"வீடும் வெளியும்"-கவிதைகள்

home_poetry

அந்தரத்தில் ஒரு அறை

நகரத்தின்
ரேகைகளின் ஒரு
சந்திப்பில்,
மூன்றாவது மாடியின்
அந்தரத்தில் – என்
புதிய அறை.
வெளிச்சமும்,
குருவிக் கீச்சும்
நானும் மட்டும்.
முதன்முறை,
அறையை அங்கேயே
பூட்டி வைத்துவிட்டு,
இறங்கிச் சென்றேன்.
திரும்பியபோது
உலகம் என் வாசல்வரை
வந்துவிட்டது,
கதவடியில் சிக்கிய
மிதியடியாய்.
**
 
காத்திருக்கும் பரண்கள்
பார்க்காதவரை,
தலைக்குமேல் விரிந்திருக்கும்
பூதங்களின் உலகம்,
தூக்கியெறியும் அனைத்தயும் விழுங்கும்
பூதங்கள்;
சிறு பிள்ளைகளைச்
சாப்பிடக் காத்திருக்கும் பூதங்கள்.
பார்க்கும்போது,
ஒட்டடையில் மூடப்பட்ட
பரிசாக,
நேற்றுவரையிலான என் உலகம்.
பார்த்து, இறங்கிவிடுவது
நல்லது.
இன்று, மெல்ல மெல்ல
நேற்றாகிக் கொண்டிருக்கிறது.
**

பேசும் விசிறிகள்

சத்தம்போடாத மின்விசிறிகள்
இரக்கமற்றவை – உங்கள்
தனிமையைப் பகிர மறுப்பவை.
அறையின் சுவர்களின் வழியே
தண்டவாளங்களின் மீதேறி
வேறு உலகங்களைக் காண
அனுமதிக்காதவை.
ஆனாலும், அவைதான்
பழகாத புது இடத்தின்
முதல் நண்பர்கள்.
மௌனமாய் புன்னகைத்துக்கொண்டிருக்கும்.
கண்விழித்துப் பாருங்கள்,
அவைப் பேசத் துவங்கும்.

**

துவைக்கும் கல்
தோட்டத்தின் அருகில்,
மரங்களின் நிழலில்
அதன்மீதமர்ந்து
தியானத்தில் சரிந்துபோகலாம்.
ஈரம் உலராத பொழுதுகளில்,
தென்னங்குரும்பையைத் தேய்த்துச்
சந்தனம் செய்யலாம்.
நால்வராக அமர்ந்தால்,
குதிரை பூட்டி
பயணம் செய்யலாம்.
தனிமையில்,
உங்கள் நிழல்மீது, அது
நிழல் வளர்த்து
சமாதானம் கூறும்,
ஆம், அதன் மீது
அழுக்குப் போக
துணிகளையும் துவைப்பார்கள்.
**
ரீங்கரிக்கும் கதவுகள்
சீக்கிரம் கற்றுக்கொள்ளும்
உங்கள் இரும்பு கதவுகள்,
உங்கள் வீட்டுப் பாஷையை.
விளையாட்டு முடிந்து
நீங்கள் வேகமாகத் திறக்கும்போது
அம்மாவிடம் தோசை செய்யச் சொல்லும்.
அம்மா தூங்கும் போது
விளையாடச் செல்ல வேண்டுமானால்,
சத்தமின்றித் திறந்துகொள்ளும்.
தாழ்ப்பாளைப் போடும் போதெல்லாம்
சிரித்து நன்றி சொல்லும்.
காலில்லாத கதவு மட்டும்
ஓடி ஓடி ஓய்ந்துபோகும்.
வேறு யாரும்
வீட்டிற்கு வந்தால்,
கவனித்துப் பாருங்கள்,
அவர்களுக்கு புரியாத
மொழியில் வரும்
அறிவிப்புச் செய்தியை.
**
மேஜைக்குக் கீழே
நான் இந்த மின்விளக்கின்
பொத்தானை அமுக்குமளவு
வளரும்வரை,
எனக்கு இரு உலகங்கள்
இருந்தன.
மேஜை இருக்கும்
இடங்களிலெல்லாம், நான்
இன்னொரு உலகிற்குச்
செல்ல முடியும்.
வகுப்புகள் நடக்கும் உலகுக்குக் கீழே
தீனி திண்ணும் உலகம்.
பள்ளி கிளம்பும் உலகுக்குக் கீழே
விடுமுறைகளின் உலகம்.
அலுவலகமாக, கடைத்தெருவாக,
வீடாக மாறக்கூடிய
உலகங்கள்.
இனி, மாற்று உலகம்
இல்லாத உலகில்
எப்படி வாழ்வது?
00 O 00