தந்தியிசையில் புதிய பாய்ச்சல் – வி.எஸ்.நரசிம்மனுடன் ஓர் உரையாடல்

Photo Courtesy: The Hindu

ராஜ பார்வையில் உருக்கமாக இழையோடும் வயலின், ஹௌ டு நேம் இட் (How to name it?) இசைத் தொகுப்பில் வரும் அற்புதமான தந்தியிசை, சஹானா எனும் தொலைக்காட்சித் தொடரில் அமைந்த அழகிய பாடல் எனப் பல அற்புதமான கணங்களை நமக்காகத் தந்த வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களிடம் முதன்மை வயலின் கலைஞராகப் பணியாற்றியவர். லண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுக்காக இளையராஜா இசையமைத்தபோது அவருக்கு உறுதுணையாக வி.எஸ்.நரசிம்மன் இருந்துள்ளார். கண் சிமிட்டும் நேரம், பாசமலர்கள் போன்ற பல திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ள வி.எஸ்.நரசிம்மன், கர்நாடக இசையையும் மேலையிசையையும் இணைக்கும் முயற்சியில் பல இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த இசைத் தொகுப்புகள் அவரது வாழ்நாள் சாதகத்தின் கனிகள். அவரது பெரும் கனவு.

சிறுவயதிலிருந்து முறையாக கர்நாடக சங்கீதப் பயிற்சி மேற்கொண்டவர். திரைப்படங்களில் இணைந்து பணியாற்றத் தொடங்குவதற்கு முன்பாகச் சென்னையில் மெட்ராஸ் சேம்பர் இசைக்குழு (Madras Chamber Orchestra) எனும் மேற்கிசைக் குழுவில் வயலின் கலைஞராக இருந்துள்ளார். சென்னையில் அவருக்கு ஆத்ரியோன் லாஹ்மோ (Adrian L’Armand எனும் ஃபிரெஞ்சு வயலின் கலைஞரின் அறிமுகம் கிடைத்ததிலிருந்து அவருக்கு மேற்கிசை மீதிருந்த பிடிப்பு அதிகமானது. சிறுவயதில் அவரது அப்பாவின் பரிந்துரையின் பெயரில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) எனும் வானொலி நிறுவனத்தில் ஜாஸ், வெஸ்டர்ன் இசை எனப் பல வகையான இசைப் பாணிகளின் அறிமுகம் அவருக்குக் கிடைத்துள்ளது. தொடர்ந்து பல மேற்கிசைக் கலைஞர்கள் மெட்ராஸ் சேம்பர் குழுவோடு இணைந்து பல கச்சேரிகள் நடந்தியுள்ளனர்.

stringtemple

நண்பர்கள் ஹேமந்த், சந்துரு, சேகர் போன்ற இசைக்கலைஞர்களுடன் த மெட்ராஸ் ஸ்ட்ரிங் க்வார்ட்டெட் (TheMadras String Quartet) எனும் குழுவைத் தொடங்கி ராகசாகா, ரிசோனன்ஸ், ஸீம்லெஸ் ஸ்ட்ரிங்ஸ் (Seamless Strings), போர்ட்ரெய்ட் ஆஃப் அ ராகா (Portrait of a Raga) எனப் பல இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் வி.எஸ்.நரசிம்மன் அவர்களைத் தொடர்பு கொண்டு, சொல்வனம் இணைய இதழுக்காக ஒரு பேட்டி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். சொல்வனம் இதழில் வெளியாகிருந்த ராகசாகா இசைத்தொகுப்பு பற்றிய விமர்சனத்தை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மடல் மூலமாக உரையாடலாம் என முடிவு செய்து, கேள்விகளை அவருக்கு அனுப்பி வைத்தேன். ஒரே வாரத்தில் அனைத்துக் கேள்விக்கும் மிகத் தெளிவாக பதில் எழுதி ஒரு கோப்பாக அனுப்பி வைத்தார்.

நீங்கள் சினிமா இசை, கர்நாடக இசை, ஃப்யூஷன் இசை எனப் பல இசை வகைகளில் பங்கு பெற்றுள்ளீர்கள். பொதுவாக இசையைக் கேட்டவுடன் அதை உடனடியாக நாம் வகுக்கத்தொடங்கிவிடுகிறோம். ராகசாகா, ரிசொனன்ஸ் போன்ற இசைத் தொகுப்புகளைக் கேட்டதும் அவை கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட தொகுப்பு என உடனடியாக புரிந்துவிட்டாலும், அடிப்படையில் அவை ஃப்யூஷன் தொகுப்புகள். இந்த இசையை எப்படி வகைப்படுத்துவது?

narasimhanஸ்ட்ரிங் டெம்பிள் குழுவினரோடு நாங்கள் அமைக்கும் தொகுப்புகள் புது வகையான இசை வடிவமாகும். இவ்வடிவத்துக்கு என்ன பெயர் வைப்பது எனத் தெரியவில்லை – கர்நாடக இசை இலக்கணத்தின் வாத்திய அமைப்புகளை String Quartet எனும் மேற்கிசை வடிவில் அமைக்கிறோம். அடிப்படையில் கர்நாடக சங்கீத பாணியைப் பின்பற்றினாலும், இது ஹாமெனி (Harmony) வகையைச் சார்ந்ததுதான்.

மேலும் நீங்கள் குறிப்பிடுவது போல, ஒவ்வொரு ரசிகனும் இன்னின்ன வகையான இசையைக் கேட்கப்போகிறோம் என ஒரு முன்னேற்பாடோடு வருவதால் இசை பாணியைத் தொகுக்கும் பணி இசையமைப்பாளரிடம் இல்லை. எங்கள் இசை நிகழ்ச்சிகளைக் கேட்கும் ரசிகர்கள் – கர்நாடக இசையை வேறொரு நவீன தளத்துக்கு கொண்டு போய்விட்டீர்கள் என்றே எங்களைப் பாராட்டுகிறார்கள்.

இப்பாணி இசையைக் கேட்கும் ரசிகர்கள் செல்லோ/வயலோ ஹாமெனியைக் கேட்டு குழப்பம் அடையத்தேவையில்லை. முதன்மை வயலினில் வரும் மெலடிக்குப் பின்னணி இசையாக மட்டுமே இந்த ஹாமெனி இசை அமைந்துள்ளது. மெலடி இசை தொடர்ச்சியாகக் கேட்டபடி இருக்கும்.

இசை மேதை ஆத்ரியோன் லாஹ்மோவிடம் (Adrian L’Armand) அறுபதுகளில் மேற்கிசையைக் கற்றுக்கொண்டீர்கள், அதன் பின்னே இளையராஜாவின் திரைப்படங்களில் முதன்மை இசைக்கலைஞராகப் பல வருடங்கள் பணியாற்றியபின் ஃப்யூஷன் தொகுப்புகளும், நான்கு தந்தி வாத்தியங்கள் கொண்ட (String quartet) அமைப்பில் ஸ்ட்ரிங் டெம்பிள் குழுவை அமைத்துப் புதுவகை இசை முயற்சிகளையும்செய்து வருகிறீர்கள். கடந்த ஐம்பது வருடங்களில், இசையமைப்பு முறைகளில், குறிப்பாக தந்தியிசையில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளதாக நினைக்கிறீர்கள்?

narasimhanநான் திரைப்படங்களில் வேலை செய்யத் தொடங்கிய 60களில் பாடல்களுக்கு ஆர்க்கெஸ்ட்ரேஷன் அல்லது ரீ-ரெக்கார்டிங் எனச் சொல்லப்படும் பின்னணி இசை பெரிய அளவு இருக்கவில்லை. ரிஹர்சல் செய்யும்போது, (அப்போதெல்லாம் ரிக்கார்டிங் செய்வதற்கு முன் ரெண்டு அல்லது மூன்று நாட்கள் ரிகர்சல் நடக்கும்), இசைக்கலைஞர்கள் பல விதமாக வாசித்துப் பார்ப்பார்கள் – பின்னணி இசை ஸ்கேல்களை மாற்றிப்பார்ப்போம் அல்லது 3rd lower/ 6th higher என வேறு வகையில் வாசித்துப் பார்ப்போம். சில சமயம், பாடல் மெட்டை ஒப்ளிகாட்டோ (obbligato) பாணியில் வாத்திய இசையாகக் கொஞ்சம் மாற்றி இசைப்போம். இவற்றில் எது நன்றாக அமைகிறதோ அதையே ரிக்கார்டும் செய்துவிடுவோம்.

adrian_narasimhan

[ஆத்ரியோனுடன் நரசிம்மன்]

அந்த சமயங்களில் ஹாமெனியில் செய்யக்கூடிய இணைப்புகளை நான் செய்து பார்ப்பேன். நான் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களுக்கு நிறைய வாசித்துக்கொண்டிருந்ததால், பெரியளவு ஆர்க்கெஸ்ட்ரேஷன் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் இந்தி இசையமைப்பாளர்களின் பாடல்கள் மிக அற்புதமான ஆர்க்கெஸ்ட்ரேஷனில் அமைந்திருக்கும் என்பதால் கேட்பதற்கு ரொம்பவும் இனிமையாக இருக்கும். இசையமைப்பாளர்கள் சங்கர்-ஜெய்கிஷன் அமைக்கும் இடையிசையில் துல்லியமாக ஒலிக்கும் மேல்கட்டு வயலின் என்னை ரொம்ப ஈர்த்தது என்றாலும் அவர்களது இசையில் கீழ் மற்றும் மத்திய ஸ்தாயி இசையில் ஏதோ ஒன்று இழந்தது போலவே இருக்கும். பின்னர் வயோலா, செல்லோ, பாஸ் இசையை உபயோகப்படுத்தத் தொடங்கிய பின்னர் அந்த இடைவெளி என்னவென்று எனக்குப் புரிந்தது.

பாவமன்னிப்பு படப்பாடல்கள் எனக்குள் பெரிய தாக்கத்தை உண்டுசெய்தன! அந்தப் பாடல்கள் புதுமையாகவும், அழகாகவும் இருந்தது போலத் தோன்றின. என்னைப்பொருத்தவரை விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் திரைப்பட இசை ஆர்க்கெஸ்ட்ரேஷனில் பெரிய மாறுதலைக் கொண்டுவந்தார்கள்! அதற்குப் பிறகு மிகத் திறமையான ஆர்க்கெஸ்ட்ரேஷன் மூலம் இளையராஜா பல புதிய இசை அனுபவத்தை வழங்கினார்.

திரைப்படங்களில் வேலை செய்த போதும் மெட்ராஸ் சேம்பர் ஆர்க்கெஸ்ட்ரா எனும் குழுவினரோடு பல மேற்கிசை கச்சேரிகள் செய்துகொண்டிருந்தீர்கள். யாருடைய இசைத் தொகுப்புகள் அதிகமாக வாசிக்கப்பட்டன? 60களில் ஆங்கில இசைக்கான அங்கீகாரம் எப்படி இருந்தது?

narasimhanமெட்ராஸ் சேம்பர் ஆர்க்கெஸ்ட்ரா சார்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முன்னணி இசைக்கலைஞர்களை எங்களோடு பணியாற்றுவதற்காக அழைத்து வந்திருந்தோம். பாஹ், மோட்சார்ட், ஹைடன், கார்ல் ஸ்டாமிட்ஸ், எட்வர்ட் க்ரீக், சீகோஃப்ஸ்கீ (Tchaikovsky) எனப் பல இசையமைப்பாளர்களின் தொகுப்புகளை நாங்கள் பயின்று வந்தோம்.

60களிலும் மேற்கிசைக் கச்சேரிகள் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

ஒரு கர்நாடக சங்கீதக் கலைஞராக, ஹாமெனி பற்றி உங்கள் முதல் அபிப்ராயம் என்னவாக இருந்தது? இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன் அவர்களோடு இசையமைத்தபோது முதல்முறையாக மேற்கிசை பாணியையும் ஹாமெனி வகையையும் முயற்சி செய்ததாக முன்னொரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். திரைப்பட இசையின் ஆரம்பகாலத்தில் அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

narasimhanமேற்கிசை மற்றும் ஹாமெனி வகையின் அழகு என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. கேட்கக் கேட்க ரொம்பவும் பிடித்துப் போனதால் நான் மேற்கிசை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். என்னுடைய கர்நாடக சங்கீதப் பயிற்சியின் காரணமாக, நாளாவட்டத்தில் கர்நாடக மெலடியோடு ஹாமெனியும் சேர்ந்து கேட்பது போல எனக்குத் தோன்றும். ராரவேணுகோபபாலா ஸ்வரஜதியில் சில ஹாமெனி துணுக்குகளை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். அக்கால கட்டத்தில் திரைப்பட இசையில் மேற்கிசைக்கான இடம் என்ன என நான் யோசிக்கவில்லை. ஆனால் ஹாமெனியின் அலங்காரத்துடன் கர்நாடக மெலடியை இசைக்கும் புது இசை வகையைப் பல வடிவங்களிலும் சில கிருதிகளிலும் சோதித்துப் பார்த்தேன். இப்படித்தான் ஸ்ட்ரிங் க்வார்டெட் எனும் வடிவில் இந்த இசை பாணியை செய்யத் தொடங்கலாம் எனும் திட்டம் உருவானது.

1993 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஸ்ட்ரிங் க்வார்டெட் எனும் குழுவை எதற்காக உருவாக்கினீர்கள்? திரைப்பட இசையைத் தாண்டி இப்படிப்பட்ட தனி குழுவைத் தொடங்கியதில் என்னென்ன சிக்கல்களைச்சந்தித்தீர்கள்?

narasimhanகர்நாடக இசையையும் ஹாமெனி பாணியையும் இணைத்து புதுவகை இசையை உருவாக்க வேண்டும் எனும் ஆர்வம் மட்டுமே மெட்ராஸ் ஸ்ட்ரிங் க்வார்டெட் ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தது. மேலும் ஸ்ட்ரிங் க்வார்டெட் என நால்வர் தந்தியிசை வாசிக்கும்போது அமையும் உரையாடல் பாணி அற்புதமான சாத்தியங்களை வெளிக்கொணருவதற்கு ஏதுவானதாக இருந்தது.

எங்களுடைய வேலைக்கு இடையே இந்த குழுவை நடத்தியது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதே போல, திறமையான இளைஞர்கள் என்னுடைய வேலையைத் தொடர வேண்டும் எனும் ஆசையும் கூடுதல் சவாலாக இன்றும் இருந்துவருகிறது.

மெலடியும் ஹாமெனியும் கடவுளின் அற்புதமான ஆக்கங்கள் என யெஹுதி மெனுஹின் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட தீம் சார்ந்து இசையமைக்கும்போது எவ்விதமான மெலடியையும் ஹாமெனியையும் கையாள்வீர்கள்?

narasimhan

மெலடிக்கு அலங்காரமாக ஹாமெனியை உபயோகப்படுத்துவது என் பாணி. நான் எப்போதும் அப்படித்தான் செய்வேன்.

இளையராஜாவின் `ஹௌ டு நேம் இட் (How to name it?) இசைக்கோர்வையை முதல்முறையாகக் கேட்கும்போது தந்தியிசையின் உணர்வுகள் என்னை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றன. ஹாமெனியா, மெலடியா என விளங்க முடியாத போட்டி அங்கு உருவானது போலத் தோன்றியது. அதற்குப் பிறகு உங்கள் `ராகசாகா` இசைத்தொகுப்பைக் கேட்ட போது, மிகத் திட்டவட்டமாக மெலடியும், ஹாமெனியும் கச்சிதமான தளங்களில் அமைந்திருப்பதை உணர முடிந்தது. `ஓரஜாப்பு`, `Devotion to Rama` போன்ற இசைக்கோர்வைகளில் ஹாமெனி உணர்வுக்கான சூழலை உருவாக்குவதற்காகப் பயன்பட்டது போலத் தோன்றியது. இது உங்கள் இசைப்பாணி என எடுத்துக்கொள்ளலாமா?

narasimhanநான் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்த கர்நாடக சங்கீத கிருதிகளை எனது இசைத்தொகுப்புக்காக எடுத்துக்கொண்டிருந்தேன். அந்த மூலப்பாடல் வரிகளும், ராகமும் ஏற்கனவே இருந்தவை என்பதால் பாடலின் `பாவத்தை` கணக்கில் கொண்டு எனது ஹாமெனி துணுக்குகளை முடிவு செய்திருந்தேன். அதனால் ராக பாவத்துக்கு ஏற்றாற்போலத் தொடுக்கப்பட்ட மாலையாக ஹாமெனி அமைந்திருந்தது. இதனால் இசைக்கோர்வையின் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிட்டது.

இந்த முறையின் படி, கர்நாடக இசைக்கு `பாவத்துக்கு` இருக்கும் முக்கியத்துவமும், மேற்கிசையில் `தீம்களுக்கு` இருக்கும் முக்கியத்துவமும் இணைந்த ஃப்யூஷன் தொகுப்புகளின் சவால்களை நாம் ஒரு ஒழுங்குக்கு கொண்டுவிடலாம்.

உங்கள் இசையை ஃப்யூஷன் என வகுப்பது உங்களுக்குப் பிடிக்காது என்றாலும் இக்கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை – முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக இதைக் கேட்கிறேன். இப்போது பல விதமான ஃப்யூஷன் இசைத்தொகுப்புகள் வெளியாகின்றன. மைல்ஸ் ஃப்ரம் இண்டியா (Miles from India) போன்ற ஜாஸ் தொகுப்புகள் மைல்ஸ் டேவிஸ் அமைத்த கைண்ட் ஆஃப் ப்ளூ (Kind of Blue) ஆல்பத்துக்கு இந்திய இசையின் பதிலாக அமைந்திருந்தது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனால், பல ஃப்யூஷன் தொகுப்புகள் ரசிக்க முடியாதபடி அமைந்துவிடுகின்றன. அடிப்படையில் என்ன காரணமாக இருக்கலாம்?

narasimhanஃப்யூஷன் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட இசை பாணிகளின் சங்கமம். ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு அழகு உண்டு. அந்தந்த இசையின் அழகை மதித்து, அதற்கு இடையூறு செய்யாத வகையில் மற்றொரு வகை இசை இணையுமானால் இரு இசை வகைகளையும் அது வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும். இது தான் ஃப்யூஷன் இசை வகையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, பல மேதைகள் உருவாக்கிய நமது கர்நாடக இசையின் அழகை நான் அப்படியே பின்பற்றுகிறேன். பாடல்களின் பாவத்திலோ, வரிகளின் அர்த்தத்திலோ நான் எதையும் மாற்றுவதில்லை. நமது இசையின் அழகை மெருகூட்டுவதற்காக அதே உணர்வுகளை மேம்படுத்தக்கூடிய வகையில் மேற்கிசைக் கூறுகளை இணைக்கிறேன். இதனால் நமது இசையின் அழகு கூடுகிறதே தவிர குறைவதில்லை.

மேற்கிசைக் கலைஞர்களில் உங்களது ரசனையிலும், வாசிப்பிலும் பெரும் பாதிப்பை உருவாக்கியவர்கள், நீங்கள் விரும்பிக் கேட்கும் கலைஞர்கள் யார்?

narasimhanஜே.எஸ்.பாஹ், மோட்சார்ட், சீகோஃப்ஸ்கீ ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்த கலைஞர்கள். பாஹ்ஹின் இசையை எத்தனை முறை கேட்டாலும்/வாசித்தாலும் அலுக்காது. மோட்சார்டின் மெலடியும் ஹாமெனியும் எத்தனை இனிமையாக இருக்கிறதோ அத்தனைக்கு வாசிப்பில் சவால்கள் நிரம்பியவை. சீகோஃப்ஸ்கீ ஆர்க்கெஸ்ட்ரா இசையின் பிரம்மாண்டம் பலவகையான உணர்வுகளை எழுப்பும் வல்லமை கொண்டது.

என்னைப் பொருத்தவரை சமீப காலங்களில் மிகச் சிறப்பான வயலின் கலைஞராக ஜேம்ஸ் எனிஸைப் (James Ehnes) பார்க்கிறேன்[1]. மிகத் திறமையான வயலின் கலைஞர்களில் அவரும் ஒருவர்.

மேற்கிசை விமர்சகர் அலெக்ஸ் ராஸ், செவ்வியல் கலைகளை ஒவ்வொரு காலகட்டத்துக்கும் மாறிக்கொண்டே இருக்கும் கலை வடிவம் என வரையறுக்கிறார். அதே போல நமது இந்திய இசையைப் பற்றி சொல்ல முடியுமா? மும்மூர்த்திகளின் பாடல்களில்வெளிப்படும் `பாவம்` நமது காலகட்டத்தில் புது வடிவம் எடுக்க முடியுமா?

narasimhanகண்டிப்பாக முடியும். தெலுங்கு மொழி புரிந்தவர்கள் பாடல் வரிகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளலாம். அதே சமயம், பாடகர்கள் தங்கள் தெளிவான உச்சரிப்பின் மூலம் ரசிகர்களுக்கு பாடல் உணர்வுகளைக் கடத்த முடியும்.

ஆலாபனை விரிவாக்கத்தை பிரதானப்படுத்தாமல் கர்நாடக சங்கீததின் ராக பாவங்களைத் துல்லியமாகப் பாடும்போது கர்நாடக சங்கீதம், அதில் ரசனை இல்லாத உலகளாவிய ரசிகர்களையும் சுலபமாகச் சென்று சேரும்.

கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் வாத்தியக்கருவியின் பங்கு குறைந்துள்ளதா? முன்னிருந்ததைப் போல `தனி`க்கென ரசிகர்கள் கூடுகிறார்களா?

narasimhan பல திறமையான இளைஞர்கள் தினமும் வந்தபடி உள்ளனர். கண்டிப்பாக கர்நாடக சங்கீதத்தில் வாத்திய இசைக்கான முக்கியத்துவம் வருங்காலத்தில் அதிகரிக்கும். அப்படி வரும் இளைஞர்கள் பலவகையான இசை அறிமுகத்தை ஆரம்பகட்டத்தில் பெற வேண்டும். பிற கலைகளின் நுண்ணிய ரசனைகளை வளர்த்துக்கொள்ளும்போது தங்கள் துறையில் மேலும் பல வாசல்கள் அவர்களுக்குத் திறக்கும். இசையமைப்பாளர்களாகவும், இசை ஒழுங்கமைப்பாளர்களாகவும் (arranger) அவர்களால் பரிணமிக்க முடியும்.

இசைக்குப் பலரும் பலவிதங்களில் அர்த்தம் கொடுக்கிறார்கள். இசை என்பது மிக தனிப்பட்ட அனுபவம் என்பது எல்லாரும் பொதுவாக ஒத்துக்கொள்ளும் விஷயம். ஒரு இசைக்கலைஞராக இசை என்பதன் அர்த்தம் என்ன?

narasimhan “Music expresses that which cannot be put into words and that which cannot remain silent” என்ற விக்டர் ஹுகோவின் கருத்து எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

இது இசையைக் குறித்த கச்சிதமான வரையறையாக நினைக்கிறேன்.

***

குறிப்புகள்:

ஜேம்ஸ் எனிஸின் ஒரு நேர்காணலை இங்கு படிக்கலாம்.

அவர் வாசிக்கும் ஸிபேலியஸின் ஒரு இசைக் கோர்வையை இங்கே கேட்கலாம். இங்கு அவர் பயன்படுத்துவது ஸ்ட்ராடிவேரியஸ் எனப்படும் புகழ்பெற்ற ஒரு வயலின் வாத்தியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.