மகரந்தம்

தீர்க்க ஆயுள் – உண்மையில் நமக்கு நல்லதா?

poo

நாய் வளர்ப்பவரா நீங்கள்? என்ன வகை நாய் உங்களுக்குப் பிரியமானது என்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? சின்ன உருவுள்ள நாய்கள் வாழும் காலம் கொஞ்சம் அதிகம். பெரிய நாய்களின் ஆயுள் காலம் குறைவு. இதை மட்டும் கருதாமல், வாழும்போது வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது என்றும் கருதினால் என்ன ஆகும்? சிறு நாய்கள் ஆரோக்கியமாக வாழும் இடைவெளி பல வருடங்கள் கூடுதல். பெரிய உரு நாய்களின் ஆரோக்கியம் தொடர்ந்த நிதானமான சரிவாக உள்ளது. 14 வயதுக்கு வரும் ஒரு நாய் – சாதாரணமாக 10 வருடங்கள் வாழ்வுள்ள வகை- பற்பல நோய்களுக்கு உட்படும். கண்களில் திரை விழும், கால் முட்டிகள், இடுப்பெலும்புகள் எல்லாம் நொடிக்கும் அல்லது வலியுள்ளனவாகும், சில நாய்களுக்குப் பற்கள் உதிர்ந்து போகும், பலவற்றுக்கு மறதி அதிகரிக்கும்.

இங்கு ஒரு கனடியப் பொருளாதார ஆய்வாளர் இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு யோசித்து இதையே மனிதருக்கும் நீட்டினால் நீண்ட ஆயுள்காலம் வாழ்வது என்பது மனிதருக்கு அத்தனை நல்லதா என்று ஒரு உருப்படியான கேள்வியை எழுப்புகிறார். அவர் என்ன பதில்களை அடைகிறார் என்பது ஒரு பொருளாதாரத் தர்க்கம் போல இருந்தாலும், உணர்ச்சி, அறிவார்ந்த சிந்தனை ஆகியவற்றிடையே உள்ள ஒரு பரிமாறலாகவும் இருக்கிறது கட்டுரை.

http://worthwhile.typepad.com/worthwhile_canadian_initi/2013/05/revealed-preferences-for-longevity.html

*****

உப்புநீர் வடிகட்டி

lockhead

கடல் நீரை உப்பு நீக்கிக் குடிநீராக்க எக்கச் சக்கமாகச் செலவழியும் தொழில் நுட்பம்தான் இதுவரை கிட்டி இருக்கிறது. போர் விமானங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனமான லாக்ஹீட்- மார்டின் எனப்படும் ஒரு அமெரிக்க நிறுவனம், இப்போது கிராஃபீன் எனப்படும் புதுப் பொருள் ஒன்றால் தயாரிக்கப்படும் நுண் துளை கொண்ட வடிகட்டிகளைப் பயன்படுத்தி உப்புநீரைக் குடிநீராக மாற்ற முடியும் என்று கண்டிருக்கிறது. இந்த தொழில் நுட்பத்தில் இரண்டு பெரும் சாதனைகள். ஒன்று இதன் மூலம் இன்றைய அடக்கச் செலவு சுமார் 99% குறைக்கப்படுமாம். இரண்டு, உப்பு நீரை வடிகட்டிகள் மூலம் செலுத்த பெரும் விசை தேவைப்படாதாம். இது இப்போதைக்கு இன்னும் பரீட்சார்த்த நிலையில் உள்ளது. இந்த வடிகட்டிகள் அடிக்கடி கிழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த நிறுவனம் சோதிப்பதாகத் தெரிகிறது. இது தயாரிக்கப்பட்டு சந்தையிலும் கிட்டினால் இந்தியாவுக்கு எத்தனை பெரும் வசதி கிட்டும் என்பதை நினைக்கவே வியப்பாக இருக்கிறது. இதனால் ஒரு வேளை மாந்தர் கடல்நீரில் பெரும் மாசுகளைக் கல்க்கவிடாமல் இருக்க வேண்டும் என்பதையும் கற்றார்களானால் அது தற்போதைய கடல் வாழ் உயிரினங்களின் பேரழிவு வரவிருக்கிறது என்ற எதிர்பார்ப்பைத் தோற்கடிக்க வாய்ப்பு உண்டு.

http://www.reuters.com/article/2013/03/13/usa-desalination-idUSL1N0C0DG520130313
http://gizmodo.com/5990876/lockheeds-new-carbon-filter-takes-all-the-effort-out-of-desalinization

*****

இப்படியும் ஒரு career!

sarah-the-stalker

நம்ப முடிகிறதா பாருங்கள். ஊடகமும் வியாபாரமும் இப்படி எல்லாம் பின்னிப் பிணைந்து உழைப்பால் முன்னேறலாம் என்ற கருத்தை அடியோடு நாசம் செய்து பல மிலியன் மக்களின் வாழ்வையே ஏளனம் செய்கின்றன. அமெரிக்காவில் பல துறைகளில் பிரபலர்களைத் தொடர்ந்து போய் அவர்களுடன் படமெடுத்துக் கொள்வதை இளம் வயதிலிருந்து செய்கிறாள் இந்தப் பெண். 17 வயதினள். இவளை ஒரு ஆதர்ச மனுஷியாகக் கருதி இவளோடு படம் எடுத்துக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் பல பதின்ம வயது சிறார்.  இப்படிப் பிரபலர்களைப் படமெடுத்து விற்றுப் பணம் சம்பாதிப்பது ஒரு பெரும் தொழில். சில படங்கள் 250,000 டாலர்களுக்குக் கூட விற்கின்றனவாம். அது அமெரிக்காவில் பெருவாரி மக்களுக்குப் பல வருடத்து வருமானம். பொருளை வழிபடத் துவங்கும் மனநோய் என்று -commodity fetish- என்று ஒரு தாடிக்காரர் இதைச் சில நூறாண்டுகள் முன்பு வருணித்தது நினைவு வருகிறதா?  இதை மன நோய் என்பதா, முதலீடு இல்லாத, அல்லது மிகக் குறைவாக உள்ள சாமர்த்தியமான வியாபாரம் என்பதா?
இப்படி ஒரு சாமர்த்தியம் மனிதருக்குத் தேவையா?
http://www.nytimes.com/2013/06/02/magazine/the-hollywood-fast-life-of-stalker-sarah.html?hpw

***

தனிமனித வழிபாட்டில் அழிந்த சீனக் கம்யூனிஸ்டு கட்சி

e13-644

’புரட்சித் தாரகை’, கிழக்கின் நம்பிக்கை நட்சத்திரம் என்றெல்லாம் குருட்டுத்தனமாகப் புகழாரம் சூட்டப்பட்ட மாஒ சீனாவைச் சில வருடங்களிலேயே கிட்டத்தட்ட முழு அழிவு நிலைக்குக் கொண்டு சேர்த்திருந்தார் என்பது இப்போது உலகுக்கே தெரியும். இந்தியாவில் இருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு மட்டும் இந்த எளிய வரலாற்று உண்மை தெரியாது என்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. வரலாறு என்பதே தெரியாமல் குருட்டு நம்பிக்கையாளராக இருப்பதுதான் இடது சாரியாகவே தொடர்ந்து வாழ்க்கை நடத்துவதற்கான முதல் தகுதி என்பதும் தெரிந்த விஷயம்தானே.

இந்த ஒற்றை நபர் எப்படிச் சீனாவை அப்படி வேரோடு சாய்த்தார் என்பதைப் பற்றி ஏராளமான விவரங்கள் சிறிது சிறிதாகச் சேமிக்கப்பட்டு வருகின்றன. உலக மக்களை அழிக்க உலக முதலியம் என்னென்னவொ சூதாட்டங்கள் ஆடித் தொடர்ந்து தன் நசிவு வேலையைச் செய்வது போலவே, என்னென்னவோ புரட்டுகளெல்லாம் செய்து சீனாவில் தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியும் சீனர்களுக்குத் தன் கோர முகம் புலப்படாமல் இருக்க பெரும் தணிக்கை உலகை உருவாக்கி வைத்திருக்கிறது. இருந்தும் தகவல்கள் பற்பல விதங்களில் கசிந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் வெளியாகி வரும் தகவல்களை நுட்பமாக ஆராயத் துவங்கியுள்ள பல துறை ஆய்வாளர்கள் கண்ட சில உண்மைகள் பயங்கரமான ஒரு வரலாறைக் காட்டுகின்றன.

சீன கம்யூனிஸ்டு கட்சி எத்தனை தூரம் தனியொரு நபரின் அகங்காரத்தால் பொம்மையாக ஆட்டப்பட்டு சுமார் 3 கோடி எளிய சீன மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றது என்று மேன்மேலும் சான்றுகள் வெளி வந்த வண்ணமிருக்கின்றன. அவற்றின் சாரத்தைச் சொல்லும் இந்தச் சிறு கட்டுரை- சீனக் கம்யூனிஸ்டு கட்சி அபத்தமாக யூரோப்பிய அரசியல் கருத்தியலைக் கடன் வாங்கிச் சொந்த புத்தியை அடகு வைத்து இறுகிய நெஞ்சோடு தம் மக்களை அணுகியதால் வந்த பெருநாசம் இது என்பதைச் சுட்டுகிறது. உழைப்பவருக்கே பயன் சேர வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறி மக்களை மயக்கிய ஒரு கட்சி, தன் நிர்வாகத் திறமை சிறிதுமற்ற பெரும் சொதப்பலால் பெருவாரி உழைப்பாளிகளைக் கொன்றது சீனக் கம்யூனிஸ்டு ஆட்சி. தவிர, எந்த நிலங்களில் தானிய உற்பத்தி ஏராளமோ அந்த நிலப்பகுதி மக்களே ஏராளமாக இறந்தனர். எந்த நிலப்பகுதிகளில் பொதுவுடைமை முதலில் ஏற்கப்பட்டதோ அந்த நிலப்பகுதி மக்களே ஏராளமாக இறந்தனர் என்று ஒவ்வொன்றாகச் சுட்டச் சுட்ட சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் போலித்தனம் நமக்குத் தெளிவாகிறது.

http://afinetheorem.wordpress.com/2013/05/19/the-institutional-causes-of-chinas-great-famine-1959-1961-x-meng-n-qian-p-yared-2011/

***

அமெரிக்காவின் குழந்தை காப்பகங்கள்
article_inset_cohn_2

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மழலையர் விடுதிகள் இயங்குகிறதா என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அமெரிக்கா சோதிக்கிறது. சிறுவர்களைப் பராமாரிப்பவரின் தகுதி, பேணகத்தின் அமைப்பு, கற்றுக் கொடுக்கும் முறை எல்லாம் பார்த்து பார்த்து சேர்த்தது அந்தக் காலாம். இரவு ஏழரை வரைக்கும் திறந்திருக்கிறார்களா என்று வசதி மட்டும் பார்த்து சேர்ப்பது இந்தக் காலம். தம்பதியர் இருவருமே வேலைக்குப் போனால் மட்டுமே குடும்பத்தை நடத்தக் கூடிய பொருளாதார சூழ்நிலையை சுட்டுவதா? அல்லது உணவும் உடையும் கூரையும் கொடுப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு என்று எண்ணும் மனப்பான்மையின் போதாமையை மாற்றுவதா? நியூ ரிபப்ளிக் கட்டுரை சிறார் காப்பகங்களின் பால்ய கால கல்வியைப் பொறுத்து மன வளர்ச்சி எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதையும் மற்ற நாடுகளின் நிலையையும் ஒப்பிட்டு அலசுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.