குளோரியா பண்ணை

annapurna-rice

பாண்டிச்சேரி புதுச்சேரியானது. சென்னை மக்கள் புதுச்சேரியை ‘பாண்டி’ என்று செல்லமாக அழைப்பார்கள்.பாண்டியில் இயற்கை விவசாயம் செய்யப்படுவதாகக் கூறிய எஸ்.எஸ். நாகராஜன், எங்கே என்று கூறவில்லை. எஸ்.என். நாகராஜன் ரசாயன விவசாயத்தில் தீவிரவாதி எனினும் என் மீது மரியாதையுள்ளவர், இனிய நண்பர். இயற்கை விவசாயம் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்று விவாதிப்பவர். அப்போது தினமணியில் விவசாயப் பகுதியில் எழுதி வந்தார். இப்போது தினமலரில் விவசாயத்தைப் பற்றி எழுதுகிறார். இன்று 2013ல் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகிவிட்டன. அதில் எனக்குப் பங்குண்டு என்றாலும் நான் கூறுவது 1992-93 காலகட்டம்.

பூச்சி மருந்து என்பது உயிரைக் குடிக்கும் விஷம் என்பதும் அதைத் தேவையில்லாமல் பயிர் மீது தெளிக்கும்போது பயிர் மட்டுமல்ல, மண், விண் எல்லாமே விஷமாகி அதன் தாக்கம் தாய்ப்பால் வரை சென்று இன்று தமிழ்நாட்டில் வரும் புற்றுநோய் மிகுந்துள்ளதே சாட்சியாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இருந்தும் இறந்தும் வருகின்றனர்.1992-93 காலகட்டத்தில் பூச்சி மருந்தைப் பயன்படுத்தாமல் விஷமில்லா விவசாயம் செய்வோர் யார் என்ற தேடலில் நாகராஜன் கூறிய மொட்டையான தகவல், “பாண்டி”. பாண்டியில் யார் பாண்டியில் யார் என்ற கேள்விக்கு மதுரை பி. விவேகானந்தனிடமிருந்து விடை வந்தது மட்டுமல்ல, பாண்டிச்சேரியில் இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடி வருவதாகவும் பிள்ளையார்க்குப்பம் குளோரியா பண்ணைக்கு வரும்படி அழைப்பும் விடுத்தார். அப்போது நான் அரசுப் பணியில் இருந்தேன். விடுமுறை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது.

ciks_av_balasubramanian_k_vijayalashmi_directors_indian_heritage_knowledge_systems_ayurveda

இந்த விஷயத்தில் விவேகானந்தனுக்கு முன்பே இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தின் நிறுவனர்கள் ஏ. பாலசுப்ரமணியமும் அவர் மனைவி விஜயலட்சுமியும் அறிமுகமானார்கள். இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் தேசபக்தி மாணவர் மக்கள் இயக்க உறுப்பினர்கள் (தே.மா.ம. இயக்கம் கலைக்கப்பட்டு சிதைந்த பின்னர் உறுப்பினர்கள் அவரவர் தனித்தனி தொண்டு நிறுவனங்களை உருவாக்கினர். அப்படி உருவானதுவே இந்திய பாரம்பரிய அறிவியல் மையம்). அப்போது நான் இந்திரா நகர சி.பி.டபிள்யு.டி. குவார்ட்டர்ஸில் குடியிருந்தேன். என் தமையனார் எம்.ஆர். ராஜகோபாலன் டெல்லியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கீழ்நிலை செயலாளராகப் பணிபுரிந்தார்.எனது தமையனார் சென்னை வரும்போது பாலுவும் விஜயலட்சுமியும் அவரைச் சந்திப்பது வழக்கம். பாலு பொறியியல் பட்டதாரி என்று விஜயலட்சுமி உயிரியல் முதுகலை பட்டதாரி என்றும் அறிந்தேன். நாட்டுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தில் இருவரும் இணைந்து இன்றளவும் இயற்கை விவசாயத்திற்காகவும் பாரம்பரிய நெல் மற்றும் இதர விதைகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு ஆர்வம் காரணமாக இவர்களின் அலுவலகம் சென்று பார்த்தபோது, பி. விவேகானந்தன் நடத்தி வரும், ‘நம்வழி வேளாண்மை’ என்ற காலாண்டு இதழைப் படிக்க நேர்ந்தது. இவர் விவசாயத்தில் முதுகலை பட்டம் படித்தவர். இயற்கை விவசாயிகள், மூலிகை மருத்துவர்கள், அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரின் குரலோசை என்ற அறிவிப்புடன் வெளியிடப்படும் ‘நம்வழி வேளாண்மை’ ‘ஹனிபீ’யின் அங்கம். ஐ.ஐ.எம். அகமதாபாத் பேராசிரியர் அனில் அகர்வாலின் உதவியுடன் ஆங்கிலத்தில் ‘சேவா’ என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனமாக பி. விவேகானந்தனின் இயக்கம் பல இயற்கை விவசாயிகளை அடையாளப்படுத்தியுள்ளது. இப்படிதான் மதுரை விவேகானந்தன் அறிமுகமானார்.[1]

அந்த நாளும் வந்தது. எனது பசுமைப் பயணத்தின் பிள்ளையார் சுழியாக புதுச்சேரி குளோரியா பண்ணை அமைந்தது. காலையில் பேச்சு, மதிய உணவுக்குப்பின் பார்வையிடும் நேரம். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாலகங்காதர திலகரின் வீர எழுச்சியில் பங்கு கொண்ட தீவிரவாதியான அரவிந்தரின் மீது பிரிட்டிஷ் ஆட்சி குறி வைத்தபோது பிரான்ஸ் நாட்டு காலனியான அடைக்கலம் புகுந்த அரவிந்தர் ஆன்மிகவாதியானார். பிரிட்டிஷ் ரௌலட் சட்டம் புதுச்சேரியில் செல்லுபடி ஆகாது. இதே பிரச்சினை பாரதியாருக்கும் வந்தது. புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த கனக சுப்புரத்தினம் பாரதியாரின் மேதாவிலாசத்தைக் கண்டு பரவசமாகி தன் பெயரை பாரதிதாசன் என்று சூட்டிக் கொண்ட இடமும் இதுவே. இப்படிப்பட்ட பெருமைக்குரிய புதுச்சேரியிலிருந்து திருக்கானூர் போகும் வழியில் சுமார் 5 கி.மி. தூரத்தில் உள்ள பிள்ளையார்குப்பம் என்ற கிராமத்தில் உள்ளதுதான் குளோரியா பண்ணை. [2]

நான் சென்னையிலிருந்து பஸ் பிடித்து புதுச்சேரி வந்தடைய 11 மணியாகிவிட்டது. சுமார் 15 நபர்கள் ஒன்று கூடியிருந்தனர். இப்பண்ணையைத் தோற்றுவித்த மனீந்தர் பால் பேசத் தொடங்கியிருந்தார். கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த விவேகானந்தன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை வரவேற்றார். என்னையும் அறிமுகப்படுத்தினார்.

மனிந்தர் பால் ஒரு வங்காளி. அவர் பிபின் சந்திர பாலுக்கு உறவினரா? விருட்சாயுர்வேதம் எழுதிய சுரபாலுக்கு உறவினரா? இப்போது அதுவா முக்கியம், பேச்சை கவனிக்க வேண்டுமே! இந்தக்கூட்டம் போனாலும் குறிப்பெழுதும் பழக்கம் எனக்கு இல்லை. நினைவில் நின்றவை மட்டுமே பின்னர் எழுத்தில் வரும். அதே சமயம், பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதும் திட்டத்தில் இயற்கை விவசாய முன்னோடிகளைச் சந்திக்கும்போது மட்டும் குறிப்புகள் எடுப்பதுண்டு.மனிந்தர் பால் அரவிந்த ஆசிரமப் பண்ணையைப் பற்றியும், கால்நடைகள் பற்றியும் பயிர்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார். பேச்சு முடிந்ததும் மதிய உணவு. மதிய உணவு முடிந்ததும் பண்ணையைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பிரிந்து செல்வது திட்டம்.

சரியான பசி. தொடர்ந்து பலர் பேசினர். எனக்கும் வாய்ப்பு வந்தபோது, “நான் ஒரு ஏட்டுச் சுரைக்காய். நான் கற்க வந்துள்ளேனே தவிர கற்பிக்க வரவில்லை. அதற்கான தகுதி பெற இன்னும் சில காலம் வேண்டும்,” என்று கூறினேன். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் திண்டுக்கல் அருகில் காந்திகிராமத்தில் குடியேறப் போவதாகவும் அது சமயம் நம் வழி வேளாண்மையில் உதவியாளர் வேலை வழங்க வேண்டுமென்று விவேகானந்தனிடம் விண்ணப்பித்தேன்.இரண்டாண்டு பணி முடிந்தபின் காந்திகிராமத்தில் குடியேறியவுடன் தகவல் தெரிவிக்குமாறு ஒப்புதல் தெரிவித்தார். பின்னர் அந்தக் கூட்டத்துக்கு ஜெயந்த்வர்மன் பார்வே வந்திருந்தார். அவர் தன் அனுபவத்தை விளக்கியபோது வியப்பிலாழ்ந்தேன். அவர் முதுகலை அறிவியல் பட்டதாரி. . சாங்லி மாவட்டத்தில் உள்ள விட்டா என்ற ஊரில் இவரது இயற்கைப் பண்ணை 40 ஏக்கரில் உள்ளது. இவரது சாகுபடி முறையைப் பின்னர் விவரமாகக் காண்போம்.

இவரது பேச்சால் கவரப்பட்ட மறுதினமே மண்புழு பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டேன். 1994 காலகட்டம். மண்புழுவையே காண முடியாத சூழ்நிலை. பார்வே ஆரம்பத்தில் ரசாயன உரக்கடையையும் உயிர்கொல்லி பூச்சிமருந்து தொழிற்சாலையும் நடத்திக் கொண்டிருந்தார். இவையெல்லாம் விவசாயத்துக்கு எதிரிகள் என்று உணர்ந்த மறுகணமே, ரசாயன உரக்கடையை மூடினார் பார்வே. பூச்சிமருந்து தொழிற்சாலையில் இயற்கை பூச்சிவிரட்டியையும் பஞ்சகவ்யத்தையும் தயாரித்து மண்புழுவின் உதவியுடன் விவசாயத்தில் உயர்ந்த மகசூல் எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

பார்வே பேச்சு முடிந்ததும் உணவு இடைவேளையில் பார்வேயும் மனிந்தர்பாலும் என் அருகில் அமர்ந்து உணவு உட்கொண்டனர். முதல்முறையாக இயற்கை வழி சாகுபடி மூலம் விளைந்த உணவை உண்ணும பேறு கிட்டியது. அப்போதுதான் மனிந்தர்பால் ஒரு உண்மையைக் கூறினார். இங்கு சாகுபடியாகும் நெல், தேங்காய், காய்கறிகள், பழங்கள், பசும்பால் எல்லாம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வரும் விருந்தினர்களின் பயன் கருதி அங்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்தார். அரவிந்தர் ஆசிரமத்தில் வழங்கப்படும் உணவு நஞ்சில்லா விளைபொருட்கள் கொண்டு சமைக்கப்பட்டவை என்று அறியலாம். மதிய உணவுக்குப்பின் குளோரியா பண்ணையைச் சுற்றிப் பார்த்து அறிந்து; கொண்ட இயற்கை விவசாய தொழில்நுட்பம் என்ன? இதை அறியத்தானே நான் அங்கு சென்றேன்!

cows

இந்த மண்ணில் தொடக்கத்திலிருந்தே ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை. மொத்தம் 100 ஏக்கர் நிலப்பரப்பில் நெல், வாழை, காய்கறிப் பயிர்களுடன் நேப்பியர் புல், கென்யா புல், கோ 3 முதலிய தீவனப் புற்களும் பயிராகின்றன. விவசாயத்திற்குரிய முக்கியத்துவத்தைவிட பசுப்பராமரிப்புக்கான முக்கியத்துவம் கூடுதலாகப் பட்டது. இப்பண்ணையில் மொத்தம் 300 பசுமாடுகள் உள்ளன. பசுமாடுகளின் சாணம் எரிவாயுவாகவும் பயன்படுகிறது. சாண எரிவாயு கொண்டு உணவு சமைக்கப்படுவதுடன் அதன் கழிவு (slurry) மற்றும் மாட்டுக் கொட்டிலில் உள்ள சாணம் எல்லாம் தண்ணீர் விட்டு அன்றாடம் சுத்தம் செய்யும்போது ஒரு பெரிய குட்டை அமைத்து அதில் விடப்படுகின்றன. அந்தக் குட்டையில் மீன்கள், வாத்துகள் வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறு ஒரு குட்டையே பயிர் நிலத்திற்குரிய உரநீராக மாற்றப்படுவதை கவனித்தேன். குட்டை நீர் ஒரு பங்கும், தூய்மையான பாசன நீர் மூன்று பங்கும் சேர்ந்து செடிகளுக்கும், தென்னைக்கும் நெல் வயல்களுக்கும் பாய்கின்றன. பயிர்களுக்கு நோய் வராமல் இருக்க இயற்கைவழி மூலிகை கரைசல் தயார் செய்யப்பட்டு விசைத்தெளிப்பான் (Power Sprayer) மூலம் தெளிக்கப்படுவ்தால் இலைவழி ஊட்டமும் கிடைக்கிறது. மூலிகைக் கரைசலில் ஆடாதொடை, வில்வம், காட்டுநொச்சித் தழைகளை அரைத்துப் பின் வேப்பங்கொட்டை மற்றும் பெருங்காயத்தைத் தூள் செய்து கலந்த துவையலை பசு மூத்திரத்தில் கலந்து, அதில் 75 முதல் 80 சதவிகிதம் நீர் கலந்து தெளிக்கப்படுகிறது. இதனால், பயிர்கள் நோயுறாமல், நல்ல விளைச்சல் தருகின்றன. வெள்ளைப் பொன்னி ஒரு ஹெக்டேரில் 50 க்விண்டால் வரையும் தீவனப்புல் 25 முதல் 30 டன்கள் வரையிலும் விளைச்சல் தருகின்றன.

குளோரியாப் பண்ணையில் பசுப்பராமரிப்பு இன்னமும் சிறப்பாக இருந்தது. எல்லா மாடுகளும் கராச்சிப் பசுக்கள். அதாவது சிவப்புச் சிந்தி, வெள்ளைச் சிந்தி, சாகிவால், காங்கிரஜ் முதலியவை. இவற்றின் தோற்றம் பாகிஸ்தான் உள்ளடங்கிய தார் பாலைவனம், குஜராத், ராஜஸ்தான் எல்லைகளாகும். இவையெல்லாம் நல்ல கறவை மாடுகள். நல்ல முறையாக வளர்த்தால் நாளொன்றுக்கு 10 முதல் 15 லிட்டர் பால் பெறலாம். ஒவ்வொரு மாட்டுக்கும் 10 முதல் 12 கிலோ பசுந்தீவனம் வழங்கப்படுகிறது. அடர்தீவனமாக கோதுமை, ஓட்ஸ், தவிடு, பயறு, உளுந்து குருணையுடன் மொலாசஸ் (சர்க்கரை கழிவு), காய்கறி கழிவுகள், பூசணம் இல்லாத கடலைப் பிண்ணாக்கு வழங்கப்படுகிறது. 10 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு சுமார் 5 கிலோ அடர்தீவனம் வழங்கப்படுகிறது. நார்ச்சத்துள்ள உலர்தீவனமாக வைக்கோல், சோளத்தட்டையும் வழங்கப்படுகிறது. பசும்புல்லில் நல்ல நீர்ச்சத்து உள்ளதால் கறவை மாடுகளில் கூடுதல் பால் பெற பசும்புற்கள் மிகவும் அடிப்படையான தீவன உணவு என்று அறியலாம்.

புதுச்சேரியைப் பற்றி பேசும்போது ஆரோவில் பண்ணையைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். நான் அரவிந்தர் பண்ணையைதான் பார்த்து வந்தேன். ஆரோவில் பெர்னார்ட் கிளார்க் நடத்தும் இயற்கைப் பண்ணையைப் பார்வையிடும் வாய்ப்பு இல்லை. கேள்விப்பட்டதை எடுத்துரைக்கிறேன்.

ஆரோவில் என்ற சொல் உண்மையில் அரவிந்தர் என்ற சொல்லின் திரிபு. வங்காளிகள் ஆரோபிந்தோ என்று உச்சரிப்பார்கள். அதை உச்சரிக்க இயலாத பிரஞ்சுக்காரர்கள் ஆரோபில் என்று உச்சரித்தனர். அது கடைசியில் ஆரோவில். சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும்போது ஆரோவில்லைத் தாண்டித்தான் போக வேண்டும்.வாய்ப்பு இருந்தால் ஆரோவில் வளாகத்தைப் பசுமையாக்கிய பெர்னார்டு கிளார்க்கைச் சந்திக்கலாம். இவர் இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் சிலருக்கு நிதி உதவியும் செயல்திட்டமும் அளித்து உதவும் இந்திய வேளாண் மறுமலர்ச்சி மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர். நம்மாழ்வாரின் நண்பர். கராச்சி இனp பொலிகாளைகளுடன் இந்திய நாட்டு மாடுகளைச் சேர வைத்து புதிய கலப்பின மாடுகளை உருவாக்கியவர். காடு வளர்ப்பு, பல ரக தானிய சாகுபடி, காய்கறி சாகுபடியில் வட்டப்பாத்தி முறை என்றெல்லாம் புதிய முயற்சிகளைச் செய்தவர். ஆரோவில் பகுதியில் ஒரு காலத்தில் புதராயிருந்த 130 ஏக்கர் கரட்டு நிலத்தைச் சோலையாக்கி மரங்களுடன் இணைந்த உணவுப்பயிர் சாகுபடிக்கு வித்திட்டவர். ஆரோவில்லில் வில்லும் இல்லை அம்பும் இல்லை. அரோ பிருந்தாவன் உண்டு. அன்னபூர்ணா உண்டு. இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவு உண்டு.

auroville_pondycherry_pudhucherry_ashram_aurobindo_natural_farming_organic_environment

————————————————————-

பதிப்புக் குழுவின் குறிப்புகள்:

[1]தமிழகத்திலுள்ள இயற்கை விவசாயிகளின் விவரங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஒரு சிறு பட்டியலாகக் கொடுக்கிறது. அது இங்கே:

http://agritech.tnau.ac.in/org_farm/tn_orgfarmers.pdf

[2] க்ளோரியா பண்ணை பற்றி வலையில் நிறைய தகவல்கள் கிட்டுகின்றன. அவற்றில் சிலவற்றுக்கு இங்கே சுட்டிகள்:

http://www.indiaenvironmentportal.org.in/feature-article/whre-science-and-tradition-join-hands

http://www.agriculturesnetwork.org/magazines/global/introduce-ileia/gloria-land-in-india-a-starting-point-for

ஒரு தகவல் படம் இங்கே:

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fXIexn4cWiU

இதில் மறுபடி மறுபடி விவசாயம் என்பது ஒரு வாழ்முறை என்றும், இது பாரதப் பாரம்பரியம் என்றும் பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மரபு இடது சாரியினரின் இந்தியா ஒரு நச்சுக் குட்டை என்ற பொய்ப் பிரச்சாரத்தை உடைக்க இத்தகைய தகவல் படங்கள் ஒரு அளவு உதவலாம். உலக முதலியத்தின் கிடுக்கிப் பிடியில் இந்திய மக்களைச் சிக்க வைக்க அத்தனையையும் செய்து கொண்டிருக்கும் இந்திய அரசு, அதன் அதிகாரிக் கூட்டங்களையும் மக்களுக்குப் புலப்படுத்த இது போன்ற பல நூறு திரைப்படங்கள் தேவைப்படும்.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.