எதற்கு மொழிபெயர்ப்பு?

ashokamitran2

இரண்டாம் நிலைக் குடிமகன் என்பது போல மொழிபெர்ப்புகளை இரண்டாம் நிலைப் படைப்புகளாகத்தான் கருதுகிறார்கள். . இந்த நூல்களை இரண்டாம் தட்டில்தான் வைப்பார்கள்.ஆனால் மகத்தான இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு மூலம்தான் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

தமிழரில் மிகப் பலருக்கு இரண்டாம் மொழிப் பரிச்சயம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. அவர்களுக்கு மொழிபெயர்ப்புகளும் கிடைக்காமல் போய் விட்டால் அது பெரும் இழப்பே. மொழிபெயர்ப்புகள் மூல மொழி அறிந்தவர்களுக்கு இல்லை. மொழிபெயர்க்கப்பட்ட மொழிக்காரர்களுக்குப் படிக்கக் கிடைக்கும் முயற்சி. ஓரளவு ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு ஐரோப்பிய இலக்கியத்தை ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம்தான் அணுக முடிகிறது.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய லத்தீன் அமெரிக்க இலக்கியம் இந்தியருக்கு மட்டும் அல்ல, உலகத்தில் புனைகதை படிப்போர் அனைவருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம்தான் படிக்கக் கிடைத்தது. இந்திய மொழிகளிலிருந்து நமக்குப் படிக்கக் கிடைக்கும் படைப்புகளும் மொழிபெயர்ப்பு மூலம்தான் கிடைக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தாகூரையும், சரத் சந்திரரையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் வங்காள மொழியைக் கற்றுக்கொண்டார்கள். இவர்களுக்குப் பின் வந்த தலைமுறைனர் சிலர் இன்னமும் சிறப்பாக மொழிபெயர்த்தார்கள். ஆனால் போதவில்லை. இன்னும் ஏராளமான படைப்புகள் தமிழுக்கு வர வேண்டும். சமீபத்தில்தான் தாஸ்தாயவஸ்கியின் இரு நூல்கள் தமிழில் வந்திருக்கின்றன.

தமிழிலிருந்து இதர இந்திய மொழிகளுக்குப் போவது மிகவும் குறைவு. சாகித்திய அகாதெமி, பரிசு பெற்ற நூல்களை ஓரளவு மொழிபெயர்த்து விடுகிறது. ஆனால் வருடக் கணக்கில் பிரதிகள் கிடங்கில் தங்கிவிடுகின்றன. பதிப்பாளர் நல்ல விற்பனையாளராகவும் இருக்க வேண்டும்.

பல மொழிபெயர்ப்பு நூல்கள் சரியான மதிப்புரை இல்லாமல் ஒதுக்கப்பட்டு விடுகின்றன. மூல மொழியைச் சேர்ந்தவர் மதிப்புரை செய்தால் தவறாமல் ‘இது மூல நூல் போல இல்லை’ என்று சொல்லிவிடுவார். எப்படி மூல நூல் போல இருக்கும்? ஆதலால் மொழிபெயர்ப்பு நூல்களை மொழிபெயர்க்கப்பட்ட மொழியை அறிந்தவரே மதிப்புரை செய்ய வேண்டும். துரதிர்ஷ்டவசமாகப் பத்திரிகையாளர்கள் இதைச் செய்வதில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் நூலை வேறு மொழிக்காரர்கள் மதிப்பிடுவதுதான் யதார்த்தத்திற்குப் பொருந்துவதாக இருக்கும்.

சென்னை, ஜூன் எட்டு, இரண்டயிரத்துப்பதிமூன்று.