பேராசை
ஃபிலிப் ஷூல்ட்ஸ் (மொ.பெ: மைத்திரேயன்)
என் கடற்கரைச் சிற்றூர் திணறுகிறது
இலைக் குப்பைகளை அகற்ற,
கோடைப் பள்ளிகளை நடத்த,
எங்கள் நூலகங்களைத் திறந்து வைக்க.
இப்போது நாளாவட்டம்
மேன்மேலும் ஆண்கள் நிற்கிறார்கள்
ரயில் நிலையத்தில்,
தினக் கூலி வேலை கிட்டுமா எனத் தேடி.
ஹிஸ்பானியர் குறைந்த கூலிக்கும்
வேலைக்கு வருவாரென நிலவும் கருத்து,
எனவே முதலில் பொறுக்குவது அவர்களை,
அந்நேரம் வெள்ளையரும் கருப்பரும்
ஒருவர் மற்றவரின் கண்களில் தெரியும்
பீதியைத் தவிர்க்கிறார்.
எங்கள் எடுபிடியாள், ஸாண்டோஸ்,
தன் உழைப்பில் கிடைப்பதையே
நம்பியிருப்பவர்,
குவாதெமாலாவில் தன் அரை ஏக்கர்
பற்றிப் பெருமை கொள்பவர்,
அங்கு முதுபருவ ஓய்வுக்குத் திட்டமிடுகிறார்.
கண்ணியத்துடன் வாழ்வை நடத்த
அவரின் ஆசை போற்றத் தக்கதே, ஆனால்
அவருக்குத் தெரியும் இப்போது யாருமே
ஓய்வெடுத்துப் போவதில்லை என,
ஒவ்வொருவரும் மேலும் கடினமாக உழைக்கிறார்.
என் அப்பா ஒரு வாழ்வைக் கற்பனை செய்தார்
அவர் நடத்திய வாழ்வை விட அது
மேலும் திருப்தியானது.
அவர் தன்னைப் படிப்பற்றவராகவோ
முறிக்கப்பட்டவராகவோ, கசப்படைந்தவராகவோ
பார்க்கவில்லை, மாறாகச்
சீக்கிரமே பணக்காரராகப் போகிறவராக.
தனவானாவது தன் பிறப்புரிமை, அது
அவர் நம்பிக்கை.
சந்தோஷமென்பது, முந்நாளில் நான் நினைத்தேன்,
ஒரு அவசிய மயக்கம்.
இன்று நினைக்கிறேன், அது
அருமையான கணங்களான ஆறுதல்,
குவாதெமாலா பற்றிய கனவுகள் போலவே.
சிலசமயம், இரவில், பனிக்காலத்தில்,
முன்பு மனிதர்கள் வாழ்ந்த சிறு குடில்கள்
இன்று வங்கிகளின் உடமையாகிக்
காலியாயிருக்கும் மாளிகைகளின்
கவனிக்கத் தக்க மௌனத்தால்
சூழப்பட்டிருக்கையில், ஜன்னலருகே நின்று
தொலைக்காட்சிப் பெட்டியின் மலட்டு
ஒளித் துடிப்புகளைத் தேடி நோக்க எனக்குப் பிடிக்கும்.
மாறாக
நான் எப்போதும்
திகைப்போடு காண்பதோ
விசித்திரமான, புரையுடை முகமாகும்
என் பிம்பம்
அதன் ஒற்றை அபரிமிதத்தில்
மூழ்கியிருப்பது.
(நன்றி: பொயட்ரி மாகஸீன், ஜூலை/ஆகஸ்ட் 2013)
—————————————————————
மூலக் கவிதையை இங்கே படிக்கலாம்: http://www.poetryfoundation.org/poetrymagazine/poem/246096
***
மீட்சிகள்
கே ரையன் (மொ.பெ: மைத்திரேயன்)
நம்பிக்கையைப் போல
அது ஊறுகிறது
நிரந்தரமாக,
உதிரியான ஆனால்
உருண்டையான
தனிகளில்
இருந்து கொண்டு, ஒரு
முழு மூடுபனியான
ஆனால்
சூழ வனையப்பட்ட
மீட்சிச்
சம்பவங்களாய். ஒருக்கால்
அந்த குமிழிகளில்
ஏதோ இரண்டு
ஒன்றுடனொன்று
மோதிக் கொண்டால் எந்தச்
சுவர்களும் நொறுங்குவதுமில்லை,
அதுபோல
இரட்டித்து
பெரிதாவதும் இல்லை,
சோப்பு கூடங்கள்
போல
இரட்டையாகிப்
பெரிய அறையாவதில்லை
——————————————————–
இங்கிலீஷ் மூலக் கவிதைக்கு:
http://www.poetryfoundation.org/poetrymagazine/poem/246106
பெண்கள் நடுவே
மேரி பான்ஸோ (மொ பெ: மைத்திரேயன்)
எந்தப் பெண்கள் திரிகிறார்கள்?
அதிகமில்லை. எல்லாரும். ஒரு சிலர்.
அனேகர் செய்வார், அவ்வப்போது,
மேலும் அதென்ன அதிசயம்.
சிலர், நானுமதில் ஒருத்தி,
அசையாமலமர்ந்து திரிகிறார்கள்.
சிறிய உருவினளான என் பாட்டி
ஒவ்வொரு தெரு வியாபாரியிடமும்
வாங்குவாள்
லேஸ்களுக்காகவோ, ரிப்பனுக்காகவோ இல்லை,
தாம் விரும்பியவிடத்தில் தூங்கி,
விரும்பியபோது வெளியேறி, தமக்குப்
பிடித்த உணவையும், உடனிருப்பவர்களையும்
தேர்ந்தெடுக்கும்
அவர்களுடைய வாசத்துக்காக-
அவள் என்னை எச்சரித்தாள்:
“இழக்க எதையும் வைத்துக்கொள்ளாதே.”
அவள் ஒடிசலாய் இருந்தாலும்
ரத்ததில் வேகமும், ஓட்டக்காரரின் கணுக்காலும் கொண்டிருந்தாள்,
அவளால் பொறுக்கமுடிந்தது, பொறுக்கமுடிந்தது.
தனது வேரிட்ட தோட்டத்தையும், பேரக்குழந்தைகளையும், ஒருகாலத்தில்
அவளுடையவளாயிருந்த ஒருகாலத்தில்
கட்டுக்கடங்காத இளைஞனையும் அவள் நேசித்தாள்.
அவர்களால் முடியும் அளவு.
——————————————————-
இங்கிலீஷ் மூலக் கவிதை இங்கே: http://www.poetryfoundation.org/poetrymagazine/poem/245898