பூத்துக் குலுங்கும் கொன்றை, மருதம், மனோரஞ்சிதம்

தமிழகத்தில் கானகத்தில் வாழும் உயிரினங்கள், தவிர மனித வளர்ப்பில்லாது இயற்கையோடு இயைந்து வாழும் உயிரினங்கள் பற்றிச் சமகாலத்தில் தமிழில் புத்தகங்கள், கட்டுரைகள், இதரவகை எழுத்துகளை எழுதுவோர் மிகக்குறைவு.

இந்திய அளவிலேயே இப்படிப் பல மொழிகளில் புத்தகங்களும், இதர எழுத்தும் அத்தனை அதிகம் என்று சொல்ல முடியாது. வெப்பமிகு நாடான இந்தியாவில் உயிரினங்கள் ஏராளம். அவை குறித்து நம் சிறாருக்குப் போதிக்க முன்னெடுங் காலத்தே வாழ்வனுபவமும், கிராமப்புற வாழ்வுக்கே உரிய இயற்கைசார் வாழ்வின் நிர்ப்பந்தங்களும் இருந்தன. இன்று கணிசமான மக்கள் கிராமங்களிலேயே வாழ்ந்தாலும் இயற்கையை நம்பி வாழாத நகர்ப்புற வாழ்வு போன்ற வாழ்வை வாழக்கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

பள்ளிகளும், கல்வி அமைப்பும் மக்களுக்குத் தம் சூழல் குறித்து ஆழ்ந்த அறிவேதும் இல்லாத வகைப் போதனையையே கொடுப்பதால், கட்டாயக் கல்வியில் வருடத்தில் பெருநாட்களைக் கழிக்கும் சிறாரும், இளைஞரும் அனேகமாக இயற்கையோடு வாழ்வு மூலம் கொள்ளும் உறவை இழந்துவிட்டனர் என்றுகூடச் சொல்லலாம். தொலைக்காட்சி, சினிமா, தவிர எங்கும் வியாபிக்கும் ஒலிபரப்புகள் ஓய்வுநேரங்களை எல்லாம் சாப்பிட்டு விடுவதால், இயற்கை என்பது சாதாரணர் வாழ்வில் ஒரு தொல்லை போலவே கருதப்படும் நிலை எழுந்திருக்கிறது. இயற்கை என்பது எப்போதும் மலயமாருதமாகத் தம் சுகத்துக்காகத்தான் இருக்க வேண்டும் என்றுகூட மக்கள் எதிர்பார்க்கின்றனர். சூழலில் ஏற்படும் மாறுதல்களுக்கும் தம்வாழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு அன்னியப்பட்ட வாழ்க்கை மக்களுக்கு எங்கும் லபித்திருக்கிறது.

இது நெடுநாள் நீடிக்க முடியாத வாழ்வு என்பதை நாம் படிப்படியாக அறியத் தொடங்கி இருக்கிறோம். இன்னும் நன்கு அறியாத நிலைதான், ஆனால் அப்படி ஒரு அறிவைப் பெறத் தேவையான நிலை எழப்போகிறது என்று சுட்டும் அறிகுறிகள் ஏற்கனவே கடந்த சில வருடங்களில் நிறையத் தோன்றிவிட்டன.

மீட்சி சாத்தியமில்லாத படுகுழி வீழ்ச்சிக்கப்புறம்தான், இயற்கையை, அதன் சுழல்களின் நடுவில் வாழும் பலகோடி உயிரினங்களில் ஒரு மெலிய உயிரினம் நாம் என்ற அறிதலை, இனி அந்த இயற்கையை மேன்மேலும் சீர்குலைப்பதால் நாமும், பலகோடி உயிரினங்களும் சேர்ந்து அழிவோம் என்ற புரிதலை நாம் பெறுவோம் என்றானால்,அப்போது நாம் தொடர்ந்து ஜீவிக்கும் உயிரினமாக இருப்பது அவசியமற்ற ஒன்றாகத்தான் இருக்கும். அந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க, உலக உயிர்களின் ஜீவிதச் சங்கிலியில் நாம் என்ன பங்கு வகிக்கிறோம், நம்மைச் சுற்றிய தாவரங்கள், பட்சிகள், புழு,பூச்சி இனங்கள், இதர பெரும் உயிரினங்கள் என்னென்ன, அவை எந்தெந்த நிலங்களில், தட்பவெப்ப நிலைகளில் எப்படி பல்கிப் பெருகும், எப்போது க்ஷீணித்து மடியும் என்ற எளிய தகவல்களையாவது அறியத் தொடங்கினால், அறிவதில் ஆர்வம் காட்டிக் கற்கவும் முனைந்தால் நம் நிலையும் மேம்படும், நம் சூழலின் நிலையும் மாறத்துவங்கும்.

பண்டைத் தமிழிலும், மத்திய காலத்துத் தமிழிலக்கியத்திலும் நாம் பாடல்களில், காப்பியங்களில் கேட்கும் வளம் கொழித்த, அருமையான இயற்கைப் பொலிவு நிறைந்த வாழ்வை மறுபடி அடைய இந்தவகை அறிவு ஒரு முதற்படி.

இவற்றை இன்று கல்விச்சாலைகளிலிருந்து பரந்த மக்கள் திரள் பெறுவது அனேகமாக நடக்கப் போவதில்லை. சிறப்புப் பயிற்சி பயில்வாருக்கு மட்டுமே உயர்கல்விச் சாலைகள் இவற்றைப் போதிக்கின்றன. அப் பயிற்சி பெற்றாரோ, திரளுக்கு எழுதுவதில் ஆர்வமற்று இருப்பதோடு, எழுதுவதில் தமக்கு ஆதாயம் என்ன என்று கேட்பவர்களாகவே அனேகமாக இருக்கிறார்கள். திரள் சமுதாயமோவெனில் இவ்விஷயங்களில் கவனம் செலுத்துவது உடனடி ஆதாயத்திற்கு இட்டுச் செல்லாது என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் இங்கு கவனம் செலுத்த அதற்கு நாட்டம் குறைவு.

உலகச்சந்தையில் சமீபத்தில் ஒரு அளவு நுழைவைப் பெற்றுவிட்ட இந்தியாவும் இந்தியரும் இனி உலக அரங்கில் மேன்மேலும் பொருளாதார வசதி பெற்று உயர்வது எப்படி என்ற பந்தயத்தில் முனைப்பாக இருப்பதால், அதற்கான தயாரிப்புக்காகவே இந்தியக் கல்வி-நிலையங்கள் எல்லாம் மாணவர்களை உந்தி விரட்டிச் செல்கின்றன. ஊடகங்களோ இத்தகைய மக்களின் சிறுகவனிப்பை எப்படியாவது பெறுவதற்கு அனைத்தையும் கேளிக்கை முகமாகவே அமைக்கின்றன.

மாற்று ஊடகங்களும், கலைகளும், இந்த அழிவுப் பாதையிலிருந்து நம் மக்களைத் திருப்பி அவர்தம் உய்வுக்கும், மேன்மைக்கும்  பாதை, இயற்கை குறித்த நல்லறிவு, சூழல் பற்றிய ஆழ்ந்த புலம் சார்ந்த ஞானம் என்பனவற்றைத் தொடர்ந்து சுட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றன.

சூழல் பற்றியும், இயற்கை சார்ந்த உயிரினங்கள் பற்றியும் எழுதும் நல்லாரைச் சொல்வனம் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகை. இந்தத் தேடலில் நமக்குச் சமீபத்தில் கிட்டிய ஒரு அறிஞர் ஜெகநாதன். இவர் ஒரு வன உயிரியலாளர். இந்த இதழில் இவரது கட்டுரைகள் பூக்கள் பற்றி அமைந்திருக்கின்றன. இவர் சொல்வனத்தில் தொடர்ந்து எழுத ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இவரது ஒரு புத்தகம் ஏற்கனவே தமிழில் கிட்டுகிறது. கிரியா பிரசுரம் இவரும், ’ஆசை’ என்னும் ஒரு கவிஞரும் சேர்ந்து தயாரித்துள்ள ‘பறவைகள்: ஒருஅறிமுகக் கையேடு’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகம் பற்றியும், இந்தியாவில் வெளியாகியுள்ள இதர சில முக்கியமான சூழலியல் சார்ந்த புத்தகங்களையும் பற்றியும்  ஜெகநாதன் எழுதியுள்ள ஒரு கட்டுரை அவரது வலைப்பக்கத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது.  அதற்கான சுட்டி:

http://ncf-india.org/restoration/blog/2013/03/books-on-birds-in-tamil/

——————————————————————————

”பொன் எனக் கொன்றை மலர*

kondrai
படம் : ப.ஜெகநாதன்

கோடைக்காலத்தில் நம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுபவை பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்கள். இதனை சரக்கொன்றை என்றும் அழைப்பார்கள். சரக்கொன்றை சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் தலைப்பு நற்றிணையின் பாடல் வரிகளில் இருந்து எடுத்தாளப்பட்டது*. சங்க இலக்கியங்களில் கொன்றையைக் குறிப்பிடப்பட்ட பாடல்களை இந்த வலைப்பூவில் காணலாம். சரக்கொன்றையானது இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. இம்மரம் அச்சிருப்பாக்கம், கோவிலூர் (திருக்கோவிலூர்), திரு அஞ்சைக்களம் (திருவஞ்சிக்குளம்), தினைநகர், திருமாணிக்குழி, திருத்துறையூர் (திருத்தளூர்), பந்தநல்லூர், புத்தூர், வெண்காடு (திரு வெண்காடு), திருக்கண்ணார் கோவில் (குரு மாணக்குடி), திருக்கோலக்கா, திருஆக்கூர் (ஆக்கூர்), திருமணஞ்சேரி, ஆவூர், திருஆப்பனூர் (செல்லூர்), திருப்புத்தூர் (திருப்பத்தூர்), திரு அதிகை வீரட்டானம் (திரு அதிகை), திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை), திருவலிதாயம் (பாடி), திருச்சோபுரம், திருத்துறையூர் (திருத்தர்) ஆகிய ஊர்களில் காணப்படும் சிவன் கோவில்களில் தலமரமாக விளங்குகின்றது. (கிருஷ்ணமூர்த்தி 2007). இலையுதிர் காடுகளில் தென்படும் மரமிது. ஊர்ப்புறங்களிலும் சாலை ஒரங்களிலும் அழகிற்காக நட்டு வைத்து வளர்ப்பதும் உண்டு.

கோடையில் (ஏப்ரல்-மே மாதங்களில்) பூக்கத் தொடங்கும். அதற்குச் சற்று முன்னதாக இலைகளை உதிர்க்கவும் ஆரம்பிக்கும். சில நேரங்களில் இலையில்லாமல் மரம் முழுவதும் மஞ்சள் பூக்களை மட்டுமே கொண்டிருக்கும். அழகு என்றால் அதுதான் அழகு. சில ஆண்டுகளுக்கு முன் திருவாரூருக்குப் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிந்தேன். போகிற வழியில் அப்படி ஒரு மரத்தைப் பார்த்தேன். ஊர் சென்றதும் முதல் வேலையாக ’பைக்’கை எடுத்துக்கொண்டு வந்த வழியே திரும்பச் சென்று அந்த மரத்தின் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன். கூட வந்த சொந்தக்காரப் பையன்கள் இந்த மரத்தைப் பார்க்கவா எங்களை இவ்வளவு தூரம் கூட்டி வந்தான் என்று ஏளனம் செய்தார்கள். எனினும் கொன்றை மரத்துடன்  இந்த நிகழ்வால் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது. திருச்சி BHEL Townshipல் இருந்த போது வீட்டிலிருந்து எனது பள்ளிக்குச் (Boiler Plant Higher Secondary School) செல்லும் வழியில் Boiler Plant Girls Higher Secondary School அருகில் சாலையோரத்தில் கொன்றை மரங்கள் பூத்து அந்த இடத்தின் அழகிற்கு அழகு சேர்க்கும்.

கேரளப் பண்டிகையான “விஷு” அன்று கொன்றை மலர்களை வைத்து பூசை செய்வார்கள் கேரள நாட்டினர்.  கேரள மாநிலத்தின் மலரும் அதுதான் (நமக்குச் செங்காந்தள் Gloriosa superba). சில சங்கத்தமிழ் பாடல்களில் குறிப்பிடப் பட்டதைத் தவிர. “அலைபாயுதே” படத்தில் வரும் “பச்சை நிறமே.. பச்சை நிறமே…” பாடலின் “……கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்…” எனும் வரி மட்டும் எனக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருகிறது.[1]

கொன்றை மரத்தை ஆங்கிலத்தில் Indian laburnum அல்லது Golden Showers என்பர். ஹிந்தியில் ’பந்தரியாத்தி’ என்றும், உர்துவில் அமல்தாஸ் (Amaltas) என்றும் அறியப்படுகிறது. இம்மரத்தின் அறிவியல் பெயர் Cassia fistula. இலத்தீன் மொழியில் fistula எனில் நீண்ட குழலைக் குறிக்கும். இதன் நீண்ட குழல் போன்ற கனியை வைத்தே இப்பெயர். இந்தக் கனி முதலில் பச்சை நிறத்திலும், முதிர்ந்தவுடன் கருப்பு நிறத்திலும் இருக்கும். அதை ஆட்டும் போது உள்ளிருக்கும் விதைகள் அசைந்து கல கல வென ஓசையெழும். இக்கனியின் வெளியுறை மிகவும் கடினமாகவும், உள்ளே சிறு சிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டு அதனுள் ஒரு விதையும் இருக்கும். இந்த நீண்ட கனியை உடைத்தால் ஒவ்வொரு அறையிலும் கருப்பு நிறத்தில் பிசின் போன்று ஒட்டக்கூடிய பழச்சதை (Pulp) இருக்கும்.

கொன்றை மலர்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவன தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், இன்னும் பல வகையான பூச்சிகள். அதில் முக்கியமானவை,  Carpenter Bees (Xylocopa sp.) எனும் பெருந்தேனீ வகைகள் என அறியப்படுகிறது (Murali 1993). இம்மர இலைகளை ஒரு வகையான பழந்தின்னி வௌவால்கள் ருசிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது (Elangovan et al 2001). சரி, கடினமான வெளியுறையைக் கொண்ட கொன்றைக் கனிகளில் இருந்து விதைகள் எப்படி வெளியேறுகின்றன? கொன்றை மரங்கள் எப்படி விதைகளைப் பரப்புகின்றன? எனக்குத் தெரிந்து குரங்குகள் கொன்றைக் கனியைச் சுவைக்கும். அவை கனியை உடைத்து விதைகளை வெளியே கொண்டு வர உதவலாம். வேறு  எவை இப்பணியைச் செய்கின்றன  என்பதை அறிய விவரம் தேடிய போது சுவாரசியமான சில தகவல்கள் தெரிந்தன. குரங்கைத் தவிர கரடியும், முள்ளம் பன்றியும், காட்டுப்பன்றியும் கொன்றைக் கனியை சாப்பிடுகின்றன. எனினும் மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும் செய்தியை Trees of Delhi எனும் நூலில் இருந்து அறிந்து கொண்டேன்.

தானாகவே வெடித்து விதைகளைப் பரப்பும் தன்மையில்லாத கொன்றைக் கனி அதன் விதை பரவலுக்கு மேற்சொன்ன சில விலங்குகளின் உதவியை நம்பியிருக்கின்றது என்பது பொதுவாகத் தெரிந்த விஷயம். எனினும் அவற்றின் விதைகள் பரவும் விதம் எப்படி எனும் கேள்வி 1911ல் ராபர்ட் ஸ்காட் ட்ரூப் (Robert Scott Troup) எனும் வனவியல் ஆராய்ச்சியாளருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் இருந்தது தெஹராதூனில். கொன்றை கனிய ஆரம்பிப்பது டிசம்பர்-ஜனவரி மாதங்களில். ஏப்ரல்-மே மாதத்திலிருந்து அவை கீழே விழ ஆரம்பிக்கின்றன. செப்டம்பர் மாதம் வரை கீழே விழுந்தாலும் உள்ளிருக்கும் விதைகள் முளைப்பதில்லை. எப்படித்தான் இவை முளைக்கின்றன என்பதை அறிய ட்ரூப் இரண்டு பாத்திகளை கட்டி அவற்றில் கொன்றைக் கனிகளை பரப்பி வைத்தார். ஆனால் ஒரு பாத்தியை திறந்தும் மற்றொன்றை ஒரு கம்பி வலையால் மேலே மூடியும் வைத்து விட்டார். ஒரு வாரத்துக்குள்ளாகவே, திறந்து வைக்கப்பட்ட பாத்தியில் உள்ள கொன்றைக் கனிகளை நரிகள் (Golden Jackal) கண்டுபிடித்துவிட்டன. அவை அக்கனிகளைக் கடித்து உள்ளிருக்கும் பழச்சதையை சாப்பிடும் போது விதைகள் வெளியே தெறித்து விழுந்தன. இந்தப் பாத்திகளை ட்ரூப் 2-3 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து வந்தார். திறந்து வைக்கப்பட்ட பாத்தியிலிருந்து பல விதைகள் முளைத்து வந்தன. ஆனால் மூடப்பட்டிருந்த பாத்தியில் வைக்கப்பட்டிருந்த கனிகளை பல பூச்சிகளும், கரையான்களும் தாக்கின. விதைகள் கனியிலிருந்து வெளியே வரவேயில்லை.

ட்ரூப் இந்தச் சோதனையை தமது (3 தொகுதிகள் கொண்ட) “Silviculture of Indian Trees” எனும் நூலில் (2ம் தொகுதியில்) விளக்குகிறார். இந்த எளிமையான, எனினும் அருமையான சோதனையிலிருந்து கொன்றை தனது விதைப் பரவலுக்கு எந்த அளவிற்கு நரி, கரடி முதலிய விலங்குகளை சார்ந்திருக்கிறது என்பது புலனாகிறது.

ஆதாரங்கள்:

நற்றிணை 242

கிருஷ்ணமூர்த்தி, கு. வி. (2007) தமிழரும்தாவரமும். பாரதிதாசன்பல்கலைக்கழம். திருச்சிராப்பள்ளி. (K.V. Krishnamurthy.2007. The Tamils and Plants (in Tamil), Bharathidasan University, Tiruchirappalli.)

Elangovan, V. ; Marimuthu, G. ; Kunz, Thomas H. (2001) Temporal patterns of resource use by the short-nosed fruit bat, Cynopterus sphinx (Megachiroptera: Pteropodidae) Journal of Mammalogy, 82 (1). pp. 161-165. ISSN 0022-2372

Krishen, P (2006).Trees of Delhi-A field guide. Dorling Kindersley (India) Pvt. Ltd.

Murali, KS (1993) Differential reproductive success in Cassia fistula in different habitants-A case of pollinator limitations? In: Current Science (Bangalore), 65 (3). pp. 270-272.

Troup, R.S. (1911).Silviculture of Indian Trees. Published under the authority of His Majesty’s Secretary of State for India in Council. Oxford Clarendon Press.

——————————————————————————————————————————-

[1] பதிப்பாசிரியர் குறிப்பு:

கொன்றை வேந்தன் என்றே ஔவையார் நீதிநூல் ஒன்றிற்கு பெயரிட்டு இருக்கிறார். திருமுறைகளில் கொன்றை சிவனின் பூவாக வரும் அடிகள் பல உண்டு (முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து – கோளறு திருப்பதிகம்), அபிராமி அந்தாதியிலும் கூட வரும், (தாரமர் கொன்றையும் சண்பக மாலையும்). பெரியபுராணம், தில்லைவாழந்தணர் சருக்கத்தில் அம்மையின் குழல் சரக்கொன்றையுடன் ஒப்பிடப்படுகிறது //கொத்தார்மலர்க் குழலாள் – கொத்தாய் நிறைந்து மலர்ந்த கொன்றை மலரிற்றோன்றும் கனிபோன்ற குழலையுடைய உமையம்மையார். வலப்பால் இறைவன் சடையிலே தரித்த கொன்றை மலர்கள் மலர்ந்து தரும் பயனாகிய அவற்றின் கனிகள் போன்றது அம்மையாரின் நீலக்குழல் என்க. மலர் அதில் உண்டாகும் கனிக்கு ஆகுபெயர். ‘பிறந்தவழிக் கூறலும்’ என்ற தொல்காப்பியம் காண்க. கொத்தாய் மலர்தல் கொன்றையின் இயல்பாம்.

மேலும் இந்தப் பூக்களும், இந்தத் தாவரமும் ஆயுர்வேதத்தில் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகின்றன என்றுதெரிகிறது. இந்த மரத்தின் கனிகள், மேலும் பட்டைகளைப் பயன்படுத்து முன், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்களையும், பயன்படுத்தும் வழிமுறைகளையும் பற்றி ஆயுர்வேத வைத்தியர்களிடமிருந்து வாசகர்கள் கவனமாகக் கேட்டு அறிதல் நல்ல தாக இருக்கும்.


***

மனம் கவரும் மருதம்

marutham_1

படம் : ப.ஜெகநாதன்

இளவேனில் காலத்தில் (முன்கோடை அதாவது ஏப்ரல் – ஜூன் மாதங்களில்) பூக்கும் மரங்களில் ஒன்று மருதமரம். பொள்ளாச்சி போகும் வழியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த மருத மரங்களில் இளஞ்சிவப்பு (Pink or Mauve) நிற பூக்கள் பூத்துக்குலுங்கின. பச்சையான இலைகளுக்கு மத்தியில் செம்பூக்கள் பூத்திருந்தது மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது. சாலையெங்கும் பூவிதழ்கள் விழுந்து கிடந்தன. அதைத் தாண்டிப் போகவே மனமில்லை.

இம்மரம் ஆங்கிலத்தில் Queen’s Pride of India, Queen’s Flower Tree எனவும், ஹிந்தியில் ஜாருல் (Jarul) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Lagerstroemia reginae (L. flos-reginae, L.speciosa). Magnus von Lagerström எனும் சுவீடன் நாட்டு வியாபாரி தனது கிழக்கிந்தியப் பயணத்தின் போது தாவரங்களைச் சேகரித்து வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படும் கார்ல் லின்னேயஸுக்கு (Carl Linnaeus) கொண்டு சேர்த்தார். ஆகையால் இவ்வகையான மரங்களின் பேரினத்தை (Genera) Lagerstroemia என லின்னேயஸ் பெயரிட்டார். இம்மரத்தின் சிறப்பினப் பெயர் reginae அதாவது மாட்சிமை மிக்க (Imperial) என்று பெயர் (Sahni 2000). மருத மரம் என அறியப்பட்டாலும், இது பூமருது என தற்போது அறியப்படுகிறது (Brandis 1990, கிருஷ்ணமூர்த்தி 2007).

மகாராஷ்டிராவின் மாநில மலர் மருதம் ஆகும். மருத மரம் சங்ககாலத் தாவரங்களில் ஒன்று. பெயரை வைத்தே இதை அறிய முடியும். நான்கு திணைகளில் ஒன்றான மருதம் வயலும் வயலைச் சார்ந்த இடத்தைக் குறிக்கும். இப்பகுதியுடன் தொடர்புடைய மரமான மருத மரத்தின் பூவினை வைத்தே இந்தத் திணைக்கும் பெயரிட்டனர் நம் முன்னோர்கள். எனினும் இப்போது இம்மரத்தினைச் சமவெளிகளில் பார்ப்பது அரிது. காட்டினுள் குறிப்பாக ஆற்றோரக்காடுகளில் பார்க்க முடியும். நான் சாலையோரத்தில் பார்த்த இம்மரங்கள் அனைத்தும் இப்பகுதியில் அழகிற்காக கொண்டு வந்து வைக்கப்பட்டவை. சமவெளிகளில் ஆற்றோரக்காடுகளில் காணப்படும் மற்றுமொரு மரம் நீர் மருது இதன் வேறு பெயர்கள் – குலமருது, வெள்ளை மருது (நீர்மத்தி என ஹோகனெக்கல் பகுதியில் வாழ்வோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்).

இதன் அறிவியல் பெயர் Terminalia arjuna. சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் மருத மரம் இதுவல்ல (Terminalia arjuna) என்றும் செம்மருதம் என குறிப்பிடப்பட்டிருப்பதால் Lagerstroemia reginae தான் என கு. வி. கிருஷ்ணமூர்த்தி (2007) கூறுகிறார். இடை மருதூர் (திருவிடைமருதூர்), பருப்படம், திருஇடையாறு (திருஎடையார்) ஆகிய ஊர்களில் உள்ள சிவத்தலங்களில் இம்மரம் தல மரமாக விளங்குகிறது. இணையத்தில் மருத மரத்தைப் பற்றி தேடிய போது விக்கிபீடியாவில் கிடைத்த தகவல்: திருச்சி அருகே உள்ள சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் தலமரமாக விளங்குவது மருத மரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது நீர்மருதா அல்லது பூமருதா எனத் தெரியவில்லை. அடுத்த முறை திருச்சிக்கு போகும் போது அங்கு போய் அதைப் பார்த்து வரவேண்டும்.

***

ஆதாரங்கள்:

Brandis, D. (1990): Indian Trees. Bishen Singh Mahendra Pal Singh, Dehra dun, India.

கிருஷ்ணமூர்த்தி, கு. வி. (2007) தமிழரும் தாவரமும். பாரதிதாசன் பல்கலைக்கழம். திருச்சிராப்பள்ளி. (K.V. Krishnamurthy.2007. The Tamils and Plants (in Tamil), Bharathidasan University, Tiruchirappalli.) •

Sahni, K.C. (2000). The Book of Indian Trees. Bombay Natural History Society and Oxford University Press, India.

***

மணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்..

7_flower_peduncle_700
கொக்கி போன்ற கம்பில் அமைந்திருக்கும் மஞ்சள் நிற மனோரஞ்சித மலர். படம் : ப.ஜெகநாதன்

அண்மையில் ’மரங்கள்: நினைவிலும் புனைவிலும்’ எனும் நூலினைப் படித்தேன். தாம் கண்டு வியந்த, தம் வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி பல எழுத்தாளார்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பே இந்நூல். தொகுத்தவர் மதுமிதா. இந்நூலில் அவர் “மனோரஞ்சிதம்” எனும் கட்டுரையையும் எழுதியுள்ளார்.

இந்நூலில் இருந்த பல கட்டுரைகள் பிடித்திருந்தாலும், என்னைக் ஈர்த்தது “மனோரஞ்சிதம்”. இதைப் படித்தவுடன் இத்தாவரத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மதுமிதாவின் விளக்கத்தைப் படித்த போது இது மரமல்ல, ஒரு வகைப் புதர் அல்லது கொடி என்பது புரிந்தது. இத்தாவரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க அப்பாவிடமும், பெரியப்பாவிடமும் மனோரஞ்சிதம் பற்றி கேட்டேன். உடனே அப்பா, மோகன் மாமாவிடம் அதை சொல்லியிருகிறார். தஞ்சாவூரில் இருக்கும் மோகன் மாமாவுக்குப் பல வித தாவரங்களை வளர்ப்பதில் அதீத ஆர்வம். நான் சிறு வயதில் தஞ்சையில் இருந்த போது ஹவுசிங் யூனிட்டில் இருந்த விசாலமான தோட்டத்திற்கு மத்தியில் அமைந்திருந்திருக்கும் அவரது வீட்டிற்குப் போவதுண்டு. அழகான சிறிய ஓட்டு வீடு. சுற்றிலும் பல பூஞ்செடிகள், கொடிகள், மரங்கள், நிறைந்த அழகான தோட்டம். அவர் தோட்டக்கலையில் வல்லவர். அவரிடம் இச்செடி பற்றிக் கேட்டவுடனேயே அப்பாவை அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர் கொடுத்து நட்டு வைத்த மனோரஞ்சிதத்தை காட்டியிருக்கிறார். அப்பாவும் அவரது கேமிராவில் அத்தாவரத்தினை படமெடுத்து மின்னஞ்சலில் அனுப்பினார்.

5_flower_from-below7001
மனோரஞ்சிதம் – இளம்பச்சை நிறத்திலுள்ள இளம்பூ. வட்டமைப்பான இதழ்களைக் காணலாம்.படம் : ப.ஜெகநாதன்

மனோரஞ்சிதம் - இலைகளும் இளம்பூக்களும். படம். எம்.பஞ்சாபகேசன்
மனோரஞ்சிதம் – இலைகளும் இளம்பூக்களும். படம். எம்.பஞ்சாபகேசன்

’மரங்கள்’ நூலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சென்னையில் வசிக்கும் எனது கார்த்தி பெரியப்பா. அண்மையில் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது எதிர்வீட்டில் மனோரஞ்சிதம் இருப்பதாகச் சொல்லி என்னை அங்கு கூட்டிச் சென்றார். மனோரஞ்சித்தை பார்க்க/நுகர வேண்டுமென எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது அன்று நிறைவேறியது. மனோரஞ்சிதம் சீதா மர இனத்தைச் சார்ந்தது (Annonaceae). சிறியதாய் இருக்கும் போது புதர்ச்செடி போலவும், வளர வளர மேலேறும் கொடியாகவும் போகும். இதன் தண்டில் முட்கள் போன்ற அமைப்பு இருக்கும். இலைகள் ஒன்று மாற்றி ஒன்றாக அமைந்திருக்கும் (Alternate leaves). மலரின் புற இதழ்கள் மூன்று (புல்லி வட்டம்- sepals). இவை ஒன்றன் மேல் ஒன்று அடுக்காக இல்லாமல், தனித்தனியாக அவற்றின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு – தொடு இதழ் ஒழுங்கில் – (Valvate) அமைந்திருக்கும். அகவிதழ்கள் (அல்லி வட்டம் – Petals) ஆறு. உள் புறம் மூன்றும், வெளிப்பக்கம் மூன்றும் வட்டமைவில் (whorled)இருக்கும். கொக்கி போன்று வளைந்த காம்பில் பூ அமைந்திருக்கும். இந்தப்பூவைப் பார்க்கும் போது எனக்கு இட்லித் தட்டுகளின் அமைவுதான் ஞாபகத்திற்கு வந்தது. இட்லித் தட்டை, மாவு ஊற்றியபின் ஒன்றன் மேல் ஒன்று வைக்கும் போது தட்டில் உள்ள குழியின் அடிப்புறம் அதன் கீழேயுள்ள குழியின் மேலே பட்டுவிடாத வண்ணம் வைப்போம் அல்லவா? அதுபோலத்தான் மனோரஞ்சிதத்தின் அகவிதழ் அமைவும். மனோரஞ்சித மலர் இளநிலையில் பச்சையாக இருக்கும். முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகும். இதழ்கள் சதைப்பற்றுள்ளதாக இருக்கும். இதன் காய் கொத்தாக பச்சை நிறத்திலும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். உள்ளே ஒரே ஒரு (ஆமணக்கு விதை போன்ற) கொட்டை இருக்கும். மனோரஞ்சித மலர் நறுமணம் மிகுந்தது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இம்மலரை அதில் மிதக்க விட்டால் அந்த அறைமுழுவதும் மனோரஞ்சிதத்தின் மணம் கமழுமாம்.

எந்தப் பழத்தை நினைத்துக்கொண்டு இம்மலரை முகர்கிறோமோ அப்பழத்தின் வாசனையை இம்மலர் தருவதாக நம்பப்படுகிறது. எனினும் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் முதன் முதலில் முகர்ந்தபோது எதையும் நினைக்கவில்லை, மனோரஞ்சிதத்தைத் தவிர. ஆகவே எனக்கு நினைவில் உள்ளது மனோரஞ்சிதத்தின் மணம் தான். சிறுவயதில் சில வாசனையுள்ள பென்சில் அழிப்பான்களை – சென்ட் (ல)ரப்பர் – (eraser) வைத்துக்கொண்டு இப்படி நாங்கள் விளையாடுவதுண்டு. அதுபோலத்தான் இதுவும். மனோரஞ்சிதப் பூவிதழைக் கொண்டு சீனர்கள் தேனீர் தயாரிப்பதாகவும் தெரிகிறது.

8_unripe-fruits_700
காய்த்திரள். படம் : ப.ஜெகநாதன்

9_fruit-and-seed_manoranjitham_700
கனியும் விதையும்.படம் : ப.ஜெகநாதன்

மனோரஞ்சிதப் பழமும் நறுமணம் வீசும். இதனால் மணிப்பூரில் மனோரஞ்சிதத்தின் பெயர் சீனி சம்ப்ரா (Chini Champra), அதாவது இனிக்கும் எலுமிச்சை என்று பொருள். இதன் அறிவியல் பெயர் Artabotrys hexapetalus அதாவது Artabotrys = கொக்கி போன்ற அமைப்புள்ள, hexapetalus = ஆறு பூவிதழ்கள் கொண்டது (Gledhill 2008). மனோரஞ்சிதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள சில தாவரவியல் கையேடுகளைப் படித்தபோது இது பெரும்பாலும் இதன் மலருக்காகவே வீடுகளில் வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது (Matthew 1999, Pallithanam 2001). Flowers of India எனும் இணையத்தளம் இத்தாவரம் இந்தியாவிலும் ஆசியாவின் வெப்பமண்டலக்காடுகளிலும் தென்படுகிறது என்கிற தகவலை அளிக்கிறது. எனினும் எந்த நூலிலுமே இத்தாவரம் எவ்வகையான வனப்பகுதியில் தென்படுகிறது என்பதைப் பற்றிய விவரம் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது. கேம்பில் (J.S.Gamble) தனது நூலில் இத்தாவரம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் வீட்டுத் தோட்டங்களில் இதன் மலருக்காக வளர்க்கப்படுவதாகவும், தாவரவியலாளர் ஜ்யார்ஜ் கிங்கின் (George King) கூற்றுப்படி இத்தாவரம் தென்னிந்திய வனப்பகுதிகளில் இயற்கையாகவே தென்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் (Gamble 1995).

மனோரஞ்சித வகையைச் சேர்ந்த மற்றுமொரு தாவரமும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், இலங்கையிலும் தென்படுகிறது (Gamble 1995) இதன் ஆங்கிலப் பெயர் Ceylon Green Champa (Artabotrys zeylanicus). மரங்கள் நூலின் தொகுப்பாசிரியர் மதுமிதா, மனோரஞ்சிதம் முழுவதுமாக அற்றுப் போய் விட்டதோ என வருத்தம் தெரிவித்திருந்தார். இனி அவருக்கு அந்தக் கவலை வேண்டாம். மனோரஞ்சிதம் நிச்சயமாகப் பலரது வீடுகளில் மணம் வீசிக் கொண்டிருக்கும். ஆனால் என் மனம் இப்போது வேறொன்றை அறிந்து கொள்ளத் துடிக்கிறது. மனோரஞ்சிதம் இந்தியாவில் இயற்கையாக வனப்பகுதிகளில் வளர்ந்திருப்பதை யாராவது பார்த்திருக்கிறார்களா? எனில் எங்கே? அறிந்தவர் யாரேனும் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஆதாரங்கள்:

Gamble, J. S. (1995). Flora of the Presidency of Madras. Vol.1. Bishen Singh Mahendra Pal Singh. Dehra Dun, India.

Gledhill, D. (2008). The names of plants. Cambridge University Press. New York. Matthew, K.M. (1999).

The flora of the Palni hills, South India (Part one). The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli. India.

Pallithanam, J.M. (2001). A Pocket lora of the Sirumalai hills, South India. The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli. India.

6 Replies to “பூத்துக் குலுங்கும் கொன்றை, மருதம், மனோரஞ்சிதம்”

  1. சரக்கொன்றையின் விதை பரவலைக்குறித்த ட்ருப்பின் சோதனையை கல்லூரியில் மாணவர்களுக்கு குறிப்பிட்டு சொல்லுவோம். இதனி மலர் அரும்புகளை இந்தியாவின் பல பாகங்களில் உண்ணுகிறாகள். கனிகளின் உள்ளிருக்கும் சதையை புகையிலையில் கலந்து உபயோகிக்கும் வழக்கம் கல்கத்தாவில் இருக்கிறது. மரச்சாம்பலை பாகிஸ்தானில் சாயமூன்றியாக பயன்படுத்துகிறார்கள். ஆசியாவின் பல்வேறு பழங்குடி மருத்துவத்தில் இம்மரத்தின் அனைத்துப்பாகங்களும் மருந்தாக பயன்பாட்டில் இருக்கிறது. எங்களூரான பொள்ளாச்சியை அடுத்துள்ள பெரும்பாலான கிராமங்களில் சரக்கொன்றை மரத்திலிருந்தே கலப்பைகளும், மண்வெட்டி ,கொத்து ஆகியவற்றின் கைப்பிடிகளும் செய்யப்படுகின்றன.சிறப்பான கட்டுரை. மனோரஞ்சிதத்தின் அல்லி புல்லி வட்ட அமைப்பை இட்லித்தட்டுக்களை வைத்து சொன்னது அழகு.

  2. மனம் கவரும் மருதம் கட்டுரையில், என் ஆய்வுக்குத் தேவையான அரிய குறிப்புகள் உள்ளன.மருதத் திணை விவசாயம் என்பது இயற்கையாகத் தண்ணீர் தேங்குகிற சேற்று நிலத்தில் எருமைகளை விட்டு உழப்பிச் செய்கிற பழங்குடி விவசாயமே தவிர ஆறுகளிலிருந்து வாய்க்கால் வெட்டி, நீர்ப் பாசனம் செய்து உழவு மாடுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கலப்பை விவசாயம் அன்று. என்பதற்கான ஆதாரம் தங்களின் கட்டுரையில் உள்ளது. நன்றி !

    -எஸ்.இராமச்சந்திரன்,கல்வெட்டாய்வாளர், த.நா தொல்லியல் துறை (ஓய்வு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.