ஊடகங்கள் ஆடும் கிரிக்கெட்

02_Cricket

தமிழக கிரிக்கெட்டில் சிறந்த பாட்ஸ்மானாகத் தெரிய வந்தவர் மறைந்த திரு டீ.ஈ.ஸ்ரீநிவாசன். இந்தியாவிற்காக ஒரே ஒரு டெஸ்ட் மாச் மட்டுமே விளையாடியவர். இவரைப் பற்றிப் பேசும்போது இந்தியா-ஆஸ்திரேலியாவின் 1980-81 சீஸனைப் பற்றிய ஒரு பிரபலமான சம்பவத்தைப் பற்றி சொல்லாமல் இருக்கமாட்டார்கள். அன்று ஆஸ்திரேலியாவில் சென்று இறங்கியதும் ஒரு உள்ளூர் பத்திரிக்கையாளரிடம் ஸ்ரீநிவாசன் சொன்னாராம்:’லில்லீயிடம் சொல்லி வைங்க, டீ.ஈ. வந்துவிட்டான்னு’

டீ.ஈ. என்று செல்லமாய் அழைக்கப்பட்ட ஸ்ரீநிவாசன் பல முறை இந்தச் செய்தியை மறுத்திருக்கிறார். அன்றைய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எவற்றிலும் இது குறிப்பிடப்படவில்லை. இந்தச் சம்பவம் ஒரு உள்வட்டத்தில், தமாஷாகப் புனையப்பட்டு நாளடைவில் பேச்சுவழக்கில் அடிக்கடி சொல்லப்பட்டதில் பிரபலமாகி, இன்று நிஜமாய் நடந்த ஒரு சம்பவம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

இருந்தாலும் இக்கதையின் சாரம் முக்கியமானது– அப்போதுதான் முதன்முதலாய் டெஸ்ட் ஆட வந்திருக்கும் ஒரு இளம் பாட்ஸ்மன், லில்லீ போன்ற ஒரு மாபெரும் ஆட்டக்காரரை இப்படி விளையாட்டாய் வம்புக்கிழுப்பது – அவரது நகைச்சுவை உணர்வுக்கும், துணிச்சலுக்கும் எடுத்துக்காட்டானது. டீ.ஈ. அப்படி சொல்லவில்லை என்பதே உண்மையானாலும், அவரை நன்றாய் தெரிந்த எவரும் அவர் இப்படிச் சொல்லியிருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டார்கள்.

ஸ்ரீநிவாசன் விளையாடிய காலகட்டத்தில் செய்தித்தாள்களிலும், பத்திரிக்கைகளிலும் கிரிக்கெட் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் மாட்ச் பற்றிய விரிவான செய்தித் தொகுப்புகளாகவே இருந்தன. அபூர்வமாய் ஒரு நேர்காணல் வரும். வம்புச் செய்திகளுக்கும், துணுக்குகளுக்கும், ஆட்டக்காரகளின் சொந்த வாழ்வு பற்றிய உபகதைகளுக்கும் அவற்றில் இடம் இருக்கவில்லை. செய்தியாளர்கள் ஆட்டவீரர்களின் தனிப்பட்ட வாழ்வுக்கு மதிப்பு கொடுத்தது ஒரு காரணம். தனி விருந்துகளில் விஸ்கிக்கும் வோட்காவுக்குமிடையே பரிமாறிக்கொள்ளப்படும் கிசுகிசுக்களுக்கு தரமான (“சீரியஸ்”) பத்திரிக்கைகளில் இடமில்லை எனப் பதிப்பாசிரியர்கள் நினைத்ததும் இன்னொரு காரணம்.

ஆனால் செய்தியாளர்களுக்கிடையே சுவையான வம்புகளுக்குக் குறைவே இல்லை. சில அவர்களின் சுயசரிதைகளிலும், நினைவுக் குறிப்புகளிலும் பிரசுரமாயின. சில பயணக் குறிப்புகளில் பதிக்கப்பட்டன. இன்னும் பல மைதானங்களில் செய்தியாளர் தடுப்புகளிலும், கிளப்புகளிலும், விருந்துகளிலும் பகிரப்பட்டு செவிவழியாய் பிரபலமானவை. அவற்றில் சில கொஞ்சம் நிஜமும் நிறைய கற்பனையுமாய் புனையப்பட்டவை, சில அதீதமாய் மிகைப்படுத்தப்பட்டவை, இருப்பினும் அவை எல்லாம் குறிப்பிடப்படும் பிரபலத்தின் குணாதிசயங்களையும், சுபாவத்தையும் சார்ந்து புனையப்பட்டவை. அவை அம்மனிதர்களின் ஆளுமையைப் வெளிப்படுத்துவையாகவும், அந்நாளைய கிரிக்கெட் கலாச்சாரத்தைச் சித்திரிக்கும் வகையிலுமே இருந்தன.

இன்றைய காலகட்டத்தில் சும்மா ஒரு உதாரணத்துக்கு, முரளி விஜய் போன்ற ஒரு இளம் ஆட்டக்காரர் தென்னாப்பிரிக்காவில் இறங்கி ஒரு செய்தியாளரிடம் “ஸ்டெயினிடம் சொல்லுங்கள், விஜய் இங்கு இருக்கிறானென்று,” எனச் சொல்கிறார் என கற்பனை செய்து பார்ப்போம். உடனே ஒவ்வொரு இந்தியச் செய்தி நிறுவனமும் அவர்கள்தாம் முதன்முதலாய் இந்தச் செய்தியை வெளியிட்டதாய் பெருமைப்படுவார்கள். அதை இடைவிடாமல் நாள்முழுவதும் காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். விஜய் தென்னாப்பிரிக்காவுக்குப் போயிருக்கிறாரா என்று துப்பறிவார்கள்.. பின் அந்த வாக்கியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் மிகைப்படுத்தி ‘அந்தச் சின்னப்பயல் ஸ்டெயினிடம் சொல்லுங்கள் விஜய் என்கிற அபார ஆட்டக்காரன் இங்கே இருக்கிறான் என்று,’ என்கிற வரையில் பெரிதாக்கப்படும். எக்ஸ்பர்ட்டுகள் எனப்படும் சுமார் 500 பேர் அதைப் பற்றி விவாதிப்பார்கள். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நிச்சயம் ஏதாவது சொல்வார். நவ்ஜோத் சித்து எதுவுமே சொல்லாமல் நிறையப் பேசுவார்…

தொலைக்காட்சி நிருபர்கள் விஜயின் வீட்டை முற்றுகை இடுவார்கள். அவருடைய பெற்றோரைக் கேள்வி கேட்டு வறுத்தெடுப்பார்கள். ஏதாவது ஒரு செய்தித்தாளில் விஜய்க்கும் ஸ்டெயினுக்குமான பகை, ஒரு ஐபிஎல் மாட்சுக்குப் பின் நடந்த வாக்குவாதத்தில் ஆரம்பித்தது என எழுதுவார்கள். ‘பெயர் சொல்லவிரும்பாத விஜயின் நெருங்கிய நண்பர் ஒருவர்’ விஜய் ஸ்டெயினுக்கும் அவர் அணிக்கும் அடிக்கடி ஸ்பாம் மெஸெஜ்களை செல்போனில் அனுப்புவார் என்று சொன்னார் என்கிறவரையில் விஷயம் போகும்.

இதனால்தான் இன்று விஜய்யோ மற்ற எந்த இந்தியக் கிரிக்கெட் ஆட்டக்காரரோ டீ ஈ. த்தனமான ஒரு வாக்கியத்தைச் சொல்லமுடியாது. ஊடகங்களின் குறுக்கீட்டின் அளவை உணர்ந்திருப்பதால் அவர்கள் விளையாட்டுக்குக் கூட அப்படி எதுவும் சொல்லிவிடமாட்டார்கள்.

te_srinivasan2

ஏதாவது ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர்கள் பேசுவதை கவனித்தாலே அவர்கள் எந்த அளவுக்குத் தங்களை ஒரே குரலில் பேசத் தயார்செய்து கொண்டுள்ளனர் என்பது புரியும். பலரும் “நான் இந்த மாச்சில் என்னுடைய 100% ஐக் கொடுப்பேன்’ அல்லது ‘இந்த மாச்சை எதிர்நோக்கப் புத்துணர்ச்சியுடன் இருக்கிறோம்,’ என்பது போல் புளித்துப் போன குறிப்பைச் சொல்வார்கள். மாட்ச் முடிந்தபின்பு நடக்கும் செய்தியாளர் கூட்டங்களும் இதேபோல் போரடிக்கும். “சரியான இடங்களில் பந்து வீசினோம்,” அல்லது “இன்று எங்களுக்கான நாளாய் இருக்கவில்லை, அவ்வளவுதான்,” (It was just not our day) என்று சில தயார்படுத்தி வைத்திருக்கும் வாக்கியங்களைச் சொல்வார்கள். மிகச்சிலரே வெற்றி, தோல்விக்கான காரணங்களை அலசி ஏதாவது பேசுவார்கள். சிலருக்கு பேச வராது என்பதினால் அப்படி; ஆனால் பலரும் எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம் என்பதற்காக எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அன்றைய ஆட்டத்தின் சுவையான துணுக்குகள் பற்றி அபூர்வமாய் யாராவது ஒருவரே பேசுவார்.

இதுதான் இன்றைய கிரிக்கெட் பற்றிய செய்திகளின் பெரிய முரண்பாடு. இன்றைய கிரிக்கெட் வீரர்கள் சதா சர்வகாலமும் காமிராக்களின் ஒளியில் இருக்கிறர்கள். ஓட்டல் லாபிகள், ஏர்போர்ட்டுகள், பார்ட்டிகள், சிறப்பு விற்பனை விழாக்கள், ப்ராக்டீஸ் நேரம் என்று எங்கு பார்த்தாலும் நிருபர்களும் விசிறிகளும் அவர்களை மொய்க்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை கவனமாய் கண்காணிக்கப்படுகிறது, ஒவ்வொரு அடியும், சறுக்கலும் கவனிக்கப்பட்டு சிரத்தையுடன் செய்தியாக்கப்படுகிறது.

இருந்தாலும் நமக்குச் சொல்லப்படும் இந்த விஷயங்களில் அவர்களின் சாரம் வெளிப்படுவதில்லை. அவர்கள் எந்தப் பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், என்ன கார் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு விருப்பமான உணவகங்கள் என்பதெல்லாம் நமக்குச் சொல்லப்பட்டாலும், அவர்களுடைய நகைச்சுவை உணர்வைப்பற்றியோ அல்லது இதர குணநலன்கள் பற்றியோ நமக்கு ஒன்றும் தெரியவருவதில்லை. இது போதாதென்று BCCI வேறு ஆட்ட வீரர்கள் தனிப்பட்ட முறையில் பேட்டிகள் அளிக்கக்கூடாது என்று தடை விதித்து அவர்களின் வாயைக் கட்டி இருந்தது.

பேட்டி கொடுக்க அனுமதித்த போதும் பெரும்பாலான ஆட்டக்காரர்களுக்குச் செய்தியாளர்களுடன் பேசுவது சௌகரியமாய் இருப்பதில்லை. (நாம் ஒன்று சொல்ல இவர்கள் என்ன எழுதுவார்களோ? எந்தப் பத்திரிக்கைக்காரரை நம்புவது?) பெரும்பாலான செய்தியாளர்கள், குறிப்பாய் தொலைக் காட்சிகளில், ஒரு பரபரப்பான தலைப்புச் செய்தியை கண்டுபிடிப்பதில்தான் குறியாய் இருக்கிறார்கள். அவர்கள் பரபரப்பை தேடத் தேட ஆட்டக்காரர்கள் சொல்லும் கருத்துகள் இன்னும் உப்புசப்பற்றதாய் போய்க் கொண்டிருக்கின்றன.

கிரிக்கெட் வீரர்களை இந்தியாவில் சில விசேஷத் திறமைகள் கொண்ட சாதாரண மனிதர்களாய் பார்ப்பதில்லை. அவர்களை சூபர் ஹீரோவாக அல்லது சூபர் வில்லனாகத்தான் பார்க்கிறார்கள். டெண்டூல்கர் கடவுளாம். (ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தான் கடவுள் இல்லை என்று தெளிவுபடுத்த வேண்டியிருந்தது). சமீபத்தில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் ’துரோகி” என வர்ணிக்கப்படுகிறார். அவரது அணி வெற்றிவாகை சூடினால் எம் எஸ் டோனி ரஜினிகாந்தாகவும், தோற்றால் பிரகாஷ்ராஜாகவும் சித்திரிக்கப்படுகிறார். மிதியடியாய் இருந்த ரவீந்திர ஜடேஜா இப்போது ஒரு ராக்ஸ்டார். மீண்டும் ஒரு சில ஆட்டங்களில் சரியாய் விளையாடாவிட்டால் திரும்ப மிதியடியாக்கப்பட்டுவிடுவார்.

இவை எதுவுமே இந்த ஆட்டக்காரர்களினுள்ளே இருக்கும் மனிதர்களைப் பிரதிபலிப்பவை அல்ல. அவர்களது குணம், பண்பு, சுபாவம் எவற்றையும் இவை வெளிப்படுத்துவதில்லை. இவை எல்லாமே அவர்களைப் பற்றி ஊடகங்களின் சித்திரிப்புகள்தான், இந்தச் சித்திரிப்பில் கருப்பும் வெள்ளையும் மட்டுமே உண்டு. இன்று ஹீரோ, நாளை ஜீரோ. இடைப்பட்ட சாம்பல் வண்ணக்கலவைகளை பற்றி அலசவோ, சிந்திக்கவோ நேரமில்லை. விளம்பரதாரர் இடைவெளிக்கு நேரமாகிவிட்டதே.

இதுதான் இன்றைக்கு இந்தியாவில் கிரிக்கெட் எதிர்நோக்கும் சிக்கலான சவால். தொலைக்காட்சியில் காட்டப்படுவதிலும், செய்தித்தாள்களில் நாம் படிப்பனவற்றிலும் எத்தனை நம்பத்தகுந்தது? எத்தனை உண்மையானது? நம் தொலைக்காட்சித் திரைகளை நிறைக்கும் இந்த மனிதர்கள் நிஜத்தில் எப்படிப்பட்டவர்கள்? ஒரு திரைப்படத்தில் தோன்றும் நட்சத்திரங்களா, அல்லது நம்ம ஏமாற்றிப் பணம் பண்ணும் வியாபாரிகளா? இத்தகைய மனிதர்களை நாம் நிஜ வாழ்வில் ஒரு சூபர்மார்க்கெட்டில் சந்திப்போமா? இவர்களால் சமுதாயத்தில் நம்மில் ஒருவராய்ச் செயல்பட முடியுமா?

டீ.ஈ.ஸ்ரீநிவாசனின் காலத்தில் புழங்கிய பல கதைகள் உண்மையாய் இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் ஒரு நல்ல புனைவுக்கதை போல, அவை நம்பக்கூடியவையாய் இருந்தன.– நிஜத்துக்கு மிகச் சமீபத்தில் இருந்தன.

இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் ஒரு பம்மாத்தாய், பித்தலாட்டமாய் மாறும் ஆபத்திலிருக்கிறது. ஆட்டங்களில் ஃபிக்ஸிங், பெட்டிங் என்று தினமும் வெளிவரும் செய்திகளினிடையே பார்வையாளர்களுக்கு எதை நம்புவது, எதை விடுவது என்றே குழப்பமாக இருக்கிறது. இதிலெல்லாம் சலித்துப் போய் ‘இந்த பிரும்மாண்ட ஏமாற்றுவேலையைப் புரிந்துகொள்வதில் நேரம் விரயம் செய்ய வேண்டுமா/’ என்று மக்கள் கேட்க ஆரம்பிக்கும் நாள் கிரிக்கெட்டுக்கு ஒரு சோதனையான பெரும் திருப்பமாய் இருக்கப்போகிறது.

0 Replies to “ஊடகங்கள் ஆடும் கிரிக்கெட்”

  1. மக்கள் கிரிக்கெட்டை விட கால்பந்தையே அதிகம் ரசிக்கிறார்கள். திமிர் பிடித்த ஊடகங்கள் தான் கிரிகெட்டை மக்களிடம் திணிக்கின்றன. அடுத்த வருடம் இந்நேரம் உலகமே பரபரப்பாக இருக்கப்போகிறது. உலகத்தையே திரும்பிபார்க்க வைக்கும் சக்தி கால்பந்துக்குத்தான் உண்டு. நல்ல அலசல். எல்லோரையும் பயமுறுத்துவதையே குறிக்கோளாக கொண்டு ஊடகம் செயல்படுவதால் நிருபர் தனது கற்பனையில் ஜோக்கை உருவாக்குவதால் வெரைட்டி இல்லாமல் இளைய தலைமுறை யாரும் பத்திரிக்கை படிப்பதை விரும்புவது இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.