முடிவற்ற படிகளில் ஏறுதல்

1500-க்கு மேல் ஆய்வுக்கட்டுரைகள்
46 புத்தகங்கள்
51 கெளரவ டாக்டர் பட்டங்கள்
உலகின் அனைத்து முக்கிய அறிவியல் அகாடமிகளில் உறுப்பினர்
பத்மஸ்ரீ உட்பட எண்ணற்ற விருதுகள்

cnroa

இது சி என் ஆர் ராவ். இந்திய வேதியியல் விஞ்ஞானி. முழுப்பெயர் சில வாசனை மூலக்கூறுகள் போல நீண்டது. சிந்தாமணி நாகேஸ ராமசந்திர ராவ். அவர் ஆய்வுக்கூடத்தில் முதன் முதலில் கால்வைத்தே 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் ஒரு வருடத்தில் 80 வயது தாத்தா. வேதியியல் என்ற துறைதான் அவரது சுவாசம், தவம் எல்லாம்.
இன்று பெங்களூர் ஐ.டி ஹப். 1930-களில் வடக்கே மல்லேஸ்வரத்தையும் தெற்கே பசவனகுடியும் இணைக்கும் ஒரு நீண்ட சாலையும் அதை ஒட்டி அமைந்த கடை கண்ணிகளும், பகுதிகளும்தான் பெங்களூராம். காபியை கையில் வைத்து உறிஞ்சிக் கொண்டே ‘யா யா! இட்ஸ் சூப்பர் கூல்!’ என்ற செல்பேசி வசனங்கள் காதில் விழுந்திருக்காது. வறுகடலை வாங்கிக் கொறித்துக்கொண்டே சாலையில் நடையைக் கட்டும் மனிதர்களை ஏராளமாகப் பார்த்திருக்கலாம். வேகமான விஷயங்கள் மெதுவாக நடந்தன. மெதுவான சங்கதிகள் இன்னும் மெதுவாக. நகரமே ஒரு பிரம்மாண்டமான ஹேமக்கில் ரம்மியமான சீதோஷணத்தில் மெல்ல ஆடிக்கொண்டிருந்தது, இதுபோன்ற காலகட்டத்தில் மக்கள் எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்று சொல்வது வழமை. இப்படிப்பட்ட பெங்களூரில் 1934-ல் சி என் ஆர் ராவ் பிறந்தார்.
சொல்லத்தேவையில்லை. ராவ் படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். சில குழந்தைகள் சிறுவயதிலேயே தங்களைக் கண்டுகொள்கின்றன. அவர் படித்த ஆச்சார்யா பாடசாலைக்கு ஒருமுறை பேராசிரியர் சி வி ராமன் வந்திருக்கிறார். சி வி ராமன் மல்லேஸ்வரம் 18-வது கிராஸ் தாண்டி இருந்த இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science) பேராசிரியர். ராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவர். அவர் பள்ளிக் குழந்தைகளிடம் பேசிக்கொண்டே ஒரு தேர்ந்த மேஜிக் நிபுணன் போல திரையை விலக்கி மேரி கியூரியின் படத்தைக் காண்பித்தார். அந்த நொடியில் ராவின் அகம் தன் அறத்தைக் கண்டுகொண்டது.
அன்று பெங்களூரில் அறிவியல் கல்வி என்றால் சென்ட்ரல் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். சென்ட்ரல் கல்லூரி 1858-ல் தொடங்கப்பட்டது. பின்னர் 1964-ல் இன்றைய பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பகுதியாக ஆனது.. ‘என்ன அருமையாக எழுதியிருக்கிறான் பயல்!’ என்று விதந்தோதிவிட்டு ஆசிரியர்கள் பத்துக்கு ஆறு மதிப்பெண்கள் போடுவார்களாம். முதல் வகுப்பில் இளங்கலை அறிவியலில் தேர்ச்சி பெற்றார்.
ஞானத்தைத் தேடி
ஒரு பேராசிரியர் ஆலோசனைப்படி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் எம்எஸ்ஸி படிக்கச்சென்றார். அங்கு முதன் முதலாக லினஸ் பெளலிங் என்ற உலகப் புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானியைச் சந்தித்தார். புத்தகத்தில்தான். லினஸின் The Nature of the Chemical bond என்ற புத்தகம் ஒரு கிளாசிக். பெளலிங் வேதியியலை அணுகிய விதம் புதுமையாக இருந்தது. வேதியியலை புரிந்துகொள்ள அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் அமைப்பின் அவசியத்தை உணர்ந்தார். பலமுறை புத்தகத்தைப் படித்தார். முடித்தவுடன் லினஸ் பெளலிங் ராவின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவரானார்.
1953-ல் எம்எஸ்ஸி முடித்தவுடன் ஐஐடி கரக்பூரில் சில காலம் இருந்தார்.. அமெரிக்க எம்ஐடி யில் படித்துவிட்டு வந்த விரிவுரையாளர் ஒருவர் கரிம மூலக்கூறுகளின் அகச்சிவப்பு நிறமாலையைப் பற்றி பேசினார். ராவுக்கு அது என்ன என்று புரியவில்லை. ஆய்விதழ்களைப் புரட்டினார். புத்தகங்களை வாசித்தார். ஆனால் அதை அறிவதற்கான பின்புலம் அவரிடம் இல்லை. ஆனால் அவர் அடுத்து செல்ல வேண்டிய இடம் எது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நவீன வேதியியல் உருவாகும் இடம். அமெரிக்காதான் அதற்கு ஞான பூமி.
ஞானத்தின் பிடியில்
அறிஞர்களின், ஆதர்சங்களின் அருகில் அமர்ந்து அடிப்படைகளைக் கற்பது கற்றலில் உச்சப்படி. 1954-ல் SS கார்ஃபு கப்பலில் பதினேழு நாட்கள் பயணம் செய்து பம்பாயிலிருந்து லண்டனை அடைந்தார். அங்கிருந்து SS குயின் மேரியில் பயணம் செய்து ஐந்து நாட்களில் நியூயார்க். அவர் தேர்ந்தெடுத்தது பர்டியூ பல்கலைக்கழகம். பர்டியூ மற்றும் கலிபோர்னியா (பி.எச்.டி முடித்துவிட்டு கொஞ்ச காலம் இங்கு ஆய்வு செய்தார்)
பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்வதற்கு மிகச்சிறந்த இடங்கள். தடுக்கி விழுந்தால் அவரை தூக்கி விடுவது மூன்று வகை மனிதர்களாகத்தான் இருந்தனர். நோபல் பரிசு வாங்கியவர்கள். நோபல் பரிசை நோக்கி சென்று கொண்டிருப்பவர்கள். அதற்குக் காரணமாக இருந்த பேராசிரியர்கள்.
பர்டியூ பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் ஸ்பெக்ட்ராஸ்கோபி, X-கதிர் மற்றும் எலக்ட்ரான் விளிம்புவளைவு சோதனைகள் மூலம் மூலக்கூறுகளை ஆராய்ந்தார். இந்த முறை அங்கு வந்த லினஸ் பெளலிங்கை நேரில் சந்தித்தார். அவரிடம் தனது ஆய்வு முடிவுகளை காட்டி அவை எப்படி லினஸின் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை விளக்கினார். லினஸ் தனது புத்தகத்தின் அடுத்தப் பதிப்பில் ராவின் ஆய்வுமுடிகளையும் குறிப்பிட்டார். முனைவர் பட்டம் பெற்றுவுடன் சிறிது காலம் பெர்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் செய்தார். அதன் வேதியியல் துறை உலகில் தலைச்சிறந்தது. ஜி என் லூயிஸ் என்ற விஞ்ஞானியால் நிறுவப்பட்டது. ஜி என் லூயிஸ் நவீன வேதியியலின் தந்தை எனலாம். 1916-ல் வேதிப் பிணைப்பை சரியாக ஊகித்து வேதியியலின் பாதையையே மாற்றியவர். அவரின் மாணவர்களுடன் ராவ் இணைந்து பல ஆய்வுகளைச் செய்து வெளியிட்டார்.
மீண்டும் இந்தியா
ஐந்து வருடங்கள் மெத்த ஆய்வுகள் செய்து டாக்டர் பட்டத்துடன் 1959-ல் மீண்டும் இந்தியா வந்தார். இந்திய அறிவியல் கழகத்தில் 500 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் (இதர படிகளுடன் 720 ரூபாய்) சேர்ந்தார். ஆனால் ஸ்பெக்ட்ராமீட்டர் போன்ற அடிப்படையான ஆய்வுக்கருவிகள் கூட அங்கு இல்லை. மற்ற துறைகளில் இருந்த ஒருசில கருவிகளையும் அந்த துறை தலைவர்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. ‘வேதியியல் ஆராய்ச்சிக்கு ஸ்பெக்ட்ராமீட்டர் எதற்கு? என்றனர். அவர்களின் மூளை கொஞ்சம் துருப்பிடித்தும் நாக்கில் அமிலம் தடவப்பட்டும் இருந்தன. மாணவர்களுடன் காபி சாப்பிட செல்லும் டாக்டர் ராவை பார்த்து புன்சன் பர்னரில் வைக்கப்பட்ட அமிலகார வஸ்துகள் போல கொதித்தனர்.
ஆனால் உண்மையான பிரச்சனை இந்தச் சிறுமைகள் அல்ல. அது எதிர்காலம் குறித்தது. நவீனக் கருவிகள் இல்லை. தரமான ஆய்வுக்கான வாய்ப்புகள் இல்லை. விரிவுரையாளர்கள் முப்பது வருடங்கள் விரிவுரையாற்றி இன்னும் சாதாரண விரிவுரையாளர்களாக ஓய்வு பெற்றனர். யாருக்கும் எதிர்காலம் இல்லை. இதுதான் உடம்பில் பட்ட அமிலம் திசுக்களின் வழியேச் சென்று எலும்பை அரிப்பது போல டாக்டர் ராவை அரித்தது. அங்கு மேலும் தொடர்வது தொழில்முறைத் தற்கொலை.
அந்தச் சமயத்தில் ஒன்பது அமெரிக்க பல்கலைக்கழகங்களின் உதவியுடன் ஐஐடி கான்பூர் நிறுவப்பட்டது. சில நவீன ஆய்வுக்கருவிகளுக்கான உத்தரவாதம் அது. ஐபிஎம் கணினி அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் கான்பூர் விமான நிலையம் வரை வந்தது. பின் மாட்டுவண்டியில் ஏற்றப்பட்டு ஐஐடி வளாகத்துக்கு தலைகீழாக வந்து சேர்ந்தது.! பொதுவாக அந்தச்சூழலில் பல்கலைக்கழக ஆய்வுகளின் தரம் கொஞ்சம் கம்மிதான் என்றாலும் நம்பிக்கையும் லட்சியவாதமும் நிறைய இருந்தன. சூரியன் வரும் வரை பல துறைகளின் ஆய்வுக்கூடங்கள் விளக்கை எரித்தன. ராவ் அங்கு சென்று ஒரு வருடத்திலேயே வேதியியல் துறையின் தலைவரானார். 30 வயது கூட ஆகியிருக்கவில்லை. வேதியியல் துறையைத் தேசத்தின் தலைசிறந்த ஒன்றாக மாற்றினார். 1976-ம் ஆண்டு வரை ஐஐடி கான்பூரில் வேலை செய்தார்.
சதீஷ் தவான் (இவர் IISC-ல் பேராசிரியராகவும் பின்னர் இயக்குனராகவும் பணிபுரிந்தார். அதன்பின் 1972-1984 வரை இஸ்ரோவின் தலைவராக இருந்தவர்.) அழைப்பின் பேரில் மீண்டும் 1976-ல் இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். இந்தமுறை எந்தத் துறையின் கதவையும் தட்டவில்லை. திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியல் என்ற துறையையும் பொருட்கள் ஆய்வு மையத்தையும் புதியதாக நிறுவினார். திண்ம நிலை வேதியியல், புறப்பரப்பு அறிவியல், மூலக்கூறு அமைப்பு போன்ற இயல்களில் பி.எச்.டி மாணவர்களுக்கு வழி காட்டினார்.
டாக்டர் ராவின் ஆய்வுகள்
ஆய்வு செய், முடி, வெளியிடு என்பது ஆய்வின் பொன்விதிகளில் ஒன்று. டாக்டர் ராவின் முக்கிய ஆய்வுகளில் சில…
1. நிறமாலையியல் (Spectroscopy). அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் உமிழும், உட்கவரும் ஒளியை/மின்காந்தஅலையை வைத்து நாம் அவற்றை அறிந்துகொள்ளலாம். நிறமாலை என்பது அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் ஒளியைக் கொண்டு போடும் கையெழுத்து போன்றது. விசேஷமானது. தனித்தன்மைவாய்ந்தது. கையெழுத்தை ஆராய்வதின் மூலம் மூலக்கூறுகளின் அமைப்பு, ஆக்கக்கூறுகள், வேதி பிணைப்பு, ஆற்றல் நிலைகள் போன்றவற்றை கணிக்கலாம். ராவ் இதில் பல ஆய்வுக்கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
2. ராவ் பலவகையான உலோக ஆக்ஸைடுகளைப் பற்றி ஆய்வு செய்தார். உலோகமும் ஆக்ஸிஜனும் கலந்த கலப்பு பொருள். இவற்றின் சிறப்பு என்ன? சில ஆக்ஸைடுகள் கடத்திகள். சில மீகடத்திகள். பல மின் கடத்தாப் பொருட்கள். சில காந்தப் பண்புகள் கொண்டவை. சில ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் மின் கடத்தியாகவும் வெப்பநிலை குறையும்போது மின் கடத்தாப் பொருளாகவும் ஆகக் கூடியன. இந்தவகை பொருட்கள் ஒன் ஸ்டாப் ஷாப் போல. எல்லாப் பண்புகளும் கிடைக்கும். மிகச்சிறந்த பண்புகளுடன் நவீன பொருட்களை வடிவமைக்க உதவுகின்றன.
cnrao1
3. மீகடத்திகள் (Superconductors) 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. சில பொருட்கள் மிக மிக குறைந்த வெப்பநிலையில் அவற்றின் மின்தடையை முழுவதும் இழந்து மிகச்சிறந்த கடத்திகளாக மாறுகின்றன. ஆனால் இதன் பிரச்சனை என்னவென்றால் இந்நிகழ்வு மிகமிக குளிர்ந்த வெப்பநிலையில் ஏற்படுகிறது. நடைமுறைப் பயன்பாட்டை அடைய இந்த நிகழ்வு அறை வெப்பநிலைக்கு அருகில் ஏற்பட வேண்டும். இந்தத் தேவை உயர் வெப்பநிலை மீகடத்திகளுக்கான தேடுதல் வேட்டையை தொடங்கியது. உயர்வெப்ப நிலை மீகடத்திகள் 1986-ல் கண்டறியப்பட்டது. (இயற்பியலில் சில ஆய்வுகள் மிக சுவாரஸ்யமானவை. வெப்பநிலையை எந்த அளவு குறைத்துக்கொண்டே போகலாம்? மனிதனால் உருவாக்கப்படும் மிக அதிக அழுத்தம் என்ன? அந்த வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் பொருட்களின் தன்மை எவ்விதம் மாறுபடுகின்றன? போன்றவை.) இட்ரியம், பேரியம், தாமிரம் மற்றும் ஆக்ஸிஜன் கலந்த கலவை உலோகம் 90 K-ல் மீகடத்தியாக மாறும் இயல்புடையது. சமீபத்தில் 134 K-ல் மீகடத்தியாக மாறும் பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீகடத்திகள் பற்றிய ஆய்விலும் டாக்டர் ராவ் பல முக்கிய ஆய்வுகளைச் செய்திருக்கிறார்.
4. நேனோதொழில்நுட்பம். கடந்த இருபது வருடங்களாக வளர்ச்சி அடைந்து வரும் துறை 1985-ல் பக்மினிஸ்டர்ஃபுல்லரீன்- சாக்கர் பந்து வடிவத்தில் இருப்பதால் செல்லமாக Buckyball எனப்படுகிறது- என்ற நேனோமீட்டர் அளவில் ஒரு கோள வடிவ வஸ்து தயாரிக்கப்பட்டது. இதன் விசேஷம் என்ன என்றால்…ஒரு வைரவியாபாரி வெல்வெட் துணியில் மெத்தென்று வைக்கப்பட்ட வைரங்களில் ஒவ்வொன்றாக லாவகமாக எடுப்பார். கண்முன் வைத்து உற்று நோக்கி அதன் தரத்தை மதிப்பிடுவார். அதுபோல பக்கிபால் 60 கார்பன் அணுக்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து ஒரு பந்து வடிவத்தில் செய்யப்பட்ட பொருள். இப்போது இந்த துறை தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. படிகங்கள், பொடிகள், குச்சிகள், குழாய்கள், கம்பிகள், தகடுகள் என பல வடிவங்களில் நேனோவஸ்துகள் உருவாக்கப்படுகின்றன. மின்னணுவியல், மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள், ராணுவம் போன்ற பல துறைகளில் பயன்பாடுகொண்டது. நேனோதொழில்நுட்பப் பொருட்களைத் தயாரிப்பதில் வேதியியலின் பங்கு மிக அதிகம். ராவ் இந்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.
****
டாக்டர் ராவ் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு அறிவியல் கழகங்களில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்தார். பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உறுப்பினாராகவும் பல வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். இவரது அவதானிப்பில் அறிவியல் ஆய்வின் தரம் என்று வரும்போது இந்தியாவின் பங்கு உலக அரங்கில் ஒரு சதம்தான். இன்றும் அமெரிக்காதான் கிட்டத்தட்ட 60 சதத்தில் உள்ளது. ஆனால் இன்று சுமார் 40-க்கு மேற்பட்ட வளர்ச்சி குன்றிய நாடுகள் உள்ளன. இவை LDCs (Least Developed Countries) எனப்படுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் என்ன விஞ்ஞானம் செய்கிறார்கள்? லத்தீன் அமெரிக்க நாடுகள்? பாகிஸ்தான் விஞ்ஞானி அப்துஸ் சலாம் நோபல் பரிசு பெற்றவர். அவர் மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அகாடமி (Third World Academy of Sciences) என்ற கழகத்தை 1983-ல் தோற்றுவித்தார். டாக்டர் ராவ் இந்த அகாடமி தொடங்கியதில் இருந்தே உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும் பணிபுரிந்தார். தற்போது இது வளரும் நாடுகளின் அறிவியல் அகாடமி எனப்படுகிறது. சுமார் 85 சதம் வளரும் நாடுகளையும் 15 சதம் வளர்ச்சியடைந்த நாடுகளையும் உறுப்பினர்களாகக் கொண்டது. இந்த அகாடமியின் குறிக்கோள்கள் வளரும் நாடுகளில் அறிவியல் ஆய்வை மேம்படுத்ததுதல், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் அறிவியல் ஒப்பந்தங்கள், இளம் விஞ்ஞானிகளுக்கு விருதும். ஊக்கமும் அளித்தல் போன்றவை ஆகும். இன்னும் இருபது வருடங்களில் அறிவியலில் வளரும் நாடுகளின் பங்களிப்பு 30 சதவீதம் இருக்க வேண்டும் என்பது சி என் ஆர் ராவின் கனவு. உள்நாட்டுப் போர்கள், அக்கறையற்ற அதிகாரிகள்/அரசியல்வாதிகள், பொறுப்பற்ற மக்கள் என வளரும் நாடுகளின் பிரச்சனைகள் வெளிப்படை. ஆனால்…
இருட்டை சபிப்பதை விட ஒரு சிறு விளக்கை கொளுத்துவது நல்லது. சி என் ஆர் ராவின் வாழ்க்கை இதற்கு சிறந்த உதாரணம்.
***

உதவிய நூல்: Climbing the Limitless Ladder: A Life in Chemistry, C N R Rao, World Scientific Publishing Co Pte Ltd, 2010.

0 Replies to “முடிவற்ற படிகளில் ஏறுதல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.