விளையாட்டு, வினை, வினாக்கள்

சமீபத்திய ஐபிஎல்லில் புக்கிகளுடன் 3 ஆட்டவீரர்களுக்குள்ள தொடர்பை தில்லி போலிஸார் வெளிப்படுத்தியதற்குப் பின் நாடகம்போல் என்னெனவோ நடந்துவிட்டது.

மூன்று ஆட்டக்காரர்களும் புக்கிகளும் கைது செய்யப்பட்டுளனர். இவர்களுக்கு உடந்தையான சில பிரபலங்களும் மோசடிக்காக விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை ஒரு மாதத்துக்கும் மேலாய் கண்காணித்து வந்துள்ள தில்லி காவல்துறை, அவற்றைப் பற்றிய பல நுணுக்கமான விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

செய்தி வெளியானதும்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) பத்திரிக்கைகளுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டது. வாரியத்தின் தலைவர் (இவரே ஒரு ஐபிஎல் குழுவுக்கு உரிமையாளர்) ஒரு செய்தியாளர் கூட்டம் கூட்டிப் பேசினார்.

ஸ்ரீசாந்தின் குடும்பத்தினர் பலவித சதிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவருக்குப் பரிந்து பேசிவருகின்றனர். இதற்கு நடுவே இரண்டு ஆட்டக்காரர்கள் தம் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் ராஹுல் த்ராவிட் நொறுங்கிப்போயிருக்கிறார்.


என். ஸ்ரீநிவாசனின் மாப்பிள்ளையும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் இணை உடைமையாளர் எனச் சொல்லப்படுபவருமான குருநாத் மெய்யப்பன் பந்தயம் கட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா சிமெண்ட் நிறுவனம் அவர் இந்த அணியின் சொந்தக்காரர்களில் ஒருவர் இல்லை என அறிக்கை வெளியிட்டிருக்கிறது. BCCI இது உண்மையா இல்லையா என அறிய ஒரு குழுவை நியமித்திருக்கிறது.

BCCI இந்த ஊழலை கையாண்ட விதம் பற்றிய பரவலான எதிர்முறை விமரிசனங்களை அடுத்து வாரியத்தின் காரியதரிசியும், பொருளாளரும் தம் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

இன்னும் பல…

spot-fixing

முதலில் தில்லி போலிசுக்கு ஒரு பெரிய சபாஷ். பலருக்கும் பெட்டிங், ஃபிக்ஸிங் பற்றி எல்லாம் ஞானமே இல்லாத 2000லும் அவர்கள்தான் இதை வெளிப்படுத்தினர். அதன் பின்னும் இத்தகைய முறைகேடுகளுக்காகத் தீவிரமாய்க் கண்காணித்துவந்துள்ளனர். இந்த ஆட்டத்தை இன்னும் பல அழுகல்களினின்று அவர்கள் விடுவிப்பார்கள் என நம்புவோம்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் படுவேகமாய் இந்த ஆட்டக்காரர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. சின்ன விஷயத்துக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்பது போலில்லாமல் திரு N.ஸ்ரீநிவாஸனின் தொனியில் துயரம் இருந்தது ஒரு சுவாரசியமான விஷயம்.

ஆனால் அவரிடம் கேட்கவேண்டிய சில கேள்விகள் உள்ளன:

1. 2012ல் ஒரு தொலைக்காட்சி நிறுவனமும், 2013ல் தில்லி காவல்துறையும் இந்தத் தில்லுமுல்லுகளை வெளிப்படுத்தியுள்ளன. BCCI இதன் பின் என்ன செய்தது? ஆட்ட வீரர்களுக்கும் புக்கிகளுக்கும் இடையான தொடர்பை கண்டுபிடித்து அதை அறுக்க இவர்கள் ஏதேனும் முயற்சி செய்திருக்கிறார்களா? இதற்காக என்னென்ன வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன?

2. இதைப் பற்றிக் கேட்டபோது ஸ்ரீநிவாசனின் பதில்: “எங்கள் விதிகளில் ஊழல் எதிர்ப்பு விதி உண்டு, ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிரான விதியும் உண்டு. மாநிலப் பிரிவுகளை நடவடிக்கை எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறோம்.”

வாழ்வில் முதன்முறையாய் பெரிய அளவில் பணத்தைப் பார்க்கும் ஒரு இளம் கிரிக்கெட் வீரர், புக்கிகளும் ஃபிக்ஸர்களும் வீசும் வலையில் விழாமல் இருக்க என்ன வழிமுறைகளை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள்? நாடு தழுவிய விழிப்புணர்வுத் திட்டம் ஏதாவது இருக்கிறதா – அதற்கு ஒரு கிரிக்கெட் வீரரோ அல்லது நிர்வாகியோ தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்களா? ஜூனியர் மட்டத்தில் எந்த மாநிலத்திலாவது அவர்களை வழிநடத்திச்செல்ல ஒரு திட்டம் இருக்கிறதா? அவர்களை அணுகும் ஏஜண்டுகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது கிரிக்கெட் வீரர்களுக்குத் தெரியுமா? இந்த ஏஜண்டுகளுக்கு பதிவு செய்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் உண்டா அல்லது யார் வேண்டுமானாலும் ஒரு அணி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு முன்னால் நின்று அவர்களை அணுகமுடியுமா?

3. அவர் மேலும் சொன்னது: “நாங்கள் இன்னும் என்ன செய்யமுடியும், வேறேன்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும், இத்தகைய செயல்களால் ஒரு நன்மையும் இல்லை என்பதை எப்படி நிரூபிப்பது என்பதைப் பற்றி ஆராய்ந்து, தற்சார்பற்று அறியவேண்டும். செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.” “சென்ற வருடம் நாங்கள் எடுத்த நடவடிக்கை ஒரு உதாரணமாய் இருந்திருக்கும், அதன் தெளிவான செய்திக்குப் பின் இத்தகையவற்றில் மக்கள் ஈடுபடமாட்டார்கள் என நினைத்தோம்” என்றும் அவர் சொன்னார்.

ஐந்து வீரர்கள் ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் பிடிபட்ட ஐந்தாம் சீஸனுக்கும் இப்போதுக்கும் இடையே என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? BCCI உருப்படியாய் செய்தவற்றை பட்டியலிட்டுச் சொல்லமுடியுமா? இவற்றையெல்லாம் பொதுவில் எதற்குச் சொல்ல வேண்டும் என்பீர்கள். எதற்கென்றால் இது ஐபிஎல் என்ற ஸ்தாபனத்தின் நாணயமாக செயல்படுகிறது என்பதைக் காட்டும் ஒரு உத்தரவு. ஒவ்வொரு மாலையிலும் இந்த ஆட்டத்தைப் பார்க்க நாங்கள் வேலைமெனக்கெட்டு உட்காரவேண்டும் என நீங்கள் எதிர்பார்த்தால், குறைந்த பட்சமாய் ஒளிவுமறைவற்ற செயல்பாட்டை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

இதையெல்லாம் விட பெரிய விஷயம்: இது தனித்த சம்பவம் அல்ல. மூன்று ஆட்ட வீரர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தப்பித்துவிட்டார்கள். ஒரு கூடையில் சில அழுகிய ஆப்பிள்கள் என்ற கதை இல்லை இது, பெரிய பனிப்பாறையின் நுனி என்கிற கதை. இதை BCCI நிர்வாகமும் மேலிடமும் உள்வாங்கிக்கொண்டால், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது எளிது.

BCCI என்ற ஒரு ஸ்தாபனத்தால் ஓரளவுக்குத்தான் இவற்ரையெல்லாம் கட்டுப்படுத்தமுடியும் என்பது ஒரு வாதம். சரிதான். அரசாங்கம், நிறுவனங்கள், தலைமை அதிகாரிகள் செய்யக்கூடியதெல்லாம் ஓரளவுதான். ஆனால் தன்னால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் BCCI செய்திருக்கிறதா என்பதுதான் கேள்வி.

BCCI இந்தியக் கிரிக்கெட்டின் அழுக்குகளை துடைத்து சுத்தமாக்கவேண்டும் என்ற நம்பிக்கை வைத்திருந்தால் முதலில் அது தன்னை ஒரு கண்ணடி முன் நிறுத்திப் பார்க்கவேண்டும். அதன் தலைவர் ஒரு ஐபிஎல் அணிக்கு உரிமையாளர். இந்தியாவின் அணித்தலைவர், ஐபிஎல் தலைவரின் அணிக்கு விளையாடுபவர், அவர் இத்தலைவரின் தொழில் நிறுவனத்தில் வேலை செய்பவரும்கூட. இதெல்லாம் ஆரம்பம்தான். இன்னும் என்னென்னவோ உள் விவகாரங்கள், ஊழல்கள்.

ஐபிஎல்லில் இருக்கும் பலவித சம்பந்தங்களும் அவற்றின் இடையான முரண்பாடுகளும் நன்றாய் அறியப்பட்டவையே. 2001 ஏலத்தின் போது மும்பை இந்தியன் அணியினர் ஏலத்தில் முறைகேடுகள் பற்றிக் குற்றம் சாட்டினர். அது பின்னர் பூதாகரமாய் வளர்ந்தது.

ஒரு நிறுவனம் ஒரு சிலரின் இஷ்டத்துக்கு கேட்பாரின்றி நடத்தப்படுமானால், அதில் பணி செய்பவர்களிடம் நாணயத்தையும் நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது.

இத்தகைய விஷயங்கள் நடக்கையில் பொதுவாய் நாம் கேட்கும் சமாதானம் சந்தேகத்துக்குரிய விஷயங்கள் எல்லா விளையாட்டுகளிலும் நடக்கின்றன என்பது. அது ஓரளவுக்கு உண்மைதான் பல பில்லியன் டாலர்கள் புரளும் விளையாட்டுப் போட்டிகள் எல்லாவற்றிலும் இத்தகைய ஊழலும், பித்தலாட்டங்களும் நடக்கின்றன. ஐரோப்பிய கால்பந்து ஒரு பெரிய ஃபிக்ஸிங்க் விசாரணையில் சிக்கிக்கொண்டிருக்கிறது, 20வது நூற்றண்டின் முதல் பகுதியிலிருந்தே பேஸ்பால் பலவித மோசடிகாரர்களிடம் மோதிக்கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் சைக்கிள் பந்தயம் கூட ஆடுபவர்கள் உட்கொண்ட விதவிதமான வசீகரமான வேதியல் வஸ்துக்களுக்கிடையான ஒலிம்பிக் பந்தயம் போல ஆகிவருகிறது.

ஆனாலும் ஒவ்வொரு முறை ஐபிஎல்லில் ஒரு பெரிய அவமானகரமான நிகழ்வு நடக்கையிலும் இப்படிச் சொல்லிச் சமாளிப்பது மரங்களைப் பார்த்துக்கொண்டு வனத்தை தவிரவிடுவதற்கு நிகரான விஷயம். எல்லா விளையாட்டுகளிலும் இது சகஜமாய் நட்க்கிறது என்றாலும், ஒரு விளையாட்டுக் கழகத்தின் நாணயம் அது எத்தனை திறமையுடனும் வேகமாகவும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதைப் பற்றியது. பலகோடி ரூபாய் புரளும் ஒரு புதிய விளையாட்டுக் கழகத்தில் இத்தகையவை நடக்கும் சாத்தியங்கள் அதிகம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அது நடக்கையில் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் தெளிவான சமிக்ஞைகள் கொடுக்காதுபோனால், இத்தகைய ஊழலை ஒழிக்க முடியாது.

இதோ ஒரு பேஸ்பால் கழகப் போட்டியிலிருந்து ஒரு உதாரணம்:

1919ல் சிகாகோ வைட் சாக்ஸ், சின்ஸினாட்டி ரெட்ஸ் எனற அணியிடம் உலக சீரீஸ் பந்தயத்தில் தோற்றது. ஷூலெஸ் ஜோ என அழைக்கப்பட்ட கேக்ஸன் என்பவரும் இன்னும் 7 ஆட்டக்காரர்களும் தலா 5000 டாலர் வாங்கிக்கொண்டு அணியைத் தோற்கவைத்திருந்தனர். ஜேக்ஸன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

1921ல் சிகாகோ கோர்ட் ஒன்றில் இந்த விளையாட்டுவீரர்கள் குற்றம் செய்யவில்லை என தீர்ப்பானது. ஆனாலும்,ஆட்டக் கழகத்தின் புதுக் கமிஷனராய் நியமிக்கப்பட்டிருந்த கென்ஸா லாண்டிஸ் என்பவர், இந்த ஆட்டக்காரர்களை உயர்மட்ட, கீழ்மட்ட ஆட்டங்கள் எதிலும் விளையாடக் கூடாது என தடுத்துவிட்டார். ஆட்டக்காரர்கள் குற்றமற்றவர்கள் என கோர்ட் தீர்ப்பளித்த அடுத்த் நாள் அவர் சொன்னது:

ஜூரியின் தீர்ப்பு எப்படியிருந்தாலும், வேண்டுமென்றே ஆட்டத்தை இழக்கும் வகையில் ஆடும் எந்த ஆட்டக்காரரும், ஆட்டத்தை இழக்கவைக்க உறுதிகூறும் எந்த ஆட்டக்காரரும், ஆட்டத்தை எந்தெந்த வகைகளில் தோற்கலாம் என்பதுபற்றி நேர்மையற்ற ஆட்டக்காரர்களுடனும், சூதாட்டக்காரர்களுடனும் ரகசியமாய் அமர்ந்து உறவாடும் எந்த விளையாட்டுக்காரரும், தொழில்முறையான பேஸ்பால் விளையாட்டி இனி எப்பொழுதும் ஆடமுடியாது.

பலவிதங்களில் 2000ல் கிரிக்கெட்டில் நடந்த பந்தய ஃபிக்ஸிங் மேற்சொன்ன நிகழ்வை ஒத்ததுதான். ஆனாலும் தடவிகொடுப்பதுபோன்ற தண்டனைகளே வழங்கப்பட்டன. ஆடுவதற்குத் தடை விதிக்கப்பட்ட அஜய் ஜடேஜா பின்னர் முதல் வகுப்பு கிரிக்கெட் ஆடுவதற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டார்.

இந்த நிர்வாக விஷயங்கள், விதிகள் , தண்டனைகள் இவையெல்லாம் ஒரு பக்கம். இவற்றுக்கெல்லாம் மேலாய் இத்தகைய சம்பவங்கள் நடக்கையில் ஒவ்வொரு முறையும் நமது நெஞ்சை உடைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது:

sree

டிஸம்பர் 3, 2001 அன்று கேரளத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் கேரளத்திலிருந்து சென்ற முதல் ஆட்டக்காரராய் டினு யொஹனன் விளையாடுவதைப் பார்க்க காலேஜுக்கு மட்டம் அடித்துவிட்டு ஸ்ரீசாந்த் சென்றார். ஒரு வருடத்துக்குப் பின் அவர் ரஞ்சி பந்தயத்தில் தன் முதல் ஆட்டத்தை ஆடினார். தனது முதல் சீஸன் முடிவில் அவர் துலீப் பந்தய அணியில் இருந்தார். அவ்வப்போது காயமடைந்து வெறுப்படைந்தபோதிலும், சீரான உயர்வு தொடர்ந்தது. அவரது பெரிய திறப்பு 2005 சேலஞ்சர் கோப்பையில் மூன்று ஆட்டங்களில் ஏழு விக்கெட்டுகள்,( சச்சின் டெண்டுல்கரை LBW ஆக்கியது உட்பட) எடுத்து தொடரின் சிறந்த ஆட்டக்காரர் பரிசு பெற்றபோது வந்தது.

இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள். பல விதங்களில் ஸ்ரீசாந்த் ஒரு வழிகாட்டி. ராஞ்சியிலிருந்து வந்த டோனி, ஸ்ரீராம்பூரிலிருந்து வந்த ஜாஹீர், ஜலந்தரிலிருந்து வந்த ஹர்பஜன், இகாரிலிருந்து வந்த முனாஃப் போல கிரிக்கெட் ஆட்டத்தின் நிழல்கூட படாத ஒரு மூலையிலிருந்து தொடங்கி, அமைப்பினுள்ளே தன் வழியைக் கண்டறிந்து, மேலே வரமுடியும் என்பதற்கு ஸ்ரீசாந்தும் ஒரு உதாரணம். பெரிய நகரத்துக்கு இடம்பெயர்ந்துதான் இதை சாதிக்க முடியும் என்ற நிலைமை இன்றில்லை. கேரளத்துக்கு விளையாடுகையிலும் கவனிக்கப்படமுடியும்.

அஜித் சாந்திலா ஃபரீதாபாத்தில் பிறந்தவர். ஏழுவருடங்களுக்கு முன் அவர் முதன்முதலாய் ஹரியானாவுக்கு ஆடியதற்குப் பின் அவருக்கு வெகுசில ஆட்டங்களே கிடைத்தன. ஹரி சிங் கிரிக்கெட் அகாடெமி போல் அத்தனை பிரபலமற்ற கிளப் அணிகளில் அவர் நிறைய ஆடிக்கொண்டிருந்தார். சென்ற வருட ஐபிஎல் பந்தயங்களில் அவருக்குக் கிடைத்த ஹாட் ட்ரிக் மூலம் அவர் பெயர் தெரியவந்தது. இந்த சீஸனில் ஒரே பந்தயத்தில் டெண்டூல்கரையும் பாண்டிங்கையும் வெளியேற்றிய பின் அது ‘ஹாட் ட்ரிக்கைவிட பெரிய சாதனை” என்று சொன்னார்.

அவரது கதையும் முக்கியமானது. குழுவில் ஒரு இடத்துக்கு மாநிலக் கழகங்களின் தயவை அண்டி இருந்த காலம் போய்விட்டதை அவரது கதையில் பார்க்கலாம். தன் திறமையைக் காட்ட அவருக்கு இன்னொரு பாதையும் இருந்தது. பெயர்தெரியாத கிளப்புகளுக்கு பெயர்தெரியாத ஊர்களில் ஆடிக்கொண்டிருந்த போதிலும், ஒரே ஆட்டத்தில் “பான்டூல்கரை” வீழ்த்த அவருக்கு அவகாசம் கிடைத்தது. இது ஒரு தேவதைக்கதை போன்றது. நாடு முழுதும் இளம் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இதைக் குறித்துக் கொண்டனர். அவர்களும் சந்தேலாவின் உதாரணத்தைப் பின்பற்றமுடியும். அவர்களும் கனவு காணமுடியும்.

நிகழ்வுகளின் முரண்நகையைத் தவறவிட முடியாது. ஸ்ரீசாந்த், சவான், சாந்திலா. மூவரும் ராஹுல் த்ராவிடின் தலைமையிலான குழுவுக்கு ஆடினர். த்ராவிட் ஒரு சிறந்த பாட்ஸ்மன் என்பதற்கெல்லாம் மேலே அவரது சிறந்த குணம் – டெண்டுல்கர், கங்குலி, லக்ஷ்மண், கும்ப்லே, ஸ்ரீநாத் இன்னும் பலரைப் போல – அவரது மிகச் சிறந்த குணம் அவரது நேர்மை, நாணயம். 2000/ 2001ல் மாட்ச் ஃபிக்ஸிங் சாக்கடையிலிருந்து இந்தியாவை உயர்த்தியது இந்தக் கூட்டம்தான். கிரிக்கெட்டின் மேல் நம்பிக்கை இழந்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஆட்டத்தை சுத்தமான கரங்களுடன் விளையாட முடியும் என இவர்கள் உறுதிபடுத்தினர்.

த்ராவிட் செய்தியாளர்களிடம் வேதனையுடன் துயரத்துடனும் சோர்வுடனும் பேசுகையில் அவர் தனக்காக மட்டும் பேசவில்லை. நேர்மையின் ஆற்றலை நமக்கு உணர்த்திய பல ஆட்டவீரர்களின் சார்பில் அவர் பேசினார். அவர்கள் மட்டையையும் பந்தையும் கொண்டு இந்தியாவின் புகழை உயர்த்தினாலும், தங்கள் சொல்லுக்கு உண்மையாய் இருந்து ரசிகர்களின் ஆர்வத்தீயை திரும்ப எரியவைத்தனர்.

ஸ்ரீசாந்த், சவான், சாந்திலா.மூவருக்கும் இந்த ஓட்டத்தை தொடர ஒரு தங்கமான வாய்ப்பு இருந்தது. மூலைமுடுக்குகளிலிருந்து வந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்களை புகழ் வெளிச்சத்துக்கு உயர்வதற்கு ஊக்கமளிக்க அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு அது. வெறும் நப்பாசையாய் இல்லாமல் எடுத்துக்காட்டாய் இருந்து இளைஞர்களையும் இளம்பெண்களையும் அவர்களின் கனவைத் தொடரவைக்கக் கிடைத்த வாய்ப்பு.

ம்ஹும். அதெல்லாம் ரொம்பக் கஷ்டமான விஷயங்கள். கடுமையாய் மனசாட்சிக்கு உண்மையாய் உழைத்த காலமெல்லாம் மலையேறிப்போயாச்சு. அதனால்தான் அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் எளிய வழியை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தில்லி போலீஸ் சொல்வதைப் பார்த்தால், அதையும் சொதப்பிவிட்டார்கள்.

ஐபிஎல்லின் தலைமை பொறுப்பாளர் ரமண் சுந்தர் ஒரே வார்த்தையில் அவரது கீச்சில் இதை எல்லாம் சுருக்கமாய் சொல்லிவிட்டார்: #அடிமுட்டாள்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.