அயல்நாட்டுக் கவிதை – ஆஸ்டின் ஸ்மித்

bp00

விடுதி
குழியில் கிடக்கும்
ஓர் அக்கார்டியன் தன்
மூச்சைக் காற்றுப் பையில்
பிடித்து வைத்திருப்பது போல்,
ரேடியேட்டர் அதன் கொதிநீரை
வைத்திருக்கிறது. அந்த அறையே
எளிமையானதுதான், இரவு தோறும்
இன்னமும் ஏழையாக அல்லது
இறந்து போக, தங்கும்
வறியவர்க்கானது.
அதுவோ இரவல்ல,
அவள் ஏழையுமல்லள். அவளுக்கு
மேலான அறை எட்டும், மேலும் அது
பகல். உறுத்தும்
கான்டாக்ட் லென்ஸைக்
களைவதுபோல, ஜன்னல்
திரைகளை இழுத்து மூடி அவள்
படுக்கையில் சரிகிறாள்.
உலோகக் கருவிகள்
ரேடியேட்டரில் இடிப்பதும்,
மாடிப் படிகளில் யாரோ
உருண்டு கீழே விழுவது போல
விடுதி முன்னறையில்
ஒரு பையன் வாசிக்கும்
பியானோ இசையும் மட்டுமே
கேட்கும் ஒலிகள்.
அவனைத் தடுக்க
யாருமில்லாதது தெளிவு
சீக்கிரமே யாராவது வந்து
அவன் மணிக்கட்டைப்
பற்றி, தெர்மாமீட்டரைக்
குலுக்குவது போல், ஒருதரம்
அவனைக் குலுக்கப்
போவதும் தெளிவு
அதொரு பையன்
என்பது தெளிவு.
அல்லது பியானோவை
ஒருபோதும் வாசித்திராமல்,
நலக்கேடில்லை எனத்
தெளிவாகவே தெரிந்தாலும்
சிலநேரம் குழந்தையின்
நெற்றியை ஒரு தாய்
தொட்டுப் பார்ப்பது போலப்
பியானோவின்
குளிர்ந்த தந்த விசைகளைத்
தொட்டுப் பார்க்க
மட்டும் விரும்பும்
குடிகாரனாயிருக்கலாம்,
–  ஆஸ்டின் ஸ்மித்
[தமிழாக்கம்: கோரா]
மூலக்கவிதை:  The Hotel – Austin Smith

குறிப்பு:
அக்கார்டியன் (Accordion): A portable musical instrument with metal reeds blown by bellows, played by means of keys and buttons. 50களில், 60களில் நிறைய தமிழ், இந்திப் படங்களில் பார்த்திருப்பீர்கள். பட நாயகர்கள் இதைத் தோளில் மாட்டிக் கொண்டு நாயகியை, நடனம் ஆடும் உப நடிகர்களைச் சுற்றி வந்து ‘இசைத்தபடி’ பாடும் காட்சி நிறையவே கிட்டியது அன்று.
ரேடியேட்டர்(Radiator): இது ஏதோ கார், லாரி போன்ற வாகனங்களில் மட்டுமே பயன்படும் சாதனம் இல்லை. குளிர் பிரதேசங்களில், அறைகளை உஷ்ணப்படுத்தப் பயன்படும் சாதனம். பழைய மாடல் ரேடியேட்டர்களில் சூடான நீர் பித்தளைக் குழாய்களில் தொடர்ந்து சுழற்சியில் இருக்கும். சுழற்சியில் இருக்கும் நீர், உஷ்ணத்தை இழப்பதால், வீட்டின் கீழ்த் தளத்தில் உள்ள ‘பாய்லர்’ என்னும் சாதனத்தால் தொடர்ந்து உஷ்ணப்படுத்தப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.