பாதரசம் என்னும் உயிர்க்கொல்லி

a987

குழந்தைப் பருவம் மட்டுமே வாழ்வின் அற்புதங்கள் நிரம்பிய காலம். அதில் சேட்டைகளும், சுறுசுறுப்பும், குறும்புகளும் தான் பிரதானம். எல்லா பிள்ளைகளுமே இந்தத் தன்மைகளுடன் பிறந்து, தன்முனைப்புடன் வளர்ந்து விடுவதில்லை. சில பிள்ளைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. அதற்கான தெளிவான காரணங்களும் கண்டறியப் படாமலே இருக்கின்றன. இதுபோன்ற குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் சவால் நிறைந்த பணி. ஏறக்குறைய 90 பள்ளிகள் இதற்கெனத் தமிழகம் முழுவதும் செயல்பட்டாலும், அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் ஒன்றோ இரண்டோ தான். மற்ற எல்லாத் தனியார் பள்ளிகளும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன. வறுமைக் கோட்டில் வாழும் மனிதர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதுபோன்ற சிறப்புக் குழந்தைகள் இருந்தால் முறையான வழியில் பயிற்சி கொடுத்துப் பராமரிப்பது சிரமத்திலும் சிரமம் தான்.

தொழில்நுட்பம் வளர்ந்து உச்சாணிக் கொம்பில் இருக்கும் இக்காலத்தில், குழந்தை வளர்ப்பு தான் பெற்றோர்களுக்கான சவாலான விஷயமே. எங்கும் போட்டி நிரம்பிய உலகம் என்பதால் குழந்தைகளும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். தன்முனைப்புள்ள குழந்தைகளின் உலகம்  வேறானது. அவர்கள் ஒருவாறு தம்மை சமூகத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்திக் கொள்கிறார்கள். என்றாலும் சிறப்புக் குழந்தைகளின் நிலை அப்படியில்லை. அவர்களுக்கு ஊன்றுகோல் தேவைப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 88 குழந்தைகளுக்கு 1 குழந்தை “ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD)” என்ற  குறைபாட்டுடன் வளர்வதாக அதிகாரப் பூர்வமான புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தேசம் முழுவதும் ஏறக்குறைய இருபது லட்சம் குழந்தைகள் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சித் தகவல். இந்த நிலையில் “சிறப்புக் குழந்தைகள்”  பற்றிய போதுமான புரிதல் நம் சமூகத்திற்கு இருக்கிறதா?” என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. நகரங்களைக் காட்டிலும், கிராமங்களில் இந்த நிலையானது மோசத்திலும் மோசம். பரிதாபத்திலும் பரிதாபம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேகனா குல்சார் இயக்கி, The Special Child Trust  மூலம் வெளிவந்த “க்ளோசர்- Closer” என்ற ஆவணப்படம் பார்க்கக் கிடைத்தது. டெல்லி மற்றும் குர்காவ்னைச் சுற்றியுள்ள வசதியும் கல்வித் திறனும் மிக்க  குடும்பங்களிலுள்ள சிறப்புக் குழந்தைகளின் பராமரிப்பு சார்ந்த காட்சிப் பதிவு. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பயிற்சிக் கூடங்கள், சிறப்புக் குழந்தை மருத்துவர்கள், பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பகிர்தல்கள் மூலம் ஆல்பம் போல நகரும் 36 நிமிட ஆவணப்படம். குறைபாட்டிலிருந்து முழுமையாகக் குணப்படுத்த இயலாது எனினும் குழந்தைகள் தன்னிச்சையாக வாழும் பயிற்சியை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். ஓவியம், கலை என்று அவர்களின் கவனத்தைத்  திசை திருப்புகிறார்கள். இந்தப் புரிதல்தான் கிராமங்களில் உள்ள இத்தகைய சிறார்கள் குறித்துச் சிறிதும் இல்லாமல் போகிறது என்பது வேதனையான யதார்த்தம்.

சிறப்புக்  குழந்தைகள் என்று வகைப்படுத்தப்படும் மன வளர்ச்சிக் குன்றிய  பிள்ளைகள் அனைவரையும் ஒரே பட்டியலில் சேர்க்க இயலாது என்பது தான் நிதர்சனம். அவர்களின் புரிதல் தன்மை மற்றும் தன்முனைப்பின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு இருப்பார்கள். சுய உணர்ச்சி இல்லாமல்  அசையும் திறன் மட்டுமே கொண்டவர்கள் முதல், வெகுளியான முகத்துடன் இனம் காணமுடியாத குழந்தைத் தனத்துடன் இருப்பவர்கள் வரை பல நிலைகளில் இவர்களை வகைப்படுத்தலாம்.

தன்முனைப்புக் குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறக்கிறது எனில் அதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பித் தவிக்கிறார்கள். என்றாலும் சில வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மை தான் மூளைக் குறைபாடு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கலாம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.

65

அந்த ஜப்பானியக் கப்பலில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு மீன்கள் தான் பிரதான உணவு. கடலில் பிடிக்கப்படும் உயிருள்ள மீன்களை துள்ளத் துடிக்கச் சாப்பிட்டு வளர்ந்த திமிர் பிடித்த பூனைகள் அவை. சில ஆண்டுகள் கழித்து அந்தக் கப்பலில் ஒரு வினோதம் நடக்கிறது. வளர்க்கப்படும் பூனைகள் இங்குமங்கும் ஓடி, மேல் தளத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன. அதே மீன்களைச் கொத்தித் தின்னும் சமுத்திரத்தின் மேல் வட்டமடிக்கும் கடற் பறவைகளும் அதைப் போலவே  விநோதமாக இறந்துள்ளன. ஆரம்பத்தில் யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் காரணம் புரியாமல் குழம்பியிருக்கிறார்கள்.

minamata“மினமத்தா நோய்” என்பது 1930-களில் ஜப்பானியர்களை மட்டுமல்லாமல் உலகையே உலுக்கித் திரும்பிப் பார்க்க வைத்த முக்கியமான சம்பவம். ஷிரானுய் கடலுக்கும், மினமத்தா கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் “ச்சிசோ கார்பரேஷனால்” சிறிய தொழில் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிறுவப்படுகிறது. வேலை இல்லாத் திண்டாட் டத்தைப் போக்க அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் விரும்பிக் கேட்டதனால்தான் அதுவும் கூட ஆரம்பிக்கப்படுகிறது. மக்களுக்கும், 1950களுக்குப் பிறகு  சில அறிகுறிகள் தென்படத் துவங்கி இருக்கின்றன. பூனைகள் போல, பறவைகள் போல அவர்களும் தறிகெட்டுத் தவித்திருக்கிறார்கள். மனஅழுத்தம், நரம்பியல் நோய் மற்றும் உடல் சார்ந்த உபாதைகள் அவர்களை வாட்டி வதைத்திருக்கின்றன. சிலர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள்.  யாராலும் தெளிவான காரணத்தை மட்டும் கண்டறியவே முடியவில்லை. பல்வேறு வகையான நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1959 -ஆம் ஆண்டு “குமமொடோ பல்கலைக் கழக” விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். மினமத்தா தொழிற் சாலையின் பாதரசக் கழிவுகள் தான் இதற்குக் காரணம் என்பதை உறுதியாகக் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் இதனை ஏற்க மறுத்த தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஆதாரப் பூர்வமாக நிரூபித்ததும் பிறகு மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இன்று பாதரசம் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் கொடூரமான நச்சுப் பொருளாகக் கருதப்படுகிறது. ஆனால் தொழிற்சாலை ஆரம்பித்த நாட்களிலிருந்தே “ச்சிசோ கார்பரேஷன்” தமது உற்பத்திக் கழிவுகளான பாதரசத்தை (மெர்குரி – Hg) நேரடியாகக் கடலில் கொட்டியிருக்கிறார்கள். இயற்கையாகப் பூமியில் அமைந்த பாதரசத்தைக் காட்டிலும், செயற்கைக் கழிவுகளாகக் கொட்டப்படும் பாதரசம் பன்மடங்கு நச்சுத் தன்மை வாய்ந்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆகவே கனடா, அமேரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் பயன்பாட்டிற்குத் தடை விதித்திருக்கிறார்கள்.

உட்கொள்ளும் உணவுகளின் மூலம், பாதரசத்தின் அடர்த்தி உயிரினங்களில் அதிகமாகும் பொழுது, அது மத்திய நரம்பு மண்டலங்களை பாதிக்கும் என்பதை ஆராய்ச்சிகள் நிரூபணம் செய்கின்றது. மேலும் வளரும் கருவின் மூளைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மெல்லிய மூளைஅதிர்வு, மனச்சிதைவு, நடுக்கம், உணர்வுத் தடுமாற்றம், குரோமோசோம்களின் பிறழ்வு ஆகியவற்றிற்கும் இது காரணமாக அமைகிறது என்றும் கூறுகிறார்கள். கால இடைவெளியில் சேகரமான 0.9 கிராம் பாதரசம் 10 ஹெக்டேர் பரப்புள்ள ஏரியை நச்சுப்படுத்தப் போதுமானது என்று இன்றைய நிலையில் ஆராட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கொட்டப்பட்ட கழிவுகளால் மினமத்தா கடற்பகுதி மீன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதரசத்தின் விஷத் தன்மை அதன் மூலக்கூறு வடிவத்தைப் பொறுத்து வீர்யம் மாறுகிறது. பாதரச ஆவி மற்றும் மீதைல் பாதரசம் ஆகியவை தான் வழக்கமான இதன் வடிவங்களாகும்.  நேரடியாகவோ அல்லது காற்றிலிருந்து படிவதன் மூலமாகவோ பாதரசம் நீர்ம நிலையை அடையும் போது, வேதிச் செயல்பாடு காரணமாக அது மீதைல் பாதரசமாக மாறுகிறது. இது பாதரசத்தின் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த வடிவமாகும். எனவே பாதிப்பிற்குள்ளான மீன்களை சாப்பிட்ட பூனைகளும், பறவைகளும் நரம்பியல் சிதைவுக்கு உள்ளாகி, அதன் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டுள்ளன. அதே மீன்களை மனிதர்களும் சாப்பிட அவர்களுக்கும் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. ஏறக்குறைய 3000 நபர்கள் மினமத்தா நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும், 1974-ஆம் ஆண்டுவரை 798 நபர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாதரச இறக்குமதி 1996-97இல் 257 டன்களாக இருந்துள்ளது, அதுவே 2002-03இல் 1386 டன்களாக அதிகரித்திருக்கிறது. இன்றுள்ள தொழிற் புரட்சியில் விகிதத்தைக் கேட்கவே வேண்டாம். தலையே சுற்றுகிறது. மின்சாரம் முதல் மின் விளக்குகள் வரை ஏறக்குறைய 1500 பொருட்களைத் தயாரிக்க பாதரசம் மூலப் பொருளாக பயன்படுத்தப் படுகிறதாம். அறை வெப்ப நிலையில் கூட திரவ நிலையில் இருக்கும் ஒரே உலோகம் என்பதால் வெப்பமானிகளில் வெப்பத்தைக் கண்டறிய பெரும்பாலும் இந்த திரவ உலோகம் தான் பயன்படுத்தப்படுகிறது. மின் விளக்குகளிலும், பேட்டறிகளிலும், சருமக் களிம்புகள், பெயின்ட், அத்லெடிக் ஷூஸ், பல்லின் சொத்தையை அடைக்க என பல்வேறு பொருட்களின் உபபொருளாக பாதரசம் பயன்படுத்தப் படுகிறது.

‘லான்செட்’ என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு இதழ் 2010-ம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வுத் தகவலின் படி, உலகில் குறைப் பிரசவத்தில் பிறக்கும் நான்கில் ஒரு குழந்தை இந்தியாவில் பிறப்பதாக தகவல் அளித்திருக்கின்றது.  மேலும் இந்தியாவில் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்களில் சருமத்தை வெண்மையாக்கும் மற்றும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் களிம்பு (Cream) வகைகளே 60 சதவிகிதம் ஆகும். பாதரசம் தோலின் அடிப்பகுதியிலுள்ள மெலனினைக் கட்டுப்படுத்தி, அதனைப் பரவவிடாமல் தடுத்து சருமத்தை வெள்ளையாக்கவும் பொலிவுடன் வைக்கவும் உதவுகிறது. தோல் பளிச்சென மின்னினாலும் நாளடைவில்  பாதிக்கப்படும். நச்சுத் தன்மையுள்ள பாதரசமானது சுவாசம் மூலமாகவும்,  உணவின் மூலமாகவும், தோலின் மூலமாகவும் உடலுக்குள் செல்லும் தன்மை பெற்றது.

சருமக் களிம்புகளின் லேபிளில் பாதரச அயோடைடு, பாதரச குளோரைடு, க்விக் சில்வர், பாதரச சல்பைடு, பாதரச ஆக்சைடு போன்றவை சேர்மானப் பொருட்களாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், பல அழகு சாதனப் பொருட்களில், பாதரச துணைப் பொருட்கள் சேர்ப்பது பற்றிய எந்த விவரமும் இருப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. பாதரசம் கலந்த சோப் மற்றும் க்ரீம் வகைகளைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு பிறக்கும் குழந்தைக்கு நரம்பு தொடர்பான பாதிப்பும் ஏற்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, சி.எஃப்.எல் (compact fluorescent lamp) மின்சார விளக்குகள், குண்டு பல்புகளை விட சுமார் ஐந்து மடங்கு மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்துகின்றன. 100 watts குண்டு பல்பு வழங்கும் ஒளியை 20 Watts சிஎஃப்எல் விளக்குகள் வழங்குகிறது. இதன்மூலம் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரப் பயன்பாட்டையும், அதற்குரிய கட்டணத்தையும் நுகர்வோர் குறைத்துக் கொள்ள  முடியும். மேலும், ஒரு குண்டு பல்புகள் செயலிழக்கும் வரை, சராசரியாக 1,000 மணி நேரம் எரியும் என்றால், சிஎஃப்எல் விளக்குகள் அதைவிடப் பலமடங்கு நேரம் எரியக் கூடியவை.நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைக்கும் இந்த லாபத்தைத் தவிர, மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றின் பயன்பாட்டு அளவும் குறைகிறது. ஆயிரம் மணி நேரம் ஒரு குண்டு பல்பு மின்சாரம் வழங்க 71 கிலோ நிலக்கரி தேவையென்றால், சிஎஃப்எல்லுக்கு 14.2 கிலோ மட்டும் போதுமானது. இதே போன்று, குண்டு பல்புக்கு 535 லிட்டர், சிஎஃப்எல் -லுக்கு 107 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சராசரி சிஎஃப்எல் விளக்கில் 0.5 மில்லி கிராம் பாதரசம் உள்ளது. தற்போது இந்தியாவில் எரியும் விளக்குகளில் 10 சதம் சிஎஃப்எல் விளக்குகள் உள்ளன. ஆண்டுதோறும் சிஎஃப்எல் விளக்குகள் தயாரிப்பில் 56 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. முழுவதும் சிஎஃப்எல் விளக்குக்கு மாறினால் இந்த அளவு மேலும் பல டன்கள் உயரும். ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போதும் பாதரசம் வெளியாகிறது. சிஎஃப்எல்லைப் பயன்படுத்தும் போது இந்த பாதரசம் வெளியாகும் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து பாதரசம் வெளியாவதைக் கட்டுப்படுத்துவது எளிதானது. ஆனால் கோடிக்கணக்கான வீடுகளில், செயலிழக்கும் சிஎஃப்எல் பல்புகளானது குப்பை மேடுகளிலும், சம தளங்களிலும் வீசப்படுவதை சரியான முறையில் அப்புறப்படுத்துவது கடினமான செயல். இதுவே நீர் நிலைகளிலும், இன்ன பிற நில அமைப்பிலும் ஊடுருவி ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கிறது.

cf987

சுற்றுச்சூழல் ஆவணப்பட இயக்குனர் ஆர்.பி. அமுதன் இயக்கிய “பனியில் படரும் பாதரசம் (Mercury in the Mist)” இது சார்ந்து கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு.

அமெரிக்காவிலுள்ள நியூ யார்க்கின் – வாட்டர் டவுன் (USA) என்ற இடத்தில் துவங்கிச் செயல்பட அனுமதி மறுக்கப்பட்ட, வெப்ப கணிப்பான்  தொழிற்  சாலையை (Mercury Thermometer Factory) இந்தியாவில் தொடங்கிச் செயல்பட அப்போது ஆட்சியில் இருந்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி கொடுத்தி ருக்கின்றன. வெப்பக் கணிப்பான்கள் தயாரிக்க மிகக் குறைந்த சீதோஷ்ண நிலை  வேண்டுமென்பதால், ‘கொடைக்கானல்’ அதற்கான சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டு தொழிற்சாலையும் நிறுவப்பட்டுள்ளது. அதன்படி 1984-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட “பாண்ட்’ஸ் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்”  நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த வெப்பக் கணிப்பான் தொழிற்சாலைக் கழிவுகளை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளின் திறந்தவெளியில் கொட்டிய போதுதான் பிரச்சனை பூதாகரமாக எழுந்துள்ளது.  அதன் விளைவால் மக்கள் போராட்டம் வெடிக்க, பின்னர் அதனை இழுத்து  மூட வேண்டிய நிர்பந்தமும் 2001-ஆம் ஆண்டு அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

சுமார் பதினேழு ஆண்டுகள் செயல்பட்ட இந்நிறுவனத்தில் வேலைப் பார்த்த 34 பேர் பாதரசப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் பலருக்கும் நரம்பு நோய்கள் தாக்கியுள்ளன. சில குழந்தைகள் வாய் பேச முடியாமலும், தோல் நோயாலும் இன்று வரை அவதிப்பட்டு வருகின்றனர் என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்த ஆவணப் படம் இது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆட்டிசத்தின் பாதிப்பில் இருக்கிறார்களோ? என்ற சந்தேகத்தையும் இது கிளப்புகிறது. மேலும் இத்தொழிற்சாலையால் மனிதர்கள் மட்டுமின்றி சுற்றுப்புறமும், கொடைக்கானலின் அழகிய ஏரியும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளன என்பதை ஆவணப்படம் அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது. அணு உலையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் மற்றும் அபாயங்கள் குறித்த அமுதனின் “கதிர்வீச்சுக் கதைகள் – Radiation Stories” மூன்று தொகுதிகளாக வெளிவந்து கவனத்தைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நாட்டின் இறக்குமதி சார்ந்த கொள்கைகள் அந்தத் தேசத்தின் பொருளாதார ஏற்ற இறக்கங்களை மட்டும் நிர்ணயிப்பதில்லை. மாறாக மக்களின் உடல் நலனையும், தலைமுறைகளாகத் தொடரும் சிக்கல்களையும், வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் கூட சில சமயம் ஏற்படுத்துவதுண்டு. வளர்ந்த நாடுகளில் (மக்கள் அல்லது நிறுவனம்) பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் அபாயகரமான பொருட்களை வளரும் நாடுகள் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்கின்றன. மறு உபயோகம் செய்வதற்காக கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் வளரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. “அறிவியல் சுற்றுச்சூழல் மையம்” பல்வேறு சூழலில் இதனைக் கோடிட்டுக் காட்டியும் மத்திய மாநில அரசுகள் காதில் வாங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பாதரசம் போன்ற நச்சுக் கழிவுகளை இந்தியா போன்ற வளரும் நாடுகள் தொடர்ந்து இறக்குமதி செய்வது கடுமையான கண்டனங்களுக்கு உரியது. இது போன்ற முயற்சிகள் பரிணாம வளர்ச்சியின் தேய்மானத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதையும் அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பயன்பட்ட தளங்கள்:

ஆட்டிசம்: Autism – இதில் வரும் முதல் ஓசை AU என்பது கிட்டத்தட்ட ஓ என்பதுபோல தொனிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் இது ஓடிஸம் என்பதுபோலத் தொனிக்கும்.