இந்தியக் கவிதைகள் – நேபாளி

மோகன் தாகுரி நேபாளி இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, மொழி பெயர்ப்பு என்ற பல் வேறு இலக்கிய தளங்களில் தனக்கான தனி முத்திரை பதித்தவர். இவரது ’நிசப்தம் ’கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ளது.

ராஜேந்திர பண்டாரி நேபாளி இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.சிறந்த கவிஞருக்கான அரசு விருதுகளைப் பெற்றவர். நேபாளிய சாகித்ய சம்மேளன் விருது, சிவகுமார் ராய் நினைவு விருது ஆகியவை அவற்றில் சில.

கனவுகள்

pow

என் விழி ஜன்னலில் ஊடுருவி
தூக்கத்தைத் திருடுகின்றன
சூரியக் கதிர்கள்
கனவுகளின் தொடர்ச்சி
இரவு முழுவதும்
அவற்றை
தலையணைக்கடியில் புதைத்து விட்டு
எழுகிறேன்
கனவுகள் இரவுக்குச் சொந்தமானவை
பகலில் என்னைத் துன்புறுத்தாமல் இருக்கட்டும்
காரணத்தோடு
தலையணக்கடியில் வைத்திருக்கிறேன்
ஊக்கம் தரும்
என் இனிய கனவுகள்
ஐயோ !
அவை
இந்தப் பகலொளியிலும்
மூச்சுத் திணறலில்
தூங்கிக் கொண்டிருக்க வேண்டும்
———————————————–
மூலம் : ராஜேந்திர பண்டாரி
ஆங்கில மூலம் : எம்.எம். குருங்
தமிழில் : தி.இரா.மீனா
———————————————

மணல்

sa

எனக்கு என்னைத் தெரியாது
கடலை காதலிக்கத் தொடங்கியதிலிருந்து
அவனுடைய ஆழமான மனதைத் தொட்டு விடமுயற்சித்தேன்
மீண்டும் மீண்டும் அவனால் எறியப்பட்டேன்
அப்படித்தான் கரையை சேர்ந்தேன்
பகலின் தகிக்கும் சூரிய ஒளி
பலமுறை எரிக்கப்பட்டேன்
இரவின் உறையும் குளிரில்
தனிமையில் உறைந்தேன்
சூறாவளியிலும் எறியப் பட்டேன்
கடலால் கைவிடப்பட்ட
நான் எவ்வளவு வலியில் வாழ்வேன்
அன்பின்றி எவ்வளவு நாள் வாழ முடியும்
அப்படித்தான் கரையின் பகுதியானேன்
ஒருநாள் கரையில் கிடந்த போது
இரண்டு மென்மை கரங்கள்
என்னைத் தொட்டு வீடு கட்டின
குடும்பமானது.
களித்தது.
சண்டைகளும் சந்தோசங்களும் …
அவர்களோடு நானும் …
ஒரு சூறாவளியில்
நான் உடைந்தேன்
குலைந்தனர் அவர்கள்
“மணலுக்கு வீடில்லை ”
சமாதானமாக
யாரோ சொன்னார்கள்
நான் அன்றிலிருந்து கரையிலிருக்கிறேன்
எப்போதும் கரைந்தபடி
————————————————-
மூலம் : மோகன் தாகுரி
ஆங்கில மூலம் : எம்.எம். குருங்
தமிழில் : தி.இரா.மீனா
————————————————

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.