த்ரிவம்பவே த்ரிபாவே

puppets

நீண்ட இரவுக்கு ஆயத்தம் செய்தபடி மதுவும் மங்கையருமாய் உற்சாகம் பரவ ஆரம்பித்திருந்த பாங்காக் சுகும்வித் சாலையோரமாகக் காத்திருந்த என்னை உரசுகிறார்போல நின்ற டாக்சியின் பின்பக்கத்து கண்ணாடியை இறக்கி ” ராக்வேன்,  ஏறிக்கொள்” என்று ரகசியமாய் கத்தினான் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நய்பவர். நான் கதவைத் திறந்து பின்புறம் ஏறிக்கொண்டு அந்தச் சிறிய டாக்சியில் என் ஆஜானுபாவ ஜெர்மானிய நண்பன் ஆக்ரமித்தது போக மீதமிருந்த காலே அரைக்கால் இடத்தில் சௌகரியமாய் உட்கார்ந்துகொண்டேன்.

” நய்பவர்,  நூறாவது முறையாக சொல்கிறேன். என் பெயர் ராக்வேன் இல்லை. ராகவன்.”

“ஓகே.. நானும் நூறாவது முறையாக சொல்கிறேன் என் பெயர் நய்பவர் இல்லை. நாய்பாவர்.”

” நான் அப்படித்தான் சொல்றேன். அது என் வாயிலிருந்து தொடங்கி உன் காதை அடைவதற்கு முன்னால் உருமாறிவிடுகிறது “

” சரி வம்பே வேணாம் உன் பெயரை பாதியாக்கி ராக் என்று நான் கூப்பிடுவதுபோல.. நீயும் செய்”

“முடியாது. உன் பெயரை பாதியாக்கினால் என் பாஷையில் கேவலமாய் ஒரு அர்த்தம் வருகிறது. அந்த பெயரால் உன்னை கூப்பிட விரும்பவில்லை”

” என்ன அர்த்தம்”
” நீ தெரிந்து கொள்ள வேண்டாம்… வருத்தப்படுவாய்”

” உன் காரில் வரவில்லையா?” என்றேன் அவன் மெத்து மெத்து மெர்சிடீஸில் பயணிக்கிற வாய்ப்பு பறிபோன வருத்தத்தில்.

“நாம் போகிற காரியத்துக்கு சொந்தக் காரில் போவது தோதுப்படாது” என்றான்.

நாய்பாவர் டாக்சிஓட்டுனரிடம் போகவேண்டிய இடத்தையும் எப்படிப் போகவேண்டும் என்றும் தாய் பாஷையில் சொல்ல அவன் மௌனமாய் தலையாட்டி புரிந்துகொண்டேன் என்பதை “கோச்சாய் காப்” என்றான். இந்த ஜெர்மானியனும் இந்தியனும் சேர்ந்து பாங்காக் நகருக்கு வெளியே தோன்புரி என்கிற, வெளிநாட்டவர்கள் அதிகம் புழங்காத, பழைய தாய்லாந்துப் பகுதியிலிருக்கும் ஒரு புராதான கோயிலுக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் ஏன் போகிறார்கள் என்று யோசித்தபடி முன் பக்கக்கண்ணாடியில் எங்களை இன்னொரு முறை பார்த்தான். நாய்பாவர் சொன்னதில் “தேவஸ்தான்” என்கிற வார்த்தை மட்டும் என்னை தட்டி எழுப்பியது.

” அந்த இடத்தின்பேர் தேவஸ்தான் என்றா சொன்னாய்” ? நான் ஆச்சரியத்துடன் கேட்டேன். “தேவஸ்தான் என்பது இந்துக்கோயில்களுக்கான சமஸ்கிருதப் பெயராய் இருக்கிறதே.. புத்தமதத்தை சார்ந்த கோயில்களுக்கு தாய்லாந்து மொழியில் “வாட்” என்பதில்லையோ பெயர்”?

“அந்த தாய்லாந்து கோயிலுக்கு இந்துமதம் சம்மந்தப்பட்ட ஒரு மர்மமான தனித்தன்மை இருக்கிறது அதுதான் பெயர்மாற்றத்துக்கான காரணம். தேவஸ்தான் என்கிற பெயருக்கே இவ்வளவு ஆச்சரியப்படுகிறாயே அந்த இடத்தில் நடக்கும் த்ரிவம்பவே த்ருபாவே என்கிற ரகசிய வழிபாட்டைப் பார்த்தால் இன்னும் ஆச்சரியப்படுவாய். “

“நண்பன் ஒருவன் கூடவருவதாய் சொல்லியிருந்தான். கடைசி நிமிஷத்தில் என்னமோ வேலை வந்துவிட்டபடியால் வரவில்லை” என்றேன்.

” நாம் அங்கு போவதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சோன்னேனே ராக்.. உன் நண்பர்களுக்கெல்லாம் ஏன் சொல்கிறாய் ?” நாய்பாவர் கொஞ்சம் பதட்டமடைந்தான். “நாம் போவதே யார் கண்ணிலும் படாமல் ரகசியமாக அந்த வழிபாட்டை பார்க்கத்தான். வெளிநாட்டவர்கள் வருவதை புத்த பிக்குகளும், தாய்லாந்து அரசாங்கமும் விரும்புவதில்லை. சில காரணங்களுக்காக இந்த வழிபாடு குறித்த செய்தி ரகசியமாய் வைக்கப்பட்டிருக்கிறது. பார்த்தால் நீயே புரிந்துகொள்வாய். குறிப்பாக நீயும் நானும் எழுத்தாளர்கள் என்று தெரிவது அவ்வளவு நல்லதல்ல”

” நல்லதல்ல என்றால்… என்ன செய்வார்கள்” ஆரம்பத்திலிருந்து பொடி வைத்து பேசுகிறவனை திரும்பிப்பார்த்தேன். எனக்கு மெல்ல பயம் சூழ ஆரம்பித்தது. “அப்படி ரிஸ்க் எடுத்துக்கொண்டு அங்கு போகவேண்டுமா..”

“பயப்படாதே ராக். ஒரு எழுத்தாளனாய் இருந்துகொண்டு இந்த சின்ன அபாயத்தைக் கூட அனுபவிக்காவிட்டால் எப்படி? யாராவது கேட்டால் சும்மா வேடிக்கை பார்க்கவந்தோம் என்று சொல்லலாம்”

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் பதினைந்து நாட்கள் இரவு நடக்கிற ரகசிய வழிபாடு. விநோதமான உருவங்கள் கொண்ட விக்ரகங்கள், புரியாத மொழியில் மந்திரங்கள், ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் செய்கிற பூஜை…. என்னை சந்தித்த ஆறு மாதங்களாய் நாய்பாவர் சொல்லிக்கொண்டிருக்கிறான். அந்த ஜாதியினர், அவர்கள் பூஜை எல்லாவற்றிற்கும் ஒரு இந்துமதத் தொடர்பு இருப்பதாய் அவன் நம்புகிறான். அதை ஊர்ஜிதம் செய்து கொள்ளவே என்னை அந்த ரகசிய வழிப்பாட்டுக்கு அழைத்துப்போகிறான். அதைக் குறித்து புஸ்தகம் எழுதப்போகிறான்.

சயாம் சொஸைடி என்கிற தாய்லாந்து கலாசார அமைப்பில் இந்தியச் சங்கம் சார்பாய் “சிவதாண்டவம்” என்ற நாட்டிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது பார்வையாளர்களில் இருந்த நாய்பாவர் நிகழ்ச்சி முடிந்ததும் எழுந்து வந்து அறிமுகப்படுத்திக்கொண்டான். நான் எழுத்தாளன் என்று தெரிந்து சந்தோஷப்பட்டான்.

” ஈசான்” என்று தாய்லாந்தில் ஒரு மாவட்டம் இருக்கிறது.. அது “ஈஸ்வரன் ” என்கிற இந்துக்கடவுள் பெயரைத் தழுவி வந்திருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று ஆரம்பித்தான். ” தாய்லாந்தின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அந்தப் பிரதேசத்துக்கு “ஈசான மூலை” என்கிற உங்கள் வாஸ்த்தி சாஸ்த்திரத்திலிருந்து கூட வந்திருக்கலாம்” என்று சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினான்.

“தாய் மொழியில் மாதங்களின் பெயர்கள் மகரம், மீனம், கும்பம், சிம்ஹம், கடகம் என்று இந்திய ராசிகளை ஒட்டியே பெயரிடப்பட்டிருக்கிறதை நீங்கள் கவனித்திருக்கலாம். புதன், வெள்ளி, சனி, சூரியன் என்ற கோள்களின் பெயர்களில் நீளூம் நாட்களும் அப்படியே. இவர்கள் மொழி சமஸ்கிருதத்திலிருந்து உருவானது.

” ஆச்சரியமாக இருக்கிறதே’

“இதற்கெல்லாம் இந்த நாட்டை ஆயிரத்து முன்னூறு வருடங்கள் ஆண்ட இந்திய அரசர்களும் அவர்கள் கொணர்ந்த இந்து மத சரித்திரமும் ஒரு காரணம். இந்த நாட்டின் அரசு முத்திரை விஷ்ணு வாகனமான கருடன். உங்கள் ராமாயணம் இங்கும் ஒரு காவியமாய் இருக்கிறது. இந்த நாட்டின் மன்னர்கள் எல்லோருக்கும் “ராமா” என்று பெயர். தாய்லாந்தின் பழைய தலைநகர் பெயர் என்ன தெரியுமா — அயோத்தியா” இன்னும் சொல்லிக்கொண்டே போனான். இந்திய பாதிப்பு தாய்லாந்திலும் இதர அண்டைய நாடுகளிலும் இருக்கும் வரலாற்றை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறவன். இந்திய மொழி மற்றும் இந்து மதத் தொடர்பு இல்லாததால் நிறைய விஷயங்களில் சந்தேகங்கள் இருக்கின்றன அவைப்பற்றி பேச ஆசை என்றான்.

அதன் பிறகு நாய்பாவரும் நானும் நண்பர்களாகிப்போனோம். எனக்கு ‘பௌலானார்” என்கிற கசக்காத அற்புதமான லாகர் பியரையும் , ஃப்ராங்க்பர்டர் என்கிற பன்றி மாமிசத்தில் ஆன சாசேஜையும் அதன் உடன்பிறப்பான கடுகு சட்னியையும், உருளைக்கிழங்கு சாலடையும் அக்டோபர் ஃபீஸ்ட் என்கிற பீர் விழாவின் போது அறிமுகப்படுத்தினவன். அவனைப் போல பீப்பாய் பீப்பாயாய் கவிழ்த்துக்கொள்ள சக்தியில்லாவிட்டாலும் பௌலானர் பியரும் ஃப்ராங்க்பர்டரும் எனக்கு பிடித்துப்போய்விட்டது. அவனுக்கு இட்லி தோசையும் சாம்பாரும். கிண்ணத்தில் இட்டிலி வைத்து சாம்பாரை ஊற்றி ஊற்றி ஊறவைத்து அந்த சன்ன இட்லி கிட்டத்தட்ட அவன் சைசுக்கு வந்த பிறகு சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடும் ரத்னா கபே தொழில்நுட்பத்தை நான் அவனுக்கு தெரியாத்தனமாய் அறிமுகப்படுத்தி அவன் சாம்பார் இட்லி பைத்தியமாகி கோமளாஸில் அவனைப் பார்த்தவுடனேயே சமையலறைப் பக்கம் திரும்பி அண்டா சாம்பார் செய்ய உத்தரவு பிறப்பிக்க கௌண்டர் பெண்கள் பழகிவிட்டார்கள். “ராக்.. பியருடன் சாப்பிட சாசேஜைவிட சாம்பார் இட்லி நன்றாயிருக்கிறது தெரியுமா” என்பான் நாய்பாவர்.

நிறைய சந்தித்தோம். நாய்பாவர், மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆயிரத்து மூன்னூறு வருடங்கள் தாய்லாந்து உட்பட தென்கிழக்கு ஆசியாவையே இந்தியர்கள் ஆண்ட சரித்திரத்தை சுவாரசியமாய் சொல்வான்.

ayutthaya_painting

“இந்தப் பிரதேசம் நாகரீகத்தில் பின்தங்கியிருந்த காலம் அது. வடக்கே கலாசார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறியிருந்த சீனாவின் காலடியில் இருந்துகொண்டு அவர்களின் அவ்வப்போதைய படையெடுப்பு இம்சையால் பலம் குன்றி சிதறிபோயிருந்தார்கள் தாய்லாந்து மக்கள். மதம், கடவுள், மொழி என்று எந்த வகையிலும் மேம்படாத இந்தப் பகுதி மக்களுக்குப் சீனர்கள் வைத்த பெயர் “தெற்கின் காட்டுமிராண்டிகள்”. இறந்து போன தங்களின் முன்னோர்களின் ஆவிகளையே கடவுளாய் தொழுது வந்தார்கள். அவர்களது சரித்திரத்தில்தான் இந்தியர்கள் குறுக்கிட்டார்கள். சைபீரியாவிலிருந்து தங்கம் வாங்கிக்கொண்டிருந்த இந்தியர்கள் இந்தப் பிரதேசத்தில் தங்கம் கிடைப்பதாய் நம்பி தாய்லாந்துக்கு தங்கம் வாங்க வந்தார்கள். இந்த நாட்டுக்கு அதன் காரணமாய் “சொர்ண பூமி” என்று பெயர் வைத்ததே இந்தியர்கள்தான். பர்மா வழியாக தரை மார்க்கமாய் கொஞ்சமும் கடல் மார்கமாய் அனேகரும் வந்தார்கள்”

“அப்போதே கடல் மார்கமாய் வர தொழில்நுட்பம் இருந்ததா?”

சாதாரணமாய் உரையாடும்போதே பிரசங்கம் பண்ணுகிறார்போல் பேசும் நாய்பாவர் என்னவாவது சந்தேகம் கேட்டால் உற்சாகமாகி ஸ்பெஷல் க்ளாஸ் எடுப்பான்.

” மூன்றாவது நூற்றாண்டில் பாரசீக தொழில் நுட்பத்தைக்கொண்டு எழுநூறு பேர் பயணிக்கக்கூடிய கப்பல்கள் கட்டப்பட்டதாய் சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன. இப்படி கப்பலில் சரக்குகள் கொண்டு வந்து வியாபாரம் செய்த இந்தியர்கள் சரக்குகளை விற்று மாற்றுப் பொருட்கள் வாங்க அவகாசம் தேவைப்பட்டதாலும் பருவக் காற்று திசை மாறும்வரையும் கடலோர கிராமங்களில் தங்கி இருக்கவேண்டியிருந்ததது. இந்தியர்களின் தற்காலிகக் குடியிருப்புகள் இப்படிதான் ஆரம்பித்தன.”

ஒரு மிடறு பியர் கவிழ்த்துக்கொண்டதில் வந்த உற்சாகத்தில் மறுபடி பேசுவான்.

“இந்த நாட்டில் தங்கியிருந்த காலத்தில் இந்தியர்கள் தங்கள் மேம்பட்ட நாகரீக வளர்ச்சியால் மொழி, வானசாஸ்திரம், மதக்கருத்துக்கள், இதிகாசங்கள் போன்ற தாங்கள் அறிந்த விஷயங்களை உள்ளூர் மக்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். உள்ளூர் மக்கள் அவர்களை எளிதாக ஏற்றுக்கொண்டார்கள். மெல்ல மக்களிடையே இவர்கள் கலந்தார்கள். சிலர் உள்ளூர் இனத்தலைவர்களின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள்.”

” இரண்டு மூன்று மாதங்கள் தங்குபவர்களுக்கு பொழுது போகணுமே ”

” இனத்தலைவர்களின் குடும்பத்தோடு சம்மந்தப்பட்டதால் இந்தியர்களுக்கு எளிதாய் செல்வாக்கும் அங்கீகாரமும் வந்து சேர்ந்தன. இந்தியர்கள் தலைமையில் இனக்குழுக்கள் தோன்றின. இனக்குழுக்களிலிருந்து சிற்றரசுகள் தோன்றி, ஒன்றோடு ஒன்று போரிட்டு இணைந்து , கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியர்கள் தலைமை வகித்த பேரரசுகள் தோன்றின. பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, வியத்நாம் உட்பட இந்தப் பிரதேசமே கெமர்கள், ஃபுனான்கள், சம்பா, விஜேயேந்திரர்கள் என்று இந்திய மன்னர்கள் ஆளுமையில் கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு வருடங்கள் இருந்தது.”

“ஊருக்குப் போய் இதுபற்றி எங்கள் தமிழ்நாட்டு கட்சிகளுடன் பேசணும் நாய்பாவர். தாய்லாந்தை தமிழகத்தோடு இணைக்கணும்னு உண்ணாவிரதம் இருப்பார்கள்”

“இந்த சரித்திரத்தின் விளைவாய் சைவ மற்றும் வைணவ கலாசாரப் பிரிவுகள் கொண்ட இந்துமதம், அதன் வழித்தோன்றலாய் பௌத்த மதம், சமஸ்கிருதத்தை அடிப்படையாய் கொண்ட மொழி, இதிகாசங்கள், அர்த்தசாஸ்திரம், மனுநீதி போன்ற அத்தனையும் இந்தப் பகுதிகளில் பதிந்து போயின. தாய்லாந்து உட்பட இந்த தென்கிழக்கு ஆசியாவே இந்திய ஆளுமையில் இருந்த சரித்திரம் இதுதான்”

“இந்த இந்திய ஆளுமை அத்தனையும் பதிமூன்றாம் நூற்றாண்டில் பொசுக்கென்று முடிந்து போனது வருத்தமாய் இருக்கிறது” என்றேன் நான்.

“இருக்கிற இடத்தை காப்பாற்றவே போராடுகிறீர்கள் !”

“தெருவோர மதுக்கடைகள், அதில் நிரம்பியிருக்கும் நடனமாடுகிற பெண்கள் என்று ஜொலிக்கிற இந்தப் பகுதியும் இந்தியாவில் ஒரு பகுதியாய் இருந்திருக்குமில்லையா? “

” இருந்திருக்கும்.. இருந்திருக்கும்… மதக் கலவரம், ஜாதிச் சண்டை, கட்சிக் கூட்டம், ஊர்வலம் எல்லாம் நடைபெறும் இடமாக இருந்திருக்கும்”

“நாய்பாவர்.. சேம் சைட் கோல் போடாதே.. தட்டு தட்டாக நீ சாப்பிட்ட சாம்பார் இட்லிக்கு கொஞ்சம் இந்தியாவின் பேரில் விஸ்வாசமாய் இரு… சரி சொல்லு எப்படி முடிந்தது இந்தியர்களின் ராஜ்யம் ?”

“மூன்று காரணங்களால் அது நடந்தது. தாய்லாந்தவர்கள் ஒன்று திரண்டது முதலாவது. இந்திய கெமர் அரசின் பலவீனத்தில் விளைந்தது இரண்டாவது. இஸ்லாமின் எழுச்சி மூன்றாவது. சீனாவுக்கு கீழே தங்கள் தேசத்தில் ஆண்டுகொண்டிருந்த தாய் இனத்தவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டின் போது மங்கோலிய கூப்ளாய்கான் அரசனால் தோற்கடிக்கப்பட்டு தங்கள் ராச்சியத்தை இழந்து ஓடிவந்து இந்திய கெமர் ராஜங்கங்களில் தஞ்சம் புகுந்து கொண்டார்கள். தஞ்சம் புகுந்தவர்கள் தங்களுக்கென்று ஒரு ராஜாங்கத்தை நிறுவ சமயம் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் இந்திய கெமர் அரசனான பலம்பொருந்திய ஏழாம் ஜெயவர்மன் இறந்துபோய் கெமர் அரசாங்கம் வலுவிழக்கத்தொடங்கியது. தாய் இனத்தின் சிறு குழுக்கள் ஒன்று சேர்ந்து கெமர் ராஜங்கத்தை வீழ்த்தி தாய்லாந்தை உருவாக்கினார்கள்.”

“அதே சமயத்தில் தெற்குப் பகுதியான இந்தோனேசியாவில் இஸ்லாமியர்களின் ஆக்ரமிப்பு ஆரம்பித்தது. ஆயிரத்து முன்னூறு வருடங்கள் இந்திய கெமர்கள் ஆண்டபெரும்பாலான பகுதிகள் தாய்லாந்தவர்கள் வசம் வந்தது. ஆனாலும் இந்திய மற்றும் இந்துமத பாதிப்பு இந்த பகுதிகளில் தொடர்ந்தன. சைவ, வைணவ சித்தாந்தங்கள், இந்து சமய வழிபாடுகள், சடங்குகள், பண்டிகைகள் போன்றவை தாய்லாந்து கலாசாரத்தில் கலந்தன.”

அவன் உணர்ச்சிப்பெருக்குடனும் சாம்பார் ஏப்பத்திலும் எடுத்துச்சொல்வதை நான் போலானார் போதை கலந்த பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருப்பேன்.

பிரெஞ்சு, பெல்ஜிய, ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் எழுதிய நூல்களை எனக்கு பரிந்துரைத்தான். தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர்கள் ஆளுமை செய்த, இதற்கு முன் நான் அறிந்திராத அந்த சரித்திரம் என்னை வெகுவாக ஆச்சிரியப்படுத்த என் பங்குக்கு நீலகண்ட சாஸ்த்ரி, மஜூம்தார், டாக்டர் திருநாவுக்கரசு, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் எழுதிய புத்தகங்களைப் படித்து விவரங்களை பகிர்ந்து கொள்வேன்.

தாய்லாந்து மொழியில் இருக்கிற இந்திய வார்த்தைகளையும் பட்டணம், கருணை, விநாடி, வேளை, ராசவீதி, மாலை, ஆசான், சிந்தனை என்று சில சுத்தமான தமிழ் வார்த்தைகளும், பெயர்களில் வீரப்பன், சாத்தப்பன், வீரவைத்தியர் போன்ற தமிழ்ப் பெயர்கள் தாய் மொழியில் பரவலாக உபயோகிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்து நாய்பாவரை ஆச்சரியப்படுத்தினேன்.

விடுமுறை நாட்களில் அயோத்தியா, கோராட், நக்கோன் ராஜசிம்மா என்று தாய்லாந்தின் பல மாவட்டங்களில் பல்லவர்கள் கட்டிய ஒன்பதாம் நூற்றாண்டு கோயில்களையும், சிற்பங்களையும் ஆராயக் கிளம்பினோம்.

anuman

“ராமனும் லஷ்மணனும் நாகாஸ்வரத்தால் கட்டுண்டு கிடக்கும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைப் பார். இது பாற்கடலில் மந்தார மலையை நட்டு வாசுகிப் பாம்பால் கடையும் காட்சி”

“ராமனையும் லஷ்மணனையும் தூக்கிக்கொண்டு ஒரு அரக்கன் போவதாய் இந்த சிற்பம் சித்தரிக்கிறதே. அது யார் ராவணனா ?இப்படி ஒரு ராமாயணக்காட்சியை நான் படித்ததில்லையே”

“இருக்கிறது நய்பவார். விராடன் கதை. இருவரும் அவன் கையை அறுத்து விடுபடுகிறார்கள்”

“பத்து கைகள் கொண்ட சிவதாண்டவ உருவச்சிலை.. சிவனின் தலை அலங்காரமும். பின் செதுக்கப்பட்டுள்ள வளைவு அலங்காரங்களும் நிச்சயமாய் தமிழ் நாட்டு சிற்பக்கலையை சார்ந்தவை”

“சிவன் காலடியில் பூதம் மாதிரி ஒரு வயதான அம்மாளின் உருவம் வரைந்திருக்கிறதே.. யார் அது”

“காரைக்கால் அம்மையாராக இருக்கலாம். கடல் வாணிபம் செய்ய வந்த இந்தியர்கள் இங்கே ஆக்ரமித்ததை வரலாறாகச் சொன்னாய் இல்லையா? அந்த கடல் வாணிகர்கள் வழிபட்ட தெய்வம் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டு முதல் தமிழகத்து கடல் வாணிகர்கள் காரைக்கால் அம்மையாரை” தங்கள் குலதெய்வமாய் வழிபட்டனராம்”

“சபாஸ். ” என்பான் நாய்பாவர் ” தாங்க்கே ஷூன்” என்பேன் நான்.

“இந்த விஷ்ணுவின் அனந்தசயனச் சிலை இருக்கிறதே இது மிகப் பிரபலம். யாரோ இதை திருடி அமெரிககவில் ‘சிக்காகோ’ கலைகூடத்திற்கு விற்று விட்டார்களாம். அதைப் போராடிக் கொணர்ந்து கோயிலில் மறுபடி பொருத்தியிருக்கிறார்கள்.”

போக்குவரத்து சந்திப்பில் டாக்ஸி நின்ற இடத்துக்கு இடப்புறமிருந்த பிரம்மா கோயிலில் சாமந்திப்பூவும் சாம்பிராணி புகையுமாய் வழிபாடு நடப்பது தெரிந்தது. மண்டியிட்டு ப்ரார்த்தனை செய்பவர்களும் பிரார்த்தனை பலித்ததால் காணிக்கை செய்பவர்களும், பளபள உடை, கிரீடம், ஆபரணங்கள் அணிந்த பெண்கள் பின் புலத்தில் நடணமாடிக்கொண்டிருக்க தலைக்கு மேல் நகரின் மூன்றடுக்கு மெட்ரோ ரயில் கிரீச்சிட்டபடி விரைந்துகொண்டிருக்க இரண்டாயிரம் ஆண்டு நம்பிக்கைகளும், அறிவியல் முன்னேற்றமும்,பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாய் சங்கமிக்கிற அந்த இடம் பரபரப்பாய் இருந்தது.

“குப்தர்களின் தாக்கம் கூட இந்தப் பிரதேசத்தில் இருந்ததென்று மஜூம்தார் எழுதியிருக்கிறார் நாய்பாவர்”

“சமுத்திர குப்தா வடக்கிலிருந்து படையெடுத்து பல்லவர்கள் ஆளுமைக்கு உட்பட்ட தென்னாட்டு பகுதிகளில் ஊடுறுவத் தொடங்கியதும் பல்லவர்கள் வேறு இடம் தேடி தென்கிழக்கு ஆசியாவில் புக ஆரம்பித்தார்கள். சோழர்களும் குறிப்பாய் பல்லவர்களும் தாய்லாந்தில் ஆட்சி புரிந்ததற்கு தர்க்கரீதியான அனுமானங்கள் இருக்கின்றன.” என்றான்.

“தென்கிழக்கு ஆசியா பகுதியில் ஆண்ட கெமர், புனான், சம்பா அரசின் மன்னர்களின் பெயர்களைப் பார்… சூரிய வர்மன், நரசிம்ம வர்மன், ஜெயவர்மன், கிருதவர்மன், குணவர்மன், விக்ரவர்மன் என்றே இந்த மன்னர்கள் பெயர்களை வைத்துக்கொண்டார்கள்.. எல்லோர் பெயரிலும் “வர்மன்” என்று வருகிற பட்டப்பெயர் ஷத்ரியரைக் குறிக்கும். இதுபோல வர்மன் என்ற பெயரை வைத்திருந்தவர்கள் தென்னிந்திய அரசர்கள். குறிப்பாக பல்லவர்கள். இது யதேச்சையான நிகழ்வு இல்லை. இந்திய சரித்திரத்தை குறிப்பாய் பல்லவர்களின் அரச வம்சத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். இந்தியாவில் குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த பல்லவ அரசன் ஆட்சிசெய்தானோ அந்த அரசன் பெயரும் இங்கே தாய்லாந்தில் அதே காலகட்டத்தில் ஆட்சி செய்த அரசன் பெயரும் ஒன்றாய் இருக்கிறது என்பது இங்கே கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் உண்மை.” என்றான் தொடர்ந்து

jayavarman-vii-angkor-thom

” ம்ம்…… ஒரே அரசன் இரண்டு பகுதிகளையும் ஆண்டிருக்க வேண்டும் அல்லது இங்கே ஆட்சி செய்த அரசன் பல்லவ ஆட்சிக்கு உட்பட்டவன் என்கிறதால் அந்தப் பெயரையே வைத்துக்கொண்டிருக்கவேண்டும்.. இதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கிறதா?”

“ஏராளமாய்.. சீனர்களும் பிரெஞ்சு நாட்டு சரித்திர ஆராய்ச்சியாளர்களும் எழுதிய நூல்கள்.”

” ராசசிம்மன் என்கிற பெயர்கொண்ட அரசன் ஏழாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியாவில் அரசாண்டிருக்கிறான். இதே காலகட்டத்தில் இந்தியாவில் ராசசிம்மன் என்னும் பல்லவ அரசன் ஆண்டிருக்கிறான். மகேந்திரவர்மன் என்கிற கெமர் அரசன் தான் பெற்ற வெற்றிகளை நிலைநாட்ட மலையின் மீது சிவனுக்கு ஒரு கோயிலை எழுப்பி மாபெரும் லிங்கம் ஒன்றை பிரத்திக்ஷ்டை செய்தான். அதே கால கட்டத்தில் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன் காவிரி ஆற்றை எதிர்நோக்கியபடி திருச்சிராப்பள்ளி குன்றின் மீது அவனும் ஒரு கோயிலை எழுப்பியதையும் சுட்டிக்காட்டி சரித்திர ஆராய்ச்சியாளர் நீலகண்ட சாஸ்த்ரி எழுதியிருக்கிறார். இந்த இருவருடைய கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்களில் நெருக்கமான ஒற்றுமைகள் இருப்பதை பற்றியும் எழுதியிருக்கிறார்.”

“பிரமாதம். மூவாயிரம் மைலகள் இடைவெளி உள்ள இரு மன்னர்கள் ஒரே பெயரை வைத்துக்கொள்வதும் ஒரே வகையில் கோயில் கட்டுவதும் அவர்களின் கல்வெட்டுகள் இரண்டும் ஒரே போல இருப்பதும் தற்செயலாக நிகழ்ந்திருக்காதுதான்.”

“கெமர் அரசனான முதலாம் ஜெயவர்மனுடைய கல்வெட்டு ஒன்று இந்திய பல்லவர்களைப் பற்றி நேரடியாகவே குறிப்பிடுகிறது. கம்போடியாவின் முதலாம் ஜெயவர்மனுடைய ஏழாம் நூற்றாண்டு கல்வெட்டில் காஞ்சி அரசனைப் போற்றும் ஒரு தொடர் வருகிறது. கெமர் அரசர்களை பல்லவர்கள் வென்றதைப் பற்றிய குறிப்பு சாளுக்ய அரசன் விநயாதித்தனின் கல்வெட்டு ஒன்றில் காணப்படுவதை மஜூம்தார் எழுதியிருக்கிறார். கெமர் மன்னன் ஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் பொறிக்கப்பட்ட கம்போடியாவில் உள்ள கல்வெட்டு ஒன்றில் பல்லவ மன்னர்களும் தென்னாட்டில் தோன்றிய சங்கராச்சியாரை பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூன்றாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சமஸ்கிருதத்தை தமிழில் எழுத உருவாக்கிய “கிரந்த எழுத்துக்களே” தென்கிழக்கு ஆசியாவில் பரவிய மொழி வடிவம் என்கிற கருத்தும் ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது.”

“போறும் தலை சுத்துகிறது நாய்பாவர்”

“தாய்லாந்தின் உட்புறங்களில் இடிபாடுகளாய் இருக்கும் பல கோயில்களில் இந்து மதக் கடவுள்களின் உருவங்கள் சிலையாய் வடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கோர்வட் என்கிற உலகப்புகழ் பெற்ற கோயிலை கட்டியது சூர்யவர்மன். ப்ரசாட் பிமாய், ப்ரசாட் பனோம் ருங் போன்ற கோயில்களின் இந்தப்புகைப்படங்களைப் பார்”

அவன் காட்டிய கோயில்கள் மாமல்லபுரம் கோயில் கோபுரங்களின் வடிவத்தை பிரதிபலிப்பதைச் சொன்னேன். இணையத்திலிருந்து இறக்கியிருந்த மாமல்லபுரம் கோயில்களின் புகைப்படங்களை அவனிடம் காண்பித்தேன். திருச்சி மலைக்கோட்டை கோயிலைப் பற்றிய செய்திகளை கொடுத்தேன். “தாங்கே ஷீன்” என்று கைகுலுக்கி சந்தோஷமாய் வாங்கிக்கொண்டான்.

“பல்லவர்களுக்கும் இந்தப் பிரதேச மன்னர்களுக்கும் ராஜாங்கத் தொடர்பு இருந்திருக்கிறது. பல்லவ மன்னர்கள் தெற்கு ஆசிய கெமர் ராஜ்யத்தில் திருமணம் செய்து கொண்ட குறிப்புகள் இருக்கின்றன. கெமர் இளவரசி ரங்க பதாகை என்பவளை இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான்.”

“எங்கள் ஊரில் கிளி கொஞ்சும் பெண்களை விட்டு இங்கே வந்து ஒரு சப்பை மூக்கு பின்னல் அலைந்திருக்கிறான் அந்தப் பல்லவன். பைத்தியக்காரனாய் இருப்பான் போல, “

“பெண்டாட்டியை விட்டுவிட்டு பாங்காக் வரும் உங்க ஊர் ஆட்கள் மசாஜ் பார்லர் பெண்கள் பின்னால் அலைகிறார் போல”

“ஆரம்பிச்சியா.. சரி உன் சரித்திரப்பாடத்தை தொடரு”

” இதுமட்டுமல்லை. தென்கிழக்கு ஆசியாவின் கெமர் அரசர்கள் இந்தியாவில் வந்து அரசாண்ட சரித்திரமும் நடந்திருக்கிறது. கெமர் நாட்டிலிருந்து இரண்டாம் நந்திவர்மன் என்னும் மன்னனைக் கொண்டுவந்து பல்லவ அரசனாக முடிசூட்டிய சரித்திரமும் அதில் ஒன்று. “

“பல்லவர்கள் மட்டுமல்ல சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் தென்கிழக்கு ஆசியத் தொடர்பு இருந்திருக்கிறது. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பு ஒன்று வியத்நாமில் சம்பா எனும் அரசை ” ஸ்ரீ மாறன்” என்கிற அரசன் நிறுவினான் என்று சொல்கிறது. இதை ஆராய்ச்சி செய்த ழூவோ பிலியோழா என்கிற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ” மாறன்” என்பது பாண்டியரின் வம்சப் பெயர் என்றும் இந்த ஸ்ரீமாறன் என்கிற பாண்டியன் நிறுவிய அரசே “சம்பா” என்றும் சொல்கிறார்.

டாக்ஸி பாங்காக்கின் போக்குவரத்து நெரிசலை கடந்து விரைந்து கொண்டிருந்தது. டிசம்பர் குளிரை விரயமாக்காமல் சாலைகளின் நடைபாதைகளில் ஆங்காங்கே முளைத்திருந்த உணவகங்களில் ஏராளமான வெளிநாட்டவர்கள் பல்லவர்கள் ஆட்சி, ரகசிய வழிபாடு போன்ற மர்மமான சமாசாரங்களின் கவலை இல்லாமல் கையடக்கமான தாய்லாந்தின் வாடகைப் பெண்களை மடியில் அமர்த்தியபடி பியர் அருந்திக்கொண்டிருந்தார்கள். டாக்ஸி சௌப்ரயா நதியைக் கடந்து ஆற்றில் மிதந்துகொண்டிருந்த சொகுசுப்படகுகளையும் கரையோர நட்சத்திர ஹோட்டல்களின் மினுக்கல்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு நகரத்தின் இருட்டான மறுபக்கத்துக்கு விரைந்தது.

“இதற்கு இன்னொரு கோணம் இருக்கிறது நாய்பாவர். பாண்டியர்களை விட சோழர்களின் ஆளுகை இந்தப் பிரதேசத்தில் அதிகம் இருந்திருக்கிறது. சோழர்கள் தலைநகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு “சம்பாபதி” என்ற பெயர் இருந்தது. அதனால் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சென்ற சோழர்கள் அந்தப் பிரதேசத்துக்கு “சம்பா” என்று பெயரிட்டிருக்கலாம்.”

“அப்படிச் சொல்கிறாயோ !”

“பல்லவர்கள் போல சோழர்களுக்கும் இங்கே அரசியல் தொடர்பு இருந்திருக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களை வீழ்த்திய சோழ சாம்ராஜ்யம் தென்கிழக்கு ஆசியாவில் அரசியல் தொடர்பை தொடர்ந்திருக்கலாம் இல்லையா?”

“இருக்கலாம்”

“என் தரப்பு வாதங்களை கேள். சோழ அரசனாகிய ராஜாதிரஜன் என்கிற பெயரையும், சோழ அரசன் முதலாம் குலோத்துங்கன் பயன்படுத்திய “திருபுவனச் சக்ரவர்த்தி ” என்னும் பட்டத்தையும் தென்கிழக்கு ஆசிய மன்னர்கள் வைத்துக்கொண்டார்கள். நீ இரண்டாம் நரசிம்ம பல்லவன் பற்றி சொன்னாயே… எங்கள் சோழர் பக்கத்தைப் பார். கியாசிந்தன் என்கிற பர்மா பகுதியை ஆண்ட அரசன் ஒருவன் எங்க ஊர் சோழ நாட்டு இளவரசி ஒருத்தியை மணம் செய்து கொண்டான் தாய் நீலகண்ட சாஸ்திரிகள் எழுதியிருக்கிறார். ராஜேந்திர சோழன் கடல் கடந்து வந்து ஸ்ரீவிஜய அரசின் மேல் படையெடுத்து சுமத்ரா, மலேயா என்று கடாரம் வரை ஜெயித்திருக்கிறான். பதினொன்றாம் நூற்றாண்டில் ஒருமுறை இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜய அரச குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட ராஜாங்க சச்சரவில் தலையிட்டு படையெடுத்து ராச்சியத்தை உரிய உள்ளூர் மன்னருக்கு தந்துவிட்டு திரும்பியிருக்கிறான்”

“ஃபேசினேட்டிங்”

டாக்ஸி நின்ற இடம் மகா இருட்டாய் பல்லவர்கள் கால வெளிச்சத்தில் இருந்தது. யாரும் பார்த்துவிடக்கூடாது என்று கொஞ்சம் தள்ளியே இறங்கிக்கொள்கிறான் என்ற என் சந்தேகத்தை கண்ணால் ஊர்ஜிதம் செய்தான் நாய்பாவர். கவனம் அதிகம் ஈர்க்காத சாம்பல் நிறச் சட்டையும் கறுப்பு கால்சராயும் அணிந்திருந்தான். என்னையும் அப்படியே வரச்சொல்லியிருந்தான். குறுகலான சந்துகளில் நுழைந்து நடந்து மூங்கிலால் வேய்ந்த வேலி அமைந்த மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் முன்னும் பின்னுமாய் சென்று தேடினான். எனக்குள் மென்மையான படபடப்பு நிரம்பியது. அவன் நின்ற இடத்தில் ஒரு உடைந்து போன கம்பி கேட் இருக்க அதைத் தள்ளிவிட்டு என்னிடம் சமிக்ஞை செய்தான்.

“இந்த இடமா? இங்கு கோயிலே இல்லையே”

“இது இல்லை. அந்தக் கோயிலுக்கு பின்புறம் இருக்கும் இடம் இது. இங்கே ஷூவ்லிங் வழிபாடு என்றூ அமானுஷ்யமான சங்கதி என்னமோ இருக்கிறதாம்.. பார்க்கலாம் வா”

நிலா வெளிச்சம் பளிச்சென்று பரவியிருந்தாலும் கையில் எடுத்துவந்த டார்ச் விளக்குகளின் துணையில் அந்த மரங்களுக்கு இடையே நடந்தோம். காய்ந்த சருகுகளில் நாங்கள் கால் பதித்து நடக்கும் ஓசை பூதாகரமாய் கேட்டது. படபடவென்று சிறகை அடித்துப் பறந்த ஒரு பறவையின் அரவம் எங்களைத் தாண்டி சென்றது.

“கிருதவர்மன், குணவர்மன் யாராவது ஆவி ரூபத்தில் நம்மை பின்தொடர்கிறார்களா?”
“ஷ்.. பேசாமல் வா” என்றான்

குளிரை மீறி வியர்த்திருந்தேன். கொஞ்ச தூரம் நடந்தவுடன் சிறிய அறிவிப்புப்பலகை எங்களை குறுக்கிட நாய்பாவர் டார்ச் அடித்து அந்த தாய்மொழி ஜிலேபிகளை படித்துப்பார்த்துவிட்டு ” இந்த இடம் தான். ஷூவ்லிங் வழிபாட்டு ஸ்தலம் என்று போட்டிருக்கிறது” என்றான்.

“ஷூவ்லிங்….. ஷூவ்லிங் வழிபாடு என்றால். ஷாவ்லின் டெம்பிள் என்று சீன குங்பூ படங்களில் வருமே அதுபோல சீன டிராகன் வழிபாட்டு முறையா ” ? போய் சேருகிற இடத்தில் உத்திரவாதமாக காவி சுற்றிய மொட்டை புத்தபிக்கு கை கால்களை எல்லாம் பக்கவாதம் வந்த மாதிரி முறுக்கிக்கொண்டு ‘டிஷான்” என்று விலாவில் அடித்து வீழ்த்தப்போகிறது மாதிரி தோன்றியது.

“உள்ளே போய் பார்த்துவிடுவோம் வா”

இரு பக்ககமும் அடர்ந்திருந்த மரங்களுக்கு இடையே அந்தப் பாதை உருவாகியிருந்தது. பாதையின் முடிவில் சின்ன மூங்கில் பட்டைகளால் ஆன கதவு தெரிந்தது. அதைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த இடத்தில் ரோஜாப் பூவும் கந்தகமுமாய் விநோதமான வாடை கழிந்திருக்க, உள்ளேயும் அடர்த்தியாய் மரங்கள் இருந்தன. மரங்களுக்கு இடையே எட்டடி உயரத்தில் என்னவோ தெரிந்தது. மூலையில் ஒரு சிறிய தகரப் பட்டைகள் வேய்ந்த இடமும் அதன் உள்ளே மங்கலாய் வெளிச்சமும் தெரிய திண்ணை போன்ற அதன் முன்பக்கத்தில் ப்ளாஸ்டிக் தட்டுகளில் படையல் சாமான்கள் போல என்னமோ இறைந்து கிடந்தன.

அந்த சிறிய இடத்தில் நடுநாயகமாய் இருந்த அந்த இடத்தில் நாங்கள் டாட்ச் விளக்கு அடித்துப்பார்த்தோம். கொஞ்சம் போல வாடிப்போயிருந்த ரோஜாப்பூ மாலை, பளிச்சென்று தெரிந்த மஞ்சள் சாமந்தி பூ குவியல், குவித்து வைத்த மண் மேல் ஊதுபற்றிக் கற்றை எரிந்து சாம்பாலாய் பரயிருந்தது. பக்கத்து தட்டில் உரித்துவைத்த தலைசீவப்பட்ட கோழி, இளநீர் கொத்து, ஆரஞ்சுப் பழங்கள்… சம்மந்தமே இல்லாமல் ஸ்டிரா வைத்த ஒரு கோக்கோகோலா பாட்டில்.. யாரோ மிகச் சமீபத்தில் இங்கே பூஜை செய்திருக்கவேண்டும். டார்ச் வெளிச்சத்தை அந்தப் படையலிலிருந்து மெல்ல நீட்டித்து அந்த எட்டடி பிம்பத்தின் மேல் படரவிட்டதும் நானும் நாய்பாவரும் பேச்சற்று போனோம்.

திடமான தூண் போல தோல் வண்ணத்தில் வட்டமாய் வழுவழுப்பாக புடைத்து நீண்ட அந்த சிலை மெல்ல குறுகி மறுபடி முனையில் ஆரஞ்சு வர்ணத்தில் பெருத்து நடுவில் மெல்லிய கோடு போல பிளந்து…..விடைத்து நின்ற ஆண் குறி. கீழிருந்து பச்சையாய் ஒரு நரம்பு கோடு முனை வரை தீற்றி நின்றது.

” ஆண் குறியையா வழிபட்டு பூஜிக்கிறார்கள் ? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இவர்கள் தங்களது முன்னோர்களின் ஆவியை தான் தெய்வமாய் வணங்கினார்கள். இவர்களுக்கு கடவுள் அறிமுகமே இந்தியர்களால் நிகழ்ந்தது என்று படித்திருக்கிறேன்.” நாய்பாவர் டாட்ச் லைட்டை இறக்காமல் வியந்தபடி நின்றான்.

“. இதை வைத்து கணித்தால் அந்த ஆள் எங்க ஊர் ஷ்ரவணபெலகோளா சிலை சைசில் இருந்திருக்கவேண்டுமே”

“இந்த வகை வழிபாடு இந்தியர்கள் மூலமாகவா வந்திருக்கும் ?.. ஷூவ்லிங் வழிபாடு என்று இதற்கு எப்படி பெயர் வந்தது? “

“ஷூவ்லிங்…” திரும்பத் திரும்ப சொல்லிப்பார்த்தேன். “நாய்பாவர் அது “சிவலிங்கம்” அல்லது “சிவலிங்” கொஞ்சம் திரிந்து ‘ஷூவ்லிங்’ என்று ஆகிவிட்டிருக்கலாம். ஆண் குறியையும் யோனியையும் உணர்த்துகிற சிவலிங்கத்தின் ஆதார வடிவத்தை இவர்கள் மாற்றாமல் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”

“கரெக்ட்”

“தெருவெல்லாம் சாராயக்கடை வைத்து பொம்பளைங்களை அவிழ்த்துப்போட்டு ஆட வைக்கிற நாட்டில் இதுதான் சாமியாக இருக்கும்.. சத்தியமா நம்புகிறேன்.. “

நாய்பாவர் குடிலை நெருங்கி அதன் ஜன்னல் வழியாய் உள்ளே பார்த்தான். “யாரும் இல்லை. உள்ளேயும் என்னமோ சிலை வைத்து விளக்கு ஏற்றி வைத்திருக்கிறது.”.. தின்ணையின் ஒரு பக்க சுவற்றில் தேடி ஒரு ஸ்விட்ச் தென்பட அதை போட்டான் நாய்பாவர். இரண்டு மூன்று மின்சார விளக்குகள் உயிர்பெற்று இறைத்த வெளிச்சத்தில் அந்த இடம் பிரகாசமானது. தோட்டம் போன்ற அந்த இடம் பூராவும் சின்னதும் பெரியதுமாய் மரத்தால் ஆன ஆண்குறிகள் நட்டுவைக்கப்பட்டு இறைந்திருந்தன. எனக்குள் குறுகுறுப்பாய் உணர்ந்தேன்.

” சனியன்… இனிமே ஆயுசு பூரா இது வியற்காலை கனவுல வந்து என்னை பயமுறுத்தப்போறது..யார் இதையெல்லாம் கும்பிடுவது?.. “

“மந்திரம் தந்திரம் பில்லி சூனியம் போன்றவைகளை பழகும் ஒரு பிரிவினர் இங்கே உண்டு. அவர்கள் வழிபடும் இடம் இது”

விளைக்கை அணைத்துவிட்டு மறுபடி நடக்க ஆரம்பித்தோம். மறுபடி குறுகலான சந்துகள் வழியே நடந்து இடப்புறம் தென்பட்ட புத்தமடாலயத்தைக் கடந்து பெரிய மைதானம்போல தோற்றமளித்த அந்த இடத்தைச் சுற்றி ஆட்டோக்களும் , ஓரிரு கார்களுமாய் வாகனங்கள் போய்க்கொண்டிருந்தன. என்னை நிறுத்தி “அங்கே பார்” என்று மைதானத்தின் நடுவில் இருந்ததை சுட்டிக்காட்டினான். என் சமீபத்திய அனுபவத்திற்குப் பிறகு நாய்பாவர் சுட்டிக்காட்டியதையெல்லாம் சட்டென்று பார்க்க மனசு கொஞ்சம் தயங்கியது. இரண்டு பூதாகரமான சிவப்பு வர்ண கம்பங்கள் மேல் நோக்கி நீண்டு இறுதியில் அலங்கார வளைவு போல இணைந்து நின்றது. அலங்கார வளைவுக்கு கீழே ஒரு நேர்கோடாக இரும்புக் குழாய் இரண்டு பிரதான இரும்பு கம்பங்களையும் இணைத்து நின்றது. முப்பது மீட்டர் உயரம் இருந்தது அந்த இரும்பு வேலைப்பாடு.

“இந்தக் கம்பத்தில் பெரிய ஊஞ்சல் கட்டி இரும்புக்கம்பிகளின் மேல் பக்கத்தில் பணமுடிப்புகள் வைத்து ஊஞ்சலை ஆட்டி ஆட்டி ஆடி பணப்பையை பறிக்கும் உறியடிபோன்ற ஆட்டம் ஆடப்பட்ட இடம் இது. விவசாயத்துக்கு பருவ மழை நிறைய பெய்ய வேண்டும் என்கிற வேண்டுதலோடு நடைபெற்ற ஆட்டம் இது. விபத்துகள் ஆனதாலும் இந்து மதத்தோடு நெருங்கிய தொடர்புடைய விழாவாக இருந்ததாலும் இதை நிறுத்திவிட்டார்கள்.” நாய்பாவர் விளக்கினான்

“இதற்கு இந்து மதத் தொடர்பு எப்படி வந்தது ?

“இந்த ஊஞ்சலாட்டம் நடைபெற்றது அந்தப் பின்னணியில்தான். ஆட்டத்தை முன்னிருந்து நடத்துவது சிவன். தாய்லாந்து நாட்டுக்காரர் ஒருவர் சிவன் போல் வேடமணிந்து இடது காலை பூமியில் வைத்தபடி அமர்ந்து ஒருவர் உட்கார்ந்து கொண்டு துவக்கி வைக்க இந்த ஆட்டம் நடந்தது.”

“ஓ… ஒரு புராணக்கதை இருக்கிறது. சிவனும் பார்வதியும் கைலாயத்தில் வாசுகிப்பாம்பை கட்டி ஊஞ்சலாடிக்கொண்டிருந்தார்களாம். ஆட்டத்தின் வேகத்தில் மேகம் திரண்டு மழை பொழிய ஆரம்பித்ததாம். மழை பொழிந்து வெள்ளம் பிரவாகமெடுத்து பூமியே மூழ்கிவிடும் அபாயம் வந்து தேவர்கள் முறையிட்டதில் சிவனும் பார்வதியும் ஆட்டத்தை நிறுத்தினார்கள் என்று ஒரு கதை படித்திருக்கிறேன்.”

“இந்தப் படத்தைப் பார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.” வீதி விளக்கு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்த ஊஞ்சலாட்டத்திற்கு மேல் டார்ச் அடித்து காண்பித்தான். இரும்புக்கம்பியிலிருந்து கயிற்றில் பிணைக்கப்பட்ட ஊஞ்சலிலில் நின்று ஆடிக்கொண்டிருக்கிறவர்கள் கையை நீட்டி எதையோ பற்றிக்கிறமாதிரி படம். கீழே மக்கள் கூட்டம்.

“புகைப்படத்தில் கூட்டதிலிருப்பவர்களை பார். அதிகாரி துண்டை தோளில் போட்டிருக்கிறார். சாதரணவர்கள் துண்டை இடுப்பில் கட்டியிருக்கிறார்கள். இது கூட எங்கள் ஊரில் கடைபிடிக்கப்படும் வழக்கம்தான்”

“தகவலுக்கு நன்றி ராக்”

“இன்னொரு பின்னணி சொல்கிறேன் கேள். மார்கழித் திருவாதிரைத் நாளில் பிறந்த முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்த பிறகு சிவன் கோயில்களில் இந்த ஊஞ்சல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாதிரை என்கிற நாளில் முறைப் பெண்களை ஊஞ்சலில் வைத்து முறை மாப்பிள்ளைகள் ஊஞ்சலாட்டும் வழக்கமாக மாறியது. இந்த ஊஞ்சலாட்டு திருவிழா கூட தாய்லாந்தில் இப்படி உருமாறியிருக்கலாம்”

“எல்லா சமாசாரங்களுக்கும் சோழர்களை முன்னிலைப்படுத்தி ஒரு கருத்து வைத்திருக்கிறாய்”
“நான் தஞ்சாவூர்காரன் நாய்பாவர். சோழர்களின் வரலாற்றில் எனக்கு கொஞ்சம் நாட்டமுண்டு”

“அதானே பார்த்தேன். இந்தியர்களுக்கே உண்டான பாரபட்ச உணர்வு. நீங்கள் எந்தப்பக்கத்திலிருந்து வருகிறீர்களோ அந்த பிரதேசத்தின் பாதிப்புதான் இது என்று வாதாடுவது. வங்காளிகள், தமிழர்கள், ஒரியாகாரர்கள் என்று தென்கிழக்கு ஆசியாவின் சரித்திரத்தை ஆராய்ந்த ஒவ்வொரு இந்தியரும் ஒரு கதை சொல்வதன் காரணம் இதுதான்”

“இதை பாரபட்ச உணர்வு என்று ஒதுக்கிவிடாதே. உன்னைப் போன்ற ஜெர்மனிக்காரர்களுக்கும் பிரெஞ்சு காரர்களுக்கும் நுணுக்கமான விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொத்தம் பொதுவாக இந்தியாவிலிருந்து வந்தது என்று சொல்வீர்கள். இப்படி ஒரு கோணம் இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன். அதை எடுத்துக்கொள்வதும் நிராகரிப்பதும் உன் இஷ்டம்.. போ”

“ஓகே கோபித்துக்கொள்ளாதே சோழ வீரா.. உன் வாதங்களில் நியாயமிருப்பதை ஒப்புக்கொள்கிறேன்”

அந்த சிவப்புக் கம்பத்தைத் தாண்டி நீண்ட ரஸ்தாவில் நடக்க ஆரம்பித்தோம். வீதி விளக்குகள் முற்றுப்பெற்று இருட்டாக நீண்ட தெருக்களை கடக்கும்போது இருபுறமும் நீண்டிருந்த சிறிய ஓடு வீடுகளின் முன் படுத்திருந்த சோகையான நாய்கள் ஒன்றிரண்டு தலை தூக்கிப்பார்த்து பெயருக்கு குரைத்துவிட்டு மறுபடி படுத்துக்கொண்டன. நாய்பாவர் மௌனமாய் எதிர்திசையில் தென்பட்ட சுண்ணாம்புச் சாயம் அடித்த ஒரு கட்டிடத்தை காண்பித்தான். ஆள்காட்டி விரலால் உதட்டை தொட்டு “கொஞ்ச நேரமாவது வாயை மூடிக்கொண்டு வா” என்று சமிக்ஞை செய்தான். சப்தம் போடாமல் நடந்து போனோம். மூங்கில் வேலி தாண்டியதும் மேற்கொண்டு எங்ளளை போகவிடாதமாதிரி நின்றது நான்கு முகங்களோடு தங்கமுலாம் பூசிய பிரம்மாவின் சிலை. வலது பக்க பாம்புப் புற்றை ஒட்டினாற்போல சிவனின் சிலை நிலா வெளிச்சத்தில் ரம்யமாய் தெரிந்தது. மடியில் விநாயகர்.

ஓடு வேய்ந்து நான்கு பக்க முனைகளிலும் நாகம் போன்ற வடிவமைத்திருந்த அந்த கட்டிடத்தின் கதவு மூடப்பட்டிருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே மங்கலான வெளிச்சம் பரவிய அறையினுள் கோவில் போல இல்லாமல் ஒரு முனையில் புராதானமான சிலைகள் தெரிந்தன. சிலைகளுக்கு முன் இளநீர் குலைகளும், பழங்களும் பூக்களும் இறைந்து கிடக்க ஊதுபத்தி வாசம் அறையை நிறைந்த்திருந்தது. அறையின் பின்பக்கம் வெள்ளை உடை தரிந்த பத்து பதினைந்து பேர் அமர்ந்திருக்க அவர்களின் தலைமை குரு போல தோற்றமளித்தவர் நின்று பூஜை செய்துகொண்டிருந்தார்.

நாய்பாவர் என்னைப் பார்த்து ” அவரைப் பார்.. புத்த பிக்குவின் காவி உடையும் இல்லை அவர்களைப் போல முழுவதும் தலை மழிக்கவுமில்லை.. இவர்களை ப்ரோம் என்று அழைக்க்கிறார்கள்”

நான் தலைமை குருவை கூர்ந்து கவனித்தேன். அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. தலையின் முன்பக்கம் மழித்து பின் மயிரை சேர்த்துக்கட்டியிந்த குடுமி. நெற்றியில் சந்தனம் இட்டு குங்குமப்பொட்டு நடுவாந்திரமாய் ஒளிர்ந்தது. வெள்ளை வேட்டியை பஞ்சகச்சமாய் கட்டியிருந்தார். கைகளில் விபீதிப்பட்டை, அவர் போட்டிருந்த வெள்ளைத் துண்டை எடுத்து இடுப்பைச் சுற்றி கட்டிக்கொண்டதும் அவர் மார்பில் பூனூல் பளிச்சென்று புரள வைத்தீக பிராமணணாய் தெரிந்தார்.

” அட நம்மாளு” என்றேன்
“நம்மாழ்வாரா”

” அவரோட ஒண்ணுவிட்ட சித்தப்பா…. அட இல்லைப்பா.. இவர் ஒரு பிராமணன். நானும் பிராமணன்தான். இந்த ஊரில் பிராமணர்கள் இன்னும் இருக்கிறார்களா” என்றேன் நான் ஆச்சரியமாக.

“பிராமணர்கள் தான் ப்ராம் ஆகிவிட்டதா” என்றான் நாய்பாவர் அவன் பக்கத்து ஆச்சரியத்துடன்.

“இவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தென்கிழக்கு ஆசியாவுக்கு வந்த பிராமணர்களின் வழி வந்த சந்ததியினர். இந்திய மன்னரட்சி முறையில் ஷத்ரியனான ஒரு மன்னனுக்கு பிராமணனான ஒரு குருவின் ஆலோசனையும் உதவியும் தேவையாயிருந்தது. முடிசூட்டுவது, ஜாதகம் கணிப்பது, ராஜாங்க கோட்பாடுகளை எடுத்துரைத்து வழி நடத்துவது போன்ற அத்தனையும் ஒரு பிராமணனின் கடமையாக இருந்தது. இந்திய ராஜாங்கங்கள் இங்கே வேர் விட்டபோதும் அந்தக் கடமைகளை செய்தவர்கள் பிராமணர்கள். இப்படி மன்னர்களுடன் உருவான பிராமணர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஒரு சக்தி வாய்ந்த பிரிவாய் இருந்தார்கள். ராஜ வம்சத்தினர் சில சமயம் பிராமணக் குடும்பங்களில் கல்யாணம் செய்து கொண்டார்கள். ஒரு மன்னருக்கு பிள்ளைகள் பிறக்காத போது வாரிசு தேவையாக இருந்த சமயத்தில் பிராமணக் குடும்பத்திலிருந்து மன்னரின் வாரிசு நியமிக்கப்பட்டார். பல்லவர்கள் சோழ மன்னர்கள் இங்கே ஆட்சி புரிந்தார்கள் இல்லையா அவர்களின் தலைமை புரோஹிதர்களாகவும், மந்திரிகளாகவும் இருக்க இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டார்கள்.”

“பத்தாம் நூற்றாண்டில் பல பிராமணர்கள் இந்தியாவிலிருந்து கெமர் அரசர்களால் கொண்டுவரப்பட்டார்கள் என்கிறது தென்கிழக்கு ஆசிய சரித்திரம். உதாரணமாய் இரண்டாம் ஜெயவர்மனுக்கு சடங்குகள் செய்து ஞான உபதேசம் செய்த இரணிய தர்மன் என்கிற பிராமணர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர் என்று படித்திருக்கிறேன்..”

“தென்கிழக்கு ஆசியாவில் இந்து மதம், பூஜை பழக்கங்கள், புராணக் கதைகள் போன்றவை பரவ இவர்கள் முக்கியமான காரணமாய் இருந்தார்கள். மன்னர்களின் அரச பரம்பரையின் ஆஸ்தான குருமார்கள் இவர்கள். அரச குடும்பத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இவர்களே தலைமை வகித்து நடத்தினார்கள். இந்தியாவிலிருந்து வந்த இந்த பிராமணர்கள் இந்த ஊரிலேயே தங்கி இந்த ஊர் பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள்..அவர்களின் பிராந்திய இந்திய மொழி மறந்தவர்கள்…. மத வழக்கங்களை மட்டும் பின்பற்றி வருகிறார்கள்…முதல் இந்திய ராஜாங்கமான “புனான்” வம்சமே “கௌடின்யா” என்கிற பிராமணனால் உருவாக்கப்பட்டது..”

“வுண்டர்பார்”

” நீ கொடுத்த George Coedes எழுதிய புத்தகத்தில் இந்த கௌண்டின்யன் என்பவன் தமிழ் நாட்டில் சங்க காலத்தில் வாழ்ந்த “கவுண்ணியன்” என்கிற பிராமணன் என்று சொல்கிறார். இன்னொரு ஆராய்ச்சியாளர் “கவுண்ணியர்கள்” என்று தமிழ்நாட்டில் ஒரு பிரிவு இருந்ததையும் “திருநாவுக்கரசர் கூட கவுணிய மரபை சேர்ந்தவர் என்று எழுதியிருக்கிறார்.”

இன்னொரு வுண்டர்பாருக்கு பதிலாக நாய்பாவர் தலையை ஆட்டி ஆமோதித்தான்.

குருக்கள் பூஜையைத் தொடர்ந்தார். அவர் பின்னால் அமர்ந்திருந்த இதர பிராமணர்கள் கூப்பிய கைகளோடு மௌனமாய் அமர்ந்திருந்தார்கள். தீபாராதனை தட்டை கையில் எடுத்து கற்பூரம் ஏற்றி சிலைகளைச் சுற்றிக்காண்பிக்க சின்னவயசு பிராமணன் ஒருவன் வெண் சங்கு எடுத்து ஊத வட்டமான இரும்பு தட்டை தொங்கவிட்டசெண்டை மாதிரி வாத்தியத்தை முனையில் பூப்பந்தாய் உருண்டிருந்த மரத்தினால் ஆன கழியால் அடித்து சப்தம் எழுப்ப பிராமணர்கள் எழுந்து நின்று வணங்கினார்கள்.

“கெமர் ராஜ்யம் விழுந்து புத்த மதத்தவர்களான தாய்லாந்தவர்கள் இங்கே ஆட்சிக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தாய்லாந்தில் ஐக்கியமானார்கள். இந்திய கெமர் ராஜாங்கத்தில் உயர்ந்த நிலையில் இருந்த பிராமணர்களுக்கு புத்த மதத்து தாய்லாந்து அரசர்கள் ஆதரவு தந்தார்கள். இந்தப் பிரதேசத்தில் பிராமணர்கள் மூலமாய் நிறைய நம்பிக்கைகள், சடங்குகள் எல்லாம் சமூகத்தில் ஐக்கியமாகியிருந்த நிலையில் வாழ்க்கை முறையில் ஒரு தொடர்ச்சி இருக்க இவை எல்லாம் அனுமதிக்கப்பட்டன”

கற்பூர ஜோதியில் பன்னிரண்டு கை சிவன், அனந்த சயன விஷ்ணு, சற்று தள்ளி விநாயகர். அவர்களுடன் அரச உடைகளோடு சில மனித சிலைகள் தெரிந்தன.பிராமணர்கள் அமர்ந்துகொள்ள யாரோ ஒருவர் சிலைகளுக்கு முன்னாலிருந்து ஒரு மரப்பேழையை திறந்து ஓலைச்சுவடிகளை ஜாக்கிரதையாய் கையெலெடுத்து தலமை குருக்களிடம் தந்தார். அவர் ஓலைச்சுவடிகளால் ஆன அந்தப் புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு சில நிமிடங்கள் தியானம் செய்தார்.

“அந்த ஓலைச் சுவடியில் எழுதியிருக்கும் பாஷை என்னவென்று தெரியுமா” நாய்பாவரை கேட்டேன்.

” கலவையாக இருக்கிறது. கொஞ்சம் தாய், கொஞ்சம் வேற பாஷை.. சமஸ்கிருதமும் இல்லை. அந்த ஓலைச் சுவடியின் ஒரு பக்கத்தை புகைப்படம் எடுத்தவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம் இருக்கிறது பார்க்கிறாயா ?”

அவன் டிஜிட்டல் கேமராவிலிருந்து தேடி அந்தப் படத்தை காண்பித்தான்.

“இது சமஸ்கிருதம் இல்லை. சமஸ்கிருதத்தை தமிழில் படிக்க உருவாக்கிய கிரந்தம் என்கிற மொழி.”

“உனக்கு கிரந்தம் தெரியுமா?”

“தெரியாது….”

” நீ பிராமணன் இல்லையா? வேதம் சொல்லி பிழைப்பு நடத்துகிறவர்களாச்சே நீங்கள்”

“நாய்பாவர். அதெல்லாம் பல்லவர்களோடு போய்விட்டது. இப்போது நாங்கள் கடல் கடந்து வந்து வேலை பார்த்து ஜெர்மனியர்களின் கெட்ட சகவாசத்தால் போலானரும் பன்றி கறியும் சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்”

நாய்பாவர் தன்னுடன் கொண்டுவந்திருந்த சிறிய டேட் ரெக்கார்டரை துவக்கி சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். என்னிடம் கவனமாக கேள் என்று சொன்னான். குருக்கள் பின்னால் இருப்பவர்களை பார்த்து தயாரா என்கிற மாதிரி பார்த்துவிட்டு மூச்சை இழுத்து கணீரென்ற குரலில் அந்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் கூடவே அத்தனை பிராமணர்களும் சொல்ல ஆரம்பித்து அது வரை நிசப்தமாய் இருந்த அந்த அறை அதிர ஆரம்பித்தது.

அதியு மந்தமு மில்லாரு ரும்ப்ரெம்சோ
தீயை யாம்பா டக்கேடேயும் வால்த டங்கா
மா தேவள ருதியோ வன்ச வியோ நின்செ விதா
மா தேவ வார் கலல்வா வாழ் தீயா வாழ் தோ போய்

ஒன்றும் புரியாமல் ஒரு வடக்கத்திய பாடகன் பாடிய தமிழ்ச்சினிமா குத்துப்பாட்டு கேட்டவனின் குழப்பத்தோடு தலையாட்டினேன். அவர்கள் தொடர்ந்தார்கள்.

வீதி வாய்கே டுதமேவிம் மிவிம்மிமெய்ம ரந்து
போ தாரம ளியினிமே நின்றூபு ரண்டு இன்னன்
ஏதே றூமாகால்கி டந்தனேன் னே
ஈ தேந்தோ ழிபரி சுபலோரம் பா வய்

உச்ச ஸ்தாயியில் பதினைந்து குரல்கள் கொஞ்சம் போல் அபஸ்வரமாய் இழுத்து பாடி முடித்ததும் சங்கொலி மறுபடி முழங்கி செண்டை சப்தித்தது. நாய் பாவர் என்னைப் பார்த்தான். நான் “சத்தியமா தெரியவில்லை” என்றேன்.

” இப்படி பதினைந்து நிமிடங்களுக்கு மேல் படிக்கிறார்கள். இது தாய் பாஷை இல்லை..கவனமாய் கேளு” என்றான் என் இயலாமையினால் எரிச்சலடைந்தவனாய்.

எம்கோ ங்கைநின் பர்அல் லார்தோ சேர க்க
எம்கைஊ நக்கால் துப்பணி யும்செ ற்கவரு
இப்ப ரிசேமக்கு எங்கோ நல்குதி யேல்
எங்கெழி என்நோ யிரும க்குலோ ம்பா வய்

மந்திரம் தொடர்ந்தது. நான் மிகக் கவனமாகக் கேட்டும் ஒன்றும் புரியாமல் நாய்பாவரை நோக்கி கையை விரித்தேன். அதற்கப்பறம் அந்த மந்திரப் பாராயணம் வெறும் குழப்பமான ஒலியாய் என்னைத் தாக்கி நான் அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியை கைவிட்டு அந்த பிராமணர்களின் ஒன்றுசேர்ந்த குரல்களையும் சங்கொலியையும் தப்பட்டை ஒலியை மட்டும் வசீகரமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கூர் வெல்கோ டுதோ லிலன் நந்கோ பன்கு மரன்
ஏரார் தகன்னி யாகோ தைளசிங் கம்கார்
மேனிசே கன்கதி மதி யம்போலமுக தான்

அந்தச் சூழலும் மந்திரமும் பரிச்சயப்பட்டதாய் தோன்றிய போதும் அதை இனம்கண்டுகொள்ள முடியாமல் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் யாரோ எங்களை நோக்கி வருவது தெரிந்தது. நான் சட்டென்று ஜன்னலுக்கு அருகில் இருந்த தூணுக்குப் பின்புறம் மறைந்துகொண்டேன். அந்த ஆள் உள்ளே இருந்த பிராமணர்கள் போல வெள்ளையாய் வேட்டி கட்டியிருந்தாலும் திறந்த மார்போடு இல்லாமல் நீண்ட வெள்ளை சட்டை அணிந்திருந்தார். நாய்பாவர் பின்னாலிருந்து வந்து நின்று அவன் தோளை தட்டி “மன்னிக்கணும்… நீங்கள் யார்? இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ?” என்றார் கொஞ்சம் விரோதமாய்.

பின்புலத்தில் அவர்கள் பாடிய வரி குழப்பமாய் ஒலித்தது “பா ரோபு கழ்படி தேலோரம் பா வய்”

நாய்பாவர் அதிர்ச்சியுடன் திரும்பி கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு ” இந்தப் பக்கம் நடந்து போய்கொண்டிருந்தேன். பூஜை சத்தம் கேட்டது சும்மா வேடிக்கை பார்க்கலாமென்று ” என்று சொன்னான்.

அந்த ஆள்.. வெளியே யாரையோ பார்த்து இரைந்தான் ” ஹே சோம்சாய் யார் இவரை உள்ளே விட்டது.. ” என்றான். சொம்சாய் என்கிற அந்த காவலாளி இருக்கவேண்டிய திசையிலிருந்து பதில் வராததால் அவர் நாய்பாவரை பார்த்து ” இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு விலகி தேட ஆரம்பித்தார். நான் தூண் மறைவிலிருந்து வியர்வையுடன் வெளிப்பட்டு என்ன செய்வது என்றூ தெரியாமல் நாய்பாவரை பார்தேன். அவன் அப்போதுதான் அதிரடியாய் அந்தக் காரியம் செய்தான்.

என் கைகளை பற்றிக்கொண்டு ” ராக் வா ஓடிவிடலாம்” என்று சொல்லியபடி என் கையை பிடித்து இழுத்தபடி வாசலுக்கு எதிர்பக்கமாய் இருந்த பின்பக்க வாயிலை நோக்கி ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் போல் மந்திரமும் சங்கு ஒலியும் கேட்க கூடவே சொம்சாய் என்கிற கத்தலும் எங்கள் பின்னால் தொரடர நாங்கள் ஓடினோம்.

‘எதற்கு இப்படி திருடர்கள் மாதிரி ஓடவேண்டும்.. இரு.. வேடிக்கை பார்க்க வந்தோம் என்று சொன்னால் என்ன செய்வார்கள்.. நில் “

“முதலில் வா.. அப்புறம் சொல்கிறேன் ஏன் ஓடவேண்டும் என்பதை ” என்றான் நாய்பாவர் தொப்பை குலுங்க ஓடிக்கொண்டு.

எங்கள் பின்புறம் ஓசைகள் அதிகரித்தது போல இருந்தது. பின்புறம் இருந்த மூங்கில் கதவை தள்ளிவிட்டு நான் வேகமாய் ஓட ஆரம்பித்தேன். அவனின் ஜோல்னா பையில் ஒரு கையும் பாக்கெட் டேப் ரெக்கார்டர் ஒரு கையுமாய் போலானரும் பன்றீ கறீயும் தாரைவார்த்துத் தந்திருந்த அவனது நூறூ கிலோ உடம்பை தூக்கிகொண்டு மூச்சிரைக்க ஓடிவந்தான். தெருநாய்கள் ஒன்றிரண்டு முழித்துக்கொண்டு குரத்தபடி எங்கள் பின்னால் துரத்தின. கொஞ்ச தூரம் ஓடி அப்புறம் நடந்து பிரதான சாலையை அடைந்த போது மூலையில் ஒன்றிரண்டு டாக்ஸிகள் தெரிந்தன. நாய்பாவர் அதில் ஒன்றின் கதவைத் தட்டி “சுக்கும்வித்” என்றான். இருவரும் அவசரமாக பின்பக்கம் ஏறிக்கொண்டு காத்திருந்தோம். டாக்ஸி ஓட்டி அவனின் தூக்கத்திலிருந்து எழுந்து கண்களையும் முகத்தையும் தேய்த்துக்கொண்டு ஆயத்தம் செய்துகொண்டிருக்க பொறுமையிழந்த நாய்பாவர் ” சீக்கிரம் போ” என்றான் “பார் மூடிவிடும்” என்றான் கூடவே சமயோசிதமாய்.

டாக்ஸி விரைந்ததும் இருவரும் தன்னிச்சையாய் திரும்பிப்பார்த்தோம். தூரத்தில் யாரோ துரத்திக்கொண்டு வருவது போல தோன்றி இருவரும் ஒருவரை பார்த்துக்கொண்டு “பிரமை” என்றோம். டாக்ஸி அந்த இடத்திலிருந்து விலகி விரைவுப்பாதையில் வேகம் பிடித்ததும் கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.

“சரி சொல்லு. யாரும் பார்த்துவிடக்கூடாது என்று விழுந்தடித்துக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன?”

“சொல்கிறேன். அதற்கு முன்னால் சொல்லு அங்கே நடந்தது என்ன ?”
“சிவன் விஷ்ணு போன்ற இந்துக் கடவுள்களுக்கு பூஜை.”
“பாதி சரி. பாதி தப்பு. அதுக்கு முன்னால் உனக்கு ஒரு விவரம் தெரியவேண்டும். ஒரு வகையில் இது ராஜாங்க ரகசியம்..”

“அடப்பாவி சாவகாசமாய் சொல்கிறாயே.. ராஜாங்க விவகாரத்தில் தலையிடுவது சட்டப்படி குற்றமாச்சே.. ஊருக்கு உள்ளே நுழையும்போதே விமானத்திலே அச்சடித்த காகிதம் தருகிறார்களே.. இவ்வளவு நிதானமாய் சொல்கிறாய். நான் வந்திருக்கவே மாட்டேனே”

“இரு இரு. பதறாதே.. நான் சொல்வதை முதலில் கேள்”

நான் ஆர்வமாய் அவன் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்க நாய்பாவர் தொடர்ந்தான். ” தேவராஜ சித்தாந்தம் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா ? அதைப் பற்றி நீ தெரிந்து கொள்ளவேண்டும்.”

“”சீக்கரம் சொல்லு”

“நம் தென்கிழக்கு ஆசிய வரலாறுக்கு ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போவோம். இந்திய இனக்குழுக்கள் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியர்கள் மன்னர்கள் ஆகிய வரலாற்றை பார்த்தோமில்லையா? அதில் முக்கியமான ஒரு அம்சம் தேவராஜ சித்தாந்தம்”

“தேவராஜன் என்பதற்கு கடவுளே மன்னனாக வந்தான் அல்லது மன்னன் கடவுளாக இருக்கிறான் என்று அர்த்தம் இல்லையா?

” ஆமாம். ஆயிரம் வருடஙக்ளுக்கு முன்பு இங்கே பௌத்த மதத்தோடு இந்து மதமும் பரவி, சைவம், வைணவம் போன்ற உட்பிரிவுகளும் தோன்றின. மக்களில் பெரும்பாலானோர் பௌத்த மதத்தை தழுவினார்கள். அதனோடு இந்து மத நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார்கள். இதற்குக் காரணம் பௌத்தமே இந்தியாவிலிருந்து இவர்களுக்கு வந்ததுதான். ஆக இங்கிருந்த மன்னர்களும் மக்களும் பௌத்தத்தையோ, சைவத்தையோ, வைணவத்தையோ அவரவர் விருப்பப்படி கடைபிடித்துவந்தார்கள். தாய்களும் கெமர்களும், சீனர்களும் இருந்த இந்த பிரதேசத்தை இந்திய அரசர்கள் ஆளத் துவங்கியபோது மக்களின் அங்கீகாரம் பெற அவர்கள் ஒரு காரியம் செய்தார்கள். தாங்கள் வெறும் மன்னர்கள் என்று சொல்லிக்கொண்டால் இந்தியர்களான தங்களை இந்தப் பிரதேச மக்கள் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கிவிடுவார்கள் என்று இந்த இந்திய மன்னர்கள் தங்களை கடவுளின் அவதாரமாய் அறிவித்துக்கொண்டார்கள். அதுதான் தேவராஜ சித்தாந்தம். உதாரணத்துக்கு …இரண்டாம் ஜெயவர்மன் தன் அரசில் ஒரு கோயிலை கட்டி சிவலிங்கம் பிரத்திக்ஷ்டை செய்து தன்னை சிவனுக்கு நிகரானவனாக நிலைநிறுத்திக்கொண்டான். “

“சிவன் விஷ்ணு சிலைகளில் நடுவே நாம் பார்த்தது மன்னர்களின் சிலைகள். பூஜை அவர்களுக்கும் சேர்த்துதான்”

“கரெக்ட். அங்கோர்வட் என்று உலகப்பிரசித்த பெற்ற கம்போடியாவில் இருக்கிற கோயிலை கட்டியது இரண்டாம் சூர்யவர்மன் என்கிற பல்லவர் வழி வந்த அரசன் என்பது உனக்குத் தெரியும் . அவன் அதை விஷ்ணு கோயிலாக கட்டினான். அதாவது விஷ்ணுவாகிய தனக்கு அவனே கட்டிக்கொண்ட கோயில். நாளடைவில் அந்த கோயிலில் இருந்த விஷ்ணு விக்ரகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு பௌத்த மத கோயிலாக மெல்ல உறுமாறியது வேறு கதை. கெமர் அரசர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டப்படுவது தேவராஜ நெறியின் ஒரு அம்சமாய் விளங்கியது.. “பாதன்” லோகன்” என்ற பட்டப்பெயர்கள் விஷ்ணு , சிவன், பிரம்மன் என்ற பெயர்களோடு இணைக்கப்பட்டு மறைந்த மன்னர்களுக்கு புதிய பெயர்களாய் வைக்கப்பட்டன. கெமர் மன்னர் நான்காம் ஜெயவர்மன் “பரமசிவப் பாதன்” என்றும் மூன்றாம் ஜெயவர்மன் “விஷ்ணு லோகன்” என்றும் பெயரிடப்பட்டார்கள்.

angkor-maurice-fievet-01

” குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் நாய்பாவர். இதிலும் என் சோழர் கோணம் சொல்லவேண்டிருக்கிறது.. இது கூட சோழ சாம்ராஜ்யத்தில் பின்பற்றப்பட்டது. அரசனை இறைவனாகப் போற்றும் வழக்கம் இந்தியாவில் இருந்திருக்கிறது. இறந்தவர்களை அவர்கள் கும்பிடும் தெய்வத்தின் திருவடியை சேர்ந்ததாக சொல்லுவது வழக்கம். சிவலோகப் பிராப்தி அடைந்துவிட்டார் என்றும் “வைகுந்த பதவி” அடைந்துவிட்டார் என்றும் சொல்வது எங்கள் ஊர் வழக்கம். மேலும் சோழ அரசர்கள் இறந்துவிட்டால் சவக்குழியில் சிவலிங்கம் அமைத்து “பள்ளிப்படை” என்ற கோயில்கள் எழுப்பப்பட்ட வழக்கம் இருந்திருக்கிறது. இந்த வழக்கங்களே தென்கிழக்கு ஆசியாவில் தேவராஜ நெறியாய் உருமாறியிருக்கலாம்”

“நன்றி சோழா” என்றான் நாய்பாவர் மறுபடி சிரிப்புடன். “இந்தியத் தொடர்பு பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமானால் உங்கள் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் சந்தித்து பேசவேண்டும் போலிருக்கிறது”

“சரி அதனால் இந்த பூஜையை ரகசியமாகச் செய்யவேண்டிய அவசியம் என்ன ?”

“சொல்கிறேன். இந்த தேவராஜ சித்தாந்தம் அரசர்களுக்குள் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு வழிமுறையாக தொடர்ந்தது. இந்தப் பிரதேசத்தின் திருப்புமுனை பதிமூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்று பார்த்தோம் இல்லையா? மோன், கெமர் போன்ற இந்திய வழி வந்த அரசர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டு தாய், சீன, இஸ்லாமிய அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் இந்துமத பாதிப்பு விலகி பௌத்ததிற்கோ, இஸ்லாமுக்கோ மாறிப்போனது. ஆனால் மன்னர்கள் தொடர்ந்தார்கள். இந்த மன்னர்கள் ஒரு வகையில் மண்ணின் மைந்தர்கள் இல்லை. நாட்டை அபகரித்தவர்கள். இந்திய மன்னர்களிடமிருந்து ஆட்சியை பறித்த உள்ளூர் அரசர்கள் ஒன்றை மட்டும் விட்டுக்கொடுக்காமல் பின் பற்றினார்கள். தேவராஜ சித்தாந்தம் தான் அது”

“அதாவது உள்ளூர் பௌத்த மத மன்னர்கள் ஆட்சியை பறித்து நாடுகளை அமைத்தாலும் தங்கள் அங்கீகாரத்துக்காக தாங்கள் விஷ்ணு அல்லது சிவனின் அவதாரம் என்று அறிவிக்கிற தேவராஜ சித்தாந்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்தார்கள்”

“ஆமாம். தங்களை கடவுளாக அறிவித்துக்கொண்டு இந்திய அரசர்களைப் போலவே இவர்களுக்கும் உள்ளூர் மக்களின் ஆதரவை பெற்றுத்தரும் வழியாக அது அமைந்து போனது. ஆகவே தேவராஜ சித்தாந்தம் மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு வரை தொடர்கிறது. இன்றும் தாய்லாந்தில் மன்னருக்கு நடத்தும் முடிசூடும் சடங்காகிய “ராஜாபிஷேகத்தில்’ பிராமணர்கள் அக்னி வளர்த்து, இந்தியக் கடவுள்களின் விக்ரகங்கள், யந்திரங்கள் நிறுவி தீர்தம் தெளித்து நூறு சதவீதம் பிராமண முறைப்படி சடங்குகள் செய்கிறார்களாம். எட்டு கோணங்கள் கொண்ட சிம்மாசத்தில் வெண்கொற்றக் குடையின் கீழ் மன்னர் அமருகிறார். அரசருக்குரிய சின்னங்களான செங்கோல், வாள், கவரி பாதுகைகள் மன்னருக்கு அளிக்கப்படும். மன்னர் பூமா தேவியை தண்ணீர் ஊற்றி பிரார்த்தனை செய்துவிட்டு பிரதஷ்ணம் செய்கிறார்”

” இருந்தாலும் இதை ரகசியமாய் செய்யவேண்டிய அவசியம் இன்னும் பிடிபடவில்லை. எனக்கு ஓடிவந்த டென்ஷன் இன்னும் குறையவில்லை. நீயானால் சாவகாசமாக சரித்திரப்பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறாய்”

” பொறுமை சோழா. தாய்லாந்து போன்ற நாடுகள் காலப்போக்கில் மிகவும் வளர்ச்சியடைந்து இந்து மத கோட்பாடுகள் மெல்ல மெல்ல மறைந்து முழுக்க முழுக்க பௌத்த நாடாகவே மாறிப்போய்விட்டன. இந்த நூற்றாண்டு மக்களுக்கும் இந்த நாட்டின் இந்துப் பாரம்பரியம் அவ்வளவாகத் தெரியாமல் மெல்ல மெல்ல மறைக்கப்பட்டு, அரசாங்கமும் இந்து மதத் தொடர்பையும் அதன் 1300 வருடப் பாரம்பரியத்தையும் பற்றி ரொம்ப சிலாகிக்காமல் விட்டுவிட்டன. ஆனால் மன்னராட்சி தொடர்கிறது. மன்னர்கள் தங்களை மேன்மைப் படுத்தும் தேவராஜ சித்தாந்தத்தை விட்டுவிட மனமில்லாமல் இன்னும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். மன்னராட்சி நடக்கும் இந்த நாட்டில் மன்னரை மிக பக்தியுடன் நாட்டு மக்கள் வணங்கிவருவது உனக்குத் தெரியும். பௌத்தத்தை கடைபிடிக்கும் மக்கள், தங்கள் மன்னர் மட்டும் இன்னும் இந்து மதக் கடவுளாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார் என்கிறதையும் இந்து மத கடவுள்களுக்கு பூஜை செய்கிறார்கள் என்ற எண்ணம் பரவக்கூடாதே என்று அரசாங்கம் நினைக்கலாம். அதனால் தான் விளம்பரப்படுத்துவதில்லை”

” அதனால்தான் மன்னர்கள் சம்மந்தப்பட்ட பூஜை என்பதால் புத்த பிக்குக்கள் செய்யாமல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரவழைக்கப்பட்ட அந்தணர்கள் சந்ததியினாரால் நடத்தப்படுகிறதா”

” இது மட்டும் இல்லை. மன்னர்கள் குடும்பம் சம்மந்தப்பட்ட அத்தனை சடங்குகளும் இந்த பிராமணர்களால்தான் நடத்தப்படும்..இதில் இன்னும் தெளிவாகாத ஒரே அம்சம் இந்த மந்திரம்தான்” என்று நாய்பாவர் தன் டேப் ரெக்கார்டரை தொட்டுக்காண்பித்தான். “இதை திரும்பத்திரும்ப கேட்டுப் பார்த்து என்ன பாஷை என்ன சொல்கிறார்கள் என்றூ கண்டுபிடித்துச் சொன்னால் உன்னை தேவராஜனாக கருதி இட்டிலி படையல் வைத்து சாம்பாரால் அபிசேகம் பண்ணுகிறேன் ” என்றான். நான் அதை வாங்கி அதன் ஸ்பீக்கர்களை காதில் மாட்டிக்கொண்டு கேட்டேன்.

மா தேவள ருதியோ வன்செ வியோ நின்செ விதா
மா தேவ வார் கலல்வா வாழ் தீயா வாழ் தோ போய்
வீதி வாய்கே டுதமேவிம் மிவிம்மிமெய்ம ரந்து
போ தாரம ளியினிமே நின்றூபு ரண்டு இன்னன்
ஏதே றூமாகால்கி டந்தனேன் னே

” என்ன தெரிகிறதா?”

” கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இரு கொஞ்சம் அவகாசம் தா.. கொஞ்ச நேரம் உன் சரித்திரத்தில் கிடப்பில் போட்டு விட்டு பேசாமல் வா….”

எம்கோ ங்கைநின் பர்அல் லார்தோ சேர க்க
எம்கைஊ நக்கால் துப்பணி யும்செ ற்கவரு
இப்ப ரிசேமக்கு எங்கோ நல்குதி யேல்

அந்த வாக்கியங்களை காகிதத்தில் எழுதிக்கொண்டேன். திரும்பத் திரும்ப டேப்ரெக்கார்டரில் கேட்டுக்கேட்டு காகிதத்தோடு பொருத்திப் பார்க்கும்போது கொஞ்சம் புலப்பட்டது போல இருந்தது. நாய்பாவர் சட்டென்று டாக்ஸி டிரைவரின் தோளை தட்டி “இங்கே நிறுத்து நண்பர் ஒருவனை பார்க்கவேண்டும்” என்றான் ஆங்கிலத்தில் அவசரமாக.

“சுக்கும்விட் இன்னும் வரவில்லை காப். நண்பரை அழைத்துக்கொண்டு வாங்களேன் நான் காத்திருக்கிறேன்”

“பரவாயில்லை. லேட் ஆகும் என்றான் நாய்பாவர். என் தொடையில் தட்டி “வா ராக் இறங்கலாம் ” என்றான் அவசரமாய். அவன் குரலில் ஒலித்த அபாய உணர்வு என்னை உஷார்படுத்தி உடன் இறங்கவைத்தது. டாக்ஸி விலகியதும் ” என்ன ஆச்சு ” என்று வினவினேன்.

நாய்பாவர் எதிர்திசையில் அவசரமாய் நடந்தான். “டாக்ஸியில் வந்தது தப்பு… அந்த டாக்ஸி ரேடியோவில் தோன்புரியிலிருந்து வந்த டாக்ஸியில் யாராவது ஒரு ஐரோப்பியனை ஏற்றிக்கொண்டு வந்தால் தகவல் சொல்லும்படி வயர்லஸ் செய்தி வந்ததை நான் கேட்டேன்”. எனக்கு தாய் மொழி தெரியும் என்று அந்த டிரைவருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். மேலும் நீ கூட இருந்ததால் அவன் அதை சந்தேகத்தோடு பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. இருந்தாலும் வம்பு வேண்டாம்.. வா.. ஆட்டோவில் போகலாம்”.

” ஆட்டோவில் வயர்லஸ் கிடையாது. சோழர்காலத்தில் கண்டுபிடித்த வண்டி…”

நாய்பாவர் ஆட்டோ ஒன்றை நிறுத்தினான். சுக்கும்விட் என்றான் மறுபடி. ஏறி உட்கார்ந்தவுடன் நான் டேப் ரிக்கார்டரை இயக்கி மறுபடி கேட்டேன். நாய்பாவர் என்னை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வந்தான். சுக்கும்விட்டில் எங்கள் வீட்டுக்குக்கு அருகாமையில் இறங்கிக்கொண்டோம். தெருவோரம் வரிசைக்கிரமமாய் கண்சிமிட்டிய இரவு உணவு விடுதிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டான். பியர் ஆர்டர் செய்தான். எங்கள் மேல் வந்து விழுந்த அந்த குட்டைப் பாவாடை சுந்தரிகள் இருவருக்கும் பரிசிலிருந்து உருவி இரண்டு நூறு பாட் நோட்டுக்களை விநியோகம் செய்துவிட்டு “போய் சந்தோஷமாய் இருங்கள்… தொந்திரவு செய்யாதீர்கள்” என்றான். அவர்கள் அவன் பணத்துக்கு பெரிதாக வணக்கம் போட்டுவிட்டு உள்ளே போய் அதிருகிற தாளத்துக்கு ஆட்டம் ஆட ஆரம்பித்தார்கள்.

“அவளை விரட்டாதே நாய்பாவர்… நம்ம ரங்கபதாதை வழி வந்த அரச குலப் பெண்ணாய் இருக்கப்போகிறது… அந்த பூர்வஜென்ம வாசனையில்தான் என் மேல் ஆசையாய் வந்து விழுகிறாள்”

“மந்திரத்தை கண்டுபிடி அப்புறமாய் ரங்கபதாதையோடு பாங்காக் முழுக்க ரவுண்டு அடிக்கலாம்”

என்னைப் பார்த்தபடி டான்சு ஆடிக்கொண்டிருந்த ரங்கபதாதையை உதாசீனப்படுத்திவிட்டு வாக்மேனை காதில் மாட்டிக்கொண்டு அந்த நாராச மந்திரத்தை இனம்கண்டுகொள்ள கண்ணை மூடி தியானம் செய்துகொண்டிருந்தேன்.

” இந்த பூஜை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மட்டும் பதினைந்து நாட்கள் நடக்கிறது. அதற்கு என்ன முக்கியத்துவம் என்று தெரியவில்லை”

கூர் வெல்கோ டுதோ லிலன் நந்கோ பன்கு மரன்
ஏரார் தகன்னி யாகோ தைளசிங் கம்கார்
மேனிசே கன்கதி மதி யம்போலமுக தான்

“டிசம்பர் மாதம் மட்டுமா நடக்கிறது என்று சொன்னாய்.. எங்கள் மார்கழி மாதம்.. பூஜையின் பெயர் என்ன சொன்னாய் “

“த்ருவம்பவே த்ரிபாவே”
“பா ரோபு கழ்படி தேலோரம் பா வய்”

“சுக்குமி — ளகுதி ப்பிலி என்று என் தலைக்குள் பரபரவென்று அந்த தொடர் பளிச்சென்று புரிந்தது— ” யுரேகா…நாய்பாவர் நான் கண்டுபிடித்துவிட்டேன்…. “

மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள், என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசு ஏலோர் எம்பாவாய்.

“இது திருவெம்பாவை.. திருப்பாவை . அதைதான் பாராயணம் செய்கிறார்கள். இந்த மொழி தமிழ்… நான் பேசும் பாஷை. மார்கழி மாசத்தில் பெருமாளுக்கும் சிவனுக்கும் செய்யும் பாராயணம். அவர்கள் பாராயணம் செய்வதையும் சரியான பதத்தையும் அவனுக்கு பாடிக்காண்பித்தேன். அவன் வொண்டர்ஷூன்களை உதிர்த்தபடி என் கைகளைப் பிடித்து வலிக்க வலிக்க குலுக்கினான். “நம் ஆராய்ச்சியில் தெளிவாகாத ஒரு அம்சம் புரிபட்டுவிட்டது”

“எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது நாய்பாவர். தமிழில் எழுதிய பாசுரங்களை இந்த தாய்லாந்து பூஜாரிகள் தாய்லாந்து மொழியில் எழுதி படிக்கிறார்கள். இவர்களுக்கு மொழி தெரியாததால் எப்படி பிரிப்பது என்று தெரியாமல் தப்பு தப்பாய் படிக்கிறார்கள். கடல் கடந்த அன்னிய் தேசத்தில் வேற்று மொழி வேற்று மதம் பழகும் மக்கள் என் மொழிழியில் அமைந்த பாசுரங்களை சிரத்தையாய் படிப்பது பரவசமூட்டுகிறது..”

“கூர்வேல் கொடுத்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யாகோதை இளஞ்சிங்கம்
கன்மேனி செங்கன் கதிர்மதியம் போல முகத்தான்

உற்சாக மிகுதியில் அந்த தெருவோர பாரில் எங்களை சுற்றியிருந்த குட்டை ஆடை சுந்தரிகள் என்னைப் பார்த்து சிரிப்பதை பொருட்படுத்தாமல் ஹைனிகன் பியரும் கையுமாய் நான் பாசுரங்கள் உரக்கப் பாடினேன். நாய் பாவர் பாட்டில் பியரை எடுத்து வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டான்.

“இரண்டு சமாசாரங்கள் இதிலிருந்து தெளிவாகிறது. ஒன்று இந்த பிராமணர்கள் தென்னிந்தியாவிலிருந்துதான் வந்திருக்கவேண்டும். இரண்டாவது தாய்லாந்தை ஆண்ட இந்திய ராஜாக்கள் நிச்சயமாய் பல்லவர்களும் அவர்கள் பின் சோழர்களும்தான் என்பது ஊர்ஜிதமாகிறது. “

சந்தோஷ மிகுதியில் இன்னொரு பியர் ஆர்டர் செய்ய எழுந்ததும் சிவப்பு ஒளி சுழலும் மோட்டார் சைக்கிள் தொலைவில் நின்று ஒரு காக்கிச்சட்டை போலீஸ்காரன் அந்த தெருவோர பார்களின் பக்கம் நோட்டம் விட்டுக்கொண்டு ஆங்காங்கே அமர்ந்திருப்பவர்களை கேள்வி கேட்டுக்கொண்டு வருவது தெரிந்தது. என் போதை எல்லாம் வியர்வை வழி வெளியேறியது.

“நாய் பாவர் திரும்பிப்பார்க்காதே.. போலீஸ். அவன் யாரையோ தேடுவது போலத் தெரிகிறது..”

நாய்பாவர் திரும்பிப்பார்க்காமல் தன் ஜோல்னா பையையில் டேப் ரெக்கார்டரை வைத்தான். தான் கொண்டு வந்திருந்த சில காகிதங்களையும் புத்தகங்களையும் கொண்ட அந்த பையை என்னிடம் தந்தான். “இந்தா இதை எடுத்துச்செல். எதிர்பக்கமாய் நடந்து போய்விடு. நான் அப்புறமா வந்து வாங்கிக்கொள்கிறேன் ” என்றான். அவன் செல் போனை தேடி காகித்தை எடுத்து எண்களை எழுதினான். “இது ஜெர்மன் தூதரகத்தின் நம்பர். இங்கே சைமன் டாய்ஷ் என்று ஒரு அதிகாரி இருக்கிறார். நாளை என்னிடமிருந்து உனக்கு போன் வராவிட்டால் அவரிடம் நான் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிடு”

“உன்னை எப்படி தனியாக விட்டுவிட்டுப் போவது…”

” நான் சமாளித்துக்கொள்கிறேன். இந்தப் போலீஸ்காரன் என்னிடமிருக்கும் டாலர் நோட்டுகளை வாசம் பிடித்தால் என்னை விட்டுவிடுவான். மேலும் என்னைத்தான் அடையாளம் வைத்து தேடுகிறார்கள். உன்னை யாரும் பார்க்கவில்லை அதனால் நீ அனாவசியமாய் இதில் மாட்டிக்கொள்ளாதே.. மேலும் இந்த புத்தகங்களும் டேப் ரெக்கார்டரில் நான் பதிவு செய்த சமாசாரமும் நாம் தேவஸ்தான்தான் போய் துப்பறிந்து வந்திருக்கிறோம் என்று காட்டிக்கொடுத்துவிடும். அந்த டேப்பை காப்பாற்றவேண்டும். நீ போ.”

நான் தயங்கி நின்றேன். நாய்பாவர் “சீக்கிரம் போ.. நிற்காதே…” என்றான் அதட்டலாய். நான் தயக்கத்தோடு எதிர்திசையில் நடந்தேன். ஜோல்நா பையை முன்பக்கமாய் திருப்பிவைத்துக்கொண்டு வேகமாய் ஆனால் பதறாமல் நடந்தேன். நின்றூ திரும்பிப்பார்த்தபோது நாய்பாவர் ஒன்றுமே நிகழாதது போல பியர் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து “போ சீக்கிரமாய் என்று செய்கை செய்தான். நான் மறுபடி நடக்க ஆரம்பித்தேன்.

நாராயணனே நமக்கு பறை தருவான்
பாரோ புகழப் படிந்தேலோ ரொம்பாவாய்

என்னையும் அறியாமல் திருப்பாவையை முணுமுணுத்தபடி நடந்தேன். என் வீட்டுக்கு போகவேண்டிய தெரு வந்ததும் நின்று திரும்பிப்பார்த்தேன். அந்தப் போலீஸ்காரன் எதிரில் அமர்ந்திருக்க நாய்பாவர் தோளைக்குலுக்கி பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

0 Replies to “த்ரிவம்பவே த்ரிபாவே”

  1. //ஆண் குறியையும் யோனியையும் உணர்த்துகிற சிவலிங்கத்தின் ஆதார வடிவத்தை இவர்கள் மாற்றாமல் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”//
    என்ன கிறுக்குத்தனமான வார்த்தைகள். சிவலிங்கம் ஆண் குறியை குறிக்கிறது என்பது இனவெறிய ஐரோப்பியர்கள் இந்து மதம் பற்றி சொல்லிவிட்டுப்போன கருத்தே அன்றி சிவலிங்கம் ஆண் குறியை குறிப்பதில்லை.
    அது வெறும் உருவமற்றை குறிக்க பயன்படும் ஓர் உருவம். அவ்வளவே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.