலாயினர். இவர்கள் அனைவரும் அமைதிக்குத் திரும்பி, ஆட்டத்தின் கடைசி கணங்களை நிதானமாய் அசை போடுகையில், இது வேறு எப்படியும் நடந்திருக்க முடியாது என்பதை உணர்வார்கள்.

தோனி அபாரமாய் ஆட்டத்தை முடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தியாவில் மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்களில் ஒருவர். அவர்களுடைய கேப்டன்களிலேயே மிகவும் போற்றப்பட்டவர். ஆனால் அவருடைய பங்கு இதற்கெல்லாம் மேலானது.  கடைசி நேரத் தோல்விகளுக்கும், கிலிபிடித்த சரிவுகளுக்கும் பழகிப்போன கிரிக்கெட் பிரியர்களை ‘தோனி ஆட்டத்தில் இருக்கும் வரையில் நாம் தோற்கமாட்டோம்’ என நம்புபவர்களாய் மாற்றியவர் அவர்.

டெண்டூல்கர் ஆட்டமிழந்ததுமே இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்துவிட்ட ஒரு காலம் இருந்தது. (2003 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின்போது தானும் அப்படிச் செய்ததாய் தோனியே ஒப்புக்கொண்டிருக்கிறார்.). இன்று அதெல்லாம் தலைகீழாய் மாறியிருக்கிறது – தங்கள் கேப்டன் ஆட வரும்போதுதான் இந்திய ரசிகர்கள் ஆட்டத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறர்கள்.

நன்றி: ESPN Cricinfo.
இக்கட்டுரையின் ஆங்கில வடிவத்தை இங்கே படிக்கலாம்.

0 Replies to “இறுதியில் உறுதி – எம்.எஸ்.தோனி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.