தீக்குள் விரலை வைத்தால்

மனம் என்னும் விசித்திர வஸ்து கால ஆடை உடுத்திக் கொண்டு உடம்பின் வாகனம் ஏறி வயதின் தெருக்களில் உலா போவதை “வாழ்க்கை” என்ற சொல்லுக்குள் தினமும் அடைக்க முயன்று கொண்டே இருக்கிறோம் நாம். அத்தகைய உலாக்களில், சில சமயம் பூப்பாதை என்று நம்மை எண்ண வைத்து காலம் நடக்க வைக்கும் தடத்தில் சென்று, பின்னே மனதில் முள்ளேறி “வீடு” திரும்புவதுண்டு நாம். ஊவா முள் போல உள்ளேறி கடுக்கும் அந்த வலி, காலத்தின் கதிர்வீச்சாய் நம்முள் ஊடுருவி மனதின் ஒழுங்கமைவை ஆங்காங்கே பொத்தலாக்கி விட்டுப் போகவும் கூடும்.
1980களில் மதுரையின் மையப்பகுதியில் வசித்தவர் எவரும், பெயர் தெரியாத நம் அன்பரை நிச்சயம் நினைவில் வைத்திருப்பர். கிழக்கு மேற்காக விளக்குத்தூண் பகுதியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் வரையிலும் வடக்கு தெற்காக சிம்மக்கல் பகுதியிலிருந்து மதுரை கல்லூரி வரையிலும் அனைத்து தெருக்களும் இவர் வசிப்பிடமாக இருந்தது. ஆறடிக்கும் மேலான ஒடிசலான தேகம். “கோட்டு” என்று எண்ண வைக்கும் வடிவத்தில், பழுப்பேறிய வெள்ளை நிறத்தில் ஒரு அங்கி. ஒரு துணி மூட்டை. பழைய பாடப்புத்தகங்களின் புகைப்படங்களில் காணப்படும் விஞ்ஞானிகள் போன்ற வெள்ளை தாடியும் சுருக்கங்கள் விழுந்த நெற்றியும்…
பல நேரங்களில் எங்கள் வீட்டருகில் அவர் அமர்ந்திருப்பார். அவரின் முன், சில துணிகளும் பேப்பர்களும் குவிக்கப்பட்டு தீ எரிந்து கொண்டிருக்கும். தீயினையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அவர், நினைவின் காலத்தில் வைத்திருந்த கால் இடறி நிகழ் காலத்தில் விழுந்தது போல் சட்டென்று தனது மூட்டையிலிருந்து ஒரு துணியை எடுப்பார். நினைவு மூட்டையில் இருந்து உருவிய சம்பவத்தின் ஆடையாக இருக்குமோ? தனது அங்கியின் பாக்கெட்டில் எப்பொழுதும் வைத்திருக்கும் ஊசி நூல் கொண்டு அந்தத் துணியை தைக்கத் துவங்குவார். நேரத்தின் பழுதோ அல்லது நினைவின் விழுதோ…எதன் காரணமாகவோ, நேரம் அற்ற நினைப்பே அவர் வாழ்க்கை ஆகியிருந்தது… ‍தைத்த துணியை அந்த நெருப்பில் போடுவார். அவரின் மூட்டை என்றும் வற்றியதேயில்லை. வற்றாத நினைவுகளை தீயின் உணவாக இட்டு எந்த தீயை அணைக்க முயன்று கொண்டேயிருந்தாரோ அவர்?
தொலைக்காட்சிகளின் தொல்லையின்றி அற்புதமாக‌ இருந்த அன்றைய ஞாயிறுக‌ள் ஒன்றின் அமைதியான மதியம், எங்கள் தெருவின் ஒரு புறம் நீண்டிருந்த கோயில் மதில் சுவரில் கரிக்கட்டியால் ஒரு உருவத்தை ஓவியமாய் வரைந்தார். புற அடையாளங்கள் அற்ற நினைவின் ஓவியம் போலும்…அதன் பின், தினமும் அந்த ஓவியத்தின் அருகில் நின்று பார்ப்பதும் பிறகு தனக்குரிய இடத்திற்கு வந்து தீ வளர்ப்பதுமாக இருந்தார். சில நாட்கள், அந்த ஓவியத்தின் கோடுகள் மீது தனது விரல்களை அதன் பாதையிலேயே செலுத்துவார். கையின் ரேகைகள் நீண்டு, சுவற்றின் மீது வளர்ந்து, அந்த ஓவியத்தில் ஏறிப் படிவது போல அது இருக்கும். ரேகைகளில் நம் விதி இருக்கும் என்றால், அந்த‌ ஓவியத்தின் உள்ளிருக்கும் அவரின் உணர்வு அவர் விதி என்றால், ரேகைகள் நீண்டே அந்த ஓவியமானது என்று சொல்வதும் பொருத்தமன்றோ? பல மாதங்கள் இது தொடர்ந்தது. நிறைய நாட்கள், இரவில் மீந்த உணவை நாங்கள் அவருக்கு கொடுப்பதுண்டு. சிறுவனாக இருந்த நான், அவருக்கு மிக அருகில் செல்ல பயந்து சற்றே தள்ளி இருந்தபடி உணவு கொடுத்த நாட்களில் சில சமயம் அரிதினும் அரிதாக, ஒரு கோட்டோவியமாக வரையப்பெற்ற முகத்தில் இதழாக இடம்பெறும் சிறு கோடு ஒன்று, நொடியின் நெகிழ்வில் சற்றே அசைந்து மீண்டும் அதன் இடத்துக்கே வருவது போல, அவரிடம் புன்னகையின் கீற்று தோன்றி மறையும். ஓரிரு வருடங்கள் கழித்து, கோயில் சுவர், வண்ணம் அடிப்பதற்கு தயார் செய்யப்பட்டது. அவரின் ஓவியம் அழிக்கப்படும் நிலையில் அவர் ஆக்ரோஷமாக எதையேனும் செய்யக்கூடும் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ, தனது ஓவியத்தின் மீது புதுவண்ணம் படிந்து அது மெதுவாய் அழிவதை மெளனமாக பார்த்தபடி இருந்து விட்டுச் சென்றார்.

madurai_coffee_shops_nostalgia_tea_kadai_nair_tiffins

எண்பதுகளில் இருந்த‌ “திருவள்ளுவர் bus stand” எதிர்புறம் இருக்கும் “shopping complex” வரிசையில் இன்று இருக்கும் KPN travels எதிரே அன்று பேருந்து நிறுத்தம் ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு காபி கடையும், இரண்டிற்கும் இடையே ஒரு விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையும் உண்டு. பெரும்பாலும் அந்த பேருந்து நிறுத்தத்தில் பள்ளி செல்வதற்காக நான் காத்திருக்கும் பொழுது, நம் நண்பர் அந்த விளையாட்டு பொருட்கள் கடையின் படியில் அமர்ந்திருப்பார். காபி கடைக்காரர் அவருக்கென ஒரு கிளாஸில் காபி தருவது வழக்கமான காட்சியாக இருந்தது. அந்த காலை வேளையில் பெரும்பாலும் அற்புதமான பாடல்களே அந்தக் கடையிலிருந்து வரும். ரசனைக்காரரான அவர், நயமற்ற நளினமற்ற‌ பாடல்கள் ஒலித்தால் உடனே “station” மாற்றி விடுவார். சில பாடல்களுக்கு காந்த சக்தி உண்டு. பேருந்து நிலையத்தில் இருந்து மெதுவாக என்னை நகர்த்தி நகர்த்தி, காபி கடை கூரையின் கீழ் கொண்டு போய் நிறுத்தி விடும். ஒரு முறை அவ்வாறு காந்தத்தில் கவரப்பட்டு கடை நிழலில் பேருந்துக்காக காத்திருந்தேன். கடைக்காரர் வழக்கம் போல ஒரு காபி கிளாசை நம்மவருக்குக் கொடுத்தார். டீ அருந்த வந்திருந்த மற்றொருவர் “என்ன அண்ணே இது..?” என்று கேட்க, “போற வழிக்கு புண்ணியம் வேணாமா அண்ணே” என்று பதில் சொன்ன கடைக்காரர் இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாது. அதன் பொருள் இன்று நன்றாகவே விளங்குகிறது. அவர் போன வழியெங்கும் புண்ணியம் சேர்த்திருப்பார் என்பதும் நிச்சயம்.
அது “பூவே செம்பூவே” பாடல் [சொல்லத் துடிக்குது மனசு / 1988] வெளிவந்திருந்த நேரம். திருச்சியையோ திருநெல்வேலியையோ திருகி வைத்திருக்கும் கடைக்காரரின் தயவில் ‍காலை நேர திரை இசையில் இது ஒலிப்பதும் நான் பேருந்துக்கு நிற்பதும் கிட்டதட்ட கால அட்டவணை போல நாள் தவறாது நடக்கும் ஒருங்கிணைந்த நிகழ்வாகிப் போனது. பொதுவாக எந்தவித செய்கையும் இன்றி படியில் அமர்ந்தபடி மெளனமாக காபி குடித்து விட்டு நகர்ந்து போகும் அவர், பாடலின் இரண்டாம் ஸ்டான்சா ஆரம்பத்தில் வேகமாக வரும் தபேலாவின் போது மட்டும் காபி கிளாசில் தாளம் போடுவது போல விரல்களை ஒரு வித தாளக்கட்டில் இயக்குவார். இந்தப் பாடல் நம் மனதின் ஆழ் கிணற்றில் மிகப்பெரிய கல் ஒன்றை தூக்கி எறியும் வேலையைச் செய்யும். உள்ளே உறைந்திருக்கும் பாசி பூத்த நினைவுகளின் நீர், தன் தேக்கத்திலிருந்து சிலிர்த்து உயிர்ப்பிக்கும். நினைவு மூட்டையை சுமந்தபடி தீயில் தகிக்கும் அவருக்கும் இந்தப் பாடல் அத்தகைய அனுபவத்தை தோற்றுவித்ததோ என்னவோ… அந்த உயிர்ப்பு தெறித்து அவருக்குள்ளும் விழுந்திருக்கிறது என்பது அதன் பின் வந்த புதுவருடத்தன்று எங்கள் தெருவில் தெரிந்தது.
எங்கள் தெருவில் இருந்த ரைஸ் மில்லில் புது வருட இரவில் மட்டும் மில் வாசலில் இரண்டு பெரிய ஸ்பீக்கர்கள் வைத்து பாட்டு போடுவார்கள். அந்த வருடம் பிரபலமாகியிருந்த இந்தப் பாட்டும் போடப்பட்டது. மார்கழியின் மிச்சமாய் கவிந்திருந்த‌ குளிரை போர்த்தி உறங்கத் தயாராகிக்கொண்டிருந்தது தெருவின் இரவு. வீட்டின் வாசப்படியில் அமர்ந்திருந்தேன் நான். தீயின் தழல் அருகில், தழலின் நிழல் போல் அமர்ந்திருந்த‌ அவர் வழக்கம்போல் ஒரு கந்தல் துணியை தைக்க முயன்று கொண்டிருந்தார். பாடல் துவங்கி சற்று நேரத்திற்கெல்லாம் அவரின் அனைத்து இயக்கமும் நின்று போனது போல இருந்தது. தன் கையில் இருந்த ஊசியிலே அவரின் பார்வை நிலைகுத்தியிருந்தது. அது நினைவின் ஊசியாக இருக்கக் கூடும். நினைவின் ஊசி குத்தினால் நிகழ்காலம் நிலைகுத்தித்தானே போகும்?

red-flower_sempoo_artwork_water_colors_stem_green

இந்தப் பாடலின் துவக்கமே நாம் நினைவில் நீந்த தயாராகும் வகையில் ஒரு வித கிறக்கம் கொடுக்கும். மழையின் துளிகள் தலையின் மயிர்கால்களின் வேர் வழியே தோலின் செதில்களில் இறங்கி மூளையில் உறங்கும் நினைவுகளை எழுப்பி, ஒவ்வொன்றாக மனதுக்கு அனுப்புவது போல கிடாரின் சொட்டுகள்…பின்னர் ஆரம்பிக்கிறது பாடல் வரிகள். மழையின் துளிகள் என்றாலே அது நினைவின் உளிகள் தானே?
எத்தனை பரிமாணங்களில் இந்தப் பாடலை நம்மால் கேட்க முடிகிறது! அவை இசையின் பரிமாணங்களில் பிறந்த நினைவின் பல கோணங்களாகி, எத்தனை பாதைகளாய், கால வெளியில் மனதில் எத்தகைய பயணங்களாய் விரிவடைகிறது!
பாட்டு முழுவதும் அடுக்குகளாய் அணிவகுக்கும் வயலினையும் கிடாரையும் மனதின் கைப்பிடியாக பிடித்துக் கொண்டே ஒரு முறை பயணம் போகலாம்…கேட்பவரின் ஞாபக‌ நரம்புகளின் மீதல்லவா இந்த‌ வயலின் லாவகமாக வாசிக்கப்படுகிறது. அதிலிருந்து பிறக்கும் ஒலித்துணுக்குகள் ஒவ்வொன்றும் நினைவின் கணுக்கள் போலல்லவா தொடர்கிறது…..அதிலும் குறிப்பாக, சரணங்களின் அனைத்து பகுதிகளிலும் புகுந்து வெளிப்படும் வயலின், “நிழல் போல நானும்” என்ற வரியின் போது மட்டும் முதல் முறை மெளனம் காத்து, மறுமுறை ஊற்றெடுக்க துவங்குவதை நாம் எவ்வாறு உள்வாங்குவது?
“நினைவு” என்பதே இரண்டு அடுக்குகள் கொண்ட மனதின் உணர்வு நிலையை உள்ளடக்கிய ஒற்றைச் சொல்லோ? ஏனெனின், நினைவு என்றாலே அது நினைவையும், அந்த நினைவை பற்றிய நினைப்பையும் அந்த நினைப்பினால் ஊற்றெடுக்கும் நிகழ்கால உணர்வுகளையும் உள்ளடக்கியது தானே? இப்பொழுதைய நினைவின் படிமம் முன்னர் நிகழ்வின் வடிவமாக இருந்த போது ஏற்பட்ட உணர்வுகளின் இழைகள் தானே காலத்தின் வலையாக பின்னிப்பின்னி மனதின் நிலையாக மாறுகிறது? எனவே இதை இசைக்குள் நுழைத்து சிந்தனையின் விசையாக்கி நமக்குத் தர வேண்டுமென்றால் அதன் கோர்வையிலும் இரண்டு ஒலி அடுக்குகள் தேவைப்படுமோ? எனவே தான் இளையராஜா இந்தப் பாடலின் சரணங்களில், மேற்கூறிய வரியின் அடியில் மட்டும் காக்கும் மெளனத்திற்குப் பின், வயலினையும் கிடாரையும் மேலடுக்கு கீழடுக்காய் பெரிய அலையின் மடிப்புகளில் சுருண்டு வரும் சிறிய அலை போல் இரண்டையும் கரைபுரள வைத்திருக்கிறாரோ?

homeless_fire_lone_tree_lake_riverside_alone_look_boat_sail_city_away

ஆள் நடமாட்டம் குறைந்த அந்த இரவின் பொழுதில், ரைஸ் மில் வாசல் துவங்கி தெருவெங்கும் தன் இதழ்கள் விரிய மலர்ந்து கொண்டிருந்தது “பூவே செம்பூவே”…வயலினில் வழிந்த துயரத்தின் சாயல் கிடாரில் தேங்கி அதை கப்பாஸ் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கும் முதல் சரணம் முடிகின்ற நேரம்…சட்டென்று அவர் எழுந்து தெருவின் குறுக்கே கடந்து எதிர்புறத்தை அடைந்தார். ஓவியம் இருந்த இடத்தில், அதன் கோடுகளை அவர் அறிந்த விதத்தில், விரல்களை நகர்த்தினார். கோடுகளின் பாதையில் விரல்கள். விரல்களின் போகும் பாதையெங்கும் நினைவின் பரல்கள் சிதறியிருக்கக் கூடும். அந்த சிதறல் நிகழ்ந்த நொடிகளைத்தான் இந்தப் பாடலின் ஒலியில் கடந்து கொண்டிருந்தாரோ அவர்? கோடுகளின் பாதையில் சென்ற விரல்கள் தாள‌ முடியாத நினைவின் வலியில் துடித்தனவோ? சற்றும் எதிர்பாராத பொழுதில், முகத்தை ஓவியம் இருந்த இடத்தில் ஒட்டித் தேய்த்து அவர் குலுங்கி அழுவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தேன் நான்.
நிமிடங்கள் கரைந்த பின் நரைத்த தாடியில் ஆங்காங்கே தேங்கியிருந்த துயரத்தின் துளிகளுடன் தனது இடத்திற்கு வந்து மீண்டும் “தைக்க”த் துவங்கினார். நிகழ்வின் சூட்டுடன் எரிந்து கொண்டிருந்தது நெருப்பு. எரிவதும் எரிப்பதும் மட்டுமா நெருப்பின் தன்மை? அவரின் கைகளைப் பற்றிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. காலகாலமாக நாம் கற்பித்து வைத்திருக்கும் தப்பர்த்தங்களின் வழியே ஏற்பட்ட தயக்கமும் பயமும் என்னை அவர் அருகில் செல்ல விடாமல் தடுத்தன. அன்று ஆறுதலாக ஒரு நிமிடம் அவரின் கைகளை பற்றிக் கொண்டிருந்திருக்கலாமோ என்று இன்று நினைக்கையில் மனம் சற்று கூனிக் குறுகுகிறது…
ஆண்டுக்கணக்கில் அவர் அமர்ந்து போன இடம் இன்று அடையாளம் தெரியாமல் மாறி விட்டாலும் அந்த இடத்தை கடந்து எங்கள் வீட்டுக்கு போகையில் அவரின் நினைப்பு சில சமயம் எழும். அத்துடன் “செம்பூவின்” வாசனையும் வரும். அனிச்சையாக எனது கண்கள் எதிர்புறம் திரும்பி கோயில் சுவற்றில் மறைந்து போன ஓவியம் இருந்த இடத்தை நோக்கும். அதன் மேல் பல முறை வண்ணப்பூச்சுக்கள் அடித்து வருடங்கள் வடிந்து விட்டன. ஓவியத்தின் தடத்தை தனக்குள் தாங்கி அப்படியே இருக்கிறது கோயில் சுவர். காலத்தை போல…